Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 22

இரவு நெடு நேரம் கழித்து தான் சரித்திரன் அறைக்கு வந்தான். அதுவரை ராகவர்த்தினியும் கணவனை எதிர்பார்த்து படுத்திருந்தவள், அதன் பின்னே உறங்க ஆரம்பித்தாள். கணவனுக்கு தெரிந்து தான் இருந்தது.

தம்பதிகள் மௌனத்தை அந்த நேரத்தின் சிறந்த மொழியாக தேர்ந்தெடுத்து கொண்டனர். மறுநாள் எப்போதும் போல் எல்லாம் நடக்க, பிள்ளைகள் பள்ளி கிளம்பி சென்றனர். சரித்திரன் போனில் இருக்க, ராகவர்த்தினி அலுவலகம் செல்ல வந்தாள்.

மாமனார், மாமியார் காலை உணவு முடித்து ஹாலில் இருக்க, வர்த்தினி கணவனை எதிர்பார்த்தாள். அவள் தனக்காக டேபிளில் நிற்பது தெரிய, போன் பேசி கொண்டே சாப்பிட அமர்ந்தான். ராகவர்த்தினி அவனுக்கு பரிமாறி, தனக்கும் எடுத்து கொண்டு அமர்ந்தாள்.

சமையல் அம்மா சரித்திரன் பழக்கமான காபியை எடுத்து வர, ராகவர்த்தினி கிளம்ப கணவனை பார்த்து நின்றாள். மறுபக்கம் ஏதோ கேட்டு கொண்டிருக்க, இவன் மனைவியை பார்த்து தலையசைத்தான்.

கொஞ்ச நேரம் அந்த போனை வைச்சா என்னவாம்..? இவள் முனங்கி கொண்டு காருக்கு சென்றாள். வேதவள்ளி, குமரகுரு இருவரும் அன்று அலுவலகம் செல்ல, விசாகன் வந்தான்.

“என்னடா கிளம்பலாமா..?” அவன் கேட்க, சரித்திரன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என்ன ஆச்சுடா, டல்லா தெரியுற..?” நண்பன் கேட்க,

“கொஞ்சம் லேஸியா இருக்குடா..” என்றான் சரித்திரன்.

“ரெஸ்ட் எடுக்கிறியா, அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் கேன்சல் பண்ணிடவா..?” என்று கேட்டான்.

“கேன்சல் பண்ண வேண்டாம். போஸ்ட்போன்ட் பண்ணிடு..” என்றவன், தன்னை ரிப்ரெஷ் செய்ய என்ன வழி என்று யோசித்தான்.

ம்ஹூம்.. எதுவும் தெரியவில்லை. அப்படி ஏதும் இல்லையோ..? அவனுக்கே தெரியவில்லை. எப்போ நாம இவ்வளவு டல்லா பீல் பண்ணியிருக்கோம்..? யோசிக்க யோசிக்க அப்படி ஒன்று இல்லைவே இல்லை.  இத்தனை வருடம் ஓட்டம், ஓட்டம் தான்.

கல்லூரி படிக்கும் போதே அம்மாவின் அலுவலகத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தாயிற்று. சோர்ந்து அமர்ந்த நாள் எல்லாம் வாய்ப்பே இல்லை.

“ஒருவேளை எனக்கு வயசு ஆகிருச்சோடா..?” என்று நண்பனிடம் கேட்க,

அவனோ இவனை மேலும் கீழும் பார்த்தவன், “ச்சேச்சே.. நாம ஜஸ்ட் டுவென்டிடா மச்சான்..” என்றான்.

குஷனை எடுத்து அவன் மேல் எறிந்தவன், சிரித்துவிட்டான். நாற்பது வயதை நெருங்கும் நேரத்தில் இந்த கேள்வி என்றால்?

“டேய்.. போர்ட்டிஸ் எல்லாம் ஏஜே இல்லை..” என்றான் தனக்கே சமாதானமாக.

“அது ஜஸ்ட் நம்பர் தான் மச்சான்.. உனக்கு தெரியாதா..?” விசாகன் கேட்க,

“நீயும் அந்த ஏஜ் தான் மறந்திடாத..” சரித்திரன் கடுப்பாக சொன்னவன்,  “எதாவது படத்துக்கு போலாமா..?” என்று கேட்டான்.

விசாகனுக்கு ஆச்சரியமே. சரித்திரன் படம் பார்த்து எல்லாம் பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தானே கேட்க, விசாகன் நொடியில் டிக்கெட் புக் செய்துவிட்டான்.

