Advertisement

அன்றும் கட்சியின் கூட்டம் கூட, ஒரு பஞ்சாயத்து. வாக்குவாதம். சத்தம். மூத்த உறுப்பினர்கள் எப்போதும் போல அதட்டி முடித்து வைக்க, “மாமா.. ஏன் இப்படி..?” என்று கணேசனிடம் கேட்டான் சரித்திரன்.

“தேர்தல் வர நேரத்துல இதெல்லாம் சகஜம் தான் தம்பி.. என் சாதி தான் நிக்கணும்ன்னு பிரச்சனை செய்றது தான்..” என்றார் கணேசன்.

“அது அந்த குறிப்பிட்ட ஏரியா மட்டும் இருக்கிற மாதிரி இருக்கு மாமா..” சரித்திரன் சொல்ல,

“மதுரை தானே. எனக்கு அண்ணாச்சி மேல தான் சந்தேகம் தம்பி. தலைவர்கிட்ட  சொன்னா கட்சியோட மூத்த உறுப்பினர் அப்படி பண்ணுவாரான்னு யோசிக்கிறார். எதுக்கும் இருக்கட்டும்னு ஆள் வைச்சு கூட பார்த்தோம்  தம்பி, ஒன்னும் சிக்கலை..” என்றார் கணேசன்.

“அந்த ஏரியா தான் பிரச்சனை மாமா..  நம்ம ஆளுங்களை எலெக்ஷன் முடியற வரைக்குமே  அண்ணாச்சியை பாலோ பண்ண சொல்லுங்க, பார்ப்போம்..” என்றான் சரித்திரன்.

“செஞ்சுடுவோம் தம்பி..” என்றவர், அதை குமரகுருவிடம் சொன்னார். கணேசன்  எந்த ஒரு விஷயத்தையும் குமரகுருவை மீறி செய்ய மாட்டார். அவரின் விசுவாசம் அது. சரித்திரனுக்கும் அது தெரியும். தன்னால் அப்பாவிடம் பேச, சொல்ல முடியாததை கணேசன் மூலம் தான் அவன் அப்பாவிற்கு கடத்தி கொண்டிருந்தான்.

இடையில் அம்மா அலுவலகத்திற்கும் சென்று வந்தவன், ராகவர்த்தினி பிறந்தநாள் அன்று அவளை நேரில் பார்த்து சில நிமிடங்கள் பேசி, கை கோர்த்து வந்தான். அவள் இப்போது அதே யுனிவர்சிட்டியில் மாஸ்டர் சேர்ந்திருந்தாள்.

கட்சியில் வேட்பாளார்கள் அறிவிக்க போகும் இறுதி கூட்டம் அன்று. சரித்திரன் அப்பாவிற்கு முன் அங்கு சென்று ஏற்பாடுகளை பார்த்திருந்தான். குமரகுரு வந்தவர், வேட்பாளர்களை அறிவிக்க, திரும்ப ஒரு பஞ்சாயத்து. எங்க சாதி தான் வேணும் என்று.

சரித்திரன் ஓரமாக நின்றிருந்தவன், அப்பாவின் பின் வந்தான். ஆளாளுக்கு பேச அங்கு கூச்சல். இன்று யாரையும் அடக்க முடியவில்லை. மதியம் வரையிலும் முடிவாகவில்லை. உணவுக்கு சென்று வந்தனர். குமரகுரு முகமே சரியில்லை. உண்ணவும் மறுத்துவிட்டார். அவரை பார்த்த மகனுக்கு அவ்வளவு கவலை.

திரும்ப கூட்டம் கூட, அதே சத்தம் தான். அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு எங்க சாதி ஆளு தான் வேணும் என்று மிக உறுதியாக நின்றனர். அண்ணாச்சி, தீனதயாளன் இருவர் அந்த சாதி தான். மாலைக்குள் முடிவெடுத்தாக வேண்டும். குமரகுரு இறங்கி வர வேண்டிய நிலை. யோசிக்க அவகாசம் இல்லை.

