Advertisement

என்ன சொல்ற ஹர்ஷா? தெரிஞ்சு யாரையும் கொலை பண்ணலையா? அப்புறம் எதுக்குடா பண்ணின? எதுக்குடா பண்ணித் தொலைச்ச?” என்ற தாயின் மனக்குமுறல் தாங்காது, தன்னை அத்தனை நாள் அரித்துக் கொண்டு இருந்த உண்மையை அங்கிருந்த அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தான் ஹர்ஷா.

அன்னைக்கு நைட் நான் பார்ட்டி முடிச்சு வீட்டுக்கு ஸ்பீடா வந்துட்டு இருக்கும் போது தான், என் ப்ரென்ட் எனக்கு கால் பண்ணினான்.

இரவு நேரம் ஹைவேல அதிக ஆள் நடமாட்டமில்லை என்பதால், அவன்கிட்ட பேசிட்டே நான் வண்டியை ஓட்டிட்டு இருந்த நேரம் தான், திடீர்ன்னு யாரோ குறுக்க வருவதைக் கடைசி நிமிடத்தில் பார்த்தேன். அவுங்களை இடிக்கக் கூடாதுன்னு என் புத்தி சொல்லி, என் கை காரை கன்ட்ரோலுக்கு கொண்டு வருவதற்கு முன், அந்த ஆள் தூக்கி எறியப்பட்டு இருந்தான்.

எனக்கு பயங்கர ஷாக்! அந்த நிமிடம் என்ன நடந்துச்சுன்னே என்னால நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அப்படி இருந்தும், ஆக்சிடென்ட் ஆனவர் என்ன ஆனாரோ என்ற எண்ணத்தில், என்னை நானே ஒருநிலைக்கு கொண்டு வந்து, காரை விட்டு இறங்கிப் போய் அவரை செக் பண்ணுனா அவர் ஸ்பாட் அவுட்.

எனக்கு அடுத்து என்ன செய்றதுன்னே தெரியலை. விடிஞ்சா என்  தங்கச்சி நிச்சயதார்த்தம்!! அப்பாவோட மரியாதை?? என்னோட ஸ்டேட்ஸ்? இப்படி என் தலைக்குள் பலவித போராட்டம்!! அது எல்லாம் பத்தாதுன்னு, நான் அடித்து இருந்த ட்ரிங்க்ஸ் வேற என்னை அரக்கனா மாற்றி அங்கிருந்து தப்பிச்சு ஓட சொல்லுச்சு. அதைத் தவிர வேற எந்த வழியும் அந்நேரத்துக்கு எனக்குச் சாதகமா கிடைக்காததால் உடனே அதையே செய்ய நினைத்தேன்என்று அதுவரை யாரின் முகத்தையும் பார்க்காது, தரையை வெறித்தபடி சொல்லிக் கொண்டு இருந்தவனில் ஒரு விரக்தி புன்னகை வெளிப்பட்டது.

ஆனா என் விதி, இன்னுமொரு கோர விளையாட்டையும் என் கூட ஆட காத்திருந்தது, எனக்கு அப்போ தெரியாம போச்சு!” என்று அனைவரையும் நிமிர்ந்து பார்த்துப் பரிதாபமாகச் சொன்னான் ஹர்ஷா.

அதைக் கண்ட யாரும் அவனை அணைத்து ஆறுதல் சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு குற்றவுணர்வுடன் கலந்த விரக்தி அவனின் முகத்தில் தாண்டவமாடியது. ஆனால் யாரும் அவனுக்கு அதைச் செய்யவில்லை.

அதில் அவன் என்ன உணர்ந்தானோ, அடிபட்ட உணர்வுடன், மீண்டும் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தவன், இறுதியில்,ஒரு தப்பில் இருந்து தப்பிக்க நினைச்ச நான், அதிலிருந்து மீள நினைச்சு நினைச்சே, அடுத்தடுத்து பல தப்புக்களைச் செஞ்சு, இப்போ உங்க முன்னாடி மன்னிக்க முடியாத குற்றவாளியாக நிற்கிறேன்என்று தன்னைத்தானே வெறுத்துக் கோபத்தில் அலறியவனின் அலறல் தாங்காது, அவனை வாரி அணைத்துக் கொண்டு,போதும் ஹர்ஷா!” என்று கதறினார் சுபத்ரா.

