Advertisement

அத்தியாயம் 2

வசுந்தராவின் பதிலில் மொத்த மாணவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்ட போதும், அதற்கு நின்று விளக்கமளிக்க விரும்பாதவர், தன் கையில் இருந்த மைக்கை டேபிளில் வைத்து விட்டு, மேடையை விட்டு இறங்கி முதல்வரை நோக்கிச் சென்றார்.

நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான ஹியரிங் இருக்கு, சோ…” என்று தன் வார்த்தைகளை அவர் சொல்லி முடிக்கும் முன்,இப்போ ஹாட் டாப்பிக்கே நீங்க எடுத்து நடத்துற அந்த வழக்கு தானே மேம்..?” என்றவருக்கு ஒரு மெல்லிய புன்னகையுடன் தலையாட்டி,ஆமாம்என்றவர் அவரிடமும் கைக் குலுக்கி விட்டு விடைபெற்றார்.

வாசல் வரை வந்து வசுந்தராவை வழியனுப்பி வைத்து விட்டுத் திரும்பிய முதல்வர்,என்னைக் கேட்டா வசுந்தரா இந்த கேஸை எடுத்து இருக்கவே கூடாதுஎன்று பக்கத்தில் இருந்தவரிடம் கூற,ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டார் துணை முதல்வர்.

இது ஒரு கிளியர் கட் கேஸ் மேம். மோடிவ் அண்ட் விட்னஸ் எல்லாமே அந்தப் பொண்ணு தான் கொலை செய்தான்னு ரொம்பத் தெளிவா சொல்லுது. அப்படியிருக்கும் போது, இந்த கேஸை இவுங்களால எப்படி வின் பண்ண முடியும்? சொல்லுங்க!” என்றவரின் கருத்தை உள்வாங்கிய துணை முதல்வர்,

அப்படி நாம நினைச்ச பல கேஸை உடைத்து எறிந்தவங்க சார் அவுங்க! அதனால அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதீங்கஎன்றவரின் மறைமுக கொட்டுக்குப் பின் வசுந்தரா மீதான நம்பிக்கையே வெளிப்பட்டது.

அதைக் கேட்ட முதல்வருக்கே பெருத்த ஆச்சரியம் தான்! இந்த  அளவுக்கு ஒருவரால் மற்றவரின் மனதில் தன்னைப் பதிய வைக்க முடியுமா என்று!

ஆனால் முடிந்து இருக்கிறதே இந்த வசுந்தரா தேவியால்..!!

இந்த நிலையை அடைய, அவர் கடந்து வந்த பாதைகளின் தடைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு பெண்ணாக அதையெல்லாம் அடித்து நொறுக்கி நிமிர்ந்து நிற்பதால் தானோ என்னவோ, அவரின் மீதான பெண்களின் மதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறதோ? என்பது அவரின் எண்ணமாக இருந்தது.

******

டெல்லி உயர் நீதி மன்றம்..

தினம் தினம் குற்றவாளிகளையும், அவர்களின் குற்றங்களையும் அலசி ஆராயும் இடமென்பதால், பதற்றத்துக்கும் பந்தோபஸ்துக்கும் பஞ்சமில்லாத இடமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருந்தது.

அன்று டெல்லியின் மிகப் பெரிய தொழிலதிபரான ராஜ் சிங்கானியாவின் கொலை கேஸ் ஹியரிங் என்பதால், வழக்கத்தை விட அதிகமான ரிப்போர்ட்டர்கள் மற்றும் மீடியா ஆட்களின் வருகையும், ஆர்ப்பாட்டமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

டீக்கடையை மொய்க்கும் ஈயைப் போல, அந்த வழக்கு தொடர்பானவர்களைச் சுற்றி சுழன்று மொய்த்துக் கொண்டும், வழக்கு குறித்து டிவியில் நேரலையில் காரசாரமாகப் பேசிக் கொண்டும் இருந்தனர். அதில்,உலகப் பணக்கார வரிசையில் இடம்பெற்று இருக்கும் டெல்லி வாழ் தொழிலதிபரான ராஜ் சிங்கானியா, அவருடைய ஆபீஸ் அறையில், கடந்த மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு, ஆஜர் படுத்தப்பட்டு இருக்கும் மிஸ்.பாயல் தான் இந்தக் கொலையைச் செய்தார் என்பது அனைத்துத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்கனவே  நிரூபிக்கப்பட்டு  இருந்தாலும்,  தன்  வாதத்தால் கடைசி நேரத்தில் கூட எந்த வழக்கின் தீர்ப்பையும் மாற்றி எழுத கூடிய வசுந்தரா தேவி, அப்படி ஒரு நிகழ்வை இந்த கேஸிலும் நிகழ்த்துவாரா என்பதே இன்றைய கோர்ட்டின் பரபரப்புக்குப் போதுமானதாக இருந்தது.

“கொலை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒருவரை வசுந்தரா எதன் அடிப்படையில் காப்பாற்ற போகிறார்? எப்படிக் காப்பாற்ற போகிறார்? இது தான் இந்த நொடி நம் அனைவரின் மனதிலும் கேட்கப்பட்டுக் கொண்டு இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி!

அதற்கான விடையை அறிய வேண்டுமா?? அப்பொழுது தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள். இப்படிக்கு 360 சானலில் இருந்து ரிப்போர்ட்டர் சுரேக்காஎன்று  சரசரவென ஹிந்தியில் பேசி முடித்து, தனக்கு எதிரே இருந்தவனிடம்,ஓகே வா?” என்று ஒரு ரிப்போர்ட்டர் பெண் கேட்க, “டபுள் ஓகே!என்று கட்டை விரலைக் காட்டிப் பதில் சொன்னான் அவளின் கேமராமேன்.

