Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 19

இன்று

சரித்திரன் தோட்டத்தில் வைத்து அம்மா, மனைவியிடம், பிள்ளைகளின் பள்ளி பற்றி பேச ஆரம்பித்தான்.  ஆதவன், ஆராதனா இருவரும் இரண்டு மாத படிப்பிலே முன்பு படித்த போர்டிங் பள்ளியை விட்டு வெளியே வந்திருந்தனர்.

ராகவர்த்தினி அவள் பார்த்து வைத்திருக்கும் இரு பள்ளி பெயரை சொல்ல, “இரண்டும் வாய்ப்பில்லை..” என்றான் பெற்றவன்.

“அதுல ஒன்னு என் எதிர்கட்சிக்காரன் ஸ்கூல்.. இன்னொருத்தன் எனக்கு ஆகாதவன்..”

“இரண்டும் நல்ல ஸ்கூல். நம்ம பெர்சனல் பார்த்து பசங்க படிப்புல”

“என் பெர்சனல் தான் என் பசங்க படிப்புல பிரதிபலிக்கும். அவங்க பீஸ் புல்லா படிக்கணும், அதுக்கு ஸ்கூல் பாருன்னா..”

“அப்போ நீங்களே சொல்லுங்க..”

“இதானே அவனுக்கு வேணும்.. எல்லாம் அவன் இஷ்டமே தான் நடக்கணும்..” வேதவள்ளி முணுமுணுத்தார்.

“புரிஞ்சா சரி..” என்றவன், பள்ளி பெயரை சொன்னான்.

“அங்க ஏன்..? ஸ்கூல் ஓகே தான். ஆனா பெருசா டெவெலப்மென்ட் இல்லையே..?” ராகவர்த்தினி கேட்க,

“என் பசங்க படிச்சா தானா டெவெலப் ஆகிட்டு போகுது..” என்றான்.

“கண்டிப்பா இவனுக்கு எதாவது தனி கணக்கு இருக்கும் ராகா.. நாம யோசிக்கணும்..” என்றார் மாமியார்.  மகன் அம்மாவை உர்ரென்று பார்த்து வைத்தான்.

ராகவர்த்தினி கணவன் சொன்ன பள்ளியை யோசித்தாள். ஓகே தான். ஆனால் கொஞ்சம் தூரம். கார் தான் என்றாலும்..?

“அதெல்லாம் சரியா வரும்..” என்றான் கணவன் மனைவியின் புருவ சுருக்கத்தில்.

“முடிவெடுத்து என்கிட்ட சொல்றீங்களா..?” ராகவர்த்தினி பிடிக்கா பாவனையுடன் கேட்க,

“உனக்கு என்ன தோணுது..?” என்றான் கணவன் பதிலே கேள்வியாக.

ராகவர்த்தினி ஆயாசத்துடன் தலை ஆட்டி கொள்ள, “என்ன வேதவள்ளி மேடம் உங்களுக்கு ஸ்கூல் ஓகேவா..?” என்று கேட்டான் மகன்.

வேதவள்ளி முகம் திருப்பினார். சரித்திரனிடம் கோவம் தோன்ற ஆரம்பித்தது. “மாமியாரும் மருமகளும் இப்படி மூஞ்சை வைச்சிருந்தா என்ன அர்த்தம்..?” என்று கேட்டான்.

“எனக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்..” வேதவள்ளி சொல்ல,

“நீங்க  சேர்த்த ஸ்கூல்ல என் பசங்க இரண்டு மாசம் கூட படிக்க முடியல..” என்றான் மகன்.

“உன்னால தான்.. உன்னை யாரோ பேச போய் தான் என் பேத்தி கோவப்பட்டது, நீ தான் காரணம்..?”

“என்ன வேதவள்ளி மேடம் மறந்துட்டீங்களா..? நானும் என் தங்கச்சியும் கூட  போர்டிங்ல இருந்தப்போ இதே பேச்சை கேட்டு தான் வளர்ந்தோம்..”

“என்ன பிரயோஜனம்.. அதே அரசியல்ல தானே இப்போ நீயும் போய் விழுந்திருக்க..?  உங்க  அப்பா தலைவர் பதவியை இழந்தப்போ நாம எவ்வளவு அசிங்கப்பட்டோம், பேச்சு வாங்கினோங்கிறதை மறந்துட்டு நீ திரும்ப அதே அரசியல்ல போய் விழுவ, நாங்க பார்த்துட்டு சும்மா இருக்கணுமா..?”

“அதான் நானே தனியே போயிட்டேனே.. அப்புறம் என்ன  நிம்மதியா இருங்க..”

ராகவர்த்தினி  அதற்கு மேல் முடியாமல் எழுந்து செல்ல போக,  சட்டென அவள் கை பற்றி நிறுத்தியவன், “எங்க போற.. உட்காருடி..” என்றான் கணவன் அழுத்தமாக.

வேதவள்ளி கிளம்பிவிட்டார். ராகவர்த்தினி அமராமல் அப்படியே நிற்க, அவனும் கையை விடவில்லை.

“நான் இருக்கும் போதே கிளம்புற அளவுக்கு போயாச்சா..?” இறுகி போனவனாக கேட்டான்.

“வேறென்ன பண்ண சொல்றீங்க.. திரும்ப திரும்ப அதே பேச்சா..?” மனைவி ஆற்றாமை கொண்டாள்.

“என்னை பேச வைச்சது உன் மாமியார் தான்..”

“அவங்க உங்க அம்மா..”

“அம்மா தான். ஆனா என் ஆசையை புரிஞ்சுக்காத அம்மா, அம்மா மட்டுமில்லை என் காதல் பொண்டாட்டி கூட..”

“உங்க ஆசையை எங்க மேல திணிக்கிறது கூட தப்பு தாங்க.. விடுங்க, திரும்ப திரும்ப இதே பேச்சு வேண்டாம்..”

“தனியா நிக்கிறது நான்டி.. பேச தான் செய்வேன்..”

“உங்களால தான் நீங்க தனியா இருக்கீங்க.. உங்க முடிவு இது..”

“என்னை அந்த முடிவு எடுக்க வைச்சது நீ.. உனக்கு வேண்டாததை செஞ்சதுக்கு  நான் உனக்கு வேண்டாதவனா ஆகிட்டேன் இல்லை..”

ராகவர்த்தினி கையை விடுவிக்க முயல, இன்னும் அழுத்தமாக பற்றி எழுந்து மனைவியை நெருங்கி நின்றவன் மூச்சு காற்று அவளை சுட்டது.

“சூடு தெரியுதா..?” என்று கேட்டான். ராகவரத்தினி அவனை புரியாமல் பார்க்க, அதுவே அவனை இன்னும் சுழற்றி கொண்டு சென்றது.

“புரியல இல்லை.. என்னை புரியல இல்லை.. மறந்தாச்சு.. என்னை மறந்தாச்சு, எல்லாம் மறந்தாச்சு.. மிட் ஏஜ்ல நிக்கிறேன்டி,  பொண்டாட்டி ஏக்கம் வராதா எனக்கு..?” என்று கேட்டுவிட்டான்.

ராகவர்த்தினி படபடத்து அதிர்ந்து நின்றுவிட்டாள். “என்னை ஏங்க வைச்சு கொல்ல பார்க்கிறடி நீ..?” என்றான் குற்றச்சாட்டாக.

“நம்மளோட செகண்ட் ப்ளாசம் டைம் இது. உனக்கும் என்னை தேடும், எனக்கும் உன்னை தேடும். இல்லைன்னு சொல்வியா நீ..?” என்று கேட்டான்.

“என்ன பேசுறீங்க நீங்க..?” ராகவர்த்தினி உடல் நடுங்க, உதடுகள் துடித்தது.

“சரியா பேசுறேன்..  சரியான ஆள் கிட்ட தான் பேசுறேன். என் பொண்டாட்டிடி நீ..? உன்கிட்ட தான் பேச முடியும். பேசணும். இல்லை கூடாதுன்னா   நம்மளோட ரிலேஷன்ஷிப் இங்கேயே இப்படியே முடிஞ்சு போச்சுன்னு ஒரு வார்த்தை  சொல்லு.. என் பீலிங்க்ஸை மொத்தமா கொளுத்திட்டு போயிடுறேன், சொல்லுடி..” என்றான்.

ராகவர்த்தினி நடுக்கம் இன்னும் கூடியது. சமீபமாக அவன் பார்வை மாற்றம், அது சொல்லும் சேதி அவளுக்கு புரியாமல் இல்லை. அதற்காக என்ன பிரச்சனை இருந்தாலும் ஒதுக்கி வைத்து  வாழ்வதற்கு அவர்கள் ஒன்றும் புது காதலர்கள், கணவன் மனைவி  இல்லையே.

வயதில்.. முதிர்ச்சியில்.. அனுபவத்தில்.. புரிதலில் அடுத்த கட்ட பரிமாணத்தை தொட்டுவிட்ட பின் பெயருக்கு.. கடமைக்கு கணவனுடன் வாழுவதை  அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

அது அவளின் முகத்திலும் தெரிந்துவிட, சரித்திரன் அவள் கையை விட்டுவிட்டான். விலகியும் சென்றுவிட்டான்.

இச்சை கேட்கவில்லை. அவர்களின் காதல் தாம்பத்தியத்தின் இரண்டாம் பரிமாணத்தை கேட்கிறான். அதற்கான புரிதல் குறைவே.!  ராகவர்த்தினியிடமும் அது  இல்லை.

சரித்திரன் அவளை விட்டு சென்ற பின்பும் ராகவர்த்தினி தோட்டத்திலே தான் நின்றாள். கணவனின் வார்த்தைகள் அவளை சுழட்டி கொண்டிருந்தது.

சரித்திரன் தன் அறையில் இருந்து பார்த்தவன், திரும்ப அவளிடம் சென்று அவளின் உதட்டை தின்று தீர்த்து விடலாமா என்று தீவிரமாக நினைக்க ஆரம்பித்துவிட்டான்.

ராகவர்த்தினியும் அவன் பார்வையை உணர்ந்திருக்க வேண்டும். நிமிர்ந்து அவன் அறையை பார்க்க, “வரவா..?” என்று கேட்டான் விரல் அசைத்து.

“வந்து பார்..” என்று மனைவி பார்வையால் சவால் விடுத்தாள்.

“அடிங்க.. ரொம்ப பண்றடி.. இந்தா வரேன் இரு..” சரித்திரன் வேஷ்டியை ஏத்தி கட்டி கொண்டு மனைவியை தேடி சென்றான்.

நடையில் வேகமே. அவனின் ஏக்கங்களை இன்று அவள் மேல் இறக்கிவிட வேண்டும். ‘இத்தனை நாள் என்னை படுத்தினதுக்கு இன்னைக்கு அவளை வைச்சு செய்யணும்’ நினைக்கும் போதே உடல் இன்னமும் முறுக்கியது.

தோட்டத்தில் எட்டி நடை போட்டவனை செக்கியூரிட்டியின் விசில் சத்தம் திரும்பி பார்க்க வைத்தது. சுற்றி கேமரா வேறு கண்ணில் பட்டு தொலைத்தது. நடையின் வேகம் அப்படியே குறைந்து முகத்தை உர்ரென்று வைத்து மனைவியை நெருங்க, அவளோ அவனையே விடாமல் பார்த்திருந்தாள்.

“என்னடி.. என்ன பார்வை..?” என்றான் கடுப்பாய் தலை கோதி கொண்டு.

ராகவர்த்தினி பார்வையில் மாற்றமில்லாமல் போக, “கோவமா பார்க்கிற என்னை..?” என்றான்.

“எதுக்கு இப்போ என்னை கோவமா பார்க்கிற நீ..? என் ஏக்கத்தை நான் சொல்ல கூடாதா..? அப்படியே ஆசை எல்லாம் அடக்கி வைச்சு சந்நியாசம் போகணுமா நான்..?” என்று எகிற, ராகவர்த்தினி உதடுகள் சுளித்தது.

கேட்டது கிடைக்காத கோவம் அவனிடம். கேட்காமலே காதலை அள்ளி வழங்குபவள் அவன் மனைவி. இப்போது என்னவென்றால் கேட்டும் பலனில்லை.

“இதுக்கு பேசாம நீ உள்ள போயிடுடி. சவாலா பார்த்து என்னை வர வைச்சு ஊறுகாய் போட பார்க்கிற..” என்றான்.

“நீங்க ஏன் வந்தீங்க..? ரூம்லே இருக்க வேண்டியது தானே..?” ராகவர்த்தினி கேட்க,

“வந்தேன். ஏதோ கொஞ்சமாவது கிடைக்காதான்னு, என்னடி பார்க்கிற, ஆமா. அட்லீஸ்ட் உன் உதட்டையாவது பதம் பார்த்துடலாம்ன்னு தான் வந்தேன், இப்போ என்னாங்கிற நீ..?” என்று ஏக்கமும், ஏமாற்றமுமாக சுற்றி பார்த்து சொன்னான்.

“ஓஹ்..” ராகவர்த்தினி கை கட்டி சொல்ல,

“என்ன ஓஹ்.. ஏன் என்னை உன்கிட்ட சேர்க்க மாட்டியா..?” நெருங்கி நின்றபடி கேட்டான்.

“கிட்ட இருந்தவளை தள்ளி வைச்சதே நீங்க தான்..” மனைவி நினைவு படுத்தினாள்.

“புரிஞ்சு போச்சு. ஆனா இப்போ நான் வேற மூட்ல இருக்கேன். பழசை பேசாத..” என்றவனை தடை செய்ய, கார் ஒன்று வந்து  நின்றது.

கணவனும், மனைவியும் திரும்பி பார்க்க, குமரகுரு காரில் இருந்து இறங்கி கொண்டிருந்தார்.

“ப்பா..” சரித்திரன் புருவம் சுருங்க, மனைவியின் கை பிடித்து அப்பாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ராகவர்த்தினி அவளின் கையை கணவனிடம் இருந்து விலக்கி கொள்ள, சரித்திரன் முகம் சுருங்கி இறுகியது. “வாங்கப்பா..” என்றான் அப்பாவிடம்.

“நீங்க இன்னும் தூங்கலையா..” என்ற குருமரகுருவின் பார்வை மகனையும், மருமகளையும் ஒன்றாக கண்டதில் மகிழ்ச்சியுற்றது.

“பால் எடுத்துட்டு வரவா மாமா..?” ராகவர்த்தினி கேட்க,

“எதுவும் வேண்டாம்மா..” என்றவர் வீட்டிற்குள் செல்ல, சரித்திரன் முன் வாசலிலே நின்றுவிட்டான். ராகவர்த்தினி கணவனை திரும்பியும் பாராமல் வீட்டிற்குள் சென்றுவிட, குமரகுரு முகம் வாடி போனது.

சரித்திரன் மனைவி பின் சென்ற பார்வையை இழுத்து பிடித்து அப்பாவிடம் திரும்பியவன், “இப்போ நீங்க ஓகேவாப்பா..” என்று கேட்டான்.

“எனக்கு இதுல இருந்து எல்லாம் கொஞ்சம் பிரேக் வேணும் தம்பி. தியான சென்டர் போறேன். அம்மாகிட்ட உன்னை கை காமிச்சுக்கிறேன்..” என்று கிளம்பி சென்றிருந்தார் மனிதர்.

சரித்திரனுக்கு ஏன் என்ற கேள்வி இருந்தாலும், அவருக்கும் ஓய்வு தேவை என்பதால் விட்டுவிட்டான். இப்போது சடனாக வந்து நிற்கவும் ஆச்சரியம் தான். அவரின் களைப்பு வெளிப்படையாக தெரிய, “போய் ரெஸ்ட் எடுங்கப்பா. காலையில பேசிக்கலாம்..” என்றான்.

“நான் உன்னோட படுத்துகிறேன் தம்பி..” என்று இவன் போர்ஷனில் நுழைந்தார்.

ஆராதனா மகனின் கட்டிலில் படுத்திருக்க, “என்னப்பா பேத்தி இங்க இருக்கா..?” என்று அவளின் தலையை வருடி விட்டபடி கேட்டார்.

சரித்திரன் பெரு மூச்சுடன் நடந்ததை சுருக்கமாக சொல்ல, குமரகுரு கவலையுடன் மகனை பார்த்தார். “ப்பா.. ஒன்னும் பிரச்சனையில்லை. அவங்க போர்டிங் போனதே எனக்கு பிடிக்கலை. இங்க பக்கத்திலே ஸ்கூல் போட்டுடலாம்..” என்றான்.

“படிப்பு விஷயத்துல லேட் பண்ண வேண்டாம் தம்பி. உடனே ஸ்கூல் சேர்த்துடு..” என்றார் குமரகுரு. சரித்திரன் சரியென்றவன் அப்பா படுக்க ஏற்பாடு செய்தான்.

Advertisement