Advertisement

ஏஜே பேலஸ்..

பெயருக்கு ஏற்றார் போலவே சென்னையின் மையப் பகுதியில் பிரம்மாண்டத்தைத் தன் தோற்றத்திலும், ஆடம்பரத்தைத் தன் அலங்காரத்திலும் காட்டிக் கொண்டு, தன்னைக் கடந்து செல்வோரை எல்லாம் தன் பளிங்கு கண்ணாடி பளபளப்பில் வசீகரித்துக் கொண்டு, வானைத் தொடும் கம்பீரத்துடன் காட்சி அளித்துக் கொண்டு இருந்தது, அந்த நவீன அரண்மனை தோற்ற மாளிகை.

ஏழு ஏக்கர் பரப்பளவில், நடுநாயகமாக வீற்றிருந்த அந்த மாளிகை போன்ற பங்களாவுக்குச் சொந்தக்காரர் பெரும் தொழிலதிபரான அருணாச்சலம் முதலியார்.

சொர்க்கத்தையே விலை என்ன என்று கேட்கும் அளவுக்குச் செல்வரான அருணாச்சலத்தின் மூத்த மகனுக்கு நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

அதன்பொருட்டு தன் மாளிகையை மட்டுமில்லாது, அதைச் சுற்றியுள்ள கார்டனையும் சேர்த்து, வண்ண வண்ணப் பூக்களாலும், வாசனை திரவியங்களாலும், இரவிலும் வீண்மீன்களாக ஜொலிக்கும் விளக்குகளாலும், விலைமதிப்பு மிக்க அலங்கார பொருட்களாலும், கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்க ஆணையிட்டு இருந்தார் அருணாச்சலம்.

நாளை தன் மாளிகையின் அழகையும், ஆடம்பரத்தையும் பார்க்கும் யாரும்  ‘சொர்க்கமென்பது இப்படித்தான் இருக்குமா?என்று சொல்லி வியக்கும் அளவுக்கு வேலை இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்த சில கோடிகளுக்கு ஏற்றார் போல, கடந்த இரண்டு நாட்களாக ராத்திரியும் பகலுமாக அந்த மாளிகையில் வேலை செய்து கொண்டு இருந்தனர், அந்த உலகப் புகழ்பெற்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்கள்.

எங்கும், எதிலும் அந்தஸ்து மற்றும் கெளரவம் பார்க்கும் மனிதரான அருணாச்சலம், தன் வீட்டுக்கு வரப் போகும் மருமகளையும் மட்டும் அந்த அளவீடு இல்லாது தேர்ந்தெடுத்து விடுவாரா என்ன?? என்பது போல, தன்னுடைய தொழில்முறை பார்ட்னரும், தனக்கு இணையான செல்வாக்கு மிகுந்த நண்பருமான ராகவனின் ஒரே மகளான யாழினியைத்தான் தன் மகனுக்குப் பேசி முடித்து இருந்தார் அவர்.

ஏஜே பேலசே நாளைய கொண்டாட்டத்துக்கு ஆரவாரமாகத் தயாராகிக் கொண்டு  இருந்தது  என்றால், தனக்கும் அதற்கும் சம்பந்தமே  இல்லை  என்பது போல, அதன் மூன்றாவது தளத்தில் இருந்த தன் அலுவலக அறையில் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு  இருந்தான், ஏஜே க்ரூப்பின் முதல் வாரிசு மற்றும் நாளைய விழாவின் நாயகனுமான அர்ஜுன்.

அர்ஜுன் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்.. ஆணழகன் என்று சொல்லுமளவுக்குத் தோற்றமும், திறமைசாலி என்று சொல்லுமளவுக்குப் பல பிசினஸ் வெற்றிகளையும் தன்னகத்தே கொண்டவன்.

யாருக்கும், எதற்கும், எப்பொழுதும் வளைந்து கொடுக்கவும், அப்படி வாழும் பழக்கமும் துளியும் இல்லாத முரட்டு குணம் உடையவன். முக்கியமாக அவனின் தந்தையுடன் அவ்வளவு சீக்கிரம் ஒத்துப் போக மாட்டான்.

இதனால் தந்தைக்கும் மகனுக்குமிடையே ஏகப்பட்ட உலகப் போர்கள் வீட்டிலும் சரி, ஆபீசிலும் சரி அடிக்கடி அரங்கேறி இருக்கிறது.

தன் தந்தை சொல்லி அர்ஜுன் தன் வாழ்வில் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டு இருக்கிறான் என்றால், கண்டிப்பாக யாழினியுடனான அவனின் இந்த நிச்சயதார்த்தமாக மட்டுமே இருக்கும்!

அருணாச்சலம் யாழினியைத் தனக்கு மருமகளாக தேர்ந்தெடுத்ததற்கு எப்படி ஒரு காரணம் இருந்ததோ, அதே போல், அர்ஜுனுக்கும் அவளை மனைவியாக்கிக் கொள்ள ஒரு வலுவான காரணம் இருந்தது. அதன் பொருட்டே அவன் இந்த திருமணத்திற்கு ஓகே சொல்லி இருந்தான்.