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்என்று இருவரும் மூச்சு விட்ட நேரம், சற்றுத் தொலைவில் ஏற்பட்ட சலசலப்பைக் கண்ட சுரேக்கா,கம்! கம்!” என்று சொல்லியபடியே தன் கையில் இருந்த மைக்கை எடுத்துக் கொண்டு கோர்ட் வாசலில் நுழைந்த வசுந்தராவின் காரை நோக்கி ஓடினாள்.

அவளைப் போலவே பலரும் மைக்கை தூக்கிக் கொண்டு தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு, சிறிதும் ஜெர்க் ஆகாத வசுந்தராவோ, லைட் கிரீன் காட்டன் சாரியின் மீது கருப்பு அங்கியை அணிந்தபடி, இயல்பாகத் தன் காரை விட்டு இறங்கினார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததை விடக் கூட்டமும், அவர்கள் கொடுக்கும் நெருக்கமும் நிமிடத்திற்கு நிமிடம் இன்னும் அதிகரிப்பதைக் கண்டவர், அதன் தாக்கம் தாங்காது,ப்ளீஸ் மூவ்!” என்றார்.

ஆனால் அதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாத ரிப்போர்ட்டர்கள், அவரை இடிக்காத குறையாக இடித்தபடி, அவரிடம் தங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டு இருப்பதைக் கண்ட வசுந்தராவின் ஜூனியர்கள் உடனே அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைக்க முயற்சித்தனர்.

ஒரு இன்ச் கூட முன்னேற முடியாது அடைபட்டு இருந்த வசுந்தராவைச் சுற்றி அவரின் ஜூனியர்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தை  பெரும்பாடுபட்டு அமைத்தவாறு,  அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல போராடிய நேரம்,மேம்! எந்த நம்பிக்கையில் பாயலுக்காக ஆஜர் ஆகி இருக்கீங்க?

அவுங்க குற்றவாளி இல்லைன்னு உங்களால ப்ரூவ் பண்ணிட முடியுமா?

இந்த கேஸ் ஒருவேளை தோல்வி அடைந்தால், அது உங்க கேரியரில் ஒரு பெரிய ப்ளாக் மார்க் ஆகிடாதா?” என்று மாறி மாறி அவரை நோக்கிக் கேள்வி கணைகளை வீசவும்,

அதுவரை தூசு போல அதையெல்லாம் தட்டி விட்டுக் கொண்டு, முன்னேறிக் கொண்டு இருந்த வசுந்தராவின் கால்கள், அந்தக் கடைசி கேள்வியில் சடாரென சடன் ப்ரேக் போட்டு நின்றது. அவரின் செயலைக் கண்ட ஜுனியர்களுக்கோ,ஏன்??” என்ற எண்ணம்!

தன்னைச் சுற்றி இருந்தவர்களை நேர்கொண்ட பார்வை பார்த்த வசுந்தரா,என்னுடைய தோல்விகளை மட்டுமல்ல, என் வெற்றிகள் என்ன என்பதை நிர்ணயிப்பவள் நான் மட்டுமே தவிர நீங்க இல்லை!” என்றவரின் ஆளுமையான பதிலில் ஒரு நிமிடம் அரண்டு போனவர்களுக்கோ, அடுத்து என்ன கேட்க வேண்டுமென்பதே மறந்து போனது.

அடுத்து அவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு வசுந்தராவை கேள்வி போர் தொடுக்கும் முன், புயலாக கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்து இருந்தார் அவர்.

அதைக் கண்கள் மூடாது பார்த்து இருந்தவர்களுள்ளோ,என்ன மாதிரி மனுஷியா இந்த அம்மா?? ஊரே எங்களைப் பார்த்து வாயை மூடிக்கிட்டு ஓடுதுன்னா, எங்களையே வாயை மூடி நிக்க வச்சுட்டாங்களே இந்தம்மா!!” என்ற எண்ணமே அந்நேரம் அங்கிருந்தவர்களுக்கு மேலோங்கி இருந்தது.

தங்களுடைய கேஸ் ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், கேஸ் பைலை பார்த்துக் கொண்டு இருந்த வசுந்தரா, ஏதோ நினைவு வந்தவராக நிமிர்ந்து தன்னுடைய ஜூனியர்களிடம்,வேர் இஸ் அருண்?” என்று கேட்டார்.

ஆன் தி வே மேம்என்ற பதில் அவருக்குக் கிடைக்கவும், தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை பாத்தவர்,ஓகே, லெட்ஸ் மூவ்!” என்று கேஸ் நடக்கும் அறையை நோக்கிக் கருப்பு அங்கி அதிர வேக எட்டுக்களுடன் நடந்தார்.

கட்டிடத்தின் ஒரு திருப்பத்தில் அவர் திரும்பும் முன், அவரின் முன் ஓடி வந்து மூச்சு இரைக்க ஆஜர் ஆகி இருந்தான் அருண்!

அவனைக் கண்டு அர்த்தத்துடன் புருவம் உயர்த்தியவரின் செய்கையை உணர்ந்தவன், ஒரு புன்னகையுடன், தன் கையில் இருந்த கவரை அவரின் புறம் நீட்டினான்.

கவரை பிரித்து ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்துத் திருப்தி அடைந்தவர்,

வெல்டன் மை பாய்!” என்று அருணின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு, மற்றவர்களைப் பார்த்து,நீங்க எல்லாரும் கோர்ட் ரூம் போங்க, வில் ஜாய்ன் சூன்என்று திரும்பிச் சென்றார்.

அருணின் புறம் திரும்பிய ஜுனியர்களில் ஒருவன்,என்னது?? வெல் டன்னா??” என்று வாய் பிளந்து அவனைக் கேலி செய்த நேரம், அவனின் கழுத்தைப் பிடித்து மடக்கி,வாயைப் பிளக்காம வா, போகலாம்என்று இழுத்துக் கொண்டு கோர்ட் ரூம் சென்றான் அவன்.

அங்கே தங்களுக்கென ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கையில் லேசான டென்ஷனுடன் அமர்ந்திருந்த அருணிடம்,சீனியர்! எனக்கு ஒரு டவுட்என்றான் ஜூனியர் ஒருவன்.

