Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 24

சரித்திரன் விருப்பத்தின் பேரில் இரவு பாண்டிச்சேரி சென்று சேர்ந்தனர். வழியிலே விசாகனுக்கு போன் செய்து, ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தான்.

“ஹோட்டல் ஏண்டா.. நம்ம கெஸ்ட் அவுஸ் இருக்கு. போக கவர்மெண்ட் கெஸ்ட் அவுஸ் கூட..”

“நோ மச்சான்.. அங்கெல்லாம் வேண்டாம். எனக்கு பிரைவசி வேணும். யாரும் என்னை ரீச் பண்ண கூடாது..” என்றான்.

விசாகன் நண்பனை புரிந்து கொண்டான். சரி என்று வைத்தவன், அவனின் பாதுகாப்பையும்  கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்தான்.

அதன்படி குறிப்பிட்ட ஹோட்டலில் இவர்கள் கார் நிற்க, ஜெனரல் மேனேஜர் வரவேற்க வந்தார். “டீலக்ஸ் சூட் ரூம்  சார்..” என்றபடி அவர்கள் அறையை திறந்துவிட்டவர், விஷ் செய்து நகர்ந்துவிட்டார்.

மிக பிரம்மாண்டமான  அறை. அடுக்கடுக்காக போர்ஷன். வண்ண விளக்குகள் அதன் செழுமையை சொன்னது. வர்த்தினி கர்ட்டனஸ் விலக்கி பரந்து விரிந்த கடலை பார்த்தாள்.

இரவு இருவருமே சாப்பிடவில்லை என்பதால் சரித்திரன் போன் எடுத்து உணவுக்கு ஆர்டர் செய்தான். அவர்களுக்கான உடமைகளும் வந்து சேர்ந்தது. வர்த்தினி புதிதான உடையுடன் ஓய்வறை சென்றாள். நிதானமான குளியல்.

இரவு உடை இருந்த போதும், புடவை அணிந்து வந்தாள். சரித்திரனும் குளித்து வர, உணவும் தயாராக இருந்தது. ராயலான உணவு டேபிளில் ஆட்கள் பரிமாற நிற்க, மறுத்து அனுப்பிவிட்டான்.

இருவருக்கும் பிடித்தமான உணவு. வர்த்தினிக்கு நல்ல பசியும் கூட. சரித்திரன் அவளை அமர வைத்து பரிமாறியவன், தனக்கு எடுத்து கொண்டான். அதிகமாக அவளின் பிரிய உணவுகள் என்பதால், கட்டுப்பாடு எல்லாம் தளர்ந்து போனது.

“இது டேஸ்ட் பாருங்க. அது டேஸ்ட் பாருங்க..” என்று கணவனின் பிளேட்டை நிரப்பவும் பெண் மறக்கவில்லை. சரித்திரனுக்கு கலவையான மனநிலை. மனைவியின் காதலை அனுப்பிவைக்க முடியவில்லை. எங்கோ எதுவோ அவனை குத்தி கொண்டே இருந்தது.

இறுதியான இனிப்பு அவளின் பிடித்தமாக இருக்க, நிறைவான உணவு பெண்ணுக்கு. ஆட்கள் டேபிளை சுத்தம் செய்து செல்ல, விசாகன் அடுத்த நாள் அட்டவணை என்ன செய்ய என்று போன் செய்தான்.

சரித்திரன் அது பற்றி பேசி கொண்டிருக்க, வர்த்தினிக்கு சில நிமிடங்களிலே தூக்கம் இழுத்தது. கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்த கணவனின் தோள் சாய, அணைத்து பிடித்து கொண்டான் அவன்.

“ஹோட்டல் ஓகே தானே?” விசாகன் விசாரிக்க,

“நல்லா இருக்குடா.. சரி நான் நாளைக்கு பேசுறேன்..” என்று மெல்ல சொல்லி வைத்துவிட்டவன், மனைவியை தன் நெஞ்சோடு அணைத்தபடி படுத்துகொண்டான்.

திருமணமான புதிதில் தான் இப்படியான நெருக்கம். கட்டிப்பிடித்து, தோளில் தலை வைத்து, நெஞ்சில் சாய்ந்து என்று ஒட்டி உரசி கொண்டே தான் தூக்கம். பிள்ளைகள் வந்த பின் இப்படி எல்லாம் தூங்கிய நினைவில்லை.

இரட்டை குழந்தைகள் என்பதால் இன்னமும் தூரமே. மகள் அப்பாவிடம் என்றால் மகன் அம்மாவிடம். இதற்கிடையில் தாம்பத்தியம் என்பதே சவாலாக இருக்க, இதெல்லாம் சாத்தியமே இல்லை.