ஆண்களின் எண்ணங்களும், திட்டங்களும் எவ்வாறாக இருந்தாலும், யாழினியைப் பொறுத்தவரை அவள் அர்ஜுடனான இந்தப் பந்தத்திற்குத் தலையாட்டியதற்குக் காரணம், அர்ஜுன் மட்டுமே என்பதை அவளைத் தவிர வேறு யாரும் அறியார்! அவ்வளவு ஏன்? அர்ஜுனே அறியான்!

அவனைப் பொறுத்தவரை இது ஒரு ஒப்பந்தம், அவ்வளவே!

ஆனால் யாழினிக்கு அப்படியில்லை! அவளுக்குச் சிறுவயதில் இருந்தே அர்ஜுனைத் தெரியுமென்றாலும், அவனைப் பார்த்து இருக்கிறாளே தவிர  பழகி இருக்கிறாளா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்லுவாள்.

ஆம்! அந்தளவுக்கு அர்ஜுன் யாருடனும் ஒப்புக்காகக் கூடச் சிரித்துப் பேசிப் பழகும் ரகமில்லை.

அவன் ஒருவருடன் நின்று நிதானித்துப் பேசுகிறான் என்றால், ஒன்று அவனுக்கு அவர்களிடமிருந்து ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டி இருக்கும். இல்லையென்றால் அவர்கள் அவனின் நன்மதிப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

அது இரண்டிலுமே யாழினி இல்லாததால், அவனுடன் பேசவோ, பழகவோ இதுவரை அவளுக்கு வாய்ப்பு கிட்டவே இல்லை என்பதை விட, சிறுவயதில் எத்தனையோ முறை அவனிடம் பேசவும், பழகவும், விளையாடவும் யாழினி முயன்ற போது எல்லாம், அம் நாட் இன்ட்ரெஸ்டட்’  என்று சொல்லித் தள்ளி வைத்தவன்.இன்று அவளையே திருமணம் செய்து கொள்ள அம் ன்ட்ரெஸ்டட்என்றதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே யாழினிக்குச் சத்தியமாகத் தெரியவில்லை.

இருந்தும், தனக்கு எப்பொழுதும் புரியாத புதிராக இருப்பவனுடனான தன் வாழ்க்கை குறித்த ஆவலில், அவனுடனான திருமணம் குறித்து தந்தை கேட்கவும், உடனே தனக்கும் சம்மதம் என்றாள்.

ஏதோ ஒன்று அர்ஜுனை நோக்கி அவளைக் காந்தமாக இழுக்கிறது என்று புரிந்தும் புரியாமலும் அவனை நேசிக்க ஆரம்பித்திருந்தவள், தன்னவனை முழுதாக அறிய எண்ணி அவனை நெருங்கிச் சென்றாலும், இப்பொழுது வரை அவளிடம் நெருக்கமின்றியே நடந்து கொண்டு இருக்கிறான் அர்ஜுன்.

போன வாரம் கூட இருவருக்குமான நிச்சயதார்த்த உடை செலக்ட் செய்ய விரும்பி அவனை அழைத்திருந்தவளை, அவன்  நடத்திய விதம் பற்றி எண்ணிப் பார்த்தவளுக்கு, வேற எந்தப் பொண்ணாக இருந்தாலும் இந்நேரம் இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி இருப்பாள் என்றே தோன்றியது.

அப்படி இருந்தும் தான் ஏன் அவ்வாறு செய்யவில்லை?’ என்று ஆராய்ந்தவளுக்கு மனக்கண்ணில் தோன்றியது, அர்ஜுனின் முகம் மட்டுமே! அதில் அவளின் இதழ்கள் லேசாக வளைந்து நெளிந்தது புன்னகையில்.

புன்னகை முகமாகத் தன்னறையில் அமர்ந்து இருக்கும் மகளை நெருங்கிய சுபத்ரா, அவளின் முகத்தையே சில நிமிடங்கள் கண்டுகொண்டு இருந்தார்.

தாயின் வரவில் தன்னிலை தெளிந்து அவரை நிமிர்ந்து பார்த்தவள்,வாட் ஹாப்பென்ட் மாம்? ஏன் அப்படிப் பார்க்குறீங்க?” என்று கேட்க,

மகளையே ஆழ்ந்து பார்த்த சுபத்ரா,ஆர் யூ சூர் இந்த நிச்சயம் உனக்கு தேவை தானா??” என்று போன வாரம் அர்ஜுன் மகளிடம் நடந்து கொண்ட முறையைக் கேள்விப்பட்டதில் இருந்து, இப்படித்தான் அவர் பல முறை மகளிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

ஒரு அலுத்துக் கொண்ட முகபாவத்தை தாய்க்குப் பதிலாகக் கொடுத்தவள், அவரின் கண்களோடு தன் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து,எஸ் மாம்! அம் டேம் சூர்!” என்று வார்த்தைகளில் உறுதியைக் கூட்டிச் சொன்னாள் யாழினி.