ஏதோ கேஸ் சம்பந்தமாக கேட்கப் போகிறான் என்று யூகித்தவனும்,என் செல்லமே! நீயாவது என்னை ஒரு வக்கீலுன்னு நினைச்சு டௌட் எல்லாம் கேட்குறீயே? கேளு ராசா கேளு!” என்று தலையைப் பலமாக ஆட்டிக் கேட்டதில், கேட்க வந்தவனோ, திருதிருவென்று முழித்தான். அதைப் பார்த்து மற்றவர்கள் கொல்லென்று வாயை மூடிக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்கவுமே அருணுக்குப் புரிந்து விட்டது, கேள்வி கேஸைப் பற்றியது இல்லை என்று!

அதில் லேசாகக் கடுப்பு எழுந்தாலும், அப்படி என்ன தான் கேட்க வந்தான் என்ற எண்ணத்தில்,என்னடா கேட்கணும்?? கேளு!” என்றான் அவன்.

அது ஒண்ணுமில்லை சீனியர்.. நேத்து எங்கே சரக்கு வாங்குனீங்க? டுப்ளிகேட் போல! நாலு பாட்டில் அடிச்சும் போதை ஏறவே இல்லை தெரியுமா?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சீரியசாக முகம் வைத்துக் கொண்டு கேட்டவனின் வார்த்தைகளில் காண்டாகிப் போனவனோ,  கோபம் தலைக்கு ஏற, “ஒஹ்ஹ! அது தெரிந்து சார் என்ன பண்ணப் போறீங்க?” என்று படு நக்கலாகக் கேட்டான்.

என்ன சீனியர் இப்படிப் பொறுப்பு இல்லாம கேட்குறீங்க? மட்டமான சரக்கை வித்ததுக்கு அவனைத் தூக்கி நீங்க உள்ளே போட வேண்டாம்??” என்று வீராவேசமாகப் பேசுபவனைவெட்டவா குத்தவா’ என்று பார்த்தவனோ,ஏன்டா, உன் போதைக்கு நான் ஊறுகாயா?” என்று அவனின் வாயை மூடிக் கொண்டு நாலு கொட்டு வைக்கவும்,

வலி தங்காது அவனிடமிருந்து போராடி விடுபட்டவனோ,சீனியர்! இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த கொட்டு கொட்டுறீங்க?? ஷ்! ஆஆ!” என்று தலையைத் தேய்த்து விட்டபடி கேட்டான்.

ஏன்டா டேய்! நீ பீரை குடிச்சுட்டுப் போதை ஏறலைன்னு சொன்னதை கூட நான் மன்னிசுடுவேன்டா! ஆனா அந்த கேஸை என்னை நடத்த சொன்ன பாரு, அதுக்குத்தான்டா இந்தக் கொட்டு உனக்கு!” என்று மீண்டும் அவனை இழுத்துக் கொட்ட முயன்றவனிடமிருந்து  தப்பித்தவனோ,சும்மா இருங்க சீனியர்.. எந்த கேஸுமே இல்லாமே இருக்கீங்களேன்னு ஒரு கேஸ் கொடுக்கலாமேன்னு பார்த்தா, ரொம்பத்தான் பிகு பண்ணிக்குறீங்க?” என்றான்,

ன்டா டேய்! இது எல்லாம் ஒரு கேஸாடா?” என்று முறைத்துக் கேட்கவும் உஷாரான ஜூனியர் ஒருவன்,சும்மா விளையாடினோம் சீனியர் என்று அருணை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கும் பொழுதே அங்கே வசுந்தரா வந்து விட்டார்.

அதன்பின் அனைவரும் சேர்ந்து அவரின் பின்னோடு பேச்சு மூச்சின்றி அமைதியாக வழக்கு நடக்கும் அறைக்குள் சென்றனர்.

வாதிகள், பிரதிவாதிகள் நேருக்கு நேர் அமர்ந்திருக்க, நீதிபதிஆரம்பிக்கலாம்!” என்றதும் எழுந்த அரசாங்க வக்கீலான பார்த்தசாரதி,இந்த கேஸ் ரொம்ப கிளியரா இருக்கு யுவர் ஆனர்.

தனக்கும் ரோஹனுக்குமான காதலை அவனின்  தந்தையான சிங்கானியா அந்தஸ்து காட்டி பலமாக எதிர்த்ததால், அவர் இருக்கும் வரை தங்கள் காதல் நிறைவேற வாய்ப்பில்லை என்று எண்ணிய பாயல், திட்டம் போட்டு, குற்றம் நடந்த அன்று சிங்கானியாவைச் சந்திக்க அவருடைய கம்பெனிக்குச் சென்று இருக்கிறார்.

அங்கே நடந்த வாக்குவாதத்தில் உயர் அழுத்த பேன்ட்டான சிங்கானியா டென்ஷனில் நிலை தடுமாறிய நேரம், அவரைக் கொலை செய்து இருக்கிறார் பாயல்என்றதும்,

இல்ல இல்ல, நான் அவரைக் கொலை பண்ணலைஎன்று குற்றவாளி கூண்டில் நின்று பாயல் கதறாத குறையாகக் கத்தியதைக் கண்ட பார்த்தசாரதி,

அந்த இடத்தில் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை மிஸ்.பாயல்! நீங்க அவரைக் கொலை செய்ததை அங்கே வேலை செய்றவங்களே பார்த்து இருக்கிறார்கள். இதுக்கு மேலேயும் நீங்க உண்மையை ஒத்துக்க மாட்டேங்கிறது சில்லியா இருக்குஎன்று எள்ளலாகப் பேசியவரை விடுத்து நீதிபதியைப் பார்த்த பாயல்,நான் அவர் காட்டிய டப்பாவில் இருந்த மாத்திரையைத்தான் அவருக்கு எடுத்துக் கொடுத்தேனே தவிர, நான் அவரைக் கொலை செய்யலை யுவர் ஆனர். ப்ளீஸ் நம்புங்க!” என்று கைகளைக் குவித்து மன்றாடினாள் பாயல்.

