Advertisement

தன்னறையில் இருந்து வெளியேறிக் கொண்டு இருந்தவளைத் தடுத்து நிறுத்த சொல்லி மனம் அடித்துக் கொள்வதை உணர்ந்தவனுக்கு, அதை எப்படிச் செய்வது என்ற தர்க்கம் அவனுள் நடந்து கொண்டு இருந்ததில், யாழினி அறையின் கதவை நெருங்கி இருந்தாள்.

அந்த நெருக்கம் அர்ஜுனைப் படபடக்கச் செய்ததில், “யாழினி!!” என்று சற்றுச் சத்தமாகவே அழைத்திருந்தான்.

‘இவன் தானா தன்னை அழைத்தது?’ என்றபடி திரும்பியவளுக்கு, அர்ஜுனின் முகத்தில் தாண்டவமாடிய பதட்டம் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தாலும், அதை வெளிக்காட்டாது, “வாட்?” என்று சற்று முறுக்கியபடியே கேட்டு நின்றாள்.

‘இப்படிக் கேட்டால் எப்படி?’ என்று நினைத்தவனுக்கோ, அடுத்து என்ன பேசுவது என்றே புரியாத நிலை!

இப்பொழுது பேசவில்லை என்றால் வாழ்க்கையில் இனி இவளுடன் தன்னால் பேசவே முடியாது என்ற எண்ணத்தில், துணிந்து அவளின் கண்ணோடு கண் கலந்து, “எனக்குக் கொஞ்சம் டைம் கொடுக்குறியா?” என்று கேட்டான்.

“எதுக்கு?” என்று விடை அறிந்தும், துள்ளலைக் குறைத்துக் கொண்டு கேட்டாள் யாழினி.

“யாழினி! ப்ளீஸ்! உனக்கே தெரியும் எதுக்குன்னு” என்று சொல்பவனின் கெஞ்சல், கேட்டுக் கொண்டு இருந்தவளை சிறகடிக்காத குறையாக வானில் பறக்க வைத்துக் கொண்டு இருந்தது.

‘இந்த அளவுக்கு அர்ஜுன் தன்னைப் புரிந்து கொண்டதே அதிசயம்!’ என்று நினைத்தவள், அவனின் மீதான விழிகளை விலக்காது அவனை நோக்கி நடந்து வந்தாள்.

அவள் நெருங்கி வர வர, ஏனோ அர்ஜுனுக்குள் ஒருவித பீதி உண்டாகியது. அதில் அவனின் கால்கள் பின்னோக்கி நகர முயல, அவனை விடாது பிடித்து இழுத்தவளோ, நன்றாக அவனோடு உரசி நின்று, “ஐ லவ் யூ சொல்லு!” என்று சொன்னதில், “என்னது??” என்பதாக அதிர்ந்து போனான் அர்ஜுன்.

அவனின் விழிகள் விண்வெளி தாண்டாத குறையாக விரிந்ததில், முத்துப் பற்கள் சிதற சிரித்தாள் யாழினி.

அவளின் செய்கை கண்டு தன்னிடம் விளையாடுகிறாள் என்று புரிந்து கொண்டவன், “ஆர் யூ கிரேசி??” என்றான் மின்னலாக மலர்ந்த புன்னகையுடன்.

தன்னவனின் முக மலர்ச்சியைக் கண்டவள், சட்டென்று அவனின் இதயத்தில் இதம் கண்டபடி, அதில் முகம் சாய்த்து, “ஐ லவ் யூ அர்ஜுன்!!” என்றாள் ஆத்மார்த்தமாக. அதைக் கேட்டு உடல் இறுகியவனின் மனத்தின் இறுக்கத்தை உணர்ந்து கொண்டவள், அவனைத் தன் இரு கைகள் கொண்டு இடையோடு அணைத்து, இளக வைத்திருந்தாள்.

அதில் தன்னவளை அதிசயித்துப் பார்த்தவனின் முகத்தை அவனை விட்டு விலகாது நிமிர்ந்து பார்த்தவள், “இது என்னோட பீலிங்க்ஸ் தான்! சோ யூ டோன்ட் நீட் டூ ரிப்ளை” என்று கண் மலர்ந்து சொன்னாள் யாழினி.

வந்ததில் இருந்து தன் பேச்சாலும், செய்கைகளினாலும், தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் வசமாக்கிக் கொண்டு இருந்தவளை விழி அகலாது பார்த்துக் கொண்டு இருந்தவனையே சளைக்காது யாழினியும்  பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அந்நேரம் கேட்ட கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் விலகி நின்ற நொடி, உள்ளே வந்த பரிமளம், யாழினிக்கு காபி கொடுத்தார்.

