வசுந்தரா தேவி 6

1956

பொழுது விடிந்ததில் இருந்தே சிந்தனையுடன் நடமாடிக் கொண்டு இருக்கும் கணவனைக் கண்டும், “என்ன ஏது?” என்று அவரிடம் கேட்காது, அமைதியாகத் தன் வேலைகளை அதாவது அவருக்கான பணிவிடைகளைச் செய்து கொண்டு இருந்தார் சித்ரா.

ஆபீஸ் கிளம்பித் தயாராகி கீழ்த்தளம் வந்த கணவனுக்கு உணவு பரிமாறும் போது, அவர்களைக் கடந்து வெளியே செல்லும் மகனைக் கண்டு, “விஷ்வா!” என்று அழைத்து நிறுத்தினார் அருணாச்சலம்.

என்னவென்று கேட்காது நின்று அவரைப் பார்த்த மகனைக் கண்டு பற்றிக் கொண்டு வந்தது அவருக்கு, ‘தனக்குப் பிறந்ததுங்க மட்டும் ஏன் தான் இப்படி இருக்குங்களோ??’ என்று..

‘ஒன்னு எதிர்த்துப் பேசியே தன்னைக் கொல்லுது என்றால், இன்னொன்னு கொஞ்சமும் தன்னை மதிக்காது திரியுது’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவர், “எங்கே போற?” என்று கேட்டார்.

“ஏன், அது தெரிந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்றவனின் பதிலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த மேசையை விட்டு வீராவேசமாக மகனை நோக்கி எழுந்து சென்றார் அருணாச்சலம்.

கணவனின் கோபம் அறிந்து, அவருக்கு முன் மகனை நெருங்கிய சித்ரா, “விஷ்வா! அப்பாகிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று அடிக்குரலில் கண்டித்துக் கேட்க,

தாயின் முகத் தவிப்பைக் கண்டு, ஒரு நிமிடம் கண் மூடித் தன்னைத்தானே கட்டுக்குள் கொண்டு வந்த விஷ்வா, பொறுமையுடன், “இப்போ என்ன.. நான் எங்கே போறேன்னு தெரியணும், அவ்வளோ தானே? ப்ரெண்ட்ஸ் கூட வெளியே போறேன், போதுமா?” என்று தந்தைக்கான பதிலை தாயிடம் கொடுத்தான்.

“இங்கே உங்க அண்ணன் விஷயத்துனால கம்பெனியே தலைகீழா அடி வாங்கிகிட்டு இருக்கு. அதைப் பத்திக் கவலைப்படாம,  இன்னமும் இப்படி நீ ஊர் சுத்திட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு..? கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு?” என்றவர்,

மேலும், “ஒழுங்கா என் கூட ஆபீஸ் கிளம்பி வா!” என்று கட்டளையிடவும், “நான்.. நான் ஆபீஸ்… அதுவும் உங்க கூட..” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் விஷ்வா.

அதைப் பார்த்து டென்ஷனான அருணாச்சலம், “கொஞ்சமாவது  என் மகன் மாதிரி நடந்துக்கோ விஷ்வா!” என்று கடிய, அதைக் கேட்டு எரிமலையாக வெடிக்க ஆரம்பித்து விட்டான் அவன்.

“என்னது மகனாவா..? ஒஹ்ஹ்ஹ! இப்போ தான் உங்களுக்கு நான் கண்ணுக்குத் தெரியுறேனா..? ஏன் இவ்ளோ நாளா அவன் மட்டும் தானே உங்க மகனா இந்த வீட்டுலயும், சரி ஆபீஸ்லயும் சரி இருந்தான்.

இப்போ என்ன, அவன் ஜெயிலுக்குப் போனதும் நான் தேவைப்படுறேனா உங்களுக்கு?

சோ, எப்பவுமே நானும், என் அம்மாவும் உங்களுக்கு சப்ஸ்டிட்யூட் தான்ல?” என்று ஆதங்கமாய் கேட்டவனின் குரலில், அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், அவனைக் கவனிக்க ஆரம்பித்து இருந்தனர்.

நிலைமையின் தீவிரம் புரிந்து, அவர்களை எல்லாம் உள்ளே போகச் சொன்ன சித்ரா, மகனின் சட்டையைப் பிடித்து, “பொறுமையா இரு விஷ்வா!” என்று தத்தளித்த விழிகளுடன் கெஞ்சிக் கேட்டார்.

ஒருவித கையாலாகத்தனத்துடன் தாயைக் கண்டு வருந்தியவன், “ஏன்மா, ஏன் இப்படி இருக்குறீங்க?” என்று குரல் கமற கேட்டான்.

என்ன பதிலைச் சொல்வார் அவர்?? “உனக்காக என்றா? இல்லை எனக்காக என்றா?”

தாயின் தடுமாற்றத்தை அவரின் விழி அலைபுறுதலில் கண்டுகொண்டவனுக்கு, தாயைப் போலத் தந்தையின் அடக்குமுறைக்கு அடங்கிப் போக  முடியவில்லையே?? அவனும் தான் என்ன செய்வான்??