அந்தப் பெண்ணின் கதறலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத பார்த்தசாரதியோ,இவர் தான் அந்தக் கொலையைச் செய்தார் என்பதற்கான சாட்சியங்களும், ஆதாரங்களும் ஏற்கனவே இந்த கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டு விட்டது யுவர் ஆனர்! அதனால் குற்றவாளிக்கு அவரின் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையை வழங்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” என்று தன்னிருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்.

அதுவரை அங்கே அரங்கேறிக் கொண்டு இருந்தவற்றை உன்னிப்பாக ஒரு பேனாவை கையில் வைத்துச் சுழற்றியபடி கவனித்துக் கொண்டு இருந்த வசுந்தராவை அழைத்த நீதிபதி,உங்களுக்கு ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்கவும்,

எஸ் யுவர் ஆனர்!” என்று தன் கருப்பு அங்கியை இழுத்து விட்டபடி எழுந்து நின்றார் வசுந்தரா, “நான் சாட்சிகளை ரீஎக்ஸாம் செய்யணும்என்ற கோரிக்கையை வைத்தார்.

உடனே தன்னிருக்கையில் இருந்து எழுந்து கொண்ட பார்த்தசாரதி,அல்ரெடி தேவையான அளவுக்கு அவுங்ககிட்ட எல்லாம் கேள்வி கேட்டாச்சு யுவர் ஆனர்! இது கேஸை இன்னும் இழுக்கும் வேலையாக எனக்குப் படுகிறதுஎன்றதில் அவரைப் பார்த்து மென்னகை ஒன்றைப் புரிந்தார் வசுந்தரா. “அந்த கேள்விகளை எல்லாம் நீங்க மட்டும் தானே சார் கேட்டீங்க? நான் இன்னும் யாரையும் கிராஸ் பண்ணவே இல்லையே சார்?” என்றதில் லேசாக ஜெர்க்காகிப் போனார் பார்த்தசாரதி.

வசுந்தரா வாதாடாதவரை தான் தன்னால் அங்கே வாதாடி ஜெயிக்க முடியும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

அதுமட்டுமில்லை, கடந்த இரண்டு ஹியரிங்கிலும் எந்த ஒரு சாட்சியையும், ஆதாரத்தையும் குறுக்கு கேள்வியோ, மறுத்தோ  வாதாடாத வசுந்தரா தேவி, இன்று அதைச் செய்ய வேண்டும் என்று கேட்கும் பொழுதே, தன்னுடைய வெற்றிக்கனி பறி போய் விடுமோ என்ற பயம் பார்த்தசாரதிக்கு எழுந்து விட்டது.

அதன்பொருட்டே அவரைக் கேள்வி கேட்க விடாது தடுக்க முயன்றார் அவர்.

அலையடித்து ஆலமரம் சாய்ந்து விடுமா? என்பது போல தன்னிலையில் நிலையாக வசுந்தரா நிற்பதைக் கண்ட நீதிபதி,பெர்மிஷன் கிராண்டட்!” என்றார்.

அதில் மூக்கு அறுபட்டாலும், தன்பக்கம் ஆதாரங்கள் ஸ்ட்ராங்காக இருப்பதால்,அப்படி என்ன செய்து விடப் போகிறார் இவர்?” என்ற எண்ணத்துடனே சற்று மிதப்பாகவே வசுந்தராவைப் பார்த்தபடி தன்னிருக்கையில் அமர்ந்தார் பார்த்தசாரதி.

முதலில் சிங்கானியாவின் பெர்சனல் செகரெட்டரி கிளாராவை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்என்று வசுந்தரா சொன்னதும், அவரை அழைத்துச் சாட்சி கூண்டில் ஏத்தினர்.

தன் கையில் இருந்த சில காகிதங்களின் மீது பார்வையை உலவ விட்டபடியே சாட்சிக் கூண்டை நெருங்கிய வசுந்தரா,
மிஸ்.கிளாரா! உங்க வாக்குமூலத்தின்படி அன்னைக்கு சிங்கானியாவோட அறையில் ஏதோ சத்தம் கேட்டு நீங்க உள்ளே போனீங்க.

அங்கே குற்றவாளி கூண்டில் இருக்கிற இந்தப் பாயல், உங்க பாஸ் வாயில் ஏதோ மாத்திரையைப் போடுவதைப் பார்த்து இருக்கீங்க.

அம் கரெக்ட்?” என்று கேட்கவும்,எஸ் மேம்!” என்று பவ்வியமாகப் பதில் சொன்னார் கிளாரா.

ஓகே ரைட்! தென் எனக்கு நீங்க அன்னைக்குப் பார்த்த அந்த மாத்திரை என்ன கலரில் இருந்தது என்று சொல்ல முடியுமா?” என்று  வசுந்தரா கேட்கவும், நொடியும் தாமதிக்காது,மஞ்சள் கலரில் இருந்தது மேம்என்று பதிலளித்தார் கிளாரா.

அதில் பார்த்தசாரதி அவரை ஒரு மெச்சும் பார்வை பார்க்கவும், அவரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார் கிளாரா. அந்தச் சம்பாஷணைகளைக் கண்டும் காணாது கவனித்த வசுந்தரா, “அவருடைய பாராட்டுகளை எல்லாம் வெளியே போய் மொத்தமா வாங்கிக்கோங்க. இப்போ நான் கேட்கிற கேள்விக்குக் கொஞ்சம் பதில் சொல்றீங்களா?” என்றதும்,

சூர் மேம்என்றார்.

ஓகே, இப்போ நான் மறுபடியும் கேட்கிறேன் மிஸ்.கிளாராஎன்று அழுத்திச் சொல்லி விட்டுத் திரும்பிப் பார்த்தசாரதியைப் பார்த்து விட்டு, மீண்டும் கிளாராவை ஆழமாகப் பார்த்த வசுந்தரா,நீங்க கொடுத்த வாக்குமூலத்தில் எந்தவித மாற்றமுமில்லையே??” என்று கிடுக்குப்பிடியாகக் கேள்வி கேட்டார்.