அவரைத் தன்னிடமிருந்து விடுவித்தவன், கொடூர விழிகள் பளபளக்க, “யூ நோ மாம்.. எதையுமே முதல் முறை செய்யும் போது தான் சின்னப் பயம், பதட்டம் எல்லாம் இருக்கும். அதையே அடுத்தடுத்து நாம செய்யும் போது, நமக்கு அது மாதிரி எதுவுமே இருக்காது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. அதனால தான் இவ்வளவையும் செஞ்சேனோ??” என்று கண்களின் பளபளப்பு மங்க பாவமாகக் கேட்டவனைக் கண்ட சுபத்ராவின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது, ‘தன் மகனுக்கா இந்த நிலை?’ என்று!

ஹர்ஷா! உனக்கு என்னதான்டா ஆச்சு? ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?” என்றவரை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்தவன்,எப்படி மாம்?” என்று கேட்டான்.

என்னவென்று அவர் சொல்வார்?? மகனிடம் அதில் அவர் மௌனமாகிப் போக, ஹர்ஷாவே பேசினான்.சைக்கோ மாதிரியா மாம்??” என்றான்.

ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாத அந்தப் பேதையோ, மகனின் நிலை காண முடியாது, இன்னும் கத்தி அழ ஆரம்பித்தார்.

அவரின் கதறல் தாங்காதவன்,அழாதீங்க மாம்! ப்ளீஸ் அழாதீங்க! நான் செய்த தப்புக்கு நீங்க ஏன் அழறீங்க?” என்று தாயைச் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கும் பொழுதே, மகனின் துயர் தாங்காது அவனை நெருங்க முயன்ற ராகவன், தாய்மகனின் பாசப் போராட்டத்தில் நெஞ்சம் உடைய அப்படியே சோபாவில் தொப்பென சாய்ந்தார்.

அவரின் செய்கையில், “டாட்!” என்று பதறிக் கொண்டு அவரை நெருங்கிப் பிடித்துத் தாங்கி அமர வைத்த ஹர்ஷா, அவரிடம் மன்னிப்பு கேட்க கூட அருகதை இல்லாதவனாக, கூனிக் குறுகிப் போய் தலை குனிந்தான்.

தன் காலடியில் இருந்த மகனின் தலை தடவிய ராகவன்,நீ பிறந்ததில் இருந்து இதுவரை ஒரு தடவை கூட எதற்கும் நான் உன்னை நினைச்சுக் கஷ்டப்பட்டதே இல்லை ஹர்ஷா. அந்த அளவுக்கு எல்லா இடத்திலும் உன்னால் எனக்குப் பெருமையே கிடைத்தது.

அப்படிப்பட்ட என் மகனா இப்படி??” என்று அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது திணறியவரின் நிலை அறிந்தவனாக ஹர்ஷாவே பேசினான்.நீங்க யாரும் என்னால் இப்படி ஒரு நிலைக்கு வந்திட கூடாதுன்னு தான் நான் இவ்வளவும் செய்தேன் டாட். ஆனா.. ஆனா..” என்று சொல்லும் போதே மூர்க்கனாகிப் போன ஹர்ஷா எழுந்து வசுந்தராவை நோக்கி,இன்று என்னையே என் குடும்பத்து முன்னாடி தலை குனிய வச்சுட்டீங்களே??” என்று ஆத்திரம் தாங்காது எகிறிக் கொண்டு முன்னேறியவனைத் தடுத்து, தாயைத் தனக்குப் பின் இழுத்துக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எதிர்த்து நின்றான் அர்ஜுன்.

அண்ணனின் செயலைக் கண்டு அதுவரை பேசாது இருந்த யாழினி, அவனைப் பின்னால் பிடித்து இழுத்து, ஒங்கி அறைந்தாள் அவன் கன்னத்தில்.

