Advertisement

புள்ளிமானாகத் துள்ளி வந்து தன் காரின் முன்பக்க கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தவளைக் கண்ட அர்ஜுன், சில நிமிடங்கள் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

தான் வந்த பின்பும், காரை ஸ்டார்ட் செய்யாமல் என்ன செய்கிறான் இவன் என்று பக்கவாட்டில் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, அப்பொழுது தான் அவனின் பார்வை காந்தம் உணர்ந்து உற்சாகம் பொங்க, அவனின் புறமாகத் திரும்பி அமர்ந்து, “என்ன என்னை சைட் அடிக்குறியா அர்ஜுன்?” என்று குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன் கேட்கவும், “இல்லைன்னு சொன்னா நம்புவியா?” என்று மயக்கும் குரலில் கேட்டான் அர்ஜுன்.

அதில் ஆச்சரியப்பட்டு போனாள் யாழினி. ஏனென்றால் அவளுக்குத் தெரிந்த அர்ஜுனுக்குக் காதல் செய்ய தெரியுமா?? என்ற அளவுக்கு இதுவரை சந்தேகம் தான்! அப்படியிருக்கும் போது, இப்படிப் பேசித் தன்னையே வெட்கப்பட வைக்கிறானே? என்ற எண்ணத்தில் கூசி சிவந்த முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, அமைதியாக சீட் பெல்ட்டை போட ஆரம்பித்தாள்.

அவளின் செய்கை கண்டு, “என்னாச்சு?” என்று கேட்டவனிடம், “ஒன்றுமில்லை” என்று மறுப்பாகத் தலையசைத்தவள், “போலாம்” என்று மட்டும் சொன்னாள், ரோட்டை பார்த்துக் கொண்டு.

அவளின் கன்னம் திருப்பித் தன்னைப் பார்க்க வைத்தவன், பிடிவாத குரலில் கேட்டான், “என்னனு இப்போ சொல்ல போறியா இல்லையா?” என்று..

“இவன் விட மாட்டான் போலயே!” என்று நினைத்தவளும், அவனின் புறமாக மீண்டும் திரும்பி அமர்ந்து, “எனக்கு இப்ப தான் கொஞ்சம் பயம்மா இருக்கு அர்ஜுன்” என்று நா தழுதழுக்கச் சொல்ல, “எதுக்கு?” என்று நிஜமாகவே புரியாது கேட்டான் அர்ஜுன்.

“என்னை விட்டுட்டுப் போய்ட மாட்டல்ல அர்ஜுன்?” என்று சம்பந்தமில்லாமல் பேசியவளின் உண்மை அர்த்தம் புரிபடவும், நெற்றிச் சுருங்க, “எங்கே?” என்று மட்டும் கேட்டான், கோபத்தின் உச்சத்தில் நின்று.

பின்னே என்ன?? கொஞ்ச நாள் முன்னாடி தான் ‘இந்த உலகமே உன்னைக் குற்றவாளின்னு சொன்னாலும், நான் அதை நம்ப மாட்டேன்!’ என்று காதல் வசனம் பேசி, சும்மா இருந்தவனை உசுபேத்தி விட்டு, இப்போது வந்து ‘ஜெயிலுக்குப் போய்டுவியா?’ என்று நம்பாமல் கேட்பதில் காண்டாகி போனவன், அவளின் பதிலுக்காகக் காத்திருக்க முடியாது,  “ஒஹ்ஹ! அப்போ நான் தான் குற்றவாளின்னு நீயும் முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே???” என்று கேட்டான் அனல் தெறிக்க.

அதைக் கேட்டு திருதிருத்தவள், “நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று பதில் கேள்வி கேட்டாள் யாழினி.

அதைக் கொஞ்சமும் கவனிக்காதவனாக, “அப்போ நீ கேட்டதற்கு வேற என்ன அர்த்தம்?” என்று இன்னமும் காரம் குறையாது கேட்டான் அர்ஜுன்.

அதன் சாரம் புரிந்தவள், அவனை விட அதிகமாகச் சூடாகி, “’வேற என்ன அர்த்தம்?? உன்னை அதிகமா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு அர்த்தம்” என்று முறைத்தவாறே அவனுக்குப் பதில் கொடுத்தாள்.

