Advertisement

அங்கு ராகவர்த்தினியும் வந்து பேசுவாரா..? என்ற  எதிர்பார்ப்புடன் வாசலை பார்த்திருந்தாள்.  இன்றோடு அவனின் கடைசி நாள் ஆயிற்றே.

“ஒழுங்கா படி.. என் உயிரை வாங்காத..”  என்ற  அவனின் வார்த்தை அவளை வெளியே செல்லவிடவில்லை. அப்படி ஏதாவதுன்னா அவரே வந்து பேசட்டும் என்ற எண்ணத்தில்   நண்பர்களுடன் வகுப்பிலே அமர்ந்திருந்தாள்.

நேரம் சென்று கொண்டே இருக்க, ராகவர்த்தினி முகம் வாடி போனது. அவன் வரவே இல்லை. அவனின் பைக்கும் அங்கில்லை. கிளம்பியிருந்தான். இவளும் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அன்றிரவு காரணமே இல்லாத அழுகை.

அந்த வாரம் முழுதும் மகளை கவனித்திருந்த சித்ரா, “ப்ரண்ட்ஸ் மிஸ் பண்றியா..? வீட்டுக்கு வர சொல்லு..” என்றார்.

“அப்படி எல்லாம் இல்லைம்மா.. வீட்ல இருக்க கொஞ்சம் போரடிக்குது..” மகள் சொல்ல,

” சின்ன ட்ரிப் போலாமா..? அப்பாகிட்ட பேசுறேன்..” என, ராகவர்த்தினிக்கும் மாற்றம் தேவைப்பட்டது.

சரியென, கேரளா சென்றனர். விஸ்வநாதனுக்கும் விடுமுறை இருக்க, ஒரு வாரமே அங்கிருந்தனர். முன்பிருந்த சோர்வு மறைந்து, ராகவர்த்தினி கொஞ்சம் தெளிந்தாள். அம்மாவுடன் கோவில், நண்பர்களுடன் ஷாப்பிங். உறவினர்கள் வீடு என பிசியாக நாட்கள் நகர்ந்தது.

சரித்திரனும் அம்மாவுடன் சில நாள் பாண்டிச்சேரி  சென்று தங்கையுடன் தங்கி வந்தான். வர்ஷா இருப்பது ஹாஸ்டல் என்றாலும், இவர்கள் செல்லும் நாட்களில் அங்குள்ள கெஸ்ட் அவுசில் தங்கி கொள்வர்.

தொடர்ந்து விசாகனுடன் மலைப்பிரதேசத்திற்கு ட்ரெக்கிங்க் சென்றான். நண்பர்களுடன் அவுட்டிங். அடுத்து அவன் வைத்திருக்கும் பைக் கிளப் மூலம் ரோட் டிரப்  சில வார பயணம் மேற்கொண்டான்.

வேதவள்ளி மகன் எல்லாம் முடித்து வரவும் “அடுத்து என்ன..?” என்று கேட்டார்.

சரித்திரன் முன்பே எடுத்த முடிவான, “மேல படிக்க போறேன்..” என்றான்.

“சரி.. பாரின் எதாவது..”

“நோ’ம்மா.. அப்படி எதாவதுன்னா நான் இந்நேரம் எக்ஸாம்க்கு ப்ரீப்பேர் பண்ண ஆரம்பிச்சிருக்க மாட்டேனா..?” என்று கேட்டவன், “இங்க சென்னையிலே தான்..” என்றான்.

“உன்னோட யூனிவர்சிட்டி..”

“நோ’ம்மா.. வேற..” என்று கல்லூரி பெயர் சொன்னான்.

வேதவள்ளிக்கு பிடிக்கவில்லை. “இன்னும் பெட்டரா பார்க்கலாம்.. ஏன் உன்னோட யூனிவர்சிட்டிக்கு என்ன? அங்கேயே படி..” என்றார்.

“நோ’ம்மா.. எனக்கு அங்க வேண்டாம்..” சரித்திரன் உறுதியாக மறுத்துவிட்டான்.

“இனி நான் எதுவும் கேட்கலை. கேட்டு நீ திரும்ப ‘நோ’ சொன்ன நான் கண்டிப்பா கோவப்பட்டுடுவேன்..” என்றுவிட்டார் வேதவள்ளி.

” கோவப்பட்டுடுவேங்கிறதயே நீங்க கோவமா தான் சொல்றீங்கம்மா..” மகன் சிரித்தான்.

முதல் முறை மகனிடம் இத்தனை ‘நோ’ கேட்கிறாரே. ஆதங்கம், கோவம் தான். “முன்ன நான் சொன்ன போர்டிங், டிகிரி எல்லாம் ஓகே பண்ண,  இப்போ மட்டும் என்ன..?” என்று கேட்டார்.