அதைக் கேட்டு ஏதோ மறுப்பாகச் சொல்ல வந்த தாயிடம், ஒரு கையைத் தூக்கி அவரின் பேச்சுக்குத் தடை போட்டவள்,

மாம் ப்ளீஸ்! நான் ஏற்கனவே பல தடவை சொல்லிட்டேன். எனக்கு அர்ஜுனைக் கல்யாணம் பண்ணிக்கப் பிடித்து இருக்கிறது. இதுல எனக்கு எந்தவித செகண்ட தாட்டும் இல்லை!” என்றவளின் தீர்மானத்தைக் கேட்ட பின், அதற்கு மேல் அவளிடம் சொல்ல என்ன இருக்கும் என்று எண்ணியவரும், ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு,பார்லரில் இருந்து ஆட்கள் வந்து இருக்காங்க, கீழே வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. வா!” என்று தான் வந்த விஷயத்தை மகளிடம் தெரிவித்தார்.

ஒஹ்ஹ! வந்துட்டாங்களா?” என்றபடி எழுந்து நின்றவள், தனக்கு முன்னே சிந்தனையுடன் நடக்கும் தாயின் முகத்தைக் கண்டு, அவரின் தன் மீதான அக்கறை அறிந்து, அவரைப் பின்பக்கமாக அணைத்துப் பிடித்து நிறுத்தியவள்,

டிரஸ்ட் மீ மா! அர்ஜூனும் நானும் சந்தோஷமா வாழ்வோம், நீங்களும் டாடியும் வாழ்வது போல!!” என்று சந்தோஷக் குரலில் சொல்லும் மகளின் முகத்தைத் திரும்பிக் கண்டவருக்கு, அவளின் விழிகளில் மின்னிய கனவை கலைக்க மனம் வராது, மகளின் மலர் முகத்தை தன் இரு கைகளில் தாங்கியவர்,நீங்க ரெண்டு பேரும் அப்படி வாழணும்ன்றது தான் என்னுடைய வேண்டுதலும்!” என்றவர் மகளின் நெற்றியில் தன் இதழ்களை ஆசீர்வாதகமாகப் பதித்தார்.

தாயின் ஸ்பரிசத்தில் உற்சாகம் கொண்டவள், அதன் பின் அவருடன் பேசியபடியே கீழ்த்தளத்திற்குத் தனக்காக காத்திருப்பவர்களைக் காணச் சென்றாள்.

**********

தன்னறை கதவு மெதுவாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு,எஸ் கமின்!” என்றான் அர்ஜுன்.

கையில் பூங்கொத்துகளுடன் வரிசை கட்டி வந்து நின்றவர்களை ஏறிட்டவன்,வாட் டூ யூ வான்ட்?” என்றான் அதிகாரமாக.

அந்தக் குரலின் இறுக்கத்தில்,இந்த ரூமை டெக்கர் பண்ணனும் சார்என்றவர்களிடம் நோ நீட்என்றான் கட்டு தரித்தார் போல  அர்ஜுன்.

ஆனால் அதை ஏற்காது,இல்ல, சார் தான்..” என்று அவனின் தந்தையை முன்னிருத்தி வந்தவர்கள் பேசி முடிக்கும் முன்,கெட் அவுட்!!” என்று தான் அமர்ந்து இருந்த இருக்கையின் அருகில் இருந்த ப்ளவர் வாசைத் தூக்கி, தனக்கு எதிரே இருந்த தொலைக்காட்சியை நோக்கி அர்ஜுன் எறிந்ததில், அது சல்லி சல்லியாக நொறுங்கிப் போனது.

அதைக் கண்டவர்களோ, மறுகணம் அவ்வறை விட்டுத் தலை தெறிக்க மூச்சை பிடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

அர்ஜுனின் பொறுமையின் அளவே அவ்வளவு தான்!

ஒருமுறை தான் அவன் வாய் பேசும்; மறுமுறை அவனின் கை தான் பேசும் யாரிடமும்.

அவனின் அந்தக் குணம் அறிந்ததால் தான், அவனுக்குக் கீழ் வேலை செய்யும் யாரும் அவனிடம் மறுமுறை என்பதையே வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இது பலநேரம் அவனின் எதிரிகளை நடுக்கம் கொள்ள செய்தாலும், சிலமுறை அவனுக்கு நெருக்கமானவர்களைக் கூட அது காயமடைய செய்து விடுகிறது, இருந்தாலும் அந்த மூர்க்க குணத்தை அர்ஜூனால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.

நடந்து முடிந்த நிகழ்வில் டென்ஷனான அர்ஜுன், அதுவரை பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்து விட்டு, இண்டர்காம் மூலம் கேரேஜ்க்கு கால் செய்து வெளியே செல்வதாக அறிவித்தான்.

அவன் அலைபேசியை வைத்த மறுநொடி அவனுடைய வெள்ளை ஜாக்குவார் அவனது மாளிகையின் முன் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது.

வேக வேகமாக வெளியேறும் அர்ஜுனைக் கீழ்த்தள அலங்கார வேலைகளை பார்வையிட்டுக் கொண்டு இருந்த சித்ரா காணவும், திரும்பித் தனக்கு எதிரே இருந்த மூத்த வேலையாளான மரகதத்தை அர்த்தத்துடன் நோக்கினார் அவர்.

அவரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவரும், அர்ஜுன் அறைக்குத் தன்னுடன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு, சுத்தம் செய்ய புறப்பட்டு விட்டார்.