அந்தப் பதிலில் சூரியனைக் கண்ட பனியாக உருகி போனவன், அப்பொழுது தான் தான் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டோம் என்பது உணர்ந்து, அடக்கத்துடன், “சாரி!” என்று கேட்டான்.

எந்தவித தயக்கமுமின்றி அவன் கேட்ட மன்னிப்பில், அதுவரை இருந்த சுணக்கம் மறைந்து, இன்னும் அதிகமாக அவனின் பால் ஈர்க்கப்பட்டவள், ”எங்க வீட்ல எல்லாரும் நமக்கு அகைன்ஸ்ட்டா இருக்காங்க அர்ஜுன். யாருமே நான் சொல்றதைக் கேட்க தயாராவே இல்லை” என்று கலக்கம் நிறைந்த குரலில் சொன்னாள்.

அவளின் உண்மை நிலை புரியாதவனோ, “கேட்காதவங்ககிட்ட எல்லாம் நீ ஏன் சொல்ற?” என்று எடக்காகப் பதில் சொல்லியதில் கடுப்பாகிப் போனவள், “அவுங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லிட்டு வரச் சொல்ற?” என்று கேட்டதில் கொஞ்சம் ஜெர்க் ஆகித் தான் போனான் அர்ஜுன்.

‘அவள் சொன்னதுக்குத்தானே நான் பதில் சொன்னேன்?? அதுக்கு எதுக்கு இப்படி எகிறுறா?’ என்று எண்ணியவன், ‘இதனால் தான் இந்த ரிலேஷன்ஷிப்புக்குள் எல்லாம் மாட்டிக் கொள்ள கூடாதுன்னு நினைத்தேன். விதி எங்கே என்னை விட்டது??’ என்று நொந்து போய் இன்னும் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பவளைச் சமாதானப்படுத்த எண்ணி, “எனக்கு இது எல்லாம் புதிது யாழினி” என்றான்.

“எது?” என்று கேட்டவளிடம், “இந்த ரிலேஷன்ஷிப்..” என்று சொன்னவனிடம், “ஆமா, நான் மட்டும் தினமும் ஆயிரம் பேரை லவ் பண்ணிட்டு இருக்கேன் பாரு!!” என்று வாய் திறக்கும் முன், தன் மனதை திறந்து இருந்தான் அர்ஜுன்.

“நான் இதுவரை என் பாமிலிகிட்ட எதையும் சொல்லிச் செய்தது இல்லை. எதற்கும் பெர்மிஷனும் கேட்டதும் இல்லை. அதான் உன்னோட பாமிலி பீலிங்க்ஸ் எனக்குப் புரியலைன்னு நினைக்கிறேன்” என்றவனைக் கண்டவளுக்கு, அந்நேரம் அர்ஜுன்  ஒரு இருபத்தொன்பது வயது குழந்தையாகத்தான் தெரிந்தான்.

அதில் அவன் பால் உருகி போனவள், “அஜு!” என்று செல்லமாக அழைத்ததில், அவளை நிமிர்ந்து பார்த்தவனிடம், “ஹக் மீ!” என்று  இரு கைகளை விரித்து அழைத்தவளின் செய்கையில் வெளிப்பட்ட அவளின் நேசத்தில் நெகிழ்ந்து போனவன், “இங்கேயா?” என்று விழி விரித்து தங்களைக் கடந்து செல்பவர்களை நோட்டமிட்டபடி கேட்டான்.

அவனின் முகத்தைப் பிடித்து இழுத்து தன்னை மட்டும் பிடிவாதமாகப் பார்க்க வைத்தவள், முன்பை விட இன்னும் அர்ஜுனை நெருங்கி அமர்ந்து கொண்டு, “அஜு! ப்ளீஸ் ஹக் மீ!” என்று கொஞ்சி கெஞ்சிக் கேட்டதில் மதி மயங்கிப் போனவன், அதற்கு மேல் அடக்க முடியாத காதலில், தன் இரு கைகள் கொண்டு காற்று புக முடியாத அளவுக்குத் தன்னவளை அணைத்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில் கிறங்கியபடி, “இட்ஸ் நாட் யுவர் மிஸ்டேக்” என்று பேச ஆரம்பித்த யாழினி,

