Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 25

“வைரவேல்’ண்ணா ஏற்பாடு எல்லாம் ரெடியா..?” சரித்திரன் பரபரப்பாக கேட்டபடி வந்தான்.

“எல்லாம் ரெடி தம்பி.. மேடம் வந்ததும் பங்க்ஷன் ஆரம்பிச்சிடலாம்..” வைரவேல் சொல்ல,

விசாகன் முகம் தூக்கி வைத்தபடி வந்தவன், “நீயே போய் உன் பொண்ணையும், உன் தங்கச்சியையும் சமாளி. என்னால முடியல..” என்றான்.

சரித்திரன் முன்னே செல்ல, அங்கு ஒரு போக்கே வைத்து அத்தையும் மருமகளும் மல்லு கட்டி கொண்டிருந்தனர். “நான் தான் இந்த வீட்டுக்கு முதல் பொண்ணு. நான் தான் என் அம்மாக்கு போக்கே கொடுப்பேன்..” வர்ஷா பொங்க,

“நோ.. நான் தான் பாட்டிக்கு கொடுப்பேன். நான் தான் அவங்க செல்லம்..” ஆராதனாவும் விடாமல் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

“அத்தை என்ன இது? ஆரா  ஒழுங்கா பிஹேவ் பண்ணு..” ஆதவன் இருவரையும் அடக்கி கொண்டிருக்க, இங்க என்ன சண்டை என்று வந்தான் சரித்திரன்.

“ண்ணா.. நீ தானே அப்போ என்னை போக்கே கொடுக்க சொன்ன, இப்போ பாரு உன் மக அவ தான் கொடுப்பேன்னு நிக்கிறா..” என்று வர்ஷா வேகமாக முறையிட்டாள்.

“ப்பா.. இவங்க வளர்ந்துட்டாங்க. இன்னமும் நான் தான் கொடுப்பேன் சொல்றது சைல்டிஷ்ஷா இருக்கு. நான் தான் கொடுப்பேன்..” ஆராதனாவும் அப்பாவிடம் முறையிட்டாள்.

“இரண்டு பேரும் கொடுக்க போக்கே இருக்கு. பாட்டிக்கு, சீப் கெஸ்டுக்கு கொடுங்க..” ஆதவன் சொல்ல,

“அப்போ நான் பாட்டிக்கு, அம்மாவுக்கு..” என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்.

“நீ ரொம்ப பண்றடி. அத்தை நான் சொன்னா நீ கேட்டுக்கணும்..” வர்ஷா மருமகளை அதட்ட,

“நீங்க தானே வீட்ல நம்ம உரிமையை விட்டு கொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க. நான் விட்டு கொடுக்க மாட்டேன்..” என்றாள் மருமகள்.

சரித்திரன் தங்கையை பார்த்து வாய்க்குள் சிரிக்க, தங்கை கண்டுகொண்டாள். “என்னை வைச்சு செய்ய நினைச்சு உனக்கே ரிவர்ட் ஆகிடுச்சா தங்கச்சி..”  என்று கேட்க, விசாகன் சத்தமாக சிரித்துவிட்டான்.

வர்ஷா பல்லை கடித்தவள் இருவரின் காலையும் ஹீல்ஸால் பதம் பார்த்தாள். ஆஹ்.. இருவரும் மெலிதாக அலற, வர்ஷாவோ மருமகளிடம் உடன்படிக்கை ஒப்புதல் போட்டுவிட்டாள்.

அதன்படி வேதவள்ளி கணவர், மருமகளுடன் காரில் வந்து இறங்கும் போது வர்ஷா அம்மாவிற்கு போக்கே கொடுத்தாள். ராகவர்த்தினி ஓரமாக நின்றிருந்த கணவனிடம் சென்று நின்றாள். அவளுக்கான இடம் எது என்பதில் அவள் மாறவே இல்லை.

சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் மனைவியுடன் வந்து இறங்க ஆராதனா தாத்தாவிற்கு போக்கே கொடுத்தாள்.

