Advertisement

அந்த ஏரியா முழுவதும் காலையில் இருந்து அலைந்து திரிந்து ஓய்ந்து போயிருந்த அருணின் கண்களுக்கு, அப்பொழுது தான், மெயின் ரோட்டிற்குக் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மெக்கானிக் கடை கண்களில் பட்டது.

வசுந்தரா ஏற்கனவே மெக்கானிக் ஷெட், பாழடைந்த இடங்கள், ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் இந்த மாதிரி இடங்களில் கவனம் செலுத்தி தேடுங்கள் என்று சொல்லி இருந்ததால், உடனே அந்த ஷெட்டை நோக்கிப் போன அருண் அங்கிருந்தவரிடம், ஆக்சிடென்ட் நடந்த நாளை குறிப்பிட்டுச் சொல்லி, “அன்று இங்கே எதாவது கார் சர்வீஸ்க்கு வந்ததா?” என்று சாதாரணமாகத் தான் கேட்டான்.

ஆனால் அவன் அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கவுமே,  கேட்டுக் கொண்டு இருந்தவனின் முகம் மாற ஆரம்பித்தது.இல்ல இல்ல.. எனக்கு அந்த ஆக்சிடென்ட் கார் பற்றி ஒன்றுமே தெரியாது!” என்று மறுக்க ஆரம்பித்து விட்டான் அந்த மெக்கானிக்.

“நான் கார்ன்னு தானே சொன்னேன். அது ஆக்சிடென்ட் கார்ன்னு சொல்லவே இல்லையே..??” என்ற அருணின் கிடுக்குப்பிடியில் பேய் அறைந்தது போல முகம் வெளிறி போனான் மெக்கானிக்.

அதில் பதட்டம் மேலோங்கஅது.. அது.. சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன்… எனக்கு வேலை இருக்கு, இங்கே இருந்து கிளம்புங்கஎன்று சப்பைக்கட்டு கட்டி அருணை அங்கிருந்து விரட்டாத குறையாக விரட்ட முற்பட்டான்.

அதிலேயே அருணுக்கு ஊர்ஜிதமாகி விட்டது, இவனுக்கு என்னவோ தெரிந்து இருக்கு என்று.

அதன்பொருட்டு, உடனே அவன் அந்தக் கடையை நோட்டமிட்டபடியே வசுந்தராவுக்கு போனில் அழைத்து  விவரத்தைச் சொன்னான்.

அவர் அங்கு வரும் முன்னே, வசுந்தரா எதிர்பார்த்தபடியே, கடையில் வேலை செய்பவர்களை எல்லாமே உடனே வீட்டுக்கு அனுப்பி வைத்த மெக்கானிக், கடையை பூட்டிக் கொண்டு வெளியேற முயன்றான்.

அதைக் கண்ட அருண் அவனைத் தடுத்து நிறுத்தி அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அங்கே போலீசுடன் வந்து சேர்ந்தார் வசுந்தரா.

போலீசைக் கண்டதுமே மெக்கானிக்குக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் அதை வெளிக்காட்டாது, அவன் முயன்று தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டு இருந்த நேரம்,என்னடா?? என்ன விஷயம்??” என்ற இன்ஸ்பெக்டரின்கணீர்குரலில் ஆடிப் போனவன்,எனக்கு ஒண்ணும் தெரியாது சார்என்று பயந்து பம்ம ஆரம்பித்தான்.

ஒண்ணும் தெரியாதவன் எதுக்குடா இந்நேரத்துக்குக் கடையைச் சாத்திட்டு ஓடுற?” என்று மெக்கானிக்கின் காலரைப் பிடித்து இழுத்து, முதுகில் குனிய  வைத்து இன்ஸ்பெக்டர் போடவும்,

சார்! சார்! நிஜமாவே எனக்கு ஒண்ணும் தெரியாது சார்என்று அப்பொழுதும் அழுகாத குறையாகக் கைகளைக் கூப்பிக் கெஞ்சினான் மெக்கானிக்.

அதைக் கண்டு கொஞ்சமும் இளகாத போலீஸ்,உன்னை மாதிரி எத்தனை பேரை நாங்க பார்த்து இருப்போம்..?? எங்ககிட்டேயேவா??” என்று அசால்ட்டாக அவனிடம் கூறியவர்,மேடம்! நீங்க கிளம்புங்க, இவனை நாங்க போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய், கைக் கால்களை உடைத்து கேட்க வேண்டிய விதத்தில் கேட்டு, உங்களுக்குத தகவல் சொல்றோம்என்று அங்கிருந்து மெக்கானிக்கை அவர் இழுத்துச் செல்ல முயன்றார்.

