Advertisement

அர்ஜுனுடைய தைரியத்தின் முழு உருவமாக, தன் முன் நிற்கும் தன் முன்னாள் மனைவியின் கம்பீரத்தைக் கண்டு, ஒரு நிமிடம் அருணாச்சலம் அசந்து போனார்.

ஒரு காலத்தில் தனக்கு அடிமையாக வாழ்ந்தவள், இன்று தனக்கே சவால் விடும்படி திரும்பி வந்திருப்பதைச் சுத்தமாக அவரால் தாங்கிக் கொள்ள முடியாது,இங்கே என்ன பண்ணுற?” என்று குரலை உயர்த்திக் கேட்டார்.

அவருக்குப் பதிலேதும் கொடுக்காது, உதாசீன பார்வை பார்த்த வசுந்தராவைக் கண்டு உள்ளம் கொதிக்க, “மேனர்ஸ் தெரியாத ஜென்மம்!” என்று கறுவியவரின் வார்த்தைகளைக் கேட்டு,என்னது மேனர்சா??” என்று நக்கலாகச் சிரித்த வசுந்தராவின் செயலில்,இப்போ எதுக்குச் சிரிக்கிற?’ என்ற ரீதியில் கண்களைச் சுருக்கி அருணாச்சலம் பார்த்தார்.

அப்படின்னா என்னனு முதல்ல உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர்??” என்ற பதிலடியில் அருணாச்சலத்தின் முகம் கறுத்துப் போனது.

என்ன பயம் விட்டுப் போச்சா?” என்று எகிறிக் கொண்டு வந்தவரைக் கண்டு, துளியும் அஞ்சாது நிமிர்ந்து நின்ற வசுந்தரா, தன் ஒரு விரல் சொடுக்கி,இன்னும் ஒரு அடி என்னை நோக்கி எடுத்து வைத்தாலும், அடுத்த நொடி நீயும் இதே ஜெயிலில் கம்பி எண்ணுவ, மைன்ட் இட்!” என்று அனல் விழிகளில் எச்சரித்தார்.

ஏய்! என்ன பயமுறுத்துறியா???” என்று கேட்டவரின் குரல் ஏற்றமாக இருந்தாலும், அவரின் கால்கள் என்னவோ, இருந்த இடத்தை விட்டு ஒரு அடி நகரவில்லை.

அதைக் கண்டு விட்டு நமட்டுச் சிரிப்புடன்,நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை!’ என்ற விதமாக, ஒரு அற்ப பார்வை பார்த்து விட்டு, அவரைத் தாண்டிச் சென்று மகனை நெருங்கிய வசுந்தரா,எவரிதிங் வில் பீ ஆல் ரைட் மை டியர்!” என்றபடி தலை கோதி அவனை அரவணைத்தார்.

அன்னையிடம் அடைக்கலமானவனின் மனதோ, அவ்வளவு நேர போராட்டங்கள் மறந்து, லேசாக மாறிப் போனது.

அர்ஜுன்!!” என்ற தந்தையின் காட்டுக் கத்தலில் தாயை விடுத்து அவரை நிமிர்ந்து பார்த்தவன், “வாட்???” என்று அவரை விடக் காட்டமாகக் கேட்டான்.

இவ இங்கே என்ன பண்ணுறா??”

டோன்ட் பீ சில்லி.. நீங்க எதுக்கு இங்கே வந்து இருக்கீங்களோ, அதுக்குத்தான் அம்மாவும் வந்து இருக்காங்கன்னு உங்களுக்கே தெரியும். தென் வை ஆர் யூ ஆஸ்கிங் மீ?”

அம்மாவா??” என்று சற்று இளக்காரமாக இளித்துச் சொன்ன அருணாச்சலம்,பல வருடங்களுக்கு முன்பே அந்த உறவுக்கு முழுக்குப் போட்டாச்சு!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதைக் கேட்டவனோ,அது உங்களோடு மட்டும் தானே தவிர என்னோடு அல்ல!” என்றான் அவரின் தொணியிலேயே.

அதில் ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனவர், மகனை மடக்குவதாக எண்ணிக் கொண்டு,என்னோட பணம் மட்டும் தான் உன்னைக் காப்பாத்தும். அதை மைண்ட்ல வச்சுக்கிட்டு எதையும் பேசு!” என்று மறைமுகமாக மிரட்டினார்.

தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு அருகில் இருந்த டேபிளைத் தூக்கி எறிந்தவனோ,என் மண்டையே வெடிக்கிற அளவுக்கு நான் இங்கே டென்ஷனின் இருக்கிறேன். அது புரியாம இப்பவும் பேராம பேசிட்டு இருக்கீங்கஎன்று நாடி நரம்புகள் புடைக்கக் கோபத்தில் வெடித்தான் அர்ஜுன்.

அவனின் ஆக்ரோஷத்தில் சுற்றி இருந்த அனைவருமே ஒரு நிமிடம் ஆட்டம் கண்டனர்.

மகனின் நிலை அறிந்து, அவனின் தோளை அழுத்தி,காம் டவுன் அர்ஜுன்!” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றார் வசுந்தரா. அந்த அழுத்தத்தில் அர்ஜுன் கொஞ்சம் அடங்கினாலும், கண்களால் இன்னமும் தந்தையை ஆத்திரம் அடங்காது எரித்துக் கொண்டுதான் இருந்தான் அவன்.

மகனிடமிருந்து வெளிப்பட்ட அனலின் சூடு தாங்காது, அவனைத்  தணிக்க எண்ணிய அருணாச்சலமும்,ஓகே கூல்.. உனக்காக டாப்பஸ்ட் லாயரை நான் உடனே அப்பாய்ன்ட் பண்ணுறேன்என்றார்.

அதைக் கேட்டு,தேவையில்லை! அர்ஜுனுக்காக நானே ஆஜர் ஆகிறேன்என்று மறுப்பு தெரிவித்தார் வசுந்தரா.

அதைச் சொல்ல நீ யார்?” என்று அவரிடம் பாய போனவரின் குறுக்கே வந்து நின்ற அர்ஜுன்,அவுங்க என்னுடைய அம்மா, அதை மறந்துடாதீங்க!” என்று தாயைக் காக்கும் மகனாகச் செயல்பட்டான்.

இவனை!!’ என்று மகனின் வார்த்தைகளில் அருணாச்சலத்துக்குச் சினம் மூண்டாலும், தன் முன்னே இருப்பவன், தன்னுடைய வியாபார சாம்ராஜ்யத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதில் குரலைத் தாழ்த்தி,அது இல்ல அர்ஜுன்.. இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். இதுல என்னால கேர்லஸ்சா எந்த முடிவையும் எடுக்க முடியாது. நான் சொல்றதைக் கேளு! உனக்காக நான் அப்பாய்ன்மென்ட் பண்ணப் போறவங்க எல்லாம் இவளை விட ஆயிரம் மடங்கு திறமையானவங்க. சோ தேவையில்லாம நீ இவளை நம்பி உன் ப்யூச்சரை இழந்திடாதே!” என்று தேன் தடவிய வார்த்தைகளில் மகனை மடக்கப் பார்த்தார்.

இதற்கெல்லாம் மயங்குபவனோ, மடங்குபவனோ நான் இல்லை!என்பது போல,எங்க அம்மாவை விடத் திறமையானவங்க இந்த உலகத்திலேயே இல்லை!!” என்று ஆணித்தரமாகத் தன்னிலையிலேயே உறுதியாக நின்றான் அர்ஜுன்.

மகனின் உறுதியை விட அவன் வசுந்தரா மீது வைத்து இருக்கும் நம்பிக்கையில் வெகுண்டு போன அருணாச்சலம்,இதுக்காக நீ ஒரு நாள் நிச்சயம் வருத்தப்பட போற!” என்று சொல்ல,பட்டுக்குறேன்என்பது போல இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு,எங்க அம்மா தான் எனக்காக ஆஜர் ஆவாங்க, இட்ஸ் பைனல்!!” என்றான் இறுகிய தோரணையில், இளகாத குரலில் அர்ஜுன்.

இதற்கு மேல் அங்கே நின்று அம்மாமகன் கூத்தைப் பார்க்க விருப்பமில்லாதவராக,பீலீவ் மீ, இதுக்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் என்கிட்ட வந்து கெஞ்சுவ!” என்று எச்சரித்து விட்டு, அங்கிருந்து சித்ராவுடன் வெளியேறி இருந்தார் அருணாச்சலம்.

