Advertisement

சரித்திரன் முதல் வாயை மகளுக்கு ஊட்டிவிட்டு தான் சாப்பிட்டு முடித்தவன், மகளுக்கு பிடித்த ஐஸ்கிறீம் கேக் கொடுத்தான்.

“தேங்க்ஸ்ப்பா.. மிஸ் திஸ்..” என்ற மகள் அப்பாவிற்கு முதல் வாய் கொடுத்துவிட்டு பேச்சே இல்லாமல் சப்பு கொட்டி சாப்பிட்டு முடித்தாள்.

“இன்னொரு பீஸ் ஆரு..” என,

“நோ’ப்பா.. போதும்.. நாளைக்கு..” என்று இரு கண் சிமிட்டியவள், “நைட் ஹாட் வாட்டர் குடிச்சிடணும்..” என்றாள்.

சரித்திரன் டிஸியூ கொண்டு மகள் வாயை துடைத்தவன்,  “அதெல்லாம் உன் அம்மா கொடுத்துடுவாங்க..” என்றவன்,  “ஸ்கூல்ல என்ன ஆச்சு..?” என்று கேட்டான்.

ஆராதனா படபடவென எல்லாம் சொல்லி முடித்து அப்பாவின் முகம் பார்த்தாள். அவனிடம் சில நொடி அமைதி. “சாரிப்பா..” என்றுவிட்டாள் மகள் அதிலே.

“ஒருத்தரை ஹார்ம் பண்றது என்ன பழக்கம் ஆரு..?” என்று கேட்டான் தந்தை.

மகள் முகம் கசங்கி போக, “வேணும்ன்னு பண்ணலப்பா.. கோவத்துல பந்தை அடிச்சேன்.. அது.. இனி இப்படி பண்ண மாட்டேன்..” என்றாள்.

சரித்திரனிடம் இளக்கம் இல்லை. “அவ உங்களை பேசினது கூட  தப்பு தானேப்பா..?” என்றாள் வாதாடுபவளாக.

“சோ பதிலுக்கு பதில்ன்னு சொல்றியா ஆரு..?” தந்தை கேட்க,

“உங்களை பேசினா எப்படிப்பா கேட்டுட்டு இருக்க முடியும், கோவம் வருது..” என்றாள் மகள்.

“அந்த பொண்ணு பேசினதுல உண்மை இருக்கான்னு பார்க்கணும், இல்லையா இக்னோர் பண்ணிட்டு போயிடணும், ஒவ்வொருத்தரா போய் நாம யார்ன்னு ப்ரூப் பண்ணிட்டு இருக்க முடியாது.. கூடவும் கூடாது..” என்றான். மகளிடம் அமைதி.

“அப்பா உங்களை அங்கிருந்து கூட்டிட்டு வர சொன்னது இந்த மாதிரி இஸியூ எல்லாம் இனி வேணாம்ன்னு தான். நீ பண்ணதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இல்லை. அப்பா பாசத்தில அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது ஆரு, அப்பாவுக்கு பிடிக்காது.  பாசம் வேற, வளர்ப்பு வேற. என் இடத்துல என் வட்டத்துக்குள்ள இருங்க..” என்றான்.

மகள் கண்கள் கலங்க ஆரம்பிக்க, “ஆராதனா..” என்றான். மகள் கண்களை துடைத்து கொள்ள, டிஸியூ எடுத்து நீட்டினான்.

“இந்த மாதிரி பேச்சு எல்லாம் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். ஊர்ல இருக்கிற எல்லோரையும் மாத்த முடியாது. பெட்டர் உன்னை நீ மாத்திக்கோ. நவ் யூ ஆர் இன் செவன்த் ஸ்டேண்டர்டு  ரைட்..”

“சாரிப்பா.. இனி இப்படி பண்ண மாட்டேன்..”

“குட்.. தூங்க போ.. டைம் ஆச்சு..” என்றான். சமாதானமாகவோ, இன்னும் சிறிது நேரமோ கூட வைத்திருக்கவில்லை. இந்த கண்டிப்பு மனதில் நிலைக்க வேண்டும்.

“குட் நைட்ப்பா..” என்ற மகள் வீட்டிற்குள் வந்தாள். ராகவர்தனி மகளுக்காக காத்திருந்தவள், அவளின் சிவந்த கண்களில் புரிந்து கொண்டாள்.