அவருடன் செல்லாது முரண்டு பிடித்தவனோ,சார்! சார்! என்னை விட்டுடுங்க சார்! நான் புள்ளை குட்டிக்காரன் சார்! ஏதோ பணத்துக்காக அப்படிச் செய்துட்டேன் சார், என்னை விட்டுடுங்க சார்!” என்று அழுது கெஞ்ச ஆரம்பித்தான்.

அவனின் வாக்குமூலத்தில் சட்டை காலரை விடுவித்த போலீஸ்,அப்போ ஒண்ணு விடாம அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லுடா!” என்று கர்ஜித்துக் கேட்டார்.

சொல்லிடுறேன் சார்.. சொல்லிடுறேன் சார்..” என்று கூழை கும்பிடு போட்டவன், அன்று நடந்ததை அப்படியே ஒப்பிக்க ஆரம்பித்தான்.

அன்னைக்கு நைட் நான் வேலை முடிச்சு, கடையைச் சாத்த எல்லா பொருட்களையும் ஷெட்டுக்குள்ள எடுத்து வச்சுக்கிட்டு இருக்கும் போது தான், ஒருத்தர் கார் ரிப்பேர் சரி செய்யணும்ன்னு வந்தார் சார்.

நான் டைம் ஆகிடுச்சு, நாளைக்கு எடுத்துட்டு வாங்க சரி பண்ணி கொடுக்குறேன்னு சொன்னதுக்கு,இல்லை, இப்போவே பண்ணனும்ன்னு வீம்பு புடிச்சார்.

எவ்வளவு பணம்ன்னாலும் தரேன்னு சொன்னார்.

அதுக்கு மயங்கிய நானும் சரின்னு சொல்லி, காரை செக் பண்ணும் போது தான், அது ஆக்சிடென்ட் ஆகி இருக்குன்னு தெரிஞ்சது.

 “சார்! இது ஆக்சிடென்ட் போலத் தெரியுது. இதையெல்லாம் நான் பண்ண மாட்டேன்என்று அவர்கிட்ட சொன்னேன்.

ஆனா அவர் விடாது, அவருடைய பர்சில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து என்கிட்டே கொடுத்தது மட்டுமில்லாது, இந்த விஷயத்தை மூடி மறைச்சா இன்னும் பல லட்சங்கள் எனக்கு தரதா சொன்னதும், நானும் அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர் சொன்னபடியே அந்த காரை ரிப்பேர் பண்ணி மறுநாள் அவரிடம் கொடுத்துட்டு, இந்த கேசில் மாட்டிக்க கூடாதுன்னு உடனே கிளம்பி என் மாமியார் ஊருக்குக் குடும்பத்துடன் போயிட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, எதுவுமே தெரியாதது போலத் திரும்பி வந்து, என் தொழிலைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனா இப்போ மாட்டிக்கிட்டேன்!” என்றவனின் வாக்குமூலத்தை அதுவரை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்த வசுந்தரா,

உன்கிட்ட அன்னைக்கு காரை கொடுத்தவன் முகம் நியாபகம் இருக்கா?” என்று கேட்க,

என்ன மேடம் கேட்கிறீங்க? அவ்ளோ பணம் கொடுத்தவரைப் போய் அவ்ளோ லேசா மறக்க முடியுமா? இன்னொரு தடவை பார்த்தா கண்டிப்பா அடையாளம் காட்டிடுவேன்என்று அடித்துச் சொன்னான் அவன்.

இவன் அடையாளம் காட்ட ரெடியா இருந்தாலும், நாம அவனை எங்கேன்னு போய் புடிச்சுட்டு வரது மேடம்?என்றார் இன்ஸ்பெக்டர்.

சில நிமிட சிந்தனைக்குப் பின், விஷ்வாவைத் திரும்பிப் பார்த்த வசுந்தரா,உன்கிட்ட உங்க அப்பா போட்டோ இருக்கு தானே? அதை இவன்கிட்ட காட்டு!” என்று கூறினார்.

சரிஎன்றவனும், தன் போனை எடுத்து கேலரியில் இருந்த அருணாச்சலத்தின் புகைப்படத்தை அந்த மெக்கானிக்கிடம் காட்டினான்.

அதை உற்றுப் பார்த்தவன்,இவர் இல்லை மேடம்என்றான்.

அந்தப் பதிலை கேட்டதுமே வசுந்தரா,அர்ஜுன் புகைப்படத்தை அவனிடம் காட்டு!என்றார்.

