Advertisement

தன் மகன், தனக்காகவே தன்னைப் பிரிந்து தனிமை தீயில் ஒரு பெருந்தவமிருந்து இருக்கிறான் என்று அறிய நேர்ந்த போது, நிஜமாகவே வசுந்தராவுக்குச் சந்தோஷத்திற்கு மாறாக நெஞ்சம் அடைத்தது.

ஏனென்றால் அவனைப் பிரிந்து இருந்த நாட்களில் தனிமை கொடுத்த வலியில், தான் கேட்டும் அர்ஜுன் தன்னுடன்  வராததுக்குக் காரணம், ஒருவேளை அருணாச்சலத்தின் பணமாக இருக்குமோ? என்று அவர் எண்ணி இருக்கிறார்.

ஆனால் இன்று அவன், ‘நான் அப்படியில்லை!’ என்பதை விட, ‘உங்களுக்கான நீதியை வாங்கவே நான் இத்தனையாண்டுகள் உங்களைப் போலவே தனிமை சிறையில் தனித்தே வாழ்ந்தேன்’ என்று சொல்லாமல் சொல்லியதில், வசுந்தராவால் தன் தவறு உணர்ந்து விம்மி அழாமல் இருக்க முடியவில்லை.

சில நிமிட போராட்டத்திற்குப் பின், கண்ணீரை துடைத்தெறிந்து நிமிர்ந்தவரின் முன் அருணாச்சலத்தின் முகமே வந்து நின்றது.

அதில் செந்தணலாக முகம் கொதிக்க, தன்னையும் தன் மகனையும் இந்த நிலைக்கு ஆளாக்கிய அருணாச்சலத்தைத் தோற்கடிக்க, அவரிடம் இருக்கும் துருப்பு சீட்டை எங்கே எப்படி நகர்த்தி அவரை லாக் செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருந்த நேரம் தான், அவரை நோக்கி வந்த அருண், “என்னாச்சு மேம்? ஏதாவது பிரச்சனையா?” என்று அர்ஜுன் குறித்து விசாரித்தவனிடம், அடுத்து என்ன செய்ய போகிறேன் என்பதைச் சொன்னார் வசுந்தரா.

அவர் சொல்வது புரிந்தாலும், ராஜாவைப் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லையே என்பதில், “எப்படி அதைச் செய்ய போறீங்க மேம்?” என்று கேட்க,

“நான் சொல்றபடி மட்டும் நீ செய்திடு! மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்று அவன் செய்ய வேண்டிய விஷயங்களைச் சொல்லி முடித்தவர், அவனின் தோளைத் தட்டி விட்டு, “நான் கிளம்புறேன்” என்று தன் ஹான்ட் பேகை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிச் சென்றார்.

**********

“ஏஜே க்ரூப்ஸ் ஆப் கம்பெனிஸ்” என்று வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்று இருந்த அந்த பல அடுக்கு கண்ணாடி கட்டிடத்தை காரை விட்டு இறங்கி ஒருமுறை நிமிர்ந்து பார்த்த வசுந்தரா, அதன் பிரம்மாண்டத்தில் துளியும் வியந்து போகவில்லை. மாறாக ஒரு ஏளன பார்வையைத்தான் அதன் மீது  உதிர்த்தார்.

லிப்டில் ஏறி அருணாச்சலத்தின் அலுவலக தளம் நோக்கிச் சென்றவர், அங்கே இருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் அவர் வந்த காரணம் கூறவும்,

“அப்பாயின்ட்மென்ட் இருக்கா மேடம்?” என்று நுனி நாக்கு இங்கிலீசில் கேட்டாள் அந்த அவள்.

“நான் உங்க சீஇஓவோட அம்மா!” என்று அவளை விடக் கம்பீரமாகச் சொன்னவரின் ஆளுமையில் அரண்டு போனவள், இண்டர்காமை எடுத்துத் தன் பாஸிடம் விஷயத்தைச் சொன்னாள்.

