Advertisement

கம்பெனியில் இருந்து அழைத்து இருந்த மூத்த அதிகாரி ஒருவர், “சார், உடனே நீங்க கிளம்பி கம்பெனிக்கு வரணும். உங்க அப்பாவோட நியூஸால் இங்கே அதிகப் பதட்டமா இருக்கு” என்று அங்கு கம்பெனி சூழ்நிலையை விளக்கிக் கூப்பிட, “போர்டு மீட்டிங் என்னாச்சு?” என்று கேட்டான் அர்ஜுன்.

“அவங்க தான் நிலைமையைச் சமாளிக்க உங்களைக் கூப்பிடவே சொன்னாங்க சார்” என்றார் அவர்.

அந்த வார்த்தைகளில் ஒரு நிமிடம் உறைந்து போனவன், பின் அவரின் பல அழைப்புகளில் புத்துயிர் பெற்றவனாக,
“ஓகே, நான் உடனே வரேன்” என்று மட்டும் சொல்லி போனை வைத்தவனுள் ஆயிரம் ஆர்ப்பரிப்புகள் ஆரம்பமாகின.

எந்த போர்டு ஆப் டைரக்டர்ஸ்சை வைத்துத் தன்னைத் தன் பதவியில் இருந்து தூக்கி வீசுவேன் என்று தந்தை மிரட்டினாரோ, இன்று அதே போர்டு ஆப் டைரக்டர்ஸ் வைத்தே தன்னை கம்பெனிக்கு அழைக்க வைப்பது என்பது சாதாரண விஷயமா என்ன???

ஆனால் அது நடந்து இருக்கிறது! அதை நடத்தியது யார் என்ற கேள்வியில், அர்ஜுனின் விழிகள் தானாகவே தனக்கு அருகில் நின்று இருந்த தாயை ஏறிட்டது.

ஏனென்றால் அவனுக்குத் தெரியும், தன்னைச் சுற்றித் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் அனைத்துக்கும் தன் தாயே காரணமென்று! அதன்பொருட்டு “எப்படி மாம்??” என்று கேட்ட மகனின் வார்த்தைகளில் நிதானமாக அவனை நோக்கியவர், அவனின் கன்னத்தை லேசாகத் தட்டி, “உனக்கு எது தெரியணுமோ, அதை நீ ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட அர்ஜுன். அது போதும்!” என்று கண்கள் இடுங்க அவனிடம் சொன்னவர், “ஆபீஸ்க்கு டைம் ஆச்சு, சீக்கிரம் கிளம்பு!” என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைத்தார்.

மகன் சென்ற பின், தன் ஜுனியர்களைச் சாப்பிட சொல்லியவர், சாப்பிடாமலே தன் அறைக்குச் சென்றார்.

அங்கே சாய்வு நாற்காலியில் அமர்ந்து, பரிமளம் கொண்டு வந்து கொடுத்த ஜூசை பருகியபடி, போனில் அருணாச்சலத்தின் தற்போதைய நிலையைச் சிறிது நேரம் பார்த்தவர், அதை மூடி வைத்து விட்டு பழச்சாறை மெதுவாகப் பருக ஆரம்பித்தார்.

அந்த பருகலின் ஊடே அருணாச்சலம் என்ற திமிங்கலத்தை எப்படிப் பிடித்தார் என்பது குறித்த சம்பவங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் படமாக விரிய ஆரம்பித்தது.

சில தினங்களுக்கு முன்பு, ‘அர்ஜுனின் கேஸை எப்படி சால்வ் செய்வது? அடுத்து ஹியரிங்கிற்குள் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று எண்ணி எண்ணி வசுந்தரா மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கும் பொழுது தான், அவருக்கு அந்த கேஸில் ஒரு சிறு பொறி மாட்டியது.

அது ஒரு பெண்கள் அணியும் பிரேஸ்லெட்.

அர்ஜுன் கேஸில் போலீஸ் சேகரித்து வைத்து இருந்த பொருட்களின் புகைப்படங்களைப் புரட்டிக் கொண்டு இருக்கும் போது தான், அதில் இடம்பெற்று இருந்த அந்த பிரேஸ்லெட் மீது வசுந்தராவின் கவனம் சற்றுக் கூர்மையாகப் படிந்தது.