ஆனாலும் தாய் படும் பாட்டில், தன்னைத்தானே வெறுத்தவனாக, அருகில் இருந்த சுவற்றில் ஓங்கிக் குத்தினான். மகனின் வலி தாங்காது, அவனைப் பிடித்து இழுத்து நிறுத்திய சித்ரா, அவனின் சிவந்து போன கையை  வருடி, “ஏன் இப்படிப் பண்ணுற விஷ்வா?” என்று துடித்துக் கேட்டார்.

அதுவரை தாய்-மகன் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த அருணாச்சலத்திற்கு, அதற்கு மேல் அதைப் பார்க்க பொறுமை இல்லை போல! “இப்போ என்னதான்டா சொல்ற? என் கூட ஆபீஸ் வரியா இல்லையா?” என்று உரக்க கேட்க, எக்கின் உறுதியுடன், “முடியாது!!” என்றான் அவரின் மகனும்.

“ஆபீஸ் வராம வேற என்ன பண்ணப் போற?” என்றவரின் கேலியை உணர்ந்திருந்தவனும், “ஏன் அது உங்களுக்கே தெரியாதா?” என்ற ரீதியில் தந்தையை வெட்டும் பார்வை பார்த்தான்.

பின்னே! அதுநாள் வரை ‘அர்ஜுன்! அர்ஜுன்!’ என்றும், ‘அவன் தான் என் வாரிசு’ என்றும் உலகமெங்கும் பெருமை பேசித் திரிந்து விட்டு, இன்று வந்து, ‘அவன் இல்லை, அதனால் நீ என் மகனாக இரு!’ என்பவரை வெறுக்காமல் விஷ்வாவால் வேறு என்ன செய்ய முடியும்?

அவரை மட்டுமா? தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய அர்ஜுனையும் அதே அளவுக்கு விஷ்வா வெறுத்தான்.

ஆம்! தந்தை தான் இப்படி என்றால், அவரைப் போலவே தனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று கொஞ்சமும் கண்டுகொள்ளாது இருப்பவனிடம்,  சிறுவயதில் எத்தனை முறை தானாகச் சென்று விஷ்வா உறவாட முயன்று இருப்பான் தெரியுமா? ஆனால் அவனைக் கிட்டவே நெருங்க விடாது தள்ளி வைத்து இருந்தான் அர்ஜுன்.

அன்று தொடங்கிய அந்த ஒதுக்கம், ஏன் என்று புரியாது விலகிய விஷ்வாவுக்கு, பின்னால் அதன் காரணம் அறியும் வயது வந்தவுடன், “நீ என்னடா என்னை ஒதுக்குவது? நானே உன்னையும், உன் தந்தையும் ஒதுக்குகிறேன் பார்!” என்று எண்ணியது மட்டுமில்லாது அதையே இருவருக்கும் செய்யவும் செய்தான்.

காலங்கள் ஓட ஓட, அர்ஜுன் மீதான அவனின் ஒதுக்கம் வெறுப்பாக மாறி, ஒரு கட்டத்தில், அவன் தன் வாழ்க்கையில் இல்லாது இருந்தால் தன் வாழ்க்கை இப்படி ஆகி இருக்காதோ? என்ற எண்ணம் கொடுத்த குரோதம், அவனை அழைத்துச் சென்று நிறுத்திய பாதையில் நின்று கொண்டு இருக்கிறவன், இப்பொழுது குற்றவுணர்வில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை அவன் மட்டுமே அறிவான்!

அந்த தத்தளிப்பில் இருந்து விடுபட எண்ணியே, நண்பர்களுடன் வெளியே சென்று மனதை ரிலாக்ஸ் பண்ண விரும்பினான் அவன்.

ஆனால் அதைத் தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாது,  நினைத்த நேரத்திற்கு நிறம் மாறும் பச்சோந்தியைப் போல செயல்படுவரைக் கண்டு, அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை! அதையே அவன் தன் வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான்.

தந்தையுடனான உரையாடலுக்குப் பின் விஷ்வாக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அது என்னவென்றால், அர்ஜுனும் சரி, தானும் சரி ஒரு நார்மல் வாழ்க்கை வாழ முடியாது தவிப்பதற்கு முழுக் காரணமும் இவர் மட்டும் தான் என்று!

அந்த எண்ணம் எழுந்த நொடி, ஏனோ, விஷ்வாவுக்கு அவனையுமறியாமல் அர்ஜுனை நினைத்து லேசாக மனம் தள்ளாடியது.

தலையை ஆட்டி அதில் இருந்து விடுபட்டவன், தந்தையை நேருக்கு நேராகப் பார்த்து, “என்கிட்டே பேசி உங்க நேரத்தை வீணாக்காம உங்க பையனை வெளியே கொண்டு வர ஏதாவது செய்ய முடியுதான்னு பாருங்க!” என்றான்.

அதை அவன் சொன்னதுமே, அருணாச்சலத்திற்குத் தானாக மகனுடன் சேர்ந்து வசுந்தராவின் நினைவும் வந்து ஒட்டிக் கொண்டது.

“அந்த முட்டாள் தான் என் பேச்சைக் கேட்காமல், அவ வந்ததில் இருந்து அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு அலையுறானே? அப்புறம் எங்கே இருந்து அவன் வெளியே வரப் போறான்??” என்ற தந்தையின் பேச்சைக் கேட்டு அவரை கூர்ந்து பார்த்தான் விஷ்வா, “அந்த அவ” என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று.