மேலும், “நான் இப்படித்தான் அர்ஜுன்! எதையும், எப்பொழுதும் யார்கிட்டயும் மறைத்துச் செய்வது எனக்குப் பிடிக்காது, முக்கியமா என்னுடைய பேரண்ட்ஸ் கிட்ட. அதானால தான் உன்னைச் சந்திக்க வருவதையும் அவுங்ககிட்ட சொல்லிட்டே வந்தேன். ஆனா அவுங்க அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குறாங்க” என்றபடி அவனை விட்டுப் பிரிந்து அமர்ந்தவள்,

தன்னவனின் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட்டபடி கலக்கம் நிறைந்த குரலில், ”உன் விஷயத்தில் என்னை கன்வின்ஸ் பண்ண முடியாதவங்க, அடுத்து உன்னைத்தான் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க, என் பொண்ணு வாழ்க்கை அது இதுன்னு நிறைய சொல்லி… அப்படி நடந்தா, அவுங்க பேச்சைக் கேட்டு என்னை விட்டுப் போய்ட மாட்ட தானே அஜூ?” என்று உயிரை உருக்கும் குரலில் சொன்னவளின் காதல் ஆழத்தில் மூழ்கி போனவன், “அது என்ன உனக்கு என் மேல அவ்ளோ காதல்???” என்று வியப்பு விலகாது கேட்டான்.

“ம்ம்ம்.. தெரியலை.. உன்னை எப்பவும் எனக்குப் பிடிக்கும். இப்போ வேற நீ என்னை சைட் எல்லாம் அடிக்குறியா, அதுல இன்னும் அதிகமா உன் மேலே க்ரேசி ஆகிட்டேன் போல!” என்று புன்னகை பூவாக மாறி சொல்பவளை விழுங்கும் பார்வை பார்த்தவன், “ஐ தின்க் நீ தான் என்னை இப்போ கிரேசி ஆக்கிக்கிட்டு இருக்க யாழினி” என்று  சொன்னான் அர்ஜுன்.

அந்தப் பேச்சிலும், அவனின் பார்வை வீச்சிலும் வெட்கி அந்திவானமாகச் சிவந்து போனவள், அவனின் ஈர்ப்பை எதிர்கொள்ள முடியாது, தன் இரு கைக் கொண்டு அவனது முகத்தை மறைத்தவள், “இங்கே இருந்து முதல்ல கிளம்பலாம் அர்ஜுன்” என்று சொன்னாள்.

அவளின் கைகளை விலக்கி, அவளை இன்னும் ஆழமாகப் பார்த்து ரசித்தவனின் பார்வை தாங்காது, “ப்ளீஸ் அர்ஜுன்! கிளம்பலாம்” என்று சிணுங்கினாள் யாழினி.

அந்தச் சிணுங்கலில் இதயம் தப்பிப் போனாலும், சுற்றி இருப்பவர்களைக் கருத்தில் கொண்டு, “ஓகே ஓகே” என்று சிரித்தபடியே அங்கிருந்து காரை ஸ்டார்ட் செய்தான் அர்ஜுன்.

மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இடங்களுக்குச் சென்று   அன்றைய பொழுதை சந்தோஷமாகக் கழித்தவர்கள், வீடு திரும்பிய பின்னும், ஒருவரை ஒருவர் தான் அதிகமாக நினைத்துக் கொண்டு மெத்தையில் புரண்டு கொண்டு இருந்தனர்.

இரவு உணவின் போது, “ஹாவ் வாஸ் யுவர் டே?” என்று கேட்ட தாயிடம், “வொண்டர்ஃபுல்!” என்று முகம் பளிச்சிட சொன்னான் அர்ஜுன்.

தன் மகன் இப்படி இருக்க வேண்டும் என்று தானே அவரும் ஆசைப்பட்டார்.

அதில் அவனின் முதுகை தன் இடக்கையால் தடவி கொடுத்தவர், “ஐ அம் ஆல் சோ ஹாப்பி பார் யூ மை சன்!” என்று சொன்னதைக் கேட்டவனின் முகம் திடீரென இருளுவதைக் கண்டுகொண்டவர், “என்னாச்சு அர்ஜுன்?” என்று மகனிடம் விசாரித்தார்.