அதை வாங்கி அருந்தியவள், “காபி பிரமாதம் ஆன்ட்டி! இப்படி ஒரு காபியை நான் இதுவரைக்கும் குடித்ததே இல்லை” என்று புகழ்ந்ததில் வெட்கப் புன்னகை பூத்துப் போனார் பரிமளம்.

அதைக் கேட்டு அர்ஜுன் நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். அதை கடைக்கண்களால் கண்டுகொண்டவள், கண்களைச் சுருக்கி பரிமளம் அறியாது, ‘சிரிக்காதே!’ என்று அவனுக்குச் சைகை செய்தாள்.

ஸ்நாக்ஸ் ட்ரேயை அங்கே இருந்த டேபிளில் வைத்து விட்டு,
“வேற ஏதாவது வேணும்ன்னாலும் சொல்லும்மா, உடனே கொண்டு வரேன்” என்று வாஞ்சையாகச் சொன்ன பரிமளத்திடம், “இல்ல ஆன்ட்டி, இதுவே போதும்!” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தவள், அர்ஜுன் புறம் திரும்பி, “எதுக்குச் சிரிச்சீங்க?” என்று ஒரு பிஸ்கெட்டை எடுத்து உண்டபடி வேண்டுமென்றே கேட்டாள்.

“உண்மையைச் சொல்லு! இதை விட பெஸ்ட் காபி எல்லாம் நீ குடித்து இருக்க தானே? அப்புறம் எதுக்கு அவுங்களுக்கு இப்படி ஐஸ் வைக்குற?” என்று கேட்கவும், சற்றும் தயங்காது, “எதுக்கா? நாளைக்கு நாம இங்கே வரும் பொழுது எல்லாம் அவுங்க கையால தானே சாப்பிடணும்?? அதுக்குத்தான் இப்பவே அவுங்களை கரெக்ட் பண்ணுறேன்” என்றவளின் வார்த்தைகளில் உண்மை இல்லாவிட்டாலும் அதை ரசித்துக் கேட்டான் அர்ஜுன்.

இப்படி அவன் ஒருவரின் பேச்சைத் தன்னை மறந்து கேட்பது இதுவே முதல் முறை!

அதோடு நில்லாது, “உனக்கும், உங்க அம்மாவுக்கும் கூட டன்டன்னா ஸ்டாக் வச்சு இருக்கேன்” என்று சொன்னவளின் பேச்சு புரியாதவன், “என்ன?” என்று கேட்டான்.

உடனே, “வேற என்ன?? ஐஸ் தான்!” என்றாள் யாழினி.

அதைக் கேட்டு மனம் திறந்து புன்னகைத்தவனுக்கு,  ‘இவளைப் போய் மிஸ் பண்ண இருந்தேனே?!’ என்ற எண்ணம் எழுந்த அதே நேரம், ‘இவளுக்கு நான் தகுதியானவன் தானா?’ என்ற கேள்வியும் எழும்பி அர்ஜுனின் முகத்தைச் சுருங்க வைத்து இருந்தது.

அந்த முக மாற்றத்தில் “என்னாச்சு?” என்றவளிடம் மனதை மறைக்காது, “நான் ஒரு குற்றவாளின்னு தெரிஞ்சும், உன்னால எப்படி என்கிட்ட இவ்ளோ லவ்வபிளா நடந்துக்க முடியுது?” என்று சந்தேகம் கேட்டான் அர்ஜுன்.

ஒரு நிமிடம் அவனையே ஆழ்ந்து பார்த்தவள், “நீ அந்தக் கொலையைப் பண்ணி இருக்க மாட்டேன்னு நான் நம்புறேன் அர்ஜுன்!” என்றாள் திடமாக.

அந்த வார்த்தைகளைக் கேட்டு கண்கள் சுருக்கியவன், “எப்படிச் சொல்ற?” என்று கேட்டான். “யாருக்குத் தெரியும்?” என்று தோள்களைக் குலுக்கி கேசுவலாகச் சொன்னவளின் பதிலை ஒத்துக் கொள்ள முடியாதவன், “வாட் டூ யூ மீன்??” என்றான்.

“ஐ மீன், இந்த ஊரே உன்னைப் பத்தி தப்பா சொல்லும் போது, நீ தான் எனக்கானவன்னு என் மனசு சொல்லுச்சு. உடனே உன்னை லவ் பண்ணிட்டேன்.

இப்பவும் அதே ஊர் உன்னைக் கொலைகாரன்னு சொல்லுது. ஆனா பாரு, இப்பவும் இந்த மனசு, நீ தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு தானே சொல்லுது! அதான் இப்பவும் மற்றவங்க பேச்சை என்னால கேட்க முடியலை. நான் என்ன பண்ணட்டும்?” என்று அப்பாவியாக உதடு பிதுக்கிக் கேட்டவளை அள்ளிக் கொஞ்ச அர்ஜுனின் கைகள் பரபரத்தன. இருந்தும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தான் அவன்.