ஜீன்ஸ், டீஷர்ட்டில் மாஸ்க் அணிந்து கொண்டு இருவரும் தியேட்டர் சென்றனர். படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. சரித்திரன் மொபைல் பார்க்க ஆரம்பித்துவிட்டான். இத்தனைக்கும் நல்ல படம். விசாகன் புரிந்து கொண்டவன், “போரடிக்குதா..? கிளம்பலாமா..?” என்று கேட்டான்.

“உனக்கு பிடிக்கிற கேட்டகிரி. நீ பாரு மச்சான்..” சரித்திரன் சொல்ல, விசாகன் நான் முன்னமே பார்த்துட்டேன் என்று கூட்டி கொண்டு வந்துவிட்டான்.

திரும்ப வீடு வர, விசாகன் கட்சி ஆபிஸ் செல்ல, சரித்திரன் அறைக்கு வந்துவிட்டான். அவனுக்கு தெரியாமல் இல்லை தன் சோர்வின் காரணம். ஆனால் அதை ஓவர்கம் செய்ய தான் அவனுக்கு தெரியவில்லை. முடியவும் இல்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வர்த்தினியுடன் அவன் காதல் வாழ்க்கை. எத்தனையோ குறை, நிறை அவர்கள் காதலில் இருந்த போதும், இந்த விலகல் இருந்ததில்லை. தாம்பத்தியம் கடந்து அவனுடன் இருக்க அவள் மறுப்பதே அவனை அதிகளவு சோர்வுக்கு தள்ளியது.

உடல் இச்சை கடந்து காதலர்களுக்கு அது ஒரு ஆத்ம பிணைப்பு இல்லையா..? அவளிடம் மட்டுமே கிளறபடும் உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால் மனதால் அவள் தரும் நெருக்கம்.. அது இல்லாமல் ஏதோ தான் தனியாளாக உணர்ந்து கொண்டிருக்கிறான்.

ஒருவேளை நான் அரசியல் கட்சி பிரச்சனையில் சிக்கி தவித்து கொண்டிருந்த நேரம் அவளும் இப்படி தான் உணர்ந்திருப்பாளா..? நினைத்த நேரமே நெற்றியை குத்தி கொண்டான்.

உறுதியாக தெரியவில்லை. ஆனால் அப்படி இருந்தால்..? நினைக்கவே அவ்வளவு வருத்தம்.

இப்போதே அவளை பார்க்க அவ்வளவு ஆவல், பரபரப்பு தான். கேட்க வேண்டும் அவளிடம். ஆனால்?

திரும்ப திரும்ப அவளிடம் தான் சென்று நிற்பது? அதுவும் கணவனுக்கு ஒப்பவில்லை. ஏதோ தாம்பதியத்துக்காக மட்டுமே அவளிடம் செல்வது போல் ஒரு மாயை அவனுக்கே உண்டு எனும் போது மனைவிக்கு சொல்லவும் வேண்டுமா..?

போற வரைக்கும் போகட்டும். போடா. இனி அவகிட்ட போக கூடாது. அவளையும் படுத்தி என்ன பண்ண போறோம்..? ஒரு மாதிரி மனநிலைக்கு வந்துவிட்டான்.

திரும்ப குளித்து, வேஷ்டி சட்டையில் கிளம்பிவிட்டான். விசாகனுடன் அன்றய நாள் முடியும் நேரம், வீட்டில் இருந்து போன். விஸ்வநாதன், சித்ரா வந்திருப்பதாக.

உடனே கிளம்பிவிட்டான். விஸ்வநாதன் இருப்பு வீட்டில் அவனுக்கு கொஞ்சம் உதைப்பு தான். பேரப்பிள்ளைகளுடன் இருந்தவரை கண்டு ஆசுவாசம் கொண்டவன், வரவேற்று அமர்ந்தான்.

ராகவர்த்தினி அவனுக்கு குடிக்க கொடுக்க, எடுத்து கொண்டவன் வீட்டில் குமரகுரு இல்லாததில் தளர்ந்தான். வேதவள்ளி சரியாக அந்த நேரம் அவருக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்லி வைக்க, மகன் அப்படி ஒரு முறைப்பு அம்மாவை.

என்னடா..? அவர் கேள்வியாக புருவம் தூக்க, போங்க.. என்று அதிருப்தி காட்டினான் அவன்.