என்ன மாம்.. இன்னைக்கு என்ன உடைஞ்சது?” என்று கேட்டபடி தன்னருகில் வந்து அமர்ந்த விஷ்வாவைப் பார்த்த சித்ரா, “அவன் ஆபிஸ் ரூம் டிவிஎன்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அவரின் அருகில் இருந்த போன் அலறியது.

அதை எடுத்து அவர் காதுக்குக் கொடுக்கும் முன்,மாம்..” என்று ஏதோ பேச போன மகனை,ஷ்! அமைதியா இரு! உங்க அப்பா..” என்று பவ்வியமாகச் சொல்லித் தடுத்த சித்ராவின் செயல்  விஷ்வாவை லேசாகக் கோபமடைய செய்து இருந்தது.

இது என்ன அரசாட்சியா? அவருக்கு என்னமோ இவங்க அடிமை மாதிரி நடந்துக்குறாங்கஎன்று எண்ணியவனின் எண்ணத்துக்குக் கொஞ்சமும் மாறாது, மறுபுறம் கேட்ட,என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? அவன் ரூமுக்குப் போனவங்களைத் திட்டி அனுப்பினானாமே..??” என்று அதிகார தோரணையில் கத்திய அருணாச்சலத்தின் கத்தல் அலைபேசியைத் தாண்டி விஷ்வாவுக்குத் தெளிவாகக் கேட்டது.

சித்ரா சொல்ல வரும் எதையும் கேட்காது, தந்தை தன் இஷ்டத்துக்குகாச் மூச்’ என்று தாயை வறுத்தெடுப்பதில் வெறியாகிப் போனவன், தாயிடமிருந்த போனை பிடுங்கித் தன் காதில் வைத்து,அர்ஜுன்கிட்ட எகிற முடியாதுன்னு அம்மாகிட்ட எகிறிகிட்டு இருக்கீங்களா? தைரியமிருந்தா அவன்கிட்ட இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்களேன்! அவன் கொடுப்பான் உங்களுக்கான சரியான பதிலை.. அதை விட்டுட்டு அம்மாகிட்ட இப்படி எகிறுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க!” என்று சூடாகப் பேசியவனையும் விடாது, காது கிழியும்படி அருணாச்சலம் திட்ட ஆரம்பிக்கவுமே, அவரின் அழைப்பைப் பட்டென்று துண்டித்து இருந்தான் விஷ்வா.

டேய்! ஏன்டா நீயும் இப்படி அவனை மாதிரியே நடந்துக்குற?” என்று அலுத்துக் கொண்ட சித்ராவிடம்,என்ன அவனை மாதிரி? நான் ஒன்னும் அவன் மாதிரி இல்லைஎன்று கட்டன் ரைட்டாக சொன்னவன்,

மேலும், “செய்யாத தப்புக்கு நீங்க ஏன் மாம் திட்டு வாங்குறீங்க? அவர்கிட்ட தைரியமா பேசுங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவை நான் சொல்றது? கொஞ்சம் கூட என் பேச்சைக் கேட்க மாட்டீங்களா?” என்று ஆதங்கப்பட்டான் விஷ்வா.

மகனின் சுடுசொல்லுக்குப் பின் இருக்கும் தன் மீதான பாசம் புரிந்தவரும், அவனை மேலும் எரிச்சல் படுத்தாது,ரிலாக்ஸ் விஷ்வா!” என்று அந்த ஆறடி குழந்தையின் தலை கோதினார்.

அதில் எப்பொழுதும் தாயிடம் பெட்டி பாம்பாக மாறி போகிறவன், இந்த முறை அதற்கு நேர்மாறாக நெஞ்சத்தின் தகிப்பைத் தாங்காது,ஏன்மா இப்படி இருக்குறீங்க???” என்று அலுத்துக் கொண்டு கேட்டான்.

நான் இப்படி இருப்பது தான் நமக்கு நல்லது விஷ்வாஎன்றவரின் ஆழ்ந்த பேச்சு புரியாது கோபம் கொண்டவன், இன்னும் ஒரு நிமிடம் இங்கு  இருந்தாலும், தானும் அர்ஜுன் போல மாறி விடுவோம் என்று எண்ணி, தாயை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு விஷ்வா அங்கிருந்து வெளியேற போன நேரம், அவனின் கையில் இருந்த சித்ராவின் போன் மீண்டும் அலற ஆரம்பித்தது.

அழைப்பது தந்தை என்று கண்டவுடன், அங்கே சற்றுத் தள்ளி ஆளுயரத்தில் இருந்த வாஸ்து மீன் தொட்டியில் அதைப் போட்டவன், தன் அறையை நோக்கிச் சென்றான்.

மகனின் செய்கையில் அதிர்ந்து போன சித்ரா,டேய்! என்ன வேலைடா பண்ணி இருக்க?” என்று கத்த, அதைக் காதில் வாங்கியவனோ,ம்ம்ம்.. உங்களை சேவ் பண்ணி இருக்கேன் மம்மிஎன்று சொல்லியபடியே தங்கமென ஜொலித்த லிப்ட் கதவு திறக்கவும், உள்ளே சென்று திரும்பி நின்று தாய்க்கு ஒரு பறக்கும் முத்தம் கொடுத்து விட்டு, தன் தளமான நான்காவது தளத்திற்குச் சென்றான் விஷ்வா.