“அர்ஜுன் அம்மா வந்து இருக்காங்களா?” என்று கேட்டவனுக்கு உடனே பதிலளிக்காது, சித்ராவை ஒரு முறை பார்த்து விட்டு, “ம்ம்ம்.. ஆமா ஆமா.. வந்து இருக்கா.. வந்து மட்டும் என்ன செய்துட முடியும் அவளால? என்னை மீறி இங்கே ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு இன்னைக்குத் தெரிஞ்சுப்பா” என்று அங்கலாய்த்தவரின் வார்த்தைகளில், “புரியலை??” என்று கேட்டான் விஷ்வா.

“ம்ம்ம்.. தி கிரேட் வசுந்தரா தேவி, தன்னோட பையனை இன்னைக்கு வெளில கொண்டு வருவேன்னு என்கிட்டேயே திமிரா சவால் விட்டுச் சொல்றா!” என்று சொன்னவரின் பேச்சைக் கேட்டு விஷ்வா அதிர்ந்து நின்ற நேரம், அதைக் கண்டுகொள்ளாது கணவனிடம், “அப்போ அர்ஜுன் இன்னைக்கு வெளிலே வந்துடுவானாங்க?” என்று அப்பாவியாகக் கேட்டார் சித்ரா.

“என்ன பேச்சு பேசுற? அது எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை! அவன் என்ன பெட்டி கேஸுக்காகவா உள்ளே போய் இருக்கான்? கொலை கேஸ்! அதில் இருந்து அவ்வளவு சீக்கிரம் எல்லாம் வெளிவரவே முடியாதுன்னு கூடத் தெரியலை அந்த கூமுட்டைக்கு!” என்று செருக்காகச் சொல்லிக் கொண்டு இருந்தவரின் பேச்சைக் கேட்ட விஷ்வாவினுள் பலவித எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது.

அதில், “அவுங்க எப்படி இந்த கேஸுக்குள் வந்தாங்க டாட்?” என்று நேரடியாகவே கேட்டான் விஷ்வா.

“இது என்ன கேள்வி?” என்று மகனை அருணாச்சலம் பார்த்த போதும், “அவ பையனுக்கு ஒண்ணுன்னா அவ சும்மா இருப்பாளா?” என்று விளக்கம் கொடுத்தார்.

மேலும், “நீ வேணா பாரு.. இன்னும் கொஞ்ச நாளில் அவுங்க அம்மா லட்சணம் தெரிந்து, அர்ஜுனே என்கிட்டே வந்து ‘டாட்! என்னைக் காப்பாத்துங்க’ன்னு கெஞ்சப் போறான்” என்றவரின் பேச்சைக் கேட்டு அவரை இளப்பமாகப் பார்த்தவன், “அவுங்க அம்மா இருக்கிற வரை நிச்சயமா அவனுக்கு அப்படி ஒரு நிலை வரவே வராது டாட்!!” என்றான் விஷ்வா.

“அப்போ நீயும் அவளை நம்புறியாடா? அப்படி என்ன என்னால முடியாத ஒன்றை அவ செஞ்சுடுவான்னு, ஆளாளுக்கு இப்படி அவளைத் தலைல தூக்கி வச்சு ஆடுறீங்க?” என்று எரிச்சலாகக் கேட்டவரிடம், “அவுங்களால எதையும் செய்ய முடியும்ன்னு இன்னைக்கு நீங்களே தெரிஞ்சுப்பீங்க டாட்!” என்றவன், அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது, “நான் கிளம்புறேன்” என்று சொல்லி எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவன் போல வாசலை நோக்கிச் சென்றான்.

அருணாச்சலம் தெரிந்து இருப்பாரோ இல்லையோ, ஆனால் விஷ்வா நன்கு தெரிந்து வைத்து இருந்தான், வசுந்தரா எப்படிப்பட்ட ஆள் என்று! அதன்பொருட்டே அவனின் வாயிலிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிவந்தது.

நேரில் இதுவரை ஒரு முறை கூட விஷ்வா வசுந்தராவைச் சந்தித்துப் பேசியது  இல்லை. ஆனால் அவரைப் பற்றி அதிகம் தேடி அறிந்து வைத்து இருந்தான் விஷ்வா.

வசுந்தராவின் கடந்தகாலம் அறிய நேர்ந்தவனுக்கு, சில நேரங்களில், தன் தாய் ஏன் அவரைப் போல இல்லை? என்றும் கூட மனம் வெதும்பி இருக்கிறது.

ஊரே குற்றவாளி என்று தீர்ப்பளித்த பலரின் தலைவிதியையே தன்னுடைய சட்ட வாதத்தால் திருத்தி எழுதிய வசுந்தரா, தன் மகனைத் தூக்கிலேற விட்டு விடுவாரா?? என்றே தோன்றியது.

அதை எண்ணும் போதே விஷ்வாவுக்கு வேர்த்து விறுவிறுத்தது மட்டுமில்லாது, ‘இதில் இருந்து எப்படி நான் தப்பிக்கப் போகிறேன்?’ என்ற பயம் பிடித்துக் கொண்டது.

