Advertisement

மீடியாக்களின் பரபரப்புக்கு மத்தியில், இன்றைய துளசியின் கொலை வழக்கு ஹியரிங்கில், அரசாங்க வக்கீலின் பேச்சு ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அதிகமாகவே மேலோங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

நீலகண்டன் சமர்ப்பித்த ஆதாரங்கள், சாட்சிகள் எதையுமே வசுந்தரா கிராஸ் கேள்வி கேட்கவில்லை.

அதற்குக் காரணம், அவர் மறுத்து வாதாட அதில் எதுவுமே இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையும் தாண்டி குற்றவுணர்வில் தத்தளித்துக் கொண்டு இருந்தார் அவர். அதற்குக் காரணம், சற்று முன் அர்ஜுன் ஒரு முரடன் என்று வாதாடிய நீலகண்டன் அதற்காக ஒளிபரப்பிய வீடியோ ஆதாரம்!

அதில் அவன் ஒரு ஷாப்பிங் மாலில் யாழினியைத் திட்டித் தீர்த்தது மட்டுமில்லாது, அடங்காத கோபத்தில், அங்கே இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து இருந்தான். அதைக் காணும் பொழுதே, வசுந்தராவின் கண்கள் தானாகத் தன் மகனை நோக்கித் தான் சென்றது.

அதே நேரம் அவனும் அவரைத்தான் பார்த்திருந்தான்.

“மகனின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணமோ???” என்று வசுந்தராவும், “தாய் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்?” என்று அர்ஜுனும் தள்ளாடியதை அவர்களின் விழி தவிப்பில் இருந்தே  மற்றவர்களால் தெளிவாகப் படிக்க முடிந்தது.

“வசுந்தரா! உங்களுக்கு ஏதாவது சொல்லணுமா?” என்று நீதிபதி ஒளிபரப்பப்பட்டு இருந்த அந்த வீடியோ காட்சியைச் சுட்டிக் காட்டி கேட்க,

எழுந்து நின்று, “நோ யுவர் ஆனர்!” என்று சொல்லித் தன்னிருக்கையில் அமர்ந்திருந்தார் வசுந்தரா.

அந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவருக்குமே, “என்னாச்சு இவுங்களுக்கு? போன ஹியரிங்கில் அந்தப் போடு போட்டாங்க. இந்தத் தடவை இப்படி அமைதியா இருக்காங்க?” என்ற எண்ணமே மேலெழுந்தது.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், கோபம் வந்தால், எந்தளவுக்கு வெறியுடன் நடந்து கொள்வார் என்பதை நம்முடைய சாட்சிகளும், ஆதாரங்களும் மிகத் தெளிவாக நமக்குச் சொல்லி விட்டன.

தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணையே, ஒரு பொது இடமென்றும் பாராது, மிரட்டி பணிய வைக்க துணிந்த இவர், யாருமில்லாத இடத்தில தன்னிடம் மாட்டிய அந்த அப்பாவி பெண்ணை மட்டும் விட்டு வைத்து இருப்பாரா என்ன???” என்று தோளைக் குலுக்கிப் பேசிக் கொண்டு இருந்தவரின் ஏளன பார்வை வசுந்தராவை ஒரு நொடி தொட்டு மீண்டது.

“இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் மிகவும் ஆணித்தரமாகச் சொல்ல விரும்புகிறேன் யுவர் ஆனர்! மிஸ்டர்.அர்ஜுன் இதுவரை இந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று எந்த இடத்திலும் மறுக்கவே இல்லை. தனக்கு நியாபகமில்லை என்று மட்டுமே தான் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்.

அர்ஜுனைத் தவிர வேறு யாருமே இல்லாத இடத்தில், இவர் கூட இருந்த பெண்ணை வேறு யார் கொலை செய்து இருக்க முடியும் யுவர் ஆனர்?

அதனால் தேவையில்லாது குற்றவாளியை வெளியே நடமாட விடாது, உடனே பிடித்துச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இந்தக் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையை அவருக்கு வழங்க வேண்டுமென்றும் நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்!” என்று தம் பிடிக்காத குறையாக ஏற்ற இறக்கங்களுடன் பேசி முடித்து அமர்ந்தவரின் கையைப் பிடித்து குலுக்கினர், அவரின் ஜூனியர் வக்கீல்கள் “செம சார்!” என்று!

அதில் தன்னைச் செறுக்காகப் பார்த்த நீலகண்டனை அசால்ட்டான லுக் விட்டார் வசுந்தரா. அந்தப் பார்வையில் வெளிப்பட்ட தெனாவெட்டில் லேசாகக் குழம்பிப் போனார்  நீலகண்டன். 

ஆனாலும் இதுவரை வாதாடாத இவர், “இனி வாதாடி இந்த கேஸில் என்னத்தை கிழித்து விட முடியும்?” என்ற இறுமாப்பு கொடுத்த திடத்தில் புன்னகை மாறாது அமர்ந்து இருந்தார் அவர்.

நீதிபதி தீர்ப்பை எழுதி விடவா? என்று தன்னை ஒரு முறை பார்ப்பதைக் கண்டு, மேசையை அழுத்திக் கொண்டு நீலகண்டனைப் பார்த்து, ‘நீ நினைப்பதற்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவள்டா நான்!’  என்பது போல கம்பீரமாக எழுந்து நின்றார் வசுந்தரா.