சரித்திரனுக்கு பதில் தெரியும். ஆனால் சொல்ல முடியாதே. மறைமுகமாக, “வளர்ந்துட்டேன்ம்மா.. எனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் இருக்க கூடாதா..? நான் முடிவெடுக்க கூடாதா..?” என்று கேட்டான்.

“விருப்பம் இருக்கலாம்.. ஆனா முடிவு நாங்களும் சேர்ந்து தான் எடுக்கணும். நீ இன்னும் அவ்வளவு எல்லாம் வளர்ந்துடல..?” அம்மாவும் அவனின் வழியிலே சொன்னார்.

“சரி.. வாங்க சேர்ந்து முடிவடுக்கலாம். சென்னையிலே.. உங்களோடே  இருக்கணும்ன்னு தான்  நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க..?” என்று கேட்க,

வேதவள்ளி மகனை ஆழ்ந்து பார்த்தவர், “ஓகே.. உன்னோட விஷ்படி இங்கேயே படி. ஆனா ஒன் கண்டிஷன்..” என்றார். சரித்திரன் என்ன என்று பார்க்க, “காலேஜ் முடிச்சுட்டு அம்மா ஆபிஸ்ல வந்து வேலை கத்துக்கணும்.. லீவ் நாள்ல கூட..” என,

“ம்மா..” என்றான் மகன்.

“நீ தான் வளர்ந்துட்டியே..? தனிப்பட்ட விருப்பம் வருது. முடிவெடுக்க எல்லாம் தெரியுது. வேலை பார்க்க தெரிய வேணாமா..?” என்று கேட்டார்.

சரித்திரனுக்கு புரிந்தது அம்மாவின் எண்ணம். “சரி..”  என்று சொல்லிவிட்டான்.

குமரகுரு காதிற்கு விஷயம் செல்ல, மனைவியிடம் தனிப்பட்ட முறையில், “இப்போவே என்ன ஆபிஸ்..? வேணாம்..” என்றார்.

“ஏன்.. ஆபிஸ் வந்தா என்ன..? எனக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுதுங்க.. வரட்டும்..” என, சரித்திரனும் அப்பாவிடம் எனக்கு விருப்பம் தான் என்றுவிட்டான்.

அதன்படி அவன் மாஸ்டர் டிகிரி சேர்ந்த நாள் முதல் வேதவள்ளி கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தான்.  இரவு ஒன்பது மணி வரை வேலை பார்த்தான். விடுமுறை நாட்களிலும் வேலை. வேதவள்ளி ஒப்புக்கு கூட லீவ் வேணும்ன்ன எடுத்துக்கோ என்று சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை.

இதனால் குமரகுருவிற்கு மகனுடன் அமர்ந்து அரசியல் பேசும் நேரம் குறைந்து போனது. சரித்திரன் அப்போதும் அவரிடம் நிலவரம் கேட்டு தெரிந்து கொள்வான் தான். ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே. அதன்பின் மகனின் சோர்ந்த முகம் கண்டு குமரகுரு அவனை ஓய்வெடுக்க அனுப்பி விடுவார்.

 “என் மகனை நீ ரொம்ப கஷ்டப்படுத்துற..” என்று மனைவியிடம் அடிக்கடி கோவமே கொள்வார். வேதவள்ளியிடம் பதிலே இருக்காது.

இடையில் அவன் பட்டமளிப்பு விழா வந்தது. சரித்திரன் செல்ல, ராகவர்த்தினி அன்று கல்லூரி வரவில்லை. நம்பர் இருந்தும் பேசி கொள்ளவில்லை.

இப்படியே காலேஜ், வேலை என்று அந்த வருடம் முழுதும் கடந்திருக்க, அடுத்த வருடம் கணேசனின் மகள் செல்விக்காக அவன் பழைய யூனிவர்சிட்டிகு சென்றான். நன்றாக படிப்பவள் செல்வி. வேதவள்ளி அவரின் ட்ரஸ்ட் மூலம் தான் கணேசனின் மூன்று பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டிருந்தார்.

செல்வி நுழைவுத்தேர்வு மூலம் அந்த யுனிவர்சிட்டியில் சேர்ந்திருக்க, கணேசன் இவனிடம் உதவி கேட்டார். “பர்ஸ்ட் டே நான் கொண்டு போய் விடுறேன் மாமா. ஒன்னும் பிரச்னையில்லை..” என்றவன், செல்வியிடம் என்ன துறை என்று விசாரித்தான். ராகவர்த்தினி துறை.

செல்வி அவளின் தம்பியுடன் வந்து கல்லூரி வாசலில் காத்திருக்க, “சாரிமா.. டிராபிக் லேட் ஆகிடுச்சு..” சரித்திரன் பைக்கில் வந்து இறங்கினான்.