அதில் அதிர்ந்து போனது விஷ்வா மட்டுமில்லை அங்கிருந்த போலீசும் தான். “அவன் போட்டோ எதுக்கு?என்ற விஷ்வாவின் வார்த்தைகளுக்கு,  “குற்றவாளி யாருன்னு தெரியாத வரை இந்த கேஸில் சம்மந்தப்பட்ட எல்லாருமே குற்றவாளிகள் தான்!” என்றவரின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனவனோ,  வேறு வழியின்றி அர்ஜுனின் புகைப்படத்தை மெக்கானிக்கிடம் காட்டினான்.

ஆனால் அவனோ, அந்தப் புகைப்படத்தைச் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்ததில், சுற்றி இருந்த அனைவருக்கும் பிபி ஏறியது. அதில் கடுப்பான போலீஸ்,என்னடா இவரா??” என்று அவனை அதட்டாத குறையாகக் கேட்க,

இல்லை, இவர் இல்லைஎன்றான் மெக்கானிக்.

அதில் போன உயிர் திரும்பி வந்தது போன்று உணர்ந்தார் வசுந்தரா.

அவரைப் பொறுத்தவரை தன் மகன் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு இருக்க கூடாது என்று எந்தளவுக்கு நினைக்கிறாரோ, அதே அளவுக்கு, இறந்த அந்த அப்பாவி பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதிலும் உறுதியாகவே இருக்கிறார்.

அதன்பொருட்டே, எந்த விதத்திலும் குற்றவாளி அவன் குற்றத்தில் இருந்து தப்பி விடக் கூடாது. அது தன் மகனாக இருந்தாலும் தப்பி விடக் கூடாது என்பதுனாலேயே, அந்த இடத்தில் ஒரு வக்கீலாகத் தன் மகனையே சந்தேகக் கூண்டில் ஏற்றினார்.

ஆனால் அவன் இல்லை என்று அறிய வந்த போது, ஒரு தாயாக அவரால் நிம்மதி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருக்கிறது. அது என்னவென்றால், என்னதான் அர்ஜுன் குற்றமற்றவன் என்று தனக்குத் தெரிவதை விட அது போலீசுக்குத் தெரிய வேண்டுமென்று நினைத்தார் அவர்.

அதன்பொருட்டே, அவர்களையும் தன்னுடன் அழைத்து வந்தது மட்டுமில்லாது, அவர்களின் முன்னிலையில் இந்த கேஸின் முக்கிய சாட்சியையும் விசாரித்தார் அவர்.

ஏனென்றால், நாளை யாரும் கோர்ட்டில்இது ஜோடிக்கப்பட்ட சாட்சி.. குடும்பமே சேர்ந்து நாடகமாடுகிறார்கள்என்று சொல்லி விடக் கூடாது என்பதே அவரின் எண்ணமாக இருந்தது.

ஏன்டா இதைச் சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா??” என்று அவ்வளவு நேர டென்ஷன் தாங்காது மெக்கானிக்கின் தலையில் தட்டிக் கேட்டார் ஏட்டு ஒருவர்.

அவர் அடியில் தலையைத் தடவியவன்,சார்! சும்மா சும்மா அடிக்காதீங்க! அதில் இருக்கிற இன்னொருத்தர் அன்னைக்கு வந்தவர் போல இருந்தார், அதான் பார்த்தேன்என்று எகிறாத குறையாக அவன் சொன்னதும்.

அடுத்து எங்கே, எப்படிக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது என்று குழம்பிக் கொண்டு இருந்த வசுந்தராவுக்கு, அந்த வார்த்தைகள் தேனாக வந்து காதில் பாய்ந்தது போல! அதில் அவனை நெருங்கியவர்,யார்?? யாரை சொல்ற!” என்று மெக்கானிக்கிடம் கேட்டு விட்டு விஷ்வாவைப் பார்க்கவும், உடனே தன் போனின் திரையை ஆன் செய்தவன், முன்பு காட்டிய அதே புகைப்படத்தை அந்த மெக்கானிக்கிடம் மீண்டும் காட்டினான்.

அது ஒரு பிஸினெஸ் சக்சஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால், அர்ஜுனுடன் யாழினி, அவளின் தந்தை, விஷ்வா மற்றும் அருணாச்சலம் இருந்தனர்.

அர்ஜுன், அருணாச்சலம், விஷ்வா தவிர, அதில் இருந்த ஒரே ஆண் யாழினியின் தந்தை மட்டுமே!

அவரையா இவன் சொல்கிறான்?? என்று மற்றவர்கள் அதிர்ந்து போயிருந்த நேரம்,இல்ல, அவரா இருக்க வாய்ப்பே இல்லை!என்று மறுத்தான் விஷ்வா.

அதைக் கேட்ட வசுந்தராவோ,யார் எப்போ குற்றவாளிகளா மாறுவாங்கன்னு யாராலையும் சொல்லவே முடியாது விஷ்வாஎன்றார் அர்த்தத்துடன்.