அர்ஜுனுக்குத் தான் கொடுத்த அடியில், தானாகத் தன்னிடம் கெஞ்ச வந்து விட்டாளா? என்று வசுந்தராவின் வருகை கொடுத்த இறுமாப்பில் கொக்கரித்த அருணாச்சலம், அவரின் கெஞ்சலைக் கேட்கத் துடிக்கும் ஆர்வம் தாங்காது, “உடனே அவுங்களை உள்ளே அனுப்பு!” என்று சொல்லி இண்டர்காமை வைத்தார்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவருக்கு மரியாதை கொடுத்து, வா என்றோ, உட்காரு என்றோ சொல்லாது, தன் கோட்டை சரி செய்தவாறு, தன் இருக்கையில் இருந்து எழுந்து, அந்த நீண்ட நெடிய ஆடம்பர அறையின் மறுபக்கம் போடப்பட்டு இருந்த சோபாவில் சென்று சாய்ந்து அமர்ந்து கொண்டு, “என்ன விஷயம்?” என்று தெனாவெட்டாகக் கேட்டார் அருணாச்சலம்.

‘நீ யாரடா எனக்கு மரியாதை கொடுக்க?’ என்ற தோரணையில், அவருக்கு முன்னே இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு கெத்தாக வந்து அமர்ந்தார் வசுந்தரா.

அந்தச் செயலில் முகம் கறுத்துப் போன அருணாச்சலம், உடனே அவரும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு, “வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்பு! எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று கறார் காட்டினார்.

“லுக்! அர்ஜுன்..” என்று வசுந்தரா ஆரம்பிக்கவுமே, அவரின் பேச்சை கைத் தூக்கி தடுத்து நிறுத்தி இருந்த அருணாச்சலம், வெற்றிப் புன்னகையுடன், “என்ன?? உன் மகனுக்காக என்கிட்ட கெஞ்ச வந்தியா?” என்று நக்கலாகக் கேட்டு விட்டு, சோபாவில் சற்று முன்னே வந்து வசுந்தராவின் முகத்தை நேருக்கு நேராகச் சந்தித்து, “உன்னால் தான் உன் மகனுக்கு இந்த நிலைமையே! உன்கிட்ட நான் முன்பே சொல்லி இருக்கிறேன். உன் நிழல் அவன் மீது பட்டாலும், உன்னை மட்டுமல்ல அவனையும் நான் சும்மா விட மாட்டேன்!” என்று கொடூர குரலில் சொன்னவர்,

“அப்படி இருந்தும், அம்மாவும் பையனும் சேர்ந்துகிட்டு என்கிட்டயே ஆட்டமா காட்டுறீங்க ஆட்டம்?? அதுக்குத்தான் வச்சேன் பாரு உன் பையனுக்கு ஆப்பு! ஏன்னா எனக்கு நல்லா தெரியும், அவனுக்கு வலிச்சா அவனை விட அதிகமா  உனக்கு வலிக்கும்ன்னு.. இதைத்தான் எங்க ஊரில் ஒரே கல்லில் ரெண்டு மாங்கான்னு சொல்லுவாங்க” என்று இப்பொழுது சோபாவில் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ் ஆனவரையே மிடுக்கான பார்வை பார்த்து இருந்த வசுந்தரா, “ச்ச்சூ! ச்சு! அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டீயே அருணாச்சலம்!” என்று மறுப்பாகத் தலையசைத்து உச்சு கொட்டியதில் கொதித்துப் போனவர், “என்ன நக்கலா?” என்று கேட்டார்.

“நோ! இட்ஸ் ஆ பேக்ட்!” என்று சீரியஸ் முகத்துடன் பதில் கொடுத்த வசுந்தரா, மேலும், “நீ  எனக்கு வலிக்கணும்ன்னு என் மகனை அடிச்ச. ஆனா பாரு, இதற்காக இனி நீ தான் அதிகமா துடிக்கப் போற” என்றதில் நெற்றிச் சுருங்க அவரைப் பார்த்தவரின் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது பயத்தில்.

“என்ன சொல்ற?” என்றவரின் பேச்சைக் கேட்காது, “வெல்! அப்போ நான் கிளம்புறேன்” என்று தன் கையில் அணிந்து இருந்த கடிகாரத்தை நோட்டமிட்டு விட்டு அங்கிருந்து கிளம்ப போனவரை, “ஏய்! இப்போ எதுக்கு இங்கே வந்த?” என்று அடங்காத கோபத்தில், அதை அறிய வேண்டிய வேகத்துடன் கேட்டார் அருணாச்சலம்.