இந்த கேஸ் ஆரம்பிக்கும் போது அவருக்குத் தெரியாது, தன் மகன் யாழினியைச் சுத்தமாக விரும்பவில்லை என்று! அதனால் போலீசில் ஆதாரமாகக் காட்டப்பட்ட அந்த பிரேஸ்லெட் மீது அவரின் கவனம் அப்பொழுது செல்லவில்லை.

ஆனால் இப்பொழுது, அவருக்குத் தன் மகனின் குணமும், அவன் இதை அந்நேரம் யாருக்கும் வாங்கிப் பரிசளிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிந்து இருந்தமையால்,

‘சம்பவம் நடந்த அன்று அவனின் காரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த விலையுயர்ந்த பிரேஸ்லெட் யாருடையதாக இருக்கும்?’ என்ற கோணத்தில் அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.

அதன்பொருட்டு உடனே மகனை அழைத்து, அவனிடம் அந்த பிரேஸ்லெட் பற்றி விசாரிக்க, அவனோ, “நான் அதை வாங்கலை மாம். அது எப்படி என் காரில் வந்ததுன்னு எனக்கே இப்ப வரை தெரியலை மாம்” என்றவனின் விளக்கத்தில் தன் உள்ளுணர்வு பொய்க்கவில்லை என்று உணர்ந்து கொண்டார் வசுந்தரா.

“இதை ஏன் கேட்குறீங்க மாம்?” என்ற மகனிடம், “நத்திங்!” என்று சொல்லி அனுப்பியவரின் முன் அந்நேரம் இரு கேள்விகள் உதயமானது.

‘மகன் வாங்கியதாகச் சொல்லப்படும் இந்த பிரேஸ்லெட்டை அவன் வாங்காத போது, இதை வாங்கியது யார்? மற்றும் இது அவனுடைய காருக்கு எப்படி வந்தது’ என்ற கேள்விக்கான விடை தேடித்தான் அதன்பின் வசுந்தராவும், அவர் டீமூம் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் அதற்கான விடையை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால் அவர்கள் சோர்ந்து போயிருந்த நேரம் தான் அர்ஜுனைச் சந்திக்க அங்கே வந்து இருந்தாள் யாழினி.

வந்தவளை வரவேற்று, இண்டர்காமில் மகனுக்கு அதைத் தெரிவித்த வசுந்தரா, “உட்கார் யாழினி! நான் உனக்கு ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன்” என்று பரிமளத்தை அழைக்கப் போன நேரம், “அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி.. நாங்க டின்னர்க்குத்தான் வெளியே போறோம்” என்று வெட்கப் புன்னகையுடன் மறுத்தாள் யாழினி.

அதைக் கண்டு அகம் மகிழ்ந்தவரும், “ஓஹ்ஹ் நைஸ்!” என்று சொல்லி விட்டு, அவளிடம் பொதுவாகப் பேசிக் கொண்டு இருக்கும் போது தான், அவளும் அர்ஜுன் கேஸ் பற்றி அவரிடம் கேட்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு வசுந்தரா பதில் சொல்லிக் கொண்டு இருந்த நேரம், யாழினியுடன் வெளியே செல்ல வேகவேகமாக படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்த அர்ஜுன், தன் தாயும் யாழினியும் பேசிக் கொண்டு இருக்கும் விதம் கண்டு தன் நடையை மெதுவாக்கினான்.

அர்ஜுனின் வருகையைக் கண்டு எழுந்து நின்ற யாழினியைப் பார்த்தவாறே தாயைப் பார்த்தவன், “மாம்! நாங்க டின்னர்க்கு..” என்று சொல்ல ஆரம்பிக்கவுமே, “ஆல்ரெடி யாழினி சொல்லிட்டாள்” என்று சொல்லிப் புன்னகைத்தார் வசுந்தரா.

அதைக் கேட்டு அர்ஜுனின் முகம் போன போக்கைக் கண்டு யாழினி நகைக்கவும், அவளைச் செல்லமாக முறைத்தவன், அங்கே டேபிளில் இருந்த பிரேஸ்லெட் புகைப்படத்தைக் கண்டு, அதைக் கையில் எடுத்தவன், “இது பற்றி ஏதாவது விவரம் தெரிந்ததா மாம்?” என்று கேட்டான்.