“இரண்டு பேர்ல யார்ன்னு நீங்களே சொல்லுங்க..” என்றுவிட்டார். திரும்ப ஒரு சலசலப்பு எழுந்து அடங்கி, அண்ணாச்சியை சொன்னார்கள். தீனதயாளன் அதை முழுமனதாக ஏற்று கொண்டார். ஆனால் அண்ணாச்சி “எனக்கு உடம்பு கொஞ்சம் ஒத்துழைக்க மாட்டேங்குது. தீனதயாளனே இருக்கட்டும்..” என்றுவிட்டார்.

குமரகுரு “அவ்வளவு தானே.. எல்லாம் முடிவாகிடுச்சு இல்லை. இனி நாமினேஷன் தாக்கல் பண்ணிட்டு பிரச்சார வேலைகளை பார்க்க ஆரம்பிங்க..” என்று கூட்டத்தை முடித்துவிட்டார்.

சரித்திரனுக்கோ கண்கள் முழுதும் அண்ணாச்சி, தீனதயாளன் மேலே இருந்தது. அதிலும் தீனதயாளன். என்னமோ அவரிடம் அவனுக்கு ஒப்பவில்லை. திரும்பி கணேசனை பார்க்க, அவரும் தீனதயாளனை தான் பார்த்திருந்தார்.

அன்றிரவு அவரிடம் தனியே பேச, “எனக்கும் வர வர தீனதயாளன்கிட்ட என்னமோ கருக்’ன்னு படுது தம்பி. ஆதாரம் இல்லாமல் தலைவர்கிட்ட சொல்லவும் முடியல. அவருக்கு இப்போ முழுக்க முழுக்க ஜெயிக்கிறது பத்தி மட்டும் தான், இப்போ போய் இதை பேசி அவரை குழப்பணுமான்னு இருக்கு..” என்றார்.

“அப்பாகிட்ட வேண்டாம் மாமா.. அண்ணாச்சியோட, தீனதயாளனையும் பாலோ பண்ண சொல்லுங்க, எலெக்ஷன் முடியவும் அப்பாகிட்ட பேசி என்ன ஏதுன்னு இவங்களை பார்க்கலாம்..” என்றான்.

மறுநாள் இவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கபட்டனர். குறிப்பிட்ட நாளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. குமரகுரு வேட்பு மனு தாக்கல் அன்று, அவர் மகனை உடன் வைத்து எல்லாம் செய்தார். பேச்சு இன்னும் இல்லை என்றாலும், இது சரித்திரனுக்கு மகிழ்ச்சியை தந்தது.

தேர்தல் வேலைகள் ஆரம்பித்த நாள் முதலே அவர்கள் வீடு திருவிழா கோலம் பூண்டிருந்தது. இருபத்தி நான்கு மணி நேரமும் காபி, டீ, உணவு என்று அமர்க்களப்ட்டது. எங்கு திரும்பினும் ஆட்கள் கூட்டம் தான்.

வேதவள்ளி சில நேரங்களில் கெஸ்ட் அவுசிலே தங்கி கொண்டார். வர்ஷா ஒரேடியாக வாக்களிக்கும் நாள் அன்று  வந்து கொள்கிறேன் என்று பாண்டியிலே இருந்து கொண்டாள்.

சரித்திரன் வீடு, உணவு, வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி என எல்லாவற்றையும் தன் பொறுப்பில் எடுத்து கொண்டான். முக்கியமாக பெண்களுக்கு தனியே கூடாரம் அமைத்து, ஓய்வறையும் அதன் பக்கத்திலே ஏற்பாடு செய்துவிட்டான்.

குமரகுரு பிரச்சாரத்தில் மட்டும் தன் கவனம்  இருக்குமாறு பார்த்து கொண்டாலும், மகனின் ஓட்டமும் கவனிக்காமல் இல்லை. சில நேரம் மகனை தன் பக்கத்திலே வைத்தும் பிரச்சாரம் செய்தார்.

 அவர் பேசும் தோரணை, ஆளுமை, பேச்சு சுவாரஸ்யம் எல்லாம் மகன் பக்கத்தில் இருந்தே ரசித்தான். மக்கள் அவருக்கு கொடுக்கும் வரவேற்பும்,  ஆரவாரமும், அன்பும் மகனாக அவனுக்கு அவ்வளவு பெருமையை கொடுத்தது.

