Advertisement

குமரகுரு தொண்டையை செருமி கொண்டவர், “கட்சியில இருக்கிறது மட்டுமே பலத்தை, அதிகாரத்தை கொடுத்திடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். கட்சி தலைவர் நான் தான். ஆனா இடையில என்னையே மதிக்காம போயிட்டாங்க. ஏன்..? என்கிட்ட அந்த  ஆட்சி பதவி இல்லை. அது என் மகனுக்கு வேணாம். அவனுக்கு பதவி வேணும்ன்னா அரசியல்ல போட்டியிடணும். அதுக்கு  நீ எப்போவும் விடமாட்ட. அதான் இப்படி..” என, வேதவள்ளி புரிந்ததாய் தலையாட்டி கொண்டார்.

“எப்போவும் பேசிட்டே இருக்கிறவங்க எல்லாம் அறிவாளி இல்லை. அமைதியா இருக்கிறவங்க முட்டாளும் இல்லை. புரிஞ்சுக்கிட்டேன்..” என்றார் கணவருக்கு மட்டுமே கேட்கும்படி.

குமரகுருவிற்கு பலமாகவே குத்தியது. அமைதியாகவே இருந்து என் இத்தனை வருட ஓட்டத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டீர்களே என்ற குற்ற சாட்டு அப்பட்டமாக இருந்தது.

மன்னிப்பும் கேட்க முடியாது. மனைவியின் பார்வை அதை கேட்கவும் விடவில்லை. “உங்களை உங்க விருப்பத்துக்கு விட்டது போல் அவனையும் முதல்லே விட்டிருப்பேன். இடையில பிடுங்கியிருக்க வேண்டாம்..” என்று எழுந்து சென்றுவிட்டார்.

“ண்ணா.. உங்க வருத்தம் எங்களுக்கு புரியுது. ஆனா சில விஷயங்கள் நம்ம கை மீறி போயிடுச்சு. எது பண்றதா இருந்தாலும் யோசிச்சு பண்ணுங்க. நம்மளை மீறி தான் யாரா இருந்தாலும்..” விஸ்வநாதனிடம் சொன்னார் வேதவள்ளி.

அவரும் யோசிப்பதாய் சொல்ல, பிள்ளைகள் வந்துவிட்டனர். அந்த சூழலை அப்படியே மாற்றியும் விட, பொதுவான பேச்சுகளுடன் இரவு உணவு முடித்து கிளம்பினர்.

அன்றிரவு ராகவர்த்தினி அது பற்றி ஏதாவது கேட்பாளா என்று பார்க்க, ம்ஹூம். கேட்கவே இல்லை. ஒரு ஆழ்ந்த அமைதி அவளிடம். சரித்திரனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

அந்த வார இறுதிக்கு சித்ராவின் ஆசைப்படி ஆதவனும், ஆராதனாவும் பாட்டி வீடு கிளம்பினர். பிள்ளைகள் இல்லாத வீடு வெறிச்சென்று இருந்தது.

ராகவர்த்தினி பிள்ளைகளை மட்டும் அனுப்பிவிட்டு இங்கேயே இருந்து கொண்டாள். சரித்திரனுக்கு மனைவியுடன் வெளியே செல்லலாமா என்று யோசனை.

அன்று மாலை அலுவலகம் முடித்து வந்தவளிடம், “சின்ன அவுட்டிங் போலாமா..?” என்று கேட்டான்.

வர்த்தினிக்கும் போலாம் என்று தான் தோன்றியது. சரியென்று தலையசைத்தாள். வேதவள்ளியிடம் சொல்லி கொண்டு கிளம்பியும்விட்டனர்.

சரித்திரன் ட்ரைவ் செய்ய இவள் முன்னிருக்கையில். பெர்சனல் என்று பாதுகாப்புக்கு மறுத்துவிட்டான். கார் பாண்டிச்சேரி நோக்கி சென்றது.

லயமான வேகம், லாளிதமாய் பாடல்கள். பிடித்து போன மௌனம். மற்றவர் முகம் பார்த்து கொள்ளும் காதல்.. ம்ஹ்ம்.. போதும். இந்த நேரங்களே போதும். மற்றவர் அருகாமையில் மட்டுமே கிடைத்துவிடும்  இந்த திருப்தி, நிறைவு போதும். வேறென்ன, எதுவும் இல்லை.

சரித்திரன் தன்னை போல், ” அன்னைக்கு இப்படி தான் ட்ரைவ் பண்ணிட்டு இருந்தேன். மனசு முழுக்க கோவம், இயலாமை. தரை மட்டத்துக்கு எங்களை தூக்கி அடிச்சவங்களை எதுவும் பண்ண முடியலையேன்னு ரொம்ப ஒரு மாதிரி. எக்ஸ்ட்ரீம் மனநிலை..”