அவன் நினைத்தது போலவே, வசுந்தராவும் அன்றே தன் மகனை வெளியே கொண்டு வரும் முயற்சியில் தீயைப் போல் வேலை செய்து கொண்டு இருந்தார்.

விஷ்வா வீட்டை விட்டுச் செல்லவுமே சித்ராவின் மீது தான் பாய ஆரம்பித்தார் அருணாச்சலம், ,“என்ன பிள்ளைய பெத்து வச்சு இருக்க??” என்று!

அந்நேரம் அவரின் போன் சாப்பாட்டு மேஜையில் பெருங்குரலெடுத்து அலறவும், “அதை எடு!” என்று மனைவியிடம் ஆணையிட்டார்.

கணவரின் பேச்சை மீறாது சித்ரா போனை எடுத்து வந்து கொடுக்கவும், அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தவர், “வாட்???” என்று நம்பாத குரலில் அலறி விட்டு, மனைவியின் புறம் திரும்பி, “அந்த டிவியை ஆன் செய்!” என்று மீண்டும் கட்டளையிட்டார்.

கணவனின் முக மாறுதலைக் கண்ட சித்ரா, நொடியும் தாமதிக்காது, ஓடிச் சென்று அங்கே ஹாலில் வரவேற்பறையில் இருந்த டிவியை ஆன் செய்ததும், திரையில் ஃபிளாஷ் நீயூஸாக அனைத்து சேனல்களிலும் அன்று ஒரே ஒரு செய்தி தான் ஓடிக் கொண்டு இருந்தது. 

“பிரபல தொழிலதிபரும், ஏஜே க்ரூப்ஸ் வாரிசுமான அர்ஜுன் அருணாச்சலம், சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின் காரணமாக, அவரை நிபந்தனை ஜாமீனில் வெளியே எடுக்க அவரது வக்கீல் சார்பாக மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அவர் இன்று மதியம் ஜாமீனில் விடுதலையாவார் என்பது இந்தக் கொலைவழக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது”

‘அர்ஜுன் தாக்கப்பட்டு இருக்கிறான், அவன் ஜெயிலில் இருந்து வெளிவரப் போகிறான்’ என்பது எல்லாம் அருணாச்சலத்திடம் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. வசுந்தரா சொன்னபடி செய்து விட்டாளே என்பது தான் அவரை நெரிஞ்சி முள்ளாக அந்நேரம் குத்திக் கிழித்தது.

அதில் ரிமோட்டைத் தூக்கிப் போட்டு உடைத்தவர், நேற்று பேசிய வக்கீல்களில் தலைமையானவரை அழைத்து, ‘காய்ச்சு காய்ச்சு’ என்று காய்ச்சி எடுக்க் ஆரம்பித்து விட்டார். “ஏன்யா, நேத்து என்னமோ அர்ஜுனால் வெளியே வரவே முடியாது சொன்னீங்க.. இப்போ எப்படியா வரப் போறான்?” என்று.

அதற்கு என்ன பதில் சொல்வது என்று சில நிமிடங்கள் மௌனம் காத்த அந்த வக்கீல், “சார்! இது உங்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்குமே பெரிய ஷாக்கா தான் இருக்கு. அந்த அம்மா சாதாரண ஆளே கிடையாது சார்! கிரிமினலுக்கு எல்லாம் கிரிமினலா இருக்காங்க சார்” என்றவரின் பாராட்டைக் கேட்கவா போன் செய்தார் அருணாச்சலம்?

அதன்பொருட்டு பல்லைக் கடித்துக் கொண்டு லாயரின் லைனை உடனே துண்டித்தார்.

‘எங்குப் போய் இந்த அவமானத்தைத் துடைப்பேன்?’ என்று துடித்தவருக்கு, தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் சித்ராவின் முன் எதையும் காட்ட விருப்பமில்லாது போகவும், சட்டென்று அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

*****

தன் வீட்டின் ஃப்ரெஞ்ச் விண்டோ திரைச்சீலை ஒதுக்கப்பட்டு, அதன் கண்ணாடி கதவுகளின் வழியாகப் பின்புற தோட்டத்தை, கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, பார்த்தவாறு நின்றிருந்த வசுந்தராவின் முகம், ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டு இருந்ததை, அவரின் நெற்றிச் சுருக்கம் பறைசாற்றியது.

‘இந்த உலகில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுமே அவரவர் தாயின் பொக்கிஷங்களே!

அப்படியிருக்கும் போது, இன்று தன் பிள்ளை, இன்னொரு தாய்க்குப் பொக்கிஷமாக இருந்த ஒரு குழந்தையைத் தீயிலிட்டுப் பொசுக்கி விட்டான் என்று சொன்னால், எந்தத் தாயால் தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்?

அந்த நிலைக்குத் தன்னைத் தள்ளிய தன் மகனின் விதியை நினைத்து நோவதா?? இல்லை அவனை இந்த நிலைக்குத் தள்ளிய சதியை எதிர்கொள்வதா?? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையில் சிக்கித் திண்டாடிக் கொண்டு இருந்த வசுந்தராவின் கவனத்தைப் பின்னிருந்து ஒலித்த அருணின் குரல் ஈர்த்தது.