“ஓகே, ரொம்ப லேட் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன்” என்று தன்னை விழுங்கும் பார்வை பார்த்திருப்பவனின் பார்வை மாற்றத்தைக் கண்டு வெட்கம் தாளாமல் கிளம்ப, அவள் நகர முடியாது அவளின் கையைப் பிடித்து இருந்தான் அர்ஜுன்.

அவனின் பிடியில் என்ன என்று திரும்பிப் பார்த்து யாழினி விழிகளால் கேட்க, அதற்குப் பதில் சொல்லாதவனோ, பிடித்த கையை விடாது, அவளைக் கீழே தாயின் முன்பு அழைத்துச் சென்று நிறுத்தி, “மாம்! எனக்கு இவ கூட வாழணும் போல இருக்கு மாம்!” என்றதில் அங்கிருந்த இரு பெண்களுமே அதிர்ந்து போயினர்.

யாழினிக்குத் தன் மனம் கவர்ந்தவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட அன்பில் உள்ளம் துள்ளியது என்றால், வசுந்தராவுக்கோ, விடை தெரியா ஆசையுடன் ஏங்கி நிற்கும் மகனைக் காணும் போது நெஞ்சம் அடைத்தது.

பிறந்ததில் இருந்து இதுவரை எதையும் தன்னிடம் விரும்பிக் கேட்காத தன் மகன், இன்று, அவன் வாழ்க்கை அவனுக்கு வேண்டும் என்று ஆசை பொங்க வரம் கேட்டு நிற்கிறான்.

ஆனால் அதைக் கொடுக்கும் நிலையில் தான் இல்லாதை நினைத்து வெதும்புவதா?? இல்லை இப்படித் தங்கள் இருவரை நிறுத்தி விளையாடும் அந்த விதியை நினைத்து நோவதா?? என்று புரியாத நிலையில் தள்ளாடிய வசுந்தரா கை நீட்டி, “இங்கே வா!” என்று மகனைத் தன்னிடம் அழைத்தார்.

தன் அருகில் வந்து நின்ற மகனின் தலை கோதியவருக்கு இதயம் கனமானது போன்ற உணர்வு!

இருவரின் அமைதியான ஸ்பரிசங்களே அவர்களுக்கான ஆறுதலாக அந்நேரம் இருந்தது. சில நிமிட வருடலுக்குப் பின் அர்ஜுன், “நவ் ஐ அம் ஓகே மா” என்று நிலைமை புரிந்து சொல்ல, “ம்ம்ம்.. குட்!” என்று அவனிடம் சொன்னவர், “இருந்து சாப்பிட்டுப் போமா” என்று யாழினியிடம் சொன்னார்.

அதுவரை தாய் மகனின் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து கொண்டு இருந்தவள், தன்னிலை மீண்டு, “இல்ல ஆன்ட்டி, டைம் ஆச்சு.. இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்” எனவும், “பார்த்துப் போயிட்டு வாம்மா” என்றவர், “அவளை வழியனுப்பி வைத்து விட்டு வா!” என்று மகனிடம் சைகை காண்பித்தார்.

தாயின் சைகை புரிந்தவனும், “வா, வாசல் வரை வரேன்” என்று சொல்லித் தன்னவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

மகன் சென்ற பாதையையே பார்த்திருந்த வசுந்தராவினுள் தீயாக ஒரு கனல் எரிய ஆரம்பித்து இருந்தது. அது நாளை கோர்ட்டில் யாரை காப்பாற்றி, யாரை எரிக்கப் போகிறது? என்பதை அவர் மட்டுமே அறிவார்!

காரில் யாழினி ஏறி அமர்ந்ததும், “பை!” என்றவனிடம்,  “உனக்கு இப்படி எல்லாம் கூடப் பேசத் தெரியுமா அர்ஜுன்?” என்று அதுவரை மனதை  அழுத்திக் கொண்டு இருந்த வியப்பை வார்த்தைகளில் சிறு தவிப்புடன் கேட்டாள் யாழினி.

அதற்கு ‘எப்படி?’ என்று அவளிடம் சொல்லாதவன், கீழே குனிந்து, காரின் பக்கவாட்டின் கதவு வழியாகத் தன்னவளை நெருங்கி, அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “பார்த்துப் போ!” என்றான்.

வார்த்தைகளால் வடித்துச் சொல்லியிருந்தால் கூட இந்தளவுக்கு ஒருவனால் தன் மனதை சொல்லியிருக்க முடியுமா தெரியாது?! ஆனால் தன் செயலில் அர்ஜுன் காட்டிய நேசத்தில் யாழினிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

இப்படி இவன் இருக்க மாட்டானா? என்று எத்தனை நாட்கள் அவள் ஏங்கித் தவித்து இருக்கிறாள் என்று அவள் மட்டுமே அறிவாள்!