அவரின் செயலைக் கண்டு, “உங்களுக்கு ஏதாவது சொல்லணுமா வசுந்தரா?” என்று கேட்ட நீதிபதியிடம், “எஸ் யுவர் ஆனர்!” என்று சொன்னவரையே தான் அங்கிருந்தவர்கள் ஆர்வம் தாங்காது பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“அரசாங்க வக்கீல் சொன்ன விசயங்களில் எனக்கு ஒரே ஒரு திருத்தம் பண்ணனும்” என்று நிதானமாகச் சொன்னவரின் பேச்சைக் கேட்டு, நிதானமிழந்து எழுந்து நின்ற நீலகண்டன், “மறுபடியும் அர்ஜுன் அந்தக் கொலை செய்யவில்லை என்ற பழைய பாட்டை பாட்டை பாட போகிறார் போல யுவர் ஆனர்!” என்றவர் நக்கலாக கொக்கரிக்கவும், “நான் பாட போவது பழைய பாட்டு இல்லை யுவர் ஆனர், இது கொஞ்சம் புதுசு!” என்று அவர் போட்ட பந்தையே அவருக்குத் திருப்பி அடித்தார் வசுந்தரா.

“எஸ் ப்ரொசீட்!” என்ற நீதிபதியின் வார்த்தைகளைக் கேட்டு “மிஸ்டர்.நீலகண்டன் சொன்னார், அர்ஜுனைத் தவிர யாருமில்லாத இடத்தில் துளசியை யார் கொன்று இருக்க முடியுமென்று? அதில் தான் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் யுவர் ஆனர்!” என்று சொன்னவரின் பேச்சு புரியாது நீதிபதி அவரைப் பார்க்கவும்,

“லெட் மீ கிளியர் யூ” என்று சொன்ன வசுந்தரா,

“சம்பவம் நடந்த அன்று அங்கே அர்ஜுன் மட்டுமில்லாது வேறு ஒருத்தரும் இருந்து இருக்கார்” என்று அடித்துச் சொன்னதில், “இது என்னடா புது ட்விஸ்ட்??” என்று மொத்த நீதிமன்றமும் அதிர்ந்து போனது.

“என்ன சொல்றீங்க வசுந்தரா? யார் அது?” என்று கேட்ட நீதிபதியிடம், “துளசியை ஒன்சைடா லவ் செய்த புளியந்தோப்பு மணி தான் அது யுவர் ஆனர்!” என்று சொன்னார் வசுந்தரா.

“இது ஒரு கட்டுக்கதை யுவர் ஆனர்!” என்ற நீலகண்டனின் வார்த்தையில், “அப்படியா? அதையும் தான் பார்த்திடுவோமே!” என்று சொல்லி, அங்கே ஓரமாகப் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த போலீஸ் உயர்அதிகாரியை அவர் நோக்கவும், அவர் தனக்கு அருகில் இருந்த உதவியாளருக்குச் செய்கை செய்தார்.

அதிகாரியின் விழி செய்தியைப் படித்தவனும், உடனே எழுந்து வெளியே சென்று திரும்பும் போது, கூடவே புளியந்தோப்பு மணியைக் கைவிலங்கு இட்டு அழைத்து வந்திருந்தான்.

மணியைக் கண்டதும், ‘எவன் வர மாட்டான், சாட்சி சொல்ல மாட்டான்’ என்று நினைத்திருந்தாரோ, அவனையே கண் இமைக்கும் நொடியில் இழுத்து வந்து நிறுத்திய வசுந்தராவை அதிசயித்துப் பார்த்த நீலகண்டன், உடனே, “இந்தச் சாட்சி செல்லாது!” என்று முழங்க ஆரம்பித்தார்.

“ஏன்?” என்று கேட்ட வசுந்தராவுக்கு, “இந்தச் சாட்சி பற்றி எந்தவித முன்னறிவிப்பும் கோர்ட்டுக்கு சமர்ப்பிக்கப் படவில்லை” என்று பதில் கொடுத்தார் நீலகண்டன்.

“சற்று முன் தான் இவனை போலீசார் கண்டுபிடித்து அரெஸ்ட் செய்தனர் யுவர் ஆனர்! அதனால் தான் சாட்சிகள் லிஸ்டில் இவன் பெயரைச் சேர்க்க முடியவில்லை” என்று தன்னிலை விளக்கம் வசுந்தரா கொடுப்பதைக் கேட்ட அந்த உதவி போலீஸ், “என்னது?? இவனை நாங்க பிடித்தோமா?? இது எப்போ??” என்ற ரீதியில் தன் உயர் அதிகாரியைப் பார்த்து வைத்தார்.

அவரோ, ‘எப்படியோ நமக்கு நல்ல பெயர் கிடைத்தால் சரி’ என்று வசுந்தராவின் பேச்சுக்கு, “ஆமாம் யுவர் ஆனர்!” என்று ஒத்து ஊதிக் கொண்டு இருந்தார் நீதிபதியிடம்.

அதைக் கண்ட உதவி போலீசோ, “சரி தான், அந்த அம்மா சொல்லிக் கொடுத்தை எப்படி பெர்பார்ம் பண்ணிட்டு இருக்கார் பார்!!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

போலீசின் வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதி மணியின் சாட்சிக்கு ஒப்புதல் அளிக்கவும், வசுந்தரா தன் வாதத்தை முன்வைக்க ஆரம்பித்தார்.