தன் நடையை நிறுத்தி, அவரைத் திரும்பிப் பார்த்த வசுந்தரா, “உன்னை எச்சரிக்க!!” என்று அசால்ட்டாக கொடுத்த பதிலில், நிஜமாகவே ஆடிப் போய் விட்டார் அருணாச்சலம்.

‘என்ன நடக்குது இங்கே? அவளைக் கெஞ்ச வைக்க நான் நினைத்து இருக்க, அவளோ, என்னையே அவளிடம் கெஞ்ச வைத்துக் கொண்டு இருக்கிறாளே?’ என்று மனதிற்குள் புலம்பித் தீர்த்தவர், வெளியில் அதைக் காட்டாது, “புரியும்படி சொல்லு!” என்று கேட்டார்.

“உன்னைக் கடைசியா ஒருதடவை எச்சரிக்கை பண்ணலாம்ன்னு  வந்தேன். பட் நீ அதுக்கெல்லாம் தகுதியே இல்லாதவன்னு வந்தவுடனே தெரிஞ்சுகிட்டேன். சோ என்னோட பிளான் கான்செல்!” என்று தோளைக் குலுக்கியவரின் பேச்சில் ஏகத்துக்கும் பிபி ஏறிப் போனார் அருணாச்சலம்.

“யாரு யாருக்கு எச்சரிக்கை விடுவது?? நான் தி கிரேட் அருணாச்சலம் டி!” என்று இரண்டு கைகளை இருபுறமும் நீட்டிச் சொன்னவரை அற்ப பார்வை பார்த்தவர், “சோ வாட்??” என்று எடக்கு பார்வையைத் தன் முன் இருப்பவருக்குப் பதிலாகக் கொடுத்தவர், “லிசன்! நீ என்ன நினைச்ச?? உன்னோட இந்த போர்டு மீட்டிங் அண்ட் அர்ஜுனோட டிஸ்போஸல் இதுக்காக இந்த வசுந்தரா உன்கிட்ட வந்து கெஞ்சுவான்னு நினைச்சியா?? நோ! நெவர்! அது உங்கனவிலும் நடக்காது!” என்று ஆணித்தரமாக ஒரு விரல் ஆட்டிச் சொன்னவர்,

“என்னுடைய பையனுக்கு இந்தப் பதவியும், உன்னுடைய இந்த சாம்ராஜ்யமும் தேவையா இருந்தா, அதை எப்படி டேக் ஓவர் பண்ணனும்ன்னு அவனுக்கே நல்லா தெரியும்!

ஆனா நீ இந்த கேஸை வச்சு அவனை கார்னர் பண்ணது ரொம்பத் தப்பு! ரொம்ப ரொம்பத் தப்புன்னு சொல்லிட்டுப் போகத்தான் நான் வந்தேன். ஆனா நான் சொல்றதைக் கேட்குற நிலைமையில் நீ இல்லைன்னு தெரிந்த பிறகும், உன்னோட பேசுவது வீண் இல்லையா?? அதான் கிளம்பிட்டேன்

அண்ட் ஒன் மோர் தின்க், நாளைக்கே நீ என் பையனை இந்த கேஸை வச்சு அவன் பதவியில் இருந்து தூக்கினாலும், அவன் மேல இருக்கிற கறையைப் போக்கி, மீண்டும் அவனை இந்தப் பதவியில் என்னால உட்கார வைக்க முடியும்! ஏன்னா அவனும் இந்த கம்பெனியின் முக்கிய ஷேர் ஹோல்டர்! சோ அதுக்காக எல்லாம் உன்கிட்ட வந்து நானோ, என் பையனோ வந்து கெஞ்சுவோம்ன்னு நினைச்சா, உன்னை விட ஒரு பெரிய முட்டாள் யாருமில்லை” என்று பேசி முடித்தவரின் வார்த்தைகளைக் கேட்டு அனலாக அவரை முறைத்த அருணாச்சலம்,

“இது ஒன்னும் கோர்ட் இல்லை, நீ சொல்றபடி எல்லாம் நடக்க! இது என்னுடைய கோட்டை! இங்கே நான் சொல்றது மட்டும் தான் நடக்கும்!”