“மேடம்!” என்றவனின் அழைப்பில், குரல் வந்த திசை திரும்பிய வசுந்தராவின் கண்களில், அவனுக்கு அருகில் ஆங்காங்கே மருந்திட்ட காயங்களுடன் நிற்கும் அர்ஜுன் தென்பட்டான்.

அவனின் நிலை கண்டு, ஒரு தாயாக ஓடிச் சென்று, அவனை வாரி அணைத்து ஆறுதல் சொல்லத் துடிக்கும் மனதை முயன்று திடப்படுத்தி, ஒரு அடி கூட நகராது நின்று இருந்தவரிடம் தானாக வந்து சேர்ந்தான் அர்ஜுன்.

தன்னை நெருங்கிய மகனை ஆரத் தழுவ துடிக்கும் கைகளைச் சங்கிலியிட்டுப் பூட்டியவர், “போய் ரெஸ்ட் எடு!” என்று மட்டும் சொன்னார்.

“மாம்!” என்று ஏதோ சொல்ல வந்த மகனிடம், “இப்போதைக்கு, நீ கொலை செய்யலைன்னு உனக்குச் சாதகமாக எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சு இருக்கு அர்ஜுன். அதனால மட்டும் தான் உன்னை வெளியே கொண்டு வந்து இருக்கேன்.

ஆனா இன்று உனக்குச் சாதகமா இருக்கிற விஷயம், நாளைக்கு உனக்குப் பாதகமா மாறினால், கண்டிப்பா நீ மீண்டும் உள்ளே போக வேண்டி வரும் என்பதை எப்பவும் மறந்துடாதே!” என்றவரின் முதல் பேச்சைக் கேட்டு சந்தோஷப்படுவதா இல்லை அடுத்த பேச்சைக் கேட்டு வருத்தப்படுவதா என்று புரியாத நிலைக்குத் தள்ளப்பட்டவனோ, “எனக்குச் சாதகமா அப்படி என்ன கண்டுபிடிச்சு இருக்கீங்க மாம்?” என்று  ஆர்வத்துடன் கேட்டான்.

“அதை நாளைக்கு ஹியரிங்க்ல நீயே தெரிஞ்சுப்ப!” என்று திடமாகச் சொல்லி மகனை அவனின் அறைக்குப் போகச் சொன்னார்.

முகம் சோர்வுடன் மாடிப்படி ஏறும் அர்ஜுனைக் கண்டபடி நின்று இருந்த  வசுந்தராவிடம், “இவ்ளோ கடுமையா பேசணுமா மேம்?” என்று தன்மையான குரலில் கேட்டான் அருண்.

“அர்ஜுனோட இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமோன்னு எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு அருண். அதை எங்கே அவனிடம் வெளிப்படுத்திடுவேனோன்ற பயத்தில் தான் இப்படி அவனிடம் நடந்துக்குறேனோ என்னவோ?!” என்று தன்னைத்தானே நொந்து பேசுபவரிடம் மேற்கொண்டு என்னவென்று கேட்க முடியும் என்ற நிலை அருணுக்கு!

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டுத் தன்னைத்தானே மீட்டுக் கொண்டவர், “அந்த வீடியோ காபி கேட்டு இருந்தேனே, கிடைச்சதா?” என்று கேட்டார்.

“சுந்தரை அனுப்பி இருக்கேன் மேம். அநேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் வாங்கிட்டு வந்திடுவான்” என்றான் அருண்.

“ம்ம்ம்.. குட்!” என்றவர் அங்கேயே அமர்ந்து அருணுடனும், மற்ற ஜூனியர்களுடனும் சேர்ந்து மகனின் கேஸை அலசி ஆராய ஆரம்பித்தார்.

இரவு நெருங்கிய வேளையில், காலிங் பெல் சத்தம் கேட்டு பரிமளம் ஓடிச் சென்று கதவைத் திறந்தார்.

வந்திருப்பது யார் என்று புரியாது அவர் விழித்திருந்த நேரம், “யார் பரிமளம்?” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தார் வசுந்தரா. அதற்கு அவர் பதிலளிக்கும் முன் வீட்டினுள் அதிரடியாக நுழைந்து இருந்தாள் யாழினி.

போட்டோவில் பார்த்து இருந்ததால் நேரில் பார்த்தவுடன் சட்டென்று அடையாளம் கண்டுகொண்ட வசுந்தரா, “வாம்மா..” என்று எழுந்து வந்து அவளை வரவேற்கவும், “ஹவ் ஆர் யூ ஆன்ட்டி?” என்று அவரின் நலம் விசாரித்தாள்.

“யா குட்!” என்றவரிடம், “அர்ஜுன்..” என்று தயக்கக் குரலில் கேட்டாள் யாழினி.

“அவன் மேலே அவன் ரூம்ல இருக்கான்” என்று சொன்னவர், “நீ போய் அவன்கிட்ட பேசிட்டு இரும்மா. நான் குடிக்க ஏதாவது அனுப்பி வைக்கிறேன்” என்றதும், அவரின் புரிதலில் ஒரு புன்னகையை அவருக்குப் பதிலாகக் கொடுத்தவள், “சரியென்று” தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர போனவளிடம், “அர்ஜுன் ரூம் லெப்ட் சைடு” என்ற தகவலையும் கொடுத்து அனுப்பினார் வசுந்தரா.