“யுவர் ஆனர்! துளசி இருக்கும் ஏரியாவில் தான் இந்த மணியும் இருக்கிறான். மூன்று வருடங்களுக்கு முன் துளசியை ஒரு விசேஷத்தில் பார்த்து விட்டு, அன்றிலிருந்து அவளை ஒரு தலையாக காதல் செய்து இருக்கிறான். ஆனால் துளசி இவனைக் காதலிக்க மறுத்து விட்டாள்.

அன்றிலிருந்து பலமுறை அவளிடமும், அவள் பெற்றோரிடமும், பல இடங்களில், அவளைத் தனக்குக் கட்டித் தரச் சொல்லி தகராறு புரிந்து இருக்கிறான்.

இந்த நிலையில் தான், துளசி வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயத்திற்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறார்கள். அதைக் கேள்விப்பட்டு, ஆத்திரத்துடன் அவர்கள் வீட்டுக்குத் தன் அடியாட்களுடன் சென்றவன், துளசியிடம், “எனக்குக் கிடைக்காத உன்னை எவனுக்கும் கிடைக்க விட மாட்டேன்!!” என்று எச்சரித்து இருக்கிறான்.

அவனின் அராஜகத்தில் பயந்து போன துளசியின் பெற்றோர், அந்த ஏரியாவை விட்டே வேறு ஏரியாவுக்கு, ராத்திரியோட ராத்திரியாக வீட்டை காலி செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள்

இதனால் வெறியாகி போன மணி, அவளைத் தேடிக் கொண்டு அவள் வேலை செய்யும் வீட்டுக்கே சென்று இருக்கிறான்.

அவனைக் கண்டு பதறிப் போன துளசி, அவனிடம் எவ்வளவோ கெஞ்சியும், “அவளைக் கொன்னுடுவேன்” என்று மிரட்டி இருக்கிறான்.

பங்களாவின் வெளியே இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்த நேரம், அப்பொழுது வீடு திரும்பிய அர்ஜுன், மணியின் செய்கையில் சந்தேகம் கொண்டு அவர்களை நோக்கிச் சென்று, என்னவென்று கேட்டு இருக்கிறான்.

துளசி நடந்ததைச் சொல்லவும், கோபம் கொண்ட அர்ஜுன், அவனையும் அவனின் அடியாட்களையும் செக்யூரிட்டி கொண்டு அடித்து விரட்டாத குறையாக விரட்டி, “ஒழுங்கா இங்கே இருந்து ஓடிப் போய்டு! இனி இவகிட்ட நெருங்கின, உன்னை நானே போலீசில் பிடித்துக் கொடுத்துடுவேன்” என்று எச்சரித்து இருக்கிறான்.

அதில் காண்டாகிப் போனவன் “ஏய்! என்னையே ஆளை வச்சு மிரட்டுறியா? இனி நீ காலிடி. ஏய்! நீயும் தான்டா..” என்று துளசியையும், அர்ஜுனையும் தீர்த்துக் கட்டுவேன் என்று சவால் விட்டு விட்டே அங்கு இருந்து கிளம்பி இருக்கிறான்.

அதற்கு ஆதாரம், அங்கே வேலை செய்பவர்களின் வாக்குமூலம் மற்றும் சிசிடிவி பூட்டேஜ்” என்று சிலவற்றை நீதிபதியிடம் சமர்ப்பித்தார் வசுந்தரா.

“சம்பவம் நடக்கிற சில தினங்களுக்கு முன்பில் இருந்தே துளசியை மணியின் ஆட்கள் பின் தொடர்ந்து இருக்கிறார்கள். அதற்கான புகைப்படங்கள் இதோ!” என்று அதையும் நீதிபதியிடம் ஒப்படைத்த வசுந்தரா, அதை அவர் பார்த்து முடிக்கவும்,

“ஏற்கனவே அர்ஜுன் மற்றும் துளசியைக் கொல்லும் வெறியில் இருந்த மணி, சம்பவம் நடந்த அன்றைக்கு துளசியைப் பின்தொடர்ந்து அர்ஜுனின் கெஸ்ட் ஹௌஸ்க்குப் போய் இருக்கிறான். அங்கே அர்ஜுன் போதையில் நினைவு இழந்து கிடப்பதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, துளசியின் கதையை முடித்து விட்டு, அந்தப் பழியை அர்ஜுனின் மீது போட்டு விட்டு, அங்கிருந்து வந்த தடமே தெரியாது தப்பி விட்டான். இது தான் அன்று அங்கே நடந்த சம்பவம் யுவர் ஆனர்!” என்றார் வசுந்தரா.

“உன் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒத்துக்கிறியா?” என்று கேட்ட நீதிபதிக்கு, “சார், நான் அந்தப் பெண்ணைக் காதலித்தது உண்மை! மிரட்டியது உண்மை! காலி பண்ணுவேன்னு சொன்னது கூட உண்மை! ஆனா எங்க அம்மா மேல சத்தியமா நான் அவளைக் கொலை செய்யலை சார்” என்று மறுத்து ஒரு குண்டை தூக்கிப் போட்டான் மணி.

அதைக் கேட்டு நீதிபதி பேசும் முன் எழுந்த நீலகண்டன், “ப்ளீஸ்! நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்! மணி இந்தக் கொலையை செய்யவில்லை என்று சொல்லுகிறார்” என்பதைக் கேட்ட வசுந்தரா எழுந்து, “எந்தக் குற்றவாளி தான் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டு இருக்கிறார் யுவர் ஆனர்?” என்று முந்தைய ஹியரிங்கில் நீலகண்டன் அர்ஜுனைப் பார்த்துச் சொன்னதையே இப்பொழுது அருக்குத் திருப்பி அடித்ததில் வாயடைத்துப் போனார் நீலகண்டன்.