“அண்ணா வீட்டுக்கு வந்துட்டு இருக்காரா அண்ணி..?”  சித்ரா கேட்க,

“இப்போ வந்திடுவார்..” என்ற வேதவள்ளி அவருடன் பொதுவாக பேச, சரித்திரனோ மாமனாரையே பார்த்திருந்தான். அவர் மிகவும் மும்மரமாக பேரனுக்கு ஏதோ சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். மருமகனை பார்க்கவே இல்லை.

சரித்திரனுக்கு முக்கியமான  போன் வர எழுந்து கீழே உள்ள அலுவலக அறைக்கு சென்றான். வர்த்தினி பின்னால் சென்றவள் அவன் பேசி வைக்கவும், “என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?” என்று கவலையாக கேட்டாள்.

“என்ன பிரச்சனை கேட்கிற, எனக்கு புரியல..” சரித்திரன் போனை பார்த்து கொண்டே கேட்க,

“உங்க முகமும் சரியில்லை. அப்பாவும் திடீர்ன்னு வீட்டுக்கு வந்து நிக்கிறார்..” என்றாள்.

“என் மாமனார் வீட்டுக்கு வந்ததுல உனக்கென்ன பிரச்சனை தெரியுது..? அவன் கேட்க,

“அவர் நம்ம வீட்டுக்கு வந்தே நிறைய மாசம் ஆகிடுச்சு. இப்போ சடனா வந்து நின்னா?”

“சும்மா கூட வந்திருக்கலாம், நீ போய் அவரை கவனி..”

“நீங்க.. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க..?”

“எப்படி இருக்கேன்..?

“முதல்ல என்னை பார்த்து பேசுங்க. இதென்ன பழக்கம்?”

“சரி சொல்லு..” மொபைலை வைத்து கேட்டான்.

வர்த்தினிக்கு அவன் பேச்சில் வித்தியாசம் தெரிந்தது. நேற்றிரவின் தாக்கமா..? இல்லையே. சில வருடங்களாகவே எங்களுக்குள் தாம்பத்தியம் சரியாக இல்லையே. அப்போதெல்லாம் இவர் இப்படி இல்லையே..? அவனின் காதல் பெண் சரியாக யோசித்தாள்.

“ரொம்ப டையர்டா இருக்கீங்க..” மனைவி கேட்க,

“இருப்பேனா இருக்கும். ஒரு இரண்டு நாள் எங்கேயாவது போய்ட்டு வரணும். பிரேக் எடுக்கணும்..” என்றான் அவனும் யோசனையாக.

“இத்தனை வருஷம் நீங்க பிரேக்  எடுத்துட்டு தான் இருந்தீங்க..” மனைவி உர்ரென்று சொன்னாள். இப்போது தான் வீட்டுக்குள்ளே வந்திருக்கார் என்பது அவளுக்கு.

“இல்லைடி.. ரொம்ப சலிப்பா இருக்கு எல்லாம்..”

“எல்லாம் சலிப்பா இருக்குன்னா.. என்ன சொல்ல வரீங்க..” மனைவி படபடவென கேட்டாள்.

“எல்லா பிரஷர்ல இருந்தும் பிரேக் எடுக்கிறது நல்லது தானே வர்த்தினி..”

“அப்போ நான்.. ச்சு விடுங்க..”

“என்ன நீ.. என்ன வர்த்தினி..”

மனைவி பதில் இல்லாமல் செல்ல போக, “சொல்லிட்டு போடி.. என்னை படுத்தாத..” என்றான்.

“நான் படுத்துறேனா..?” மனைவி நின்று தீர்க்கமாக கேட்டாள். ஆமான்னு சொல்லிடுவியா நீ என்ற சவால் அப்பட்டமாக அதில் இருந்தது.

சரித்திரன் தலை கோதி கொண்டான். “சரி நான் தான் உன்னை படுத்துறேன். எனக்கு தெரியும் அது..” என்றான்.

“நல்லது. அப்போ நானும் பிரேக் எடுக்கலாம் இல்லை..” என்று கேட்க,

“கண்டிப்பா.. சொல்லு, எங்க போற, ஏற்பாடு பண்றேன். பிஸ்னஸ், பிள்ளைகளை நான் பார்த்துகிறேன். நீ அமைதியா இருந்துட்டு வா.” சரித்திரன் உடனே சொன்னான்.

நான் கேட்கிறது இவருக்கு புரியலையா..? எப்போ இருந்து நாங்க இப்படி ஆனோம்..? மனைவிக்கு என்ன முயன்றும் கண்கள் கலங்கிவிட்டது. முகம் திருப்பி உள்ளங்கை குத்தி தன்னை கட்டுப்படுத்த முயல, சரித்திரனுக்கு லயம் தப்பி போன உணர்வு. உடலோடு மனமும் அழுத்தம் கொடுத்துவிட்டது.