என் அப்பா.. இவர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும், இவர் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற உந்துதல் இன்னுமே அவனுக்கு கூடி போனது. நாட்கள் நெருங்க நெருங்க தூக்கத்தை எல்லாம் விட்டு கூட தேர்தல் வேலைகளை செய்தான்.

குமரகுருவின் தொகுதி மட்டுமில்லாமல் அவரின் கட்சி ஆட்கள் நிற்கும் தொகுதிக்கெல்லாம் சென்று தலைவராக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஓட்டு கேட்க வேண்டும். உடலும், மனமும் சில நேரம் சோர்ந்து, களைப்பு கண்டது.

அவரின் உணவு பழக்கவழக்கம், ஜுஸ், தூக்கம் எல்லாவற்றையும் சரித்திரன் அட்டவணை தயாரித்து கணேசனிடம் கொடுத்து அவரை பார்த்து கொள்ள வைத்தான். அதிக பயணங்கள். நிறைய நிறைய பேச்சு. முகத்தில் வாடாத புன்னகை என்று அரசியல் தலைவராக தன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

வோட்டிங் நாளும் வந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. குமரகுருவிற்கு நம்பிக்கை இருந்தாலும், சிறு பயமும் இல்லாமல் இல்லை. முடிவுகள் அறிவிக்கும் நாள் அன்று, வீட்டிலே இருந்து கொண்டார். சரித்திரன், கணேசன் இருவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நின்றனர்.

குமரகுருவிற்கு ஆதரவாக வர்ஷா, வேதவள்ளி வீட்டில் இருக்க, முடிவுகள் வெளிவர ஆரம்பித்தது. ஒவ்வொரு தொகுதியாக முடிவு அறிவிக்கபட,  குமரகுரு அவர் தொகுதியில்  வெற்றி கனியை பறித்திருந்தார். சொல்லவும் வேண்டுமா,  கொண்டாட்டம் களைகட்டியது. வெடி, ஸ்வீட் என்று ஆரவாரம். மனைவி, மகளை அணைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் குமரகுரு.

எண்ணிக்கை முடித்துவிட்டு சரித்திரனும், கணேசனும் வீட்டுக்கு திரும்ப அவர்களுக்கு அப்படி ஒரு  உற்சாக வரவேற்பு. வெடி வெடித்து, கோஷத்துடன் சரித்திரன், கணேசனை சூழ்ந்து கொண்டனர்.

ஆட்கள் விலக்கி விட, குமரகுரு இருவரையும் இரு கையால் சேர்த்தணைத்து கொண்டார். தன் கையால் இருவருக்கும் இனிப்பை ஊட்டிவிட, சரித்திரன் அப்பாவின் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தான். குமரகுரு  அவன் தோளை தட்டி கொடுத்தார்.

அவரின் தொகுதி மட்டுமில்லாமல், அவரின் கட்சிக்கு கொடுத்திருந்த  பதினைந்து தொகுதிகளில், பதினான்கு தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தனர். கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் இத்தனை தொகுதி என்பது அவரை திரும்பி பார்க்க வைத்தது.

கூட்டணி கட்சியுடன் பேசி வைத்திருந்தில் அவருக்கான அமைச்சர் பதவியும் கைக்கு வந்தது. முன்பிருந்த ஆளுங்கட்சி கீழிறங்கி, இவர் அவர்களை ஜெயித்து மேலே சென்றார். பதவியேற்பில் தன் தந்தை சரித்திரனுக்கு பிரம்மாண்டமாக தெரிந்தார்.

இன்னும் அவர் மீதான பெருமை அவனுக்கு மிகுந்து போனது. குமரகுருவும் மனைவி, மகனிடம் பழையபடி இருந்தார். வேதவள்ளி ஒருநாள் அமர்ந்து தங்களை அவருக்கு புரிய வைத்திருக்க, “என் மகனுக்கு நான் யாருன்னு அவன் எனக்கு செயல்ல காமிச்சுட்டான்..” என்றிருந்தார் தந்தையும்.