“ஒஹ்ஹ அப்படியா?? அது எல்லாம் அடுத்த ஹியரிங்கில் அர்ஜுன் நிரபராதின்னு நிருபித்து வெளியே வரும் வரை தான் மிஸ்டர்.அருணாச்சலம்!” என்று சொல்லியவரின் வார்த்தைகளில் லேசாக ஜெர்க் ஆனார் அருணாச்சலம்.

ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை, அவருடைய இந்த சாம்ராஜ்ஜியத்தை, அர்ஜுனை விடப் பொறுப்பாக வேறு யாராலும் கட்டி ஆள முடியாது என்பது மிக உறுதியாகத் தெரியும். அப்படியிருந்தும் அவர் இந்த முடிவுக்கு வந்ததற்குக் காரணம், இரண்டு வலுவான காரணங்கள்.

ஒன்று, இந்த கேஸில் இருந்து அர்ஜுன் வெளியே வருவான் என்ற நம்பிக்கை அவருக்குப் போயிருந்தது.

இரண்டாவது, தாயையும் மகனையும் ஒரே நேரத்தில் அடித்துத் தன்னை எதிர்க்கும் மகனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அதனாலேயே அவர் இந்த போர்டு மீட்டிங்கை அர்ஜுனுக்கு எதிராக திட்டம் போட்டுக் கூட்டினார்.

அவர் கணக்குப்படி, ஒன்று அர்ஜுன் அவனின் சம்ராஜ்ஜியதிற்காகத் தன் காலடியில் வந்து விழுவான். இல்லையென்றால், கண்டிப்பாக அவனுடைய அம்மா அவனுக்காக வந்து விழுவாள் என்பது தான்.

ஆனால் அது இரண்டுமே இல்லாது, இப்பொழுது தன் மகன் கேஸில் இருந்து வெளியே வந்து விடுவான் என்று வசுந்தரா இவ்வளவு நம்பிக்கையாகச் சொல்வதைக் கேட்பவரால் எப்படி அதை அலட்சியமாக விட முடியும்?

ஏனென்றால் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.. அர்ஜுன் அவனின் குற்றத்தில் இருந்து விடுபட்டால், அவனால் அவனுடைய பதவியை மீண்டும் அடைய முடிகிற அதே நேரம், தன்னைச் சும்மா விட மாட்டான் என்றும் தெரியும்!

அதை நினைத்துப் பார்க்கும் போது லேசாக வேர்க்க ஆரம்பித்தது அருணாச்சலத்திற்கு. இது ஆத்திரப்படும் தருணம் இல்லை என்பதை உணர்ந்தவர் வசுந்தராவிடம், “அர்ஜுன் வெளியே வந்துடுவானா? உனக்கு கான்பிடன்ஸ் இருக்கா?” என்று குரலை தாழ்த்திக் கேட்டார்.

“கண்டிப்பா! அது இல்லாமையா இவ்ளோ தைரியமா உன்கிட்ட சாவல் விட்டுக்கிட்டு இருக்கேன்?” என்றவரிடம், “எப்படி?” என்று அருணாச்சலம் கேட்ட நேரம் வசுந்தராவின் போன் அலறியது.

மறுபக்கம் என்ன பேசினார்களோ?? அதற்கு வசுந்தரா, “அருண்! கடைக்குப் போய்ட்டியா? அந்த ப்ரேஸ்லெட் பற்றி எதாவது இன்பெர்மேஷன் கிடைச்சதா?

…..

…..

என்ன எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்களா..??

லிசன் அருண்! அர்ஜுன் அந்த பிரேஸ்லெட்டை வாங்கலைன்னு சொல்றான். அவனை வெளில கொண்டு வர நமக்கு இருக்கிற ஒரே ஹோப் அது மட்டும் தான்!” என்றவர், சில நிமிட அமைதிக்குப் பின், “சரி, நீ அங்கயே இரு! நான் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லித் தன் போனை அணைத்து ஹான்ட் பேக்கில் போட்டவரிடம், “என்ன பிரேஸ்லெட்?” என்று கேட்டார் அருணாச்சலம்.

அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காது, “இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸினெஸ்!” என்று வெடுக்கென்று சொல்லி விட்டு வெளியே வந்தவரின் முகத்தில் வெற்றிப் புன்னகை ஒன்று தாண்டவம் ஆடியது.

அருண் தனக்காகக் காத்திருந்த கடைக்குள் சென்ற வசுந்தரா, அவன் அழைத்துச் சென்று நிறுத்திய ஓனரின் பெர்சனல் அறையில் தன்னைத்தானே அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டவர், “ஆர் யூ சூர் இந்த பிரேஸ்லெட் அர்ஜுன்ற பேர்ல தான் வாங்கப்பட்டு இருக்கா??” என்று கேட்டார்.

சற்றுத் திடமாகவே, “எஸ் மேம்! அவர் பேர்ல தான் பில் ஆகி இருக்கு. இதைத்தான் நான் முன்பே போலீசிடம் சொல்லிட்டேனே?” என்றவரை முழுதாக உள்வாங்கியவரோ, அவர் பேசி முடிக்கவும், தன் பார்வையை மாற்றிக் கொண்டு, “எங்க கன்பர்மேஷனுக்காக ஒரு ரீசெக், அவ்ளோ தான்! தாங்க் யூ பார் யுவர் இன்பர்மேஷன்!” என்று இன்முகமாகச் சொல்லி விட்டு, அவருக்குக் கைக் கொடுத்து விட்டு அங்கிருந்து அருணுடன் வெளியேறினார்.

பூகம்பம் வரப் போகிறது என்று எதிர்பார்த்து இருந்தவருக்கோ, வந்து சென்றவரைக் காணும் போது பூனையாகத் தெரிந்தது. ‘இதுக்காகவா இவ்ளோ பயந்தோம்?’ என்று சென்று கொண்டு இருந்த வசுந்தராவைக் கண்டுகொண்டு இருந்தவருக்குச் சிரிப்புத்தான் வந்தது.

பாவம்! அவருக்குத் தெரியவில்லை, வந்தது பூனையில்லை புலி என்று!!

அதுவும் அது பாயத்தான் பதுங்கிச் சென்று இருக்கிறது என்பது தெரிய வரும் போது, அவர் என்ன நிலைமைக்கு ஆளாகப் போகிறாரோ??

அந்தக் கடைக்கு வெளியே இருந்த காரில் சென்று அமரவும், அவசர அவரமாகத் தன் ஹான்ட் பேக்கில் இருந்த போனை வெளியே எடுத்து, அதை ஸ்பீக்கரில் போட்டார் வசுந்தரா.

சிறிது நேரத்தில் அதில் இருந்து, “நீங்க சொன்னபடியே சொல்லிட்டேன் சார். இல்ல இல்ல.. டௌட் எதுவும் அவர்களுக்கு வரலை. நான் சொன்னதை நம்பி உடனே கிளம்பிட்டாங்க.

….

….

டோன்ட் வொர்ரி சார்! யார் வந்தாலும் நான் இதையே சொல்லிடுறேன்” என்று சொல்லி போனை வைத்த நகைக்கடை முதலாளியின் பேச்சு மிகத் தெளிவாக வசுந்தராவுக்குக் கேட்டது. அதை ரெக்கார்ட் செய்து முடித்தவர் அருணைப் பார்க்கவும், தலையசைத்து விட்டு காரை விட்டு இறங்கி மீண்டும் கடைக்குள் சென்றான் அவன்.

நேராக ஒனரின் பெர்சனல் ரூமுக்குள் கதவைத் தட்டி விட்டுச் சென்றவன், அங்கே டீ டேபிளின் மீது இருந்த தன் போனை எடுத்தவாறு, “சாரி சார்! மறந்துட்டு போயிட்டேன்” என்று சொல்லவும், “இட்ஸ் ஒகே சார்” என்றவருக்கு, அப்பொழுது கூட அது தனக்கு விரித்த வலை என்று புரியாது போனது அந்தோ பரிதாபம்..!!

