Advertisement

குமரகுரு அந்த நாள் முழுதும் ஏதோ தீவிரமாக யோசித்தபடி இருந்தவர், மாலை தன் குடும்பத்திற்காக காத்திருந்தார். பேரப்பிள்ளைகள் ஸ்பெஷல் வகுப்புகள் முடித்து வர, பின்னாலே சரித்திரனும் வந்துவிட்டான்.

வேதவள்ளி எல்லோருக்கும் குடிக்க, சாப்பிட ஏற்பாடு செய்ய, சரித்திரன் குளித்து வெளியே பொதுவாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான். ஆராதனா அப்பாவிடம் ஒட்டி கொள்ள, ஆதவன் உள்ளே தாத்தாவுடன் இருந்தான்.

ராகவர்த்தினி அலுவலகத்தில் இருந்து வர, கணவன் எதிரிலே. இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் உரசி கொண்டது. சொல்லாம கொள்ளாம கிளம்புவீங்களா..? என்று மனைவி கடைக்கண்ணால் முறைக்க, சொல்லிட்டா மட்டும் முத்தத்தை அள்ளி கொடுத்து வழி அனுப்பி வைப்ப பாரு. போடி.. என்ற பார்வையில் கணவன்.

“ம்மா.. காலர் பிளவுஸ் சூப்பர். உங்களுக்கு நல்லா சூட் ஆகுது..” மகள் அம்மாவை இடையோடு கட்டி கொண்டாள்.

சரித்திரன் பார்வையும் அவள் மேல் உன்னிப்பாக ஊர்ந்தது. முழங்கை வரை ஸ்லீவ் வைத்து காலர் டைப்பில் அணிந்திருந்தவள், புடவை முந்தானைய இரண்டாய் போட்டிருந்தாள்.

அளவான மேக்கப்பில் அம்சமாக இருந்தவளை பார்த்து உதடு பிதுக்க, என்ன..? என்று கண்ணால் மிரட்டினாள் மனைவி.

இரவு கழுத்தில் நன்றாக கடித்து வைத்திருந்தவன் காயம் இப்போதும் லேசாக எரிச்சல் கொடுத்தது. மொத்த பல்லையும் தட்டிடணும். பார்வையை பார். காதலிச்ச காலத்துல கூட இப்படி இல்லை. இப்போ என்னமோ ரொம்ப பண்றார்.. மனதில் திட்டியபடி அறைக்கு சென்றாள்.

குமரகுரு ஏதோ பேச வேண்டும் என்றதால், விரைவாக குளியல் போட்டு வர, வேதவள்ளி மருமகளுக்கு குடிக்க கொடுத்தார். பிள்ளைகள் படிக்க ரூம் செல்லவும், குமரகுரு “வீட்ல பூஜை ஒன்னு பண்ணனும்..” என்றார்.

“என்னப்பா திடீர்ன்னு..” சரித்திரன் வெளியே இருந்தபடி கேட்க,

“குலதெய்வ கோவில்ல வைச்சு சொன்னாங்க. நமக்கும் நிறைய நடந்திடுச்சு. பூஜை வைச்சா நல்லது தானே..?” என்றார் குமரகுரு.

“இது எப்போ சொன்னாங்க, எனக்கு தெரியாம..?” வேதவள்ளி கேட்க,

“என்கிட்ட சொன்னாங்க வேதா. ஏன் நான் சொன்னா செய்ய மாட்டிங்களா..?” அவர் கோவமாக கேட்டார்.

“ப்பா.. செஞ்சுக்கலாம் விடுங்க..” சரித்திரன் சொல்ல,

“நீயும், மருமகளும் தான் மனையில உட்காரணும்..” என்றார் அடுத்து.

“ஏன்ப்பா.. நீங்களும் அம்மாவும்..”

“நீங்க உட்காருங்கன்னா உட்காருங்க, அவ்வளவு தான்..” என்ற குமரகுருவின் பேச்சில் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்ன தம்பி சரி தானே..?” குமரகுரு கேட்க,

“சரி தான்ப்பா..” என்றுவிட்டவனுக்கு அதன் பின்னே உறைக்க, “வீட்ல வைச்சாப்பா பூஜை..?” என்று கேட்டான்.