அவ்வளவு தான். எல்லாம் நல்லபடியே முடிந்ததில் சரித்திரன் அம்மாவுடன் தொழிலில் இறங்கிவிட்டான். வேதவள்ளிக்கு மகனின் அரசியல் ஈடுபாடு உறுத்தலாகவே இருந்திருக்க, அவன் திரும்ப கம்பெனிக்கு வரவும் தான் நிம்மதி.

“புது தொழில் தொடங்கிறதுக்கு  வேலைகளை ஆரம்பிக்கலாம்..” என்றார் மகனிடம்.

“நீங்க என்னவாது பண்ணுங்க.. முதல்ல என்னை ரிலீவ் பண்ணுங்க..” என்று நின்றான் விசாகன்.

“அப்போ என்னை விட்டு போக போற..?” சரித்திரன் கேட்க,

“நீ என்ன என் லவ்வ்ரா..? போடா கம்முன்னு..” விசாகன் கடுப்பானான்.

“என்னடா மச்சான்..? ஏதாவது பிரச்சனையா..?” சரித்திரன் தனியே கேட்க,

“ஒன்னு இரண்டுன்னு சொல்லலாம். உன் அம்மா எதோ வயசு பிள்ளை மாதிரி என்னை கூட வைச்சுட்டே சுத்துறாங்க. ஒரு பொண்ணுகிட்ட பைவ் மினிட்ஸ் பேச முடியறதில்லை. உடனே கூப்பிட்டுடறது. அவங்க மகன் உன்னை லவ் பண்ண விடுவாங்களாம், என்னை மட்டும் இழுத்து பிடிப்பாங்களாம், என்னடா நியாயம் இது..?” என்று பொரிய,

“இவ்வளவு தானா..?” என்றான் சரித்திரன்.

“இவ்வளவு தானாவா..? டேய் ஒரு வயசு பையனுக்கு இது தாண்டா உலகமகா பிரச்சனை. உனக்கு இதெல்லாம் புரியாது. உனக்கு தான் ஆள் இருக்கே. என்னை சொல்லு..” என்று புலம்ப,  சரித்திரனுக்கு போன் வந்தது.

ராகவர்த்தினி. காலேஜ் டைம்ல கூப்பிடுறா.. உடனே போன் எடுத்தவன், “என்ன வர்த்தினி..?” என்று கேட்க,

“என்ன’ன்னா.. விஷயம் இருந்தா தான் கூப்பிடணுமா..?” பெண் எடுத்ததும் பாய ஆரம்பித்தாள்.

ரைட்.. சரித்திரன் நண்பனை தனியே  புலம்ப விட்டு, நகர்ந்துவிட்டவன். “என்ன ஆச்சு..?” என்று கேட்டான்.

“எலெக்ஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சு. அப்பா, அம்மா ஓகே ஆகிட்டாங்க. ஆனாலும் என்கிட்ட பேச முடியல, என்னை பார்க்க வரலை..”

“இந்த வீக் நானே உன்னை கூப்பிட்டிருப்பேன். எனக்கும் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசை தாண்டி..”

“தெரியுது. நம்பிட்டேன்..”

“உன்னை நம்ப வைக்க நேரம் வரும்.. அப்போ பார்த்துகிறேன். இப்போ சொல்லு காலேஜ் டைம்ல கூப்பிட்டிருக்க. கிளாஸ் இல்லையா..?”

“நான் லீவ். அப்பாவோட சைட் காலையில ஒரு பங்க்ஷன் போய்ட்டு வந்தோம்..”

“ம்ம்..”

“ஈவினிங் அம்மாவோட உங்க ஏரியாகிட்ட இருக்க கோவில் வரேன்..” என்றாள் தகவலாக.

“ப்ரொடெக்ஷன் ஏதும் கொடுக்கணுமா..?” சிரிப்புடன் புரியாதவன் போல் கேட்க, ராகவர்த்தினியின் அனல் மூச்சு காற்று இங்கு வரை எதிரொலித்தது.

“போன் வெடிச்சிட போகுதுடி..” என்றவன், “நேர்ல பார்க்கிறதன்னா தனியா தான் வேணும். இந்த பத்தோட பதினொன்னா எல்லாம் என்னால முடியாது..” என்றான்.