“அப்பா என் கையை கட்டி போடுறார். இப்போ காரணம் தெரியும் கணேசன் அண்ணான்னு. ஆனா அப்போ ஒன்னும் தெரியாது. அவங்களும் அடிக்கிறாங்க. நாமளும் கோழை மாதிரி வலிக்க வலிக்க வாங்குறோம். ஏதோ எனக்கே நான் நத்திங்ன்ற மாதிரி..”

“இத்தனை வருஷ எங்க அடையாளத்தை ஒருத்தன் உடைக்கிறான். அதை மூணாவது மனுஷனா நின்னு வேடிக்கை பார்ன்னா என்னால முடியல..”

“வருஷ கணக்கா முட்டி முட்டி மோதி வழி கிடைக்காம ஒரே இடத்துல வலியில நிக்கிறவன் மனசு கொடுக்கிற அந்த விரக்தி, வெறுப்பு வேறெதுவும் கொடுக்காது வர்த்தினி..”

“ஏன் நான்..? எதுக்கு இப்படி நான்..? என் தப்பு என்ன..? என் அம்மா, என் தங்கச்சி தப்பு என்ன..? நாங்க ஏன் இதை எல்லாம் அனுபவிக்கணும், நாங்க இதுக்கு தகுதியானவங்களா? எவ்வளவு கேள்வி, கோவம்..”

“சொந்த வீட்டிலே நீ விருந்தாளின்னா. அப்படி நான் ஏன் இருக்கணும்? நிறைய நிறைய பார்த்துட்டேன், அனுபவிச்சிட்டேன். மனசு விட்டு பேசியிருந்தா கூட அது வேற. எனக்குள்ளே வைச்சு. வெடிக்கிற நிலைமை. எதிர்ல லாரி. ஏர் பேக் இருக்கு நாம சேப். புரியுது. ஆனாலும் என்ன தான் நடந்திடும், பார்த்துடலாம்ங்கிற எக்ஸ்ட்ரீம். அந்த செகண்ட் தாட் அது. ஆனா என் வாழ்க்கையோட ஆக பெரிய மடத்தனம் அது..”

“என்னை நானே மன்னிச்சுக்க முடியாத தப்பு. உன் இடத்துல நான் இருந்திருந்தா இதை விட அதிகமா ரியாக்ட் ஆகியிருப்பேனோ தெரியாது..”

“படிச்ச படிப்பை, என் வளர்ப்பை, என்னோட இத்தனை வருஷ அடையாளத்தை நானே ஒண்ணுமில்லாதது ஆகிட்ட பீல் இப்போவும் இருக்கு..”

“நம்மளோட ல்வ்ட் ஒன்ஸ்க்கு நாம கொடுக்கிற தண்டனை அது. என் அப்பாம்மா பாசத்துக்கு, உன்  காதல்க்கு, என் பிள்ளைங்க அன்புக்கு நான்.. சாரி..” என்றவனுக்கு தொடர முடியவில்லை. அமைதியாகிவிட்டான்.

வர்த்தினியிடம் பேச்சு இல்லை. என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. தன்னை சமாளித்தவன் நேரம் பார்த்து உணவுக்கு நிறுத்தினான்.

வர்த்தினி பால் மட்டுமே எடுத்து கொண்டாள். சரித்திரனும் காபி குடித்து கார் எடுத்துவிட்டான். சிறிது தூரம் சென்ற பின், “இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன் என்கிட்ட இதை எல்லாம் சொன்னீங்க..?” என்று கேட்டாள்.

கணவன் என்னவென்று சொல்வான். பதில் இருந்தால் தானே. அவளுக்கு அந்த பிரஷர் வேண்டாம் என்று நினைத்தது தான். ஆனால் அதுவும் சரியில்லை என்பது இப்போது புரிந்தென்ன பயன்?

“என் காதல் கொடுக்க தெரிஞ்ச அளவு உங்க காதல் வாங்க எனக்கு தெரியலையா..?” என்று அவனிடமே கேட்க, சரித்திரனுக்கு ஊசி குத்தும் வலி.

“நம்பித்தானே கூட வந்தேன். என்னை ஒரு செகண்ட்ன்னா கூட உங்களால மறக்க முடியுதுன்னா..”

“இருபது வருஷம் உங்க காதல் தான் எனக்கு முதன்மையா இருந்திருக்கு. நான் உங்களுக்கு அடிக்ட் ஆகிட்டேன்னு தெரிஞ்ச நேரம் அந்த நேரம் தான். நீங்க இல்லன்னா நான். நான். ம்ப்ச்..”

“நம்ம பிள்ளைங்க.. நம்மளால தான் அவங்க வந்தாங்க. அவங்களை அப்படியே விட்டு..” அப்படி ஒரு அழுகை. காரை ஓரமாக நிறுத்திவிட்டான்.

மனைவியை இழுத்து அணைத்து கொள்ள, தேம்பி தேம்பி நிற்காமல் அழுதாள். “ஏதோ ஒரு வாழ்க்கை, கடமைக்குன்னா கூட இதை அக்சப்ட் பண்ண முடியாதுங்க, நான்.. நான் உங்களையே எல்லாம் நினைச்சு, உங்களுக்காகவே.. அப்போ நான் உங்க உயிர் தொடலையா..” என்று அழுத கண்களோடு கேட்க, சரித்திரன் கண்கள் கலங்கி போனது.