தங்கையின் செயலை நம்பாது பார்த்து இருந்தவனை நெருங்கிய சுபத்ரா,யாழினி! என்ன காரியம் செஞ்ச? அவன் உன் அண்ணன்! அதை மறந்திடாத..” என்று மகளைக் கண்டிக்க, “நான் அதை மறக்கலை மாம். அவன் தான் நான் அவன் தங்கச்சின்றதை மறந்துட்டான்என்றாள் விழிகளில் நீர் வழிந்தோட.

அவளின் .பேச்சு புரியாத சுபத்ரா,என்னடி சொல்ற?” என்று கேட்க, அவரை விடுத்து ஹர்ஷாவை நிமிர்ந்து பார்த்தவள்,உனக்கு நல்லா தெரியும், நான் அர்ஜுனை எந்த அளவுக்கு விரும்புறேன்னு. அப்படியிருந்தும் அவரை இந்த கேஸில் மாட்டி விட்டு, என் சந்தோஷத்தை எல்லாம் குழி தோண்டி புதைச்சுட்டு, அதுக்கு மேலேயே நல்லவன் மாதிரி சிம்மாசனமிட்டு அமர உனக்கு வெட்கமா இல்லை? இதுல அவர் எனக்குத் தகுதி இல்லதாவர்னு அட்வைஸ் வேற!” என்று எள்ளலாகக் கேட்டவள்,

மேலும்,இது தான் ஒரு நல்ல அண்ணன் அவன் தங்கச்சிக்கு செய்கிற நல்ல காரியமா??” என்று கூர் அருவாளாக குத்திக் கிழித்ததில் உருக்குலைந்து போனான் ஹர்ஷா. இருந்தும் தொண்டை அடைக்க,ரியல்லி, நீ அர்ஜுனை இந்தளவுக்கு லவ் பண்ணுறேன்னு எனக்கு ஆரம்பத்தில் தெரியாது யாழினிஎன்றான் ஹர்ஷா.

அதை ற்றுக் கொள்ளாதவளோ,தெரிந்து இருந்தா மட்டும் அர்ஜுனைக் காப்பாத்தி இருப்பியா? இல்லை வேறு யாரையும் உன்னைக் காப்பாத்திக்க இதில் பலிகடா ஆக்கி இருக்க மாட்டியா??” என்று பொட்டில் அறைந்தார் போன்ற கேள்வியில் கூனிக் குறுகிப் போனான் ஹர்ஷா.

நீ சொல்றது உண்மை தான்! அன்னைக்கு நான் இருந்த நிலைமைக்கு நீ சொன்ன எதையும் நான் செய்து இருப்பேன் தான்!” என்று ஒளிவு மறைவு இன்றித் தங்கையிடம் உண்மையை ஒத்துக் கொண்டவன்,ஆனா, சத்தியமா எப்பவும் உன் வாழ்க்கையைக் கெடுக்க நான் நினைச்சது இல்லடா.

சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அர்ஜுனுக்கு எதிரா மாறியதை எனக்குச் சாதகமா நான் எடுத்துக்கிட்டேன்.

அவன் ஜெயிலுக்குப் போய்ட்டா கொஞ்ச நாளில் உன் மனசு மாறிடும்னு நினைச்சேன். அதனால தான் அவன் வேண்டாம்ன்னு உன்கிட்ட நான் சொன்னேனே தவிர, உன் மேல எனக்குப் பாசமில்லாமல் எல்லாம் இல்லை. பீலீவ் மீ!” என்று கெஞ்சாத குறையாகக் கெஞ்சியவனின் பாசத்தை ஒருபோதும் யாழினியால் சந்தேகப் படவே முடியாது.

ஏனென்றால் ஹர்ஷா எந்தளவுக்கு ஒரு நல்ல மகனோ, அதை விடப் பல மடங்கு ஒரு நல்ல அண்ணன்! அவனின் எல்லையற்ற பாசத்தில் தானே, இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையை அவனுடன் யாழினி  வாழ்ந்து இருக்கிறாள்!

அண்ணனின் அந்தப் பாசம் கொடுத்த வலி தாங்காது,தப்பு கணக்கு போட்டுட்டியே ஹர்ஷாதப்பு பண்ணிட்டீயே ஹர்ஷா?? ஏன்டா இப்படிச் செஞ்ச??” என்று அவனின் நெஞ்சை அடித்துச் சட்டையைப் பிடித்துக் கேட்டவளின் கண்களிலோ, கண்ணீர் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டிக் கொண்டு இருந்தது.