ஸ்டேஷனை விட்டு வெளியேறியதும், அர்ஜுனின் விஷயம் கேள்விப்பட்டு அங்கே கூடி இருந்த மீடியா ட்கள் அருணாச்சலத்தைச் சுற்றிக் கொண்டு கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்க ஆரம்பித்தனர்

என்ன தான் மகனுடன் சண்டை போட்டு வந்து இருந்தாலும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ள விரும்பாத என்பதை விட, அப்படிச் செய்தால் தன் கெளரவம் சரிந்து விடும் என்ற எண்ணத்தில்,இது ஒரு பொய் வழக்கு.. யாரோ என் மகன் மீது வீண் பழி சுமத்தி, என் கௌரவத்தைச் சீர்குலைக்க செய்யப்பட்ட சதிஎன்று கூச்சலிட்டு விட்டு, பாதுகாவலர்கள் உதவியுடன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, தன் காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்.

தந்தையின் பேச்சிலும், செயலிலும் இன்னும் ஆத்திரம் அடங்காது நின்று இருந்த மகனை முதலில் ஆசுவாசப்படுத்த எண்ணி, அவனைக் கைப் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்த வசுந்தரா, அவனுக்குத் தண்ணீர் கொடுக்கும்படி அங்கிருந்த காவலாளியிடம் சொன்னார்.

அவரின் சொல்படி கொண்டு வந்து கொடுக்கப்பட்ட தண்ணீரை மறுக்காது வாங்கி அருந்தி, தன்னைத்தானே சகஜ நிலைக்குக் கொண்டு வந்த அர்ஜுனின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, அவனுக்கு எதிராக சேரில் அமர்ந்து,என்ன நடந்தது அர்ஜுன்?” என்று கேட்டார் வசுந்தரா.

அவர் கேள்வி என்னவோ ஒரு சாதாரணக் கேள்வி தான்! ஆனால் அதற்கு மகனின் முகத்தில் தோன்றிய பாவங்களைக் கண்டு சிறிது நேரம் அவனையே ஆழ்ந்து பார்த்தவர், அவனின் கைகளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து,டெல் மீ வாட் ஹாப்பன்ட்?” என்று வினவினார்.

இந்த முறை தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்த அர்ஜுன்,சத்திமா எனக்கே ஏன் இப்படி நடந்ததுன்னு தெரியலை மாம்என்றான், சிறு குழந்தை போன்ற கலங்கிய பாவத்துடன்.

அதில்,தெரியலைன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்? அந்தப் பொண்ணு கேசுக்கும் உனக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்றியா? இல்லை அதை நான் தான் தெரியாம செஞ்சுட்டேன்னு சொல்றியா?” என்று சற்று முன் இருந்த இளகல் மாறி இமயமலையாக வெடித்துக் கேட்டார் வசுந்தரா.

என்ன தான் அர்ஜுன் தன் மகனாகவே இருந்தாலும், அவன் குற்றம் சாற்றப்பட்டு இருப்பதும், நீதி கேட்டு இருப்பதும் ஒரு பெண்ணின் மரணத்திற்காக! அதை மனதில் வைத்தே அவ்வாறு கேட்டார் வசுந்தரா.

தாயின் குரல் மாற்றத்தில் இருந்தே அவரின் எண்ணம் படித்தவன், தலையை நிமிர்த்தாது, தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவரிடம்  ஒன்று விடாமல் சொல்லி விட்டு, இரு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

மகனின் வாக்குமூலத்தைக் கேட்ட வசுந்தராவினுள்ளோ ஒரு புயலே அடிக்க ஆரம்பித்து இருந்தது.

அதன் சீற்றத்தில்,அர்ஜுன்!” என்றவரின் அதட்டலில், உள்ளுக்குள் ஏறிய தவிப்புடன் அவரை நிமிர்ந்து பார்த்தவனை ஓங்கி ஒரு அறை விட்டார் வசுந்தரா.

கன்னம் ரி கலங்கிப் பார்க்கும் மகனைக் கொஞ்சமும் இளகாத பார்வையில் எரித்த வசுந்தரா,சத்தியமா இதை உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை!” என்று கடுமையாகக் கண்டித்ததில், “மாம்! அது வந்து..” என்று தாயைச் சமாளிக்க அர்ஜுன் முயன்ற நேரம்,பேசாதே!”  என்று ஒரு கையை உயர்த்தி ஆணையிட்டார். அதில் மேற்கொண்டு வாயைத் திறக்க முடியாது, திராணியற்றவனாக, அடங்கி ஒடுங்கி அமைதியாகிப் போனான் அர்ஜுன்.

அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த காவலாளி ஒருவர்,மேம்! பார்வையாளர் நேரம் முடிஞ்சிடுச்சுஎன்று சொல்லவும், கண்களை மூடித் திறந்து, தன்னைத்தானே ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து எழுந்து நின்ற வசுந்தரா, அங்கிருந்து திரும்பியும் பார்க்காது கிளம்பினார்.

தாயின் பாராமுக வெளியேற்றத்தில் இன்னமும் உடைந்து போய் உள்ளுக்குள் கதற ஆரம்பித்தான் அர்ஜுன். அந்த நொடி, கண்கள் மூடி அந்த இறந்து போன பெண்ணை நினைத்தும், தன்னை நினைத்தும் அதிகம் சிந்தித்துத் தனக்குள் சிதற ஆரம்பித்தான்.

வெளியில் அர்ஜுன்அருணாச்சலம் பற்றி அறிந்து இருந்த பத்திரிக்கையாளர்களுக்கு, அர்ஜுன்வசுந்தரா பற்றி அதிகம் தெரியாத போதும், ஹைகோர்ட்டையே தன் வாத திறமையால் கலங்கடிக்கும் லாயர் வசுந்தராவைத் தெரியும் தானே??

அதன்பொருட்டு அவரைக் கண்டவர்களுக்கு, ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று சொல்லவா வேண்டும்?? “அர்ஜுனுக்காக நீங்க தான் ஆஜராகப் போகிறீர்களா மேடம்??? ஒரு குற்றவாளியை வெளியே கொண்டு வர போறீங்களா மேடம்??? நீங்களும் ஒரு பெண் தானே? இன்னொரு பெண்ணுக்கு எதிராக எப்படி மேடம் உங்களால் அர்ஜுனுக்கு ஆதரவாக ஆஜர் ஆக முடியுது??? அப்போ உங்களோட நியாயங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்குமா மேடம்??” என்று வாய்க்கு வந்ததைக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒன்றுமே சொல்லாது, அருணுடன் சேர்ந்து காரை நோக்கிச் சென்று கொண்டு இருந்த வசுந்தரா நின்று,இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்?” என்று கேட்க,

உங்களுடைய நியாயம் இவ்ளோ தானா?” என்று மீண்டும் தன் கேள்வியைக் கேட்ட அந்த நிருபரை கூரிய பார்வை பார்த்த வசுந்தரா,நியாம்ன்றது  எல்லாருக்கும் பொது சார்.. அது எப்போது இருந்து எனக்கு மட்டும் சொந்தமானது??? கேட்கிற கேள்வியைக் கொஞ்சமாவது யோசிச்சு கேளுங்க!” என்று அதிரடி காட்ட, அதில் கேள்வி கேட்டவன் வாயடைத்துப் போனான்.

தென், யாரோ கேட்டீங்கள் குற்றவாளியை வெளியே கொண்டு வர போறீங்களான்னு??” என்று கூட்டத்தைப் பார்த்து வசுந்தரா கேட்டு விட்டு, பின் அவராகவே அதற்கும் பதில் அளிக்க ஆரம்பித்தார்.

பார் யுவர் கைண்ட் கிளாரிபிகேஷன்.. அர்ஜுன் இஸ் நாட் கான்விக்ட், ஹி இஸ் ஜஸ்ட் சஸ்பெக்ட்!”  என்றவரின் வார்த்தைகளில் கண்டனம் பலமாகத் தெறித்தது.

அப்போ அந்தப் பெண்ணோட கொலைக்கும் அர்ஜுனுக்கும் சம்பந்தமில்லைன்னா, அவர் இப்போ இங்கே இருக்க வேண்டிய அவசியமில்லையே மேடம்?” என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைத்து ஒரு பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு, அவரை ஒரு மென்புன்னகையுடன் எதிர்கொண்ட வசுந்தரா,குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்ன்னா, அப்புறம் உங்களுக்கும் எங்களுக்கும் இங்கே வேலையே இருக்காது தானே மேடம்??” என்று எதிர் கேள்வி கேட்டதில், அந்தப் பெண் பதில் சொல்ல முடியாது திருதிருத்துப் போனதில், மற்றவர்கள் அசந்து போய் அவரையே பார்த்து இருந்தனர்.

