Advertisement

இறுதி செமஸ்டர் என்பதால் சரித்திரன் கூடுதல் கவனம் எடுத்தான். அவ்வப்போது நண்பர்களுடன் சிறு சிறு அவுட்டிங்கும் சென்று வந்தனர். நூலகம், வகுப்பறை செல்லும் இடங்களில் அவன் எதிர்பட்டால், ராகவர்த்தினி மிக மிக அளவான உதடு விரிப்புகளுடன் கடந்து சென்றாள்.

முன்பே பெரிதான பேச்சு, சிரிப்பு இல்லை என்றாலும் இது இன்னும் சுருக்கமே. என்னவாம் அவளுக்கு..? சரித்திரனுக்கு மனதினுள் தான் கேள்வி. நேரில் பார்த்தால் அவளை போல் தான் அவனும்.

தேர்வுகளுக்கு சில வாரம் இருக்கும் போது சரித்திரனின் பிறந்தநாள் வந்தது. வார விடுமுறை நாள் அது. “கடைசி வருஷம் மச்சான். எல்லோருக்கும் ட்ரீட் வேணும்..” என்று நண்பர்கள் கேட்கவே அன்றிரவு மொத்த வகுப்பிற்கும் டேபிள் புக் செய்துவிட்டான்.

அன்று காலையிலே அம்மா, தங்கையுடன் கோவில் சென்று வந்தான். குமரகுருவிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு, தங்கையுடன் கடை கடையாக சுற்றினான். “அப்படி எவ்வளவு தான் வாங்குவ..?”  கடுப்பாகிவிட்டான் அண்ணன்காரன்.

“உன் பர்த்டேக்கேன்னு நான் பாண்டியில் இருந்து கிளம்பி வந்திருக்கேன். நீ என்னடான்னா எனக்கு இரண்டு செட் ட்ரஸ் எடுத்து கொடுக்க சலிச்சுக்குற. அம்மா எனக்கு நல்லா அண்ணனா பெத்து கொடுத்திருக்கலாம்..”  அவனுக்கு மேல் பேசினாள் தங்கைகாரி.

“இது இரண்டு ட்ரஸ்ஸா.. இரண்டு வருஷத்துக்கு சேர்த்து வாங்கிட்டு பேச்சை பாரு. வேதவள்ளி மேடம் ஓடி ஓடி சம்பாதிக்கிறதை நீ ட்ரஸ் வாங்கியே முடிச்சிடுவ, குரங்கு ஒழுங்கா நட.. வண்டிக்காரன் ஏறிட்டு வரது தெரியல..” என்று சாலையின் இந்த பக்கம் இழுத்துவிட்டான்.

“காஸ்மெட்டிக் கடை பார்த்தேன்.. வா போய்ட்டு வந்துடலாம்..” என்றவள், “ஆமா இப்போ என்னை குரங்குன்னா சொன்ன..? நீதான் கொரில்லா..” சண்டைக்கு நின்றுவிட்டாள்.

“கொரில்லா சொன்ன இல்லை.. நீயே வீட்டுக்கு வந்து சேரு..” அவளை அப்படியே விட்டு நடக்க,

“ண்ணா.. டேய்ண்ணா.. நான் அம்மாகிட்ட சொல்லி உன் ட்ரீட்டை கேன்சல் பண்ணிடுவேன்டா..” என்று மிரட்ட, சரித்திரன் திரும்பி வந்தான்.

“அந்த பயம் இருக்கட்டும்..” என்ற தங்கையின் கை பிடித்து அவளின் ஷாப்பிங் பைகளை திணித்தவன்,

“தூக்கிட்டு வா.. அப்போ தான் கொழுப்பு குறையும். என்னையே மிரட்டுறயா..?” என்று தலையில் கொட்டி சென்றான்.

“ஸ்ஸ்ஸ்..” வலித்த தலையை தேய்க்க கூட முடியாமல் இரண்டு கைகள் நிறைய பைகள் இருக்க, மதிய வெயில் வேறு சுள்ளென்று உச்சியை பிளந்தது. உண்மையாவே விட்டுட்டு போய்டுவானோ..?

“ண்ணா.. டேய்ண்ணா.. சாரி, சாரி. கூட்டிட்டு போடா. நான் அம்மாகிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன்..” என்று பின்னாடியே போக, சரித்திரன் திரும்பி புருவம் ஏற்றி இறக்கினான்.

“சரி. அம்மா வார்த்தையே என் வாயில வராது..” என்று உள்ளுக்குள் கடுப்பில் கொதித்தாலும் வெளியே பாவமாக நின்றாள்.

 “உள்ளுக்குள்ள எண்ணெய் சட்டையில போட்டு என்னை வருத்திட்டிருப்பியே..?” என்றபடி அவளிடம் இருந்து பைகளை வாங்கி கொண்டு கார் இருக்கும் இடம் கூட்டி சென்றான்.

