Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 23

எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததில் பெரும் நிசப்தம் அங்கு. குமரகுரு முதலில் திரும்பி மனைவியை தான் பார்த்தார்.  அச்சமே  தான். மறுப்பதற்கில்லை. அவரின் அச்சத்திற்கு எதிர்பதமாக வேதவள்ளி நின்றிருந்தார்.

எந்தவித அதிர்ச்சியும், கோவமும் அவரிடம் இல்லை. குமரகுரு தான் அதில் அதிர்ந்தார். அப்போ முன்னாடியே வேதாக்கு இது தெரியுமா..?

“சொல்லுங்க சம்மந்தி நான் உங்ககிட்ட தானே கேட்கிறேன், மகனை அரசியல்ல இழுத்துவிட நீங்க இப்படி பண்ணலாமா..? அவருக்கு என்ன விருப்பம்னு நீங்க யோசிச்சீங்களா..? ஒருவேளை அவருக்கு இதுல விருப்பமே இல்லாமல் இருந்திருந்தா இது முழுக்க முழுக்க உங்க சுயநலம் ஆகிடாதா..?”

“அதுவும் அப்பான்னு அவ்வளவு பார்க்கிற மகனுக்கு போய் இதை செஞ்சிருக்கீங்க, உங்களுக்கு தெரியுமா இந்த விஷயம் தெரிஞ்ச உடனே நான் முதல்ல வந்தது அவர்கிட்ட தான். ஆனா அவர் என்ன சொன்னார் தெரியுமா..?”

“எனக்கு இது முதல்லே தெரியும். நானும் விசாரிச்சுட்டேன். பரவாயில்லை. விடுங்க. அப்பாகிட்ட நீங்க இதை பத்தி எப்போவும் பேசாதீங்கன்னு தான்..”

“நான் கேட்டு நீங்க சங்கடப்பட கூடாது, கஷ்டப்பட கூடாதுன்னு யோசிச்சார். ஆனா நீங்க.. போங்க..” விஸ்வநாதன் ஆறாத வருத்தத்துடன் பேச, குமரகுருவிடம் முழு அமைதி.

“ப்பா.. ப்ளீஸ்.. ரிலாக்ஸ் ஆகுங்க, ப்ளீஸ்ப்பா..” வர்த்தினி அப்பாவை அமைதிப்படுத்தினாள். சித்ராவும் கணவர் கை பிடித்து ஆற்று படுத்தினார்.

தொடர்ந்த நிமிடங்கள் கனமான அமைதி. வேதவள்ளியிடம் சிறு பேச்சும் இல்லை. சரித்திரன் எங்கோ  பார்வை பதிந்திருந்தான். அவனுக்குள் கோவம். அது அவன் உடல் மொழியிலும் தெரிந்தது.

வர்த்தினி அப்பா என்பதோடு விஸ்வநாதன் நல்ல மனிதர். நேர்மையானவர். அவரின் பாதை என்னமோ அதில் தான் செல்வார். தேவையில்லாமல் மகள் குடும்ப விஷயத்தில் கூட அவர் தலையிடுவதில்லை.

மிக நேர்த்தியான மனிதர் தான். ஆனால் இன்று அவர் செய்த செயல் மருமகனுக்கு ஒப்பவில்லை. என் அப்பாவை இவர் பேசுவாரா? இயல்பாய் மகனுக்கு எழும் கோவம் அது.

குடும்ப விஷயத்தில் கணவன் எப்படி என்று வர்த்தனிக்கு நன்றாக தெரியும். எதிரில் விஸ்வநாதன் மட்டும் இல்லை என்றால் நடப்பது வேறாக தான் இருந்திருக்கும். அப்பா இதை புரிந்து கொள்ள வேண்டுமே?

“தப்பு தான் சம்மந்தி..” குமரகுரு வாய் திறந்தார்.

“ப்பா..” சரித்திரனுக்கு அவர் பேச வேண்டாம் என்பதே.

“இல்லைப்பா.. சம்மந்தி கேட்கிறது ரொம்ப நியாயம். அவருக்கு நான் பதில் சொல்ல தான் வேணும். என் மருமகளோட அப்பா, என்னோட சம்மந்தி அவர். அவருக்கான மரியாதையை நான் கொடுக்கணும்..” குமரகுரு உறுதியாக சொல்லிவிட்டார்.

விஸ்வநாதன் என்ன சொல்ல போறீங்க, சொல்லுங்க. எனக்கு பதில் வேணும் என்று தான் பார்த்தார். வேதவள்ளி தள்ளி அமர்ந்து கொண்டார். என்ன இருந்தாலும் கணவர் தவறு செய்துவிட்டு மற்றவருக்கு விளக்கம் கொடுப்பதை பார்க்க அவருக்கு முடியாதே.