“ஐஸ்கிரீம் கேக் சாப்பிட்டேன் மா.. ஹாட் வாட்டர் வேணும்..” மகள் தானே கேட்டாள்.

கண்கள் இன்னும் கலங்கி கொண்டே இருந்தது. முதல் முறை அப்பா அவளிடம் இவ்வளவு கண்டிப்புடன் பேசியிருந்தது. அம்மா கொடுத்த சுடு தண்ணீர் குடித்து அறைக்கு சென்றாள். தூக்கம் அம்மாவுடன் தான். இரு பெரிய கட்டில் சேர்ந்திருக்க, ஒன்றில் ஆதவன் தூங்கியிருந்தான். ஆராதனா மறுபக்கம் படுத்து கொள்ள, ராகவர்தனி வந்தவள் இடையில் படுத்து கொண்டாள்.

சில நிமிடம் சென்று ஆராதனா அம்மா பக்கம் திரும்பி அவரை கட்டி கொண்டு படுத்தாள். ராகவர்தனி எதுவும் கேட்கவில்லை. தட்டி கொடுக்க மகள் விசும்பி கொண்டே தூங்கி போனாள். விளக்கணைத்து இவளும் தூங்க ஆரம்பிக்க, அதுவரை அந்த அறையை பார்த்து கொண்டிருந்த  சரித்திரனும் தன் ரூம் விளக்கணைத்து தூங்க போனான்.

மறுநாள் அவனுக்கு ஓய்வு நாள் என்பதால் கட்சி ஆட்கள் வீட்டு பக்கம் வரவில்லை. எதிரில் இருக்கும் மண்டபத்திற்கு வந்து சென்றனர். சரித்திரன் வீட்டிலே ஜிம் முடித்து குளித்து வந்தவன், வெளியே இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.

காபி வந்தது. “ஆதவனை வர சொல்லுங்க..”  என்று எடுத்து கொண்டான்.

மகன் வந்தவன் பின்னால் கைகளை கட்டி அப்பா முன் நின்றான். சரித்திரன் காபி குடித்தபடியே மகனை பார்த்தவன், “எல்லாம் ஓகே தானே..?” என்று கேட்டான்.

“நோ..” என்றான் அவனோ பட்டென. சரித்திரன் காபி கப்பை கீழே வைத்தவன், மகன் முன் நின்றான். இவ்வளவு சீக்கிரம் தோளுக்கு வந்துவிட்டான் மகன்.

விறைப்பாக நின்றிருந்தவனை, “ரிலாக்ஸ் ஆகு ஆதி..” என்றான் தந்தை.

“என்னால முடியல..” என்றான் மகன்.

“ஓஹ்..”

“எல்லாம் உங்களை பேசுறதை கேட்கிற இடத்துல எங்களை வச்சிருக்கீங்க டாடி..”

“என்னை பேசுறவங்க எல்லாம் நல்லவங்களா ஆதி..?”

“அப்படி தான் சொல்றாங்க..”

“ஹாஹா.. இந்த உலகத்திலே பெரிய ஜோக் என்ன தெரியுமா..? நான் நல்லவன்  சொல்றது. ஒருத்தன் தன்னை நல்லவனா காமிச்சுக்க மட்டும் தான் முடியுமே தவிர இங்க எவனும் நல்லவன் கிடையாது..”

மகன் தந்தை சொன்னதை கிரகிக்க முடியாமல் பார்க்க, “போக போக புரியும்.. இப்போ என்னோட வாக் வா..” என்றான்.

“ஆதி.. வா, சாப்பிடணும்..” வேதவள்ளி குரல் கொடுத்துவிட்டார்.

“முதல்ல இவங்களோட சேராத.. உன்னை கெடுத்துடுவாங்க..” என்றான் தந்தை.

“யாரு.. நான்.. நான் என் பேரனை கெடுத்திடுவேனா..? என்ன தைரியம் உனக்கு..?” வேதவள்ளி அருகே வந்துவிட்டார்.

“நீ போ ஆதி..” மகனை அனுப்பி வைத்தவன், “என் மகன்கிட்ட இருந்து தள்ளியே இருங்க. நேர்மை உண்மைன்னு இல்லாததை எல்லாம் பேசி அவனை கெடுக்காதீங்க..”

“உன்கிட்ட அந்த நேர்மை, உண்மை இல்லன்னு சொல்லுடா.. உலகத்திலே இல்லைன்னு ஏன் சொல்ற..?”

“என்கிட்ட இல்லைன்னா இந்த உலகத்திலும் இல்லை தான்..”

“பிராடு பையன்.. நீ முதல்ல என் பேரன், பேத்திகிட்ட இருந்து தள்ளி இருடா..”

“உங்க மருமகளை லிஸ்ட்ல விட்டுட்டீங்க.. எங்க உங்க ராகா..?”

“அவ எங்க இருந்தா உனக்கு என்னடா, அதான் நாங்க யாரும் வேணாம்ன்னு போயிட்ட இல்லை, அப்படியே இரு..” என்றவர் வீட்டிற்கு வந்தார்.

ராகவர்தனி முக்கியமான மீட்டிங்கிற்காக விரைவாக ஆபிஸ் செல்ல கிளம்பி வந்தவள் மாமியாரின் கோவமுகத்தில் “என்ன த்தை..?” என்று கேட்டாள்.

“அவனை தவிர வேற யார் என்னை டென்சன் பண்ணுவா..?” வேதவள்ளி சொன்னவர், “சாப்பிட்டியா..?” என்று மருமகளிடம் கேட்டு அவளை அனுப்பி வைத்தார்.

ராகவர்தனி அவள் கார் நிற்கும் இடம் செல்ல, சரித்திரன் எதிர்திசையில் மனைவியை பார்த்தபடியே அருகில் வந்தான். கால்கள் வைத்தே கண்டுகொண்ட மனைவி, கதவை திறக்காமல் நின்றுவிட்டாள்.

அருகில் நின்றவன் கண்கள் மனைவியை அணு அணுவாக ஆராய்ந்து. எப்போதுமான புடவையில், அவளுக்கே ஆன லேசான பஃப் வைத்து முழங்கை வரையிலான பிளவுஸில் சிக்கென கட்டி நச்சென நின்றிருந்தாள்.

தலைக்கு குளித்த முடியை கிளிப் வைத்து நடுவில் அடங்கியிருந்த போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக காற்றில் அலைந்து கொண்டிருந்தது.  குங்குமம் உச்சியில், நெற்றியில் அவளின் நிறத்திற்கு பளிச்சிட்டது. தாலி கொடியுடன் ஒரு சிறு பிளாட்டின செயின் மினுமினுத்து தனி கவனத்தை பெற்றது.

சிவந்திருந்த காதின் ஓரம் முடிய ஒதுக்கிவிட்ட விரல்கள் ஒரு காலத்தில் தன்னிடம் புரிந்த சாகசங்கள் நினைவில் வர, பார்வையில் தீவிரம் கூடியது.

கணவனின் துளையிட்ட பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவள், கார் கதவை திறக்க செல்ல, கணவன் அதன் மேலே சாய்ந்து நின்றான்.

அதில் அவளின் கைகள் அவனை உரசி சென்றது. படக்கென மனைவி கையை பின்னால் இழுத்து கொண்டாள். முகம் இறுகி போனான். தீட்டா நான்.. கருவி கொண்டவன், அவளை நெருங்கி நின்றான். அதுவரை அவனை பார்க்காமல் தவிர்த்தவள், இப்போது அவன் பார்வையை எதிர்கொண்டாள்.

“நான் போகணும்..” என்றாள் தெளிவான குரலில்.

“சோ தெளிவா தான் இருக்க..” என்றான் கணவன்.

 காதல் திருமணம் இப்போது கசந்த திருமணமாகி விட்டது. வேண்டி வேண்டி இருபத்தைந்து வயதிலே திருமணம் செய்து கொண்டது இதற்கு தானோ..? இருவர் உள்ளத்திலும் ஒரே கேள்வி தான்.

நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் பெரும்பாடு.

ஒரு காலத்தில்  இவனின் அப்பாவிற்காக உயிரை கொடுத்தவரின் மகளை திருமணம் செய்ய கேட்ட நேரம், “அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.. ஆனா என் வாழ்க்கையை அவளுக்கு கொடுக்க முடியாது.. என்னோட லைப் என் வர்தினி தான்..” என்றவன் இன்று அவளிடம் இருந்து விலகி நிற்கிறான்.

Advertisement