ராகவர்த்தினி சில துளி கண்ணீருக்கு பிறகு, “உங்ககிட்ட இருந்து நானும், என்கிட்ட இருந்து நீங்களும் பிரேக் எடுக்கணும்ன்னா. அப்போ.. நாம.. நாம என்னவா இருக்கோம்..” என்றாள் கட்டுப்படுத்திய குமுறலுடன்.

சரித்திரன் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்ய முனைந்தான். தொண்டை வலித்தது அவனுக்கு. தள்ளி நிற்கும் மனைவியை ஆரத்தழுவி கொள்ள முடியாத நிலை அவனை அளவுக்கு அதிகமாகவே தாக்கியது.

“உங்ககிட்ட தான் கேட்கிறேன். பதில் சொல்லுங்க..” கண்ணீரை கோபத்துடன் சுண்டிவிட்டாள்.

“க்கும்.. என்னை கொஞ்ச நேரம் கட்டி பிடிச்சுக்கோடி..” என்றான் அவன்.

“முடியாது..” மனைவி உடனே மறுத்துவிட்டாள்.

“நேத்து நைட்டே என்னை விட்டு நீ முதல்ல போயிட்ட, அதுவே என்னால டாலிரேட் பண்ண முடியல. இப்போ நான் உன்னை. நீ.. நோ வர்த்தினி. நீயே  கிவ் மீ ய ஹக். டைட் ஹக். ரைட் நவ்..” என்றான் முடிக்கும் போது அழுத்தமாக. அதிகாரமாக.

“முடியாது..” வர்த்தினியிடம் சட்டென ஒரு காதல் திமிர் வந்து ஒட்டி கொண்டது.

“வர்த்தினி.. நீ செய்யணும்..”

மனைவி அப்படியே நின்றாள்.

“ரொம்ப தூரம் போறோம் பீல் வருதுடி. வேண்டாம். என்னால அது முடியாது. இன்னைக்கு ஒரு நாளைக்கே நான்.. ச்சு.. வாடி..”

“அப்போ என்னால முடியும்ன்னு சொல்றீங்களா..?”

“வர்த்தினி.. நாம இது இல்லை..”

“உங்களுக்கு அதுவே இப்போ தான் தெரியுதா..”

“வர்த்தினி.. முதல்ல நீ என்கிட்ட வா,  வந்து கட்டிக்கோ, நான் வந்தேன் கண்டிப்பா நீ தாங்க மாட்டடி..”

“தாங்குவேனா இல்லையான்னு நான் தான் சொல்லணும், நீங்க இல்லை..”

என்னை முதல்ல தள்ளி நிறுத்தினது நீ தான். நீயே என்கிட்ட வா.. மனைவியின் காதல் அதிகாரம் அது.

“அப்போ தாங்குடி..” சரித்திரன் அவளை நோக்கி வேக அடியெடுத்து வைக்கும் நேரம், கதவு தட்டப்பட்டது. உடன் திறந்து ஆதவன் உள்ளே வந்தவன், “தாத்தா உங்களை கூப்பிடுறார் டாட், மாம்..” என்றான்.

தம்பதிகள் தங்களை சமாளிக்கும் நேரம், ஆதவன் கண்கள் பெற்றவர்களை உன்னிப்பாக பார்த்ததுடன், “எல்லாம் ஓகே தானே மாம்..” என்று கேட்டான்.

“பர்பெக்ட்லி ஆல்ரைட். வேற முக்கியமான டிஸ்கஷன். வா போலாம்..” என்று அவனுடனே வெளியே வந்தனர்.

குமரகுரு வந்திருக்க, அவர் பக்கத்தில அமர்ந்தான் மகன். பிள்ளைகளுக்கு படிக்கும் நேரம் என்பதால் அவர்கள் அறைக்கு செல்ல, தொண்டையை கனைத்த விஸ்வநாதன், “நான் ரிட்டயர்மெண்ட் எடுக்கலாம் இருக்கேன்..” என்றார்.

குடும்பத்தினருக்கு அதிர்ச்சி. “ஏன்..? ஏன்ப்பா..?” மகள் தான் அப்பாவிடம் வேகமாக கேட்டாள். தொழில் மீதான அப்பாவின் ஆசை, அர்ப்பணிப்பு முழுதும் தெரிந்தவள் ஆயிற்றே. ஏன் சரித்திரன் குடும்பத்தினருக்கும் அது தெரியுமே.