விஸ்வநாதன் பார்வை மருமகனிடம் சென்றது. முதல் முறை இப்படியான கம்பெனி விழாவில் தான் அவன் அறிமுகம். சரித்திரன் இன்றும் அவரை தானே மேடைக்கு அழைத்து சென்று அமர வைத்தான்.

சித்ரா குடும்பத்துடன் கீழே அமர்ந்து கொண்டார். வேதவள்ளி தொழிலின் வருடாந்திர விழா இந்த வருடமும் விமரிசையாக நடந்தது. வேதவள்ளி பெருகி போன கம்பீரத்துடன் அவர் உரையை ஆற்றினார்.

விஸ்வநாதன் சம்மந்தியாக இல்லாமல் நீதிபதியாக தன் பேச்சை முடித்து வைக்க, சரித்திரனை மேடைக்கு அழைத்தனர். இரண்டாம் முறையும் அமைச்சராக பதவியேற்றிருந்தான். அதற்கான கவுரத்தை கொடுத்தனர்.

அம்மா, மாமனார் கையால் மரியாதை என்பது அவனுக்கு பெருமிதம் தான். மகிழ்வுடன் இருவர் காலிலும் விழுந்து ஏற்று கொண்டான். தொழிலாளர்கள் ஜோராக கை தட்டி அவனுக்கான ஆதரவை கொடுக்க, குமரகுரு மகனின் அரசியல் அவதாரத்தில் நெஞ்சை நிமிர்த்தினார்.

வருடங்கள் ஓடி,  இரண்டாம் முறை தேர்தலிலும் சரித்திரன் வெற்றி பெற்றிருந்தான். அவன் கட்சியும்  பெரும்பாண்மை இடத்தை கைப்பற்றியிருந்தது. அடுத்த முறை தேர்தலுக்குள் தாங்கள் ஒரு பலமான எதிர்காட்சியாக அமர வேண்டும் என்பது அவன் இலக்கு. அடுத்து அடுத்து பார்ப்போம். ஆனால் முன்னேற்ற பாதையில் இருந்து விலகுவதாக இல்லை அவன்.

வர்ஷா குடும்பத்துடன் இங்கேயே வந்துவிட்டாள். சரித்திரன் விடவில்லை. எங்க இருந்தாலும் தொழில் பார்க்கலாம் என்று சரிகட்டிவிட்டான். வர்ஷாவின் மாமனார், மாமியாருக்கும் வயதாகிவிட சரித்திரன் பேச்சை ஆமோதித்தனர்.

ஆராதனா பெரிய பெண்ணாகி இருந்தாள். பிள்ளைகள் இருவரும் வாலிப வயதில் அடியெடுத்து வைத்திருந்தனர். ராகவர்த்தினி தொழிலில் நல்ல ஏற்றம். கணவன், மாமியார் இருவரின் வழி நடத்தலை விட, அவளுக்கான அடையாளமும் அவளை கீழிறங்கவிடவில்லை.

மாலை நேரத்தில் விழா என்பதால் இரவு விருந்து ஜோராக ஆரம்பித்தது. சரித்திரன் முதலில் தொழிலாளர்கள் பார்த்துவிட்டே குடும்பத்தினரிடம் வந்தான். ஆதவன் வீட்டின் மகனாக விஸ்வநாதனை உபசரித்து கொண்டிருந்தான்.

ஆராதனாவிற்கு அப்பாவின் அரசியல் விருப்பம் என்றால், ஆதவனுக்கோ பாட்டி அம்மாவின் தொழிலில் தான் விருப்பம் அதிகம். வர்ஷா பிள்ளைகள் தினம் ஒன்று சொல்வர்.

வேதவள்ளி முதலிலே முடிவுக்கு வந்துவிட்டார். யார் என்ன செய்தாலும் சரி, தான் அவர்களை இழுத்து பிடிக்க கூடாது என்பதை. அனுபவம் தானே?