அப்படியிருக்கும் போது, தன்னவன் தனக்கு ஏற்றவனாக மாறி இருப்பதை உணர முடிந்தும், அதில் உற்சாகம் கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டு இருக்கிறதே??

மனதின் வலியை தன்னவனிடம் காட்டாது இருக்க நினைத்தவள், முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை முயன்று உள் இழுத்துக் கொண்டு, அர்ஜுனின் புறம் திரும்பாது, “பை!” என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

‘நீ சொல்லாவிட்டாலும் உன் நிலையை நான் அறிவேன்’ என்று தன்னவள் சென்ற பாதையைப் பார்த்து நின்று இருந்தவனுக்கு, “எப்படியாவது எங்கள் வாழ்க்கை இணைந்து விடாதா??” என்ற ஏக்கம் அதிகமாகவே இருந்தது.

அந்த ஏக்கம் கடவுளுக்குப் புரிந்ததோ இல்லையோ, வசுந்தராவுக்குப் புரிந்து விட்டதே! அது போதாதா?? என்பது போல தான் இருந்தது, அடுத்து அவர் காட்டிய அவதாரங்கள் முழுவதும்!

மறுநாள் ஹியரிங்க்கிற்கு கோர்ட்டுக்குக் கிளம்பிய வசுந்தரா மகனிடம் அதிகம் உரையாடவில்லை. அது அர்ஜுனுக்குத்தான் கொஞ்சம் பிபியை ஏற்றிக் கொண்டு இருந்தது. இருந்தும் அதை வாய் விட்டுத் தாயிடம் கேட்க முடியாதவன் அமைதியாகவே வந்தான்.

வசுந்தராவின் கார் கோர்ட் வளாகத்திற்குள் நுழையவுமே, அதற்காகவே காத்திருந்த கூட்டம் அவரை நோக்கிப் பாய்ந்தது.

காரை விட்டு கீழே இறங்கும் முன் சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கண்ட வசுந்தரா, தன்னருகில் இருந்த மகனின் கையில் தன் கையை வைத்து, “அர்ஜுன்!” என்றார்.

அந்த அழைப்பில் சுற்றி இருந்த கூட்டத்தைக் கண்டு லேசாக தடுமாறிக் கொண்டு இருந்தவன், தாயை நிமிர்ந்து பார்த்தான்.

அவனின் கண்ணை நேருக்கு நேராகச் சந்தித்து, “இந்த உலகம் என்ன சொன்னாலும், உன் அம்மா, நான் சொல்லாத வரை நீ குற்றவாளி இல்லை, என்ன புரியுதா??” என்று ஆணையிட்டுச் சொல்ல, அதில் இமயமாகப் பலம் பெற்றவன், புரியுது என்பதாகத் தலையாட்டவும்,

“குட்!” என்றவரின் வார்த்தைகளுக்கும், செயலுக்கும் பின் இருந்த, “நான் இருக்கும் வரை நீ யாருக்கும் எதற்கும் பயப்படக் கூடாது!!” என்பதை வேதவாக்காக ஏற்றவன், அதுவரை இருந்த தயக்கங்கள் கலைந்து, சற்று நிமிர்வாகவே காரை விட்டு மறுபுறம் இறங்கினான்.

அவன் இறங்கவுமே கழுகு பார்வைகளும், அவர்களின் கேமராக்களும் அர்ஜுனைச் சுற்றிச் சுழன்றது.

அதைக் கண்டு கிஞ்சித்தும் மறைத்துக் கொள்ளாது, நிதானமாக தாயுடன் சேர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தவனிடமிருந்து ஏதாவது நீயூஸ் வாங்கியே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டியிருந்தவர்கள், விடாது நாலாபுறமும் சூழ்ந்து, கேள்விக் கணைகளை அவனை நோக்கி அசராது வீசியபடி இருந்தனர்.

அதை நிறுத்த நினைத்து, அர்ஜுன் தன் நடையை நிறுத்தி நிமிர்வாக, “இப்போ நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்குறீங்க? நான் தான் இந்தக் கொலை செய்தேன்னா??” என்று தன்னைச் சுற்றி இருந்த கூட்டத்தைத் திருப்பித் தாக்கியதில், மொத்த பேரும் கொஞ்சம் அசந்து தான் போயினர் அவனின் பதிலில்.

“அப்போ அந்தக் கொலையை செய்யலைன்னு சொல்றிங்களா?”