லேசாக பீதி உள்ளுக்குள் எழுந்த போதும், முகத்தைத் துடைத்து அதைச் சரிசெய்தபடி,எஸ் மேம்!” என்று உள்ளே போன குரலில் சொன்னார் கிளாரா.

ஆம் ஸேயிங் யூ ஆர் டெல்லிங் லை!” என்று ஆணித்தரமாக வசுந்தரா அடித்துச் சொன்னதில்,சாட்சிகளின் மீது தவறான குற்றங்களைச் சுமத்துகிறார்கள் யுவர் ஆனர்!” என்று கண்டனம் தெரிவித்தார் பார்த்தசாரதி.

அதற்குக் கொஞ்சமும் அசராத வசுந்தராவோ,சரியான குற்றத்தைத்தான் நான் சுமத்துகிறேன் யுவர் ஆனர்என்றார்.

ஆதரமில்லாமல் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது, தெரியும் தானே?”

ஆதாரத்தோடு தான் நான் எதையும் சொல்வேன்னு உங்களுக்கும் தெரியும் தானே?” என்று திருப்பி அடித்து உட்கார வைத்தார் வசுந்தரா.

இதோ! அதற்கான ஆதாரம்என்று தன் கையில் வைத்திருந்த ஒரு காகிதத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்த வசுந்தரா, அதை வாங்கி அவர் படிக்க ஆரம்பித்ததும்,இங்கே இந்தச் சாட்சிக் கூண்டில் நிக்கிற கிளாரா என்பவர் ஒரு ஒரு கலர் பிளைன்ட் பேஷன்ட். அப்படி இருக்கும் போது, அவரால் எப்படிப் பாயல் கையில் வைத்து இருந்த மாத்திரை மஞ்சள் கலர் மாத்திரை என்று பார்த்து இருக்க முடியும்? அதை இங்கே நாம் எப்படி சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியும்?” என்று இடியாகக் கேட்ட கேள்வியில் அந்த இடமே கொஞ்சம் ஆட்டம் கண்டது.

அதே வேகத்துடன் திரும்பி,இப்போ சொல்லுங்க கிளாரா! நீங்கள் அந்த மஞ்சள் மாத்திரையைப் பார்த்தீங்களா?” என்றவரின் ஊடுருவும் பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனவரோ,  “அது.. அது வந்து மேம்.. நான் நான்..” என்றபடி பார்த்தசாரதி இருந்த பக்கம் பார்வையைத் திருப்பிப் பார்த்துத் திணறியவர், அந்தப்புறமிருந்து எந்தவித சமிக்ஞையும் கிட்டாததில்,

வேறுவழியின்றி,நோ மேம்என்று உள்ளே போன குரலில் தலை குனிந்து சொன்னவர்,ஆனா அந்தப் பொண்ணு மாத்திரை போடுவதை நான்..” என்று அவர் மேலும் ஏதோ சொல்லும் முன், “யூ மே கோ நவ்!என்ற வசுந்தரா,தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” என்று சொல்லி அவரை நொடியில் அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

இந்த வழக்கின் அடுத்த சாட்சியான சிங்கானியா க்ரூப்பில் வேலை செய்யும் மிஸ்டர்.அனிலை விசாரிக்க விரும்புகிறேன்என்று வசுந்தரா சொல்லவுமே, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டவருக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

ஏற்கனவே இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டு விழுந்த பயத்தினாலோ என்னவோ,

கேள்வி கேட்கும் முன்னே, பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டு கர்சீப்பால் முகத்தைத் துடைத்து நின்றவரிடம்,மிஸ்டர்.அனில்! நீங்களும் சிங்கானியா சாகும் போது அந்த அறையில் இருந்ததா சொல்லி இருக்கீங்க. அந்த நேரம் அந்த அறைக்கு நீங்க ஏன் போனீங்க? எப்படிப் போனீங்கன்னு நான் தெரிந்து கொள்ளலாமா?”

அது.. அன்னைக்கு ஒரு பைலில் அர்ஜென்ட்டா சாரோட சைன் தேவைப்பட்டது.  அதுக்காக அங்கே போய் இருந்தேன் மேம்

ஒஹ்ஹ! அப்படியா? ஆனா உங்க கையில் அப்படி ஒரு பைலையும் காணோமே மிஸ்டர்.அனில்?” என்ற வசுந்தரா,ஒருவேளை எனக்குத்தான் கண் சரியா தெரியலையா? எதுக்கும் நீங்களே அதைக் கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லுங்களேன்!என்று தன் கையில் இருந்த பட்டனை அழுத்தி, அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வெள்ளைத் திரையை ஆன் செய்யவும், அங்கே ஒரு புகைப்படம் தோன்றியது.

அதில் சிங்கானியா அறைக்குள் செல்லும் அனில் கையில் எந்தவித பைலும் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிவதைக் கண்டவனுக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

அது அது.. வந்து..” என்று அனில் தடுமாறவுமே, அந்த அறையில் சிறு சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

அதைக் கேட்டு,சைலென்ஸ்! சைலென்ஸ்!” என்று கோலை அடித்து உத்தரவிட்டார் நீதிபதி.

சரி, விடுங்க.. அதை விடுங்க.. மே பீ ரூமுக்கு வர்ற வழியில் யாரையாவது பார்த்துப் பேசி இருப்பீங்க. அங்கயே பைலையும் மறந்து விட்டுட்டு கூட வந்து இருப்பீங்கஎன்று வசுந்தரா எடுத்துக் கொடுக்கவும், எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தவனும், உடனே ஆமா சாமி போட்டு மண்டையைப் பலமாக ஆட்டியதில், நீதிபதி பார்த்தசாரதியைத் தான் பார்த்தார்.