சாத்திய படுத்தியிருக்கணும். பொறுப்பான அப்பாவாக இருப்பது என்பது நல்ல கணவனாக, காதலனாக இருப்பதற்கு தடையில்லையே. அது வேறு. இது வேறு. ஏன் கவனிக்காமல் போனேன். ஏன் செய்யாமல் போனேன்?

மத்திய வயது காதலோடு சேர்ந்த தாம்பத்தியம் இளம் வயது காதலை விட அதிகம் ரசிக்க தக்கதே!

இருவருக்கும் மற்றவரின் நிறை, குறை தெரிந்த பின் வேறொரு பரிமாணம் எடுக்கும் காதல் அல்லவா அது. முந்ததை விட இதற்கு மதிப்பு கூடுதல் தான்.

சிறுபிள்ளை தனங்கள், காதல் கிறுக்குகள் குறைந்து முதிர்ச்சியான காதல்!

ம்ஹ்ம்.. இளம்வயது காதலில் கூட தங்களுக்குள் ஒரு முதிர்ச்சி இருந்தது. கல்லூரி படிக்கும் போதே வேலை பார்க்க ஆரம்பித்தாயிற்றே. வர்த்தினியும் அப்போதே என்னை புரிந்து கொண்ட பெண் தான்.

அவளுக்காக அப்போது நான் என்ன செய்தேன். சொல்லி கொள்ளும் படி எதுவுமே நினைவில்லை. செய்திருந்தால் தானே?

உனக்கு லக் தாண்டா.. அவனே சிரித்தும் கொண்டான்.

வர்த்தினி தூக்கத்தில் மறுபுறம் திரும்பி தலையணையில் தலை வைத்து படுத்தாள். விலகியவளின் வாசம் நெஞ்சில் வீசியது. அவள் தலை வருடி கொடுத்தான்.

இத்தனை வருடங்களில் முதன் முறையாக கண்ணீர் கண்களுடன் அவனை கேள்வி கேட்டிருக்கிறாள் மனைவி. அதையே கோவப்பட்டு, அடித்து கேட்டிருந்தால் இவ்வளவு அவனை பாதித்திருக்குமா?

ஊப்ப்ப்.. படுக்கையில் இருந்து எழுந்துவிட்டான். கண்களை மூட முடியவில்லை. கடலை பார்த்து அமர்ந்து கொண்டான். சூரிய உதயம் அவன் கண்களை கூச செய்தது. மனைவிக்காக கர்ட்டன்ஸ் இழுத்துவிட்டான்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை தொந்தரவு செய்யாமல் குளித்து வந்தான். காபி வர வைத்து குடித்தான். விசாகனுக்கு போன் செய்து பேசினான். இடையில் வர்ஷாவின் வீடியோ கால் வந்தது.

அவளுக்கு தூங்கிற நேரம்  ஆச்சே இது? இவன் என்னவோ எதோன்று போன் எடுக்க, “என்ன பாண்டி போயிருக்கியாமே..” என்றாள் அவள்.

“அம்மா சொன்னாங்களா..” என்று ரிலாக்ஸ் ஆனான். முதலில் இவளை இங்கு கொண்டு வந்து சேர்க்கணும். வெளிநாட்டில் இருந்துட்டு பக்குன்னு ஆகிடுது.

“ஆமா உன் பொண்ணுக்கு இது தெரியுங்களா அமைச்சர் சார்..” அவள் இழுத்தாள்.

“சொல்லிடாத வர்ஷா.. அழவே செய்வா..” மகளுக்காக கேட்க,

“அச்சோ.. தெரியாம சொல்லிட்டேனே..” என்றாள் அவள்.

“ராட்சசி.. கண்டம் விட்டு கண்டம் போனாலும் திருந்தாதவளே..” அண்ணன்காரன் திட்டி தீர்க்க, தங்கைக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“வில்லி.. வில்லி.. வில்லி வேலை பார்த்துட்டு சிரிக்கவா செய்ற..?”

“நான் உனக்காக தான் இது செஞ்சேன்..” என்றாள் அவள் திடீர் பாவமாக.

சரித்திரன் சந்தேகமாக பார்க்க, “நம்புடா அண்ணா.. நான் தூரமா இருக்கேன்னு நீ என்னை மிஸ் செஞ்சுட கூடாது இல்லை, அதான் ஆராதனாவிற்காக என் இடத்தை விட்டு கொடுக்கிறேன். எவ்வளவு பெரிய தாராள மனசு பாரு எனக்கு..” என்றாள் தங்கை.

“உன் தாராள மனசு எனக்கு வேணவே வேணாம். என் பொண்ணு என் பொண்ணாவே இருக்கட்டும். நான் சமாளிச்சிக்குவேன். நீயா அவ நோ..”

“இன்னொரு வர்ஷா கிடைக்க எல்லாம் நீ கொடுத்து வைச்சிருக்கணும்..”

“அந்த கொடுப்பினை எல்லாம் பச்சை பிள்ளை கூட கேட்காது..”

“அப்போ நான் அப்படியா..”

“அதுல சந்தேகம் வேறயா..”

“உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு. இப்போ சொல்றேன்  ஆராதனாவுக்கு நீ பாண்டி போனதை..”

“நீ சொல்லலையா..?”

“இப்போ சொல்வேனே..”

“சொல்லிக்கோ.. நானும் நீ என் மருமகன்களை விட்டு பங்க்ஷன்ற பேர்ல ஜோடியா பார்ட்டி போறதை சொல்லுவேன்..”

ஆராதனாவை சமாளித்துவிடலாம். இவள் பிள்ளைகள் ஆத்தி. நினைத்ததும் திகில் தான். “சரி பொழைச்சு போ. இவ்வளவு கெஞ்சுறதால விடுறேன்..” என்றாள் கெத்தாக.

“அதே தான் உனக்கும்.. நீயும் பொழைச்சு போ..” என்றான் அண்ணன்காரன்.

“எவ்வளவு வளர்ந்தாலும் நீ மட்டும் மாறவே மாட்ட..” வர்ஷா கடுப்பாக,

“டாக்டர் மேடம் நீங்க மட்டும் மாறிட்டீங்களா?” என்று வம்படித்தான் இவன்.

“டேய் கொஞ்சமாவது விட்டு கொடுடா அண்ணா. தங்கச்சி பாவம் இல்லை. தூரம் வேற இருக்கேன்..” வர்ஷாவிற்கு  வார்த்தை போரில் ஜெயிக்காமல் வைத்தால் தூக்கம் வராதே என்ற கவலை.

“நீ முதல்ல அண்ணனுக்கு மரியாதை கொடுக்கிறியா..? அமைச்சர் நான். என்னை போய் டேய், அவனே, இவனேன்னு..”

“நீ பிறக்கும் போதே வர்ஷாவோட அண்ணா, அப்புறம் தான் அமைச்சர் எல்லாம்..”

“அதை கூட ஒழுங்கா சொல்ல தெரியுதா பாரு. நான் பிறக்கும் போது இல்லை. நீ பிறக்கும் போதே சொல்லணும் லூசே..”

“எப்படியோ உனக்கு புரிஞ்சது இல்லை. புலவர் மாதிரி குற்றம் கண்டுபிடிச்சுட்டு வரார் தலைவர். போ எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்..” என்று வைத்து ஓடிவிட்டாள் தங்கை. அண்ணன்காரன் தான் புல் பார்மில் இருக்கிறானே.

சரித்திரன் தலையாட்டி கொண்டான். நிச்சயம் ஆராதனாவிடம் சொல்ல மாட்டாள் என்று தெரியும். மகள் அழுவாள் என்ற கவலை தந்தைக்கு. இப்போது தான் மனைவிக்கு பார்க்கிறான். இத்தனை வருடங்கள் கழித்து ஞானோதயம்.

உள்ளே வந்து மனைவியை பார்க்க இன்னும் தூக்கத்தில். ஷெடியூல் லைப் அவளுக்கு. தூங்கட்டும் என்று விட்டுவிட்டான். வர்த்தினி பதினோரு மணி போலவே எழுந்தாள்.

நேரம் பார்த்தவள் உடனே குளித்து வந்தாள். “சாப்பிட்டீங்களா..?” நிச்சயம் இருக்காது என்று தெரிந்தே கேட்டாள்.

“நீ எழட்டும்ன்னு தான்..” என்றவன், போன் செய்து கொண்டு வர சொன்னான். அவர்களும் விரைவாக கொண்டு வந்துவிட, லைட்டான உணவு.

“லஞ்சுக்கு சீ புட் மெனு கொடுத்திருக்கேன்.. இப்போ இது போதும்..” என்றான் கணவன்.

ஒரு காபியுடன் உணவு முடிய, “வெளியே போலாமா..?” என்று கேட்டான். பசங்களுக்கு பேசணும்.. வர்த்தினி போன் எடுக்க, “நான் பேசிட்டேன். நீ கிளம்பு..” என்று கடற்கரைக்கு அழைத்து சென்றுவிட்டான்.

மழை மேகமாய் இருக்க, அங்கிருந்த இருக்கையில் கடல் பார்த்து அமர்ந்தனர். பிரைவேட் இடம் என்றாலும் இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டனர். “கொஞ்ச தூரம் நடக்கலாமா..?” வர்த்தினி கேட்க, நடக்க ஆரம்பித்தனர்.

கை கோர்த்து, தோள் உரசி அப்படி எல்லாம் இல்லாமல், அருகருகே ஒரு நடை. நன்றாகவே தூரம் சென்று வந்தனர். குடிக்க அங்கேயே வந்தது. மேலும் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு அறைக்கு திரும்பினர்.

மதிய விருந்து தயாராக இருந்தது. அவளின் விருப்ப உணவு தான் இப்போதும். ‘கணவனுக்குள்ளான காதலன்!’

‘கடைசியா எப்போ இவர் இப்படி செஞ்சார்?’ தன்னை மீறி யோசித்தவள், ‘நோ வர்த்தினி. விடு’ என்று தன்னை தானே நிறுத்தவும் செய்தாள்.

முழு ஓய்வு நாள் இருவருக்கும். நன்றாக இருந்தது. உணவை முடிக்க, ஆட்கள் எல்லாம் எடுத்து செல்ல, சோபாவில் ஓய்வாக அமர்ந்தனர்.

 “பிள்ளைங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்..” அம்மாவாக குறை.

சரித்திரன் மெலிதாக சிரிக்க, அம்மா உர்ரென்று பார்த்தவள், “பிள்ளைங்களும் பேமிலி டைம் மிஸ் பண்றாங்க. நாம எப்போ கடைசியா அவுட்டிங் போனோம் சொல்லுங்க பார்ப்போம்..” என்றாள்.

“அவங்க பாட்டி வீடு போனாங்கன்னு தான் இந்த திடீர் பிளானே. இதுல அவங்க இருந்திருக்கலாம்ன்னா நான் என்ன பண்ண..” என்றான் அவன்.

“எனக்கென்ன உங்க பொண்ணுக்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான் பார்த்துக்கோங்க. என் பையன் மெச்சூர்ட்..” என்றாள்.

“என் பொண்ணுக்கு பாசம் ஜாஸ்திடி..”

“அப்போ என் பையனுக்கு பாசம் இல்லன்னு சொல்றீங்களா..”

“பாசம் இல்லைன்னு இல்லை. ஆனா ரொம்ப பொறுப்பா யோசிக்கிறான். என்னை போல..”

“ஆஹ்ன்.. இது நல்லா இருக்கே. மகளுக்கு உங்கமேல பாசம் ஜாஸ்தி. மகன் உங்களை போல இருக்கான், அப்போ நான் எங்க?”

“ஹாஹா.. என்னை கேட்டா எனகென்னடி தெரியும்.  நீ தானே பெத்து வளர்த்த?” என்றவன் அவள் கை பற்றி கோர்த்து கொண்டான்.

மனைவி உதடு சுளிக்க, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டான். வர்த்தினி மறுக்கவில்லை. கணவனின் சுருங்கிய புருவம் கவனியாதவள் இல்லையே. அவனின் சிறு வித்தியாசமும் அவளுக்கு அத்துப்படி.

முதல் முறையாக சரித்திரனிடம் தன் மனதை கேட்டிருக்கிறாள். அது அவனை எவ்வளவு பாதிக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

நீ ஏன் இப்படி?  என்ற கேள்வி அவர்களுக்குள் என்றும் இருந்ததில்லை.  வர்த்தினி அப்படி இருக்க விட்டதில்லை. சரித்திரனுக்கு ஏற்றபடி அவள் வாழ்க்கையை அமைத்து கொண்டவள் அவள். அது தான் உண்மை. ஆனால் அந்த உண்மை கணவனுக்கு புரிந்ததில்லை. இப்போது தான் புரிகிறது போல.

யோசிக்க யோசிக்க மனைவி தன்னிடம் எதையும் டிமெண்ட் செய்ததும் இல்லை என்பது நினைவிற்கு வந்தது. முன்பென்றால் எல்லாம் இருக்கிறது. அவள் கேட்காமலே நான் செய்துவிடுகிறேன் என்ற எண்ணம். ஆனால் இப்போது அப்படி இல்லையோ? பெரிய கேள்வி.

நான் அவளிடம் எத்தனையோ டிமெண்ட் செய்திருக்கிறேனே. என்கிட்டேயும் எல்லாம் தானே இருக்கு. ஆனாலும் அவள் செய்யணும் என்ற காதல் மனதின் எதிர்பார்ப்பு தானே?