சரித்திரன், ராகவர்த்தினி காதல் தெரிந்த பின், அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல விஸ்வநாதன் அவ்வளவு யோசித்து, மறுத்தது அவரின் நீதிபதி பதவி முன்னிட்டே எனும் போது அவரின் இந்த திடீர் முடிவு பல கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

“போதும்னு நினைக்கிறேன்..” என்றார் அவர்.

“உங்களுக்கு இன்னும் சர்வீஸ் இருக்கேப்பா. முழுசும் முடிங்கப்பா..” மகள் சொல்ல,

“நல்லா சொல்லு ராகா. நானும் சொல்லி சொல்லி பார்த்து வெறுத்திட்டேன்..” சித்ரா ஆதங்கபட்டு கொண்டார்.

“ஏன் நான் ஜட்ஜ் இல்லைன்னா நீ என் பொண்டாட்டியா இருக்க மாட்டியா..?” மனைவியிடம் பாய்ந்தவரை எல்லோரும் அதிர்வுடன் பார்த்தனர்.

சித்ரா மட்டும் நிதானமாக, “பேமிலிய நான் பார்த்துகிட்டதால  தான் நீங்க ஜட்ஜ் ஆனீங்க. சோ இதை சொல்ல எனக்கு முழு உரிமை இருக்கு..” என்றார் நிமிர்வாக.

விஸ்வநாதனுக்கு மனைவியை அந்த சொல் சொல்லிவிட்ட பின் பெரிய குன்றல் தான். “சாரி சித்ரா..” என்றார் மனதார.

“பரவாயில்லை சொல்ல மாட்டேன். எனக்கு காரணம் சொல்லுங்க..” என்றார் சித்ரா.

“ப்பா.. உங்களுக்கு ஹெல்த் ஓகே தானே..?” மகள் கவலையாக கேட்க,

“நான் நல்லா இருக்கேன்மா. மாஸ்டர் செக் அப் நீயும் தானே இருந்த..” என்றார் தந்தை.

“வேறென்னப்பா.. அடுத்த லெவெல் ப்ரோமோஷன் வர போகுதுனு சொன்னீங்களே, இப்போ போய்..” மகள் கேட்க,

“ஏன் சம்மந்தி அதுல ஏதும் பிரச்சனையா. நம்ம சைட்ல நாங்க ஏதாவது செய்யவா..?” குமரகுரு கேட்டுவிட, விஸ்வநாதன் முகம்  கடுத்து போனது. “ப்பா” சரித்திரன் அவரை மென் குரலில் மறுப்பாக பார்த்தான்.

“இல்லைப்பா.. அங்கேயும் பாலிடிக்ஸ் எல்லாம் உண்டு. அதான் நாம..”

“எனக்கு உங்க உதவி எல்லாம் வேண்டாம் சம்மந்தி. கேட்டதுக்கு நன்றி..” விஸ்வநாதன் சொல்ல,

“நமக்குள்ள எதுக்கு நன்றி எல்லாம் சம்மந்தி? நீங்க உங்களோட பிரச்சனையை சொன்னா மட்டும் போதும்.”

“சொன்னாலும் தீராது சம்மந்தி..” விஸ்வநாதன் சொன்னார். சரித்திரன் அப்பாவிடம், “விடுங்கப்பா.. நான் என்ன எதுன்னு பார்க்கிறேன்..” என்றான்.

“இல்லை தம்பி.. நம்ம லாயர்க்கு கவுன்சில்ல நல்ல செல்வாக்கு இருக்கு, அங்க ஏதும் குடைச்சல் இருந்தா அவர் மூலமா மூவ் பண்ணலாம்ன்னு..”

“சம்மந்தி.. உங்க லாயர் எனக்கு ஹெல்ப் பண்ற அளவுக்கு எல்லாம் நான் இல்லை..” விஸ்வநாதன் தொனி மாறியது.

சரித்திரன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டான். அவரை மறுப்பாக பார்த்தான். விஸ்வநாதன் அவனை பார்க்க வேண்டுமே?

வேதவள்ளிக்கு அவரின் குரல் ஒப்பவில்லை. கொஞ்சம் கண்டனமாக பார்க்க, சித்ராவிற்கும் கணவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று கணிக்க முடியவில்லை. எதுவோ இருக்கிறது, அது கணவனுக்கும் தெரிந்திருக்கிறது என்று ராகவர்த்தினி மட்டும் கண்டு கொண்டாள்.