அதுமட்டுமில்லை.. ‘துளசியைக் காதலித்தேன், பின்தொடர்ந்தேன், சாவடிப்பேன்னு சொன்னேன்னு ஒத்துக்கிட்டவன், கொலை மட்டும் செய்யலைன்னு சொன்னா யார் தான் ஒத்துப்பாங்க?’ இதற்கு எல்லாம் மேலாகத் தன் வார்த்தைகளை வைத்தே தன்னை மடக்கிய வசுந்தராவின் தந்திரத்தில் மாட்டிக் கொண்டு முழிப்பவரால், அதற்கு மேல் என்னவென்று வாதாட முடியும் என்ற நிலை!

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிக்கு, “அர்ஜுன் தான் இந்தக் கொலையை செய்தான் என்பதற்கு எந்தவொரு சாலிடான சாட்சியோ, ஆதரங்களோ இல்லை. அதே நேரம், மணி இந்தக் கொலையைச் செய்தானா இல்லையா என்பதை இனி தான் போலீஸ் கண்டுபிடித்துச் சொல்லணும்” இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில், யாரை குற்றவாளி என்று தன்னால் தீர்ப்பளிக்க முடியும் என்று திணறியவர், “இந்த கேஸை இன்னும் இரு வாரங்கள் ஒத்தி வைக்கிறேன்” என்று அறிவித்தார்.

தீர்ப்பைக் கேட்டு மணியைக் காவலர்கள் அழைத்துச் செல்லவும், வசுந்தராவின் அருகில் வந்த அந்த உயர் அதிகாரி, அவனைப் பிடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்ல, “ஆக்சுவலி இதில் நான் எதுவுமே செய்யவில்லை சார். என்னுடைய ஜூனியர்கள் தான் இவனை டிடெக்டிவ் வைத்துப் பிடித்து உங்ககிட்ட ஒப்படைத்து இருக்கிறார்கள்” என்று கூலாகப் பதிலளிக்கவும், அவர்கள் அனைவரையும் பார்த்தவர், “வெல்டன் பாய்ஸ்!” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பாராட்டினார்.

அதைக் கேட்டவர்களோ கோரசாக, “இருக்கட்டும்! இருக்கட்டும் சார்!” என்று முப்பத்திரண்டு பல்லையும் காட்டிச் சொன்னார்கள்.

அந்நேரம், “அப்புறம் நான் சொன்னதை மட்டும் மறந்துடாதீங்க சார்!” என்று வசுந்தரா அறிவுறுத்தவும், “என்ன மேடம் இப்படிச் சொல்லீட்டீங்க? அதைப் போய் நான் மறப்பேனா? இவனை நாங்க பிடிச்சதாதான் ரெக்கார்ட் பண்ணி இருக்கோம். அதுமட்டுமில்ல, உங்க பசங்க அவன் முகத்தை மூடியே வச்சு உதைத்ததால, அவனும் நாங்க அவனைப் பிடிச்சதாதான் நினைச்சுகிட்டு இருக்கான். சோ உங்க ஜுனியர்களுக்கு இவனால் பின்னால எந்தப் பாதிப்பும் இருக்காது. டோன்ட் வொர்ரி!” என்றவரிடம் கைக் குலுக்கி, “தேங்க்ஸ் சார்!” என்று சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தார் வசுந்தரா.

ஒரு தாய் தன் குட்டியைப் பாதுகாப்பது பெரிதல்ல! ஆனால் அதே போல் மற்ற குட்டிகளையும் பாதுக்காக நினைப்பதை என்னவென்று சொல்வது என்ற நிலையில் தான், அந்நேரம் ஜூனியர்கள் அனைவரும் வசுந்தராவின் செயலில் வியந்து, அவரை நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அருண் ஏன் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாது, வசுந்தரா சொல்லும் அனைத்தையும் செய்து முடிக்கிறான் என்பதை அந்நேரம் மானசீகமாக மற்றவர்களாலும் உணர முடிந்தது.

தன்னைத் தேடி வந்த மகனைக் கண்டு அவனிடம் வசுந்தரா பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, அவனைத் தேடி அங்கு வந்த அருணாச்சலம், அர்ஜுனிடம் மீண்டும் சின்ன வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“டாட்! இது தான் பைனல்.. நான் மாம் கூடத்தான் இருக்கப் போறேன். உங்களுக்கு என்ன?? உங்க ஆபீசை நான் பார்க்கணும், அவ்ளோ தானே? நான் நாளைக்கே கம்பெனிக்கு வரேன், போதுமா?” என்ற மகனின் பேச்சில் கொதித்து எழுந்த அருணாச்சலம்,

“என்னடா.. சும்மா மாம் மாம்ன்னு உளறிகிட்டு இருக்க.. உன்னை எப்பவோ விட்டுட்டுப் போனவ அவ. இத்தனை வருஷமா உன்னை வளர்த்தவன் நான். அதை மறந்துடாத!” என்று கர்ஜிக்கும் குரலில் சொன்னதைக் கேட்டு அவரின் புறம் திரும்பிப் பார்த்தவன்,

“என்னது?? விட்டுட்டுப் போனாங்களா? அவுங்களைப் போக வச்சது நீங்க!” என்று அவரே நடுங்கும்படி இடியாக இடித்தவன்,

“இந்த இடத்தில், ஐ வான்ட் டூ கிளியர் ஒன்மோர் தின்க்.. நீங்க என்னை வளர்க்கலை, நான் தான் அதுக்கு உங்களை அனுமதிச்சேன்.. காட் இட்??” என்று உறுமினான்.