தங்கையின் கதறலுக்குப் பின் இருக்கும் அவளின் நேசத்தில் நெஞ்சம் நனைந்து போனவன், அவளை அணைத்துக் கொண்டு உள்ளம் உடைந்து கலங்கினான்.

அவன் செய்த பாவத்தின் சம்பளம் தான், அவனின் இந்த வலியும், வேதனையுமென்று நாம் எண்ணினாலும், சற்று உள்வாங்கிப் பார்த்தால் நமக்குப் புரியும், அதில் அந்த விதியின் சதியும் கொஞ்சமிருக்கிறது என்று!!

ஆனால் அதற்காக எல்லாம் அவனைக் குற்றவாளி இல்லையென்று சொல்லி விட முடியாதே??

அதன்பொருட்டே அவனைக் கைது செய்ய வசுந்தரா போலிசை அங்கு வரவழைத்து இருந்தார்.

போலீஸின் வருகை கண்டு ராகவன் அமைதியாக இருந்த போதும், சுபத்ரா மகனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு,ப்ளீஸ்! என் மகனை விட்டுடுங்க!” என்று அவர்களிடம் போராடினார்.

தாயின் கதறல் கேட்டும், அவரைச் சமாதானப்படுத்த முயலாதவனாக, அவரைத் தனக்கு முன் நிறுத்தி,ரொம்ப ஓடிட்டேன் மா.. இதுக்கு மேலயும் ஓட எனக்குச் சுத்தமா தெம்பு இல்லை மாம்!!” என்று மனம் தாளாது சொன்னான் ஹர்ஷா.

மகனைக் கண்டு மறுகிய சுபத்ரா,இல்லை இல்லை.. நான் உன்னை எங்கேயும் போக விட மாட்டேன்!” என்று அவனை இறுக்கிக் கொண்டு மறுத்த போது, பிடிவாதமாக அவரைப் பிரித்தெடுத்துக் கொண்டு, அங்கிருந்த யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காது போலீஸுடன் சென்றான் ஹர்ஷா.

அவர்களுடனே மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

வீடு வந்ததும் வராதுமாக தன் தாயை நிறுத்திய அர்ஜுன்,  “உங்களுக்கு முன்பே ஹர்ஷா தான் துளசியைக் கொலை செய்தான்னு தெரியுமா மாம்?” என்று  கேட்டான்.

இல்லை!” என்றவரின் பதிலில் அதிர்ந்தவன்,

அப்புறம் எப்படி அவன் தான் செய்தான்னு அங்கே சொன்னீங்க?” என்று புரியாமல் கேட்டான் அர்ஜுன்.

எல்லாமே ஒரு கணக்குத்தான் அர்ஜுன்என்றார் வசுந்தரா.

என்ன சொல்றீங்க மாம்?”

கொஞ்சம் யோசிச்சு பாரு அர்ஜுன்! துளசி வீட்டை விட்டு போன நேரத்திற்கும், உடனே அவள் திரும்பி வந்த நேரத்திற்கும் இடையில் அங்கே நடந்த ஒரே சம்பவம், இந்த ஆக்சிடென்ட் மட்டும் தான்!

அதுமட்டுமில்லை, அந்த ஆக்சிடென்ட் நடந்த நேரத்தையும், துளசி கொலை செய்யப்பட்ட நேரத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, புதுசா ஒருத்தன் அதற்குள் வந்து அவளைக் கொன்று இருக்க காரணமும், காரியமும் எதுவுமே இல்லை. சோ அவன் தான் இதைச் செய்து இருக்கணும்ன்னு நான் கெஸ் பண்ணேன். பட் அதை நேரடியா நாம கேட்டா ஹர்ஷா ஒத்துக்க மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும்!

அதனால் தான் என்னுடை தியரியை வச்சு அவனை மடக்க நினைச்சேன். அவனும் சரியா அதில் வந்து மாட்டிக்கிட்டான்

என்ன தியரி மாம்?”

குற்றத்தில் பலவகை இருக்கலாம் அர்ஜுன். ஆனா குற்றவாளிகளில் சில வகைகள் மட்டுமே! அதில் ரொம்பவும் டேஞ்சர் ஆனவுங்க ரெண்டே பேருதான்.