அந்த அறையை விட்டு வெளியே வரவும், முதல் வேலையாக, தன் போனில் இருந்து வசுந்தராவின் போனுக்கு அழைக்கப்பட்ட அழைப்பை புன்னகையுடனே கட் செய்தான் அருண்.

காரில் முன்பக்கம் டிரைவர் சீட்டில் வந்தமர்ந்த அருண், “எப்படி மேம் இப்படி?” என்று அதிசயித்துக் கேட்க,

“எல்லாம் ஒரு கெஸ் தான்!” என்று அவனுக்குப் பதில் தந்தவர்,

“நான் போட்ட தூண்டில்ல இப்போதைக்கு மீன் தான் மாட்டி இருக்கு அருண், ஆனா எனக்கு தேவை திமிங்கலம்!

இப்போ இந்த மீனை வைத்து அந்த திமிங்கலத்தைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு. லெட்ஸ் கோ!” என்று சொன்னவரின் பேச்சில் இருந்த வீரியம் புரிந்தவனும், உடனே காரை கிளப்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீடு வந்து தன்னறைக்குள் புகுந்து கொண்ட வசுந்தரா, பலமணி நேரம் வெளியே வரவே இல்லை.

அவருக்கு உணவு, டீ கொடுக்கச் செல்ல முயன்ற பரிமளத்தை அருண் தடுத்து இருந்தான். அவரை மட்டுமில்ல மற்றவர்களையுமே, “மேம் முக்கியமான வேலையா இருக்காங்க. யாரும் அவுங்களை இப்போ டிஸ்டர்ப் செய்யாதீங்க!” என்று கூறி இருந்தான்.

அர்ஜுன், நாளை நடக்கப் போகும் போர்டு மீட்டிங் குறித்த டென்ஷனில் தள்ளாடிக் கொண்டு இருந்ததால் யாழினியை அழைத்த வசுந்தரா, அவளிடம் விஷயத்தைச் சொல்லி, அவனை எங்காவது வெளியே அழைத்துச் செல்லும்படி சொல்லி இருந்ததால், அவனும் இப்பொழுது வீட்டில் இல்லாது போனான்.

மாலை ஐந்து மணிவாக்கில் தன்னறை விட்டு வெளியே வந்த வசுந்தரா, அருணை அழைத்து, “திமிங்கலம் மாட்டிக்கிச்சு!” என்று முக மின்னலுடன் சொன்னதைக் கேட்டு அகம் மகிழ்ந்து போனவன், “எப்படி மேம்?” என்று வியந்து கேட்டான்.

அவனுக்கான விளக்கத்தைச் சொல்லி முடித்தவர், “நமக்கான நேரம் ரொம்ப கம்மியா இருக்கு. சோ நான் சொல்றதை நீ உடனே செஞ்சாகணும் அருண்” என்று சொல்லி மேலும் சில தகவல்களை அவனிடம் பகிர்ந்தார்.

அவர் சொன்ன அனைத்தையும் பொறுமையாகக் கேட்டு முடித்தவன், “நான் உடனே கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு, ஜோசப்பைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியேறி இருந்தான்.

மறுநாள் விடியல் மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் அர்ஜுனுக்கு அது ஒரு பிடிக்காத விடியலாகவே தோன்றியது. அதன்பொருட்டு, விடிந்தும் தன்னறை விட்டு சாப்பிட கூட வெளியே வராதவனை பரிமளா மூலம் அழைத்து வரச் சொல்லி இருந்தார் வசுந்தரா.

தாயின் அழைப்பை ஏற்று, ரெப்ரெஷ் ஆகி கீழே இறங்கி வந்தவனை இன்முகமாக வரவேற்ற வசுந்தரா, “குட் மார்னிங் அர்ஜுன்!” என்று சொன்னதைக் கேட்டவனுக்குத்தான் முகம் சிந்தனை வயப்பட்டது.