பின் மாலையே நண்பர்கள் எல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிடுவதாய் இருக்க, சரித்திரன் தங்கையை வீட்டில் விட்டு சிறிது ஓய்வெடுத்து கிளம்பினான். என்னென்ன உணவு வேண்டும் என்று போனிலே ஆர்டர் கொடுத்துவிட்டதால் இவர்கள் எல்லாம் டேபிளில் அமர்ந்தவுடன் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தது.

சூப், ஸ்டார்ட்டர் முடித்து ஒரே கலாட்டா தான். அங்கு பாடுவதற்கு மேடையும் இருக்க அதில் இறங்கிவிட்டனர். பெண்கள் இருப்பதால் உணவை சீக்கிரமே கொண்டு வர சொல்லிவிட்டான் சரித்திரன். சாப்பிடுவதை விட பேச்சும், சிரிப்பும் தான் அதிகம்.

ஸ்டார் ஹோட்டல் என்பதால் அங்குள்ள அமைதியில் இவர்கள் சத்தம் மிக அதிகமே. சிலர் ரசித்தனர். சிலர் முகம் சுளித்தனர். இவர்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. மாற்றி மாற்றி கலாய்த்து கொண்டிருக்க, ராகவர்த்தினி பெற்றவர்களுடன் வந்தாள்.

அவளின் அப்பா, அம்மாவிற்கு அன்று திருமண நாள். அவர்களுக்கென புக் செய்த டேபிளுக்கு சென்று அமர்ந்தனர். காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் போல.. என்று பார்க்க, சரித்திரன். விஸ்வநாதனும் அவனை பார்த்துவிட்டார்.

“அன்னைக்கு சொன்னேன் இல்லை அந்த பையன் தான் சித்ரா..” என்று மனைவிக்கு அவனை காமித்தார். பிறந்தநாள் கேக் வர நண்பர்கள் ஏற்பாடு என்று புரிந்து கொண்டான் சரித்திரன்.

“இன்னைக்கு பர்த் டே போல..” சித்ரா சொல்ல, கேக் முன் சிரித்து கொண்டிருந்த சரித்திரனையே பார்த்திருந்தாள் ராகவர்த்தினி.

சில நொடிகளில் சரித்திரன் கண்களும் அவளை கண்டுகொண்டது. ஆச்சரியமாக புருவம் தூக்கியவன், உடன் இருந்த விஸ்வநாதனை பார்த்து அறிமுகமாக சிரித்தான். “மச்சான் ஸ்டார்ட்..”  என்று விசாகன் தோள் தட்ட, கேக் வெட்டியவன் நண்பர்களுக்கு கொடுத்து இவர்கள் டேபிளுக்கு வந்தான்.

“ஹலோ சார்..” என்று கை கொடுத்து, சித்ராவிடம் “ஹாய் மேம்..” என்றான். விஸ்வநாதன் தம்பதி அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல, நன்றி சொன்னவன்,  ராகவர்த்தினியை பார்த்தான்.

ராகா.. என்று சித்ரா அழைக்க, “ஹாப்பி பர்த் டே..” என்றாள். இதுக்கு இவ விஷ் பண்ணாமலே இருந்திருக்கலாம்.

“ஓகே சார் நீங்க பாருங்க..” என்று சரித்திரன் தன் டேபிளுக்கு வந்துவிட்டவன், மேனேஜரிடம் ஏதோ சொன்னான்.

அதன்படி ஸ்வீட் வகைகள் வர, விஸ்வநாதன் நான் சொல்லலையே என்று மறுக்க போக, “சார்.. நான் தான் சொன்னேன்.. என்னோட ட்ரீட், மறுக்காதீங்க ப்ளீஸ்..” என்று வந்தான் சரித்திரன்.

விஸ்வநாதன் இது போன்ற செயல்களை அறவே விரும்பமாட்டார். அவரின் பதவி அப்படி. இவனும் அரசியல், தொழில் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். எனவே அமைதி காக்க. அவரின் முகம் கண்டு கொண்ட சரித்திரன், அதை கொண்டு போக சொல்லிவிட்டான்.

“இருங்க..” என்ற சித்ரா ஒரு ஸ்வீட் மட்டும் எடுத்து கொண்டவர், “இன்னைக்கு எங்க கல்யாண நாள். அதுக்காக எடுத்துகிறேன்..” என்றார்.

சரித்திரன் இருவருக்கும் வாழ்த்து சொன்னவன், “உங்க பாயிண்ட் ஆவ் வியூ யோசிக்கலை.. சாரி சார்..” என்றான்.

“நோ நோ சாரி வேண்டாம்..  நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ்..” விஸ்வநாதன் சொல்ல, சரித்திரன் பொதுவாக தலையசைத்து வந்துவிட்டான்.

ராகவர்த்தினி இந்த மொத்த பேச்சிலும் அமைதி மட்டுமே. “உன் சீனியர் தானே.. பேச மாட்டியா ராகா..?” என்று சித்ரா கேட்டபடி அந்த ஸ்வீட்டை மகளுக்கு ஊட்ட போக,

“வேண்டாம்மா..” என்று மறுத்துவிட்டாள் அவள். அதை சரித்திரன் பார்த்துவிட்டான். கண்கள் இடுங்கி போனது. ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆகிவிட்டான்.

ஒயாத கலாட்டாகளுடன் ட்ரீட் முடிய பெண்களை கிளம்ப சொல்லிவிட்டான் சரித்திரன். அவர்களுடன் துணைக்கு  விசாகனும் மற்ற நண்பர்களும் உடன் சென்றனர்.

ராகவர்த்தினி குடும்பத்தினரும் உணவு முடித்து கார் எடுத்து வர சொல்லி நின்றிருக்க, சரித்திரனும் பில் பே செய்து வந்தான். விஸ்வநாதனுக்கு தெரிந்தவர் வர, அவர்களுடன் பேசி கொண்டிருக்க, இவன் ராகவர்த்தினி பக்கம்  நின்றான்.

இருவரிடமும் அமைதி. நிமிடத்தில் இருவருக்குமே  காரும் வந்துவிட, விஸ்வநாதன் டூ மினிட்ஸ் என்று கை காட்டினார். இவனும் கிளம்பாமல் அவளுடனே நின்றான்.

தன் பக்கமே திரும்பாமல் அதிகமாக வீசும் காற்றுக்கு அலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கி,  துப்பட்டாவை இழுத்து சரி செய்து கொண்டே இருந்த அவளின் மென் விரல்கள் அவன் கவனத்தை பெற்றது. அழுத்தி பிடிச்சா ஒடைஞ்சிடும் போல. அதுக்கு எவ்வளவு வேலை கொடுக்கிறா..?

“அந்த விரலை ஏன் அந்த பாடுபடுத்துற..” என்று கேட்டும்விட்டான் அவன்.

“ஆஹ்ன்..” விழித்த ராகவர்த்தினி விரல்கள் பழக்கம் போல திரும்ப முடிய ஒதுக்க போக,

“முடி பறந்தா இப்போ என்ன..?  பேசாம இரு..” என்றான் கொஞ்சம் அதட்டலாகவே.

“என் விரல் அது..” ராகவர்த்தினி முகம் சுருக்கி சொன்னவள், “எனக்கு பிரியாணி வாங்கி கொடுக்க காசு இல்லை.. இதுக்கு மட்டும் இருக்கு இல்லை..?” என்று கேட்டாள்.

சரித்திரன் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “என்ன சொல்லணும்ன்னு நினைக்கிற..?” என்று கேட்டான்.

“இன்னைக்கு உங்க பர்த் டேன்னு எனக்கு தெரியல..”  என்றாள்.

“தெரிஞ்சப்புறம் சூப்பரா விஷ் பண்ணியே அப்புறம் என்ன..?” அவன் நக்கலாக சொன்னான்.

“நீங்க எனக்கு முன்னாடியே சொல்லலை..” ராகவர்த்தினி கேட்க,

“அடுத்த முறை போஸ்டர் அடிச்சு ஒட்டிடுறேன் போதுமா..” என்றான் அவன். பெண் கோவமாக பார்க்க, “நான் தான் கோவப்படணும். உன் அம்மா கொடுத்த ஸ்வீட்டை வேணாம் சொல்ற நீ..?” என,

ராகவர்த்தினியிடம் பதில் இல்லை. “உன்கிட்ட தான் கேட்கிறேன்  நீ சாப்பிடாதது என்னை டிஸ்டர்ப்  பண்ணுது. என்ன பண்ற நீ..?” என்றான் ஆயாசமாக.

“பர்ஸ்ட் இயர் தானே படிக்கிற நீ..?” என்றான் தொடர்ந்து.

ராகவர்த்தினிக்கு மூக்கு விடைத்தது. “ஆமா பர்ஸ்ட் இயர் தான். இப்போ என்ன சொல்ல வரீங்க..?” என்று கேட்டாள்.

சரித்திரன் அழுத்தமாக முடியை கோதி கொண்டவன்,  “ஒழுங்கா படி.. என் உயிரை வாங்காத..” என்றான்.

“நீங்க சொல்லி தான் நான் இத்தனை வருஷம் படிக்கலை. உங்க உயிரை வாங்குறேன் சொல்றீங்க, அப்படி என்ன பண்ணிட்டேனாம்..” கேட்டவளின் கண்கள் ஏனென்றே தெரியாமல்  கலங்கி போனது. மறுபக்கம் முகம் திருப்பி கொண்டாள்.

இருவருக்குள்ளும் அவஸ்தை ஆரம்பமானது. அது இருவருக்கும் புரிந்தே இருந்தது.

விஸ்வநாதன் தம்பதி பேசிவிட்டு வர, சொல்லி கொண்டு கிளம்பியவன் அவளை ஆழமாக பார்த்தே  சென்றான்.

Advertisement