“எனக்கு அன்னைக்கு நடந்தது மட்டும் நியாபகம் வந்துட்டா, இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு சொல்யூஷன் கிடைச்சுடும்ல மாம்?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே தன் குரலை உயர்த்தியவன், “பட் எனக்குத்தான் எதுவுமே நியாபகம் வர மாட்டேங்குதே!” என்று விரக்தியில் டேபிளைத் தட்டிச் சொன்னான்.

மகனின் ஆசை கொண்ட மனம் படும் பாடு கண்ட வசுந்தராவுக்கு மனம் கனத்துப் போனது.

முன்பு பல நாட்கள், தன் வாழ்க்கை குறித்துத் தான் துடித்ததைப் போலவே, இன்று தன் மகன் அவன் வாழ்க்கையை நினைத்துத் துடிக்கிறானே?? என்று நினைத்துப் பார்த்த வசுந்தராவுக்கு ‘சரித்திரம் திரும்புகிறதோ?’ என்ற சந்தேகம் எழுந்தது.

என்ன ஒரு வித்தியாசம்.. அன்று அவர் தனக்கான வாழ்க்கை வேண்டாமென்று அதிலிருந்து வெளியேற துடித்தார். ஆனால் அவரின் மகனோ, இன்று தனக்கு இந்த வாழ்க்கை வேண்டுமென்று துடிக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவரின் இதழ்கள் விரக்தி புன்னகை ஒன்றைச் சிந்தியது, இருவரின் காரணங்கள் வேறாக இருந்தாலும் வலி ஒன்று தானே என்று!

“உனக்கு நியாபகம் வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி, நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை உனக்கு அமைத்துக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு! நீ கவலைப்படாம போய் தூங்கு!” என்று நம்பிக்கை கொடுத்து மகனை அனுப்பி வைத்தவர், அன்றைய இரவு முழுவதும் தூங்காது, மகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடிக் கொண்டு இருந்தார்.

மகனை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்த வசுந்தராவின் வாக்கு, வெறும் வார்த்தைகள் இல்லை என்பதைக் கண் கூடாக அந்த நள்ளிரவில் சிறு நடுக்கத்துடனே கண்டுகொண்டு இருந்தனர், அருணும் அவன் கூட இருந்தவர்களும்.

ஒரு நிலைக்கு மேல் டென்ஷன் தாங்காது, முகம் வேர்க்க எச்சிலை விழுங்கிக் கொண்டு முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த வசுந்தராவின் காதில், “மேம்! நாம வேணும்ன்னா போலீசைக் கூப்பிடலாமா?” என்று ஹஸ்கி வாய்சில் அருண்  கேட்டான்.

காரிருள் சூழ்ந்து இருந்த நிலையில், தெரு விளக்கின் மிதமான வெளிச்சத்தில், வெறிச்சோடி இருந்த அந்தச் சாலையைக் கழுகு பார்வை பார்த்தபடி இருந்த வசுந்தரா, குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்.

அங்கே பின் சீட்டில் அமர்ந்து இருந்த மூவருமே கிட்டதட்ட ஒரே முகபாவனையுடன் தான் இருந்தனர்.

அவர்களைக் கண்டவள், “என்ன பயமா இருக்கா?” என்று கேட்டார்.

மூவருமே அசையாது அமைதி காக்கவும், “என்ன ஜோசப் பயமா இருக்கா?” என்று நடுவில் இருந்தவனை வசுந்தரா கேட்கவும்,

“ச்சே! ச்சே! பயமா?? எனக்கா?? நெவர் மேடம்!” என்று வீர சிவாஜி வசனம் பேசியவனை மற்ற இருவரும் சடாரென திரும்பி அதிர்வுடன் பார்த்தனர்.