“இதுவரை இல்லை” என்று வசுந்தரா சொல்லவும், அர்ஜுனின் முகம் சட்டென்று மாறுவதைக் கவனித்தவர், அவனின் மூட் ஸ்பாயில் ஆகக் கூடாது என்ற எண்ணத்தில், ”சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம் அர்ஜுன், நீ கிளம்பு!” என்று சொல்லி அவனை அங்கிருந்து அனுப்ப முயன்றார்.

ஆனாலும் மகனின் முகம் இன்னமும் சிந்தனையில் மூழ்கி இருப்பதைக் கண்டவர், “என்ன அர்ஜுன்?? என்னாச்சு??” என்று கேட்க,

“இந்த பிரேஸ்லெட்டை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு மாம். ஆனா எங்கேன்னு தான் தெரியலை” என்று வருந்திக் கூறியவனின் பதிலில் லேசாகத் திடுக்கிட்டுப் போனார் வசுந்தரா, ஒருவேளை அர்ஜுன் தான் இதை வாங்கி இருப்பானோ என்று??

‘அவனுக்கே அது நியாபகம் இல்லையோ?’ என்ற எண்ணத்தில் குழம்பிப் போனவர், அதை வெளிக்காட்டாது யாழினியின் நிலை உணர்ந்து, மகனின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி மீண்டும் அதை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்தவர், “நீ இப்போ டின்னருக்குக் கிளம்பு அர்ஜுன்! நீ திரும்பி வந்ததும் நாம இதைப் பற்றி விரிவா பேசுவோம்” என்றார்.

தாயின் நோக்கம் புரிந்தவனும், “ஓகே மாம்” என்று அங்கிருந்து கிளம்ப முயன்ற நேரம், அவனுடன் செல்ல வேண்டிய யாழினி, கொஞ்சமும் அசையாது அங்கேயே நின்று இருப்பதைக் கண்ட தாயும், மகனும் அவளைப் புரியாது பார்த்து இருந்த வேளை, டேபிளில் இருந்த அந்தப் புகைப்படத்தையே அதுவரை உற்று நோக்கிக் கொண்டு இருந்த யாழினி, குனிந்து அதைக் கையால் எடுத்து அருகில் வைத்துப் பார்த்தாள்.

‘என்ன செய்கிறாள் இவள்?’ என்று அனைவரும் அவளையே  பார்த்துக் கொண்டு இருந்த வேளை, அவர்களையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்துவது போல, “இதை நான் பார்த்து இருக்கிறேன்” என்று சொன்னாள் யாழினி.

அதைக் கேட்டு அர்ஜுனும், வசுந்தராவும் ஒரே நேரம் அவளிடம், “வாட்??” என்று கேட்டு விட்டு, “எப்போ?? எங்கே?? யாரிடம்??” என்று அடுத்தடுத்துக் கேட்டனர்.

அதில் ஜெர்க்காகிப் போய் யாருக்குப் பதில் சொல்வது என்று புரியாது திருதிருவென முழித்தவளைக் கண்டு, முதலில் தன்னிலை அடைந்த வசுந்தரா, மகனின் கைப் பிடித்து அவனை அமைதியாக இருக்கும்படி கண்ஜாடை காட்டி விட்டு, யாழினியை நெருங்கி மெதுவான குரலில், “இந்த பிரேஸ்லெட்டை எங்கே பார்த்தேன்னு உனக்கு எதாவது நியாபகம் இருக்கா யாழினி?” என்று கேட்டார்.

“அது.. அது..” என்றவாறு சில நிமிடங்கள் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்தவள், “ஹா…” என்று கூவியயபடி கண்கள் விரிய, “இதை நான் ரீட்டா கையில் பார்த்து இருக்கேன்” என்று சொல்லியதைக் கேட்ட வசுந்தரா, “யார் அந்த ரீட்டா?” என்று யாழினியிடம் கேட்க, ஆனால் பதில் வந்தது என்னவோ அர்ஜுனிடமிருந்து.

அதைக் கேட்டு “என்னது??” என்று ஷாக்காகிப் போன வசுந்தரா,

அதன்பின், “இதற்கு மேல் இதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க கிளம்புங்க!” என்று சொல்லி மகனையும், யாழினியையும் அங்கிருந்து அனுப்பி வைத்தவர்,

அந்தப் புகைப்படத்தையே சில நிமிடங்கள் விழி அகலாது பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஏற்கனவே போலீஸ் கொடுத்த ரிப்போர்ட்டில், அந்த பிரேஸ்லெட் ஒரு யூனிக் பீஸ் என்றும், அதைப் போன்ற இன்னொரு மாடல் எங்கும் இல்லை என்பதும் மிகத் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

அதை வைத்துப் பார்க்கும் பொழுது வசுந்தராவுக்கு ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது, ‘இந்த ரீட்டாவுக்கும், இந்த வழக்குக்கும் ஏதோ ஒருவிதத்தில் சம்பந்தம் இருக்கு’ என்று.

எவிடென்ஸ் கிடைத்தும், ஒன்றும் பேசாது மௌனமாக இருக்கும் வசுந்தராவை நோக்கி எழுந்து வந்த அருண், “அதான் இது யாருடையதுன்னு தெரிஞ்சுடுச்சே மேடம், போய் அவுங்களை விசாரிச்சுடுவோமா?” என்று ஆர்வம் மேலோங்கக் கேட்டான்.

“நோ அருண்!” என்று தீர்க்கமாக அதற்கு மறுப்பு தெரிவித்தார் வசுந்தரா.

அவரின் பேச்சைக் கேட்டு குழம்பிப் போனவன், “ஏன் மேம்?” என்று கேட்க,

“உனக்கு நான் விளக்கம் சொல்வதற்கு முன், நீ இதற்குப் பதில் சொல்!” என்றவரிடம், “கேளுங்க மேம்!” என்றான் அருண்.

“ஒரு பி.ஏவால இவ்ளோ காஸ்ட்லியான ஒரு டைமண்ட் பிரேஸ்லெட்டை வாங்க முடியுமா???

சரி, அப்படியே வாங்கி இருந்தாலும், அதற்கான பணம் அவளுக்கு எங்கே இருந்து வந்தது???

ஒரு வேளை அது அவளுடைய பணம்ன்னே கூட வச்சுக்கிட்டாலும், அந்த பில் ஏன் அர்ஜுன் பேர்ல ரிஜிஸ்ட்டர் ஆகி இருக்கு? என்பதை விட எப்படி ஆச்சு?” என்றவரின் எந்தக் கேள்விக்கும் அருணால் மட்டுமில்லை, அவனைப் போல யோசித்துக் கொண்டு இருந்த மற்றவர்களாலும் விடை அளிக்க முடியாது போனது. அவர்களின் அமைதியில் இருந்தே அதைக் கணித்த வசுந்தரா,

பின் அவரே அதற்கான விளக்கத்தையும் கொடுக்க ஆரம்பித்தார். “என்னோட கெஸ் சரின்னா, கண்டிப்பா ரீட்டாக்கு பின்னாடி மட்டுமில்லை, இந்த பிரேஸ்லெட்டுக்கு பின்னாடியும் யாரோ வேற ஒருத்தங்க இருக்காங்க

யார் அது??? அது தான் இப்போ என்னுடைய கேள்வி?” என்று நெற்றிச் சுருக்கத்துடன் பேசியவரின் பேச்சைக் கேட்ட ஜோசப், “அதை அவுங்களையே புடிச்சு கேட்கலாமே மேம்?” என்று கேட்க,

“ம்ம்ம்கூம்.. இவ்வளவு நாள் வாயை திறக்காது இருக்கிறவ, நாம சாதாரணமா எல்லாம் கேட்டா உண்மையைச் சொல்ல மாட்டா” என்று பதிலளிக்கவும், “அப்போ நாம வேணா போலீஸ்கிட்ட இதுக்காக உதவி கேட்கலாமா மேம்?” என்று இன்னொரு ஜுனியர் ஆலோசனை கொடுக்க, “ம்ம்ம்..‌ கேட்கலாம்..

ஆனா அவர்களிடமும் ரீட்டா “எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமே இல்லை”ன்னு அடிச்சு சொல்வா. அப்புறம் அவுங்களால மட்டும் என்ன செய்ய முடியும்? அது எல்லாம் வேஸ்ட் ஆப் டைம்!” என்றார்.

“பேசாம மணியைத் தூக்கின மாதிரி, இவளையும் தூக்கி, காட்டு காட்டுன்னு காட்டி உண்மையை வரவழைச்சுடலாம் மேம்” என்ற ஜோசப்பின் வீராவேசம் கண்டு, அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த வசுந்தரா,

“மணி விஷயம் வேற, ரீட்டா விஷயம் வேற ஜோசப். மணி விஷயத்தில் அவன் தான் நமக்கு தேவைப்பட்டான். அதனால தான் அவனைத் தூக்குனோம். ஆனா ரீட்டா விஷயத்தில் எனக்குத் தேவை அம்பு இல்லை, அதை எய்தவன்!” என்றவரின் தீர்க்கம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, அருணுக்கு மிகத் தெளிவாகப் புரிந்து விட்டது, வசுந்தரா ஏதோ ஒரு வியூகம் அமைக்கப் போகிறார் என்று..

அதன்படி “அடுத்து நாங்க என்ன செய்யணும்?” என்று தன் தளபதியாக முன்னே வந்து நின்று கேட்டவனின் அந்தப் புரிதலில், அவனை ஆழ்ந்து பார்த்து மெச்சியவர், கண்களைச் சுருக்கி, “ஒரு பள்ளம் தோண்டணும் அருண்” என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவனும், “தோண்டிட்டா போச்சு மேம்!” என்றான், அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

சொன்னது மட்டுமில்லாது, உடனே ரீட்டாவின் பின் இருப்பவனைக் கண்டுபிடிக்க, அவளைக் கண்காணிக்க என்று தங்கள் ஜூனியரில் இருவரை நியமித்து இருந்தான் அருண்.

ஆனால் அவர்கள் ஒரு வாரமாக அவளை ராவும், பகலும் வேவு பார்த்தும், ஒரு விஷயமும் அவர்களுக்குக் கிட்டவில்லை.

“ஆபீஸ் விட்டால் வீடு, வீடு விட்டால் ஆபீஸ்! இதற்கு நடுவில் சில நேரம் ஷாப்பிங்கைத் தவிர வேற எதுவும் சந்தேகப்படும்படி இல்லை மேடம்” என்று தகவல் கொடுத்த ஜுனியர்களின் வார்த்தைகளை நிதானமாக உள்வாங்கிய வசுந்தராவோ,
“ஏன் இல்லை?” என்று மர்மம் நிறைந்த புன்னகையுடன் கேட்டார்.

அவரின் பேச்சு புரியாதவர்கள், அதையே வார்த்தைகளில் அவரிடம் கேட்க,

“அவள் செய்த ஷாப்பிங் பொருட்களின் விலையைக் கவனியுங்கள்! உங்களுக்கே அதற்கான விடை தெரியும்” என்று சொல்லிச் சென்ற பின் தான், அதைக் கணக்கு போட்டுப் பார்த்தவர்களுக்குத் தலை சுற்றியது.

பின்னே? எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண பி.ஏவால் எப்படி இவ்வளவு ஆடம்பரமாகச் செலவு செய்ய முடியும்? ‘அப்போ மேடம் சொன்னபடி யாரோ ஒரு பெரிய பணக்காரன் தான் இவளுக்காகப் பின்னாடி இதையெல்லாம் செய்கிறான் என்பது இதுல இருந்தே தெளிவாகிடுச்சே!’ என்று எண்ணும் போதே, “அடச்சே! இதை நாம கவனிக்காம விட்டுட்டோமே?” என்று தங்களைத் தானே கொட்டிக் கொண்டார்கள்.

ரீட்டாவின் ஆடம்பர செலவுகளுக்கும், இந்த கேஸுக்கும் பின் இருக்கும் அந்த மர்ம நபர் யார் என்று வசுந்தரா இன்னும் ஆழமாக ரீட்டாவைத் தோண்டி பார்த்ததில், அவளுடைய பெர்சனல் போன் லிஸ்டில் இருந்த அந்த அன்டைம் அழைப்பாளியின் அழைப்புகள் கவனிக்கும்படி இருந்ததால், உடனே அது பற்றிய விவரத்தைச் சேகரிக்கும்படி அருணிடம் சொல்லி இருந்தார்.

அவர் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தவனின் கையில் இருந்த காகித தகவலைப் படித்தவருக்கும் பேரதிர்ச்சி!! ஏனென்றால், அதில் இடம் பெற்று இருந்தது, ரீட்டாவின் பாஸும் அர்ஜுனின் தந்தையுமான  அருணாச்சலத்தின் பெயரல்லவா?!!!