ஆனாலும்,தன் மகனைப் போலவே தன்னையும் பாவித்துப் பாசம் காட்டிய ராகவன் இப்படி ஒரு செயலை செய்து இருப்பார்??’ என்பதை விஷ்வாவால் அப்பொழுது கூட ஏற்க முடியவில்லை .

அதன்பொருட்டு மெக்கானிக்கிடம்,நல்லா பார்த்து சொல்லு! இவரா அன்னைக்கு உன்கிட்ட கார் விட்டவர்?” என்று புகைப்படத்தில் இருந்த ராகவனைச் சுட்டிக் காட்டி அவன் கேட்க.

அவன் சுட்டிக் காட்டியதைக் குனிந்து பார்த்தவனோ,ஐயோ சார்! நான் சொன்னது இவரை இல்லை சார்என்றானே பார்க்கலாம்! அவ்வளவு தான் அந்த இடமே சூடு பிடித்தது போல ஆனது.

இவர் இல்லையா? அப்போ வேற யாரைடா சொல்லிட்டு இருக்க? என்னடா சொல்றஎன்று ஆளாளுக்கு அவனைப் பிச்சு எடுக்காத குறையாக நாலாபுறமும் இருந்தும் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

அவர்களின் துளைப்பைத் தாங்க முடியாதவனோ, விஷ்வாவின் கையில் இருந்த போட்டோவை ஜூம் பண்ணி, அந்த ஐவருக்கும் பின்னால் ஆவுட் ஆப் போகஸில் நின்றிருந்த ஒருவனைக் காட்டி,இவர் போலத்தான் இருந்தார்என்றான்.

அவன் சொல்லவுமே,யாரது?” என்றவாறு மற்றவர்கள்  விஷ்வாவின் போனை வாங்கி அதில் இருப்பவனைக் கண்டு, இவனா?? என்று உறைந்து போகும் நிலைக்குச் சென்றனர்.

ஏனென்றால் இந்த கேஸில் இப்படி ஒரு திருப்பத்தை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதை விட, அவர்கள் கண்ட உண்மையை ஜீரணிக்கவே அவர்களுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது எனலாம்.

மேடம், அதான் குற்றவாளி கிடைச்சிட்டானே? தூக்கி உள்ளே போட்டுடலாமா?” என்று கேட்ட போலீசிடம்,

இல்லை சார், இந்த இடத்தில் தான் நாம அவசரப்படாம காயை நகர்த்தணும்என்றார் நிதானமாக வசுந்தரா.

என்ன சொல்றீங்க மேடம்?? புரியலை??” என்றவரிடம்,  “கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார்.. இது வெறும் ஆக்சிடென்ட் கேஸ் மட்டுமில்லை, என்னோட பையனோட கேஸும் இதில் தான் அடங்கி இருக்கு. சோ எந்த விதத்திலும் நான் இதில் ரிஸ்க் எடுக்க விரும்பலை.

அதுமட்டுமில்லை, இப்போ நாம அவனை நெருங்கினால், ரொம்ப சிம்பிளா,இந்த மெக்கானிக்கை யாருனே எனக்குத் தெரியாதுன்னு ஆக்சிடென்ட் கேசில் இருந்து மட்டுமில்லை, துளசி கேஸுக்கும் கோ ஆப்ரெட் பண்ண மாட்டான்என்றவரின் வார்த்தைகளின் பின்னிருக்கும் உண்மை புரிந்தவரும்,நீங்க சொல்றதும் ஓகே தான் மேடம். பட் அதுக்காக அவனை நாம சும்மாவும் விட முடியாதே??” என்றவரின் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் அவரின் கடமை புரிந்தவர்,

சார்! அவனை உங்க பாணியில் இருந்து விசாரிச்சா எந்த உண்மையும் வெளியே வராதுஎன்று நெற்றி சுருங்கிச் சொல்வதைக் கேட்ட போலீஸ்,வேற எப்படி விசாரிக்கணும்ன்னு சொல்றீங்க மேடம்?” என்று கேட்டார்.

எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க.. அவன் வாயாலேயே எல்லா உண்மையையும் சொல்ல வைக்கிறேன்என்றார் உறுதியாக.

அவரின் மீதான நம்பிக்கையில்,ஓகே மேடம்என்றவரும், மெக்கானிக்கை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவர்கள் சென்ற பின்,எப்படி அவன்கிட்ட இருந்து உண்மையை வாங்கப் போறீங்க மேடம்?”  என்று கேட்டான் அருண்.