“ஆமா.. அன்னைக்கு நான் பண்ணது அத்தனையும் நாடகம் தான். கடைசி நாள்ல நாமினேஷன் தாக்கல் வைச்சுக்கலாம், ஜோசியரை கை காமிச்சுக்கலாம்ன்னு ஆரம்பிச்சது நான் தான். சரித்திரன் அன்னைக்கு சீக்கிரமே கிளம்பிட, நான் லேட்டா தான் போனேன். வழியில நானே வேற இடத்துல மறைஞ்சுகிட்டு, என்னை கடத்திட்டாங்கன்னு தம்பிய நம்ப வைச்சேன். அதுக்கு அண்ணாச்சி உடந்தை..”

“தம்பிக்கும் கடைசி நேரத்து டென்சன். அவரால் முடிஞ்ச வரைக்கும் என்னை தேடி பார்த்துட்டார். இந்த முறையும் இந்த தேர்தல் எங்க கை விட்டு போகுதுன்ற நிலையில் தான் எங்க பேச்சுப்படி அண்ணாச்சி, மத்த கட்சி உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்துக்கிட்டு தம்பியை எலெக்ஷன்ல நிக்க சொன்னோம்..”

“கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்துல ஒருத்தரை நெருக்கினா எப்படி இருக்கும் அப்படி ஒரு நெருக்கடி தான் அன்னைக்கு அவருக்கு. வேற வழி இல்லாமல் தான் எலெக்ஷன்ல நின்னார்..”

“இதுக்கு எல்லாம் பெருசா வேறெந்த காரணமும் இல்லை சம்மந்தி. ஒரே ஒரு காரணம் தான். கட்சி. என் கட்சி..!”

“எப்படி பிள்ளைங்களை சிசுல இருந்து அருமை பெருமையா வளர்கிறோமோ அப்படி வளர்த்த கட்சி  என் கட்சி..!”

“ஏற்கனவே அந்த பணம் விஷயத்துல என் கட்சியே என்னை எந்தளவு தள்ளி வைச்சதுன்னு அனுபவப்பட்டுட்டேன்..”

“நான் இன்னும் எத்தனை வருஷம் இருப்பேன் தெரியாது. குடும்பத்தை சுத்தமா கவனிக்காம, தெரு தெருவா சுத்தி கட்சி ஆரம்பிச்சு, பழி சுமந்து, பேச்சு வாங்கி, ஜெயில் போய், மனநிலை பாதிக்கப்பட்டு, யாரோ போல ஒதுக்கப்பட்டு, கிறுக்கா ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடந்து. வம்பாடு பட்டு அந்த கட்சியை நான் காப்பாத்தி என்ன பிரயோஜனம் சொல்லுங்க, அதை அப்படியே விட்டுட முடியுமா என்னால..?”

“என்னோட குழந்தைக்கு யார் யாரோ இனிஷியல் போட்டுக்க காத்திருக்காங்கனு தெரிஞ்சும் விட்டுட்டா நான் என்ன மனுஷன் சொல்லுங்க? அப்பறம் நான் இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கு..?”

“என் எதிரிங்க கைக்கு என் உழைப்பு போக கூடாது. அதுக்கு என்ன வழியோ அதை தான் நான்  செஞ்சேன். உங்களுக்கு இது சுயநலமா தான் தெரியும். ஆனா என்னை பொறுத்தவரை என் மகன்  எனக்கு செய்ய வேண்டிய கடமை, அவன் அப்பா உழைப்புல அவனுக்கான உரிமை அது..”

“அரசியல் ஆர்வம், அறிவு என் மகனுக்கு உண்டு. காப்பாத்திடுவான்னு நம்பிக்கை. இதோ என்னை விட மேலா காப்பாத்திட்டு இருக்கான். போதும். இந்த ஜென்மத்துக்கு எனக்கு இது போதும். நான் வாங்கின பைத்தியக்கார பட்டத்துக்கு இந்த நியாயம் போதும்..”

“நான் பண்ண பெரிய அநியாயம் வேதாக்கு. என்னைக்கும் அவகிட்ட நான் சரித்திரனோட அரசியல் பிரவேசம் பத்தி பேசல. தொழில் பக்கமா தான் அவனை அவ ட்ரைன் பண்ணிட்டிருந்தா. எனக்கு தெரிஞ்சும் இடையில நுழைஞ்சு எல்லாம் கெடுத்தது நான் தான். நான் மட்டும் தான். ஆனா வேதா கோவத்துக்கு ஆளானது என் மகன்..”

“அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கலாம்ன்னு எனக்கும் தெரியும் சம்மந்தி. அவன் என்கிட்ட வந்து கேட்க மாட்டான்னும் எனக்கு தெரியும். ஒரு விதத்துல எனக்கு இது  ஆசுவாசம் தான். அவனை நெருக்கி உள்ளே தள்ளியிருக்கேன். பெரிய தப்பு. நான் உட்கார்ந்து பேசியிருந்தாலே அவன் புரிஞ்சி இருந்திருப்பான். ஆனா வேதா. அவனோட அம்மாவை மீறி அவன் செஞ்சிருக்க மாட்டான். வேதா என்னைக்கும் அரசியலுக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டா. இதனால தான் குறுக்கு வழில நுழைய வேண்டியதா போச்சு..”