வசுந்தரா முன்பு தன்னை இழிவுபடுத்தியவன், தன் மகனாகவே இருந்தாலும், அவனை மன்னிக்கத் தயாராக இல்லாதவர் ஆக்ரோஷமாக, “இதற்கு நீ சீக்கிரமே அனுபவிக்கப் போற அர்ஜுன்!” என்று சீறி விட்டு அங்கிருந்து  வெளியேறிச் சென்றார்.

அர்ஜுன் அவனின் தாயுடன் இருப்பது, பலவித பேச்சுக்களை கம்பெனி மற்றும் உறவினர்கள் மத்தியில் உண்டாக்குவதைப் பொறுக்க முடியாமலும், “எங்கே தன் மகன் அவனின் தாயிடமே சென்று விடுவானோ?” என்ற எண்ணத்திலும் தான், அருணாச்சலம் இன்றும் அவனை வீட்டுக்கு வரும்படி சொன்னது.

ஆனால் அவன் இப்படித் தன்னை அவமானப்படுத்துவான் என்று தெரிந்து இருந்தால், அவர் அவன் இருக்கும் பக்கம் கூடப் போயிருக்க மாட்டாரோ என்னவோ?!

கோர்ட் அறையை விட்டு வெளியே வந்த நீலகண்டனின் போன் அலறியதில், அதை எடுத்துப் பார்த்தவருக்கு முகம் வெளிறியது.

அதில் சுற்றும் முற்றும் பார்த்தபடி யாருமில்லாத இடமாகச்  சென்று, போனை அவர் ஆன் செய்து காதுக்குக் கொடுக்கவுமே, அந்தப் பக்கமிருந்து அடித்த அனலில், அவரின் காது ஜவ்வு கிழியாது போனதே அதிசயம்!

“இல்லங்க, நான் ஸ்ட்ராங்க்காத்தான் வாதாடினேன். ஆனா அந்த அம்மா கடைசி நிமிடத்தில் இப்படி ஒரு ட்விஸ்டை கொண்டு வந்து நிறுத்துவாங்கன்னு நான் கனவிலும் நினைக்கவில்லை” என்று தன் கணக்கில் வந்து விழுந்து கொண்டு இருக்கும் பல லட்சங்களுக்காக, அப்படிப் பம்மிக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.

மறுபுறம் அதற்கு என்ன பதில் கொடுத்தார்களோ?? உடனே இவர், “என்னை நம்புங்க! அடுத்த ஹியரிங்கில் அர்ஜுன் உள்ளே போவது உறுதி! இந்த தடவை மணியை வைத்து அந்த அம்மா கேஸைத் தள்ளி வச்ச மாதிரி அடுத்தமுறை அவுங்களால தப்பிக்க முடியாது” என்று தேன் தடவி பேசியவரின் பேச்சைக் கேட்டு அந்தப் பக்கம் லேசாகச் சூடு குறைந்தது போன்று உணர்ந்தவர், ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

இறுதியாக, “கேஸ் நம்ம பக்கம் ஸ்ட்ராங்கா அர்ஜுனுக்கு எதிரா இருக்கு. சோ நெக்ஸ்ட் ஹியரிங்கில் அர்ஜுன் உள்ளே போவது உறுதி!” என்று தலையில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்தவரின் பேச்சைக் கேட்டு மறுபுறம் என்ன வந்ததோ, “கண்டிப்பா.. கண்டிப்பா..” என்று ஆயிரம் தடவை தலையாட்டி விட்டு போனை வைத்திருந்தார் நீலகண்டன்.

வீராவேசமாக கோர்ட்டை விட்டு வெளியே வந்த அருணாச்சலம், உடனே போனை எடுத்து தன் இரண்டாவது மகனுக்கு அழைத்தார். மறுபுறம் எடுக்கப் படாது அவனின் அழைப்பு செகண்ட் லைனில் போவதைக் கண்டு எரிச்சலடைந்தவர், மீண்டும் அவனுக்கு அழைத்த போதும், அவன் லைனுக்கு வரவில்லை.

“அப்படி யாருடன் பேசிக் கொண்டு இருக்கிறான் இந்த இடியட்?” என்று மகனைத் திட்டியவர், உடனே நேராக வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்.

போன் பேசி முடித்துத் தன் காரை நோக்கிச் சென்று ‌கொண்டு இருந்த நீலகண்டன், அங்கே தன் காருக்காக வசுந்தரா காத்திருப்பதைப் பார்த்து அவரின் அருகில் சென்றவர், “இன்னைக்குத் தப்பிச்சுட்டீங்க.. ஆனா அடுத்த தடவை இதே மாதிரி அர்ஜுனைத் தப்பிக்க வைக்க முடியாது மேடம்!” என்று சொல்வதைக் கேட்டு, அவரின் புறம் திரும்பிய வசுந்தரா பதில் ஏதும் உரைக்கவில்லை.