அதில் அவருக்குப் பெருத்த அவமானமாகப் போய் விட்டது! பின்னே! போன ஹியரிங்கில்நேர்மையாக தைரியமாக வந்து சாட்சி சொன்னதுக்கு வாழ்த்துக்கள்!என்று யார் யாருக்கு பார்த்தசாரதி பாராட்டு பத்திரம் வாசித்தாரோ, அவர்களின் பொய்யைத்தானே இப்பொழுது வசுந்தரா பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கிறார்?!!

நீதிபதியின் பார்வையை ஒருநிலைக்கு மேல் ஏற்க முடியாது, அனிலை பார்த்த பார்த்தசாரதிக்கு, மூன்றாவது கண் இருந்து இருந்தால், அப்பவே அவனை பஸ்பம் ஆக்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

சரி, பைல் இல்லாம உள்ளே போன நீங்க அங்கே என்ன காட்சியைப் பார்த்தீங்க?” என்ற வசுந்தராவின் கேள்விக்கு,நான் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து உள்ளே போன போது, கிளாரா மேடம் சிங்கானியா சாரை மடியில் போட்டு, அவர் கன்னத்தைத் தட்டிட்டு இருந்தாங்க.

இந்தப் பொண்ணும் அங்கே இருந்தாங்க. ஆனா அவுங்க கையில் நான் எந்த மாத்திரையையும் பார்க்கலை மேம்என்று முந்திரி கொட்டையாக முந்திக் கொண்டு பதில் சொன்னவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார் வசுந்தரா.

ம்ம்ம் ம்ம்ம்.. ஓகே, நீங்க மாத்திரையை பார்க்கலை சரி..

ஆனா உங்க பாஸ் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து நீங்க ஏன் உடனே ஆம்புலென்ஸ்க்கு கால் செய்யலை?”

நான் அவரை செக் பண்ணும் போதே அவர் இறந்து இருந்தார் மேம். இதயம் சுத்தமா துடிக்கவே இல்லை, அதான் பண்ணலைஎன்றவனின் பதிலில்,ஒஹ்ஹ்ஹ! அப்போ உங்க ஸ்டேட்மென்ட் படி, மிஸ்டர்.சிங்கானியா ஆம்புலென்ஸ் வருவதற்கு முன்பே இறந்து விட்டார், அப்படித்தானே?” என்றதில் ஒரு நிமிடம் பதில் சொல்லாது திணறி ஊமையாக நின்றான் அனில்.

ஏனென்றால்,இந்த அம்மா அப்படித்தானே என்றாலே ஏதோ வில்லங்கம் வரப் போகுது’ என்று மூளையில் மணி அடித்தது அவனுக்கு.

என்ன அனில் பதிலைக் காணோம்?என்று வசுந்தரா கேட்கவும்,

ஹா…” என்று தன்னிலை அடைந்தவனால் வேறு என்ன சொல்ல முடியும் என்ற நிலையில்,ஆமா மேம்என்றான்.

அவனின் பதிலைக் கேட்டு விட்டு,யுவர் ஆனர்! இது மிஸ்டர்.சிங்கானியாவுடைய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். இதில் அவரின் மரணத்திற்குக் காரணம், அவர் சாப்பிட்ட ஆஸ்பிரின் மாத்திரை அவருடைய ரத்தத்தில் கலந்ததால், தொண்டை வீங்கி, மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜனை நிறுத்தியதால் உண்டான அனாபிலாக்டிக் ஷாக்கில் தான் இறந்ததாக மிகத் தெளிவா சொல்லி இருக்கு.

இங்கே நான் இன்னொரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் யுவர் ஆனர். இந்தக் கொலைகுற்றத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அந்த ஆஸ்பிரின்  என்ற  மாத்திரை, ஒருவரின் ரத்தத்தில் கலந்து ரியாக்ட்டாக குறைந்தது பதினைந்து நிமிடங்கள் ஆகும்.

அப்படியிருக்கும் போது, 10.27க்கு சிங்கானியா ரூமுக்குள் சென்ற பாயல், அவருடன் நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவருக்கு அந்த மாத்திரையை கொடுத்து  இருந்தாலும், சரியாக 10.35க்கு அந்த அறைக்குள் சென்ற அனில் பரிசோதிக்கும் போது, மிஸ்டர்.சிங்கானியா எப்படி உயிரை விட்டு இருக்க முடியும்?

அப்போ பதினைந்து நிமிஷம் கழித்து உயிரைக் கொல்ல கூடிய ஒரு மருந்து, என் கட்சிக்காரரின் கை பட்டதும், எட்டே நிமிஷத்தில் இவர் சொல்வதுபடி சிங்கானியாவைக் கொன்று விட்டதா???” என்று சாட்சி கூண்டில் இருக்கும் அனிலையும், கையில் வைத்து இருந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டையும் ஆட்டி வசுந்தரா கேட்ட நொடி, அங்கிருந்த அனைவருக்குமே பயங்கர அதிர்ச்சி!

இப்படி ஒரு திருப்புமுனையை இந்த வழக்கில் சற்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே அந்நேரம் அவர்களின் முகத்தில் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது.

யூ மே கோ நவ்!” என்ற வசுந்தராவின் பேச்சைக் கேட்டு கீழே இறங்கியது அனில் மட்டுமில்ல, பாயலுக்கு எதிரான வழக்கும் தான் என்பதை அப்பொழுதே பார்த்தசாரதியால் தெளிவாக உணர முடிந்தது.

அடுத்து உடல்கூறாய்வு மருத்துவரை அழைத்து விசாரித்த வசுந்தரா,இந்த  மருந்தால் எட்டு நிமிடத்தில் ஒரு ஆளைக் கொல்ல முடியுமா?” என்று ஆஸ்பிரின் மாத்திரை குறித்த விளக்கத்தைக் கேட்க,

நிச்சயமாக முடியாது மேம்!” என்று சொன்னார் அவர்.