ஒன்னு குற்றத்தை நிதானமா செய்றவன், இன்னொன்னு எந்த இடத்திலும் நிதானமிழக்காம பேசுபவன்.. இவுங்க ரெண்டு பேர் செய்கிற குற்றத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலையும் கண்டுபிடிக்கவும் முடியாது! அவர்களை உண்மையை ஒத்துக்க வைக்கவும் முடியாது!

இந்த கேஸில் ஆரம்பத்தில் இருந்தே இதைச் செய்தவன் ஒரு நிதானமானவன்னு எனக்குத் தெளிவா புரிஞ்சு போச்சு. அதே போல, எப்போ ஹர்ஷா தான் அதைச் செய்து இருப்பான்னு தெரிஞ்சுச்சோ, அப்போவே அவன் அவ்வளவு சீக்கிரம் வாய் திறக்க மாட்டான்னும் எனக்குத் தெரியும்.

சோ எனக்கு இருந்த ஒரே ஆயுதம், அவனின் குடும்பம் மூலமா அவனை எமோஷனலா வீக்காக்கி, உண்மையைச் சொல்ல வைப்பது.

சோ அதனால் தான் அவன் வீட்டுக்கே போய், அவன் குடும்பத்துக்கு முன்னாடியே அவன் மீது குற்றம் சுமத்தினேன். நான் எதிர்பார்த்தபடியே அவனும் என் வலையில் வசமா வந்து சிக்கிட்டான், தட்ஸ் ஆல்!” என்றவரை எப்பவும் போல வாயடைத்துப் போய் வியந்து பார்த்தான் அர்ஜுன்.

அவனின் தோள் தட்டி சுய உணர்வுக்கு கொண்டு வந்தவரோ,ஹர்ஷா செய்த தப்புக்கும், அவன் பாமிலிக்கும், முக்கியமா யாழினிக்கும் எந்த சம்பந்தமுமில்லை அர்ஜுன். சோ அடுத்து என்ன செய்யணும்ன்னு உனக்குத் தெரியும் தானே??” என்று அர்த்தம் பொதிந்த வார்த்தையுடன் மகனிடம் கேட்க,

எஸ் மாம்!” என்று உறுதி குரலில் சொன்னான், தாய் மனமறிந்த பிள்ளையாக அர்ஜுன்.

ஹர்ஷாவின் கைதில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தில், துளசி கேசின் இறுதி தீர்ப்பை கேட்க மொத்த மீடியாவும் அன்று கோர்ட் வளாகத்தில் தான் குழுமி இருந்தது.

நீதிபதி, “வாதத்தைத் தொடங்கலாம்என்று சொல்லவுமே, குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டான் ஹர்ஷா.

யுவர் ஆனர்! துளசி கொலைவழக்கில் மட்டுமில்லாது, இன்னொரு ஆக்சிடென்ட் வழக்கிலும் இவர் தான்  குற்றவாளி என்பதற்கான னைத்து ஆதாரங்களை ஏற்கனவே நான் உங்களுக்குச் சமர்ப்பித்து இருக்கிறேன்என்ற வசுந்தரா, ஹர்ஷாவை நெருங்கிச் சென்று,இந்த இரண்டு கொலையையும் நீங்க ஏன் செய்தீங்க?? எப்படிச் செய்தீங்க??” என்று கேட்டார்.

பார்வையாளர்கள் இருப்பிடத்தில் இருந்த தன் குடும்பத்தைப் பார்த்து மானசீகமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹர்ஷா, அதன்பின் நீதிபதியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

அன்னைக்கு நைட் நான் ட்ரின்ங் அண்ட் ட்ரைவ் பண்ணிட்டு, போன்ல பேசிட்டு வரும்போது தான் அந்த ஆக்சிடென்ட் நடந்தது.

நான் இடிச்ச ஆள் உயிரோட இருக்கானா? செத்துட்டானான்னு பார்க்க நான் காரை விட்டு இறங்கின நேரம் தான், துளசி என்னைப் பார்த்துட்டா. அவளுக்கு என்னை நல்லா தெரியும்ன்னு எனக்குத் தெரியும். அதுவே என்னை அந்நேரம் கொஞ்சம் அதிகமா படபடக்க வச்சது.

நான் இடிச்சு தள்ளிய ஆள் ரோட்டுக்கு வெளிப்புறமாகப் புதருக்குள் விழுந்து கிடந்ததால், அதை மறைக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லாது போனதால், நான் உடனே காரை ஆப் பண்ணிட்டு, துளசியை சரிக்கட்ட நினைத்து அவளை நோக்கிச் சென்றேன்.

அவளை நான் நெருங்குறதுக்கு முன்னாடியே துளசி அங்கிருந்து திரும்பி ஓட ஆரம்பிச்சுட்டா. அவ ஒரு கெஸ்ட் ஹவுஸ்குள்ள போறதைப் பார்த்த நானும் அவள் பின்னாடியே அங்கே உள்ளே போனேன். அங்கே அவள் அர்ஜுனை எழுப்பிக் கொண்டு இருப்பதைப் பார்த்து நிஜமாவே நான் ஷாக் ஆகிட்டேன்.

என்னுடைய நல்ல நேரமோ என்னவோ, அப்போ அர்ஜுன் முழு போதையில் இருந்ததால், அவள் எழுப்புனதுக்கு கொஞ்சமும் எழுந்துக்கவே இல்லை. அப்போதான் எனக்குப் போன உயிரே திரும்பி வந்தது போல இருந்தது.

ஆரம்பத்தில் நான் அந்தப் பொண்ணுகிட்ட,நான் சொல்றதைக் கேளு! கத்தாத! பயப்படாத! நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன்னு பொறுமையா பேசிப் பார்த்தேன்.

ஆனா அவ அதைக் கேட்கலை. பயத்துல நடுக்கத்துடனே,நீங்க யாழினி அம்மாவோட அண்ணன் தானே?”ன்னு கேட்டா.

அதைக் கேட்கவுமே எனக்குள் ஒரு சாத்தான் புகுந்தது போல நான் மாறிட்டேன். அதில் கொஞ்சம் சத்தமாவே,ஏய்! சொன்னா புரியாதா? வாயை மூடு முதலில் நீ!” என்று அவளை மிரட்ட ஆரம்பிச்சதில் இன்னும் பயந்து போனவ, அங்கிருந்து வெளியே ஓட முயற்சி செய்தா.

அதில் எனக்கு அவளின் மீதான எரிச்சல் கோபமானதில், கொஞ்சம் மூர்க்கமாகவே,இவகிட்ட எல்லாம் பொறுமையா பேசினா வேலைக்கு ஆகாது!என்று நினைத்து, நான் அவளைப் பிடித்து இழுத்துச் சுவற்றில் இடித்து நிறுத்தி, அவளிடம்,

ஏய்! உனக்கு எல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா? நான் சொல்றதைக் கேளுன்னு சொல்றேன்ல?என்றேன்.

ஆனா அந்தப் பொண்ணு என் பேச்சைக் கேட்கவே இல்லை. அதற்கு மாறாக என்கிட்டே இருந்து தப்பி ஓட பார்த்தா. அப்பவும் நான் முடிந்த அளவு அவளைத் தடுக்கத்தான் முயற்சி செய்தேனே தவிர தாக்கலை.

பட் ஒரு ஸ்டேஜில் அவள் என் கையைக் கடிச்சுட்டு ஓடிப் போய் அர்ஜுனைத் தட்டி எழுப்ப பார்க்கவும் தான், எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அதில் வெறியாகி போன நான், அவள் தலைமுடியோடு பிடிச்சு இழுத்துட்டு வந்து சுவற்றில் சாய்த்து, அவள் முனங்க கூட முடியாதபடி அவள் வாயை அழுத்தி பொத்தி,என்னடி? உனக்கெல்லாம் பொறுமையா சொன்னா விளங்காதா?” என்று மூர்க்கமாக மிரட்டினேன்.

அதில் மிரண்டு நடுங்கியவளோ, என்கிட்ட இருந்து திமிறி தப்பிக்க அவள் பலம் கொண்ட மட்டும் போராடினாள்.