“வேறெங்க வைப்பாங்க தம்பி. நம்ம வீட்ல தான்..” என, சரித்திரன் கண்கள் சிரிப்பில் மின்னியது. அம்மா, மனைவியை சீண்டலாக பார்த்தவன், “நான் எப்படிப்பா வீட்ல..?” என்றான் குரலில் மட்டும் பாவமாக.

“நீ எப்படின்னா..? என்னப்பா கேள்வி இது, நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டிருக்கேன், இப்போ வந்து இந்த கேள்வி எல்லாம், என்ன வேதா இது. அமைதியா நிக்கிற, சொல்லு..” என்றார் மனைவியிடமும் குரல் உயர்த்தி.

“அவன் தான் சொல்றான்னா நீங்களும் என்னை கேள்வி கேட்கிறீங்க. என் மூஞ்சில முழிக்காதன்னு கோவத்துல தான் சொன்னேன். ஆனா இவன் தினமும் என் மூஞ்சிலே முழிச்சுட்டு, ஏதோ வீம்புக்கு, வம்புக்கு தனியே போய் உட்கார்ந்துட்டு என்னை கை காட்டுறான். மொத்தமும் கேடித்தனம். என்னை கை காமிச்சு ஜாலியா சுத்துறான்..” என்று பொரிய,

சரித்திரனோ, “அம்மா கோவமா தான் சொல்றாங்க, விடுங்கப்பா, அப்படி அவங்களை கஷ்டப்படுத்தி எனக்கு வீட்டுக்குள்ள வர வேண்டாம். நான் இப்படியே தனியா இருந்துகிறேன்..” என்று ஏகப்பட்ட வருத்தத்துடன் பேசியவன் கண்களின் விஷமம் நன்றாக புரிய, ராகவர்த்தினி முறைக்கவே செய்தாள்.

வேதவள்ளிக்கோ அவன் நடிப்பில் பல் நறநறத்தது. பிராடு பையன் எப்படி ஏமாத்துறான் பாரு. என் கோவத்துக்கு பார்த்து இவன் வெளியே நிக்கிறானாமா..? என்ன கதை இது..? நான் அவனை வாடா ராசா வீட்டுக்குள்ளன்னு கூப்பிடனும், அதுக்கு தான் இந்த நடிப்பு. என்று பார்க்க, குமரகுரு எழுந்து மகனிடம் சென்றுவிட்டார்.

“தம்பி என்ன பேச்சு இது..?  தனியா அது இதுன்னு, நீ இரு நான் என்னன்னு பார்க்கிறேன், வேதா. சொல்லு, நீ அன்னைக்கு சொன்னேன்னு தானே தம்பி தனியா போனான். எத்தனை நாள் போயிடுச்சு. அப்படியே விட்டுட்டு இருக்க முடியுமா, சின்ன பசங்க விளையாட்டா இது, வெளியே தெரிஞ்சா கூட நம்மளை என்ன நினைப்பாங்க? அவனும் உனக்கு பார்த்து தனியாவே இருக்க, நீயும் பார்த்துட்டு சும்மாவே இருக்க, கோவம் போனதும் வீட்டுக்குள்ள கூப்பிடுறது இல்லையா..?” என்று மனைவியை பேச, வேதவள்ளிக்கு சுறுசுறுவென ஏறிவிட்டது.

“எப்படி எப்படி நான் அவனை வெத்தலை பாக்கு வைச்சு வீட்டுக்குள்ள கூப்பிடணுமா..? அவன் செஞ்ச வேலை மறந்து போச்சா, இல்லை மறைஞ்சு போச்சா? அது சரி அன்னைக்கு நீங்களும் தானே அவன் கூட சேர்ந்து இந்த வேலை செஞ்சிங்க, அப்போ பேச தான் செய்வீங்க..?” என்று பொரிந்துவிட்டார்.

“வேதா.. அது ஏதோ முடிஞ்சு போச்சுன்னு விடாம இன்னும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க..?” குமரகுரு சாதாரணமாக சொல்ல, வேதவள்ளிக்கு கண்களில் கண்ணீர் சூழ்ந்துவிட்டது.

சரித்திரன், “ம்மா.. என்ன இது, விடுங்க..” என்றான்.

“விட தான் செய்யணும், அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே..” என்றார் கண்ணீரை ஒற்றி திடமாகவே.

“ம்மா..”

“பேசாதீங்க மினிஸ்டர் சார்.. வேண்டாம். என்னோட இத்தனை வருஷ ஓட்டத்தை ஒரே நாள்ல முடக்கி போட்ட நீங்க  பேசாதீங்க. இவரை விட உனக்கு என்னை நல்லா தெரியும். என் கஷ்டம் தெரியும். என் உழைப்பு தெரியும். உங்க அப்பா அன்னைக்கு அரசியல் போக நான் தொழில் எடுத்து நடத்தினேன். ஏன்? என் குடும்பம் கீழ போயிற கூடாதுன்னு, என் மகன் நாளைக்கு எனக்கு தோள் கொடுப்பான்னு. ஆனா அவன் அவங்க அப்பாக்கு தோள் கொடுக்க போயிட்டான். என்னை அப்படியே விட்டு, நான்.. ச்சு. விடுங்க, போங்க..” என்றார்.

சரித்திரனுக்கு எதுவும் பேச முடியாத நிலை. அம்மாவின் கஷ்டம் புரியாத மகன் இல்லையே. ஆறுதலுக்காக கூட வாய் திறக்கவில்லை. மௌனமாக, ராகவர்த்தினி மாமியாருக்கு குடிக்க கொடுத்தாள்.

“வேதா.. புரிஞ்சுக்கோம்மா.”

“எனக்கு ஒன்னும் புரிய வேண்டாம். இதையே நிறைய பேசியாச்சு. விடுங்க..”

“அன்னைக்கு சூழ்நிலை அப்படி வேதா..”

“என்ன பெரிய சூழ்நிலை? எல்லாம் திட்டம் போட்டு பண்ணிட்டு என்கிட்ட கதை விடுறீங்க. முன்னேற்பாடு இல்லாம இவன் எப்படி திடுதிடுப்புனு நாமினேஷன் தாக்கல் பண்ண முடியும், எல்லாம் பிளான், எனக்கு தெரியும், போங்க..”

“வேதா.. இதென்ன பேச்சு பிளான், அது இதுன்னு. நீ இப்படி யோசிக்க ஆரம்பிச்ச பிறகு நாங்க இதை சொல்லாம இருக்க முடியாது. என்னால சரித்திரன் கஷ்டப்படுறான். அவனுக்காக நான் இதை இன்னைக்கு உங்களுக்கு சொல்றேன்..” என்றவரின் பீடிகையில் மாமியாரும், மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“உங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு அன்னைக்கு நான் நாமினேஷன் தாக்கல் போனபோ.. வழியில ரோட் பிளாக்ன்னு பாதை மாத்தி.. சிலர் என்னை.. கடத்திட்டு போய்..”

“என்னங்க சொல்றீங்க..” வேதவள்ளி பதற, ராகவர்த்தினியும் அதிர்ந்து நின்றாள்.

“ஆமா.. நான் எலெக்ஷன்ல நிக்க கூடாதுன்னு யாரோ பண்ண வேலை அது. தலைவர் நான் கடைசி நாள்ல போட்டியிடலைன்னா, திரும்ப நாம கட்சி விட்டு தள்ளி நிக்கிற நிலை வந்திடும், இத்தனை வருஷ காத்திருப்பு வீணா போயிடும்னு தான் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து தம்பியை நாமினேஷன் தாக்கல் பண்ண வைச்சாங்க..”

“அவனுக்கு அப்போ வேற வழியே இல்லாம தான் செஞ்சான். அதான் உங்ககிட்ட கேட்கலை அவன். அன்னைக்கு நான் அவன் கைக்கு கிடைக்கும் போதே இருட்டிடுச்சு. அப்படியே வீட்டுக்கு வந்தோம்..”

“உங்களை யார் இப்படி பண்ணதுன்னு கண்டுபிடிச்சீங்களா..?” தீனதயாளன் மேல் சந்தேகம் கொண்டு வேதவள்ளி கேட்க,

“அது.. க்கும்.. அது இன்னும் கண்டுபிடிக்க முடியல. ஆட்கள் எல்லாம் எஸ்கேப். சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்..” என்றார் குமரகுரு.

“இங்க பாரு வேதா இது தான் அன்னைக்கு நடந்தது. நீங்க பயந்துட கூடாதுன்னு நான் தான் தம்பிகிட்ட சொல்ல வேண்டாம் சொன்னேன். அதை வைச்சு நீ அவனை இத்தனை மாசம் தனியே வைப்பேன்னு நான் எதிர்பார்க்கலை. போதும்மா. அப்பாக்காக அவன் செஞ்சதுக்கு தண்டனை கொடுப்பியா? என் மகன் எனக்கு செய்ய கூடாதா?” என்று கேட்க, வேதவள்ளி தலை பிடித்து அமர்ந்துவிட்டார்.

சரித்திரன் கை கட்டி அமைதியாக எங்கோ பார்த்து நின்றிருந்தான். அவன் உடல் மொழி சொல்லி கொள்ளும்படி இல்லை. அளவுக்கதிமான இறுக்கம். கோவமா..? என்ன கோவம் அவருக்கு..? ராகவர்த்தினி கணவனையே பார்த்திருந்தாள்.

“பூஜைக்கு நாள் சொல்லுங்க. ஏற்பாடு பண்ணிடலாம். சரித்திரா.. நீ..”

“ம்மா.. நான் வரேன், நீங்க விடுங்க..” என்ற மகன் விடுவிடுவென தோட்டத்திற்கு சென்றுவிட்டான். அவன் அப்படி சென்றது வேதவள்ளிக்கு தாங்கவில்லை. பின்னால் செல்ல, “என்னம்மா..” என்று கேட்டான் மகன்.

“நீ தான் சொல்லணும், என்ன..? நான் தான் உன்னை வீட்டுக்குள்ள கூப்பிட்டேன் இல்லை, இன்னும் என்ன..?” என்று கேட்க, சரித்திரன் பெருமூச்சுடன் அம்மாவின் இரு கைகளை பற்றி அமர வைத்தவன், அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா அது எப்போவும் ரகசியம். எங்கேயும் பேச கூடாது..” என்றான்.

வேதவள்ளி என்னவென்று பார்க்க, மிக மெல்லிய குரலில் சொன்னான். கேட்டதும் வேதவள்ளி அதிர்ந்து, கோவம் கொண்டு கொதித்துவிட்டார்.

“ம்மா.. நான் சொன்னேன் இல்லை. கோவம் விட்டு அமைதியாகுங்க..” மகன் அவர் கை பற்றி தட்டி கொடுத்தான்.

“எப்படி என்னால அமைதியா இருக்க முடியும் சரித்திரா..? “

“இருந்து தான் ஆகணும். இதுவே உங்ககிட்ட சொல்லாம விடுறது தப்புன்னு தான் சொல்றேன். ஏற்கனவே ஒரு விஷயம் உங்களோட கவனத்திலே வராம பண்ணிட்டேன். நீங்க இதை எல்லாம் டிசர்வ் பண்ற அம்மா இல்லை.  வர்த்தினிகிட்ட இதை என்னால சொல்ல முடியாது. புரியுது தானே உங்களுக்கு..” என்றான் அழுத்தமாக.

வேதவள்ளி மூச்சை இழுத்துவிட்டு சமன் செய்ய முனைந்தாலும் அவரால் முடியவில்லை. சரித்திரனுக்கு அவர் நிலை புரிய, அவருக்கான நேரம் மட்டுமே  கோவத்தை குறைக்கும்  என்று புரிந்து கொண்டான்.

தொலைவில் இருந்து பார்த்த ராகவர்த்தினிக்கு ஒன்றும் புரியவில்லை. நெருங்காமல் விலகி சென்றுவிட்டாள்.

Advertisement