விஷ்வாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அப்படியே அர்ஜுனுக்கு எதிர்குணம் கொண்டவன். தன் தாயை அதிகம் நேசிப்பவன். அதே நேரம் தந்தையை மதிக்காதவன். யாருடனும் இயல்பாக பழகக் கூடியவன் என்பதால் அவனின் நட்பு வட்டம் பெரிதாக இருந்தது. அதில் யாழினியும் அடக்கம்.

யாழினி தனக்கு அண்ணியாக வரப் போகிறாள் என்ற செய்தி அறிந்ததில் இருந்தே, அவனும் எவ்வளவோ அர்ஜுன் அவளுக்கு வேண்டாம் என்று அவளிடம் மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தான்,

ஆனால் அதற்குக் கொஞ்சமும் அசைந்து கொடுக்காதவளிடம் வாதம் புரிவது வீண் என்று எண்ணியவனுள் உண்டான ஏமாற்றத்தின் தாக்கம், அவனையும் மீறி இப்படிக் கோபமாகச் சில நேரம் மற்றவர்களிடம் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

என்றும் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாத சின்ன மகன், இப்பொழுது எல்லாம் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எண்ணியபடியே சித்ரா அவன் சென்ற பாதையை பார்த்துக் கொண்டு இருந்த நேரம், அவரின் அருகில் இண்டர்காமை எடுத்துக் கொண்டு வந்து நின்றார் ஒரு வேலையாள்.

ஐயா லைன்ல இருக்காங்க அம்மாஎன்றவரின் கையில் இருந்த போனை வாங்கிப் பேசிய சித்ரா, மறுபுறம் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு,போன் தவறி கீழே விழுந்துடுச்சுங்க. அதான் அட்டென்ட் பண்ண முடியலைஎன்று சொல்லியும், சில நிமிடங்கள் நீடித்த கணவனின் அர்ச்சனை முடிந்து போனை அவர் வைத்த நேரம், ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது.

அதில் எந்தவித கோபமோ எரிச்சலோ இல்லை. ஒருவித அலுப்பு மட்டுமே இருந்தது,இது தான் தன் வாழ்க்கையா??’ என்ற விதத்தில்.

ஆனால் அதன் பதில் அவருக்குத்தான் பல காலமாகத் தெரியுமே!  அதனால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது தன்னிலை அடைந்தவர், சற்று முன் கணவர் திட்டுகளுடன் சேர்த்துக் கவனிக்கச் சொல்லியிருந்த வேலைகளை மேற்பார்வையிட வாசலை நோக்கிச்  சென்றார்.

**********

வீட்டிலிருந்து புறப்பட்டு மதிய நேரம் தன்னுடைய நீலாங்கரை பீச் ஹவுஸ் வந்த அர்ஜுன் நேராகச் சென்ற இடம், அவன் பங்களாவினுள் இருந்த ஸ்விம்மிங் பூல் தான்.

சில மணி நேர நீச்சலுக்குப் பின் மனமும், உடலும் லேசானது போன்று உணர்ந்தவன், தண்ணீர் சொட்ட சொட்ட நடந்து வீட்டுக்குத் திரும்பி ஷவரில் குளித்து, வைட் டிஷர்ட் அண்ட் சந்தன நிற ஷார்ட்ஸ் அணிந்து, கீழே வந்து டிவியை ஆன் செய்து விட்டு கிச்சன் நோக்கிச் சென்றான்.

அங்கே ஈசியாக செய்து உண்ணக் கூடிய உணவைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வந்து ஹால் சோபாவில் அமர்ந்தவன், அங்கே திரையில் ஓடிக் கொண்டு இருந்த செய்தியில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த உணவை அப்படியே நிறுத்தி விட்டு, இமைக்க மறந்து திரையையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அதன் பின் என்ன நினைத்தானோ, சற்று முன் நீந்த செல்வதற்காக கார் சாவி, போன் மற்றும் பர்சை எடுத்து வைத்து விட்டுச் சென்றவன், இப்பொழுது அது எங்கே என்று தேடினான்.

தன் போனை முதலில் தேடி எடுத்தவன் அதிலிருந்து ஒருவருக்கு அழைத்துப் பேசினான்.

சிலமணி நேர உரையாடலுக்குப் பின் போனை வைத்து இருந்தவனில் ஒருபுறம் சந்தோசம் பொங்கி வழிந்தது என்றால், மறுபுறமோ,தான் நினைத்தது நடக்குமா?” என்ற போராட்டம் எழுந்தது.

அந்தப் போராட்டத்தின் முடிவாக அன்று மாலையே அவன் நினைத்தது நடக்கவே நடக்காது!’ என்று தெரிய வந்த போது, அர்ஜுன் ருத்ரனாகவே மாறி போனவன், வீட்டையே அடித்து நொறுக்கி இருந்தான்.

அதை மட்டுமா செய்தான்???

மறுநாள் சூரியன் உதிக்க சிறிது நேரமே இருந்த நிலையில் முகம் வெளுக்க, ஏஜே பேலஸ்சிற்குத் திரும்பிய அர்ஜுனுக்கு இன்னமும் நடுக்கம் குறையவில்லை, நடந்து முடிந்து இருந்த விபரீதத்தின் வீரியத்தில்!

அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவனுக்கு, தலையே சுற்றுவது போன்று தோன்றியதில், நேராகத் தன்னறை சென்று படுத்து விட்டான்.

விடியற்காலை இண்டர்காமின் தொடர் ஒலியில் சிவப்பேறி கண்களைத் திறந்து, அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவனிடம்,சார், உங்க எங்கேஜ்மென்ட் டிரஸ் வந்து இருக்குஎன்ற தகவல் கொடுத்தான் ஒருவன்.

ஓகே, நான் வரேன்என்று போனை அதன் தாங்கியில் வைத்து விட்டு, படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, கண்களின் எரிச்சல் தாங்காது, அதைக் கசக்க கையைத் தூக்கிக் கொண்டு சென்ற நேரம், அதில் படிந்து இருந்த ரத்தக்றையைக் கண்டு அரண்டே விட்டான்.

அப்பொழுது தான் நேற்றைய இரவு சம்பவம் முழுவதும் அவனுக்கு நியாபகம் வந்து வதைக்க ஆரம்பித்தது. அடுத்து என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாது, அப்படியே பித்து பிடித்தார் போலத் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனை மீண்டும் போனில் அழைத்தார் அருணாச்சலம்.

அதை எடுக்காது அவசர அவசரமாக பாத்ரூம் நோக்கி ஓடியவன், அங்கே தன்னுடைய நேற்றைய உடையை எல்லாம் கழட்டி, ஒரு கவரில் போட்டு, அதை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு,  தன் உடலில் இருந்த ரத்தக்றைகளை எல்லாம் தேய்த்துக் குளித்துச் சுத்தம் செய்தவன், உடை மாற்றி படுக்கை அறைக்கு வந்தான். தான் படுத்து இருந்த பெட்ஷீட்டையும் வாரி சுருட்டி எடுத்து, அதைத்  தன்னுடைய வார்ட்ரோபின் அடியில் மறைத்து வைத்தான்.

பேலசே ஈவ்னிங் கொண்டாட்டதில் திளைக்க காத்திருந்த போது, அதன் நாயகன் இல்லையென்றால் எப்படி என்பதற்கிணங்க, பிடிக்குதோ பிடிக்கலையோ தன்னுடைய நெருங்கிய சொந்தங்கள் கீழே தனக்காகக் காத்திருப்பதை அறிந்து, முகத்தில் எதையும் வெளிப்படுத்தாதவனாக, அவர்களைக் காண தரை தளம் சென்றான் அர்ஜுன்.

அர்ஜுனைக் கண்டதும் அவனுடைய வயது இளவட்டங்கள் எல்லாம் அவனை அணைத்து வாழ்த்தினார்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் ஆசீர்வதித்து வார்த்தைகளில் வாழ்த்தினர்.

அனைவருக்கும் முயன்று இன்முகமாக நன்றி சொன்னவனை,வா அர்ஜுன்! டிபன் சாப்பிடலாம்என்று அழைத்தார் சித்ரா.

அவரின் அழைப்பை மறுக்க முடியாது மற்றவர்களுடன் சேர்ந்து டைனிங் ஹால் சென்றவன், தனக்குப் பரிமாறப்பட்ட உணவு என்ன என்று கூடக் கவனிக்காது, எதையோ கொஞ்சமாகச் சாப்பிட முயன்றான்.

அப்பொழுது தான் பரிமாறிக் கொண்டு இருந்த பணியாளர்களில் ஒரு பெண்ணை அழைத்த சித்ரா,உள்ளே கிச்சனில் துளசி இருந்தால் அவளையும் இங்கே வந்து பரிமாற சொல்!” என்று சொல்ல,

அதற்கு அந்தப் பணியாள்,அந்தப் பெண் இன்னும் வேலைக்கு வரவே இல்லை அம்மாஎன்று சொல்வதையும் கேட்ட அர்ஜுனுக்குத் தொண்டைக்குழி அடைத்தது, மேற்கொண்டு சாப்பிட முடியாது.

அந்த வார்த்தைகளின் வீரியத்தில் விதிர்த்துப் போய் எழுந்து நின்றவனை மற்றவர்கள்,என்ன?’ என்று பார்க்கவும்,எனக்கு ஒரு அர்ஜென்ட் வொர்க் இருக்கு. சோ அம் லீவிங், யூ கேரி ஆன்!” என்று சொல்லிச் செல்லும் அர்ஜுனையே விளங்காத பார்வை பார்த்து வைத்தார் சித்ரா.

என்னாச்சுமா? அர்ஜுன் ஏதோ டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்குஎன்று தன் காதைக் கடித்த விஷ்வாவிடம்,

தெரியலடா! நேத்து ரொம்ப லேட்டா தான் அவன் வீட்டுக்கு வந்ததா செக்யூரிட்டி சொன்னார். அவ்வளவு நேரம் வேலை செய்துட்டு வந்தவன், இன்னைக்கும் வேலைன்னு ஓடுறான்என்றவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு இருந்தவனோ,அவன் வேலைக்காக ஓடுறானோ இல்லை வேற எதுக்கு ஓடுறானோ?? யாருக்குத் தெரியும்?” என்று அர்ஜுன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தபடி சாண்ட்விச்சை உண்டபடி  சொன்னான்.

விஷ்வாவின் பேச்சு புரியாது அவனைப் பார்த்த சித்ரா,என்னடா சொல்ற?” என்று கேட்கவும், சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டு, தாயின் புறம் திரும்பிய விஷ்வா,மாம்! இப்போ அதுவா முக்கியம்? வந்தவர்களைக் கவனிங்கஎன்று அவரைத் திசை திருப்பி விட்டவன் மனதிற்குள்,இந்த தடவை நீ எப்படித் தப்பிக்குறேன்னு நானும் பார்க்கிறேன் அர்ஜுன்என்று கறுவி கொண்டான்.

இளைய மகனின் கொடூ குணம் அறியாத சித்ராவும், மூத்த மகனை மறந்து, வந்தோரைக் கவனிக்க ஆரம்பித்து இருந்தார்.

இன்னும் சில மணி நேரத்தில் தனக்கு ங்கேஜ்மென்ட். தன்னால் எப்படி அதைச் செய்து கொள்ள முடியும்?என்று தனக்குள் தவியாய்த் தவித்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்த அர்ஜுன், போனை எடுப்பதும்,இல்ல இல்லஎன்று மனது மாறி, அதில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்காமல் விடுவதும் என்று தள்ளாடிக் கொண்டு இருந்த நேரம், அவனின் மண்டையோ, நேற்றைய சம்பவத்தை நினைத்து வெடிப்பது போல இருந்தது.

அந்த நிலையில் அவனின் அறை தட்டப்பட்டு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த வேலையாள் சொன்ன செய்தியில் திடுக்கிட்டுப் போனான் அர்ஜுன்.

எந்தவித சஞ்சலத்தையும் முகத்தில் காட்டாமல் கீழ்த்தளம் வந்தவனை நெருங்கிய போலீஸ் அதிகாரி,யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட் மிஸ்டர்.அர்ஜுன்!” என்று சொல்வதைக் கேட்டவன், ஒரு வார்த்தை அவர்களிடம் எதிர்த்துப் பேசவில்லை.

அதைக் கேட்ட அருணாச்சலம் தான் அந்த இடத்தில் அதிகம் சத்தமிட்டுக் கொண்டு இருந்தார்.

என்ன பண்றீங்க இன்ஸ்பெக்டர்? நான் யாருன்னு தெரியுமா? எந்த ஆதாரத்தில் என் மகனை அரெஸ்ட் செய்ய வந்து இருக்கீங்க?” என்று எகிறியரிடம்,சார், ஆதாரமில்லாமல் இவ்ளோ தூரம் வருவோமா? உங்க வீட்ல வேலை செய்ற பெண்ணோட பிணம் கிடைச்சு இருக்கு. அந்தப் பெண் கடைசியா உங்க பையனோட கெஸ்ட் ஹௌஸ்க்குத்தான் கிளீன் பண்ணப் போய் இருக்காங்க. அங்கே போய் செக் பண்ணிப் பார்த்ததில், பொருட்கள் எல்லாம் உடைந்து தரையில் சிதறி கிடக்குது. ரத்தக்றைகள் வேற படிந்து இருக்கு.

அதன் அடிப்படையில் தான் இவரை அரெஸ்ட் செய்ய வந்து இருக்கோம். ப்ளீஸ்! கோ ஆப்பரேட் வித் அஸ்என்றவரின் வார்த்தையில் அருணாச்சலம் தலையில் இடி விழுந்ததைப் போலப் பேரதிர்ச்சிக்கு உள்ளானர்.

போலாமா மிஸ்டர்.அர்ஜுன்?” என்றவரைத் தொடர்ந்து சென்ற தன் அண்ணனையே பார்த்து நின்று இருந்த விஷ்வாவின் கண்களில் எந்தவித அதிர்வும் இல்லை. மாறாக வெற்றி பெற்ற சந்தோசம் மட்டுமே அதில் நிலைத்து இருந்தது.

சித்ராவோ நடப்பது ஒன்றும் புரியாது கணவரிடம்,ஏங்க, ஏதாவது செய்ங்கஎன்று சொல்ல,

அப்பொழுது தான் சுயஉணர்வு பெற்றவர் போல் எழுந்து நின்ற அருணாச்சலம்,போச்சு! போச்சு! என் கெளரவமே போச்சு!” என்றவரின் புலம்பலைக் கேட்ட உறவினர்களுக்கோ,அடப்பாவி! அப்போ இவ்ளோ நேரம் உன் கெளரவம் போக போதுன்னுதான் அவர்களிடம் எகிறிக்கிட்டு இருந்தியா? உன் பிள்ளைக்காக இல்லையா?’ என்ற எண்ணமே வியாபித்து இருந்தது.

அர்ஜுன் அந்தப் பிரம்மாண்ட படிக்கட்டுகளில் வாசலை நோக்கி இறங்கிய நேரம், அவனை நோக்கி மேலே ஏறி வந்து கொண்டு இருந்தாள் யாழினி.

பங்க்ஷனுக்காக அங்கே குடும்பத்தினருடன் வந்தவள், அர்ஜுன் போலீசுடன் நடந்து வருவதைக் கண்டு, அவனை நெருங்கி,என்னாச்சு?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்தவனுக்கு, அவளிடம் சொல்ல ஒரு பதிலும் இல்லை என்பதால் அமைதியாக நின்றான்.

அவனின் அந்தச் செயலில் மகளின் வாழ்க்கை குறித்த தவிப்பில்,வாட்ஸ் கோயிங் ஆன் இன்ஸ்பெக்டர்?” என்று அவரிடமே நேரடியாகக் கேட்டார் ராகவன்.

அருணாச்சலத்துக்குச் சொன்ன அதே விளக்கத்தையே ராகவனிடமும் சொல்லி விட்டு, அங்கிருந்து அர்ஜுனுடன் கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.

அர்ஜுனின் கெஸ்ட் ஹௌசில் கிடைத்த ப்ளட் சாம்பிளும், அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கிடைத்த துளசியின் சடலத்தில் கிடைத்த ப்ளட் சாம்பிளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், இரண்டிலும் இருப்பது ஒரே ப்ளட் தான் என்பது உறுதி செய்யப்படவுமே, அர்ஜுன் தான் அந்தப் பெண்ணை அடித்துக் கொன்று இருக்கிறான் என்று அவன் மீதான சந்தேக கேஸ் இப்போது மர்டர் கேஸாக மாறியது.

அதுவரை விசாரிக்க என்று அழைத்து வரப்பட்டு, அர்ஜுனை அடுத்த கட்டமாக ஜெயிலில் அடைக்க வேலைகள் அரங்கேறிக் கொண்டு இருந்த நேரம், தன் செல்வாக்கினால் தன் மகனைப் பார்க்க அனுமதி பெற்ற அருணாச்சலம், ஒரு அறையில் அவனைத் தனிமையில் சந்தித்தார்.

உன்னைத்தானடா மலை போல நம்பி இருந்தேன், எனக்குப் பின்னாடி என் கௌரவத்தையும், நம்ம பிசினஸ்சையும் பார்ப்பேன்னு.. இப்படிப் பண்ணிட்டீயேடா..??

நாளைக்கு நான் எப்படி என்னோட பார்ட்னர்ஸ் முன்னாடி தலை நிமிர்ந்து நிற்பேன்?

என்னோட குடும்ப மானமே போச்சு! மரியாதையே போச்சு!” என்று வந்ததில் இருந்து தன்னைப் பற்றியும், தன் குடும்ப ஸ்டேட்டஸ் பற்றி மட்டுமே பேசிக் கொக்கரித்துக் கொண்டு இருந்த தந்தையைக் காண காண அர்ஜுனுக்கு வெறுப்பு அதிகமாகிக் கொண்டு இருந்தது.

நான் இவ்ளோ கத்துறேன், ஏதாவது சொல்றானா பாரு?” என்று அருகில் இருந்த மனைவியைக் கடிந்த அருணாச்சலம், மீண்டும் மகனிடம் திரும்பி,ஏதாவது சொல்லேன்டா.. சொல்லித் தொலையேன்டா..” என்று சத்தமிட்ட நேரம் சினம் தலைக்கு ஏற பெற்றவன்,போயா வெளியே!” என்று கர்ஜித்தான்.

மகனிடமிருந்து அப்படி ஒரு உறுமலை எதிர்பார்க்காது உறைந்து போனவர்,இந்த நிலைக்கு வந்தும் உன்னோட திமிர் குறையலைடா. நானும், என் பணமும் இல்லைன்னா உன்னை இங்கிருந்து காப்பாத்த ஒருத்தரும் இல்லை, தெரிஞ்சுக்கோ!” என்று நேரடியாகவே மகனை மிரட்ட பார்த்தார்.

அதற்கெல்லாம் மசிபவனா அர்ஜுன்? அதில் தெனாவெட்டாக தந்தையைப் பார்த்தவன்,அப்படியா??” என்று நக்கலாக அவன் கேட்ட நேரம், அவ்வறையின் கதவு திறந்து உள்ளே ஒரு உருவம் வந்தது.

அதைக் கூடக் கவனிக்காது மகனிடம் வாதாடிக் கொண்டு இருந்த அருணாச்சலம்,வீணா என்னைச் சீண்டிப் பார்க்காத அர்ஜுன்! நான் இல்லைன்னா நீ வெளியே வர முடியாது!!” என்ற எச்சரிக்கையை ஏற்றவனோ, அவரை நக்கலாகப் பார்த்துத் திமிராகச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் கடுப்பானவர்,எந்த தைரியத்தில் இப்படி இருக்கடா?” என்று கேட்க,

பின்னாடி திரும்பிப் பாருங்க, உங்களுக்கே அது புரியும்!” என்றான் அர்ஜுன்.

அர்ஜுனின் பார்வை சென்ற திசையில் கண்களைத் திருப்பிப் பார்த்தவர், அங்கே நின்று இருந்த உருவத்தைப் பார்த்து தலையில் இடி விழுந்தது போல உறைந்து போனார்,இவள் எப்படி இங்கே??’ என்று!!

அதே நேரம், அவருகில் நின்று இருந்த சித்ராவின் நடுங்கிய குரலில் வெளிப்பட்டது,வசுந்தரா தேவிஎன்ற பெயர்!!

Advertisement