“நாங்களும் இப்போ தான் வந்தோம் ண்ணா..” செல்வி தம்பி சொல்ல, மூவரும் உள்ளே சென்றனர். முதலில் அங்குள்ள ஆபிஸ் சென்று எல்லாம் சரிபார்த்து, அவளின் வகுப்பை காட்டிவிட்டு வர, எதிரில் ராகவர்த்தினி அவனையே பார்த்தபடி.

எதிர்பார்த்து வந்தவன் தானே. “உன்னோட சீனியர் மேடம் இவங்க தான்..” என்று அவளை கை காட்டி சொன்னான்.

“ஹாய் சீனியர்..” செல்வி சொல்ல, ராகவர்த்தினி ஹாய் என்றவள், சரித்திரனை அடுத்து பார்க்கவில்லை. நடந்துவிட்டாள்.

மாஸ்டர் தான் படிக்க போறோம் என்று விசாகன் முன்பொரு முறை சொன்னதை வைத்து, எவ்வளவு ஆவலுடன் இவனை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இவனோ வேறொரு கல்லூரி சேர்ந்துவிட்டான்.

சரி இடையில் சர்டிபிகேட் வாங்க வருவான் என்று பார்க்க, வரவே இல்லை. அவனின் பட்டமளிப்பு விழா அன்று அவளின்  உறவில் ஒரு இழப்பு. அன்றும் பார்க்க முடியவில்லை. இவளை தொடர்பு கொள்ளவும் இல்லை. அவ்வளவு தானா..? என்று எவ்வளவு தவிப்பு.

இதோ ஒரு வருடம் கழித்து இன்று அவனை பார்த்ததும் அப்படி ஒரு படபடப்பு, ஆசுவாசம், ஏக்கம், கோவம் எல்லாம். ஆனால் அவனிடம் அப்படி ஒன்றும்  இல்லை.  மிக சாதரணமாக இருந்தான். அவளை பார்த்தான். பேசினான். இவளுக்கு தாங்கவில்லை.

தன்னுடைய பலவீனத்தை அவன் முன் காட்ட கூடாது என்று விலகி வந்துவிட்டாள். அந்த கேம்பஸிலே இருக்க பிடிக்கவில்லை. அவசரம் என்று அவளின் வண்டி எடுத்து கொண்டு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 எத்தனை இரவுகள் காரணமே இல்லாத கண்ணீர் அவளிடம். இதோ இப்போதும் உடைந்துவிடுவேன் என்று கண்களில் அணைகட்டி நிற்கிறதே.

ம்ஹூம்.. கூடாது என்று வேகமாக தண்ணீர் பாட்டில்  வாங்கி குடித்து வைக்க, வேறொரு கை அந்த பாட்டில் தண்ணீரை எடுத்து குடித்தது. ராகவர்த்தினி யார் என்று பார்த்து முகம் திருப்பி கொண்டாள்.

“சாப்பிடலாமா..?” என்று கேட்டான் சரித்திரன்.

“என்ன சொல்லட்டும்..?” என்று மெனு கார்ட் எடுத்தான்.

அவளின் அமைதியில் தானே  காபி ஆர்டர் செய்தான். “சும்மா உட்கார்ந்திருக்க முடியாது இல்லை..” என்றான்.

அவன் சாதாரணமாக பேச பேச இவளுக்கு அழுத்தம் எகிறியது. என்னவோ தினமும் பார்த்து பேசிக்கிறது போல பண்றார்..?

காபி வந்தது. இவள் எடுக்கவில்லை. “வர்த்தினி..” என்றான். அவளை நோக்கி கப்பை தள்ளி வைத்தான். பெண் இன்னமும் அவனை பார்க்கவில்லை.

“வேஸ்ட் பண்ணாத.. நானே சம்பாதிச்ச பணத்துல வாங்கிறது..” என்றான்.

படிக்கிறார்னு தானே கேள்விப்பட்டேன்.. புருவம் சுருங்கியது. “காலேஜ் முடிச்சிட்டு வந்து அம்மாவோட ஆபிஸ்ல வேலை பார்க்கிறேன்..” என்றான்.

ஏன்..? திரும்ப அவள் புருவம் சுருங்க, பதிலில்லை. ராகவர்த்தினி இப்போது அவனை பார்த்தாள். “இன்னொரு நாள் காரணம் சொல்றேன்..” என்றவன், காபியை கண்ணால் காட்டினான்.

ராகவர்த்தினிக்கு இன்னமும் அதை எடுக்க மனம்  ஒப்பவில்லை. என்னை ஏங்க விட்டுட்டாரே என்ற கோவம்.