பின்னே? அவ்வளவு நேரமும், “தாத்தா! என்னைக் காப்பாத்துங்க! பாட்டி என்னைக் காப்பாத்துங்க!” என்று சத்தமில்லாமல் பஜனை பாடியது மட்டுமில்லாது, “ஏன்டா செத்துப் போனவங்களையா கூப்பிடுற?” என்று அருண் கேட்டதற்கு,

“செத்தவங்களுக்குத்தான் சாக போறவனின் பயம் தெரியும் சீனியர், அதான்..” என்று அவன் விளக்கம் கொடுக்கவுமே, அவனுக்கு அருகில் இருந்தவனோ, “அப்படியா? அப்போ சித்தி என்னைக் காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” என்று ஜெபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

அதில் அருணுக்கு எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

நேரம் ஆக ஆக ஊரில் உள்ள செத்துப் போனவங்களை எல்லாம் ஜோசப் கூப்பிட ஆரம்பித்ததில், எங்கே அதில் யாராவது இவன் தொல்லை தாங்காது வந்து விடுவார்களோ என்ற பயத்தில் தான்,  சற்று முன் வசுந்தராவிடம் அருண் அவ்வாறு கேட்டான்

ஆனால் இப்பொழுது என்னவென்றால் இவன் இப்படிச் சொல்கிறான் என்று கடுப்பாகி போனவர்கள், அவனை முறைக்கவும், அவர்களின் அனலை தாங்கிக் கொள்ள முடியாதவன் இளித்தபடியே, “சாரி! ஒரு ப்ளோல பொய் சொல்லிட்டேன்” என்று சொன்னதைக் கேட்டு அவனை அப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்த இருவரும், “வீட்டுக்குப் போனதும் இருக்குடா உனக்கு!!” என்று எச்சரித்து விட்டு வசுந்தராவைத் தொடர்ந்து ரோட்டில் பார்வையைப் பதிக்க ஆரம்பித்தனர்.

சில நிமிட காத்திருப்புக்குப் பின், ஒரு காரும் அதன் இருபுறமும் இரண்டு மோட்டார்பைக்கும் வருவதை வசுந்தரா இருளின் மறைவில் இருந்து உற்று நோக்கிக் கொண்டு இருக்கும் போதே, அவரின் மொபைலுக்கு ஒரு போட்டோ அனுப்பப்பட்டு இருந்தது.

அதை அவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, “இவன் தானா?” என்று அவர் அணிந்து இருந்த இயர் போன் வழியாக ஒரு குரல் கேட்டது.

“அவன் தான்! கேட்ச் ஹிம்!” என்று வசுந்தரா ஆணையிட்டு விட்டு, தனக்குப் பின்னிருந்தவர்களை, “கெட் ரெடி பாய்ஸ்!!” என்று அலர்ட் செய்யவுமே, அதுவரை இருந்த விளையாட்டுக்கள் மறைந்து சீரியஸ் மோடுக்கு மாறிய மூவரும், அடுத்து என்ன நடந்தாலும் மேடம் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்ற உறுதியைப் பூண்டு கொண்டு, தங்களின் கழுகு பார்வையை தங்களை நோக்கி வந்து கொண்டு இருந்த அந்த காரின் மீது பதித்து இருந்தனர்.

தங்களைக் கடந்து சென்ற அந்த கார், சிறிது நேரத்தில் ‘கிரீச்’ என்ற பலத்த சத்தத்துடன் சடன் ப்ரேக் போடுவதும், அதைத் தொடர்ந்து சண்டை போடும் கூச்சலும் பின்பக்கத்தில் இருந்து பலமாகக் கேட்கவும், தங்கள் காரை விட்டு இறங்க போன மூவரையும், “வெய்ட்!” என்று சொல்லித் தடுத்து நிறுத்தி இருந்த வசுந்தராவின் கண்களோ, அவர் காரின் பக்கவாட்டு மிரரிலேயே தான் பதிந்து இருந்தது.

பின்னிருந்து கேட்ட சத்தங்கள் குறைந்த அதே நேரம், அங்கே நின்று இருந்த ஒருவன் கையைத் தூக்கி வரலாம் என்று செய்கை காமிக்கவும், “லெட்ஸ் கோ!” என்று தன் பக்க கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வசுந்தராவைத் தொடர்ந்து காரை விட்டு இறங்கினர் மற்றவரும்.