தன்னறை கட்டிலில் கால் நீட்டி அமர்ந்தவாக்கில், மடிக்கணினியில் எதையோ மும்முரமாக வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனின் அருகில் நிழலாடவும், நிமிர்ந்து பார்த்த அர்ஜுன், அங்கு யாழினியைக் கண்டு, “இவள் எங்கே இங்கே?” என்று நினைத்தான்.

அர்ஜுனின் மடியில் இருந்த மடிக்கணினியை எடுத்து அவனுக்கு மறுபக்கம் வைத்தவள், அவன் பனியனைப் பிடித்து இழுத்து அதிரடியாக அவனை எழுப்பி, தனக்கு நேராக நிற்க வைத்தாள் யாழினி.

அவளின் செயலில், “ஏய்! என்ன பண்ணுற?” என்று அவளின் கையை விடுவித்தபடி கத்தினான் அர்ஜுன்.

அதையெல்லாம் காதில் வாங்காதவளோ, “எவ்ளோ தைரியமிருந்தா என்னைப் பார்க்க முடியாதுன்னு சொல்லி இருப்ப??” என்று குரலை உயர்த்தி கோபப்பட்டுக் கேட்பது அர்ஜுனுக்குப் புதிதாக இருந்தது.

இதுவரை அர்ஜுன் மட்டுமே யாழினியிடம் சத்தம் போட்டு இருக்கிறான், குரலை உயர்த்தி இருக்கிறான். அப்பொழுது எல்லாம் அமைதியாக இருந்தவள், இன்று இப்படி ஒரு அவதாரம் எடுத்திருப்பது, அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் அவன் அறியாதது, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது தான்! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் யாழினியும் இப்பொழுது அப்படி ஒரு நிலையில் தான் இருந்தாள்.

அர்ஜுனுடனான கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து, அவளே எதிர்பார்த்திராத அளவுக்கு அவனை அனுதினமும் காதலிக்க ஆரம்பித்திருந்தவளை ஒவ்வொரு தருணத்திலும், எந்தவித காரணமுமின்றி, ஒதுக்கியவனிடம் அன்று கேட்காத நியாயங்களைத்தான் இன்று கேட்கத் துணிந்து விட்டாள் யாழினி.

தன்னையே அதிசயித்துப் பார்த்திருந்தவனைக் கொஞ்சமும் அசராது பார்த்திருந்தவளின் கைகளை அகற்றியபடி, “நான் என்ன மைசூர் பாலஸிலா இருந்தேன், நீ வந்து பார்த்துட்டுப் போக?” என்று ஏடாகூடமாகப் பதிலளித்தான் அர்ஜுன்.

அவனைத் துளைக்கும் பார்வை பார்த்தவள், “அங்கே இருந்தா மட்டும் அப்படியே என்னைப் பார்க்க விட்டு இருப்பியா?” என்று அதை விட எடக்குமடக்காகக் கேள்வி கேட்டவளின் உண்மை சுட்டதில் அமைதியாகிப் போனான் அர்ஜுன்.

இதுவரை அவள் கேட்டு எங்கும் அவளை அழைத்துச் சென்றதில்லை. அவள் விரும்பிய எதையும் வாங்கித் தந்தது இல்லை. அவ்வளவு ஏன்? சில வாரங்களுக்கு முன், திருமண நிச்சயத்திற்காக உடை வாங்க எண்ணி, அவனைப் பொய் சொல்லி கடைக்கு வரவழைத்து விட்டாள் என்பதற்காக, அத்தனை பேர் சுற்றி இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் யாழினியைத் திட்டி அழ வைத்திருந்தான் இந்த அர்ஜுன்.

அந்த விஷயம் கேள்விப்பட்டு, அப்பா, அம்மா, அண்ணன் என்று அனைவரும், “இவன் உனக்கு வேண்டாம் மா” என்று அர்ஜுடனான கல்யாணம் குறித்து ‘மறுபரிசீலனை செய்!’ என்று பலவிதமாகக் கூறினாலும், “எனக்கு அவர் தான் வேணும்!!” என்று திடமாக நின்றாள் யாழினி.

அந்த விஷயம் அருணாச்சலத்தின் வாயிலாக அர்ஜுனின் செவியை வந்தடைந்த நொடி, ஏற்கனவே அவளிடம் அப்படி நடந்து இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டு இருந்தவனுக்கு, யாழினி தங்கள் உறவு குறித்து ஆணித்தரமாகச் சொன்ன பதிலைக் கேட்டு, நிஜமாகவே முதல் முறையாக அவளைப் பற்றி சிறிது நேரம் சிந்திக்க வைத்தது உண்மை.

அதன் வாயிலாக, அவனே அறியாது, அவளிடம் இனி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டதும் உண்மை.

ஆனால் அதை அவன் நிறைவேற்ற சந்தர்ப்பமே கிடைக்காத வகையில், கனவிலும் அவன் எண்ணிப் பார்க்காதது எல்லாம் நடந்து, அவன் ஜெயில் செல்லும்படி ஆகி விட்டது.

அதில் பலவித உணர்வுகளுக்கு ஆளாகி நிலைகுலைந்து போயிருந்தவனுக்கு, ‘மற்றவர்கள் சொல்வது போலத் தான் யாழினிக்கு பொருத்தமில்லாதவன்’ என்ற முடிவுக்கு வந்த பின் தான், அர்ஜுன் அவளைச் சந்திப்பதைத் தவிர்த்தான்

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், யாருமில்லாத தனிமையில், குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் நிலையில், அர்ஜுன் அவனை விட அதிகமாக யாழினியைப் பற்றித்தான் சிந்தித்தான் என்பதை யார் அறிவார்கள்?? அவனைத் தவிர..!! ஆனால் அது புரியாது தன்னிடம் வந்து கத்திக் கொண்டு இருப்பவளிடம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தெரியாது தவித்த அர்ஜுன், “லிசன்! இந்தக் கல்யாணம் நமக்கு செட் ஆகும்ன்னு எனக்குத் தோணலை. சோ இதை இப்பவே நாம ட்ராப் பண்ணிடலாம்” என்றான்.

அதைக் கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவாள், அழிச்சாட்டியம் பண்ணுவாள் என்று அர்ஜுன் இருக்க, ஆனால் யாழினியோ அசால்ட்டாக, “ம்ம்ம்.. குட் டிசிஷன்!” என்று அந்த ரூமில் உலாவியபடி சொன்னாள்.

அந்தப் பதில் ஏனோ அர்ஜுனுக்குக் கசந்தது. அது கொடுத்த ஏமாற்றத்தை வெளிக்காட்டாது நின்றவனிடம், அங்கே இருந்த புக் ஷெல்பில் இருந்து ஒரு புக்கை எடுத்துப் பார்த்தவள், “இப்போ கூட என்னைக் கேட்டு இதில் முடிவெடுக்கணும்ன்னு உனக்குத் தோணலைல அர்ஜுன்??” என்று சொன்னதைக் கேட்டவனுக்கு, தானாகத் தாய் தன்னிடம் சொன்ன வார்த்தைகள் மின்னலாக வந்து போனது.

“உன் அப்பா மாதிரி இருக்க மாட்டேன் மாட்டேன்னு சொல்லிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நீயும் அவரை மாதிரி தான் மாறிட்டு வரேன்னு உனக்குத் தெரியுதா இல்லையா அர்ஜுன்?? அவர் எப்படி மற்றவர்களை மதிக்காது இருக்கிறாரோ, அப்படித்தான் நீயும் இருக்க! அவர் எப்படிப் பெண்களைத் தனக்கு அடிமைகள் போல நடத்துறாரோ, அப்படித்தான் நீயும் ஒரு பெண்ணை நினைச்சு அடித்து இருக்க!” என்ற குற்றச்சாட்டுகளுக்கு, “இல்லை, நான் அப்படி இல்லை மாம்” என்று அர்ஜுன் அப்பொழுது தாயிடம் வாதடிய போதும், ஏனோ இந்த நொடி, யாழினி சொன்னதைக் கேட்டவனுக்குத் தாய் சொன்னது தான் உண்மையோ? என்று தோன்றியது.

இதுவரை கல்யாணம் செய்து கொள்ளப் போகிற பெண் என்ற வகையில், அவளுக்கு ஒரு நாளும் மதிப்பு கொடுத்துப் பேசியது இல்லை. அவளிடம் எதைப் பற்றியும் ஆலோசித்து முடிவு செய்தது இல்லை. அவளே ஆலோசிக்க வந்தாலும் ஒத்துக் கொண்டது இல்லை. இப்படி எல்லாம்  எண்ணிப் பார்க்கும் பொழுதே, “அப்போ.. அப்போ நானும் என் அப்பா மாதிரி தானா??” என்ற எண்ணம் வலுவாகத் தோன்றி அர்ஜுனை வதைக்க ஆரம்பித்தது.

“இன்னைக்கு நான் எங்கே இருக்கணும்ன்னு உனக்குத் தெரியுமா?” என்று எடுத்த புக்கை அதன் இடத்திலேயே வைத்து விட்டு, திரும்பி அர்ஜுனைப் பார்த்துக் கேட்டவளின் வார்த்தைகளில் தன்னிலை அடைந்து, அவளை நிமிர்ந்து பார்த்த அர்ஜுனிடம், “என் நண்பர்களுடன் நம்முடைய திருமண நிச்சயதார்த்த பார்ட்டியை கொண்டாடிக்கிட்டு இருந்து இருக்கணும். ஆனா அதே நிச்சயதார்த்தத்தை உன்னுடன் முறித்துக் கொண்டு இருக்கேன்” என்று கசந்த புன்னகையுடன் சொன்னவளிடம் அர்ஜுன் ஏதோ சொல்ல வரும் முன், “பேசாதே!!” என்று கண்களில் துளிர்த்த கண்ணீருடன் அந்த அறையே அதிரும்படி கத்தினாள் யாழினி.

அதில் அதிர்ந்து அடங்கி நின்று இருந்தவனை நெருங்கி, “உனக்கு.. உனக்கு என்னதான் பிரச்சனை அர்ஜுன்? ஏன் உனக்கு என்னைப் பிடிக்கலை” என்று சற்று முன் இருந்த நிலைக்கு எதிர்மாறாக, கண்களில் கரைபுரண்ட காதல் வலியுடன் கேட்டவளைக் கண்டு, ஒரு நிமிடம் மூர்ச்சையாகிப் போனான் அர்ஜுன்.