வேற எப்படி? அவனைப் போலவே கார்னர் பண்ணித்தான்!” என்றார் வசுந்தரா, ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகையுடன். அதில் தானாகவே அருணின் முகமும், புன்னகையைப் பூசிக் கொண்டது.

வந்த வேலை முடிந்து அனைவரும் வீட்டுக்குக் கிளம்பிய நேரம், விஷ்வாவிடம்,நான் சொல்ற வரை இங்கே நடந்த எதைப் பற்றியும் யார்கிட்டயும் மூச்சு விடாதே!” என்றார் வசுந்தரா. அதை ஏற்றவனும்,சரிஎன்று கூறி விட்டுத் தன் வீட்டை நோக்கிப் புறபட்டான்.

வசுந்தரா தன் ஜுனியர்களுடன் வீடு திரும்பவும், அவர்களுக்காக ஹாலில் காத்திருந்த அர்ஜுன், படித்துக் கொண்டு இருந்த மேகசீனை கீழே வைத்து விட்டு எழுந்து வந்து,ஏதாவது க்ளு கிடைச்சுதா மாம்?” என்று தாயிடம் ஆர்வமாகக் கேட்டான்.

ம்ம்ம்..” என்றவரிடம் என்ன அது?” என்று கேட்டான் அர்ஜுன்.

 “உனக்குத் தெரிய வேண்டிய நேரம் அது தெரிய வரும்” என்று மட்டும் சொல்லி விட்டுத் தன்னறை நோக்கிச் சென்றார்.

“இதற்கு என்ன அர்த்தம்?” என்று போகிறவரையே பார்த்து நின்று இருந்த அர்ஜுனுக்கு, இன்னொன்றும் நினைவு வந்தது.. சொல்வது தாய் என்பதால், கட்டாயம் இதற்குப் பின் தாவது வலுவான காரணம் இருக்குமென்று..

அதன்பொருட்டு, தலையைக் குலுக்கித் தன்னிலை அடைந்தவன், நேரம் வரும் போது அவரே அதைச் சொல்வார் என்ற எண்ணத்துடன் தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

தங்களறையில், வெளியே போய் வந்ததில் இருந்து ஜோசப் ரெப்ரெஷ் கூடப் பண்ணாது, நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டு இருப்பதைக் கண்ட அருண்,

என்னாச்சுடா??” என்று கேட்க,

அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவனோ,என்ன ஆச்சா..?? உங்களை நம்பி எல்லாம் நாசமா போச்சு!” என்றான் மூக்கில் பம்ப் அடித்தபடி.

அதில் குழம்பிய அருண்,ஏய்! சொல்றதை ஒழுங்கா சொல்லிட்டு அப்புறம் பம்ப் அடிடா!” என்றான் கேலியாக. அதில் அவனை விடுத்து அந்த அறையில் இருந்த மற்றவர்களை அழைத்தவனோ,டேய்! எல்லாரும் இங்கே வாங்க.. முக்கியமா டேய் நோட்ஸ்! நீ இங்கே வா!” என்றான்.

அந்த நோட்ஸ் என்றது, எப்பொழுதும் எங்கேயும் அருணைத் தன் குருவாக நினைத்து, அவன் சொல்வதை எல்லாம் நோட்ஸ் எடுத்துக் கொண்டே திரியும் ரவியைத்தான்!

தன் அருகில் வந்து நின்ற ரவியைப் பார்த்தவன்,நோட்ஸ்சு! நோட்டு இருக்கா?” என்று கேட்க,

 “ஒஹ்ஹ..” என்றவனோ, உடனே தன் பாக்கெட்டில் இருந்து அந்தச் சிறு டைரியை வெளியே எடுத்துக் காட்டினான்.

பத்திரமா வச்சுக்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் தேவைப்படும்என்று அவனிடம் நக்கலாகச் சொல்லிய ஜோசப், அருணைப் பார்த்து,  “இன்னைக்கு நாம போய் விசாரிச்சோமே, அது எந்த கேஸ்ன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டான்.

அதில் திருதிருத்துப் போனவனோ,ஐயையோ! கண்டுபிடிச்சுட்டான் போலயே!” என்று முழித்தான்.

அதைக் கண்டவனோ,இந்த முழிக்கிற வேலையே இங்கே வேணாம்.. ஆன்சர் பண்ணு மேன்!” என்று கறாராகச் சொல்வதைக் கேட்ட ஜூனியரில் ஒருவன்,ஏய்! சீனியரையே கலாய்க்குறியா?? அவர் நமக்கு குரு மாதிரிப்பா!!” என்று பின்னிருந்து குரல் கொடுக்க,

யார்டா அவன்?? முன்னாடி வாடா!என்றதும் முன்வந்து நின்றவனைக் கண்ட ஜோசப்,நினைச்சேன்! நீயாதான் இருப்பேன்னு.. என்ன சொன்ன? சீனியரா? இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும் யார் யார் என்னனு..” என்று அருணை கொலைவெறியுடன் பார்த்துச் சொன்னவனிடம்,அது என்ன கேஸ் சீனியர்?” என்று பவ்வியமாகக் கேட்டான் ஜூனியரின் ஒருவன்.