ரீட்டா, அருணாச்சலத்தின் பி.ஏ என்பதை முன்பே மகன் மூலம் வசுந்தரா அறிந்து தான் இருந்தார். ஆனால் தன் பி.ஏவாகவே இருந்தாலும், நேரம் கெட்ட நேரத்தில், அதுவும் அவளின் பெர்சனல் நம்பருக்கு அருணாச்சலம் இவ்வளவு மணி நேரம் கால் செய்து பேசி இருப்பதை ஏனோ வசுந்தராவால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!

அதன்படி எவ்வாறு அருணாச்சலத்திடம் இது பற்றிக் கேட்பது  என்று அவர் சிந்தித்துக் கொண்டு இருந்த போது தான், அர்ஜுன் விரக்தியின் உச்சத்தில் நின்று தாயிடம் போர்டு மீட்டிங் பற்றியும், தன் தந்தையின் ஆணவம் பற்றியும் வெறி கொண்டு புலம்பியது.

ஒரு தாயாகத் தன் மகனின் காயத்துக்கு மருந்து போடாமல் வசுந்தராவால் எப்படி இருக்க முடியும்??

அதனாலேயே அந்த நேரம் அர்ஜுனிடம் வசுந்தரா துணிந்து சொன்னார், “நாளைக்கு போர்டு மீட்டிங் நடக்காது” என்று!

அதன்பின் நொடியும் தாமதிக்காது, தான் சொன்னதைச் செயல் படுத்த எண்ணி, தன்னுடன் அருணையும் கூட்டு சேர்த்துக் கொண்டு அருணாச்சலத்திற்கு எதிராக களத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார் வசுந்தரா.

தங்கள் திட்டப்படி அருணாச்சலத்தின் அலுவகத்துக்கே அவரைத் தேடிச் சென்றவர், முதலில் தன் வார்த்தைகளால் அவரை உசுப்பேத்தி விட்டு நிதானமிழக்கச் செய்து, பிரேஸ்லெட் பற்றிய பேச்சைத் தங்களுக்குள் தற்செயலாகக் கொண்டு வருவது போல கொண்டு வந்து பேசினார்.

ஆனால் அது தெரியாத அருணாச்சலமும், பிரேஸ்லெட் என்ற வார்த்தை கேட்டதுமே, தன்னை மீறி பதட்டத்தில் அது பற்றியே தோண்டி தோண்டி வசுந்தராவிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.

அப்பொழுதே ரீட்டா என்ற அம்பை எய்தவன் இவன் தான் என்று வசுந்தராவுக்குத் தெரிந்து விட்டது

அது தெரிந்ததும், அவனை அங்கே வெட்டிப் போடும் ஆத்திரம் வந்த போதும், அதையெல்லாம் மகனுக்காக அடக்கிக் கொண்ட வசுந்தரா, தன் திட்டத்தின் இறுதி பகுதியாக, தான் கொண்டு வந்து இருந்த சிறு மைக்கை அங்கே இருந்த டேபிளின் கீழே பேச்சு வாக்கில் மறைத்து வைத்து விட்டு, அங்கிருந்து கிளம்பி நேராக நகை கடைக்குச் சென்றார்.

அங்கே நகை கடைக்காரனுடன் பேசி விட்டு எழுந்த வசுந்தரா, அருணுக்கு விழிகளால் செய்கை செய்து விட்டு அந்த  ஓனரின் கையை குலுக்கிய நேரம், தன் போனில் இருந்து வசுந்தராவின் போனுக்கு ஒரு அழைப்பை விடுத்து, அவர் இன்னொரு கையில் வைத்திருந்த போனை ஆன் செய்யவும், தன் போனை அங்கேயே மறைவாக வைத்து விட்டு வெளியேறி இருந்தான் அவன்.

வசுந்தரா  எதிர்பார்த்தது போலவே, அவர்கள் இருவரும் கிளம்பிய அடுத்த நொடி, அந்த நகைக்கடை முதலாளி அருணாச்சலத்திற்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அதில், “ஹப்பா! எப்படியோ நகை கடைக்காரன் சொன்னதை வசுந்தரா நம்பி விட்டாள்” என்று அதிகமாகவே தெம்பாகிப் போனார் அருணாச்சலம்.

ஐயோ! பாவம்! அவருடைய தெம்பு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகப் போகிறது என்று அவர் அறியவில்லை!

Advertisement