சிறிது தூரத்தில், கழுத்தில் கத்தி வைக்கப்பட்டு, பின்புறமாக கைகள் கட்டப்பட்டு, முகம் மூடி, முட்டி போட வைத்திருந்தவர்களின் பின் நின்று இருந்தவர்களைக் கண்டு குழம்பிப் போனார்கள், ஜூனியர்கள் “யார் இவர்கள்??” என்று.

இருந்தும் அதைக் கேட்கும் நேரம் இதுவல்ல என்று புரிந்து, அமைதியாகவே வசுந்தராவைப் பின்பற்றி அவ்விடம் சென்றனர்.

“இதுல யாரு புளியந்தோப்பு மணி?” என்று கேட்ட வசுந்தராவின் கேள்விக்கு, “இவன் தான்!” என்று ஒருவனை முதுகில் மிதித்து முன்னே தள்ளி விட்டான், அவனுக்கு பின் நின்று இருந்தவன்.

“இவனை வண்டியில் ஏத்துங்க!” என்று தன் ஜுனியர்களுக்குக் கட்டளையிட்டார் வசுந்தரா.

அதை ஏற்றவர்களும், நொடியும் தாமதிக்காது, அவனைப் பிடித்து இழுத்துச் சென்று, தங்களின் வண்டியின் டிக்கியில் உள்ளே தள்ளி கதவைச் சாற்றினார்கள்.

வந்த வேலை முடிந்தது என்பது போல காரில் வந்து ஏற போன வசுந்தராவிடம், “அவுங்க மேடம்?” என்று மணியுடன் வந்த அவனின் சகாக்களைக் கண் காண்பித்து அருண் கேட்க,

“அவுங்க எனக்குத் தேவையில்லை” என்று அசால்ட்டாக வசுந்தரா சொன்ன நேரம், அவர்களை அடித்துத் துவைத்த கும்பலே அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவ்விடம் விட்டுக் கிளம்பி இருந்தது.

மணியை வீட்டுக்குப் பின் இருக்கும் ஸ்டோர் ரூமில் அடைத்து வைத்து விட்டு தங்களறை வந்த ஜோசப், அங்கே தூங்கிக் கொண்டு இருந்த மற்ற ஜூனியர்களை எழுப்பி, சற்று முன் நடந்தவற்றை கண்ணில் பீதியுடன் கூற ஆரம்பித்தான்.

“மேடமை நாம சாதாரணமா நினைச்சுட்டோம். ஆனா அவுங்க ஒரு லேடி டான் ரேஞ்சுக்கு இன்னைக்கு நடந்துக்கிட்டாங்க தெரியுமா?” என்று விவரிக்க ஆரம்பித்தவனின் பேச்சு காதில் விழுந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அருண்.

அவனுக்கு வசுந்தராவின் இந்த அதிரடி வேட்டை எல்லாம் பழக்கம் என்பதால், நேராக குளியலறை சென்று ரெப்ரெஷ்ஷாகி வந்தவன், கட்டிலில் படுத்துத் தூங்க ஆரம்பித்து விட்டான்.

ஜோசப் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்த நேரம், அங்கிருந்த அனைவரின் மனதிலும் எழுந்தது ஒன்றே ஒன்று தான்! வசுந்தரா சாதாரண வக்கீல் மட்டும் இல்லை, அவர் அதற்கும் அப்பாற்பட்ட ஒரு இரும்பு மனுஷி என்பது தான் அது..!!

அந்த கூற்றுக்கு ஏற்றார் போல, அனைவரும் உறங்கிய பின்னும் உறங்காது, அடுத்த ஹியரிங்கிற்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு  இருந்தார் வசுந்தரா.

ஏனென்றால் அவருக்குத் தெரியும், தான் பிடித்து வந்தது புலி இல்லை பூனை என்று!

காட்டில் வேட்டைக்காரர்கள் புலியைப் பிடிக்கப் பூனையை பொறியாக வைப்பார்களாம். அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது வசுந்தராவும் கையில் எடுத்து இருந்தார்.

மணி என்ற இந்தப் பூனையை வைத்து நாளை ஆடப் போகும்   வேட்டையில், அவருக்கு கிடைக்கப் போவது புலியா?? இல்லை மீண்டும் ஒரு பூனையா?? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement