Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 20

குலதெய்வ கோயிலில் இருந்து குமரகுரு, வேதவள்ளி இருவரும் வீட்டிற்கு திரும்பினர். ராகவர்த்தினி அவர்களுக்காக தாமதமாக அலுவலகம் செல்ல, சரித்திரன் வீட்டில் இருக்கும் அடையாளமே தெரியவில்லை.

கணவனுக்கு இன்று மதியம் கட்சி ஆபிஸ் செல்ல வேண்டிய ஷெடியூல் மட்டுமே இருக்க, காலை உணவு கூட எடுக்காமல் கிளம்பியிருந்தான். ராகவர்த்தினி போன் செய்யலாமா என்று யோசித்தாள்.

ஆராதனா பள்ளிக்கு கிளம்பும் முன் நேரில் சென்று பார்த்து ஏமாந்து வந்தாள். விசாகன் அவனை தேடி, ராகவர்த்தினியிடம் கேட்டான். எனக்கு தெரியல என்று அவளால் சொல்ல முடியவில்லை.

வேதவள்ளி, குமரகுரு கூட அவள் முகம் பார்க்க, மௌனத்தை தத்தெடுத்து கொண்டாள். போன் செய்த விசாகன், “கட்சி ஆபிஸ்ல தான் இருக்கார்..” என்று தகவல் கொடுத்து கிளம்பிவிட்டான்.

வேதவள்ளிக்கு மருமகளிடம் கேட்க வேண்டும். எதாவது பிரச்சனையா என்று. ஆனால் தயக்கம். “நான் அவனை போக சொன்னது இவங்க பிரிய வழி அமைச்சு கொடுத்திடுச்சோ..?” என்ற உறுத்தல் அதிகளவில் உண்டு. இதுல ராகாகிட்ட எப்படி கேட்க..? என்று கேள்வியுடன் மருமகளை பார்த்திருந்தார்.

ராகவர்த்தினி உடனே இடத்தை காலி செய்ய நினைத்தவள், “முக்கியமான மீட்டிங் இருக்கு, நீங்க ரெஸ்ட் எடுங்க, ஈவினிங் சீக்கிரம் வரேன்..” என்று இருவருக்கும் சொல்லி கொண்டு  கிளம்பிவிட்டாள்.

சரித்திரன் அன்று காலையிலே முக்கியமான நபரை பார்க்க சென்றான். எப்போது சென்னை வருவார் என்று பார்த்திருந்து இன்று அவரை சந்திக்க செல்கிறான். அந்த நபருக்குமே இவன் சந்திக்க வருவது தெரியாது.

உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வர, “ஹலோ சார்..” என்று அவர் முன் கை நீட்டி நின்றான் சரித்திரன்.

‘டெபியூட்டி கலெக்டர் ஜனகன்’ மாஸ்க் அணிந்திருந்த நபரை சந்தேகமாக பார்த்து நிற்க, நொடி தன் மாஸ்க்கை விலக்கினான் சரித்திரன். ஜனகன் புருவம் உயர்ந்து போக மகிழ்ச்சியுடன், “சார் எல்லாம் வேண்டாம்ண்ணா.. சாரி.. நீங்க மினிஸ்டர்..” என்று பதிலுக்கு கை குலுக்கி தயங்க,

சரித்திரன் பொய்யாக முறைத்தவன், “அண்ணாவே கூப்பிடுங்க, இப்போ வாங்க போலாம்..” என்று அவன் காருக்கு அழைத்து சென்றான்.

“நீங்க எப்போ சென்னை வருவீங்க பார்த்து வந்தேன். உங்க இடத்துக்கே வந்திருப்பேன். என்னால உங்களுக்கு சங்கடம் வேண்டாம்ன்னு தான்..” என்ற சரித்திரன் அவனின் கெஸ்ட் அவுஸ் அழைத்து சென்றான்.

“குளிச்சுட்டு வாங்க.. சாப்பிடலாம்..” என்று தனி அறை காட்ட, ஜனகன் குளித்து கிளம்பி வந்தான்.

சரித்திரன் அவனுக்கு உணவு பரிமாற,  “ண்ணா.. இந்த பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம். நானே எடுத்துகிறேன், நீங்களும் உட்காருங்க..” ஜனகன் சொல்ல, சரித்திரன் உணவுண்ண அமர்ந்தான்.

ட்ரைனிங்கிற்காக சென்னை வந்திருந்தான் ஜனகன். “பத்து மணிக்கு போனா போதும் இல்லை..” சரித்திரன் கேட்க,

“எஸ்ண்ணா..” என்ற ஜனகன், “எதாவது முக்கியமான விஷயமாண்ணா..?” என்று கேட்டான்.

“ஏன் நான் டேபியுட்டி கலெக்ட்ர் சாரை சும்மா மீட் பண்ண கூடாதா..?” என்று கேட்டான் சரித்திரன்.

ஜனகன் சிரித்தவன், “நம்மளோட ரிலேஷன்ஷிப் அப்படிண்ணா. பிரச்சனையில தான் நமக்கு மத்தவங்க அறிமுகம். அதான் கேட்டேன்..” என்றான்.

“அதென்னமோ உண்மை தான்.. தீனதயாளன் தான் நம்மளோட மேட்ச் மேக்கிங்..” என்று கண்ணடிக்க,

“ண்ணா.. நான் கல்யாணம் கட்டி வாழ வேண்டிய பையன். இந்த விளையாட்டுக்கு நான் வரலை..” என்று சிரிப்புடன் அலறினான் ஜனகன்.

“பொழைச்சு போங்க..” என்ற சரித்திரன், பொதுவாக பேசியபடி உணவு முடித்தனர்.

சில நொடி மௌனம்.  சரித்திரன் தொண்டையை செருமி கொண்டவன், “தேங்க்ஸ் சொன்னா கோவிச்சுக்குவீங்களா..?” என்று கேட்டான்.

“கேட்டு பாருங்கண்ணா.. அப்போ தானே தெரியும்..” என்றான் ஜனகனோ.

“ஹாஹா.. கேட்க மாட்டேன். மதுரை காரர் பைக்குள்ள என்ன வைச்சிருக்கார்ன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பல..” என்றான் சரித்திரன்.

“தப்பிச்சீங்க மினிஸ்டர் சார்..” என்று சிரித்த ஜனகன், “தேங்க்ஸ் சொல்லிக்க வேண்டிய நல்லது நமக்கு நடக்கலைண்ணா. அடிச்சுட்டு போற படகை நம்மளோட வாழ்க்கைக்காக பிடிச்சுக்கிற சுயநலம் தான் நான் பண்ணது..” என,

“உங்க சுயநலம் எனக்கு நல்லதா முடிஞ்சிருக்கு ஜனகன்..” என்ற சரித்திரன் நேரே வெறித்தான்.

“நிறைய விஷயங்கள் நடந்திடுச்சு. அதை எல்லாம் வார்த்தையால புரிய வைக்க முடியுமா எனக்கு தெரியல. கணேசன் மாமா இறந்தது, அப்பா ரைட்ல அரெஸ்ட் ஆனது. கட்சி எங்களை தூக்கி போட்டதுன்னு ரொம்பவே டவுன் ஆன நிலை எங்களுது..”

“அப்போ இருந்த ஒரே ஹோப் என் அப்பா. ஆனா அவர் அந்த பணத்தை வாய் திறக்க மாட்டேங்கிறார். அரெஸ்ட் ஆகி, விசாரணையில மனநிலை பாதிக்கப்பட்டு ட்ரீட்மெண்ட் வரைக்கும் போயும் கூட ஒரு வார்த்தை அந்த பணம் பத்தி சொல்லலை..”

“மீடியா சொல்லவே வேணாம். எங்களை நார் நாரா கிழிச்சுட்டாங்க. ஏதோ அவங்க பணத்துல தான் நாங்க வாழுற மாதிரி.. க்கும்.. சில விஷயங்களை என்னால என் பேமிலிகிட்ட கூட பேச முடியாது. பார்த்தவுடன் அண்ணா கூப்பிட்ட உங்களை என் தம்பியா நினைச்சு சொல்ல தோணுது..” என்றவன்,

“எப்போவும் நம்ம சமூகம் ஒரு விஷயத்தை உறுதியா செய்யும். அதை எனக்கும் செஞ்சது. வீட்டு பெண்களை இழிவுபடுத்தி பேசுறது. என் அப்பா விஷயம் வெளியே வந்தப்போ, நிறைய பேர் சொன்ன ஒரு விஷயம். இப்படி பணம் சம்பாதிக்க என் அம்மா, என் தங்கச்சியை கூட்டி..”

“ண்ணா..” நரம்புகள் வெடிக்க அமர்ந்திருந்தவன் கை பிடித்து ஜனகன் பதறிவிட்டான்.

“இப்போவும் கொதிக்குது. அந்த வார்த்தைகளை என்னால சாகிற வரை கடக்க முடியாது. என் தங்கச்சி கவுன்சிலிங் வரை போனா. என் அம்மா.. அவங்க என்ன சொல்ல, என்னோட அயர்ன் லேடி அவங்க. அழுது தானே தேறி, எங்களை கேர் பண்ணி, தொடர்ந்து உழைச்சு..” வார்த்தைகள் நின்றுவிட, அமைதியாகிவிட்டான்.

ஜனகனுக்கு தான் இன்னமும் உள்ளம் அதிர்ந்து கொண்டிருந்தது. சொல்கிறவருக்கு அது ஒரு நொடி தான். கேட்பவர்களுக்கு அது தான் எல்லாமாகி விடுகிறது. அந்த நிலையில் தான் சரித்திரன்.

“ண்ணா.. தண்ணீர்..” என்று ஜனகன் எடுத்து கொடுக்க, மறுக்காமல் வாங்கி  குடித்து தன்னை சமாளித்து கொண்டான்.

“நமக்கு நேர்ல அப்படியான வார்த்தைகள் பேசினா அது வேற. இப்படி முகத்தை மறைச்சு பேசுறவங்களை என்ன பண்ண..? ஒன்னும் பண்ண முடியாது. ஆனா ஏதாவது பண்ணியே ஆகணும். அதுக்கு தான் இந்த அரசியல். எங்களை தூக்கி போட்டு, தகாத வார்த்தை பேசினவங்க எல்லோருக்கும்  தலைவனா நான் தான் இருப்பேன். உன்னை விட பல படி மேல தான் என் குடும்பம் இருக்கும். என் அம்மா, என் தங்கை, என் வீட்டு பெண்களை கை தூக்கி நீ கும்பிடணும். மரியாதையா அவங்களை நீ பார்க்கணும். பார்க்க வைப்பேன் நான்..” அந்த வெறி அவனுள் ஓயாத நெருப்பாக கனன்று கொண்டே தான் இருக்கும்.

“கையில எல்லாம் இருந்தும் ஏதும் செய்ய முடியாத இயலாமை, அது ரொம்பவே கொடுமை ஜனகன். அன்னைக்கு அப்படி ஒரு இயலாமையில தான் என்ன பண்றேன்னு கூட தெரியாம ஆக்சிடென்ட் பண்ண பார்த்தேன்..”

“ண்ணா..” ஜனகன் கோபத்துடனே விளித்தான். உயிர் என்ன அவ்வளவு சாதாரணமா..?

“அந்த ஒரு செகண்ட்.. என் கண்ட்ரோல்ல நானே இல்லாம.. எப்படி இருந்தாலும், என்ன சொன்னாலும் அது மாபெரும் தப்பு.. மன்னிக்க முடியாத, மன்னிக்க கூடாத மடத்தனம் அது. அதுக்காக இப்போவாரை நான் பட்டுட்டிருக்கேன். ஆனா அன்னைக்கு அது தான் நானா இருந்தேன். உங்களோட வீடியோ தான் எனக்கான வழிய அன்னைக்கு விட்டுச்சு..”

“சிவனேஷ்வரன், பிரபாகரன், நீங்க எல்லாம் என் லைப்க்குள்ள வர போறது எனக்கு தெரியாது. ஆனா ஏதோ ஒரு நம்பிக்கை. எனக்குள்ள ஒரு நம்பிக்கை. கண்டிப்பா எனக்கான வழி கிடைக்கும்னு. அது தான் அந்த வீடியோ. அப்பறம் நான் இறங்கி அடிச்சது எல்லாம் வேற. இன்னைக்கு மினிஸ்டரா இருக்கிறதும் வேற கணக்கு..”

“பட் இதுக்காக எல்லாம் உங்களுக்கு  நன்றி சொல்லி தள்ளி வைக்க முடியாதவங்க நீங்க. என்னோட லைப் புல்லா நீங்க எல்லாம் டிராவல் பண்ணனும்ன்னு  விரும்புறேன். அதனாலே இந்த தேங்க்ஸ் எல்லாம் இல்லை..” என்றான் முடிக்கும் போது இலகுவாகவே.

ஜனகன் தலையசைத்து ஏற்று கொண்டவன், “உங்களை எனக்கு புரியாம போகாதுண்ணா. அந்த வீடியோக்காக உங்களை நிறைய பாலோ பண்ணி, அப்புறமும், இப்போவும் பாலோ பண்ணிட்டு இருக்கிறதால தான் டக்குன்னு அண்ணா கூப்பிட்டது. உங்களோட கஷ்டம் தெரியும். ஆனா இந்த பெயின்.. சாரிண்ணா. இது மட்டும் தான் சொல்ல முடியும். நானும் இந்த சமூகம் தானே. மறுக்காதீங்க..” என்றுவிட்டான்.

சில நொடி கனத்த அமைதிக்கு பின், சரித்திரன் தெளிந்து காபி வர வைத்தான். இருவரும் குடித்து கிளம்பினர். காரை விட்டு இறங்க, ஜனகன் கை கொடுத்தான். சரித்திரன் அவனை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

யாரோ நம்மை தூக்கி போட்டு மிதிக்குறாங்கன்னா நாமும் அவங்களை பதிலுக்கு தூக்கி போட்டு மிதிக்கணும் இல்லை. அவங்க நம்மை நெருங்க முடியாத, அண்ணாந்து பார்க்கிற உயரத்துல உட்கார்ந்தாலே போதும். அவனே நசுங்கிடுவான்.. இருவரும் அப்படியான ஒருவர் தான்.

ஜனகன் விடைபெற்று ட்ரைனிங் நடக்கும் இடம் சென்றான். சரித்திரன் நெகிழ்ந்த மனதுடன் கட்சி ஆபிஸ் சென்றான்.

Advertisement