அதே நேரம், வந்ததில் இருந்து தன் வார்த்தை ஜாலத்தில் தங்களையே இப்படி ஆட்டம் காண வைக்கும் இவர், இந்த கேசை எப்படிக் கொண்டு போகிறார் என்பதை அறிய வேண்டுமென்ற எண்ணம், அப்பொழுதே அங்கே கூடி இருந்த கூட்டத்தினரின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.

ஆனாலும் விடாது,அர்ஜுன் இந்தக் கொலையைச் செய்திருக்க அதிக வாய்ப்பு இருக்குன்னு சொல்லுறாங்களே மேடம்? அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றவரின் கேள்விக்கு,

வாய்ப்புக்கும் தீர்ப்புக்கும் அதிக வித்தியாசம் இருக்கு சார், வெயிட் அண்ட் வாட்ச்!” என்று தீர்க்கம் நிறைந்த குரலில் சொல்லி விட்டு, அங்கிருந்து அருணுடன் கிளம்பிச் சென்றார் வசுந்தரா.

காரில் பின்பக்க சீட்டில் சாய்வாக அமர்ந்து சென்று கொண்டு இருந்த வசுந்தராவினுள், பலவித சிந்தனைகள் தீயாக மேலெழும்பி அவரைச் சுட்டதில், கண் மூடி பின்பக்கமாகத் தலை சாய்த்து, சில நிமிடங்கள் அதை அணைக்க தனக்குள்ளேயே போராடிக் கொண்டு இருந்தார் அவர்.

அதை காரின் பக்கவாட்டு மிரரில் கண்ட அருணும், சூழ்நிலை புரிந்து அந்நேரம் அவரிடம் ஒன்றும் கேட்காது அமைதியாக காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.

மகனின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணமோ? என்று எண்ணும் போதே, வசுந்தராவின் கடந்த காலங்கள் எல்லாம் அனுமதியே இன்றி அவரின் மனக்கண்ணில் படமாக விரைய ஆரம்பித்தது.

*********

பத்தொன்பது வயதில் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் அருணாச்சலத்தைத் திருமணம் செய்து கொண்டார் வசுந்தரா.

தன்னில் சரிபாதியான தன் கணவன் தன்னுடைய படிப்புக்கும், ஆசைகளுக்கும் தூண்டுகோலாக இருப்பார் என்று எண்ணியிருந்தவருக்கு, பேரிடியாக,நீ படிச்சு பட்டம் வாங்கி சம்பாதித்துச் சாப்பிடும் அளவுக்கு இங்கே யாரும் வக்கில்லாது போகலை. அதனால என்னையும் குடும்பத்தையும் கவனிக்குற வேலையை மட்டும் பாரு!” என்ற கணவனின் ஆணாதிக்கத்தில் ஆடிப் போனார் வசுந்தரா.

நாட்கள் செல்ல செல்ல, தன்னை, தன்னுடைய கனவைப் புரிந்து கொண்டு, தான் மேற்கொண்டு படிக்க கணவர் ஒத்துக் கொள்வார் என்று தினம் தினம் பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்த வசுந்தராவுக்குக் கிடைத்தது என்னவோ, கணவனின் அடிமை சாசனங்களும், ஏமாற்றங்களும் தான்!

பணம் சூழ்ந்த கண்ணாடி மாளிகையில் ஜடமாக வாழ்வதை அறவே வெறுத்தார் வசுந்தரா.

அதை அவர் கணவனிடம் எதிர்ப்பாகக் காட்ட முயற்சித்த நேரம் தான், அவரின் மணிவயிற்றில் அர்ஜுன் ஜனித்து இருந்தான்.

அதன்பின்னான நாட்களில் அருணாச்சலம்வசுந்தரா இடையிலான சண்டைகளும், வாக்குவாதங்களும் அதிகம் குறைந்து, அர்ஜுன் பிறந்து அவனுக்கு மூன்று வயது வரை, எதைப் பற்றிய எண்ணங்களுமில்லாது அவனுடனே தன்னுடைய முழு நேரத்தையும் செலவழித்தார் வசுந்தரா.

அதன்பின் அவன் பள்ளி செல்லும் பருவம் வருவதற்குள்ளேயே, தம்பதியினர்கிடையான விரிசல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பூதாகரமாக மாறியது.

ஒருநிலைக்கு மேல் கணவனின் அடக்குமுறை தாங்காது வீறு கொண்ட வசுந்தரா, அவரிடம் விவாகரத்து கேட்டார்.

அதில் கௌரவ பைத்தியம் பிடித்த அருணாச்சலம், மனைவியை மட்டுமில்லாது அவருடைய குடும்பத்தையே ஒரு பாடு படுத்தி எடுத்து விட்டார்.

அதன்பலனாக தொழிலில் பெரும் நஷ்டமடைந்த வசுந்தராவின் தந்தையும், தாயும்மாப்பிள்ளையுடன் ஒத்து வாழ்!என்று மகளுக்கு அறிவுறுத்தியதில், அந்நேரம் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானர் வசுந்தரா.

தன்னை நீங்கிச் சென்றால் நீ ஒரு வெற்று காகிதம்!’ என்று எல்லா திசையில் இருந்தும் மனைவிக்குப் பாடம் புகட்டிக் கொண்டு இருந்த கணவனின் அடக்குமுறையை எல்லாம் முறியடித்து, ஒரு மழைநாள் இரவில், அவருக்கான விடியலைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் வசுந்தரா.

அதன்பின் மகனைத் தன்னிடம் வைத்துக் கொள்ள போராடியவரை, தன் பணபலத்தால் ஓரங்கட்டி, அடக்கி ஒடுக்கி ஒதுக்கி வைத்தார் அருணாச்சலம்.

அன்றைய மகனின் பிரிவு கொடுத்த வலியில் வெறி கொண்டு, படித்து வேலை செய்து, தன்னை வெற்று காகிதம் என்று சொன்னவர் முன்னே, கோர்ட்டில் தன் வாக்குவாதத்தால் புதிய வரலாறு படைக்க ஆரம்பித்தார் வசுந்தரா.

அவர் வளர்ச்சியை பலரின் வாயிலாக அருணாச்சலம் கேட்க நேரும் பொழுது எல்லாம், அவருக்குச் சொல்ல முடியாத ஒரு எரிச்சல் உண்டான அதே நேரம், ஒரு கேள்வியும் எழும். அது  ‘இன்னும் எப்படி அர்ஜுனை என்னிடம் விட்டு வைத்து இருக்கிறாள் அவள்??’ என்பது தான்!

ஆம்! உலகையே தன் வாத திறமையால் ஜெயிக்க முடிந்த வசுந்தராவால், தன் மகனைத் தன்னிடம் கொண்டு வர முடியாதா என்ன? அப்படியிருந்தும் அவள் அதைச் செய்யாது இருப்பது தான், அருணாச்சலத்துக்கு அன்று முதல் இன்று வரை பெரும் தலைவலி கொடுக்கும் விஷயமாக இருந்தது.

ஆனால் அவர் அறியாது என்னவென்றால், அதற்குக் காரணம், அவர் அல்ல அர்ஜுன் என்பது தான்!

அருணாச்சலத்திற்கு எதிராக தனக்கென ஒரு அந்தஸ்த்தையும், அதிகாரத்தையும் வசுந்தரா அடைந்ததுமே, அவரை எதிர்த்து மகனைத் தன்னுடன் வைத்துக் கொள்ளும் முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்ட நேரம், அப்பொழுதே அர்ஜுன் மிகத் தீர்மானமாகச் சொல்லி விட்டான், “நோ நீட் மாம்என்று!

அந்த வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் அர்த்தம் என்னவென்று வசுந்தராவே இன்று வரை அறியார் என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை!

அதன்பின் மகனின் விருப்பமே தன் விருப்பமென்று வாழ ஆரம்பித்தவர், அவனை அவனின் தந்தையோடவே வாழ விட்டு விட்டார்.

பருவ வயது அடையவுமே, தந்தையுடன் இருந்தாலும் அடிக்கடி தாயைச் சந்தித்துக் கொண்டு தான் இருந்தான் அர்ஜுன்.

அது தெரிந்து அருணாச்சலம் அவனைக் கண்டிக்க முயலவுமே, தெளிவாகவே,மத்தவங்களைப் போல என்னை அடக்க ஒருபோதும் நினைக்காதீங்க டாட்! அப்புறம் விளைவுகள் ரொம்ப விபரீதமாக இருக்கும்!” என்று நேரடியாகவே தந்தையை மிரட்டி இருந்தான் அர்ஜுன்.