“நான் தான் செய்தேன்னா இந்நேரம் நான் இங்கே நின்று இருக்கவே முடியாதே??” சொன்னவனின் பதிலே ‘என்னிடம் உங்களின் போட்டு வாங்கும் திட்டம் பலிக்காது!’ என்பது போன்று இருந்ததில்,

அடுத்த கேள்வி அவனிடம் கேட்கவே அனைவரும் சற்றுச் சிந்திக்க வேண்டி இருந்தது.

அவர்களின் அந்த நிலையைக் கண்டு வசுந்தரா மகனை ஒரு மெச்சும் பார்வை பார்த்தார். அதை இன்முகமாக ஏற்றவன், “போலாம்” என்று அவரிடம் சொல்லி கோர்ட்டுக்குள் சென்றான்.

அர்ஜுனின் வழக்கு விசாரணை ஆரம்பிக்கவுமே, அவனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்த அரசாங்க வக்கீல் நீலகண்டன், இந்தக் கொலையை இவர் தான் செய்தார் என்றும், அதற்கான தண்டனையை அவனுக்கு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

நீதிபதி வசுந்தராவை, “இதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்கவும் எழுந்தவர், “என் கட்சிக்காரருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில்,  மிக  முக்கியமாகச் சொல்லப்படுவது, அவரின் கைக் காயமும், அவரின் ரத்தம் இறந்து போன பெண்ணின் உடையில் இருப்பது தான். அதைப் பற்றி நான் விளக்குவதற்கு முன், ஒரு சில விஷயங்கள் பற்றிய சில தெளிவை நான் இங்கு கொடுக்க விரும்புகிறேன்” என்று சொல்லும் பொழுதே அவரின் வாதத்தை அங்கிருப்போர் அனைவரும் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்து இருந்தனர்.

“அதில் முதலாவது, துளசி பலாத்காரம் செய்யப்பட்டு இறக்கவில்லை. அதாவது அவர் எந்தவித பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படவில்லை. அதற்கான ஆதாரம் அவரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!” என்று ஒரு காகிதத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார் வசுந்தரா.

அதை வாங்கி நீதிபதி படித்துக் கொண்டு இருக்கும் பொழுதே எழுந்து நின்ற நீலகண்டன், “அதற்கும் இந்த கேஸுக்கும் என்ன சம்பந்தம்ன்னு எனக்குப் புரியலை” என்று கூறினார்.

“இருக்குறதுனால தானே சார் அதைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கேன்” என்று கொட்டு வைத்து, அவரை எழுந்த வேகத்திலேயே உட்கார வைத்த வசுந்தராவின் செயலில் சிலரிடம் “பலே!!” வாங்கி இருந்தார் அவர்.

“இங்கே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், என் கட்சிக்காரர் அந்தப் பெண்ணை பாலியல் கொடுமை எதுவும் செய்யவில்லை. அதாவது அந்தப் பெண்ணை அர்ஜுன் அடித்துத் துன்புறுத்தவே இல்லை என்பது என் வாதம்.

அதாவது ஒருவேளை அர்ஜுன் அந்தப் பெண்ணை அடித்துக் கொன்று இருந்தால், அந்தப் பெண்ணுடைய ரத்தமல்லவா நமக்குக் கிடைத்து இருக்கணும்?

தட்ஸ் மை பாய்ன்ட் யுவர் ஆனர்! அந்தப் பெண் உடம்பில் அர்ஜுனுடைய ரத்தம் தான் இருக்கே தவிர, இறந்த பெண்ணுடைய எந்த ரத்த துளிகளும் என் கட்சிக்காரரிடமோ, இல்லை இறந்த பெண்ணிடமோ இல்லை.

சோ இது ஒரு தாக்குதலால், அதாவது அடித்துத் துன்புறுத்திச் செய்யப்பட்ட ஒரு கொலை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”

இப்போது உங்களுக்குப் புரிந்ததா? என்பது போல வசுந்தரா  நீலகண்டனைப் பார்க்கவும், எங்கே முகத்தைக் கொண்டு போய் வைப்பது போல இருந்தது அவருக்கு.

அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட வசுந்தரா, அர்ஜுனிடம் சென்று, “அன்னைக்கு ராத்திரி என்ன நடந்தது?” என்று கேட்டார்.

“எனக்கு எதுவுமே நியாபகமில்லை” என்று அப்போதும் சொன்னதையே திரும்பச்  சொன்னான் அர்ஜுன்.

அதைக் கேட்டு எள்ளலாக, “இந்த மாதிரி பல பொய்களை இந்த நீதிமன்றம் பார்த்திருக்கு மிஸ்டர்.அர்ஜுன். அதனால் இன்னும் கொஞ்சம் பெட்டரா வேற ஏதாவது பொய் சொல்ல ட்ரை பண்ணி இருக்கலாம்” என்று உரக்கச் சொன்ன நீலகண்டன், “நீங்களாவது சொல்லிக் கொடுத்து இருக்கலாம்” என்று வசுந்தராவுக்கு மட்டும் கேட்கும்படி நக்கலடித்தார்.

