Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 7

இருவரின் பார்வையில் உரசல்  பற்ற ஆரம்பித்தது. எதிர்ப்படும் நேரங்களில் எல்லாம் கண்கள் சந்திக்காமல் சென்றதில்லை. கவனமாக இருக்க நினைத்த அளவான புன்னகை, சிறு சிறு பேச்சுக்கள் காணாமல்  போனது.

விசாகன் மட்டும் ராகவரத்தினியிடம் எப்போதும் போல பேசுபவன், சில நாட்களில் வித்தியாசத்தை கண்டு கொண்டான். இருவரின் பார்வையில் இருந்த உரிமை அவனை புருவம் சுருக்க வைத்தது. “என்னடா நடக்குது இங்க..?” என்று நண்பனிடம் கேட்க,

“எதை கேட்கிற..?” என்ற சரித்திரன் பார்வையோ தூரத்தில் நடந்து வரும் ராகவர்த்தினி மேல் இருந்தது.

“மச்சான் நான் இங்க இருக்கேன்..” விசாகன் தோள் தட்ட,

“யார் இப்போ இல்லைன்னு சொன்னா..?” என்றான் அவன்.

“நான் இங்க இல்லாத மாதிரி தானே நீ நடந்துகிற..?” விசாகன் சொல்ல, சரித்திரன் திரும்பி அவனை கூர்மையாக பார்த்தான்.

நீயே சொல்லு என்றிருந்தான் விசாகன். இந்த மூன்று வருட நட்பின் மனத்தாங்கல் அவனிடம். ராகவர்த்தினி அவர்களை கடந்து செல்ல, சரித்திரன் அவளை பெருமூச்சுடன் பார்த்து கொண்டே, “எனக்கும் தெரியலடா..” என்றான்.

“தெரியாம தான் இந்த பார்வையா..?” விசாகன் நம்பாமல் கேட்டான்.  சரித்திரனிடம் பதில் இல்லை. விசாகன் அதன் பின் கேட்கவில்லை. அவனே சொல்லட்டும் என்று விட்டுவிட்டான். தொடர்ந்த நாட்கள் நெருங்கும் தேர்வின் மீதான பரபரப்பில் சென்றது.

படிப்பின் முக்கியத்துவத்தை  சரித்திரனுக்கு ஊட்டி ஊட்டி வளர்ந்திருந்தாரே வேதவள்ளி..! அதன் தெளிவு அவனிடம் இருந்த போதும், குளிர்ந்த காற்றாக அவனின் அடிமனதை மெல்ல மெல்ல அசைத்து கொண்டிருந்தாள் பெண்.

அவளின் மீதான உணர்வுகள் வெறும் கவர்ச்சியா, காதலா தெரியாது. அது என்னவாக இருந்தாலும் சரி. அதை இப்போதைக்கு வெளிப்படுத்த அவன் தயாராக இல்லை.

ராகவர்த்தினிக்கோ  அவளின் மனது செல்லும் பாதை புரியாமல் இல்லை. அதை தடுக்கவும் முடியவில்லை. தடுக்க பிடிக்கவும் இல்லை. ஏன்..? இதில் என்ன தவறு..? என்ற கேள்வி அவளை நியாயப்படுத்தி கொண்டாலும், “இது மிகவும் சீக்கிரம், பொறு மனமே பொறு..” என்று குரலும் அவளை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

இந்த தெளிவினாலே இருவரும் நெருங்கி பழக முயலவில்லை.  தங்களுக்குள்ளே தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டதால், அங்கு உணர்வுகளின் சங்கமம் என்பது நிகழவில்லை.

‘இது தான். நான் நீ தான். நீ நான் தான்..!’ என்ற விலங்கை தள்ளியே வைத்து, தேர்வுகளை எதிர்கொண்டனர். முதல் நாள் தேர்வு என்பதால் சரித்திரன் அப்பாவிடம் சொல்லி கொள்ள வந்தான்.

வேதவள்ளி மகன் பேக்கெட்டில் பேனா வைக்க, “அப்பா எங்க..?” என்று கேட்டான்.

“கிளம்பிட்டு இருக்கார்.. வந்திடுவார், நீ சாப்பிடு..” என்று உணவு எடுத்து வைக்க, “க்கா..” என்ற குரலுடன் கணேசன் வீட்டுக்குள் வந்தார்.

குமரகுருவின் அரசியல் வட்டாரத்தில் வீட்டுக்குள் வரும் ஒரே ஆள் கணேசன் மட்டுமே. தம்பி போன்ற பாசம் குமரகுருவிற்கு அவர் மேல். மிகவும் நேர்மையான, விஸ்வாசமான மனிதர்.

சரித்திரன் சாப்பிட அமர்ந்தவன், “வாங்க மாமா..” என்று அவரை வரவேற்க எழுந்து சென்றான்.

“தம்பி.. நீங்க சாப்பிடுங்க..” கணேசன் சொல்ல,

“அப்போ வாங்க சேர்ந்து சாப்பிடலாம்..” சரித்திரன் அவர் கை பற்றினான்.

“இப்போ தான் சாப்பிட்டு அப்படியே கிளம்பி வந்தேன் தம்பி.. நீங்க உட்காருங்க, பரீட்சை இருக்குன்னு தலைவர் சொல்லிட்டிருந்தார். நேரம் ஆகிடும்..” என்றார்.

“அவர் சாப்பிட்டுட்டாலும்.. இந்தாங்க உட்கார்ந்து காபி மட்டுமாவது குடிங்க..” வேதவள்ளி அவரிடம் கொடுத்தார். தலைவர் வீட்ல கை நனைக்கிற அளவு நான் பெரிய ஆள் இல்லை என்ற அளவில்லா மரியாதை. அதை உடைக்க குமரகுருவாலும் முடியவில்லை.

கணேசன் அந்த காபியே ஏதோ அதிசயம் போல் நுனி சோபாவில் அமர்ந்து, நுனி கப் பிடித்து குடித்து வைக்க, சரித்திரன் அவரை மாற்ற முடியாத ஆயாசத்துடன் சாப்பிட அமர்ந்துவிட்டான். நினைவு தெரிந்த நாளில் இருந்து அவரை பார்க்கிறானே. குழந்தை சரித்திரனையே, வாங்க போங்க என்று தான் பேச ஆரம்பித்தார். இப்போது வரையும் இப்படி தான்.

“உங்கண்ணே.. இப்போ வந்திடுவார்..” வேதவள்ளி சொன்னபடி மகனுக்கு உணவை பரிமாற,

“பொறுமையா வரட்டும்க்கா.. இன்னைக்கு கூட்டம். அதான் சில விஷயங்கள் பேச முன்னாடியே வந்துட்டேன்..” என்றார் கணேசன்.

குமரகுருவும் வந்துவிட, கணேசன் எழுந்து நின்றுவிட்டார். “அட உட்காருடா..” குமரகுரு அதட்ட, “நீங்க சாப்பிட்டு வாங்க தலைவரே.. நாம பேசணும்..” என்றார் அவர்.

“என்ன கணேசா.. எதாவது முக்கியமான விஷயமா..?” குமரகுரு சந்தேகமாக கேட்க, சரித்திரன் அப்பாவிடம் சொல்லி கொண்டு கிளம்ப போனவன் நின்றுவிட்டான்.

“அது தலைவரே இன்னைக்கு கூட்டத்துல ஏதோ சலசலப்பு நடக்க போகுதுன்னு கேள்விப்பட்டேன். தீனதயாளன் தான் போன் போட்டு சொன்னார்..” கணேசன் சொல்ல, முதல் முறை இப்படியான ஒன்று குமரகுரு கேள்விப்படுகிறார்.

“நான் உருவாக்குன கட்சியில எவன் அவன் பஞ்சாயத்து கூட்டுறது..? இது என் கட்சிடா. யாருக்கு அந்த தைரியம்  இருக்காம்..?” குமரகுருவிடம் சட்டென கோவம் பற்றி கொண்டது.

மூன்று வருடங்களுக்கு முன்பு அவர், கணேசன், இன்னும் சிலர் மட்டுமே இணைந்து அந்த கட்சியை ஆரம்பித்திருந்தனர். அன்றைக்கு நூறை தாண்டாது உறுப்பினர்கள் எண்ணிக்கை. இன்றைக்கு சில லட்சம். பத்து MLA கேண்டிடேட். மேலும் ஐந்து தொகுதி தயாராகி கொண்டிருக்கிறது.

எல்லாம் யாரால். என் ஒருவனால். என் நேர்மையால்.  என் மேல் மக்கள் கொண்ட அபிமானத்தால். என் உழைப்பால். இரவு பகல் பாராத ஓட்டத்தால், என் அரசியல் மூளையால். என்னை கேள்வி கேட்க என் கட்சியிலே ஆட்களா..?

வெளியே இருந்து யாரும் தூண்டிவிடுகின்றனரா..? இல்லை உள்ளுக்குள்ளேவா..? குமரகுரு அமைதி இழந்துவிட்டார்.

இளவயதில் அரசியலில் அடியெடுத்து வைத்து, சொந்த கட்சி அவரை தூக்கி எறிந்து, தனக்கே தனக்கான கட்சியை உருவாக்கி அதன் தலைவராய் உழைப்பின் கனியை பறிக்க போகும் நேரம் இது. இப்படியான ஒன்று.

“தீனதயாளன் சொன்னவுடனே நானும் விசாரிச்சேன் தலைவரே.. ஏதோ சரியில்லை. நம்மாளுங்களை விட்டு  கட்சிக்கு உள்ளே, வெளியே ஊடுருவி பார்க்க சொல்லியிருக்கேன்..” என்றார் கணேசன்.

குமரகுரு முகமோ சினத்தில் தகதவென இருந்தது. அவரையே பார்த்து மகன் நின்றுவிட,  “நீ கிளம்பு. எக்ஸாம்க்கு டைம் ஆச்சு..” என்றார் வேதவள்ளி.

அதில் குமரகுரு கவனம் மகன் பக்கம் செல்ல, “நான் கிளம்புறேன்ப்பா..” என்றான்.

“ம்ம்.. எக்ஸாம் தானே இன்னைக்கு. நல்லா பண்ணு..” என்றார் தந்தை.

சரித்திரன் பொதுவாக தலையசைத்து விருப்பமே இல்லாமல் கிளம்பி சென்றான். எக்ஸாம் மட்டும் இல்லை என்றால் அப்பாவுடன் சென்றிருக்கலாம்.

“ம்ம்.. இப்போவும் ட்ரை பண்ணுவோம்..” என்று முடிவெடுத்தவன், விரைவாக தேர்வெழுதி முடித்து முதல் ஆளாக கிளம்பிவிட்டான். நேரே கட்சி ஆபிஸ் சென்றான். கூட்டம் முடிந்திருந்தது.

குமரகுரு, கணேசன்,  தீனதயாளன் உள்ளறையில் இருந்தனர். கட்சி ஆட்கள் அங்கங்கு இருந்தவர்கள் இவனை பார்த்தவுடன், சேர் எடுத்து போட்டு குடிக்க கொடுத்தனர். குமரகுருவிடம் ஆள் ஒருவர் தகவல் சொன்னார்.

“என்னப்பா இங்க..? எல்லாம் ஓகே தானே..?” கணேசன் பின் தொடர குமரகுரு வந்தார். அவரின் முகம் சாதாரணமாக இருக்க, மகன் நிம்மதி ஆனான்.

“சும்மா தான்ப்பா..” சரித்திரன் சொல்லி கொண்டிருக்க, “அடடே வாங்க சின்ன தலைவரே..” என்று வந்தார் தீனதயாளன்.

“தம்பி சொல்லுங்க போதும்..” சரித்திரன் சொல்ல,

“அதெப்படி எங்க தலைவர் பிள்ளை எங்களுக்கு சின்ன தலைவர் தான்..” என்றார் தீனதயாளன். அதற்கு கட்சி ஆட்கள் கை தட்டி ஆர்ப்பரிக்க, சரித்திரன் அப்பாவை பார்த்தான்.

“தம்பி எக்ஸாம் முடிச்சுட்டு அப்படியே வந்திருக்கார் தலைவரே.. வீட்டுக்கு போலாம்..” கணேசன் சொல்ல, விடைபெற்று காரில் ஏறினர்.

“ஒன்னும் பிரச்சனையில்லையே மாமா..?” கணேசனிடம் கேட்டான் சரித்திரன்.

“ஆரம்பிச்சானுங்க.. அடக்கிட்டோம் தம்பி..” கணேசன் சொல்ல,

“நாம தேந்தெடுத்த MLA கேண்டிடேட் சிலரை மாத்த சொன்னாங்க தம்பி. சரியான காரணம் கேட்டோம். பதில் சொல்ல தெரியாமல் சும்மா கத்திட்டு கிடந்தானுங்க. அப்புறம் கணேசனும், தீனதயாளனும் சேர்ந்து தான் அதட்டி அடக்கி உட்கார வைச்சாங்க..” என்றார் குமரகுரு.

“எப்போவும் இல்லாமல் இப்போ என்ன மாமா திடீர்ன்னு.. நாம கேண்டிடேட் அலசி ஆராய்ஞ்சு தானே தேர்ந்தெடுக்கிறோம். அதுல என்ன பிரச்சனை..?” சரித்திரன் கேட்க,

“அவங்க சாதி ஆள் வேணுமாம் தம்பி, நாம முதல் முறை தேர்தல்ல நின்னு நம்ம பலத்தை காட்டுற நேரத்துல சாதியை உள்ள கொண்டு வரானுங்க. எனக்கு வந்த கோவத்துக்கு அங்கேயே அவங்க மண்டையை உடைச்சிருப்பேன். எதுக்கு பிரச்சனையை அதிகம் படுத்திக்கணும்ன்னு தான் விட்டுட்டேன்..” என்றார் கணேசன்.

“அப்படி எதுவும் செஞ்சிடாத கணேசா. தனியா வேற ஏதாவது வைச்சு பார்த்துக்கலாம்..” என்றார் குமரகுரு.

“ம்ம்.. எனக்கு என்னமோ அண்ணாச்சி மேல் சந்தேகமா இருக்கு தலைவரே. அவங்க ஊர் ஆளுங்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்த மாதிரி இருந்தது..” கணேசன் சொல்ல,

“நானும் கவனிச்சேன் கணேசா.. ஏதோ தீனதயாளனும் மதுரைங்கிறதால அவங்க ஊர் ஆளுங்களை சுலபமா அடக்கிட்டார், இல்லைனாலும் நாம ஒரு கை பார்த்திருப்போம். அவர் கேட்டுக்கிட்டதுல அந்த மாவட்ட நிர்வாகிகளை விட்டாச்சு. பின்னாடி செய்ய தான் வேணும்..” என்றார் குமரகுரு.

“எதுவும் ஆரம்பிக்காத வரைக்கும் தாங்க. ஆரம்பிச்சுட்டா ஒவ்வோவண்ணா வரும்.. பார்த்துக்கோங்க..” என்றார் வேதவள்ளி. சரித்திரனுக்கு அம்மா சொன்னது சரியாக இருந்தது.

வேதவள்ளியும் அன்று மதிய உணவிற்கு வந்திருந்தார். எப்போதாவது தான் இப்படி. இன்று அவருக்கும் மகனை போல உறுத்தல். “பணம் சம்பாதிக்க நாம அரசியல்ல இல்லை. உங்களோட விருப்பத்துக்காக மட்டும் தான் அரசியல். இந்த கட்சி முழுமுழுக்க உங்க உழைப்பில வந்தது. ஒரு குழந்தையை வளர்க்கிற மாதிரி தான் உங்க கட்சியை நீங்க வளர்த்திருக்கிறீங்க. அதோட நல்லது கெட்டது உங்களுக்கு தெரியாதா..?” என்ன புதுசா சாதி எல்லாம்..? சரியப்படலங்க..” என்றார்.

அவர் அரசியல் பேசும் நேரம் அபூர்வம். பேசினால் சரியாக மட்டும் தான் பேசுவார் என்ற நம்பிக்கை குமரகுருவிற்கு உண்டு. மனைவி பேச்சை யோசிக்க செய்தார். அன்றிரவு கணேசனை வர வைத்தார். அப்பா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் சரித்திரன் தன் படிப்பில் கவனத்தை திருப்பினான்.

 அன்று இறுதி எக்ஸாம். எழுதி முடித்த வந்த மூன்றாம் வருட மாணவர்கள் தங்கள் பிரிவு துயரில்,  மாலை வரை அவுட்டிங் பிளான் செய்து கிளம்பினர். “டேய்.. என்ன நீயும் எங்களோட கிளம்பிட்ட..?” விசாகன் கேட்க,

“ஏன் நான் வர வேண்டாமா..? என்னைவிட்டு அவுட்டிங் போக போறீங்களா..?” சரித்திரன் கேட்டான்.

“ம்ப்ச்.. யார்கிட்டேயும் பேச வேண்டாமா..?” என்று விசாகன் மெல்ல கேட்டான்.

பைக் டேங்கின் மேல் தாளம் தட்டிய சரித்திரனுக்கு புரியாமல் இல்லை. அவனின்  கண்களும்  அவளை தேடாமல் இல்லை. ஆனால் தானே  தேடி செல்லவில்லை.

பேச ஆசை அதிகம். அதே நேரம் வாழ்க்கை முழுவதுக்குமான முடிவெடுக்க இந்த வயது போதுமா..? என்ற எண்ணமும் அதிகம். நண்பனிடம் மௌனம் சாதித்தான்.

Advertisement