குமரகுரு மனைவியின் வெற்றியில் பூரித்தபடி சுற்றி வந்து கொண்டிருந்தார். வேதவள்ளியின் தன்னம்பிக்கையில் ஈர்க்கப்பட்டு அவருக்கு அன்று துணை நின்றார். இன்று ஏதோ ஒரு வாழ்க்கை என்றில்லாமல், பல குடும்பங்களை வாழ வைக்கும் வாழ்க்கையாக அவர்களை உயர்த்திவிட்டார் வேதவள்ளி.

குமரகுரு மனைவியின் அருகில் வந்து நின்றார். வேதவள்ளியின் கண்ணசைவில் அவருக்கு உடனே சாப்பிட வந்தது.

சரித்திரன் காதல் விஷயம் எனக்கு சொல்லலை. நான் சம்பாதிக்கலைன்னு தானே சொல்லலை என்றெல்லாம் பேசியிருந்தவர், வேதவள்ளியிடம் மறைத்தது மட்டும் சாதாரண விஷயம் இல்லையே.

வேதவள்ளி அதை எல்லாம் கடந்து கணவரிடம் பழயபடி இருக்க ஆரம்பித்திருந்தார். குமரகுரு மனைவி பால் அதிகம் அன்பு பெருகி அவர் கை பிடித்தார். “என்ன பண்றீங்க..?” வேதவள்ளி எதிர்பாராமல் சட்டென  கையை இழுத்து கொண்டார்.

“பிடிக்கணும் தோணுச்சு வேதா..” என்றார் கணவர்.

“வீட்ல போய் பிடிச்சுட்டே உட்கார்ந்திருக்கீங்க. இப்போ சாப்பிடுங்க..” வேதவள்ளியின் மின்னிய கண்களில், குமரகுரு மனம் நிறைவாக உண்டார்.

ராகவர்த்தினி வீட்டினருக்கு கவனித்துவிட்டு கணவனுடன் உணவை முடித்தாள். தொழிலார்கள் எல்லாம் கிளம்ப, பஸ் மூலம் வழி அனுப்பி வைத்தான். விஸ்வநாதன் கிளம்ப, அவருக்காக கார் கதவை திறந்துவிட்டான் சரித்திரன்.

“என்னால எப்போவும் உங்களுக்கு தலை குனிவு வராது. என்னை நம்பினால் உங்க வேலையை விடாதீங்க..” என்று அவருக்கு உத்திரவாதம் கொடுத்திருந்தான் சரித்திரன்.

அதை இப்போதுவரை காப்பாற்றி கொண்டிருக்கும் மருமகன் தோள் தட்டி காரில் ஏறினார் மாமனார்.

மறுபக்கம், சித்ரா மகளிடம் வீட்டுக்கு வர சொல்லி அழைத்து கொண்டிருந்தார். “ஆதவனும், ஆராவும் என்கூட இப்போ வராங்க. நீயும் வா ராகா..” என்று கேட்க.

மகளோ, “வர்ஷா பேமிலி இருக்காங்கம்மா. நான் அப்புறம் வரேன்..” என்றாள்.

சித்ரா மகளை முறைத்தவர், “வர்ஷா பேமிலி ஏன் சொல்ற, உன் புருஷன் இருக்கார் சொல்லு. பிள்ளை பெத்தே ஓடுனவ தானே நீ, இப்போ வந்துட்டாலும். நீ எல்லாம் எப்போவும் மாற மாட்ட, உன் புருஷனோடே இரு போ..” என்று கடுப்பாகிவிட்டு பேரப்பிள்ளைகளை தன்னுடன் அழைத்து கொண்டார்.

ஆதவன், ஆராதனா வீட்டில் எல்லோரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர். சித்ராவின் கோவமுகத்தில் சரித்திரன் நடந்ததை புரிந்து கொண்டான். அவனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே.

வர்ஷா குடும்பம் இவர்களுடனே வர எல்லோரையும் வீட்டில் விட்டு சரித்திரன் மட்டும் காரெடுத்து தனியே கிளம்பினான். அந்த குறிப்பிட்ட  ஹோட்டலில் காரை நிறுத்தி இறங்க, அவனுக்கு முன் மற்ற இரண்டு கார்களும் வந்து விட்டிருந்தது.