நீங்க போகலாம் சார்என்று சொல்லி நீதிபதியைத் திரும்பிப் பார்த்த வசுந்தரா,எந்த ஆதாரங்களும், சாட்சியங்களும் இந்த அப்பாவி பெண்ணுக்கு எதிரா நின்று, அவளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை கொடுக்கச் சொன்னதோ, இப்போ அதே சாட்சியங்களும், ஆதாராங்களுமே தெள்ளத் தெளிவாக சொல்லுது, இந்தப் பெண் குற்றவாளி இல்லை என்று!என்று தன் வாதத்தை முன் வைத்துப் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே இடையிட்டு எழுந்து நின்ற பார்த்தசாரதி,நீங்க சொல்ற மாதிரி இந்தப் பெண் குற்றவாளி இல்லை என்றால், சிங்கானியாவே மாத்திரையைச் சாப்பிட்டுச் செத்துட்டார்ன்னு சொல்றீங்களா மேடம்?” என்று நக்கல் குரலில் கேட்க,

அவரை நோக்கித் திரும்பிய வசுந்தரா,நான் அப்படிச் சொல்லவே இல்லையே சார்என்று அவரை விட நக்கலாகப் பதில் கொடுத்தார்.

அதில் சூடாகிப் போனவரும்,சாட்சிகளும், ஆதாரங்களும் வேணும்ன்னா தெளிவு இல்லாமல் இருக்கலாம் மேடம். ஆனால் சிங்கானியா இறந்தது உண்மை. அந்த அறையில் இந்தப் பெண்ணைத் தவிர வேற யாரும் இல்லை என்பதும் உண்மை. அப்போ சிங்கானியாவை இவளைத் தவிர வேறு யார் கொன்று இருக்க முடியும்???” என்று எகத்தாளமாகக் கேட்டதற்கு, வசுந்தரா பதிலளிக்காது நிற்பதைக் கண்டு எள்ளலாக அவரைப் பார்த்தசாரதி பார்த்து முடிக்கும் முன், அவரைத் தன் பதிலில் திக்குமுக்காடச் செய்து இருந்தார் வசுந்தரா.

அதை நீங்க சிங்கானியா பார்ட்னர் மிஸ்டர்.அமித் பட்டேல்கிட்டத்தான் தான் கேட்கணும்என்றவரின் பதிலில் பேரதிர்ச்சிக்கு உள்ளானார் பார்த்தசாரதி. இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாது,இது என்ன புதுக் கதை??” என்று மிதப்பாகக் கேட்டவரிடம்,இது புதுக் கதையில்லை சார், இது தான் உண்மை கதைஎன்று தலையில் அடிக்காத குறையாகச் சொன்னார் வசுந்தரா.

யுவர் ஆனர்! மிஸ்டர்.அமித் கம்பெனி பணத்தை எடுத்துச் சில மோசடி வேலைகளைச் செய்து இருக்கிறார். அதைச் சிங்கானியா கண்டுபிடித்தது மட்டுமில்லாது, அடுத்த போர்டு மீட்டிங்கிற்குள் அமித் எடுத்த பணத்தை மீண்டும் கம்பெனிக்கு செலுத்தாவிட்டால், அவருடைய பதவியைப் பறித்து போலீசில் அவரை ஒப்படைக்கப் போவதாக எச்சரித்து இருக்கிறார்.

மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுத்தாலும், கண்டிப்பாக சிங்கானியா தன்னுடைய உண்மை முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விடுவார் என்று பயந்த அமித், தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அப்பொழுது தான் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் சிங்கானியாவைத் தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி சிங்கானியாவைச் சாகடித்தும் அவரே!என்ற வாதத்தைக் கேட்டு,  “உங்க கதை கேட்க நல்லா தான் இருக்கு மேடம். ஆனா அதற்கு ஆதாரம் எங்கே..? சாட்சிகள் எங்கே..?” என்று குறுக்கு கேள்வி கேட்ட பார்த்தசாரதியைத் திரும்பிப் பார்த்த வசுந்தரா,

இவ்வளவு தூரம் ஸ்டடி பண்ணுன நான், அது கூட இல்லாமலா சார் இங்கே வந்து வாதாடிட்டு இருப்பேன்??” என்ற கேள்வியில் பார்த்தசாரதியின் முகம் கறுத்துப் போனது.

நீங்க யாரையெல்லாம் பாயலுக்கு எதிரான சாட்சிகள்ன்னு இங்கே கொண்டு வந்து நிறுத்துனீங்களோ, அவர்களே நான் சொன்ன உண்மைக்கான உண்மையான சாட்சிகள். அதற்கான முதல் ஆதராம் இது!” என்று தன்னுடைய கையில் இருந்த ரிமோட்டை வசுந்தரா மீண்டும் உயிர்ப்பிக்கவும், அங்கே திரையில் கிளாரா மற்றும் அமித் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தோன்றியது.

அதைக் கண்ட கிளாராவுக்கு குப்பென்று வேர்த்தது என்றால், அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்த அமித்தின் நிலையைச் சொல்லவே வேண்டாம்!

இந்தப் புகைப்படமே உங்களுக்குச் சொல்லும் கிளாரா மற்றும் அமித்தின் உறவு எப்படிப் பட்டது என்று!

சம்பவம் நடந்த அன்று சிங்கானியா மற்றும் பாயல் சந்திப்பைக் கிளாரா மூலம் அறிந்து கொண்ட அமித், அப்பொழுதே தன் குற்றத்திற்குப் பாயலை பலி ஆடாக மாட்டி விட முடிவு செய்து விட்டார்.

அதன்படி சரியாக பாயல் சிங்கானியாவைச் சந்திக்க உள்ளே செல்லும் முன், கிளாரா மூலம் அவருக்கு ஸ்ட்ரோக் வரக் கூடிய ஆஸ்பிரின் மாத்திரை கலந்த காபியை அருந்தச் செய்திருக்கிறார்.