நானும் அவளை விடாது கோபத்தின் உச்சியில் நின்று, அவளை இன்னும் இறுக்கி எச்சரிக்க ஆரம்பித்ததில், சில நிமிடங்களில் அவளின் போராட்டம் முடிவுக்கு வந்தது போல, எந்தவித அசைவுமின்றி அவள் மயங்கித் தலை தொங்கி விட்டாள்.

அப்படித்தான் நான் நினைச்சேன்.

அவளை உடனே அங்கிருந்து நான் அகற்ற முயன்ற நேரம் தான், வெளியே ஒரு கார் வருவதைப் பார்த்து அரண்டு போன நான், அவளை அப்படியே அங்கேயே அர்ஜுனுக்குப் பக்கத்தில் போட்டு விட்டு, உள்ளே சென்று மறைந்து கொண்டேன்.

அங்கே ரீட்டாவுடன் வந்த அருணாச்சலம் அங்கிள் துளசியை சோதித்துப் பார்த்து விட்டு அவள் செத்துட்டாள்ன்னு சொல்லும் போது தான், எனக்கே அவள் வாயோடு சேர்த்து மூக்கையும் அழுத்தி அவளைக் கொன்று விட்டோம் என்பதே புரிந்தது.

செத்தவளுக்காக வருத்தப்படுவதா?? இல்லை இன்னொரு கொலையைச் செய்து விட்ட என்னை நினைத்தே வெறுப்பதா?? என்ற நிலையில் நான் தள்ளாடிக் கொண்டு இருக்கும் போது தான், ரீட்டாவின் பேச்சைக் கேட்டு அங்கிள் துளசியின் பாடியை அங்கிருந்து அப்புறப்படுத்துவதை  நான் பார்த்தேன்.

நடப்பது எல்லாம் எனக்குச் சாதகமாவே நடப்பது போன்று தோன்றியதால், உடனே நான் அங்கு வந்த தடம் தெரியாது இருக்க, கெஸ்ட் ஹௌஸ் சுத்தி பொருத்தப்பட்டு இருந்த அனைத்து கேமராவின் டேட்டாவையும் அழித்து விட்டு, மீண்டும் என் கார் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.

ஆக்சிடென்ட் ஆனதில் உடைந்து இருந்த முன்பகுதியுடன்  சிட்டிக்குள் செல்வது என்பது ரிஸ்க் மட்டுமில்லாது, நான் இந்தக் கொலைகளில் மாட்டவும் அது துருப்புச் சீட்டாக மாறி விடும் என்பதால் காரை சரி செய்ய முடிவு செய்தேன்.

அப்ப தான் பக்கத்தில் தேடி அலைந்த போது தான், ரோட்டை விட்டு சற்று உள்ளே தள்ளி இருந்த அந்த மெக்கானிக் ஷாப்பைப் பார்த்தேன். அங்கே இருந்தவனிடம் அதிக பணத்தைக் கொடுத்து அவன் வாயை அடைத்து விட்டு, காரை ரிப்பேர் பண்ணச் சொல்லி விட்டு, நான் கால் டாக்சி பிடிச்சு எதுவும் நடக்காதது போல வீட்டுக்குச் சென்று விட்டேன்.

ஆனாலும் என்னால நிம்மதியா இருக்க முடியவில்லை. எங்கே, எப்போ என்னை யார் சந்தேகப்பட்டு பிடிக்க வருவார்களோன்ற பயத்துடன் தான் என் தங்கை நிச்சயதார்த்தத்துக்குத் தயாராகி அருணாச்சலம் வீட்டுக்குப் போனேன்ஆனா அங்கே நானே எதிர்பார்க்காத விதமா, நான் செய்த கொலைக்காக அர்ஜுன் கைது செய்யப்பட்டான். எல்லா ஆதாரங்களும் அவனுக்கு எதிரா இருந்ததைக் கண்டு நானே ஒரு நிமிடம் ஷாக்காகித்தான் போனேன். இருந்தும் அவனுக்காக என்னால் பரிதாபப்பட தோன்றியதே தவிர, அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று துளியும் தோன்றவில்லை.