“இந்த அளவுக்கு இவள் என்னை விரும்ப, நான் என்ன செய்தேன் இவளுக்கு??” என்று எண்ணியவனை விடுத்து, அங்கே பக்கவாட்டு சுவரில் மாற்றப்பட்டு இருந்த அவனின் ஆளுயர புகைப்படத்தின் அருகில் சென்று, அதையே ரசித்துப் பார்த்தபடி நின்றவள், “அப்ப எனக்கு ஒரு பதிமூணு வயசு இருக்கும்ன்னு நினைக்கிறேன். அன்னைக்குத்தான் உன்னை முதல் முதலா எங்க அப்பா எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

உன்னைப் பார்த்ததுமே எனக்குப் பிடிச்சு போச்சு போல! நீ ஹாய்ன்னு சொல்றதுக்கு முன்னாடியே நான் என் கையை நீட்டி உனக்குச் சொல்லிட்டேன். ஆனா அப்பவே உனக்கு என்னைப் பிடிக்கலை போல! என் கையைத் தொடாமலே ஹாய் சொல்லிட்டு அங்கிருந்து உடனே நகர்ந்து போய்ட்ட.

அதுக்கு அப்புறம் பலமுறை நாம சந்திக்க நேர்ந்த போது எல்லாம், என் கைகள் தானாகவே உன்னை நோக்கி நீண்டிடும், இன்னைக்காவது நீ எனக்குக் கைக் கொடுத்து பேசிட மாட்டீயான்னு.. ஆனா இப்ப வரை ஒருதடவை கூட நீ அதைச் செஞ்சதே இல்லை அர்ஜுன்!” என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்து சொன்னவளின் பேச்சைப் பிரமித்துப் போய் அசையாது கேட்டுக் கொண்டு இருந்தான் அர்ஜுன்.

“எப்பவும், எங்கேயும் எல்லோரையும் விட்டு ஒதுங்கிப் போகும் உன்னைச் சுற்றித்தான் என் கண்கள் சுழன்று கொண்டே இருக்கும். ஏனோ உன்னுடைய தனிமையைக் காணும் போது எல்லாம், ‘நான் இருக்கிறேன் உனக்கு!’ என்று உன்னை இழுத்துப் பிடித்து நிறுத்திச் சொல்லணும்ன்னு என் மனது துடிக்கும். அப்போ எனக்கு அதற்கான அர்த்தம் விளங்கலை. ஆனா உன்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமான்னு என் அப்பா கேட்ட போது, எனக்குள்ள அவளோ சந்தோசம்!! ஒரு நொடி கூடத் தாமதிக்காது உடனே ஓகே சொல்லிட்டேன்” என்றவளின் வார்த்தைகளின் நெகிழ்வு அர்ஜுனைத் தாக்கி இருக்க வேண்டும்!! அதன் வெளிப்பாடாக, “என்னைக் காதலித்தாளா இவள்?” என்ற ரீதியில், அவனின் இமைகள் ஆச்சரியத்தில் தானாக உயர்ந்தது.

“ஆனா என் துரதிர்ஷ்டம் பார்த்தியா? உன் மீதான என்னுடைய காதல் மலரும் முன்னே, என் கொலைகார காதலனாலேயே கருகி போய்டுச்சு!” என்றவளின் கொலைகாரனில் உண்மையாக அர்ஜுனுக்கு அவளின் மீது அந்நேரம் கோபம் வந்து இருக்க வேண்டும். ஆனால் அந்தக் கொலைகாரனுக்கு பின் வந்து விழுந்த அந்தக் காதலனையும், அதைச் சொன்னவளையும் முதல் முறையாக அதிகம் ரசித்தான் அவன், அவனையும் அறியாமல்.

சற்று முன் இருந்த சோக தோற்றம் மாறி, ஒருவித நிமிர்வுடன், தலையைச் சிலுப்பிக் கொண்டு அர்ஜுனைப் பார்த்த யாழினி, “வெல்! உன் முடிவை நீ சொல்லிட்ட, நானும் என் மனதில் இருப்பதைச் சொல்லிட்டேன். இதுக்கு மேலே இந்த விஷயத்தில் என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும்!” என்றவள், “குட் பை அர்ஜுன்!!” என்று வரவழைத்த புன்னகையுடன், தன் கையை எதிரே நின்று இருந்தவனை நோக்கி நீட்டினாள்.

எப்பொழுதும் போல அர்ஜுன் தன் கையைத் திருப்பி நீட்டாததில், விரக்தி புன்னகை ஒன்றை தனக்குத்தானே சிந்திக் கொண்டவள், “ஓகே பை!” என்று சொல்லித் தன் கையை மடக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டவளை, தன் ஒரே சொல்லில், அதிர்ந்து திரும்ப வைத்து இருந்தான் அர்ஜுன்!

அதில் நிலைகுலைந்து போய் யாழினி அதிர்ந்து நின்றாள் என்றால், அடுத்து அவன் கேட்ட கேள்வியில் வசுந்தரா ஆடியே போய் விட்டார் எனலாம்!