அதைக் கேட்டு, அவனைக் காதோடு சேர்த்து ஒரு அப்பு அப்பிய ஜோசப்,ம்ம்ம்.. நொன்ன கேசு.. அதான் அவரே சொல்லுவார்ல, அப்புறம் எதுக்கு நீ முந்துற?” என்றதும், எச்சில் விழுங்கினான் அருண்.

பின்னே, அது தனக்கு விழ வேண்டிய அடியாச்சே!

அனைவரும் தன்னையே பார்த்து இருப்பதைக் கண்டு, வேறு வழியின்றி தொண்டையைச் செருமி கொண்டு,அது வந்துடா.. ஜோசப்பு..” என்று சமாளிக்க வாயைத் திறந்தவனிடம்,ஹலோ மிஸ்டர்! இந்த ஜோசப்பு ஏசப்பு எல்லாம் வேண்டாம், நேரா விஷயத்துக்கு வாங்க!” என்று கறார் காட்டினான் அவன்.

அது வந்து.. அது வந்து..” என்று அருண் தயங்கி மயங்கி சொன்னதைக் கேட்டு பொறுமை இழந்தவனோ,அடங்கொக்கா மக்கா! இன்னுமாடா நீ வந்துட்டு இருக்க?” என்று அருணின் மீது எகிறிக் கொண்டு எழுந்து நின்றவனைக் கண்டு, அலறி பின்னே சென்றவனோ,டேய் புடிங்கடா! அவனைப் புடிங்கடா!” என்று குரல் கொடுத்தான்.

அதில் பாய்ந்து ஜோசப்பை இருபுறமும் பிடித்து நிறுத்தியவர்களைக் கண்டவனோ, நக்கலாக,ஃபன்னி பீப்பிள்!” என்று சொல்லி விட்டு,இன்னும் கொஞ்ச நேரத்தில் இதை விட மோசமா அவன் மீது பாய போறீங்க.. அது தெரியாம..” தனக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டவன்,ஓகே ஓகே! கூல் கூல்!என்று சொல்லிக் கொண்டு,லீவ்! லீவ் இட் மேன்!” என்று தன்னைப் பிடித்து இருந்தவர்களின் கைகளை உதறினான்.

அங்கே நடப்பது ஒன்றும் புரியாது விழித்த ரவி,இங்கே என்ன தான் நடக்குது சீனியர்? நீங்களாவது சொல்லுங்களேன்!” என்று கேட்க,

அவனைக் கண்ட ஜோசப்,செல்லம்! இங்கே வா!” என்று அழைக்கவும், அவனருகில் சென்றவனின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவன், லவ் யூ!” என்று கொஞ்சி விட்டு,நீ தான் இதற்கு சரியான ஆளு, நீயே கேளு!” என்று அவனை இன்னும் ஏற்றி விட்டான்.

அதில்,சொல்லுங்களேன் சீனியர்! என்ன கேஸ் அது?” என்று ஆர்வம் மேலோங்க கேட்டான் ரவி. ஆனால் கேட்டுக் கொண்டு இருந்தவனோ மலங்க மலங்க விழித்தான்.

பின்னே? அது என்ன கேஸ்ன்னு சொன்னா, இவனே நம்மை அடித்தே கொன்னாலும் கொன்னுடுவானே??” என்ற பயம் அருணுக்கு.

அது ஒண்ணுமில்லை நோட்ஸ்.. அந்த கேஸு.. அந்த கேஸு..” என்று இழுத்தவனின் பேச்சைக் கேட்டு, காண்டாகிப் போன ஜோசப்,அடிங்! இன்னும் அந்த கேஸில் இருந்து வெளியே வரலையா நீ?” என்று பக்கத்தில் இருந்த சேரை தூக்கிக் கொண்டு அருணை நோக்கி ஓடினான்.

மீண்டும் அவனைப் பிடித்து இழுத்த ஜூனியர்களில் ஒருத்தன்,ஜோசப்! நீ செய்றது சுத்தமா சரியில்லை. என்னதான் இருந்தாலும் அவர் நமக்கு சீனியர்! நாளைக்கு நம்மளை எல்லாம் வக்கீலா மாற்ற போகிறவர். அவரைப் போய் இப்படி மரியாதையில்லாமல் நீ இப்படிப் பேசலாமா?” என்று கூட்டத்தில் ஒருவன் கண்டிப்பதைக் கண்டு, மேலும் காண்டாகிப் போனவனோ,

யாரு?? இவரு நம்மளை வக்கீலாக்கப் போறாரு?? அதை நீ பார்த்த..  டேய்! டேய்! ஏதாவது சொல்லிட போறேன்டா! முதலில் அவன் வக்கீல் ஆகுறானு பாருங்கடா!” என்று சொன்னதைக் கேட்ட ஜூனியர்கள் அனைவரும்,என்னடா சொல்ற?” என்றனர்.

ம்ம்ம்.. சொல்றாங்க.. சீதைக்கு ராமன் சித்தப்பன்னு.. ஏன்டா.. ஏன்டா, என் வயித்தெரிச்சலை கொட்டிக்குறீங்க??” என்ற ஜோசப்பை நெருங்கியவர்கள்,டேய்! சொல்றதைக் கொஞ்சம் விளக்கமா சொல்லுடா!” என்று கேட்டனர்.

அதில்ஓகே! கூல் கூல்!” என்று தன்னைத்தானே கூல் டௌவ்ன் பண்ணிக் கொண்டவனும்,அன்னைக்கு ஒருநாள் மேடம் நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து சாப்பிடும் போது, டிவியில் ஓடிட்டு இருந்த ஒரு கேஸை எடுத்து நடத்த சொல்லி இவர்கிட்ட சொன்னாங்களே.. நியாபகம் இருக்கா??”

ம்ம்ம்.. ஆமா, அந்த ஆக்சிடென்ட் கேஸ் தானே?” என்று ஒருவன் எடுத்துச் சொல்லவும்,ம்ம்.. அதே தான்!” என்றான் ஜோசப்.

அதுக்கும், இப்போ சீனியரை நீ முறைப்பதற்கும் என்னடா சம்பந்தம்?”

ம்ம்ம்.. என்ன சம்பந்தமா? இன்னைக்கு மேடமோட பையன் கேஸை முடிக்க, நாம ஒரு கேஸ் பின்னாடி அலையோ அலைன்னு சுத்திட்டு இருக்கோமே?? அதுதான்டா அன்னைக்கே மேம் இவரை எடுத்து நடத்த சொன்ன அந்த ஆக்சிடென்ட் கேஸ்!” என்றதும்,என்னது? அதுவா இது?” என்ற அனைவரும் ஒருசேர அருணைப் பார்த்தனர்.

அவனோ, அவர்களைப் பார்க்க முடியாது வேறு எங்கெங்கோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

இந்த ஆளு மட்டும் அன்னைக்கே அந்த கேஸை மட்டும் எடுத்து நடத்தி இருந்தா, இந்நேரம் மேடம் அவுங்க பையன் கேஸை முடிச்சு இருப்பாங்க. இவனும் வக்கீல் ஆகி இருப்பான். நாமளும் இந்நேரம் ஜூனியர் வக்கீல் ஆகியிருப்போமே!” என்று அழுகாத குறையாக அரற்றியவன்,போச்சு! போச்சு! எல்லாம் இந்த ஆளால் என்னைக்கோ போச்சு!” என்றபடி மீண்டும் அருணின் மீது கொலைவெறியுடன் ஜோசப் பாய, அவனிடமிருந்து தப்பிக்க எண்ணியவனோ,ஜூனியர்ஸ்! என்னைக் காப்பாத்துங்கடா!” என்று கதற ஆரம்பித்தான்.

ஆனால் அதைக் கேட்டவர்களோ,யாரு?? நாங்க..?? உன்னைக் காப்பத்தணுமா?? இப்போ உன்னைக் கொல்ல போறதே நாங்கதான்டா!!” என்று மொத்தமாக அனைவரும் சாய்ந்து, அருணின் மீது மலையாக விழுந்து, அவனைச் சாய்த்து நாலாபக்கமும் கும்மி எடுத்தனர்.

டேய்! டேய்! எனக்கு மட்டும் என்ன ஜோசியமாடா தெரியும்?? அந்த கேஸுக்கும், இந்த கேஸுக்கும் லிங்க் இருக்கும்ன்னு தெரியாம பண்ணிட்டேன்டா! அடுத்த தடவை மேடம் எந்த கேஸ் கொடுத்தாலும் எடுத்து நடத்துறேன்டா! உங்க அண்ணனை இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுடுங்கடா!” என்று கெஞ்சிக் கதறிவனை மன்னித்தவர்களும், அவனை விடுவித்து எழுந்து அமர்ந்து ஆசுவாசமான போதும், இன்னும் ஜோசப் மட்டும் சாந்தமாகாது இருப்பதைக் கண்ட ரவி,