சரித்திரன் இறங்கவும், “ண்ணா..” என்று அணைத்து கொண்டான் ஜனகன். அவனை தொடர்ந்து சிவனேஷ்வரன், பிரபாகரனிடம் கரம் குலுக்கினான்.

நால்வரும் உணவுண்ண அமர்ந்தனர். பிரபாகரன் கடுப்பாக சிவனேஷ்வரனை பார்த்தவன்,  “உன் ரவுடி சகவாசத்தையே போனா போகுதுன்னு விட்டு வைச்சுட்டு  இருக்கேன், இதுல கலெக்டர், அரசியல்வாதின்னு கூடிட்டே போகுதே.. ஏண்டா உங்களுக்கெல்லாம் பொண்டாட்டி பிள்ளை இல்லையா.. எப்போ பாரு கூட்டம் போட்டுக்கிட்டு..” என்றான்.

“அது ஒன்னுமில்லை.. சாருக்கு பொண்டாட்டியோட இருக்க முடியலன்னு காண்டு.. நாங்க மீட் பண்றப்போ எல்லாம் பசங்களை கழட்டி விட்டுட்டு வந்திடுவான், இப்போ நாம அந்த நேரத்தை எடுத்துகிட்டோம் இல்லை..” சிவனேஷ்வரன் சிரித்தான்.

“தெரியுது இல்லை.. என்னை ஏண்டா தூக்கி போட்டுட்டு வர..” பிரபாகரன் அவஸ்தையுடன் தலை கோதி கொண்டான். நடுராத்திரி வீடு திரும்பினால் இந்திரஜா “உங்க ப்ரண்டோட இருக்க வேண்டியது தானே..?” என்று கிட்டவே சேர்க்க மாட்டாள். அவன் கவலை அவனுக்கு.

“சரி கவலைய விடு டியர்கிட்ட நான் தான் கூட்டிட்டு வந்தேன் சொல்றேன்..” சிவனேஷ்வரன் குறும்பாக சொல்ல,

“நீ ஒன்னும் கிழிக்கவே வேணாம். ஒரு நாள் சண்டையை ஒரு மாசமா மாத்திவிடுவ..” பிரபாகரன் உஷாராக சொன்னான்.

“அப்போ நான் அப்படியா..?” சிவனேஷ்வரன் முறைப்பாக பார்க்க,

“நீ அப்படி தான்.. போடா..” என்றான் நண்பன்.

ஜனகன், சரித்திரன் சிரிக்க காபி, டீ வந்தது. “ண்ணா.. அரசியல் எல்லாம் பலமா போகுது போல. இரண்டாவது முறையும் அமைச்சர் ஆகிட்டீங்க..?” ஜனகன் கேட்க,

“ஆக தான் வேணும் ஜனா. இல்லன்னா காரை லாரில விட போனதுக்கு என்ன பிரயோஜனம் சொல்லு பார்ப்போம்..” என்றான் சிவனேஷ்வரன். பிரபாகரன் உதட்டை வளைத்து சிரித்தான்.

“அதுக்கு தான் மூக்கையும் பதம் பார்த்து என் பொண்டாட்டிகிட்டேயும் போட்டு கொடுத்துட்டீங்களே. அப்புறம் என்ன. அன்னைக்கு ஏன் பாண்டி சார் என்கூட வந்தார்ன்னு அப்புறம் தானே தெரிஞ்சது..” என்று தள்ளி இருந்த பாண்டியை முறைத்தான் சரித்திரன்.

அவனோ என் அண்ணாத்தை சொல்றது தான் என்பது போல் நிமிர்ந்து நின்றிருந்தான். “பாண்டி சாரா போட்டு கொடுத்தது..” ஜனகன் சிரிக்க,

“நீ சிரிக்கிற.. இன்ன வரைக்கும் அதுக்காக வாங்கிற எனக்கு தானே தெரியும்..” சரித்திரன் சொன்னவன், “இந்த முறை கலெக்டர் சாருக்கு எங்க டிரான்ஸ்பர்..” என்று ஜனகனிடம் கேட்டு கொண்டான்.