டேபிள் மேல் இரு கையால் பர்ஸ் பிடித்திருந்த அவளின் விரல்களை பார்த்தான். ரசித்தான். “ஏன் அந்த விரலுக்கு அவ்வளவு ஸ்டெரெஸ் கொடுக்கிற.. ப்ரீயா விடு..” என்றான். அவள் இன்னும் இறுக்கமாக பிடித்தாள். அவன் விரல் கொண்டு அவளின் பர்ஸை வருடியவன், அவள் விரல்களை வருட செல்ல,  பெண் இழுத்துக்கொண்டாள்.

“சீக்கிரம் பிடிக்கிறேன்..” என்றான் அவளிடம்.

“நான் கொடுத்தா தானே..?” பெண் கோவமாக தலை சிலுப்பினாள்.

“என்னோட விரல் கோர்க்க உன் விரல் கொடுக்க மாட்டியா..?” சரித்திரன் அவளை ஆழ்ந்து பார்த்து கேட்க, ராகவர்த்தினி கண்கள் விரியாமல் இல்லை. அவன் கேட்ட அர்த்தத்தில் சட்டென்று அவளால் மறுக்க முடியவில்லை.

“புரியுது தானே..?” என்றான்.

“இல்லை.. புரியல..” வேண்டுமென்றே கோவராகம் இசைத்தாள்.

“எப்படி சொன்னா புரியும்..?” சரித்திரன் கேட்க,

“எப்படி சொன்னாலும் புரியாது..” என்றாள் பிடிவாத ராகமாக.

“எனக்கு தெரியும் நீ கண்டிப்பா சிலுப்புவன்னு..?” சரித்திரன் சொல்லிவிட,

“அப்பறம் எதுக்கு பேசுறீங்க..? போங்க, அன்னைக்கு போல பேசாம போங்க..” என்றாள்.

“அன்னைக்கு உன்னை பார்க்கல, பேசாம போக முடிஞ்சது. இன்னைக்கு உன்னை பார்த்துட்டேன். பேசாம போக முடியாது..” என்றான் அவன் அழுத்தமாக.

ராகவர்த்தினிக்கு அவன் வார்த்தைகளில் நெஞ்சின் அடைப்பு நீங்கி  அமைதியான அமைதி. அவனுக்கோ பாரமான  இதயத்தின் சத்தம். தலையை கோதி கொண்டான்.

அடைக்கப்பட்ட உணர்வுகள் லயத்துடன் உரியவரிடம் சேரும் கணம்.. அதிக கனத்தை கொடுத்தது.

உணர்வுகளின் சங்கமம்  அங்கு சத்தமே இல்லாமல் அரங்கேறி கொண்டிருந்தது.

அவளின் அமைதியில், இவன் அமைதி இழந்தான்.

“என்ன தாண்டி பண்ண சொல்ற என்னை..?” என்று தாங்க முடியாமல் கேட்டிருந்தான்.

ராகவர்த்தினி கலங்கும் கண்களை இமை சிமிட்ட, “வர்த்தினி.. என்னை பாரு..” என்றான்.

“என்னால இப்போவும் இதை எல்லாம் ஹாண்டில் பண்ண முடியல. நமக்கு டைம் வேணும்ன்னு நினைச்சேன், ஆனா.. ம்ப்ச். இட்ஸ் கில்லிங் மீ. யூ ஆர் கில்லிங் மீ..” என்றிருந்தான்.

பெண் இதழ்களோ அவன் வார்த்தையில் மெல்ல விரிந்தது. அழகாக புன்னகை சிந்தியது.

“சிரிக்காதடி..” என்றான் தலை கோதிய தவிப்புடன்.

ராகவர்த்தினிக்கு அந்த நொடி ராகமும், லயமும் இணைந்து காதல் எனும் தாளத்தை பூர்த்தி செய்தது போல் உணர்ந்தாள். அவனின் தவிப்பை ரசித்தாள். அவனை ரசித்தாள்.

சரித்திரனுக்கு அவள் ரசனை இன்னுமே தவிப்பை கூட்டியது. “அந்த விரல் மட்டுமாவது கொடு..” என்றான் ஏங்கும் நெஞ்சினை அடக்க.

ராகவர்த்தினி அழகாக அவன் முன் நீட்டினாள். சரித்திரன் எழுந்து அவளருகில் வந்தான். இடைவெளி விட்டு அமர்ந்தான். அவள் விரல்களை கோர்த்து கொண்டான். இறுக்கி கொண்டான். வருடி கொண்டான். தன் மடியில் வைத்து கொண்டான்.

அவளின் விரல்களை, அவளை தன் மனதில், மடியில் ஏற்றி கொண்டான். கனக்கவும் செய்தாள். இனிக்கவும் செய்தாள். இரண்டையுமே உளமார ஏற்று கொண்டான்

Advertisement