“அடேங்கப்பா.. அப்படி எத்தனை டைம் என்னை தனியா மீட் பண்ணிட்டிங்களாம்..” பெண் கடுப்புடன் கேட்டாள்.

“ஏண்டி எனக்கு மட்டும் உன்னை பார்க்க ஆசை இருக்காதா..? என் வீட்ல நம்ம விஷயம் தெரியும்ன்னாலும் ஜட்ஜ் நினைச்சா தான் யோசனையா இருக்கு..”

“என் அப்பாவை எதுக்கு இப்போ இழுக்குறீங்க..?”

“அவர் என்னோட டச்ல இருக்கார்டி. நம்ம ட்ரஸ்ட் விஷயமா, ஒரு ப்ராசஸ் போயிட்டிருக்கு..”

“என்ன அப்பா உங்களோட பேசிட்டு இருக்காரா..?” பெண்ணிற்கு ஆச்சரியம்.

“எஸ்.. அதான் கொஞ்சம் கில்ட்.  அவருக்கு என்மேல நல்ல ஒபினியன் இருக்கு. அதை கெடுத்துக்க நான் விரும்பல..”

“ஆமா என்னோட யூஜி பர்ஸ்ட்  இயர்ல,  அப்பாவே தான் உங்களை மீட் பண்ண சொல்லி சொன்னார்..” ராகவரித்தினிக்கும் குரல் உள்ளே போனது.

“ஹேய் ஈஸிடி.. அவர் என்னை பார்க்க சொல்லி அதனால நமக்குள்ள எதுவும் ஆரம்பிக்கலை புரியுதா..? பட் ஸ்டில் நீ  மாஸ்டர் முடி. நாம அவர்கிட்ட பேசுவோம், சரியா..?” என்றான்.

ராகவர்த்தினி சரியென்றவள், “அப்போ ஈவினிங் நீங்க கோவிலுக்கு வரலையா..?” என்றாள் ஆரம்பித்த இடத்திலே.

“அடியேய் உன்னை..” சரித்திரன் தலை கோதி கொண்டவன், “நான் வரலை.. உன் மாமியார் தான் உன்னை பார்க்க சொல்லி கேட்டுட்டு இருக்காங்க, வேணும்ன்னா அவங்களை அனுப்பி வைக்கவா..?” என்று கேட்டான்.

“என்ன சொல்றீங்க, என்ன பார்க்க கேட்டாங்களா..?  ஏன் என்கிட்ட இதை  சொல்லலை..? ஏன் என்னை கூட்டிட்டு போகலை..” பெண் சண்டைக்கு வந்துவிட்டாள்.

“ஜட்ஜ்கிட்ட கேட்டுட்டு உன்னை கூட்டிட்டு போறேன் இரு..” அவன் மிரட்ட,

“சீக்கிரம் கேளுங்க..” என்றாள் பெண் அசராமல்.

“இரண்டு வருஷம் பொறுடி ராசாத்தி. கேட்டுடுறேன். இப்போ ஒழுங்கா படிச்சு முடிக்கிற வழியை பாரு, விட்டா என் கையை பிடிச்சு இழுத்திடுவ போல..”

“எதுக்கு நான் உங்க கையை பிடிச்சு இழுத்துடுவேன் சொல்றீங்க..” ராகவர்த்தினி அறியாதவள் போல் கேட்க,

“நீங்க கேர்ள்ஸ் குரூப்ல என்னவெல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். நடிக்காதடி..” என்றான்

ராகவர்த்தினி சிரித்துவிட்டவள், “சீக்கிரம் மீட் பண்ணலாம்..” என்றாள்.

சரித்திரனுக்கும் ஏக்கம்  தானே. “கண்டிப்பா ஒரு நாள் புல்லா உன்னோட ஸ்பென்ட் பண்ற மாதிரி பார்க்கிறேன்..” என்றான்.

“சீரியஸ்லி..” ராகவர்த்தினிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

ஆனால் அவன் சொன்ன அந்த ஒரு நாள் வர இரண்டு வருடமே  ஆகிவிட்டது.

Advertisement