“வேதாக்கு அடுத்து நான் பதில் சொல்ல வேண்டியது  என் மருமகளுக்கு. அவங்களோட பார்வைக்கு வராமலே நான் இவ்வளவு பெரிய வேலை  பண்ணிட்டேன். சரித்திரனுக்கு கெடுதல் பண்ணலைன்னாலும், இது சரின்னும் சொல்லிட முடியாது.”

“அரசியல்ல நீதி, நியாயம், நேர்மைக்கு இடம் கிடையாது. நீ நியாயமா இருந்தாலும், கூட இருக்கிறவன் பண்ற தப்பை அமைதியா ஆதரிச்சு போறதும்  நியாயத்துல வராது. சோ உங்க கோவம் நான் எதிர்பார்த்தது தான். அதுக்காக பார்த்து நீங்க உங்க பதவியே வேணாம் சொல்றது தான் கஷ்டமா இருக்கு சம்மந்தி. உங்க குறை என்ன சொல்லுங்க நிவர்த்தி பண்றோம்..” என்று முடித்து கேட்க,

விஸ்வநாதன் ஒரு நொடி தலை சுத்தி நின்றுவிட்டார். நாம சரியா தானே கேட்டோம். அவரும் சரியா தானே சொன்னார். ஆனாலும்? அவர் சரியா செஞ்சது மாதிரி இருக்கே? ஆனா மருமகன் அரசியல்? கடவுளே!

மாமனாரை பார்த்த சரித்திரன் உதடுகளில் ஒரு மறைந்த புன்னகை. அரசியல்வாதி பேச்சு மாமே இது!

அப்படி பார்த்தால் ஜட்ஜ்ஜூம் சாதாரண ஆள் இல்லையே? மருமகன் அவரையே பார்த்திருக்க, விஸ்வநாதனும் சில நொடிகளில்  தெளிந்துவிட்டார். “சோ நீங்க உங்களுக்காக தான் இதை பண்ணேன்னு ஒத்துக்கிறீங்க..” என்று கேட்டார்.

“அப்படியும் சொல்லலாம் சம்மந்தி..” என்றார் குமரகுரு.

“அவருக்கு அரசியல்ல விருப்பம் இல்லாம இருந்தா நீங்க பண்ணது தவறு தானே..?”

“உங்க மருமகனுக்கு அரசியல் விருப்பம் எல்லாம் உண்டு சம்மந்தி. இன்னும் சொல்ல போனால் நான் எதாவது ஒரு சூழ்நிலையில கட்சியை விட்டுருந்தாலும், அவன் விட்டிருக்க மாட்டான்..” என, விஸ்வநாதன் மாப்பிள்ளையை பார்த்தார்.

‘ரைட்.. காயினை நம்ம பக்கம் திருப்பிட்டாங்க..’ சரித்திரன் மனைவியை பார்த்து கொண்டவன்,  “அப்பா சொல்றது உண்மை தான் மாமா. எனக்கு அரசியல் ஈடுபாடு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே உண்டு..” என்றான்.

“இருந்தாலும் இது அதிகம் இல்லையா..? நீங்க பிஸ்னஸ் பண்றீங்க, அரசியல் பக்கம் எல்லாம் போக மாட்டீங்க நினைச்சேன். என்னை ஏமாத்திட்டீங்க..” என்றார் ஆதங்கமாக.

“நீங்க எதிர்பார்த்திருக்கணும்.. அப்பறம் அண்ணாவோட கட்சியை என்ன பண்ணுவாங்க..?” என்று சித்ரா தெளிவாக கேட்க, விஸ்வநாதன் முகம் தூக்கி வைத்து அமர்ந்திருந்தார்.

குமரகுரு அமைதியாகவே அமர்ந்திருந்த மனைவியிடம் செல்ல, அவர் கணவரை தீர்க்கமாக பார்த்தவர், “அண்ணா கிட்ட பேசினது போல் என்கிட்ட வேண்டாம். எனக்கு ஒரே கேள்வி தான்..” என்றார்.

எல்லோர் கவனமும் அங்கு திரும்ப, “உங்களுக்கு திடீர்ன்னு ஏன் அவனை அரசியல்ல இழுத்துவிட தோணுச்சு. எனக்கு உறுதியா தெரியும் அந்த ஆசை உங்களுக்கு முதல்ல எல்லாம் இல்லைன்னு..” என்று கூர்மையாக கேட்க,

இடையில் வந்த எண்ணம் தானா இது..? விஸ்வநாதன் பார்த்திருக்க, சரித்திரனுக்கும் இதற்கு பதில் வேண்டும். அவனுடைய கேள்வியும் இது தான்.

Advertisement