“இவ்வளவு நேர்மையா இருந்து என்ன பண்ண போறீங்க தம்பி. இத்தனை டிரான்ஸ்பர் தேவையா..?” என,

“இருக்க முடியுது. இருந்துட்டு போறேன்’ண்ணா. அப்புறம் தீனதயாளன் என்ன நிலவரம்..” என்று கேட்டான் ஜனகன்.

சரித்திரன் முகத்தில் ஒரு இறுக்கமான புன்னகை.  கணேசனை விபத்தின் மூலம் கொன்றது தீனதயாளன் தான் என்று தெரிந்த நாளில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி கொண்டிருக்கிறான்.  கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அவரின் தொழில் பக்கம் இறங்கியிருந்தான் சரித்திரன்.

“உனக்கு முன்னாடியே டவுட் இருந்தது தானே. திரும்ப கணேசன் விபத்து பத்தி விசாரிக்க சொல்லியிருந்த இல்லை..” பிரபாகரன் கேட்டான்.

“ஏதோ ஒரு உறுத்தல் இருந்திட்டு இருந்தது. சரியா அப்போ தீனதயாளனோட முன்னாள் ட்ரைவர் கொடுத்த வாக்குமூல வீடியோவை பார்த்ததும் உறுதி படுத்திக்கிட்டேன். இப்போவாரை அந்தாள் எதுக்கு அடி வாங்குறோம் தெரியாமலே வாங்கிட்டு இருக்கார்..” சரித்திரன் சொல்ல,

“ம்ம்.. உங்க இரண்டு பேருக்கும் அதை தானே அந்த மனுஷனும் பண்ணார்..” சிவனேஷ்வரன் பெரு மூச்சுடன் சொன்னான்.

“உண்மை தான்’ண்ணா.. நிலத்துக்காக எங்களையும், கட்சிக்காக சரித்திரன் அண்ணா பேமிலியையும் அவன் படுத்தின பாட்டுக்கு அனுபவிச்சு தான் ஆகணும்..” ஜனகன் இப்போதும் அடங்கா கோபத்துடன் சொன்னான்.

“அந்த வீடியோ பத்தி வெளியே போக கூடாதுன்னு அவன் என்கிட்ட சத்தியம் வாங்கிறதுக்கு முன்னாடியே நான் அதை சரித்திரன் அண்ணாக்கு அனுப்பிட்டேன். கடைசிவரை அவன் பயந்து பயந்து தான் வாழணும்..” ஜனகன் சொல்ல,

“நம்மளோட ரகசியம் நம்ம வரைக்கும் தான் பாதுகாப்பு. மூணாவது மனுஷனுக்கு தெரியறது அச்சுறுத்தல் தான். அதுவே தீனதயாளனோட பெரிய பலவீனம்..” என்றான் பிரபாகரன்.

“ம்ம்.. ண்ணா நான் உங்ககிட்ட இதை கேட்கலாம் தான் நினைக்கிறேன். உங்கமேல ஏதேதோ குற்றசாட்டு வருதே..” ஜனகன் கேட்க,

“வந்தா கேட்டுக்கோ. உண்மையா தான் இருக்கும். அப்புறம் எதிர்கட்சிக்காரனுக்கு என்ன மரியாதை..?” சரித்திரன் சிரித்தான்.

“என்ன’ண்ணா.. நான் உங்களை அப்படி நினைக்கலை..” ஜனகன் சுணக்கம் கொண்டான்.

“தம்பி.. அரசியல்ல இருந்துகிட்டு ஒருத்தன் சுத்தமா இருக்கான்னு  சொன்னா ஒன்னு சொல்றவன் முட்டாளா இருக்கணும், இல்லை கேட்டுகிறவன் முட்டாளா இருக்கணும். இதுல கலெக்டர் சார் எப்படி..?” சரித்திரன் புருவம் தூக்க,

“புரிஞ்சு போச்சு’ண்ணா.. ” என்றான் ஜனகன் கை தூக்கி.

Advertisement