அவரின் பேச்சைக் கேட்டு, நின்று கொண்டு இருந்த கூண்டின் பிடிகளைக் கோபத்தில் கைகளால் இறுக்கிக் கொண்டு இருந்தான் அர்ஜுன்.

ஆனால் அதற்கு நேர்மாறாக மிக கூலாக நீலகண்டனைப் பார்த்த வசுந்தரா, “நீங்க சொல்வது சரி தான் நீலகண்டன்! ஆனால் ஒரு சின்ன கரக்ஷன்.. இந்தப் பொய்யைச் சொன்னது அர்ஜுன் இல்லை அரசு மருத்துவர்” என்று சொன்னதும், ஒன்றும் விளங்காது அவரையே மலங்கப் பார்த்து வைத்தார் நீலகண்டன்.

அதைக் கண்டபடி அவருக்கு அருகில் சென்ற வசுந்தரா, “உங்களுக்குத்தான் இப்போ நான் சொல்லிக் கொடுக்கணும் போலயே!” என்று அவர் அடித்த பந்தை அவருக்கே பலமாகத் திருப்பி அடித்ததில் முகம் கன்றிப் போனார் அவர்.

“யுவர் ஆனர்! அன்று நடந்த எந்த ஒரு நிகழ்வும் அர்ஜுனுக்கு நியாபகமே இல்லை என்று அவரை ஹிப்னாடிசம் செய்த அரசு மருத்துவர் கொடுத்த ரிப்போர்ட் தான் இது!” என்று அதையும் நீதிபதியிடம் கொடுத்தவர்,

“சோ இந்த ஆதாரத்தின்படி, என்ன நடந்ததுன்னே நினைவு இல்லாத ஒருவரை நாம் இப்படிக் குற்றம் சுமத்துவது சரியா?” என்று கேட்டார் வசுந்தரா.

“அதற்காக அவர் குற்றவாளி இல்லைன்னு ஆகிடுமா?” என்று வசுந்தராவை எதிர்த்துக் கேள்வி கேட்ட நீலகண்டன்,

நீதிபதியைப் பார்த்து, “இவர் தான் அந்தக் கொலையைச் செய்தார் என்பதற்கு என்னிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கு யுவர் ஆனர்!” என்று உரக்கச் சொல்லி வசுந்தராவை அசால்ட்டு பார்வை பார்த்தார்.

தன்னிடமிருந்த ஆதாரங்களை எல்லாம் நீதிபதியிடம் கொடுத்தவர், ஒரு பென்ட்ரைவை தன்னிடமிருந்த லேப்டாப்பில் பொருத்தி, ஒரு வீடியோவை அங்கிருந்த திரையில் ஓட விட்டார். அதில் மிகத் தெளிவாக, அர்ஜுனின் காரில் இருந்து துளசியின் உடல் வெளியே தள்ளப்படுவது காட்சியாக ஓடிக் கொண்டு இருந்தது.

‘இப்படி ஒரு ஆதாரம் மகனுக்கு எதிராக இருக்கும்’ என்று எதிர்பார்க்காத பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த அருணாச்சலம் அரண்டு போனார்.

“போச்சு! போச்சு! என் குடும்ப மானமே போச்சு!” என்று அவர் முனகுவதைக் கேட்ட சித்ரா, “அர்ஜுன் இப்படிச் செய்து இருக்க மாட்டான்ங்க” என்று அவரைச் சமாதானப்படுத்த சொல்வதைக் கேட்டு, இன்னும் எரிச்சல் கொண்டவர், வார்த்தைகளால் அவரை சாடிய நேரம், அங்கே வசுந்தரா தன் வாதத்தை ஆரம்பித்து இருந்தார்.

வீடியோவைக் கண்ட பின்பும், கொஞ்சமும் சலனப்படாத வசுந்தராவைக் கண்ட நீலகண்டனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. அதன்பொருட்டு, “இதற்கு என்ன மேடம் சொல்றீங்க? இப்பவும் உங்க கட்சிக்காரர் கொலை செய்யலைன்னு தான் சொல்ல போறீங்களா?” என்றவரின் பேச்சைக் கேட்டவரோ, “அப் கோர்ஸ்!” என்றதில் ஆடிப் போய் விட்டார்.

“என்ன??” என்று நீலகண்டன் வாயை பிளக்காத குறையாக கேட்பதை உதறி தள்ளி விட்டு, நீதிபதியை ஏறிட்ட வசுந்தரா, “யுவர் ஆனர்! இந்த ஆதாரத்தில் கட்டாயம் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டும். நம்பர் ஒன், அந்த கார் அர்ஜுனுடையது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, அன்று அந்த காரை ஓட்டக் கூடிய திறன் அர்ஜுனுக்கு இல்லை என்பதும் உண்மை!

அதாவது, சம்பவம் நடந்த அன்று, அர்ஜுனுக்கு லேசாக நினைவு வந்ததே மறுநாள் அதிகாலை தான்!

அப்பொழுதும் முழுத் தெளிவுடன் இல்லாத காரணத்தினால், கால் டாக்சியின் உதவியுடன் தான் அன்று வீடு வந்து சேர்ந்து இருக்கிறார் அவர்”

அதற்கான ஆதாரங்கள் என்று அந்த கால்டாக்சியில் அர்ஜுன் வீட்டுக்கு வந்த வீடியோ மற்றும் அவனை அழைத்துச் சென்று இருந்த டிரைவரையும் சாட்சி சொல்ல அழைத்தார் வசுந்தரா.

சாட்சி கூண்டில் ஏறியவர், அன்று அர்ஜுன் அவனின் கெஸ்ட் ஹௌசில் இருந்து வெளிவரும் பொழுதே பயங்கர தள்ளாட்டத்துடன் வந்ததாகவும், அவனைத் தண்ணீர் கொடுத்து லேசான நினைவுக்கு கொண்டு வந்ததே தான் தான் என்று சொல்லி முடிக்கும் முன், “இது ஜோடிக்கப்பட்ட சாட்சி யுவர் ஆனர்!” என்று ஆர்ப்பரித்தார் நீலகண்டன்.

“முடிந்தால் அதை நிருபிக்கச் சொல்லுங்கள் யுவர் ஆனர்!” என்று சொல்லி விட்டுத் தன்னிடத்தில் சென்று ஹாயாக அமர்ந்து விட்டார் வசுந்தரா.

‘சொன்னதைச் செய்யுங்கள்!’ என்பதைப்  போன்று  நீதிபதி நீலகண்டனைப் பார்க்கவும், “என்னது நிருபிக்கணுமா?” என்று தலை சுற்றிப் போனார்.

நீதிபதி அவரையே பார்த்து இருக்கவும் வேறுவழியின்றி, “ஒருவேளை பின்னால் தான் மாட்டிக் கொண்டாலும், தப்பிப்பதற்காக அர்ஜுன் இந்த கால்டாக்ஸி ட்ரிக்கை செய்து இருக்கலாம் தானே யுவர் ஆனர்? ஏன்னா நான் கொடுத்த வீடியோவில், தெளிவா அர்ஜுன் காரில் இருந்து துளசியின் உடலை அவர் வெளியே தள்ளுவதை நாம தான் பார்த்தோம் தானே?” என்று சொல்வதைக் கேட்டு எழுந்த வசுந்தரா,

“யுவர் ஆனர்! அர்ஜுன் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்பதை என்னால் நிருபிக்க முடியும்!” என்று சொல்வதைக் கேட்ட நீதிபதி ‘ப்ரொஸீட்” என்று சொன்னார்.

“அரசாங்க வக்கீல் சொல்வது போல் அர்ஜுன் இந்தக் கொலையைச் செய்து இருந்தால்.. போலீஸ் அந்த கெஸ்ட் ஹௌசை சர்ச் பண்ணுவதற்கு முன், அங்கே இருக்கும் ஆதாரங்களை அழிக்கவோ, அப்படி ஒரு பெண் அங்கே வரவில்லை என்று மறுக்கவோ இல்லை. அங்கே அப்படி ஒரு சம்பவமே நடக்கவே இல்லை என்று பொய் சொல்ல அவருக்கு எத்தனை நிமிடங்கள் ஆகி இருக்கும் யுவர் ஆனர்?

அவர்கிட்ட இருக்கிற பணத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும் கண்டிப்பாக அது முடிந்து இருக்கும் என்பதை நான் மட்டும் சொல்லலை. இங்கே இதுவரை நடந்த நடந்து கொண்டு இருக்கிற பல்லாயிர கேஸ்கள் சொல்லி இருக்கிறது. அதை நாமும் கண்டு இருக்கிறோம், ஒரு குற்றவாளி எப்படித் தன் குற்றங்களை மறைக்கப் போராடி இருக்கிறான் என்று!

சோ ஆதாரங்களே போதுமே, இன்று அர்ஜுன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்று சொல்வதற்கு!” என்ற வசுந்தராவின் ஆணித்தரமான வாதத்தில் அங்கு இருந்த அனைவருமே அவரையே தான் பார்த்தனர், இப்படியும் ஒருத்தரால் வாதாட முடியுமா என்று!!

