Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 16

புதுமண தம்பதிகளின் நாட்கள் மிக இனிமையாகவும், வேகமாகவும் சென்றது. முதலிரவுக்காக அவர்களின் புது வீட்டிற்கு சென்றவர்கள், இரு வாரத்திற்கு மேல் அங்கயே இருந்து தான் வீடு திரும்பினர்.

இடையில் மறுவீடு, குலதெய்வ கோவில் பூஜை, வர்ஷா திரும்ப US சென்றதற்கு எல்லாம் காலை வந்து  மாலையே வீடு திரும்பிவிட்டனர்.

விஸ்வநாதனுக்கு அதில் வருத்தமே. “மறுவீட்டுக்கு காலையில வந்துட்டு  ஈவ்னிங் கிளம்பி போனா என்ன அர்த்தம்..? நமக்கும் அவங்களோட இருக்கனும்ன்னு ஆசை இருக்காதா..” என்று மனைவியிடம் பேச, வேதவள்ளி காதிற்கு இந்த விஷயம்  வர அவர் மகனை ஏதும் கேட்டுக்கொள்ள வில்லை.

அவரே சித்ராவிடம், “அவங்க சந்தோஷமா இருக்கிறது தானே நமக்கு வேணும் அண்ணி. இப்போ தங்கலைன்னா என்ன, அவனுக்கு இன்னொரு வீடு அது. அண்ணன்கிட்ட சொல்லுங்க, கொஞ்ச நாள். அப்பறம் அவங்களுக்கும் வேலை, தொழில்ன்னு ஓட்டம் இருக்கு இல்லை. ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டுமே..” என்றார்.

சித்ராவிற்கும் அவர் சொல்வது நன்றாகவே புரிந்தது. சரித்திரன் மீதான மகளின் காதல்  அவருக்கு தெரியாதா..? மகிழ்ச்சியாக இருக்கட்டுமே, இப்போது என்ன..? என்று விட்டுவிட்டார்.

இருவாரங்கள் கழித்து வீடு திரும்பிய தம்பதிகள், அன்றிரவு வேதவள்ளி, குமரகுருவுடன் அமர்ந்து உணவருந்தினர். ராகவர்த்தினிக்கு மாமியாரிடம் சகஜமாக பேச முடிந்தளவு, மாமனாரிடம் பேச முடியவில்லை.

கவனித்த வேதவள்ளி, “சட்டமன்றத்துல உங்க சண்டை எல்லாம் மருமக பார்த்திருப்பான்னு நினைக்கிறேன்..” என்றார் நமட்டு சிரிப்புடன்.

குமரகுரு மருமகளிடம், “அப்படியாம்மா..” என்று கேட்டு வைக்க, ராகவர்த்தினி வாய்க்குள் சென்ற இட்லி தொண்டையிலே தங்கிவிட்டது. ஆமா.. இல்லை என்று இரு பக்கமும் தலையாட்ட, சரித்திரன் சத்தமாக சிரித்துவிட்டான்.

தண்ணீர் குடித்து முழுங்கிய பெண், “அப்படி எல்லாம் இல்லை மாமா..” என்றாள் வேகமாக.

“அப்போ பார்க்கலையா..? டூ பேட் மருமகப்பா உங்களுக்கு..” என்றான் சரித்திரன்.

“நான் பார்த்திருக்கேன் மாமா..” ராகவர்த்தினி சொன்னவள், கணவனை அடிக்கண்ணால் முறைத்து வைத்தாள்.

“அதை தான் நாங்களும் சொல்றோம்.. பார்த்து தான் பயந்துட்டேன்னு, என்ன தம்பி..?” வேதவள்ளி மகனிடம் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,

“அத்தை.. ப்ளீஸ். நான் மாமாவை பார்த்திருக்கேன். ஆனா பயம் எல்லாம் படலை சொல்றேன்..” என்றாள் ராகவர்த்தினி.

“அப்போ என் அப்பா மேல உனக்கு பயம் இல்லை சொல்ற,  இது தப்பாச்சே..” சரித்திரன் மனைவியை சீண்ட, ராகவர்த்தினி டேபிளுக்கு அடியில் கணவன் தொடையில் கிள்ளி வைத்தாள்.

“ஸ்ஸ்.. ஏண்டி கிள்ளுற..” வேண்டுமென்றே சத்தமாக கேட்டு வைக்க, வேதவள்ளி, குமரகுரு இருவரும் சிரித்துவிட்டனர்.

ராகவர்த்தினி நெற்றியில் கை வைத்து கொள்ள, “அவங்க உன்னை கலாட்டா பண்றாங்கம்மா.. ப்ரீயா விடு. எனக்கு தெரியும் உனக்கு என்மேல இருக்குறது பயம் இல்லை, மரியாதைன்னு..?” குமரகுரு சொல்ல, மருமகளுக்கு அவரின் புரிதலில் இன்னமுமே அவர் மேல் மரியாதை தான்.

தூங்க அறைக்கு வந்த கணவனை கீழே தள்ளி தலையணையால் அடி வெளுத்துவிட்டாள் ராகவர்த்தினி. “ஹாஹா.. போதும்டி. உனக்கு தான் கை வலிக்கும்..” சரித்திரன் அவளை கட்டி கொண்டு மெத்தையில் உருண்டவன், அவளுக்கு மேல் இருந்தான்.

மனைவி அவன் கையில் திமிற, தனக்குள் அடக்கி கொண்டவன், நெற்றி முட்டி, “முதல்ல என்னை கிள்ளி வைச்சதுக்கு மருந்து போடுற..” என்றான்.

“இன்னும் கூட கிள்ளி வைக்கிறேன் இருங்க..” மனைவி உதடு சுளித்து கொள்ள,

“அப்போ நானும் கூட கடிச்சு வைப்பேன் பரவாயில்லையா..” என்றான் கன்னத்தில் காயம் செய்தபடி.

“இல்லன்னா மட்டும் கடிக்காத மாதிரிதான்..” மனைவி வெட்கத்துடன் நொடித்து கொள்ள, சரித்திரன் சிரித்தவன், அந்த இரவில் அவளை பேசவே முடியாதபடி செய்தான்.

மறுநாள் அவர்களே கோவில் சென்று, அப்படியே விஸ்வநாதன் வீடு சென்றனர். அன்றிரவு அங்கேயே தங்கவும் செய்தனர். விஸ்வநாதன் மகிழ்ந்து போனவர், விருந்து அமர்க்கள படுத்திவிட்டார்.

சரித்திரன் அவருடன் தோட்டத்தில் நடந்தபடி ட்ரஸ்ட் விஷயமாக பேச, கேட்டு கொண்ட விஸ்வநாதன், “என்மேல வருத்தம் இல்லையே..?” என்று கேட்டார்.

சரித்திரன் சில நொடிகள் நேரே வெறித்தவன், “உங்க இடத்துல நீங்க சரிதான். நாங்க தான் சரியில்லை..” என்றான்.

விஸ்வநாதன் புரியாமல் மருமகனை பார்க்க, அவன் முகம் அப்படியே மாறி போயிருந்தது. இவ்வளவு நேரம் இருந்தவன் இல்லையே இவன்.. ஜட்ஜ் புருவம் சுருங்கியது.

ராகவர்த்தினிக்கு விடுமுறை முடிந்து அலுவலகம் செல்லும் நாள் பற்றி பேச,  சித்ரா மகளிடம், “நீ வேலைக்கு போறது பத்தி எதுவும் பிரச்சனை இல்லையே..” என்று கேட்டார்.

“நான் வேலைக்கு போகணும்ன்னு தான் அவங்க மூணு பேரும் விரும்புவாங்கம்மா.. அத்தை நேத்து கூட ஜாயினிங் டேட் எப்போன்னு கேட்டு, கார் அரேஞ் பண்ணியிருக்காங்க..” என்றாள்.

சித்ராவிற்கு நிம்மதியானது. மேலும் இரு நாட்கள் இருந்துவிட்டு வீடு திரும்பினர். அந்த வாரத்தின் முதல் கிழமையில் இருந்து கணவனும், மனைவியும் அவரவர் வேலை பார்க்க சென்றனர். பகல் பொழுதுகள் எப்போது முடியும் என்று பார்த்து, இரவுகள் புதுமண தம்பதிகளுக்கானதாக இருந்தது.

மேலும் நான்கு வாரங்கள் செல்ல, ராகவர்த்தினி தனக்குள் நிகழும் மாற்றத்தை கண்டுகொண்டாள். பரபரப்புடன் சிறு பயமும். “என்னாச்சுடி.. முகம் வெளுத்திருக்கு..?” சரித்திரன் அன்றிரவு மனைவியை தோளோடு அணைத்து கேட்டான்.

“ஒன்னுமில்லை..” என்றவள், அடுத்த நாள் காலை எப்போது விடியும் என்று பார்த்து, ஓய்வறை சென்று வந்தாள்.  கர்ப்பத்தை உறுதி செய்திருந்தது அவளின் கையில் இருக்கும் கருவி.

சரித்திரன் ஒர்க் அவுட் செய்து வர, அவன் முன் அதை நீட்டினாள் பெண். சரித்திரனுக்கு அதை கிரகிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது. அதிர்ச்சியான ஆனந்த அதிர்ச்சி. அந்த இரு கோடுகளை பார்க்க பார்க்க அவனுக்கு அப்படி ஒரு சிலிர்ப்பு.

சரித்திரன் கண்களில் தானே ஒரு சொட்டு கண்ணீர் தழும்பிவிட்டது. ராகவர்த்தினிக்கு இந்த நேரங்கள் எல்லாம் அவளின் பொக்கிஷங்கள். கணவனையே கண்ணீருடன் பார்த்திருந்தாள். நெஞ்சு விம்மியது இருவருக்கும்.

மெதுவாக, காதலாக அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான். உச்சி முத்தம் வைத்தான். வைத்து கொண்டே இருந்தான். வார்த்தைகள் அங்கு மௌனித்து போயின. அவர்களின் காதலே பேசி கொண்டது.

இரு வீட்டிலும் விஷயம் தெரிய, அன்றே மருத்துவமனை சென்று வந்தனர். மருத்துவர் தனியே சரித்திரனிடம் தன் சந்தேகத்தை சொன்னார். நாட்கள் சென்று ஸ்கேனில் அவர் சந்தேகம் ஊர்ஜிதமானது. ‘ட்வின்ஸ்.. கருவில் இரட்டை குழந்தைகள்..’ என்றார்.

வேதவள்ளி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து மருமகளை அணைத்து கொண்டார். சித்ரா, விஸ்வநாதனுக்கு தலைகால் புரியவில்லை. குமரகுரு எல்லோருக்கும் இனிப்பை கொடுத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்தார்.

ராகவர்த்தினிக்கு தான் அடுத்து வந்த நாட்கள் படுத்தி எடுத்துவிட்டது. எதையும் சாப்பிட முடியாமல், படுத்தே இருந்தாள். வேலையும் செய்ய முடியவில்லை. பிள்ளைகள் தான் முக்கியம் என்று தானே மெடிக்கல் விடுமுறை எடுத்து கொண்டாள்.

“சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகலைடி.. இப்போ போய் இத்தனை மாசத்துக்கு மெடிக்கல் லீவ் எடுக்கிறது நாட் அட்வைஸைபில்..” சரித்திரன் சொன்னவன், மனைவி கஷ்டத்தில் விட்டு விட்டான்.

ராகவர்த்தினி முதல் சில மாதங்கள் கஷ்டப்பட்டவள், அடுத்து சரியாகிவிட்டாள். வயிறும் வளர ஆரம்பித்தது. ஆறு மாதத்திற்கே ஒன்பது மாதம் போல தெரிய, பசியும் கண்டபடி அவளுக்கு.

வேதவள்ளி, சித்ரா பேசி ஏழாம் மாதத்திலே வளைகாப்பு வைக்க,  ராகவர்த்தினி ஒரே பிடியாக நின்று, ஒன்பதாம் மாதம் செய்து கொண்டாள். சரித்திரன் அவளுடனே இருக்க வேண்டும் என்பதில் மனைவி தெளிவாக இருந்தாள்.

அவனும் மனைவியுடன் மாமியார் வீடு சென்றவன், அங்கிருந்தே தான் அலுவலகம் சென்று வந்தான். பிரசவ நாள் நெருங்க, அலுவலகம் செல்லவும் மனைவி அனுமதிக்கவில்லை. “முக்கியமான மீட்டிங்டி..” சரித்திரன் கெஞ்சி பார்த்தும் ஒத்துக்கொள்ளவில்லை.

சித்ரா கூட மகளிடம் கோவப்பட்டுவிட்டார். “ராகா அவரை விடு, நாங்க உன்னை பார்த்துக்க மாட்டோமா, உனக்காக அப்பா லீவே எடுத்துட்டார். நீ அவரை ஒரு மணி நேரம் விடாம படுத்துற..” என்று.

ராகவர்த்தினி எதற்கும் அசையவில்லை. கணவன் கை பிடித்தே பிரசவ அறைக்கு சென்றாள். வலி அவளுக்கு தானே வந்துவிட, சுகபிரசவத்தில் ஆண் ஒன்று, பெண் ஒன்று பெற்றாள்.

ஆதவன், ஆராதனா என்று பெயரிட்டனர். சரித்திரன் மாற்றி மாற்றி இரு வீட்டுக்கு சென்று வந்தான். மகனை விட மகள் அவனிடம் சீக்கிரமே ஒட்டி கொண்டாள். தந்தை  குரல் தூரத்தில் கேட்டாலே மகள் ஜோராக கை, காலை அசைக்க ஆரம்பித்துவிடுவாள். அதில் தந்தைக்கு கொள்ளை பெருமை.

தினமும் பிள்ளைகளை பார்க்காமல் அவன் நாள் முடிவதில்லை. சில நிமிடத்திற்கு மட்டுமாவது அவர்களுடன் நேரம் செலவழித்து விடுவான். விட்டு கிளம்பும் நேரம் முகம் வாடி விடும் அவனுக்கு. திரும்பி வந்து மனைவி, பிள்ளைகளுக்கு முத்தமிட்டு செல்வான்.

பார்த்திருந்த ராகவர்த்தினி,  மூன்றாம் மாதம் மாமியார் வீடு வந்துவிட்டாள். யார் சொல்லியும் கேட்கவில்லை. சரித்திரன் சொல்லியும். சித்ரா இங்கு முழு நேரமும் பிள்ளைகளை பார்த்து கொள்வார். அங்கு வேதவள்ளி அலுவலகம் செல்பவர். மகளுக்கு யார் உதவி செய்வார் என்ற கவலை சித்ராவிற்கு.

“நானே பார்த்துப்பேன்ம்மா..” என்றாள் மகள்.

சித்ராவிற்கு மகளின் ஒவ்வொரு பிடிவாத்திலும் ஆயாசமானது. “எல்லோருக்கும் கல்யாணம் முடிஞ்சா பித்தம் தெளிஞ்சிடும்ன்னு பார்த்தா உனக்கு மட்டும் புருஷன் பித்தம் கூடி போயிருக்குடி..” என்றார். அம்மாவிற்கு தெரியாதா மகள் மனது.

வேதவள்ளியும் வீடு வந்த மருமகளுக்காக வீட்டிலே இருக்கும்படி பார்த்து கொண்டார். அப்படியும் சில நேரம் அவர் செய்ய  வேண்டிய வேலை இருந்தால் சென்று தானே ஆக வேண்டும். “நீங்க வேலையை பாருங்கத்தை. நான் சமாளிச்சுப்பேன்..” என்றாள் மருமகள்.

சரித்திரனுக்கும் எல்லா நாட்களிலும் மனைவியுடன் இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எல்லாம் யாரும் எதிர்பார்க்காமல் குமரகுரு தான் மருமகளுக்கு உதவி செய்வார். ஆதவன் அவரிடம் நன்றாகவே பழகி கொண்டான்.

Advertisement