Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 2

இருக்கும் வேலை அத்தனையும் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு பேரப்பிள்ளைகளை வரவேற்க ஹாலிலே காத்திருந்தார் வேதவள்ளி. வாசலுக்கு செல்ல ஆசை. ஆனால் வெளியே தான் அத்தனை சத்தம், கூச்சலே.

ஓயாத ஆர்ப்பாட்டத்தில் முகத்தில் தோன்றும் எரிச்சலை கட்டுப்படுத்தி அமர்ந்திருக்க, “பாட்டி..” என்று வந்தான் ஆதவன்.

“ஆதி..” என்று வேதவள்ளி எழுந்து மகிழ்ச்சியுடன் பேரனை கட்டி கொள்ள, “நானு..” பின்னாடியே ஓடி வந்த ஆராதனா பாட்டியுடன் சேர்த்து அண்ணனையும் கட்டி கொண்டாள்.

‘நைஸ் பண்றா..’ ஆதவன் தங்கையை முறைத்து தள்ளி  நின்றவன், “தாத்தா எங்க பாட்டி..?” என்று கேட்டான்.

“வருவார் ஆதி..” என்ற வேதவள்ளி “இரண்டு பேரும் போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வாங்க, சாப்பிடலாம்..” என, பேரப்பிள்ளைகள் அவரவர் அறைக்கு சென்றனர்.

குளிக்க, உடமைகள் வைக்க போன்றவற்றுக்கு மட்டுமே அந்த அறை. மற்றபடி எல்லாம் அம்மாவின் அறை, ஹால் தான்.

ராகவர்தனி உள்ளே வர, “நீயும் போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா ராகா, சாப்பிட்டு மேற்கொண்டு பேசலாம்..” என்றார் மாமியார். ராகவர்தனி தலையசைத்து அறைக்குள் சென்று அடுத்த சில நிமிடங்களில் வந்தாள்.

ஆதவன் பாட்டியுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, மகள் இன்னும் வரவில்லை. ராகவர்தனி மகள் அறைக்கு சென்று கதவை திறக்க, லாக் ஆகி இருந்தது. உடை மாற்றி கொண்டிருப்பாள் என்று புரிய, “சீக்கிரம் ஆராதனா..” என்றாள் ராகவர்தனி கதவை மெலிதாக தட்டி.

“ஆச்சு மா..” என்று ஆராதனாவும் கதவு திறந்து வர, அம்மாவும் மகளும் உணவுண்ண சென்றனர்.

“தாத்தா இன்னும் வரல பாட்டி..” ஆதவன் கேட்டு கொண்டே சாப்பிட,

“வந்திடுவார் ஆதி.. நீ இன்னும் ஒரு இட்லி வைச்சுக்கோ..” என்று வைத்தாள் ராகவர்தனி.

ஆராதனா இட்லியை பார்த்து முகம் சுளிக்க, “தோசை இருக்கு..” என்றார் வேதவள்ளி.

“அதுவும் எனக்கு பிடிக்கல பாட்டி..” என்றாள் பேத்தி.

“அப்போ சாப்பிடாத..” என்றான் அண்ணன்.

“ஆதி..” என்று அம்மா கண்டிக்க,

“ரோஷம் குறையட்டும் மா..” என்றான் அண்ணன்.

ஆராதனா சாப்பிடாமல் பாவமாக அமர்ந்திருக்க, அவளுக்கு பிடித்த உணவு தட்டில் நிறைந்தது. வேதவள்ளி தான் வைத்திருக்க, “ஐய்.. தேங்க்ஸ் பாட்டி..” ஆராதனா பாட்டி கன்னத்தில் முத்தம் வைத்தவள் அண்ணனுக்கு அழகு காட்டி விட்டு சாப்பிட ஆரம்பிக்க, வெளியே கோஷம்  அதிகரித்தது.

சரித்திரன் வந்துவிட்டான்.

இவர்கள் வரும் போது அவன் கார் இல்லாததிலே தெரிந்து கொண்டிருந்தனர் தலைவர் இன்னும் வரவில்லை என்று. அவனை வரவேற்க தான் இந்த நேரத்திலும் வீட்டில் கூட்டம்.

அமைச்சர் கோஷத்துடன் கார்கள் சத்தம் கேட்க, “ஹேய்.. அப்பா வந்துட்டார்..” என்று ஆராதனா சாப்பிடாமல் டேபிளை விட்டு எழ போக,

“சிட் ஆராதனா..” என்றார் வேதவள்ளி. நொடியில் கனிவான பாட்டியின் இருந்து வேதவள்ளியாக மாறிவிட்டார்.