என்னடா ஆகும்??” என்று எகிற முடியாத நிலை அருணாச்சலத்துக்கு. ஏனென்றால் படித்து முடித்து என்றைக்கு கம்பெனிக்குள் அர்ஜுன் நுழைந்தானோ, அன்றில் இருந்து இன்று வரை, அவனின் சிந்தனையும் செயல்களும் ஏஜே க்ரூப்ஸ் ஆப் கம்பெனியை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றது மட்டுமில்லாது, கம்பெனியில் அவனின் ஷேர் விகிதத்தையும் அதிகரிக்கும்படி செய்து இருந்தது.

அதாவது இன்று அர்ஜுன் அந்த கம்பெனியை விட்டு விட்டு வெளியேறினாலோ, இல்லை வேறு ஏதாவது மூடிவு எடுத்தாலோ, அது அருணாச்சலத்தின் சாம்ராஜியத்தில் ஒரு மிகப் பெரிய சறுக்கலை உருவாக்கும் என்பதனாலேயே, அவனிடம் அதற்குப் பின் தன்னுடைய அதிகாரத்தை அதிகம் காட்டாது இருந்தார் அவர்.

ஒருவேளை  சித்ராவின்  மகன் அர்ஜுன் அளவுக்குத் திறமையாக இருந்து இருந்தால், அருணாச்சலம் இந்தளவுக்குத் தன் மூத்த மகனிடம் பணிந்து போகாமல் இருந்து இருப்பாரோ என்னவோ??

ஆனால் அவன் தான் மூத்தவன் அளவுக்கு கம்பெனியில் பொறுப்பாக இல்லையே? அதனாலேயே அர்ஜுனையே தன்னுடைய கௌரவ வாரிசாக அனைவரிடமும் பெருமை பேசிக் கொண்டு இருந்தார் அவர்.

அந்தப் பெருமைகளும், மூத்தவனுடனான ஒப்பிடல்களும் தான் விஷ்வாவை அர்ஜுனை வெறுக்க வைத்தது மட்டுமில்லாது, வெளியே சொல்ல முடியாத வஞ்சத்தையும் அவனுள் விதைத்ததை அவர் அறியார்.

அந்த விதை விருட்சமாகி, அர்ஜுனையே அழிக்கும் முடிவை இளையவனை ஒரு நாள் எடுக்க வைக்கும் என்று தெரிந்து இருந்தால், அருணாச்சலம் அவ்வாறு விஷ்வாவை அர்ஜுன் முன் மட்டம் தட்டி இருக்க மாட்டாரோ என்னவோ?!!

வசுந்தரா பிரிந்து சென்ற சில வருடங்களில் அவரின் மீது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவதூறுகளைச் சுமத்தி விட்டு,எனக்கு அவள் வேண்டாம்!என்று முடிவெடுத்து வெட்டி விட்டதாக, உற்றார் உறவினர்கள் மட்டுமில்லாது தாலி கட்டிய புது மனைவியிடம் கூடச் சொல்லி வைத்து இருந்தார் அருணாச்சலம்.

அது மட்டுமா? சித்ராவுடன் கல்யாணமான முதல் நாளில் இருந்தே, அவரின் அந்தஸ்து குறையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இரண்டாம் மனைவியைத் தன்னுடைய அடிமையாகவே மாற்றி இருந்தார் அருணாச்சலம்.

பிள்ளைப்பூச்சி குணம் கொண்ட சித்ராவும், புருஷனே கதி என்று அன்று முதல் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

அருணாச்சலத்தின் வாழ்க்கை மாற்றங்கள் அனைத்தும் அறிந்து இருந்தும் கூட, அவர் இருக்கும் பக்கம் கூட வாழப் பிடிக்காது, படிக்கச் சென்ற டெல்லியிலேயே தன் மீதி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் வசுந்தரா.

எந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு வசுந்தரா விலகிப் போனாரோ, அதே ஊருக்கு, இன்று தன் மகனுக்காகத் திரும்பி வந்து இருக்கும் தன் வாழ்க்கையின் பழைய பக்கங்களை அவர் நினைத்துப் பார்த்து முடித்த நேரம், அவரின் கார் அந்த நுங்கம்பாக்கம் பங்களாவினுள் நுழைந்து இருந்தது.

அந்த வீடு வசுந்தராவின் தாய்தந்தை அவருக்காக விட்டுச் சென்ற ஒரே சொத்து.