‘எப்படி இவுங்களால் இன்று இப்படி இருக்க முடிகிறது?’ என்று.. ‘நேற்று நான் சொன்னதை மறந்துட்டாங்களா?? இல்லை என்னுடைய நிலைமை அவுங்களுக்குப் புரியலையா?’ என்று எண்ணியபடியே தாயின் அருகில் சென்று அமர்ந்தான் அர்ஜுன்.

மகனுக்குத் தட்டு எடுத்து வைத்து, நாலு இட்டிலியை எடுத்து அதில் வைத்து சாம்பார் சட்னி பரிமாறுபவரையே விழி இமைக்காது பார்த்தவனிடம், “சாப்பிடு அர்ஜுன்!” என்று சொன்னார் அவர்.

கை தானாக இட்லியைப் பிட்டுக் கொண்டு இருந்தாலும், ஏனோ அதைச் சாப்பிட மனம் வராது, அவன் மனம் தடுமாறிக் கொண்டு இருப்பதைக் கண்ட வசுந்தரா,

மகனின் அருகில் அமர்ந்தவாறு, “டிவி பார்க்கலாமா அர்ஜுன்?” என்று கேட்க, அந்த வார்த்தைகளில் அவரை நிமிர்ந்து பார்த்தானே ஒழிய, ஒரு வார்த்தை பதில் சொல்லவில்லை அவன். சொல்லும் நிலையிலா அவன் இருக்கிறான்?

டிவியை ஆன் செய்தவுடன், அங்கே மின்னலைப் போல ஓடிக் கொண்டு இருந்த செய்தி காதில் விழவும், அதிர்ந்து டிவியின் திரையைப் பார்த்தான் அர்ஜுன்.

“பிரபல தொழிலதிபரும், ஏஜே க்ரூப்ஸ் ஃபவுண்டருமான மிஸ்டர்.அருணாச்சலம், இன்று காலை துளசி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி தான் தான் என்று போலீசில் சரணடைந்து இருக்கிறார்.

யாருமே எதிர்பார்த்திராத இந்தத் திடுக்கிடும் தகவலால் மொத்த ஊடகமும் இங்கே தான் குவிந்து இருக்கிறார்கள்.

துளசி கொலை வழக்கில் ஏற்பட்டு இருக்கும் இந்த முக்கிய  திருப்பத்தால், மொத்த உலகமுமே சற்று அதிர்ந்து தான் போய் இருக்கிறது, இவரா இந்தக் கொலையைச் செய்தார் என்று??? இவர் தான் செய்தார் என்றால் ஏன் செய்தார்? என்ற பல புதிர்களுக்கு விடையை அறிய எங்களுடளே இணைந்து இருங்கள்” என்று வெவ்வேறு விதத்தில் கூவி கொண்டு இருந்த ரிப்போர்ட்டர்களின் வார்த்தைகளையும், போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து இருக்கும் தன் தந்தையையும் கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளான அர்ஜுன், “என்ன நடக்குது இங்கே?” என்பது போலத் தன் தாயைத்தான் நிமிர்ந்து பார்த்தான்.

“எப்படி மாம்?” என்று கேட்டவனுக்கு அவர் பதிலளிக்கும் முன், அவனறையைச் சுத்தம் செய்ய சென்று இருந்த பரிமளம், அர்ஜுனின் போன் தொடர்ந்து அழைப்பதாகக் கொண்டு வந்து நீட்ட, அதை வாங்காது தன்னையே பார்த்து இருந்த மகனிடம், “போனை எடுத்துப் பேசு அர்ஜுன்!” என்றார் அவர்.

இப்போ அதுவா முக்கியம் என்று நினைத்த போதும், தாயின் விழிகள் அது தான் முக்கியம் என்று சொன்னதைப் புரிந்து கொண்டவனாக, அதை வாங்கித் தன் காதுக்குக் கொடுத்தவன், மறுபுறம் சொன்ன செய்தியில், “வாட்??”  என்ற அதிர்வுடன் எழுந்து நின்றவன், இவை அனைத்துக்கும் சூத்திரதாரியான தன் தாயையே விழிகள் தெறித்து விழுமளவுக்கு வியந்து பார்த்தான், எப்படி இதையெல்லாம் செய்தார்கள் என்று..!!

Advertisement