“அப்பாவை பார்த்துட்டு வந்து சாப்பிடுறேன் பாட்டி..” ஆராதனா கேட்க,

“நோ.. பர்ஸ்ட் சாப்பிட்டு எழு..” என்றுவிட்டார் கறாராக. இளகமாட்டேன் என்று முகத்தை கண்டிப்புடன் வைத்திருப்பவரிடம் மேலும் கேட்டு பயனில்லை என்று புரிந்து கொண்ட ஆராதனா சுணங்கி கொண்டே சாப்பிட்டாள்.

வாசலில் கார்கள் அணிவகுத்து நிற்க, சரித்திரனின் பிரத்யோக காரில் இருந்து இறங்கினான் அவன். “தலைவரே..” என்று அவன் தலை தெரிந்தவுடன் இன்னும் ஆரவாரம்.

என் ஆட்கள்.. எனக்கான கூட்டம்.. என் கட்சி இது.. முகத்தில் தானே ஒரு தேஜஸ்.

அரசியலுக்கான பாரம்பரிய உடையான தூய வெள்ளை வேஷ்டி சட்டையில், மீசையை வானம் பார்த்து முறுக்கிவிட்ட படி தன் கட்சி ஆட்களை பெருமையுடன் பார்த்து கையசைத்தான்.

“தலைவரே.. தலைவரே..” என்று இன்னும் கோஷம். சரித்திரன் அளவான சிரிப்புடன் வழமையான படி மேல் ஏறி நிற்க, ஆரவாரம் அப்படியே அடங்கியது.

“இடைத்தேர்தல் நம்மது தான்.. எல்லாம் சாப்பிட்டு போங்க..” என்றான் கணீர் குரலில்.

அவ்வளவு தான், ஏதோ இப்போதே ஜெயித்துவிட்டது போல பட்டாசும், ஸ்வீட்டும் பறந்தது. சரித்திரன் திரும்பி விசாகனை பார்க்க, அவன் மெல்ல மெல்ல ஆட்களை சாப்பிட அழைத்து சென்றான்.

அவர்கள் வீட்டிற்கு எதிர்த்த இடத்திலே ஒரு சிறிய மண்டபம். அங்கு தான் உணவு, மீட்டிங் எல்லாம்.

பட்டாசு சத்தம் காதை பிளக்கவுமே, “நான் ரூம் போறேன்..” என்ற ஆதவன் வாசல் பக்கம் கூட திரும்பாமல் அறைக்கு சென்றுவிட்டான்.

ராகவர்தனி மகனை பெருமூச்சுடன் பார்த்து சாப்பிட, வேதவள்ளி முகத்தில் அவ்வளுவும் கடுப்பு.

‘இடைத்தேர்தல்ன்னு எங்கேயோ போனவன் இரண்டு வாரம் கழிச்சு இப்போ தான் வரான்.. ஊர்சுத்தி..’

“மாமா இன்னும் சாப்பிட வரலையே அத்தை..?” ராகவர்தனி கேட்க,

“வருவார்.. எல்லாம் அங்க தான் இருக்கார்..” என்றார் மாமியார்.

‘தாத்தா மட்டும் போயிருக்கார்.. நான் என் அப்பாவை பார்க்க போனா என்ன..?’ ஆராதனா முணுமுணுக்க,

“என்ன ஆராதனா..” என்றார் பாட்டி.

“நான் முடிச்சுட்டேன் பாட்டி..” என்றாள் பேத்தி.

“சரி போய் ரெஸ்ட் எடு..” என,

“என் அப்பா கூப்பிடுவார்..” என்றவள் ஹாலில் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.

“அவ அப்பனை போல ஏத்தம் பிடிச்சவ.. இரண்டு போட்டே வளர்த்து விடு, இல்லை என்னை போல தான் நீயும் பின்னாடி படணும்..” என்றார் வேதவள்ளி மருமகளிடம்.

ராகவர்தனி அதற்கு பதில் சொல்லாமல், “ஸ்கூல் என்ன பண்ண அத்தை..?” என்று கேட்டாள்.

வேதவள்ளி மருமகளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவர், “நீ சொல்லு.. என்ன பண்ணலாம், எதாவது ஸ்கூல் யோசிச்சிருக்கியா..?” என்று கேட்டார்.

“இல்லைத்தை..” என்றாள் சோர்வாக.

“சரி விடு, ஒன்னும் அர்ஜன்ட் இல்லை. ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா பார்க்கலாம்..” என்றவர், மருமகளுக்கு மேலும் இரண்டு இட்லி வைத்தார்.

ராகவர்தனி அமைதியாக சாப்பிட்டு எழ, “மேடம்..” என்று வந்து நின்றான் விசாகன்.