இதான் சாக்கு என்று, “அந்த மணி இந்தக் கொலையை செய்யலைன்னு, அடுத்த ஹியரிங்கில், நான் ஆதாரத்தோடு ப்ரூவ் பண்ணி காமிக்குறேன்னா இல்லையான்னு பாருங்க!” என்று வீர வசனம் பேசி விட்டு அங்கிருந்து சென்றவரை சொடுக்குப் போட்டு அழைத்தார் வசுந்த்ரா.

அவரின் செய்கையில் கோபம் எழுந்தாலும், என்னதான் சொல்கிறார் என்று கேட்க நினைத்தவர், “என்ன?” என்று கேட்க,

“ரொம்ப எல்லாம் ஓவரா ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க மிஸ்டர்.நீலகண்டன்! ஏன்னா நானே அடுத்த ஹியரிங்கில் அவன் குற்றவாளி இல்லைன்னு சொல்லிடுவேன்” என்று அசராது சொன்ன பதிலில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டார்  நீலகண்டன்.

“வாட்??” என்று அதிர்ந்தவர், “குற்றவாளி இல்லைன்னு தெரிஞ்சும், இவ்ளோ சிரமப்பட்டு அவனை எதுக்குப் பிடிச்சு இங்கே கூட்டிட்டு வந்தீங்க?” என்று ஹை-பிட்ச்சில் குரலை உயர்த்திக் கேட்டார்.

“கொஞ்சம் சுருதியை இறக்குங்க!” என்று அவரிடம் செய்கை செய்த வசுந்தரா, “ம்ம்ம்.. அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்னு, என் பையனை உள்ளே போக விடாம பண்ண எனக்கு ஒரு பலி ஆடு தேவைப் பட்டது.  இரண்டாவது, ஒரு பொண்ணு காதலிக்கலைன்னா அவளைச் சித்ரவதை செய்வானா அவன்? அதுக்காகத்தான் அவனை உள்ளே தூக்கிப் போட்டேன்” என்றவரின் பதிலைக் கேட்டு, “எந்த அளவுக்கு இந்த அம்மா ப்ளான் பண்ணி இந்த கேசில் காய் நகர்த்தி இருக்கிறது??” என்பதை உணர்ந்து, நிஜமாகவே அந்நேரம் நீலகண்டன் அதிகமாகவே ஷாக்காகித்தான் போனார்.

“ஒரு வக்கீலா இருந்துகிட்டு ஒரு நிரபராதியை உள்ளே தள்ளி இருக்கீங்களே, இது உங்களுக்கே நியாயமா?” என்றவரை அசால்ட்டாகப் பார்த்த வசுந்தரா, “இல்லையே!” என்று சொன்னதைக் கேட்ட நீலகண்டன் தான் அயர்ந்து போனார்..

எந்தப் பக்கம் போனாலும் இந்த அம்மா கோல் அடிக்குதே என்று!

தன்னுடைய கார் வரவும், அதன் பக்கவாட்டு கதவைத் திறந்து உள்ளே ஏற போன வசுந்தரா, என்ன நினைத்தாரோ?? தன்னையே அசையாது பார்த்து இருக்கும் நீலகண்டனிடம், “நான் உள்ளே தூக்கிப் போட்டவன் என்ன காந்தியா? இல்லை காமராஜரா? நான் கூனி குறுக! அவனே ஒரு பொறுக்கி.. அவனெல்லாம் இவ்ளோ நாள் வெளியே இருந்ததே தப்பு! இதுல அவனைத் தூக்கி உள்ளே போட்டதுக்கு நான் ஏன் சார் வருத்தப்படணும்?” என்று நச்சென்று சொல்லியதில், நடுமண்டையில் யாரோ நறுக்கென்று கொட்டியது போன்று உணர்ந்தார் நீலகண்டன்.

“பார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன், இந்த கேஸில் இருந்து அவன் உங்களால் வெளியே வந்தாலும், நான் அவன் மேலே போட போற பல இல்லீகல் கேஸில் இருந்து, இனி அவன் ஆயுசுக்கும் வெளியே வரவே மாட்டன்னு தான் நினைக்குறேன்” என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு, காரில் ஏறி சென்றவரையே பார்த்து நின்று கொண்டு இருந்த நீலகண்டனுக்கு, ‘தெரியாத்தனமா இந்த கேஸில் ஆஜர் ஆகி, ஒரு பெண்புலி வாலை பிடித்து விட்டோமோ?” என்ற பீதி உண்டாகியது.

‘பின்னே! வக்கீல்ன்னா கேஸில் இருக்கும் குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க பார்த்து இருப்போம். இவர் என்னன்னா, குற்றம் செய்தவன் எவனா இருந்தாலும் அவனுக்கு நான் தண்டனை வாங்கி கொடுப்பேன்னுல்ல சொல்றார்’ என்று நினைக்கும் போதே, வசுந்தராவிடம் தான் மாட்டினால் தனக்கான தண்டனை என்னவாக இருக்குமோ? என்ற  பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கினார் நீலகண்டன்.

வீடு வந்து சித்ராவிடம் தன் மகன்கள் மீதான கோபத்தையெல்லாம் கொட்டிய அருணாச்சலம், “விஷ்வாவை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்லு!” என்று சொல்லி விட்டுத் தன்னுடைய அலுவலக அறைக்குச் சென்றார்.