அவளின் காதல் எவ்வளவு அனுபவித்திருக்கிறான். இனிக்க இனிக்க அவனை அரவணைத்தவளை இப்படி அழ வைத்துவிட்டோமே!

“கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகிடுச்சு நீங்க தனியா போய். அத்தனை நாள் எனக்கு போதலை. என்னால இப்போவும் உங்ககிட்ட இதை எல்லாம் கேட்க முடியல. நெஞ்சு சட்டையை பிடிச்சு உங்களை உலுக்கணும் போல இருக்கு. முடியல. முடியாது. என்ன பண்ணட்டும் நான்..?” என்று கேட்க, சரித்திரன் அந்த  நொடி தன்னை தானே  வெறுத்தான்.

இப்போது தான் என்ன செய்தாலும் அவளின் காயம் ஆறாது. நன்றாகவே புரிந்தது. அமைதியாக அவளை ஆறுதல்படுத்தினான். அழுத பெண்ணை தடுக்கவில்லை. எத்தனை நாள் அழுகை இது. இப்போதும் என்னிடம் தானே அழுகிறாள்.. நினைத்த நேரம் நெஞ்சடைத்தது.

வர்த்தினி நன்றாக அழுததாலே கொஞ்சம் தெளிந்தாள். கணவனை விட்டு விலகி அமர்ந்தாள். அவளுக்காக அருகில் வந்திருந்தவன் திரும்ப தன் சீட்டுக்கு சென்றான். தண்ணீர் குடிக்க கொடுத்தான்.

கல்லூரி காலத்தில் இருந்தே அவளுக்காக நான் எதுவும் செய்ததில்லை. நேரம் கூட கொடுக்கவில்லை. ஆனால் அவள் எப்போதும் குறை சொல்லாமல், சண்டை பிடிக்காமல் என்னுடன் இருந்திருக்கிறாள். அவளின் அளப்பறிய காதல் தானே அது.

“நான் ஓகே. வீட்டுக்கு போலாமா..?” வர்த்தினி கேட்டாள்.

“இல்லை.. இப்படியே பாண்டி போலாம்..” என்றான் கணவன்.

பிள்ளைகள் அம்மா வீட்டில் இருப்பதால் பிரச்சனையில்லை. ஆனால் ஏன் என்று பார்த்தாள். “உன்கூட இருக்கணும் போல இருக்குடி..” என்றான்.

“திரும்ப கிப்ட்டா..” வர்த்தினி முறைப்பாக கேட்க,

“இந்த உன் ப்ரசன்ஸ் வேற.. ப்ளீஸ்டி..” என்றான்.

“அப்போ அன்னைக்கு சொன்ன ப்ரசன்ஸ்கு அது தானே அர்த்தம்..” பெண்ணுக்கு கோவம்.

“திரும்ப ஒரு கல்யாண எபெக்ட். அதான். இப்போ அப்படி இல்லை..” என்றான்.

வர்த்தினி ஏதோ போல் பார்க்க, “ச்சு இப்படி பார்க்காத. ஆமான்னா ஆமா சொல்வேன். நான் இப்போ அந்த மூட்ல எல்லாம் இல்லை..” என்றான் அவன்.

“இந்த வயசுக்கு அப்படி என்ன அந்த மூட்ல இருக்கோ..” பெண் முணுமுணுக்க,

“புதுசா பிரியாணி சாப்பிடும் போது  ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கும். ஆவல் இருக்கும். அதுவே தொடர்ச்சியா சாப்பிடும் போது வேற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இப்போ அதோட என்னென்ன காம்பினேஷன் சேர்த்தா இன்னும் டேஸ்ட்டா சாப்பிடலாம்ன்னு தெரியும். சோ இதுவும் அப்படியான ஒன்னு தான். அனுபவம். ருசி தெரியும் இல்லை..” என்று சாதாரணமாக சொல்ல, வர்த்தினி தான் அதிர்ந்து சிவந்துவிட்டாள்.

“அய்ய.. ச்சீ.. போதும், நிறுத்துங்க..” என்றாள்.

சரித்திரன் மனைவியின் அழுகையையே யோசித்திருந்தவன், எதார்த்தமாக தன் எண்ணத்தை சொல்லியிருக்க, அது மனைவியின் சிவந்த வதனத்தை  அவனுக்கு பரிசளித்தது.

அவனுக்கான பாரத்தை அதிகப்படுத்தியிருந்தவள், தெளிந்திருப்பது முகத்திலே தெரிய, சரித்திரனுக்கு நிம்மதி தான்.

“என்ன ச்சீ.. தவழ்றதும், ஓடுறதும் ஒண்ணா. புருஷன் சொன்னா கேட்டுக்கோடி..” என்று அவளின் அழுத முகத்தை சிரிக்க வைத்தே பாண்டி சென்று சேர்ந்தான்.

Advertisement