சரி விடுடா ஜோசப்! அதான் சீனியர் தெரியாம செஞ்சுட்டதா சொல்றார்ல..” என்று அருணுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசுவதைக் கேட்டு,யாரு?? இவரா?? அட நீ வேறடா! ஏன்டா.. இன்னைக்கு அந்த கேஸ் விசாரிக்கப் போன போது, நான் சந்தேகம் வந்து இவர்கிட்ட, ஏன் சீனியர்?? இந்தக் காந்தி நகர் கேஸ்தானே மேடம் அன்னைக்கு உங்களை எடுத்து நடத்த சொன்னாங்கனு கேட்டதற்கு, இந்த அப்பாட்டக்கர் என்ன சொன்னார் தெரியுமா?” என்றதும்

என்ன சொன்னார்?” என்று கேட்டனர் மற்றவர்கள்.

அதில் ஒருமுறை அருணை நன்றாகத் திரும்பிக் கண்களால் எரித்தவன்,ச்சே! ச்சே! அது நேரு நகர் கேஸ்டான்னு சொல்லி, என்னையே ஒரு நிமிஷம் குழம்ப வச்சுட்டான்டா இவன்..!! இவனையா சும்மா விடச் சொல்றீங்க?? அடேய் அருணு! இன்னைக்கு உன்னை என் அருவாக்கு பலியாக்கமா விடுறதா இல்லை.. இருடா வர்றேன்!என்று அருவாள் எடுக்கப் போனவனைப் பிடித்து இழுத்து நிறுத்தியவர்கள்,சரி சரி! விடு டா!, ஏதோ உன்கிட்ட இருந்து தப்பிக்க அப்படிச் சொல்லி இருப்பார்என்று அவனை சமாதானப் படுத்தினார்கள்.

ஆனால் அதற்கு எல்லாம்  அடங்கிப் போகாதவனோ,அடேய் அருணு! நீ அந்த கேசை எடுத்து நடத்தாது கூட எனக்குக் கஷ்டமா இல்லைடா. ஆனா எனக்கே நேரு, காந்தின்னு பாடம் எடுத்த பாரு! அதைத்தான்டா என்னால பொறுக்கவே முடியலை!” என்று மீண்டும் பாய்ந்தவனைத் தடுத்து நிறுத்திய அருண்,

டேய்! டேய்! உயிர் பயத்தில் ஏதோ உளறிட்டேன்டா.. அண்ணனை மன்னிச்சு விட்டுடுடா தம்பி!” என்று மன்றாடினான்.

என்னடா?? அண்ணன் நொன்னன்ட்டு..” என்று உருண்டு பிரண்டவர்களை ஒரு வழியாக மற்றவர்கள் பிரித்து, அதன் பின் அவர்களைச் சேர்த்தும் வைத்தனர்.

இறுதியாக அருண் மீசையில் மண் ஒட்டாத ரேஞ்சுக்கு,அரசியலில் இது எல்லாம் சாதாரணம் அப்பா!” என்று முதுகை தேய்த்துக் கொண்டு சொல்வதைக் கேட்ட அனைவருமே, அவனை அணைத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இது தான் அவர்கள் உலகம்..!! என்னதான் அடித்துக் கொண்டு உருண்டு பிரண்டாலும், வசுந்தராவுக்கு அருண் எப்படியோ, அதே போலத் தான் ஜூனியர்கள் அனைவருக்கும் அவன்!! எப்பொழுதும் அவர்களின் கூடப் பிறவாத அண்ணனாகவே திகழ்ந்தான்.

அதனாலேயே அவனிடம் செல்லக் கோபமாக இருந்தாலும் சரி, அடிதடி விளையாட்டாக இருந்தாலும் சரி, யாரும் தயங்காது போடுவர்.

அது எல்லாமே அவர்களுக்குள் சில நிமிடம் மட்டுமே நீடிக்கும். அடுத்த சில நொடிகளில், இவர்களும் சீனியர் என்று அவனிடம் ஓடி விடுவார்கள். அவனும் ஜூனியர்கள் என்று இவர்களை வாரி அணைத்துக் கொள்வான். இதுதான் அவர்களுக்கிடையேயான பிரிக்க முடியாத பந்தமாக இன்று வரை தொடர்கிறது.

மறுநாள் எப்படி, எங்கே காயை நகர்த்தி குற்றவாளியைப் பிடிப்பது என்று ஒரு நீண்ட சிந்தை வயப்பட்டு இருந்த வசுந்தரா, அதற்குத் தேவையான சில வேலைகளைச் செய்து விட்டே அன்றைய இரவு கண் உறங்கினார்.

Advertisement