மகனைத் தேடி அவனது அறைக்குச் சென்ற சித்ரா,
“அப்பா போனை ஏன்டா எடுக்கலை” என்று கேட்க,

தாயின் கேள்விக்கு அவரைப் பார்க்காது எதையோ ஷெல்பில் தேடியபடி, “என் ப்ரென்ட் கூட முக்கியான விஷயம் பேசிக்கிட்டு இருந்தேன் மாம். இப்போ என்னவாம் அவருக்கு?” என்று பதில் கொடுத்தான் அவன்.

அவனைத் தன்புறமாகத் திருப்பி நிற்க வைத்த சித்ரா,
“என்கிட்ட எதுவும் பொய் சொல்றியா விஷ்வா?” என்று அவனின் கண்ணைப் பார்த்துக் கேட்டதும் தான் தாமதம்! விஷ்வாவின் முகம் அரண்டு போனது.

ஆனாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாது, “வாட்?? அப்ப.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே..” என்று இழுத்து மறுத்தவனின் பதிலைக் கேட்டவர்,

“இல்ல, நீ பொய் சொல்லும் போது மட்டும் தான் என்னைப் பார்த்து பேச மாட்ட, அதான் அப்படிக் கேட்டுட்டேன். சரி, அதை விடு! உங்க அப்பா கோர்ட்டில் இருந்து வரும் போதே ரொம்ப சூடா வந்தாரு. உன்னை  அவரோட ஆபீஸ்க்கு வரச் சொல்லி இருக்கிறார். என்னன்னு கொஞ்சம் போய் கேட்டுட்டு வந்திடு!” என்று சொல்ல, “அப்புறம் போறேன் மாம்” என்ற மகனை உடனே அங்கிருந்து கணவனைப் பார்க்க வம்படியாகப் பிடித்துத் தள்ளி அனுப்பி வைத்தார் சித்ரா.

தந்தையின் ஆபீஸ் அறை கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றவனைத் திட்டித் தீர்க்கப் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு, எதிர்மறையாக, அவன் உறைந்து போகும் அளவுக்கு ஒரு விஷயத்தைச் சொன்னார் அருணாச்சலம்.

தான் கேட்டதைக் கொஞ்சமும் நம்ப முடியாது, “ஆர் யூ சூர் டாட்??” என்று கேட்டான் விஷ்வா.

கொஞ்சமும் பிசிர் தட்டாது, “ஐ அம் டாம் சூர்!” என்று அவனின் பொட்டில் அறைந்தார் போல உறுதியாகச் சொன்னார் அருணாச்சலம்.

தந்தையின் வார்த்தைகளைக் கேட்டவனுக்குச் சத்தியமாக ‘அடுத்து என்ன நடக்கப் போகுதோ?’ என்று தான் திகிலாக இருந்தது.

*********

மணியை உள்ளே தள்ளி மகனை வெளியே வைத்து இருப்பது, தற்காலிகமான தீர்வு மட்டுமே என்பதை நன்கு அறிந்து இருந்த வசுந்தராவுக்கு, நன்கு தெரியும், அடுத்த ஹியரிங்கிற்குள் இந்த கேஸில் அர்ஜுனுக்குச் சாதமாக எதாவது ஒரு சாலிடான எவிடன்சை தான் கண்டுபிடித்தாக வேண்டுமென்று..

அதன்பொருட்டு குற்றம் நடந்த இடம், அங்கே கைப்பற்றப்பட்ட பொருட்கள், அங்கே எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்று போலீசிடம் இருந்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை தன் டீமுடன் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தவருக்கு, அப்பொழுது தான், அவரின் அவ்வளவு நேர தேடலின் பலனாக ஒரு சிறு பொறி  மாட்டியது.

அதை வைத்து எப்படி எவிடென்சைக் கண்டுபிடிப்பது என்று அவர் திட்டம் வகுத்துக் கொண்டு இருந்த நேரம் தான், ருத்ரமூர்த்தியாக தான் அணிந்து இருந்த கோட்டை கழட்டி வீசி எறிந்தபடி வீட்டினுள் வந்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.

மகனின் கோபமும், அதற்குப் பின்னான காரணமும் அறியாத வசுந்தரா, தன்னுடன் இருந்த ஜுனியர்களை, “நீங்க செக் பண்ணிட்டு இருங்க, நான் வந்திடுறேன்” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறி, மகனை நோக்கிச் சென்றார்.

ஹால் சோபாவில் தலை சாய்த்து கண் மூடி இருக்கும் மகனின் அருகில் சென்று அமர்ந்தவர், அவனின் நெற்றியை வருடியபடி, “என்னாச்சு அர்ஜுன்? எதுக்கு இவ்ளோ டென்ஷன்?” என்று கேட்கவும், கண் திறந்து தாயைப் பார்த்தவன், உடைந்து போய் பேச ஆரம்பித்தான்.

“இந்த கேஸை சாக்கா வைத்து, என்னை கம்பெனி சிஇஓ போஸ்டிலிருந்தும், கம்பெனியிலிருந்தும் தூக்கி எறிய டாட் முடிவு பண்ணி, நாளை மதியம் போர்டு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்கார் மாம்” என்றவனின் குமுறலை பொறுமையாகக் கேட்ட வசுந்தரா,

“இந்த போஸ்ட்டுக்காகவா இவ்ளோ டென்ஷன் ஆகுற?” என்று கேட்டார்.

தன் நிலை புரியாது பேசும் தாயிடம், அந்நேரம் முதல் முறையாகத் தன் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தான் அர்ஜுன்.