அந்த ஆக்சிடென்ட் கேஸ் எப்படியும் சாட்சிகள் இல்லாததால் சீக்கிரம் முடிந்துடும் என்று எனக்குத் தெரியும். ஆனா துளசி கேஸ் அப்படியில்லை என்று எனக்குப் புரிந்த போது தான், அந்தப் பழியை நிரந்தரமா அர்ஜுன் மீது சுமத்த நான் முடிவெடுத்தேன்.

அதற்காக கம்பெனியில் அவனைக் கீழே இறக்கி, அவுங்க அப்பாகிட்ட இருந்து அவனுக்கு எந்தவித உதவியும் கிடைக்க விடாம பண்ண நினைத்தேன். ஆனா அது சரியா வொர்க்கவுட் ஆகாததால், அடுத்து அர்ஜுனின் பிஸினெஸ் எதிரியான மிஸ்டர்.பட்டேலை உசுபேத்தி விட்டு, மிஸ்டர்.நீலகண்டனை கைக்குள் போட்டுக்கச் சொன்னேன்.

அவரும் என் பெயர் எங்கும் அடிபடாதவாறு மிஸ்டர்.நீலகண்டனை வைத்து அர்ஜுனை உள்ளே தள்ள முயன்றார்.

ஆனால் அந்த நேரம் தான், எங்கள் திட்டத்தை எல்லாம் தகர்க்கும் விதமாக, அர்ஜுனுக்கு ஆதரவா, அவுங்க அம்மாவே இந்த கேசில் ஆஜார் ஆனாங்க.

அப்ப கூட நான் ஒன்னும் பயந்துடலை.எல்லாமே நமக்குச் சாதகமா இருக்கும் போது அவுங்களால மட்டும் என்ன செய்து விட முடியும்னு நான் நினைச்சேன். ஆனா ஆஜர் ஆன ஒரே வாரத்தில் இந்த கேஸையே தலைகீழா புரட்டிப் போட்டது மட்டுமில்லாம அர்ஜுனையும் வெளியே கொண்டு வந்துட்டாங்க.

அது எனக்குப் பெரிய அடியாகவும், பயத்தையும் சேர்த்துக் கொடுத்தது. அதனால் நீலகண்டன் மூலாம இந்த கேஸை அர்ஜுனுக்கு எதிரா மாற்ற எவ்வளவோ நான் முயன்றேன்.

ஆனா அது எதுவுமே வசுந்தரா மேடத்துக்கிட்ட எடுபடலை என்பதை விட, அவுங்க அதையெல்லாம் தன் புத்திசாலித்தனத்தால் முறியடிச்சு, கடைசியில் என்னையும் கண்டுபுடிச்சுட்டாங்கஎன்றவனின் பார்வை இந்த முறை ஒரு மெச்சுதலுடன் வசுந்தராவைத் தழுவியது. அதைச் சிறு புன்னகையுடன் உள்வாங்கியவரும்,தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” என்று சொல்லி தன்னிடம் வந்து அமர்ந்தார்.

குற்றவாளியே தன் குற்றத்தைக் ஒப்புக் கொண்டதால், இறுதி தீரப்பு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பது புரிந்த நீதிபதியும், அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

அர்ஜுன் குற்றமற்றவர் என்பது தெள்ளத் தெளிவாக நிருபிக்கப்பட்டதால், அவரை இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்கிறேன்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஹர்ஷா இந்தக் குற்றங்களைச் செய்ததாகச் சொன்னாலும், அவர் செய்த குற்றம் குற்றமே என்பதால், அவருக்கு இந்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளிக்கிறது.

இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்தே மிகச் சாமர்த்தியமாக வாதாடித் தன் கடமையை செவ்வென செய்த வழக்கறிஞர் வசுந்தராவை இந்த நீதிமன்றம் வெகுவாகப் பாராட்டுகிறதுஎன்று தன் உரையை முடித்துக் கொண்ட நீதிபதி அங்கிருந்து எழுந்து சென்றார்.

அவர் தீர்ப்புக்குப் பின் ஜெயிலுக்கு அழைத்துச் செல்ல ஹர்ஷாவை கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வந்த நேரம், வசுந்தரா செய்த செயலில் அங்கிருந்த அனைவருமே உறைந்து போயினர்.

Advertisement