அவன் கைகளின் இறுக்கம் வர்த்தினியை முகம் பார்க்க வைத்தது. “நீ ஏன் என்கிட்ட எதையும் டிமெண்ட் பண்ணது இல்லை?” அவளிடமே கேட்டுவிட்டான்.

“நீங்க டிமெண்ட் பண்ணுவீங்க இல்லை..” என்றாள் அவள்.

“நீ கார்ல வைச்சு சொன்னது கரெக்ட்டி..” என்றான் அவன் கொஞ்சம் கோவமாகவே.

“உன் காதல் கொடுக்க தெரிஞ்ச உனக்கு என் காதல் வாங்க தெரியலங்கிறது. உண்மையிலே உனக்கு தெரியல தாண்டி..” என்றான்.

“கொடுத்துட்டே இருக்கிறது காதல் இல்லை. நீயும் அதே காதலை அனுபவிக்கணும்..”

“என்னை ராஜாவா வைக்க தெரிஞ்சவளுக்கு,  உன் முன்னாடி மண்டி போட வைக்கவும்  தெரிஞ்சிருக்கணும்”

“ஏன் நான் இப்போ சொன்னாலும் நீங்க என் முன்னாடி மண்டி போட மாட்டீங்களா என்ன..?” மனைவி நிதானமாக கேட்டாள்.

“ஏன் போடாம..” கணவன் உடனே சொன்னான்.

“நீங்க போடுவீங்க எனக்கு தெரியும். இப்போ நான் கேட்டேன்னு இல்லை. பத்து வருஷம் முன்னாடியும் சரி, இருபது வருஷம் பின்னாடியும் சரி. எப்போவும் நீங்க என் முன்னாடி மண்டி போடுவீங்க. உங்களுக்கு தெரியாது. எனக்கு தெரியும்..” என்றாள் அவள்.

சரித்திரன் அதிர்ந்து விட்டான். தன் மீதான அவளின் புரிதல். ‘யப்பா!’ என்றிருந்தது.

“நான் தாங்க மாட்டேன்டி..” என்றுவிட்டான் நொடியும் இல்லாமல். வர்த்தினியிடம் புன்னகை.

“என்னை பார்த்தா சிரிப்பா இருக்காடி..?” அவள் கன்னம் பற்றி அழுத்தி கோவமாகவே கேட்டான். நான் அவளை போல அவகிட்ட இல்லையே என்ற கோவமே அது.

“சரி தாங்க வேண்டாம் விடுங்க..” என்றாள் பெண் அவன் கை விலக்கி.

“விடுன்னா என்ன அர்த்தம்..? சொல்லுடி. என்னை விட்டுடுவியா நீ..? பிச்சிடுவேன், அசால்ட்டா சொல்ற, ஏத்தமாடி உனக்கு. நான் தாங்குறேன் தாங்காம போறேன். உனக்கென்ன. நீ விடு சொல்ற. கையை வேற எடுத்து விடுற. என்ன, வாயை திறடி..”  திரும்ப கன்னம் பற்றி அப்படி ஒரு பேச்சு.

வர்த்தினி அமைதியாக அவன் கை விலக்கிவிட, “என்னடி திரும்ப திரும்ப தள்ளி விடுற..?” கணவன்  கொதித்துவிட்டான்.

“நான் தொட கூடாதா உன்னை. என்னடி, ஆஹ்ன் என்ன..”

வர்த்தினி கணவனின் கோவத்தை கண்டு கொள்ளாமல் அவன் கன்னம் பற்றி கொள்ள, சரித்திரன் பேச்சு தானே நின்று போனது.

அவளின் மென் உதடுகள் அவனின் கன்னத்தில் அழுத்தமாக பதிய, கணவனுக்கு கண்கள் கொஞ்சம் விரிந்து தான் போனது. பெண் மறு கன்னத்திலும் முத்தம் வைத்தாள் .

“நான் பேசினது உங்களை பாதிச்சிருக்கும்ன்னு எனக்கு தெரியும். எல்லாம் சரியாகிடும். சரி பண்ணிடலாம். எனக்கு நீங்க இப்படி வேணாம். ம்ம்ம்..” என்றவள் அவன் உச்சி முடி ஒதுக்கி நெற்றியிலும் முத்தம் வைத்தாள்.

காதலில் இவளை நான் என்றுமே மிஞ்ச முடியாது!

இவளை போன்றே இவள் காதலும் லாளிதம் தான்!

Advertisement