Advertisement

8

வசுந்தரா தன் ஜுனியர்களிடம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அர்ஜுனின் கேஸை அலசி ஆராய்ந்து, அதிலிருந்து ஏதாவது அவர்களுக்குச் சாதகமாகக் கண்டுபிடிக்குமாறு சொல்லி இருந்தார்.

அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, பல நாட்களாக பலமணி நேரங்கள் போராடியும், இப்பொழுது வரை அர்ஜுனின் கேஸில் ஒரு துப்பும் கிடைக்காததில் விரக்தி அடைந்து போயினர்.

அதன் வெளிப்பாடாக, “ச்சே! என்ன இவ்வளவு தேடியும் நாளைக்கு ஹியரிங்கிற்கு இன்னும் ஒண்ணுமே சிக்க மாட்டேங்குது!” என்று சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த அருண், “இங்கே வா!” என்று அவனை மட்டுமில்லாது மற்றவர்களையும் தனக்கு அருகில் வரவழைத்துச் சுற்றி அமர வைத்தவன்,

”இங்கே பாருங்க பாய்ஸ்.. சட்டம் என்ற இருட்டு அறையில் ஆதாரம் என்ற குண்டூசியைத் தேடுறது அவ்வளவு சுலபமில்லை. சோ அதுக்கு நமக்குப் பொறுமையும், கடமையும் அதிகமா இருக்கணும். அப்ப தான் மேடம் மாதிரி ஒரு பெரிய வக்கீலா ஆக முடியும்!” என்றவனின் கல்வெட்டு வார்த்தைகளைக் கேட்டுப் பூரித்துப் போன ஜூனியர் ஒருவன், “சீனியர்! அந்தக் கையைக் கொஞ்சம் கொடுங்க” என்று பூரிப்பு பொங்கக் கேட்டான்.

“எதுக்கு?” என்று உஷாராக அருண் கையில் அணிந்து இருந்த தங்க மோதிரத்தை மறைத்துக் கொண்டு கேட்க,

“அட! சந்தேகப்படாம கையைக் கொடுங்க சீனியர்” என்று அவனின் கையைப் பிடுங்காத குறையாகப் பிடுங்கி, குலுக்கோ குலுக்கென்று குலுக்கியவனோ, “எப்படி சீனியர் இப்படியெல்லாம் சொல்றீங்க? நீங்க சொன்னதைக் கேட்டு, அப்படியே எனக்குள்ள இருக்கிற வக்கீல் சீறி பாய்ந்து வெளிய வரத் துடிக்கிறான் தெரியுமா?” என்று பெருமை பொங்க சொன்னவனை ‘ஞே’ என்று பார்த்துக் கொண்டு இருந்தான், அவனவன் உண்மை அவனவனுக்குத்தானே தெரியும் என்ற ரீதியில்..

இருந்தும் வெளியில், “இது என்ன பிரமாதம்?? இன்னும் எவ்வளவோ இருக்குடா அண்ணன்கிட்ட!!” என்று காலரை தூக்கிக் கெத்தாகச் சொன்னதைக் கேட்ட இன்னொருவன், “அதையெல்லாம் இப்படி அப்போ அப்போ எங்களுக்கும் கொஞ்சம் அவுத்து விடுங்க சீனியர். அப்ப தானே நாங்களும் உங்களை மாதிரி ஆக முடியும்” என்று அருணின் புகழ் பாட, மற்றவர்களும் “ஆமா சீனியர்!” என்று அதையே ஒத்து ஊதினர்.

அவர்களுள் ஒருவன் மட்டும் வாய் திறக்காது, ஏதோ சிந்தனை வயப்பட்டு இருப்பதைப் பார்த்த அருணுக்கு, திக்திக்கென்று இருந்தது, “பயபுள்ளை கண்டுபிடுச்சுடுவானோ??” என்று!

சில நிமிடங்களில் மூளையைத் தட்டிக் கொண்டு இருந்தவன், “ஹாங்! கண்..” என்று அது ஒரு தெலுங்கு பட டையலாக் என்பதைச் சொல்ல கையைத் தூக்கிக் கொண்டு வாயைத் திறக்கப் போன நேரம், அலறி அடிக்காத குறையாக அவனை நோக்கி ஓடி, அவனின் வாயைப் பொத்திய அருண், “500 ரூபாய் தரேன்டா! வாயை திறக்காதடா!” என்று அவனின் காதில் பேரம் பேசினான்.

 “500 பத்தாது, 1௦௦௦ன்னா ஓகே” என்றவனை முறைத்தவனோ, “டேய்! நான் உன் சீனியர்டா!” என்று சொல்ல, “ஒரு சீனியர் மாதிரியா நீ நடந்துக்குற?” என்று திருப்பிக் கேட்டவனின் வார்த்தைகளில், துக்கப்பட்டுத் துயரப்பட்டுப் போனவனோ, அவமானம் தாங்காது, உடனே தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவன் பாக்கெட்டில் திணித்தான்.

அதைக் கண்டுகொண்டு இருந்த மற்றவர்களோ, “சீனியர்! அவன்கிட்ட மட்டும் என்ன ரகசியம் சொல்றீங்க?” என்று அருணை நோக்கிப் படை எடுத்துக் கட்டிப் பிடித்ததில் பேலஸ் தவறியவனோ, மொத்தமாக கீழே விழுந்தான்.

அவனுக்கு மேலே பாற்கடலில் பள்ளி கொண்டவரைப் போல மற்றவர்கள் படுத்து இருந்ததில், லாரிக்கு அடியில் சிக்கிய கீரிப்பிள்ளை போல நசுங்கிப் போனவன், “ஐயோ! கல்யாணம் ஆகாமலேயே குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுவாங்க போலயே!” என்று எண்ணியவன், “அடேய்! காண்டாமிருகத்துக்குப் பிறந்த காண்டாமிருகங்களா!” என்று கத்த,

“ஐயோ சீனியர்! காண்டாமிருகத்துக்கு காண்டா மிருகம் பிறக்காம பின்ன காக்காவா பிறக்கும்?” என்று மேலே படுத்து இருந்தவன் நக்கலடிக்க, அதைக் கேட்டு மற்றவர்கள் எகிறி குதிக்காத குறையாகக் குதித்து, “சபாஷ் மச்சான்! சபாஷ்!” என்றதில், “ஐயோ! போச்சே! போச்சே! குதிக்காதீங்கடா எருமைகளா!” என்று கூப்பாடு போட்டான்.

அதைக் கேட்டு இடையில் இருந்த ஒருத்தன், “இந்த விளையாட்டு கூட நல்லா இருக்குல சீனியர்.. இனி தினமும் இதே மாதிரி விளையாடுவோமா?” என்று சொல்ல,

“என்னது? இப்படியே விளையாடுவோமா??” என்று அதிர்ந்து போனவன், “யாரை படுக்கப் போட்டு யாருடா விளையாடுறது?” என்றவன், சீறி வீறு கொண்டு எழுந்ததில், அனைவரும் சரிந்து மல்லாக்க விழுந்தனர்.

“என்ன சீனியர் இப்படித் தள்ளிட்டீங்க?” என்று எழுந்து நின்றவர்களில் ஒருவன் புகார் அளிக்கவும், அவனை எரிக்கும் பார்வை பார்த்தவன், “டேய்! யாருடா அவன் காண்டாமிருகத்துக்கும், காக்காக்கும் விளக்கம் கேட்டவன்?” என்று கேட்க,

ஒருத்தனும் வாய் திறக்காது ஒத்து நிற்பதைக் கண்டு மேலும் கடுப்பாகிப் போனவன், “அப்புறம், எவன்டா அவன் என்னமோ இன்னைக்குத்தான் கிண்டர் கார்டனுக்கு வந்தவன் மாதிரி இப்படியே விளையாடலாம்ன்னு கேட்டது?” என்று கேட்டான்,

அதற்கும் அங்கே பெருத்த அமைதி நிலவுவதைக் கண்டு, “ஒஹ்ஹ! அப்படியே காட்டிக் கொடுக்காத கரிகாலன் பரம்பரை பாரு இவுங்க எல்லாம்!” என்று நக்கலடித்தவன், “ஒழுங்கா இப்போ நீங்களா ஒத்துக்குறீங்களா?? இல்லை நானா கண்டுபிடிக்கட்டுமா??” என்று சீரியஸ் டோனில் அருண் கேட்கவும்,

முன்னே வந்த ஒருவன், “என்ன சீனியர் இதைப் போய் பெருசுபடுத்திக்கிட்டு?? காலையில் இருந்து மண்டை காய்ந்து போனதால, கொஞ்சம் உங்ககிட்ட விளையாட நினைச்சோம். அது ஒரு குத்தமா?” என்று ஏற்கனவே கலங்கிப் போய் இருந்த அருணின் வயிற்றில் ஒரு குத்து குத்தி கேட்டதில், அவனை ‘வெட்டவா குத்தவா’ என்று பார்த்தான் அவன்.

“ஏன்டா, லாரி அடியில் மாட்டின எலி மாதிரி நான் கத்திக்கிட்டு இருக்கேன். அதைக் கூடக் கவனிக்காம விளையடலாமான்னா கேட்குறீங்க?” என்று அவனைக் குனிய வைத்து மொத்த போனவனை ஓடி வந்து போராடித் தடுத்தவர்கள், அவனிடம், “ஜாரி சீனியர்!” என்று இளித்துச் சொன்னார்கள்.

“இதுக்கு இவனுங்க கேட்காமலே இருந்து இருக்கலாம்!” என்று எண்ணிக் கொண்டவனோ, “இங்கே பாருங்கடா.. நான் எல்லாம் இந்த நிலைக்கு வந்து இருக்கேன்னா, அதுக்கு காரணம் என்ன?” என்று கேட்க,

“எந்த நிலைமைக்கு சீனியர்?” என்று நக்கலாகக் கேட்டான் ஒருவன்.

“ம்ம்ம்.. வசுந்தரா மேடத்துக்கு அசிஸ்டண்ட்டா இருக்குறதைச் சொன்னேன்”

“ஒஹ்ஹ.. அதுவா? ஓகே ஓகே” என்றவனின் ‘ஓஹ்ஹ்வே சரியில்லையே?’ என்று நினைத்த போதும். “எப்பவுமே வேலை வேலைன்னு சிந்திக்கிற என்னுடைய சின்சியாரிட்டியால தான் என்றவன் மேலும், “அவ்வளவு ஏன்? போன ஹியரிங்ல மேடம் அரசாங்க வக்கீலை கிழிகிழின்னு கிழிச்சு தொங்க விட்டாங்களே, அதற்குக் காரணம் யாரு?”

“யாரு சீனியர்?” என்று பவ்வியமாக ஒருவன் கேட்க,

“வேற யாரு?? எல்லாம் நான்தான்டா!! நான் எடுத்துக் கொடுத்த பாயிண்ட் ஒவ்வொன்னையும் பேசித்தான், மேடம் கோர்ட்டையே கதி கலங்க வச்சாங்க, தெரியுமா?” என்றதும்,

“தெரியாதே சீனியர்?” என்று ஒரு சேர சொல்லினர் மற்றவர்கள்.

அதைக் கேட்டு காண்டானவனோ, ‘இதுல மட்டும் நல்லா ஒத்துமையா இருங்கடா!’ என்று எண்ணிக் கொண்டு,

“லிசன்! என்னை மாதிரி சின்சியாரிட்டி, சீனியாரிட்டி, பங்சுவாலிட்டியோட இருந்தா தான் நாளைக்கு நீங்களும் என்னை மாதிரியே ஒரு பெரிய வக்கீலாக வர முடியும்டா” என்று சொன்னது தான் தாமதம்..!!

கூட்டத்தில் ஒருவன், “சீனியர்… எங்களுக்குத் தெரியாம நீங்க எப்போ வக்கீலானிங்க?” என்று அதிர்ந்து கேட்டதில் மற்றவர்கள் சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விட்டனர்.

அதில் கேள்வி கேட்டவனின் கழுத்தைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்த அருணோ, “கோர்ட்டுக்கு போய் வாதாடினா தான் வக்கீலாடா?? வக்கீலாடா??” என்று அவனின் மண்டையில் கொட்டிக் கேட்டான்.

வலி தாங்காதவனோ, “இல்ல இல்ல.. இல்லவே இல்ல சீனியர்” என்று அலறினான்.

அந்தப் பதிலில், அவனை ‘போனா போகுது’ என்று விடுவித்தவன், “வேற யாருக்காவது இங்கே அதில் சந்தேகம் இருக்கா?” என்று கையை முறுக்கிக் கொண்டு அருண் கேட்டான்.

அதில் ஓடி வந்து அவனைச் சுற்றி சூழ்ந்து நின்றவர்கள், “நீங்க வக்கீல்களுக்கு எல்லாம் பெரிய வக்கீல் சீனியர்! டான் சீனியர்!” என்று அவனின் துதி பாடினர்.

அதைக் கேட்டு முகம் மலர்ந்தவன், “கேட்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா என்னைக்கு அப்படி ஒன்னு என் வாழ்க்கையில் நடக்கப் போகுதோ தெரியலையே?” என்று உள்ளுக்குள் குமுறி குமுறி அழுதான்.

அந்த நேரம் அங்கே அவனைக் காண வந்த வசுந்தரா, அங்கு அரங்கேறிக் கொண்டு இருந்த நாடகத்தைக் கண்டு, “என்னாச்சு?” என்று கேட்க,

தன்னினைவில் மூழ்கி போயிருந்த அருண், ஜூனியர்கள் தான் அப்படிக் கேட்கிறார்கள் என்று நினைத்து, “அடுத்து எப்படி இந்த கேஸை மூவ் பண்ணலாம்ன்னு என் மண்டையைப் பிழிஞ்சு யோசிச்சுகிட்டு இருக்கேன்டா” என்று விட்டத்தைப் பார்த்துச் சொன்னவனைத் தட்டி, “சீனியர்! சீனியர்!” என்று உலுக்கியதில், “என்னடா?” என்று கேட்டவனிடம் வசுந்தராவை அவன் திருப்பிக் காட்டினான்.

அவரைக் கண்டு விதிர்விதிர்த்துப் போன அருண், அட்டென்ஷன் மோடில் நின்று, “குட்.. குட் ஆப்டர்நூன் மேடம்!” என்று திக்கித் திணறி சொன்னான்.

அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்த வசுந்தரா, “என்ன விஷயம்?” என்று கேட்க,

“எல்லாம் நம்ம அர்ஜுன் சார் கேஸ் தான் மேடம்.. போன ஹியரிங் மாதிரியே நீங்க வாதாட சீனியர் நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கார் மேடம்” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு தலையே சுற்றி விட்டது அருணுக்கு.

“ஒஹ்ஹ! நான் வாதாட சார் நோட்ஸ் எடுக்கிறாரா?” என்று அருணை ஆழ்ந்து பார்த்து வசுந்திரா கேட்கவுமே, பாய்ந்து வந்து சற்று முன்பு பேசியவனின் வாயில் ஓங்கி ஒரு போடு போட்ட அருண். “யாருக்கு யார் நோட்ஸ் எடுத்துக் கொடுக்கிறது?” என்று கேட்டான்  

“இப்படித்தான் மேடம் நான் ஒன்னு சொன்னா இவனுங்க ஒன்னு புரிஞ்சுக்குறாங்க” என்று அந்தர்பல்டி அடித்தவன், மேலும், “உங்க கேஸ்களைப் பார்த்து நாம நோட்ஸ் எடுக்கணும்ன்னு சொன்னேன். அதைத்தான் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு, இப்படி உளறிக்கிட்டு இருக்கானுங்க மேடம்” என்று திருதிருத்து அருண் சொல்வதையும், அவனை “யாரு?? நாங்க??” என்று மற்றவர்கள் காண்டாகப் பார்ப்பதையும் கண்ட வசுந்தராவுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

அதைக் காணவும் தான் அருணுக்கு போன உயிரே திரும்பி வந்தது போலவே இருந்தது.

“எல்லாரும் வாங்க, சாப்பிட போகலாம்” என்று சொல்லி விட்டுத்  திரும்பியவரின் தலை அங்கிருந்து மறையவுமே, ஜூனியர்கள் அனைவரும் அருணைச் சுற்றி வளைத்துக் கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

அதையெல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டவனோ, “அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா!!” என்று வடிவேலு பாணியில் சிரித்து சொல்வதைக் கேட்டு மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருவாறாக பேச்சும், அரட்டையுமாக வசுந்தராவுடன் அமர்ந்து அனைவரும் உணவு உண்டு கொண்டு இருந்த நேரம், அங்கே இருந்த டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டு இருந்தது.

அதைக் கவனித்தபடியே உணவருந்திக் கொண்டு இருந்த வசுந்தரா, திடீரென்று அங்கே டிவியில் ஓடிக் கொண்டு இருந்த செய்தியைச் சுட்டிக் காட்டி, “இந்த கேசை நீ எடுத்து நடத்துறியா?” என்று அருணிடம் கேட்டார்.

அதைக் கேட்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்த சாப்பாடு புரை ஏறியது அவனுக்கு. அதில்  அவன் மேற்கொண்டு உணவருந்த முடியாது திணறுவதைக் கண்டு, “சீனியர் சீனியர்! மெதுவா மெதுவா!” என்று அவனுக்கு மற்றவர்கள் தலையில் தட்டி தண்ணீர் எடுத்துக் கொடுக்கவும், அதை வாங்கி அருந்தியவனுக்கு, சில நிமிடங்கள் கழித்தே சீராக மூச்சு விடவே முடிந்தது.

வசுந்தரா சொன்னதைக் கிரகித்து தன்னிலை அடைந்தவன், “எந்த கேஸை மேடம்?” என்று கேட்க,

“இந்த கேஸ் தான்” என்று திரையை அவர் காட்டவும்,

அவர் காட்டிய திசையில் தன் கவனத்தைத் திருப்பியவன், அங்கே செய்தி வாசிப்பாளர், ஒரு ட்ரங்க் அண்ட் டிரைவ் கேஸ் பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தான் அவன்.

“நான் வேணா உனக்கு இந்த கேஸுக்கு வாதாட ரெகமன்ட் பண்ணவா?” என்று கேட்ட வசுந்தரா, “மேலும் இதுல உனக்கு பிளஸ் பாயின்ட்.. அந்த கேஸில் ஆக்சிடன்ட் ஆனவன் ஸ்பாட் அவுட்” என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வதைக் கேட்டவனுக்கு ‘திக்’ என்று இருந்தது..

பின்னே! ‘செத்தவனுக்காக எல்லாம் என்னை வாதாட சொல்றாங்களே?’ என்று..

அவனின் நிலை அறியாது அவனை இடித்த ஜோசப், “செம கேஸ் சீனியர்! உடனே ஒத்துக்கோங்க” என்று உசுப்பி விட, அவனைக் கொலைவெறியுடன் பார்த்தவன், “ஏன்டா, நீங்க எல்லாம் உயிரோட இருப்பவனுங்களுக்கு வாதாடுவீங்க, நான் மட்டும் செத்துப் போனவனுக்கு வாதாடணுமா?” என்று அடிக்குரலில் அவனை சீறிக் கொண்டு இருக்கும் பொழுது, மறுபக்கமிருந்து இன்னொரு இடி அருணுக்குக் கிடைத்தது.

அதில் என்ன என்று அவன் பக்கவாட்டில் பார்க்கவும், “பாஸ்! நான் சொல்றதைக் கேளுங்க.. ஹிட் அண்ட் ரன் கேஸுன்றதுனால ட்ரைவரை மட்டும் புடிச்சுட்டா போதும்! நீங்க வாதாடாமலே ஜெயிச்சுடலாம். யோசிக்காதீங்க, உடனே ஒத்துக்கோங்க!” என்று எடுத்துக் கொடுத்தவனை எரிக்கும் பார்வை பார்த்தவனோ, “ஆமா, அவனை யாரு புடிக்குறது? நீயா?” என்று கேட்க, “என்னது நானா??” என்று திகைத்துப் போனவனிடம், “தெரியுதுல?? அப்போ மூடிட்டு இரு!!” என்றதும், அவனும் அமைதியாகிப் போனான்.

“என்ன சொல்ற?? இந்த கேஸ் ஓகேவா??” என்று அருணைப் பார்த்து வசுந்தரா கேட்கவும், “இது எல்லாம் ரொம்ப போங்கு மேடம்” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னவனிடம், “ஏன் அப்படிச் சொல்ற?” என்று கேட்டார், பதில் தெரிந்தும் தெரியாதவராக வசுந்தரா.

அதை நம்பியவனும், “பின்ன என்ன மேடம்?? இந்த கேஸில் செத்தவன் யாருன்னும் தெரியலை. இடிச்சவன் யாருன்னும் தெரியலை. இதுல நான் யாருக்குன்னு போய் வாதாடுறது?” என்று அழுகாத குறையாகக் கேட்டவனின் தோரணையில் புன்னகைத்த வசுந்தரா,

“அது தான் இந்த கேஸோட ஹைலைட்டே அருண்! எனக்கே நோட்ஸ் எடுத்துக் கொடுக்கிற உன்னால அந்த ரெண்டு பேரையுமே கண்டுபுடிக்க முடியாதா என்ன???”  என்று கேட்டார்.

அதைக் கேட்டு “ச்சே! கிரேட் இன்சல்ட்!” என்று தனக்குள் மானசீகமாகச் சொல்லிக் கொண்டவன், எப்படியாவது இதில் இருந்து கழண்டு கொள்ள நினைத்து,

“ம்ம்ம்.. நீங்க சொல்ற மாதிரி அந்த ரெண்டு பேரையும் நான் கண்டுபுடிச்சுடுவேன் தான்.. ஆனா பாருங்க, அதை எடுத்து நடத்த முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறினான் அருண்.

“ஏனோ?” என்று புருவம் உயர்த்தி அவனைப் பார்த்தார் வசுந்தரா.

“ஏன்னா அர்ஜுன் சார் கேஸ் முடியற வரைக்கும், வேற எந்த கேஸ்லையும் நான் இன்வால்வ் ஆக மாட்டேன்னு இவன் மேல சத்தியம் பண்ணி இருக்கேனே?” என்று பக்கத்தில் இருந்தவனின் தலையில் அடித்துச் சொன்னவனின் பேச்சைக் கேட்டு, “என்னது? இது எப்போ?” என்று அருணை அரண்டு பார்த்தான் அவன்.

‘அது பொய்’ என்று தெரிந்து மற்றவர்கள் சிரித்தார்கள் என்றால், சத்தியம் வாங்கியவனோ, “சீனியர்! நீங்க தப்பிக்கிறதுக்கு என் தலைதான் கிடைச்சுதா?” என்று கலவரத்துடன் அவனிடம் அடிக்குரலில் கேட்டான்.

“ச்சும்மா.. ஊல்லுலாயக்கு..” என்று மறைவாக அவனுக்கு மட்டும் கண்ணடித்துச் செய்கை காண்பித்தான் அருண்.

அவர்களின் செய்கையைக் கண்டும் காணாதது போல புன்னகைத்துக் கொண்டிருந்த வசுந்தரா, “அப்புறம் உன் இஷ்டம்!’’ என்று தோள்களைக் குலுக்கி விட்டுச் சாப்பிட்டு கைக் கழுவ எழுந்து சென்று விட்டார்.

அவர் சென்ற பின், ஜுனியர்களுடன் கேலியும் அரட்டையுமாக சாப்பிட்டு முடித்து எழுந்த அருண், “நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்” என்றதும், “சரி சீனியர்” என்றார்கள் மற்றவர்கள்.

அவன் கிளம்பி வாசல் கடந்து செல்ல முயன்ற நேரம், அங்கே  வராண்டாவில் அமர்ந்து இருந்த வசுந்தராவை அர்த்தம் பொதிந்த விழிகளுடன் நோக்கியபடி நிற்க, அவரும் அதே பார்வையை அவனுக்குத திருப்பிக் கொடுத்து, “போயிட்டு வா!” என்று வழி அனுப்பி வைத்தார்.

என்ன தான் அருண் தன் ஜுனியர்களுடன் நட்புடன் காமெடியாகப் பேசிப் பழகினாலும், அவனுள் இருக்கும் திறமையை வசுந்தரா அறிவார்.

பல நேரம் தன்னால் யோசிக்க முடியாத கோணத்தில் எல்லாம் அவன் யோசித்து விடை கண்டுபிடிக்கும் திறனில் வியந்தும் போயிருக்கிறார்.

அதனாலேயே பலமுறை அவனிடம், “தனியாக ஒரு கேஸை நீயே எடுத்து நடத்து அருண்!” என்று சொல்லி ஊக்குவிக்க முயன்று  இருக்கிறார்.

ஆனால் ‘உலகமே என்னை வியந்து பார்க்கிற மாதிரி, ஒரு சிக்கலான கேஸைத் தான், நான் முதல் முதலில் எடுத்து நடத்துவேன். அதுவரை உங்ககிட்ட இருந்து பாடம் கத்துக்குறேன் மேடம்’ என்று சொல்லி ஜகா வாங்குபவனுக்கு, ‘அப்படி ஒரு கேஸ் எப்போ தான் வருமோ?’ என்று தான் இன்று வரை வசுந்தராவும் காத்துக் கொண்டு இருக்கிறார்.

இப்பொழுது கூட அவனின் திறமையின் மீது நம்பிக்கை கொண்டு தான், ஒரு புதிருக்கான விடையைத் தேடி அவனை அனுப்பி வைத்திருக்கிறார். ஏனென்றால் அவருக்குத் தெரியும், அருணால் அதைக் கண்டுபிடிக்க முடியுமென்று!

மாலை கார்டனில் அமைக்கப்பட்டு இருக்கும் குடிலில் அமர்ந்து, போனை பார்த்துக் கொண்டு சிந்தனை வயப்பட்டு இருக்கும் மகனைத் தேடிச் சென்ற வசுந்தரா,

“என்ன யோசிச்சுகிட்டு இருக்க அர்ஜுன்?” என்றவாறு அவனின் அருகில் சென்று அமர்ந்தார்.

“ஒன்னும் இல்ல மாம்..” என்றபடி தாயின் வருகையில் கையில் இருந்த போனின் திரையை மறைத்தபடி சொன்னவனை உற்றுப் பார்த்தவர், “யாருக்கு போன் பண்ணத் தயங்கிக்கிட்டு இருக்க?” என்று ‘உன்னை நான் அறிவேன்’ என்றவாறு கேள்வி கேட்டார்.

சிறிது நேர அமைதிக்குப் பின், “யாழினிக்கு..” என்று உள்ளே போன குரலில் தயக்கத்துடன் சொன்னான் அர்ஜுன்.

“அதுக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம்? கால் பண்ணிப் பேச வேண்டியது தானே?” என்றவரிடம். “இதுவரை நான் அவளுக்கு போன் பண்ணதே இல்ல மாம், அதான்..” என்று தயக்கத்துக்கான விளக்கத்தைக் கொடுத்தான் அர்ஜுன்.

“ரியலி??” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டவரிடம் தலை குனிந்தவாறு, “ஆமாம்” என்று தலையாட்டியவனின் பதிலில் நிஜமாகவே துடித்துப் போனார் வசுந்தரா.

‘எந்த அளவுக்கு நான் இருந்தும், என் மகன் அனாதையாக யாருடனும் ஒட்டாமல் வாழ்ந்து இருக்கிறான்?!’ என்ற எண்ணம் கொடுத்த வலியில் சுரந்த கண்ணீரை இமைகளை மூடித் திறந்து அடக்கியவர், அர்ஜுனின் கேசம் கோதி, “உனக்கு யாழினிகிட்ட பேசணும்ன்னு தோணுதா?” என்று கேட்க,

“ஆமா மாம்” என்று உடனே பதில் கொடுத்தான் அர்ஜுன்.

“பேசுறதை விட வை டோன்ட் யூ மீட் ஹெர்?” என்று சொல்பவரைத் திடுக்கிட்டுப் பார்த்தான் அர்ஜுன். அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவரும், “என்ன இந்த மாதிரி நேரத்தில் நீ வெளியே போகலாமான்னு யோசிக்குறியா???” என்று கேட்டார்.

மகனின் அமைதியே அது தான் உண்மை என்று அவருக்கு எடுத்துரைக்கவும், “இங்கே பார் அர்ஜுன்! நான் மறுபடியும் சொல்றேன்.. இந்த உலகம் என்ன சொன்னாலும் கேர் பண்ணாதே! குட்ட குட்ட குனிகிறவனை தான் இவுங்க எல்லாரும் ஏறி மிதிப்பாங்க. நீ நிமிர்ந்து நின்னு அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தா போதும்! இருந்த இடம் தெரியாமல் அவர்கள் எல்லாம் காணாமல் போய்டுவாங்க.

சோ உனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அதைச் செய்! அம்மா நான் இருக்கிறேன்!” என்ற தாயின் பேச்சைக் கேட்டவனுள் ஒரு தெளிவு பிறந்தது

அதில் முகம் பிரகாசமாக, எழுந்து நின்றவன், “நான் போய் யாழினியை மீட் பண்ணிட்டு வரேன் மாம்” என்று சொல்லி காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவனுக்கு, அந்த தைரியம் தன்னவளின் வீட்டை நெருங்கும் வரை தான் இருந்தது.

அவளின் வீட்டினுள் செல்ல, அவனை ஏதோ ஒன்று தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தது.

அது அவனின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றமா?? இல்லை இதுவரை இப்படி யார் வீட்டிற்கும் சென்றிராத குணமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.

சில நிமிட காத்திருப்புக்குப் பின், ‘இப்படியே இருந்தால் சரி வராது!’ என்று எண்ணிய அர்ஜுன், போனை எடுத்து யாழினியை அழைக்கலாம் என்று எண்ணி அதைக் கையில் ஏந்திய நேரம், அவளே அவனை உற்சாகப்படுத்தும் விதமாக அழைத்து இருந்தாள்.

யாழினியின் அழைப்பைக் கண்டு, “எப்படி இப்படி?” என்று ஆச்சரியப்பட்டுப் போனான் அர்ஜுன். உடனே காலை அட்டென்ட் செய்து காதில் வைக்கவும், “என்ன மேன் எப்படி இருக்க??? இப்போதைக்கு மீடியால ஹாட் ஆப் தி டாபிக்கே நீ தான் போல???” என்றவளின் கேள்விக்கான அர்த்தம் அவன் அறிந்தது தானே??

மீடியாவை ஆன் செய்தாலே, ‘அர்ஜுன் நிரபராதியா? கொலையாளியா?’ என்ற வாதம் தான் எட்டுத் திக்கிலும் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

அதையெல்லாம் கண்டு கடுப்பாகித்தான், வேறு எதிலாவது மனதை செலுத்த நினைத்த அர்ஜுன், யாழினியுடன் பேச எண்ணியது.

“ம்ம்ம்.. ஐ நோ” என்றவன் “ஷால் வீ மீட்?” என்று கேட்டான் அவளிடம்.

“வாட்?? ஐ கான்ட் பிலீவ் திஸ் மேன்!” என்று ஆர்ப்பரித்துச் சொன்னவள், உடனே, “கிவ் மீ பை மினிட்ஸ்! உடனே கிளம்பி உன் வீட்டுக்கு வந்திடுறேன்” என்று குரலில் சந்தோசம் பொங்க பேசியது அர்ஜுனையும் அதிகம் சந்தோஷமடைய செய்திருந்தது.

“அங்கே போய் யாரை மீட் பண்ணப் போற?” என்றவனின் கேள்வி புரியாதவள், “என்ன சொல்ற? புரியலை??” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

அதில் உதடு வளைத்து லேசாகப் புன்னகைத்தவன், “கிளம்பி வெளில வா! நான் உன் வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன்” என்று சொல்லவும், “உண்மையாவா?? உண்மையாவா அர்ஜுன்??” என்று நம்பாது துள்ளலுடன் கேட்டவளிடம், “ம்ம்ம்.. எஸ்!” என்றான் அவன்.

“அங்கே.. அங்கேயே இரு! இப்போ.. இப்போ வந்திடுறேன்” என்று சொல்லித் தன் ஹான்ட் பேகை எடுக்கத் தன்னறை சென்றவள், அதை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹால் வந்த நேரம்,

“எங்கே போற யாழினி?” என்று அவளைத் தடுக்கும் விதமாக சுபத்ராவின் குரல் கேள்வி கேட்டது.

“டோன்ட் பீ சில்லி மாம்! இவ்வளவு நேரம் நான் யார் கூடப் பேசினேன்னு உங்களுக்கே தெரியும்! அப்படியிருந்தும் என்ன கேள்வி இது?” என்று கேட்டவளை விடுத்து, “நீங்களாவது அவளை அடக்க கூடாதா?” என்று அங்கே மகனுடன் சேர்ந்து சீரியசாக ஆபீஸ் விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்த கணவனிடம் முறையிட்டார் சுபத்ரா.

மனைவியின் பேச்சில் இருந்த அக்கறை உணர்ந்தவரும், மகளின் புறம் திரும்பி, “இப்போ இந்த மீட்டிங் எல்லாம் தேவை தானாம்மா?” என்று கேட்க,

“டாட்! அர்ஜுன் தப்பு செய்யலை, எனக்கு அது தெரியும்!” என்று குரலில் உறுதி கூட்டிப் பதில் சொன்னாள் யாழினி .

மகளின் பிடிவாதம் புரிந்தவர், “ஓகே, நீ சொல்ற மாதிரி இருந்தா எனக்கும் சந்தோசம் தான்! ஆனா..” என்றவரை அடுத்த வார்த்தை பேச விடாது  இடைமறித்த யாழினி,

“ஆனா என்ன டாட்?? உங்களுக்கு அர்ஜுன் நிரபராதின்னு கோர்ட் சொல்லணும், அதானே??” என்று சூடாகக் கேட்டாள்.

இப்படிப் பேசும் மகளிடம் என்னவென்று மேற்கொண்டு பேசுவது  என்று எண்ணியவர், “இங்கே பாரும்மா.. அர்ஜுனுடன் நீ வெளியே போறதைப் பார்த்தா, மீடியா உன்னையும் டார்கெட் பண்ண ஆரம்பிக்கும். இது நமக்குத் தேவையா?” என்றவரின் அன்பு  புரிந்தவளும், குரலை இறக்கி, “அர்ஜுனை எனக்குப் பிடிச்சு இருக்கு டாட். அதனால் இந்த மீடியாக்காக எல்லாம் என்னால என்னுடைய பீலிங்சை ஹர்ட் பண்ணி வாழ முடியாது!” என்று தந்தையின் கைப் பிடித்துக் கெஞ்சும் செல்ல மகளின் ஆசையறிந்த தகப்பனால், அதற்கு மேல் அவளை எவ்வாறு தடுக்க முடியும்??

அதன்பொருட்டு, “பார்த்துப் போயிட்டு வா!” என்று மகளின் கை மீது தன் கையை வைத்து அழுத்திச் சொன்னார் அவர்.

அந்த அழுத்தத்தில் அவரின் அன்பை புரிந்து கொண்டவள், உடனே அவரை அணைத்து, “ஐ லவ் யூ டாட்!” என்று தன் அன்பை அவருக்குப் பறைசாற்றி விட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்வதைக் கண்ட சுபத்ரா, “உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க! என்னைச் சொல்லணும்..” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவர், மகனின் புறம் திரும்பி, “நீயாவது அவளைத் தடுத்து புத்திமதி சொல்லக் கூடாதா ஹர்ஷா?” என்று முறையிட்டார்.

கணினியில் எதையோ ஆராய்ந்து கொண்டு இருந்தவன், தாயின் குரலில் அதைத் தூக்கி ஓரம் வைத்து விட்டு, எழுந்து நின்று, “மாம்! அவ ஒன்னும் சின்னக் குழந்தையில்லை, நான் போகாதேன்னு சொன்னா போகாம இருக்க.. நெருப்பு சுடும்ன்னு சொல்லியும், சூடு வாங்க போறேன்னு போறவளை நாம என்ன பண்ண முடியும்? ப்ளீஸ்! டோன்ட் இர்ரிடேட் மீ மாம்” என்று ஆத்திரத்தில் கத்தும் மகனின் தோற்றத்தில் லேசாக சுபத்ரா அதிர்வதைக் கண்டு, “ஷுட்!” என்று தன் வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து நொந்தவன், கைகளை இறுக்கி தன்னைத்தானே கட்டுப்படுத்த முயற்சித்தான்.

அதன் பலனாக, கண்களைத் திறந்து தாயை நெருங்கியவன், “மாம்! ஐ அம் சாரி.. இந்தச் சம்பந்தத்தால, அர்ஜூனால நம்ம கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் டௌன் ஆகி இருக்கு. அதுல இருந்து எப்படி வெளியே வரதுன்னு தான் நானும், டாடியும் பார்த்துட்டு இருந்தோம். அதுல இவ வேற இப்படி பேசியதைக் கேட்டதில் பயங்கர டென்ஷன் ஆகிட்டேன். அதை அப்படியே உங்ககிட்ட காட்டிட்டேன்” என்று சொல்லும் மகனின் நிலை புரிந்த ராகவனும் மகனுக்கு சப்போர்ட் செய்து மனைவியிடம் பேசினார்.

இருவரின் பேச்சைக் கேட்டு சுபத்ரா மகனுடன் சமாதானமானாலும், மனம் தாளாது, “இதனால தான் ஆரம்பத்துல இருந்தே இந்தச் சம்பந்தம் நம்ம பொண்ணுக்கு வேணாம்ன்னு சொன்னேன். யார் கேட்டா? இப்போ பாருங்க.. என் பொண்ணு வாழ்க்கை மட்டுமில்லாம நம்ம கம்பெனி பேரும் அவனால கெட்டுப் போய்டும் போல!” என்று சொல்லிப் புலம்பியவரை முடிந்த அளவு ஹர்ஷா தேற்றினாலும், தந்தையிடம், “சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு கட்டணும் டாட்!” என்று ஒரு தமையனாகச் சொல்லத் தவறவில்லை அவன்.

அவன் சொன்ன முடிவு, கம்பெனியின் வீழ்ச்சி மட்டுமில்ல என்பதைப் புரிந்து கொண்ட ராகவன், “அவசரப்பட்டு இதுல எதுவும் செய்ய முடியாது ஹர்ஷா. கொஞ்சம் டைம் எடுத்துத்தான் எல்லாத்தையும் சரி கட்டணும். யாழினி ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லை. அர்ஜுன் அவளுக்குத் தகுதியானவன் இல்லைன்னு தெரிஞ்சா, அவளே அவனைத் தள்ளி வச்சுடுவா. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கிறதைத் தவிர நம்மகிட்ட வேறு என்ன வழி இருக்கு சொல்லு??” என்றவரின் பேச்சைக் கேட்டவனுக்கு, அவரளவு பொறுமை இல்லை என்பதைப் போல, “என்னமோ செய்ங்க!” என்று சொல்லி விட்டு, அங்கிருந்த கணினியைத் தூக்கிக் கொண்டு அவனறை சென்றான்.

மனைவியின் அன்பையும், மகனின் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடியாதவர் இல்லையே ராகவன்?!! ஆனால் அதையெல்லாம் தாண்டியது மகளின் காதல் என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பதலாயே கொஞ்சம் நிதானமாக இதைக் கையாள நினைத்தார் அவர்.

********

மதியம் வெளியே சென்ற அருண் சேகரித்துக் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு, “அவன் இதைச் செய்து இருப்பான்னு நினைக்குறியா அருண்?” என்று கேட்ட வசுந்தராவுக்குப் பதிலாக அவன் காட்டிய ஆதாரம், அவரின் புருவத்தை உயர வைத்து இருந்தது.

கையில் இருந்த புகைப்படத்தைக் கண்டபடி, “இவன் நமக்கு வேணும் அருண்!” என்று ஆணையிடாத குறையாகச் சொன்ன வசுந்தராவின் பேச்சைக் கேட்ட அருண், ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பவன் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. பல வருடங்களாக போலீசுக்கே தண்ணி காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு பிரபல ரௌடி!

அவனை இவர்கள் எப்படிப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement