Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 4

அரசியல்..!   மக்களால் அதிகளவில் வெறுக்கப்படுவதும் இதுவே..! அநேக பேரால் விரும்ப படுவதும் இதுவே..!

இது இல்லாமல் உலகம் இல்லை.

கட்சி.. கரைவேட்டி.. தலைவன்.. அரசியல்.

ஆட்சி.. அதிகாரம்.. பணம்.. அரசியல்..!

சாதி.. மதம்.. அரசியல்..!!

 யார் ஒருவரையும் என் பின்னால் நீ வா என்று சொல்லி விட முடியாது. கேட்க மாட்டான். நான் ஏண்டா உன் பின்னாடி வரணும் என்று நொடியும் இல்லாமல் கேள்வி வந்து குதிக்கும். கொஞ்சம் திமிராக, அதட்டலாக கூட அந்த கேள்வி இருக்கும்.

ஆனால் அவனிடமே நான் உன் சாதி.. உன் மதம்.. உன் கட்சி.. உன் தலைவன்.. என் பின்னாடி வா என்றால்..?

இது வேண்டாம் பணம்.. அதிகாரம், பதவி கிடைக்கும் என்றால்..? நிச்சயம் அந்த நொடி நேர கேள்வி பட்டென வந்து குதிக்காது.

இதில் விதிவிலக்கு உண்டும் தான். பகுத்தறிவை பயன்ப்படுத்தி வேறுபடுத்தி பார்ப்பவனிடம் இது செல்லாது தான்.

ஆனால் அதே பகுத்தறிவு இருந்தாலும் தன் சார்ந்த அடையாளம் ரத்தத்தில் ஊறிபோனவன் அந்த தலைவனை கண் மூடி கொண்டு பின் தொடரதான் செய்வான்.

படித்தவன், படிக்காதவன், அறிவாளி, முட்டாள், பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கலாம் என்றால் அது நிச்சயம் அரசியல் சார்ந்த களமாக இருக்கலாம்.

தனக்கான திட்டமிடலுடன், ஆதாயத்துடன் அரசியலில்  நுழைபவனும் உண்டு. உணர்வு பூர்வமாக உயிரை கொடுக்கும் வெறியுடன் அரசியலில் இணைபவனும் உண்டு.

அபிமானத்தில், அந்த தலைவன் செயலால் ஈர்க்கப்பட்டு அவருடன் இறுதி வரை நிற்கும் அபூர்வ விஸ்வாச அரசியல் ஆர்வலர்களும் உண்டு.

ஒரு நாட்டின் தலைவரையே இந்த அரசியல் சதுரங்கம்  தேர்ந்தெடுக்கிறது எனும் போது இதற்கான பலம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஏன் வீட்டிலும் இந்த அரசியல் நடக்காமல் இருப்பதில்லையே. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அரசியலை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது.

அப்படி கடந்து செல்ல வேண்டும் என்று சரித்திரன் குடும்பம் நினைத்ததன் விளைவு தான் சரித்திரன் தனியாக நிற்க காரணமானது.

பிறந்ததில் இருந்து அந்த அரசியலை பார்த்து வளர்ந்தவன் அவன். வீட்டிலும் எந்நேரமும் அரசியல் தான். ஏனெனில் அப்பா அரசியல்வாதி. வெகு தீவிர அரசியல்வாதி. எந்தளவு என்றால் கொட்டிக்கிடக்கும் சொத்தில், பணத்தில் சுகவாசியாக புரளாமல் அதையே ஆயுதமாக்கி அரசியலில் நுழையுமளவு.

குமரகுரு.. சரித்திரனின் தந்தை.. பரம்பரை பரம்பரையாக பணத்தை பெருக்கி கொண்டே செல்லும் பணம் படைத்த குடும்பத்தில் பிறந்தவரின் மோகம் பணத்தின் மீது இல்லாமல் அரசியல் மேல் விழுந்தது.

இளவயதிலே அவருக்கு பிடித்த கட்சியில் பணத்தை கொட்டி பதவியுடனே அரசியலில் நுழைந்தவர் அவர். அப்போதே வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை. பெண் கொடுக்க தயங்கினர் மேல்தட்டு மக்கள்.

“நம்ம கௌரவத்துக்கு, அந்தஸ்துக்கு  சாதாரண குடும்பத்தில பொண்ணு எடுக்க முடியுமா..? இவனை யாரு அந்த அரசியல்ல சேர சொன்னா..? இப்போ பாரு ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறான்..” என்று குமரகுருவின் தந்தை கத்திய நாட்கள் எல்லாம் உண்டு.

“கொடுக்கலைன்னா போறாங்க.. கல்யாணம் செஞ்சே ஆகணும்ன்னு எதாவது இருக்கா என்ன..?” என்று குமரகுரு அதை எல்லாம் கண்டுகொண்டார் இல்லை. கட்சி பணிகள், மீட்டிங், அதில் நடக்கும் உள்கட்சி பூசல் என்று  இதிலே ஊறி போனார்.

அதற்காக வீட்டினர் அவரை அப்படியே விட முடியுமா..? ஒன்று விட்ட சொந்தமான வேதவள்ளியை மிகவும் வேண்டி கேட்டு தான் திருமணம் செய்து வைத்தனர். குழந்தை குடும்பம் என்றான பின் அரசியல் எல்லாம் விட்டு தொழில் பக்கம் வருவார் என்று வீட்டினர் எதிர்பார்க்க, அவரோ அப்போது தான் தேர்தலில் நின்றார்.

குமரகுருவின் உடன்பிறப்புகள் “இவன் அரசியல்ல விட நாங்க சம்பாதிக்கணுமா..? எங்க சொத்தை பிரிச்சு கொடுத்திடுங்க..” என்று தந்தையிடம் பிரச்சனை செய்து பிரித்தெடுத்து சென்றுவிட்டனர்.

சரித்திரன் அப்போதுதான் பிறந்திருந்தான். வேதவள்ளியை அமர வைத்த அவரின் மாமனார், “உன் புருஷனை நம்பி பிரயோஜனம் இல்லை. தொழில் உன்னால நடத்த முடியாது. பேசாம உங்க பங்கு சொத்தை வித்து பணமா..”

“இல்லை மாமா.. என்னால தொழிலை நடத்த முடியும்..” என்றார் வேதவள்ளி இடையிட்டு. டிகிரி படித்திருந்தவரின் தன்னம்பிக்கை மாமனாரை வியக்க வைத்ததுடன் யோசிக்கவும் வைத்தது.

குந்தி தின்றால் குன்றும் கரையும்.. வேதவள்ளி அதை புரிந்து கொண்டார். குமரகுரு மனைவி முடிவில் மெச்சினார். அவர் தன்னம்பிக்கை  மேல் இன்னும் காதல் கொண்டார். அரசியலில் சம்பாதிக்க முடியும் என்றாலும் அவருக்கு அதில் விருப்பமில்லை. மனைவியும் அதே  எண்ணத்தை பிரதிபலிப்பது அவருக்கு  மகிழ்ச்சியை கொடுத்தது.

தொழிலில் விருப்பமில்லாதவர் மனைவிக்காக, “என் பொண்டாட்டி செய்வா.. தொழிலை அவளுக்கு கொடுங்க.. நான் அவளுக்கு சப்போர்ட் பண்றேன்..” என்றார். முழுமனதுடன் மனைவியை நம்பினார். துணையும்  நின்றார்.

அரசியல் தான் குமரகுரு வழி என்று தெரிந்து தான் திருமணமும் நடந்தது. எனவே வேதவள்ளி தானே குடும்பத்தை தாங்க முன் நின்றார். கணவரின் காதலில், அன்பில், நன்முறையில் எவ்வித குறையும் இல்லையே.

தன் கையால்  கணவரின் தேர்தல் செலவுகளுக்கு பணம் கொடுத்தார் வேதவள்ளி. தேர்தலிலும் வென்றார் குமரகுரு. இரண்டாம் பெண் வர்ஷா பிறந்தாள். குடும்பம் பெரிதானது. தொழிலும் வளர்ந்தது.

குமரகுரு முதல் முறை MLA. அடுத்த முறை அமைச்சர் ஆனார்.. கட்சியில் அவரின் செல்வாக்கும் கூடியது. மக்கள் மத்தியில் பேர் சொல்லும் அளவு பிரபலம். மக்கள் பிரச்சனைகளுக்கு பணம் வாங்காமல் செய்து கொடுக்கும் தலைவர் மேல் நன்மதிப்பு கொண்டனர்.

வீட்டில், கட்சி ஆபிசில் எந்நேரமும் ஆட்கள். “தலைவரே.. தலைவரே..” என்று ஆரவாரம். என் தந்தை கையசைத்தால் இவ்வளவு ஆர்பாட்டம், கொண்டாட்டமா..? சரித்திரன் வியந்து நின்றான்.

“தலைவர் மகன் வரார்.. வழி விடுங்க..” என்று ஒட்டு மொத்த கூட்டமும் அவன் ஒருவனுக்கு விலகி பாதை கொடுக்கும் நேரம் நெஞ்சு தானே அவனுக்கு நிமிர்ந்தது.

ஒன்பதாம் வகுப்பில் இருந்தவனுக்கு  உணவு, உடையில் குறைவில்லை. ஏறினால் கார், இறங்கினால் கார். உடன் எப்போதும் பாதுகாப்பிற்கு ஆட்கள். வேண்டியது உடனே கைக்கு வந்தது. இளவரசனாக நடத்தப்பட்டான்.

அம்மாவின் தொழில் அவனை ஈர்க்கவில்லை. அப்பாவின் அரசியல் அவனை ஈர்த்தது. என் அப்பா ஹீரோ என்றான் நண்பர்களிடம் பெருமையாக. அதன் விளைவு படிப்பில் மெல்ல கவனம் குறைய ஆரம்பித்தது. வேதவள்ளி உடனே கண்டுகொண்டார்.

பிள்ளைகள் இருவரையும் போர்டிங் போட்டுவிட்டார்.  அந்த பள்ளியில்  இல்லாத வசதிகள்  இல்லை. அங்கும் அமைச்சர் மகன் என்ற அடையாளம், சலுகைகள். அதை தவறாக பயன்படுத்துபவன் இல்லை என்றாலும் அப்பாவை யார் அரசியலை வைத்து பேசினாலும் சண்டைக்கு நிற்க தயங்க மாட்டான். உடன் தங்கை வர்ஷாவும்.

வேதவள்ளி அடிக்கடி பள்ளி வர வேண்டிய கட்டாயத்தை பிள்ளைகள் கொடுத்தனர். அப்போதும் பள்ளி படிப்பை அங்கு தான் முடிக்க வைத்தார் வேதவள்ளி.

பள்ளி படிப்பை முடித்துவிட்டோம் என்ற ஆசுவாசத்துடன் மொட்டை மாடியில் நின்றிருந்த மகனிடம் வந்த வேதவள்ளி, “அடுத்து என்ன..?” என்று கேட்டார்.

“இரண்டு நாள் தான் ஆச்சும்மா என்னோட ஸ்கூல் ஸ்டடி முடிஞ்சு..” சரித்திரன் சொல்ல,

“இருக்கட்டும்.. உனக்குன்னு எதாவது ஆம்பிஷன் இருக்க வேணாமா..?” என்று கேட்டார் வேதவள்ளி.

ஆம்பிஷன்.. ம்ஹ்ம்.. அப்படி ஒன்று உண்மைக்கும் அவனிடம் இல்லை. எதிலும் ஆர்வம் இல்லாதது போல் உணர்ந்தான். “நீங்களே சொல்லுங்க..” என்றான்.

“இது *** யூனிவர்சிட்டியோட அப்ளிகேஷன். எண்ட்ரன்ஸ் எக்ஸாம் வருது..”
என்று கொடுத்தார்.

” என்ன கோர்ஸ்..” என்று சரித்திரன் கேட்க,

“இதென்ன கேள்வி பிஸ்னஸ் சம்மந்தமான கோர்ஸ் தான் எடுக்கணும்..” என்றார் வேதவள்ளி.

எப்படியும் எதாவது படிக்க தான் வேண்டும். அதற்கு அம்மா சொன்னதே இருக்கட்டும்.. என்று ஒத்துக்கொண்டவன், நுழைவு தேர்வு மூலம் அங்கு தேர்வானான். அம்மா சொன்ன டிகிரி எடுத்தான்.

அப்போது தான் குமரகுரு ஒரு முக்கிய முடிவு எடுத்தார். தனி கட்சி ஆரம்பித்தார். கட்சியின் உட்கட்சி பூசல் காரணம். தலைவரை விட இவரின் செல்வாக்கு உயர்வது அந்த குறிப்பிட்ட கட்சிக்கு ஒப்புதல் இல்லை. அமைச்சர் பதவியை பறிக்க பார்க்க தானே பதவி விலகி வெளியே வந்துவிட்டார்.

முதல் ஐந்து வருடம் எந்த பதவியும் இல்லை. சோர்ந்துவிடவில்லை அவர். வைராக்கியத்துடன் தன் கட்சியை செதுக்க ஆரம்பித்தார். உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்த பாடுபட்டார். முன்னர் இருந்த கட்சியில் சிலர் தானே இவருடன் சேர்ந்தனர். இவர் சிலரை பணத்தை வைத்து வெளியே இழுத்தார்.

அரசியல் தந்திரங்களை கையாள ஆரம்பித்தார். இல்லையென்றால் தான் காணாமல் போய்விடுவோம் என்ற பயம். சரித்திரன் அப்பாவின் தூங்கா இரவுகளில் உடன் இருக்க ஆரம்பித்தான். அவரும் மெல்ல மெல்ல மகனிடம் அரசியல் பேச ஆரம்பித்தார்.

“உலகிலே சிறந்த ஆடுகளம் அரசியல் ஆடுகளம்..” என்றார். படிக்கும் படிப்பை விட அந்த அரசியல் ஆடுகளம்  அவனை ஈர்த்தது. இரவோடு இரவாக பலரின் தலையெழுத்தை மாற்றும் அந்த ஆட்டத்தை சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தான். பிடித்தது. அது மட்டுமில்லை. இன்னொருவளையும். ராகவர்த்தினி..!

 சரித்திரனின் மூன்றாம் வருடத்தின் போது அவன் படிக்கும் பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் சேர்ந்தவள். வேறு துறை என்றாலும் அவளை முதல் நாளே கவனித்தான். காரணம் அவளுடன் பாதுகாப்பிற்கென வந்த ஆட்கள்.

“யார்டா அது..? பர்ஸ்ட் இயருக்கே கார்ட்ஸ் கூட வரா..?” என்று விசாரித்தான்.

“தெரியலை மச்சான்.. அந்த கார்ட்ஸ் கூட இருக்கிறதால நம்ம பசங்க கூப்பிட்டு பேர் கேட்க கூட யோசிக்கிறாங்க..” என்றான் நண்பன் விசாகன்.

“கார்ட்ஸ் இருந்தா என்ன..?” என்ற சரித்திரன், “ஓய்.. வொயிட்  சுடி இங்க வா..” கையை தட்டி ராகவர்த்தினியை அழைத்தான்.

அவள் திரும்பி கார்ட்ஸை பார்க்க, அவர்களும் உடன் வந்தனர். பார்றா.. சரித்திரன் புருவம் சுருங்கியது.

“மேடம் பேர் என்ன..?” என்று அதட்டலாகவே கேட்டான்.

“ராகவர்த்தினி..” என்றாள் பெண்.

“காலேஜுக்கு இவங்க எதுக்கு.. என்ன ரேக்கிங் பயமா..?” என்று இருவரையும் காட்டி கேட்க,

“ஏன் அவங்க இருக்கிறதால உங்களுக்கு பயமா..?” என்று கேட்டிருந்தாள் பெண்.

“பர்ஸ்ட் இயருக்கு இவ்வளவு வாய் அவசியமில்லை பொண்ணே..” சரித்திரன் ஒரு மாதிரி சொல்ல, ராகவர்த்தினி நிதானித்தாள்.

“எல்லாம் ஒரு மாதிரி பார்க்கிறீங்க. அந்த டென்ஷன்ல.. சாரி..” என்றுவிட்டாள்.

சரித்திரன் இடுங்கிய புருவம் இப்போது மேலேறியது. “கார்ட்ஸ் கூட இருந்தா ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க.. அனுப்பிவிட வேண்டியது தானே..?” என்று கேட்டான்.

“அது முடியாது.. போக மாட்டாங்க..” என்றாள் அவளும் சுணங்கியவளாக.

இவளுக்கே பிடிக்கலை, அப்பறம் என்ன..? சரித்திரன் அந்த கார்ட்ஸை பார்க்க,

அவர்களோ, “பேசி முடிச்சாச்சுன்னா போகலாமா..?” என்று இவனிடம் கேட்டனர்.

“இல்லை.. பேசி முடிக்கலை..” என்றான் சரித்திரன்.

அவர்கள் இவனை விறைப்பாய் பார்க்க, “சீனியர்க்கு காபி, டீ எதுவும் வாங்கி கொடுக்கிறதில்லையா..?” என்று ராகவர்த்தினியிடம் கேட்டான் அவன்.

“இப்போவா..? கிளாஸ் போகணுமே..?” என்று நேரம் பார்த்தாள் பெண்.

என்ன டிபார்ட்மென்ட்.. என்று கேட்டு தெரிந்து கொண்ட சரித்திரன், “சரி.. போ..” என்றுவிட்டான்.

“தேங்க்ஸ் சீனியர்.. நான் லஞ்ச் பிரேக்ல  உங்களுக்கு காபி வாங்கி கொடுத்துடுறேன்..”  ராகவர்த்தினி சொல்ல,

“லஞ்சுக்கு காபியா..? பிரியாணி வேணும்.. சாப்பிட்டு முடிச்சுட்டு வேணும்ன்னா காபி குடிக்கிறோம்..” என்றான் விசாகன்.

“கண்டிப்பா வாங்கி கொடுக்கிறேன். புட் கோர்ட் கவுன்டர் நம்பர் மட்டும் எனக்கு சொல்லுங்க..” என்றாள்.

“பிரியாணி கவுன்டர் கேட்டா யூனிவர்சிட்டியே வழி சொல்லும், ஆமா நீ சீரியஸாவா கேட்கிற, நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன்..” விசாகன் சொல்ல,

“நீங்க விளையாட்டுக்கு தான் கேட்டீங்க,  பட் நான் நிஜமா தான் சொல்றேன். அரை மணி நேரமா தனியா நின்னேன், யாரும் என்கிட்ட பேசலை. நீங்க தான் பேசுனீங்க. பர்ஸ்ட் டே காலேஜ்ல, அப்செட் ஆகிட்டேன். இப்போ ஓகே.. பை சீனியர். லஞ்ச்ல மீட் பண்ணலாம்..” ராகவர்த்தினி விடைபெற்று சென்றாள்.

“மதியம் அந்த பொண்ணு வரும்னு நினைக்கிற..?” விசாகன் சந்தேகமாக கேட்க,

“கண்டிப்பா வருவா..” என்றான் சரித்திரன்  சட்டென.

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற.. எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை..” என்றான் நண்பன்.

“தோணுது.. பார்ப்போம்..” என்ற சரித்திரனை அன்று ராகவர்த்தினி ஏமாற்றி தான் விட்டாள்.

“பார்த்தியா வரல.. நான் தான் சொன்னேன் இல்லை..” விசாகன் சொல்ல, சரித்திரன் புருவம் இடுங்கி போனது.

அடுத்த நாள் கேம்பஸில் வைத்து எதிரில் வந்தவள், “சாரி சீனியர் உங்களை தான் தேடிட்டு இருந்தேன். உங்க பேர் என்ன..? என்ன டிபார்ட்மென்ட் நீங்க..?” என்று வேகமாக கேட்டாள்.

“சொல்ல முடியாது. ஏன் இன்னைக்கு பிட்சா வாங்கி கொடுக்கிறேன்னு ஏமாத்தவா..?” விசாகன் தான் கேட்டான்.

“சீனியர் எமர்ஜென்சின்னு நேத்து மதியமே கிளம்ப வேண்டியதா போச்சு, சொல்ல முடியல. சாரி சாரி, இன்னைக்கு கண்டிப்பா..”

“அது சும்மா கேட்டது தான்.. ப்ரீயா விடு..” சரித்திரன் சொல்லி கிளம்பிவிட்டான்.

அதன்பின் அவள் எதிரில் வந்தாலும் கண்டுகொள்வதில்லை. விசாகன் கூட சில நேரங்களில் இரண்டொரு வார்த்தை பேசுவான். சரித்திரனிடம் பார்வைக்கே பஞ்சம். என்னமோ முதல் முறையிலே என் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டாள் என்ற எண்ணம். முன்பின் தெரியாத பெண் மீது நம்பிக்கை வைத்தது என் தவறு தானே..? அதனாலே என்னமோ அவளிடம் சாதாரண பேச்சும் விருப்பமில்லை.

 கார்ட்ஸ் முதல் இரு வாரங்கள் மட்டுமே அவளுடன் வந்தனர். அதன் பின் இல்லை. சரித்திரன் கவனித்தில் பட்டதை,  விசாகன் அவளிடம் நேரடியாக கேட்டான்.

“என்ன பூனை படை வரலையா..?” என்று.

“இனி வர மாட்டாங்க சீனியர்..” அவளிடம் வெளிப்படையான மகிழ்ச்சி. “என் அப்பா ஒரு முக்கியமான கேஸ்ல தீர்ப்பு சொல்றதா இருந்தது. சென்சிடிவ் பிரச்சனை. எங்க பேமிலிக்கு திரெட் வந்தது. நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. அதான் அந்த பாதுகாப்பு..”  என்றாள்.

“ஓஹ்.. ஜட்ஜ் பொண்ணா நீ..” விசாகன் கேட்டு கொண்டிருக்க, சரித்திரன் புக்கை பார்ப்பது போல் எல்லாம் கேட்டு கொண்டானே தவிர அவளிடம் பேசவில்லை. ராகவர்த்தினி பார்வை அவனை அடிக்கடி தொட்டு சென்றது புரிந்தும்  அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

அவன் விசாகன் போல் சாதரணமாக பேசியிருந்தால் கூட இப்படி அவன் முகம் பார்க்க தோன்றாது. இப்போ ஏதோ போல். என்கிட்ட சாதாரணமா பேசினா என்ன என்று ராகவர்த்தினிக்கும்  தோன்ற தான் செய்தது. ஆனால் கேட்க தான் அவன் இடம் கொடுக்கவில்லையே. பார்வையிலே தள்ளி நிறுத்துகிறான்.

மாதங்கள் சில கடந்துவிட, கல்லூரி வாழ்க்கை பழகி போயிருந்தது. அன்று அவளுக்கு பிறந்தநாள். புட் கோர்ட் சென்றனர். நண்பர்களுக்கு அவளின் ட்ரீட். சரித்திரன் அவனின் நண்பர்களுடன் அங்கிருக்க,  ராகவர்த்தினி நேரே அவனிடம் சென்றாள்.

இன்றோடு இந்த ஹார்ட் பீலிங்குக்கு முடிவு வர வச்சிடணும்.. “சீனியர்.. இன்னைக்கு என் பர்த்டே..” என்றாள் நேரே அவனிடம்.

“ஹாப்பி பர்த் டே..” என்றான் சரித்திரன்.

 பேசிட்டார்.. “லன்ச் என் சார்பா உங்களுக்கு ட்ரீட்..” என,

“எங்களுக்கு ஓகே..” என்று விசாகன் சொல்ல,

“நான் சாப்பிட்டேன்.. இவங்களுக்கு கொடு..” என்றவன் அங்கிருந்து கிளம்பியும்விட்டான்.

ராகவர்த்தினிக்கு கோவம் வந்துவிட்டது. இதுக்கு மேல எப்படி கேட்கிறது. ரொம்ப தான் பண்றார், போயா..’ என்றானது. சரித்திரனோடு அவன் நண்பர்களும் கிளம்பியிருக்க, தன் நண்பர்களுக்கு மட்டும் ட்ரீட் வைத்து முடித்தாள்.

தொடர்ந்த நாட்களில் இவளும் அவனை பார்ப்பதை தவிர்த்துவிட்டாள். ஏதோ  முதல் நாள் நம்மகிட்ட பேசினாரேன்னு பார்த்தா ரொம்ப தான் பண்றார்  என்ற ரோஷம்.

செமஸ்டர் எக்ஸாம் முடிந்து விடுமுறை அனைவர்க்கும். வேதவள்ளி கம்பெனியின் வருட  விழா அப்போது தான் வந்தது. சீப் கெஸ்ட்டாக ராகவர்த்தினியின் தந்தையை தான் அழைத்திருந்தனர்.

சரித்திரனுக்கு அவர் என்று தெரியாது. முன் நின்று வரவேற்று நல்ல படியே பங்க்ஷன் முடித்து அவரை வழியனுப்பி வைத்தான். ஆனால் அவர் இறுதியாக பேசி சென்றது சரித்திரனை கோவப்படவும் வைத்தது. சிரிக்கவும் வைத்தது.

Advertisement