மனைவி மீதான கோபத்தை அவருடைய பெற்றோரின் மீது அருணாச்சலம் காட்டியதால், அவர்களிடம் மிஞ்சியது இதுவாக மட்டுமே இருந்தது. அதையும் அவர்களின் மறைவுக்கு முன்பே, தன் மகளின் மீது எழுதி அவளிடம் ஒப்படைக்க அவர்கள் முயன்ற நேரம், அதை ஒரேயடியாக மறுத்து விட்டார் வசுந்தரா.

அதற்குக் காரணம் பெற்றவர்களின் மீது இருந்த ஒரு தீரா கோபம்! சரியான ஆளைத் தனக்குத் தேர்ந்தெடுக்காததை விட, அவன் தன்னைக் கொடுமை படுத்துகிறான் என்று மன்றாடியும்,அவனுடன் அனுசரித்து வாழ்!என்று சொன்னவர்களிடம் உறவாடவோ, அடைக்கலமாகவோ அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் அருணாச்சலத்தை விட்டுப் பிரிந்து சென்றவர், தன் பெற்றோரிடம் செல்லாது தனித்தே போராடினார்.

மகளுக்குத் தாங்கள் செய்தது பிழையே என்று உணர்ந்தவர்களும், அவளை மேலும் மேலும் வற்புறுத்தாது, இறக்கும் தருவாயில் தங்களுடைய பேரனின் பெயரில் அதை எழுதி வைத்தனர்.

அர்ஜுன் பிறந்த நேரம், அவனுடன் பல மகிழ்வான பொழுதுகளை அந்த வீட்டில் வசுந்தரா கழித்து இருக்கிறார். அதனாலேயே அந்த வீடு எப்பொழுதும் வசுந்தராவுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல் தான்!

காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றவருக்கு, சுவர் எங்கிலும் அர்ஜுன் மற்றும் தான் இருக்கும் படங்களே அதிகம் ஆக்கிரமித்து இருப்பதைக் கண்டு கண்கள் னித்தது.

அதே நேரம், தன்னுடைய பெற்றோர்கள், அவர்களின் கடைசி காலங்களை எப்படிக் கழித்து இருக்கிறார்கள் என்ற எண்ணமும் சேர்ந்து வசுந்தராவின் மனதை கனக்கச் செய்ததில், ஹாலில் இருந்த சோபாவிலேயே அப்படியே சோர்வாக அமர்ந்து விட்டார் வசுந்தரா.

என்னாச்சு மேம்?” என்று பின்னாடியே வந்து பதறிக் கேட்ட அருணிடம்நத்திங்என்று கூறியவர்,எனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவை. நான் போய் படுக்கிறேன்என்று சொல்லி விட்டுக் கிளம்பியவர், கீழ்த்தளத்தில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்து கொண்டார்.

அங்கே கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிளின் மீது இருந்த அர்ஜுனின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவருக்கு நெஞ்சம் அடைத்தது.

சிறிது ஓய்வுக்குப் பின், எழுந்து முகம் கழுவி ஹால் வந்த வசுந்தரா, அங்கு அருண் சோபாவில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டபடியே அவனுக்கு எதிரே வந்து அமரவும், அவரை நிமிர்ந்து பார்த்தவன்,அர்ஜுன் என்ன சொன்னார் மேடம்?” என்று நேரடியாகக் கேட்டான்.

சில நிமிட மௌனத்திற்குப் பின்,ம்ம்ம்.. சொன்னான், நான் தான் அந்தப் பெண்ணை கொலை செய்தேன்னுஎன்று கண்கள் வெறிக்க சொன்னவரின் வார்த்தைகளைக் கேட்டு,வாட்?” என்று அதிர்ந்து எழுந்து நின்று விட்டான் அருண்.

கண்டிப்பாக மேடமுடைய மகன் அப்படிச் செய்து இருக்க மாட்டார்என்று அதுவரை அர்ஜுன் மீது அதிகம் நம்பிக்கை கொண்டு இருந்த அருண், சத்தியமாக இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை போல!

எப்பொழுதும் நியாயத்திற்காக மட்டுமே போராடும் வசுந்தரா, தன் சொந்த மகனைக் குற்றவாளி கூண்டில் இருந்து காப்பாற்றுவாரா?? இல்லை அவரே அவனைத் தூக்கிலிடச் செய்யப் போகிறாரா என்பதை யார் அறிவாரோ??!!

Advertisement