“நீங்கள் சொல்வது எல்லாம் ஓகே வசுந்தரா. ஆனா அர்ஜுன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்ன்னும் இங்கே நிருபிக்கப்பட்டு இருக்கே?” என்று கேட்டார் நீதிபதி.

“அதைத்தான் நானும் சொல்கிறேன் யுவர் ஆனர்! அர்ஜுன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே தவிர கொலை செய்யவில்லை என்பதே என் வாதம்”

“அதை எப்படி இவ்ளோ உறுதியா உங்களால் சொல்ல முடியும் மேடம்?” என்ற நீலகண்டனின் கேள்விக்கு,

“என்னால் இப்பொழுது உறுதியாக சொல்ல முடிந்தது, அதை மட்டும் தான் யுவர் ஆனர்! எனக்குக் கொஞ்சம் டைம் கொடுத்தால், கண்டிப்பாக இந்த வழக்கின் உண்மையான குற்றவாளியை இங்கே கொண்டு வந்து நிறுத்த முடியும்” என்றவர் மேலும், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதே இந்த கோர்ட்டின் நியதி! அது அர்ஜுன் விசயத்தில் தப்பாகி விடக் கூடாது என்பதே என் எண்ணம். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” என்று சொல்லித் தன்னிருக்கையில் வந்து அமர்ந்தார் வசுந்தரா.

இருதரப்பு வாதங்களையும், அதுவும் குறிப்பாக, வசுந்தராவின் கடைசி வார்த்தைகளில் சில நிமிடங்கள் யோசித்த நீதிபதி, “சந்தர்ப்பமும், சூழ்நிலையும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக இருந்தாலும், அவர் தான் இந்தக் குற்றத்தைச் செய்தார் என்பதற்கு வலுவான தெளிவான ஆதாரங்கள் இல்லாததால், மிஸ்டர்.அர்ஜுனிற்கு அவருடைய குற்றத்தைப் போக்கும் விதமாக, ஒரு வாய்ப்பை இந்த நீதிமன்றம் வழங்க நினைப்பதால், இந்த வழக்கை நான் அடுத்த வாரம் ஒத்தி வைக்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட வசுந்தராவுக்கு அப்பொழுது தான் ஒரு நிம்மதி பெருமூச்சே விட முடிந்தது. அவரது ஜூனியர்கள் ஆர்ப்பரிப்பை அடக்கி விட்டு அரசாங்க வக்கீலை அவர் காண, அவரோ, தன் கருப்பு அங்கியை உதறி விட்டு, ‘அடுத்த முறை எப்படி ஜெயிக்குறேன்னு நானும் பார்க்கிறேன்!’ என்பது போல கனன்ற முகத்துடன் அவ்விடம் விட்டு வெளியேறினார்.

தீர்ப்பு அர்ஜுனுக்குச் சாதகமாக வரவும், வசுந்தராவைச் சந்தித்த அருணாச்சலம், மகனைத் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்ல, “அது அவன் விருப்பம்!” என்று கட்டுதரித்தார் போல பதில் சொல்லி விட்டு அவரைக் கடந்து சென்று இருந்தார்.

வசுந்தரா வந்து காரில் ஏறவும், “மேடம்! அர்ஜுன் சார்..” என்று அருணாச்சலத்துடனான அவரின் உரையாடல் தெரிந்து இருந்ததனால், சற்றுத் தயக்கத்துடனே அவ்வாறு கேட்டான் அருண்.

ஆனால் அவனைப் போன்று சிறிதும் தயங்காதவராக, “அவன் வருவான் அருண்” என்று ஆணித்தரமாக வசுந்தரா சொல்லி முடிக்கும் முன், பின்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தமர்ந்த அர்ஜுன், “போலாம்..” என்று சொன்னான்.

இருவரின் வார்த்தைகளையும், செய்கையையும் கண்ட அருணுக்கு அந்நேரம் ஒன்றே ஒன்று தான் தோன்றியது, ‘இந்த அளவுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிந்து வைத்து இருக்கிற இவர்கள் எப்படி இவ்வளவு காலம் பிரிந்து இருந்தார்கள்??’ என்று தான்!!

வீடு வந்து சேரவும் மகனிடம், “நீ போய் ரெப்ரெஷ் ஆகி கொஞ்சம் ரெஸ்ட் எடு! ஈவ்னிங் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்” என்று சொன்னார்.

சிறிது நேரத்திலேயே தனியாக வசுந்தரா வெளியே செல்வதைக் கண்ட போதும், அர்ஜுன் அவரைத் தடுத்து என்னெவென்று விசாரிக்க முற்படவில்லை.

ஏனென்றால் அவனுக்கு நன்கு தெரியும்.. வசுந்தராவின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஓராயிரம் வலுவான காரணங்கள் இருக்குமென்று..!!

Advertisement