இவர்களின் திட்டம் அறியாத பாயலும் சிங்கானியாவுடன் பேசிக் கொண்டு இருந்த நேரம், திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஆரம்பிக்கவும்,

அவர் காட்டிய பிபி மாத்திரையை எடுத்து அவருக்குக் கொடுக்க முயலும் போதே, அங்கே உள்ளே நுழைந்து கூச்சலிட ஆரம்பித்து விட்டார் கிளாரா.

பாயல் கையில் வைத்து இருந்தது என்னவோ சாதாரண பிபி மாத்திரை தான்! ஆனால் அதை மஞ்சள் நிற ஆஸ்பிரின் என்று தன் வாக்குமூலத்தில் சொன்னது மட்டுமில்லாது, சிங்கானியா குடித்த காபி கப்பையும் உடனே அங்கே இருந்து கிளவராக அப்புறப்படுத்தி விட்டார் கிளாரா.

பாயலுக்கு எதிராக இந்த வழக்கிற்கு இன்னும் வலுவான ஆதாரம் சேர்க்க நினைத்த அமித், அதற்கு ஏற்பாடு செய்த பொய் சாட்சி தான் மிஸ்டர்.அனில்.

அதற்கான எவிடென்ஸ், சிங்கானியா கொலை நடப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள் மிஸ்டர்.அனிலின் மனைவி பேங்க் கணக்கில் போடப்பட்டு இருக்கும் பல லட்சங்கள்.

அந்த லட்சங்கள் மிஸ்டர்.அமித்தின் பினாமி அக்கௌண்டில் இருந்து தான் ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கு என்பதற்கான ஆதார ஸ்டேட்மென்ட் இதோ!” என்று ஒரு காகிதத்தை நீதிபதியிடம் கொடுத்த வசுந்தரா, “தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!என்று தன்னிருக்கையில் சென்று அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார். “இந்த வழக்கில் குற்றவாளியாகப் பழி சுமத்தப்பட்ட மிஸ்.பாயலை உடனே விடுதலை செய்வது மட்டுமின்றி, உண்மையான குற்றவாளிகளான அமித், கிளாரா மற்றும் அனிலின் குற்றங்களுக்கான தண்டனையை வழங்கி தீர்ப்பளிக்கிறேன். மேலும் எந்தச் சாட்சிகளும், தாரங்களும் ஒரு பெண்ணைக் குற்றவாளி என்று சொல்லித் தூற்றியதோ, அதே சாட்சியங்கள்  மற்றும் ஆதாரங்களை வைத்தே அவரை நிரபராதி என்று நிருபித்த வசுந்தரா தேவியை இந்த நீதிமன்றம் வெகுவாகப் பாராட்டுகிறது. அதே நேரம், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாது, பொய் சாட்சிகளை வைத்து வாதாடிய அரசு தரப்பு வக்கீலையும் வன்மையாகக் கண்டிக்கிறது!” என்று சொல்லி அனைவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

நீதிபதியின் வார்த்தைகளைக் கேட்டு இடிந்து போய் உட்கார்ந்து இருந்த பார்த்தசாரதியின் காதில்,நிஜமாவே அந்த அம்மா கிரேட் இல்ல சார்?!” என்று கிசுகிசுத்த ஜூனியர் வக்கீலின் பேச்சை ஒத்துக் கொள்ள முடியாது பார்த்தசாரதி கண்களாலேயே எரித்தார்.

பாயலின் நன்றி மழை மற்றும் பலரின் பாராட்டில் நனைந்தாலும், அதையெல்லாம் தன்னுடைய கண்கள் தொடாத மென்னகையுடன் கடந்து நீதிமன்றத்தை விட்டு வெளிவந்த வசுந்தராவைப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து, தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு, அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைக்க ஆரம்பித்தனர்.

சத்தியாம இந்த தீர்ப்பை நாங்க யாருமே எதிர்பார்க்கலை மேம்.

எப்படி மேம் ஒரு நிமிஷத்தில் இந்த வழக்கோட தீர்ப்பையே மாற்றி எழுத வச்சிட்டீங்க???” என்றதற்கு,

உண்மை இருந்தாஒரு நிமிஷம் இல்ல, ஒரு நொடி போதும், எந்த தீர்ப்பையும் மாற்றி எழுத!” என்று  தனக்கே உரித்தான கம்பீரத்துடன் உரைத்த  வசுந்தராவிடம்,

மேலும் மேலும் கேள்விகள் பந்தாக வந்து விழுந்ததில், அசராது அதில் தேவையானதற்கு மட்டும் பதிலளித்துக் கொண்டு இருந்தவரின் அலைபேசி அடிக்கவும், அதில் அழைப்பவரின் பெயரைப் பார்த்த அருண், கூட்டத்தை விலக்கிக் கொண்டு உடனே அதை எடுத்துக் கொண்டு வசுந்தராவை நெருங்கி, அதை அவரிடம் கொடுத்தான்.

ஏனென்றால் அவனுக்குத் தெரியும், வசுந்தராவுக்கு அந்த அழைப்பும் அதை அழைத்தவரும் எவ்வளவு முக்கியமென்று!!

போதும் சார்! போதும்!” என்று பத்திரிக்கையாளர் கூட்டத்தை கலைத்து ஜூனியர்கள் அனுப்பிக் கொண்டு இருந்த அதே நேரம், போனில் செவி வழி நுழைந்து இதயம் தொட்ட குரலில், புத்துயிர் பெற்றதைப் போல அவ்வளவு நேரமிருந்த களைப்பு நீங்கி, முகம் மலர பேச ஆரம்பித்தார் வசுந்தரா.

சில நிமிட உரையாடலுக்குப் பின் நான் இல்லாமலா..?? கண்டிப்பா நாளைக்கு அங்கு இருப்பேன்என்று சொல்லி போனை வைத்தவருக்குத் தெரியவில்லை! அவனைச் சந்திக்க அவர் போகப் போகிற இடம் அவர் கனவிலும் எதிர்பார்த்திராத ஒரு இடமென்று..!!

Advertisement