“இது வெறும் போஸ்ட் இல்லை மாம், என்னுடைய இத்தனை வருட தவம்!” என்ற மகனின் வார்த்தை புரியாது, “என்ன சொல்ற?” என்று பார்த்தவருக்கு, தன் விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.

“மிஸ்டர்.அருணாச்சலத்துடைய எந்த கெளரவம், பணம், அந்தஸ்து உங்களை என்கிட்டே இருந்து பிரிச்சதோ, அதையெல்லாம் அவர்கிட்ட இருந்து நான் பிரிக்க நினைச்சேன் மாம். அதுக்காகத்தான் நீங்க கூப்பிட்டும் உங்க கூட வராமல், அவர் கூட இத்தனை வருஷம் இருந்தேன்.

கம்பெனிக்குள்ள நான் நுழையவுமே, அவருக்கே தெரியாமல், ஏஜே கம்பெனி ஷேர்ஸ் அனைத்தையும் என்னுடைய பினாமிஸ் பேர்ல கொஞ்சம் கொஞ்சமா வாங்க ஆரம்பிச்சேன்.

உண்மையைச் சொல்லணும்ன்னா யாழினியை நான் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சதே, அவளுடைய நம்ம கம்பெனி ஷேர்ஸ்க்காகத்தான் மாம்” என்று சொல்லும் போது வசுந்தராவின் பார்வை தன்னில் கூர்மை அடைவதை உணர்ந்த அர்ஜுன்,

நிமிர்ந்த பார்வையுடன் தாயைப் பார்த்துச் சொன்னான்.. “அது முன்னாடி, நாட் நவ்! இப்போ நான் அவளுக்காகவே அவளை காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன் மாம். ஐ ஸ்வேர்!” என்று சொல்லும் பொழுதே அவனில் வெளிப்பட்ட உண்மையை வசுந்தராவால் உணர்ந்து கொள்ள முடிந்ததில் அவரின் பார்வை தானாகத் தணிந்தது.

“பட் இவ்ளோ வருஷம் நான் எதுக்காக இத்தனையும் கஷ்டப்பட்டு செஞ்சேனோ, அது நாளைக்கு மண்ணோடு மண்ணாகப் போறதை நினைச்சா தான், என்னால அதைத் தாங்கிக் கொள்ளவே முடியலை மாம்! என்னால அவர்கிட்ட எல்லாம் தோக்கவே முடியாது மாம்! அதுக்கு நான் செத்தே போய்டலாம்” என்று சினத்தின் உச்சியில் இருந்து கத்துபவனைக் கைப் பிடித்து அடக்கி உட்கார வைத்தார் வசுந்தரா.

மகனின் வார்த்தைகளில் அவனின் வலியை உணர்ந்து துடித்து, “அர்ஜுன்! அர்ஜுன்! இங்கே பாரு! இங்கே பாரு!” என்று தன் முகத்தைப் பார்க்க வைத்தவர்,

“நாளைக்கு அந்த மீட்டிங் நடக்காது! யாரும் உன்னை உன் பதவியில் இருந்து தூக்க முடியாது!” என்று அழுத்தமாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டவன்,

“இட்ஸ் இம்பாசிபிள் மாம்! ஏற்கனவே எல்லா போர்டு ஆப் டைரக்டர்ஸ்க்கிட்டயும் டாட் பேசிட்டார். சோ நாளைக்கு ஒரு பார்மாலிட்டிக்காகத்தான் அந்த மீட்டிங்கையே நடத்த போறாங்க” என்று பொருமும் மகனின் வார்த்தைகளைக் கேட்ட வசுந்தரா, இந்த முறை இன்னும் நிதானமாக, ஆனால் ஆணித்தரமாகச் சொன்னார்.

“அந்த மீட்டிங்கே நாளைக்கு நடக்காது! என்னை நம்பு அர்ஜுன்! ரிலாக்ஸ் ஆகு!” என்றவரின் உறுதியில் ஆழ்ந்து அவரைப் பார்த்தவன், ஒன்றும் சொல்லாது அங்கிருந்து எழுந்து தன்னறை சென்ற நேரம், பரிமளத்தைக் கூப்பிட்டு, “அர்ஜுனுக்கு சூடா டீ போட்டுக் கொண்டு போய் கொடு!” என்று சொல்லி அனுப்பி வைத்தார் வசுந்தரா.

தன்னறையில் பலத்த சிந்தனை வயப்பட்டு அமர்ந்து இருந்தவரைத் தேடி வந்த அருண், “என்னாச்சு மேடம்? எனிதிங் சீரியஸ்?” என்று கேட்டதும், அவனை நிமிர்ந்து பார்த்தவாறு எழுந்து நின்ற வசுந்தரா,

“நாட்டையே ஆளுறவனா இருந்தாலும், அடிப்பட்ட சிங்கத்தின் மீது கல்லெறிந்தால் அவன் என்ன ஆவான்னு காட்ட வேண்டிய நேரம் வந்திடுச்சுன்னு நினைக்குறேன் அருண்” என்று அர்த்தத்துடன் சொல்லியவரை ஆழ்ந்து பார்த்தவனுக்கு, வசுந்தரா  அடுத்த வேட்டைக்குத் தயார் ஆகி விட்டார் என்பது புரிந்து போனதில், அவனின் இதழ்கள் லேசாகப் புன்னகைத்தது.

Advertisement