Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 6

அதன்பின் சரித்திரன் அவளை பார்த்தால் சிறு புன்னகை, இரண்டொரு வார்த்தை என்று தான் கடந்து சென்றான். சில செயல்கள் தன்னை மீறி மற்றவரை பாதித்துவிடும் என்று அவளால் புரிந்து கொண்டவன், கவனமாக இருக்க நினைத்தான்.

ராகவர்த்தினியும் அவன் பாணியிலே அளவான புன்னகை, சிறு சிறு பேச்சுக்கள் என்றிருந்து கொண்டாள். தான் அவரிடம் அதிகமாக பேசுகிறோம் என்பது அவளுக்குமே கொஞ்சம் அதிர்ச்சி தான். அதனாலே அவளும் சுருங்கி கொண்டாள்.

 கல்லூரி வாழ்க்கையில் மாற்றம் இல்லாமல் கடக்க, அரசியலில் பல பல மாற்றங்கள் இடம் பெற ஆரம்பித்தன. குமரகுரு மகனிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்தார்.

முதலில் பகிர்ந்து கொள்ள, தகவலாக, தெளிவாக என்று மகனுடன் அரசியல் பேச ஆரம்பித்தவருக்கு நாளாக நாளாக அவனிடம் அரசியல் பேசுவதும் பிடித்திருந்தது.

சரித்திரனின் ஆர்வம், அவனின் உன்னிப்பாக கேள்விகள், வேறுபட்ட பார்வைகள் அவரை உற்சாக படுத்தியிருக்க, இரவுகளில் சில மணி துளிகளை மகனுக்கென்று ஒதுக்க ஆரம்பித்தார்.

வேதவள்ளி கம்பனி விழாவிற்கு வராமல் டெல்லியில் இருந்ததன் காரணத்தை சரித்திரனிடம் சொல்ல, அவனுக்கு ஆச்சரியம். “உண்மையவாப்பா..?” என்று கேட்டான்.

“யாருக்கும் தெரியாது.. கணேசன், உனக்கும், எனக்கும் மட்டும் தான்..” என்றார் குமரகுரு மகிழ்ச்சியுடன்.

“சூப்பர்ப்பா.. பட் நம்மளை ஏன் சூஸ் பண்ணாங்க, அதுவும் இவ்வளவு சீக்கிரம்..? எலெக்ஷனுக்கு இன்னும் இரண்டு வருஷம் இருக்கே..” என்றான் கேள்வியாக.

“இதுவே லேட் தான் தம்பி.. மக்களுக்கு எலெக்ஷன்னா அது அந்த ஒரு ஆறு மாசம் தான். ஆனால் நம்மளை மாதிரி அரசியல்வாதிக்கு அது சில வருஷ வேலை. முன்னாடியே எந்த கட்சிக்கு வாய்ப்பு அதிகம்ன்னு கணிச்சு, அவங்களோட கூட்டணி வைக்கிறதோ, இல்லை அவங்க ஓட்டை உடைச்சு விடுறதோ செய்ய ஆரம்பிச்சிடுவாங்க..”

“இந்த முறை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தவிர்த்து பாக்கி இருக்கிற கட்சியில நம்ம கட்சி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கு. கைவசம் உறுதியா பத்து MLA வச்சிருக்கோம். இந்த இரண்டு வருஷத்துல குறைஞ்சது அஞ்சு தொகுதியாவது ரெடி பண்ணிடுவேன். அவனவன் ஒரு MLA கைவசம் இருந்தாலே நான் சொல்றவன் தான் அடுத்த CM என்பான், நம்மகிட்ட பத்து இருக்கே..”

“யோசிச்சு பாரு 234 தொகுதியில  இரண்டு பெரிய கட்சியும் 100, 100 சீட் அடிச்சா கூட, இடையில் இருக்கிற 34 தொகுதி MLA தான் டிசைட் பண்ணுவான் அடுத்து யாரு நம்ம ஸ்டேட்டை ஆள போறான்னு. அப்படி பார்த்தா நம்மகிட்ட தான் MLA அதிகம். அதான் இப்போவே கூப்பிட்டு வைச்சு பேசுறான்..” என்றார்.

“ம்ம்ம்.. புரியுதுங்கப்பா.. உங்களை கூப்பிட்டு பேசுன நேஷனல் பார்ட்டி இப்போ இருக்கிற எதிர்க்கட்சியோட  கூட்டணி கட்சி. சரியா உங்களை பாலோ பண்ணி தான் கூப்பிட்டிருக்காங்கப்பா..” என்றான் மகன் புரிந்து.

“கணிப்பு தானே தம்பி.. ஆளுங்கட்சி என்னை மொத்தமா கீழிறக்க பார்த்தாங்க,  போடான்னு அமைச்சர் பதவியை நானே தூக்கி எறிஞ்சுட்டு வந்துடலையா..? இனி நான் உயிரே போனாலும் திரும்ப அந்த கட்சியில் போய் சேருவனா..? நிச்சயம் மாட்டேன். நான் மற்ற அரசியவாதிங்க மாதிரி இல்லை. அது அவன் கணிச்சிருக்கான். என்னை கூப்பிட்டு வைச்சு பேசுறான்..” என்றார்.

“என்ன சொல்லிட்டு வந்திருக்கீங்கப்பா..?” சரித்திரன் கேட்க,

“யோசிச்சு சொல்றேன்னு தான் தம்பி.. உடனே முடிவு எடுக்கிற விஷயமா இது..? நாம அங்க சேர்ந்தா நமக்கு என்ன மதிப்பு இருக்குன்னு பார்க்கணும் இல்லை..” என்று சொல்லி கொண்டிருக்க, அவரின் போன் ஒலித்தது.

“தீனதயாளன்.. சொல்லுப்பா.. என்ன இந்த நேரம்..?”  குமரகுரு போன் எடுக்க,

“கணேசன் மதுரைக்கு வந்திருக்கார் போல தலைவரே.. கடல் மாதிரி நம்ம வீட்டை வைச்சுக்கிட்டு ஓட்டல்ல தங்குறேன்னு சொல்றார். இதெல்லாம்  நல்லாவா இருக்கு. அப்பறம் ஒரே  கட்சிக்காரன் எனக்கென்ன மரியாதை இருக்கு சொல்லுங்க பார்ப்போம்..?” என்றார் அவர் மனத்தாங்கலாக.

“விடுய்யா.. அவன் குடும்பத்தோட கோவிலுக்கு வந்திருக்கான். இஷ்டப்படி இருந்துட்டு வரட்டும்.. நீ அவனுக்கு அங்க என்ன வசதி வேணுமோ பார்த்து மட்டும் கொடு..” என,

“சரிங்க தலைவரே.. நீங்க சொன்னா மறுபேச்சு ஏது..? அப்பறம் தலைவரே போன வாரம் நீங்க ஊர்ல இல்லை போல, நான் வந்திருந்தேன்..” என்று கேட்க,

“அது கொஞ்சம் வேலையா வெளியே போயிருந்தேன்யா.. என்ன விஷயம்..?” என்று கேட்க,

“சும்மா தான் தலைவரே..” என்றான் தீனதயாளன்.

“சரிய்யா நான் வைக்கிறேன்..” என்று குமரகுரு வைத்தவர், “தீனதயாளன் தம்பி.. கணேசன் அவன் வீட்டுக்கு வரலன்னு கோவிச்சுகிறான். தனியா போனாலே நாம யார் வீட்லயும் தங்க மாட்டோம், இதுல அவன் குடும்பத்தோட போயிருக்கான். எப்படி அங்க தங்குவான்..? இவன் பிஸ்னஸ் மேன் மாதிரி தான் யோசிக்கிறான். அரசியல் இன்னும் கூட தெரியல..” என்றார் மகனிடம்.

“மதுரை தான் அவர் ஊரா..? ம்ம்.. எப்போப்பா அவர் நம்ம கட்சியில் சேர்ந்தார்..?” என்று கேட்டான் சரித்திரன்.

“போன வருஷம் தான் தம்பி.. அவனும் என்னோட ஆளுங்கட்சியில இருந்தவன் தான். அங்க உங்களை பண்ணது எனக்கு பிடிக்கலை தலைவரே, நான் உங்களோடே இருக்கேன்னு வந்து நின்னான்.  சரின்னு சேர்த்துக்கிட்டேன். மதுரை கண்டிப்பா அவன் நின்னா ஜெயிப்பான்..” என்றார்.

“பிஸ்னஸ் மேன்க்கு அரசியல் ஆசை..” சரித்திரன் சொல்ல,

“ஆசையும் இருக்கலாம் தம்பி. ஆனா அவன் முதல்ல கட்சியில சேர்ந்ததுக்கு காரணம் பணம், சொத்தை பாதுகாக்க தான். நிறைய தொழில். எக்கச்சக்கமா பணம் சேர்த்துட்டான். எல்லார் கண்ணும் அவன் மேல விழுகவும் உஷரா பிளான் பண்ணி கட்சியில் சேர்ந்துட்டான். இனி அவனுக்கு ஒன்னுன்னா கட்சி துணை நிக்கும் இல்லை..” என்றார் குமரகுரு.

“நரி மூளைப்பா..” என்றான் சட்டென சரித்திரன்.

“ம்ம்.. இருக்கலாம் தம்பி தப்பில்லையே..”

“நீங்க எதுக்கும் இந்த மாதிரி ஆளுங்ககிட்ட உஷாரா இருங்கப்பா..”

“ஏன் தம்பி அப்படி சொல்ற.. தீனதயாளன் நல்லவன் தான்..”

“தோணுதுங்கப்பா.. நீங்க அந்த கட்சியை விட்டு வந்து இரண்டு வருஷம்  கழிச்சு தான் அவர் உங்ககிட்ட வந்திருக்கார். அப்படி அவர்க்கு உங்களை பண்ணது பிடிக்கலைன்னா நம்ம கணேசன் மாமா மாதிரி உடனே உங்களோடே வந்திருக்கணும். அதென்ன நீங்க கட்சி ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ராங்  ஆனதுக்கு அப்புறம் வரது. எனக்கு என்னமோ செட் ஆகலைப்பா..” என்றான் மகன்.

“எல்லோரும் நம்ம கணேசன் ஆக முடியாதுப்பா.. அதோட அவன் பிஸ்னஸ் மேன். பல இடைஞ்சல் இருக்கும். எடுத்தோம், கவுத்தோம்ன்னு செய்ய முடியல தலைவரேன்னு என்கிட்ட பீல் பண்ணான்..” என்றார் குமரகுரு.

“ம்ஹ்ம்..”

“நமக்கு விசுவாசமானவன் தான் தம்பி.. எல்லோரையும் சந்தேகபட கூடாது..” என, சரித்திரன் சரி என்று கேட்டுக்கொண்டான். அப்பாவிற்கு தெரியும் என்ற எண்ணம். பலவருட அனுபவம். அது நமக்கு இல்லை தானே. விட்டுவிட்டான்.

அவனுக்கு இன்னும் சில மாதம் தான் கல்லூரி படிப்பு. அடுத்து என்ன என்று பார்க்க வேண்டும். வேதவள்ளி இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டார். மேல படிக்க போறியா..? இல்லை தொழிலுக்கு வரியா என்று.

குமரகுருவிற்கோ எல்லாம் மகன் விருப்பம் மட்டும் தான். “உனக்கு என்ன தோணுது, அப்படி பண்ணு தம்பி..” என்றுவிட்டார்.

தொழில் பக்கம் இப்போதைக்கு வாய்ப்பில்லை.  அந்த ஆர்வமே இல்லை. சொன்னால் வேதவள்ளி அவ்வளவு தான். மேல்படிப்பு தான் போக வேண்டும் என்று மனதில் எண்ணம். சொல்லிக் கொள்ளவில்லை. அருகில் சென்று பார்த்து கொள்ளலாம் என்று கல்லூரி சென்று கொண்டிருக்க, அங்கு விழா கொண்டாட்டம் ஆரம்பித்தது.

இன்டர் காலேஜ் கல்ச்சுரல். படிப்பு ஒரு ஓரம் சென்றுவிட்டது. பல காலேஜ் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடுவது என்றால் சொல்லவும் வேண்டுமா. திருவிழா கோலம் தான். முதல் இரண்டு வருடம் பார்த்துவிட்டதால் சரித்திரனுக்கு அந்தளவு பெரிதான ஆர்வம் இல்லை.

ராகவர்த்தினிக்கு அப்படி இல்லை. முதல் முறை என்பதால் ஒரே கொண்டாட்டம் தான். அவள் வகுப்பில் பலர் பல போட்டியில் கலந்து கொள்ள, ராகவர்த்தினி யோசித்தாள். நடனம் அவளுக்கு நன்றாக வரும் என்றாலும் அடுத்த வருடம் சேர்ந்து கொள்ளலாம் என்று நண்பர்களுடன் மேடைக்கு கீழே ஒரே ஆட்டம் தான்.

சரித்திரன் அந்த பக்கம் சென்றவன், அவளின் ஆட்டம் பார்த்து சிரிப்பு தான். சீனியர் என்ற முறையில் அவனிடம் சில பொறுப்புகள் இருக்க, அதில் அவன் கவனம். ராகவர்த்தினி அவன் பார்த்துவிட்டவள்,  நொடி நின்றுவிட, அவன் கையசைத்து சென்றுவிட்டான்.

உணவு இடைவெளி நேரம் எதிரில் வந்தவளிடம், “என்ன நடக்க முடியுதா..?” என்று  கேட்டான்.

“அவ்வளவு ஒன்னும் டேன்ஸ் பண்ணல..” ராகவர்த்தினி முணுமுணுக்க,

“ஓஹ் அதுக்கு பேர் தான் டேன்ஸா..?” சரித்திரன் கேலியாக கேட்டான்.

 “சீனியர்.. நான் நல்லாவே ஆடுவேன்..” பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது.

“பார்த்தேன்.. பார்த்தேன்..” சரித்திரன் கண்கள் சிரித்தது.

“நீங்க என்னை டீஸ் பண்றீங்க.. இதுக்காகவே அடுத்த வருஷம் பாருங்க..” என்றாள் வீராவேசமாக.

“நான் அடுத்த வருஷம் இங்கிருக்க மாட்டேன்னு தெரிஞ்சு தானே சொல்ற..?” சரித்திரன் சொல்ல,

ஏன்..? என்று கேட்க வந்தவளுக்கு அவனின் கடைசி வருஷம் என்பது புரிய, சட்டென அமைதியானாள்.

“சாப்பிட போ.. உன் ப்ரண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க பாரு..” என்றவன் மறுபக்கம் சென்றுவிட்டான்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது கல்லூரி பழைய நிலைக்கு திரும்ப. ஓரிரு மாதங்களில் செமஸ்டர் வந்துவிடும். அனைவருக்கும் படிப்பில் கவனம் சென்றது. வகுப்புகள் முழு வீச்சில் சென்றது.

Advertisement