“இதோ வந்துட்டான்..” வேதவள்ளி அவனை முறைக்கவே செய்ய, அவன் ஏன் அவரை பார்க்க போகிறான். ராகவர்தனியையே பார்த்தவன், “சார் பசங்களை கூட்டிட்டு வர சொன்னார்..” என்றான்.

“நான் ரெடி..” என்று ஆராதனா வேகமாக எழுந்து  நிற்க, ஆதவனை தேடினான் அவன்.

“ஆதவன் தூங்க போயிட்டான்..” ராகவர்தனி சொல்ல, விசாகன் ப்ளூ டூத்தில் என்ன சொல்லப்பட்டதோ,

“பரவாயில்லை எழுப்பி அனுப்பி வைக்க..”

“அப்படி எல்லாம் என் பேரன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண முடியாது..” பட்டென பதில் வேதவள்ளியிடம் இருந்து.

“என் பொண்ணை கூட்டிட்டு வா..” ஆர்டர் வந்துவிட்டது. விசாகன் ஆராதனாவை அழைத்து கொண்டு சென்றான்.

வாசலில் இருந்த கூட்டம் கலைந்திருக்க, சரித்திரன் வசிப்பிடத்தின் கதவுகளை திறந்து உள்ளே அனுப்பினான்.

 மகளுக்காக காத்திருந்தவன், அவள் உள்ளே வரவும் முகம் விகசிக்க “ஆரு..” என, மகளும் “ப்பா..” என்று கூவி கொண்டே அவனை அணைத்து கொண்டாள்.

பிறந்ததில் இருந்து முதல் முறை இத்தனை நாட்கள் பிரிவு. இரண்டு மாதத்தில் ஒரு முறை மட்டுமே நேரில் பார்க்க முடிந்தது. அதனாலே என்னமோ அப்பாவை அதிகம் தேடிய மகள், கம்பீரமாக நின்ற தந்தையை விலகி பார்த்து மீண்டும் கட்டி கொண்டாள்.

“கொஞ்சம் வளர்ந்துட்டா என் பொண்ணு..” சரித்திரன் அவளின் உச்சி முகர்ந்து, முத்தம் வைத்து சொல்ல,

“உண்மையாவாப்பா..” என்றாள் மகள்.

“பாரு இப்போ என் நெஞ்சுக்கு வந்திட்ட..” என்று காட்ட,

“ஆமா.. ஆனா என்னை விட அண்ணன் இன்னும் வளர்ந்துட்டான்..” என்றாள்.

“உங்க ப்ரோதர் பிக் ப்ரோதர் ஆகிட்டாரா.. குட்..”  சரித்திரன் மகள் தலையை மெல்ல ஆட்டி, தன்னோடு அமர வைத்து கொண்டான்.

“சாப்பிட்டியா ஆரு..” மகளிடம் கேட்க,

“ஆச்சுப்பா.. நீங்க சாப்பிட்டீங்களா..? இப்போ தானே வந்தீங்க.. சாரிப்பா.. வாங்க சாப்பிடலாம்..” மகள் கேட்டவள் எழுந்துவிட்டாள்.

“சாப்பிடலாம்.. நீ உட்காரு ஆரு..”

“நோ’ப்பா.. நாம சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..” மகள் அப்பா கை பிடித்திழுக்க, சரித்திரன் சிரித்தபடி எழுந்து கொண்டான்.

“அப்பா ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்டா..” என்று அறைக்குள் செல்ல, உணவு டேபிளுக்கு சென்று பார்த்தாள். உணவு இன்னும் வரவில்லை. வீட்டில் இருந்து தான் வரும். ஏன் இன்னும் வரல.. ஆராதனா உடனே போன் எடுத்து வீட்டு கிச்சனுக்கு அழைத்தாள்.

“இதோ வந்திட்டிருக்கு பாப்பா..” என்று சீப் குக் சொல்லி வைக்க, உணவும் வந்துவிட்டது. திறந்து பார்க்க சரித்திரனுக்கு பிடித்தது எல்லாம்.   “பாட்டி பெர்பெக்ட்..” என்று  வாய்விட்டு சொல்ல,

“உங்க பாட்டியா..” கேலியாக கேட்டு கொண்டு வந்தான் சரித்திரன். ஒரு டிராக், டீஷர்ட்டில் இருந்தான்.

“ஆமா.. உங்களுக்கு பிடிச்ச டின்னர் அனுப்பியிருக்காங்க ப்பா..” என்றாள் மகள்.

சரித்திரன் சிரித்து கொண்டான். வேதவள்ளி அனுப்பியிருந்தால் அவனுக்கு பிடிக்காதது மட்டும் தான் இருக்கும் என்று தெரியாதவனா..?

Advertisement