“என்னோட நேர்மை, அர்ப்பணிப்பு தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கு..”

“நிச்சயமா.. உங்களை எங்க சம்மந்தி சொல்லிக்கிறதுல எங்களுக்கு எப்போவும் பெருமை தான். அதனால தான் இந்த முடிவு வேண்டாம்ன்னு சொல்றோம்..” குமரகுரு சொல்ல,

“எனக்கும் தான் என்னோட இந்த முடிவு பிடிக்கலை. ஆனா சூழ்நிலை என்ன பண்ணட்டும் நான்..” விஸ்வநாதன் ஆதங்கமாக சொன்னார்.

“என்ன சூழ்நிலை சம்மந்தி சொல்லுங்க, நாங்க சரி பண்றோம்..”

“உங்களால முடியாது சம்மந்தி. பண்ணதே நீங்க தான்..” என்றுவிட்டார் விஸ்வநாதன்.

“நானா..?”

“ஏன் சம்மந்தி இப்படி பண்ணீங்க..? உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை..” விஸ்வநாதனிடம் அப்படி ஒரு தொய்வு.

“ப்பா.. என்னப்பா, ப்ளீஸ். பொறுமையா இருங்க. பேசலாம்..” வர்த்தினி சொல்ல,

விஸ்வநாதனோ தன் இத்தனை மாத ஆற்றாமையை கொட்ட தொடங்கிவிட்டார். “நம்ம பிள்ளைங்க கல்யாண பேச்சப்போ உங்க மேல எவ்வளவு பெரிய அலிகேஷன் இருந்தது. கோர்ட், கேஸ், ஜெயில்ன்னு எத்தனை நடந்தது. கைப்பற்றப்பட்ட பணம் உறுதியா உங்களுது தான் தெரிஞ்சப்போவும் நான் உங்களை.. உங்க பேச்சை நம்பினேன். அந்த பணம் ஏதோ ஒரு டிராப்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா இப்போ நீங்க.. நீங்க பண்ண வேலை. எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை. உடன்பாடு இல்லை சம்மந்தி..”

“என்ன.. என்ன சொல்றீங்க சம்மந்தி..” குமரகுரு திணறலாக கேட்க,

“உங்ககிட்ட இதை கோவமா கேட்க கூட எனக்கு முடியல. நீங்களா இப்படின்னு வருத்தம், ஏமாற்றம் தான் அதிகமா இருக்கு..”

“என் மாப்பிள்ளை ஒரு அரசியல்வாதி மகனா இருந்தாலும் தொழில்ல இருக்கார். சரியா இருக்கார்ன்னு நம்பி தான் என் பொண்ணை நான் கொடுத்தேன். ஆனா நீங்க இப்போ அவரை அரசியல்ல இழுத்துவிட்டு அவரை.. இப்படி. ம்ப்ச்.. போங்க சம்மந்தி..”

“சம்மந்தி நான்..”

“இல்லைன்னு சொல்ல போறீங்களா..? எனக்கு எல்லாம் தெரியும் சம்மந்தி. உங்களுக்காக அன்னைக்கு நான் எவ்வளவு பதட்டப்பட்டேன்னு தெரியுமா. என்னைக்குனு கேட்கிறீங்களா..?  நாமினேஷன் தாக்கல் பண்ணப்போ உங்களை யாரோ கடத்திட்டாங்களே அப்போ தான்..”

“யாருடா இது ஓயாம என் மக குடும்பத்துக்கு தொந்தரவு கொடுக்கிறதுன்னு தனியா SP வைச்சு விசாரிச்சேன். அப்போ தான் தெரிஞ்சது நீங்க பண்ண வேலை. எனக்கு இன்னமும் அதை நம்ப முடியல..”

“உங்களை நீங்களே கடத்தியிருக்கீங்க. அதை வைச்சு  உங்க மகனை கடைசி நிமிஷத்துல நாமினேஷன் தாக்கல் பண்ண வைச்சிருக்கீங்க. அவரை வலுக்கட்டாயமா அரசியலுக்குள்ள இழுத்து விட்டிருக்கீங்க, எதனால இப்படி..? ஏன் சம்மந்தி, ஏன் இப்படி பண்ணீங்க..? சொல்லுங்க..” விஸ்வநாதன் மொத்தத்தையும் கொட்டி நியாயம் கேட்க, அவ்வளவு நிசப்தம் அங்கு.

Advertisement