Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 15

இருவரும் விஸ்வநாதன் அலுவலக அறையில் எதிரெதிரே அமர்ந்திருக்க, அவர் சரித்திரனிடம்   “என் பொண்ணுக்கு உங்களை தெரிஞ்சதுல இருந்தே எனக்கும் உங்களை தெரிஞ்சிருக்கு. இத்தனை வருஷத்தில நாம நிறைய பேசியிருக்கோம். உங்க மேல ஒரு நல்லெண்ணமும் எனக்கு இருக்கு..” என்றார்.

சரித்திரனுக்கும் அது தெரியும் என்பதால், அவர் பேச வருவதை இடையிடாமல்  கவனித்தான்.

“யார்கிட்டேயும் உதவி கேட்காத நான் உங்ககிட்ட நேரடியாவே உதவி கேட்டிருக்கேன். எஸ் அஃப்கோர்ஸ் அது குற்றவாளிங்களோட குழந்தைங்க படிப்புக்காக தான்னாலும் உங்க மேல இருந்த நம்பிக்கையில மட்டுமே கேட்டது அது. நீங்களும் அதை இப்போ வரை உங்க ட்ரஸ்ட்ல ஒரு திட்டமாவே கொண்டு வந்து செஞ்சிட்டிருக்கீங்க  அதுல  எனக்கு ரொம்ப சந்தோஷம், பெருமையும் கூட “

“ஆனாலும்.. உங்க அப்பா விஷயம். அவர் என்கிட்ட இப்போ சொன்ன வார்த்தைகள்ல பொய்யில்லை. அந்த பணம். அது என்னன்னு எனக்கும் தெரியல. அவர் மேல இன்னும் கேஸ் இருக்கு. அதை தீர்க்காம, உங்க கல்யாணம். ம்ஹ்ம். அது என்னை கேள்விக்குறியில நிற்க வைக்கும். உங்களுக்கு புரியுது தானே..?” என்று கேட்க,

“புரியுது சார்.. உங்க சூழ்நிலைல யார் இருந்தாலும் கண்டிப்பா இப்படி தான் யோசிப்பாங்க. அதே நேரம் என் அப்பா மேல இருக்கிற குற்றசாட்டை மறுக்கிற இடத்துல நான் இருக்கேன். அந்த பணம் அவர் கைக்கு எப்படி வந்தது தெரியாது. அதுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லைன்னு வெளியுலகத்துக்கு சொல்ல வேண்டியது அவசியம். உங்க நேர்மைக்கு எந்த விதத்திலும் அவர் நேர்மை குறைஞ்சது இல்லை சார்..”

“நீதிபதியா இருந்து நேர்மையா இருக்கிறதை விட அரசியல்வாதியா இருந்து நேர்மையா இருக்கிறது.. அது ரொம்ப பெரிய விஷயம் சார்..” என்றான் சரித்திரன்.

“சரி.. அப்போ நீங்க ஏன் இன்னும் அதை ப்ரூப் பண்ணல..?” விஸ்வநாதன் கேட்க, சரித்திரனிடம் மௌனம்.

குமரகுரு அந்த பணம் பற்றியே பேச தயாரில்லை எனும் போது அவன் என்ன செய்துவிட முடியும்..?

விஸ்வநாதனுக்கு புரிந்திருக்க வேண்டும். “அவர் யாரையோ காப்பாத்த நினைக்கிறார்..” என்றார்.

சரித்திரன் பட்டென முழித்தான். ஏன் இருக்க கூடாது..? அப்பா அப்படியான ஆள் தானே..?

“அவரோட ஒத்துழைப்பு இல்லாம நீங்க இந்த கேஸ்ல எதுவும் பண்ண முடியாது. கேஸ் முடியாம உங்க கல்யாணமும் என் சம்மதத்தோட நடக்காது. இந்த சூழ்நிலையில உங்களோட  நான் சம்மந்தம் பண்ணா, அது என்னோட கேரியருக்கும் ஒரு உறுத்தலா வந்து நிக்கும்..”

“உங்கப்பா நேர்மை பத்தி நீங்க சொன்னது ரொம்பவே சரிதான். அதே நேரம் என் இத்தனை வருஷத்து நேர்மையையும் நான் காப்பாத்தணும். இதுக்காகவே கடுமையா உழைச்சு படி படியா மேல வந்தவன் நான். அவ்வளவு சீக்கிரம் என்னால அதை விட்டு கொடுக்க முடியாது. என் பொண்ணு என்னை புரிஞ்சுப்பான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..” என்றார் முடிவாக.

சரித்திரன் மூச்சிழுத்து விட்டவன், “உங்க பொண்ணு மட்டுமில்லை சார். நானும், என் பேமிலியும் கூட உங்களை புரிஞ்சுதான் இந்நேரம் உங்க வீட்ல இருக்கோம். என் அப்பா கேஸ் முடியாம எங்க கல்யாணம் வாய்ப்பில்லை, ம்ஹ்ம். சரிதான். கோர்ட்லேயும் எங்களை நெருக்கிட்டு தான் இருக்காங்க, கூடிய சீக்கிரம் முடிவு தெரிஞ்சிடும். என்ன செய்யன்னு பார்க்கிறேன் சார்..” என்றான்.

அதை தொடர்ந்து இருவரும் அறையை விட்டு வெளியே வர, வேதவள்ளி மருமகளுடன் உறவாடி கொண்டிருந்தார். சித்ரா வேக வேகமாக காலை உணவு தயார் செய்து கொண்டிருக்க, குமரகுரு மகனை பார்த்தார். அவன் மெலிதாக புன்னகைக்க, எல்லோருக்கும் நிம்மதி.

“சாப்பிட்டு தான் போகணும்..” என்று சித்ரா சொல்ல, சரித்திரன் அமைதியாக இருந்தான்.  வேதவள்ளிக்கு  என்ன புரிந்ததோ, “இனி அடிக்கடி வந்து போற இடம் தானே. அடுத்த முறை விருந்தே சாப்பிடுற மாதிரி பார்த்துக்கலாம் அண்ணி..” என்று விடைபெற்றுவிட்டார்.

ராகவர்த்தினி அதில் கவலையாக காதலனை பார்க்க, அவன் இரு இமை சிமிட்டி, புன்னகைத்து விடைபெற்று கொண்டான்.

குமரகுரு விஸ்வநாதன் தம்பதியிடம் சொல்லி கொண்டு,  மருமகளிடம் “வரோம்மா..” என்றார்.

“சரி.. சரிங்க மாமா..” என்றாள் பெண் அவசரமாக தலையாட்டி.

குமரகுரு குடும்பம் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர, பெற்றவர்கள் மகனை கேள்வியாக பார்த்தனர். “ஜட்ஜ் பெருசா ஒன்னும் சொல்லலைப்பா.. கொஞ்சம் டைம் கேட்டிருக்கார். பார்த்துக்கலாம்..” என்றான்.

வேதவள்ளிக்கு அதை நம்ப முடியவில்லை. அவன் போக்கிலே விட்டு தொழிலை பார்க்க கிளம்பினர். சரித்திரன் அன்று அப்பாவையும் அழைத்து கொண்டு பிளான்ட் சென்றான். அங்கு எப்போதும் அவருக்கு நேரம் நன்றாகவே போகும் என்பதால் குமரகுரு மறுப்பதில்லை.

மாலை அவரை ஓய்வெடுக்க சீக்கிரமே அழைத்து கொண்டு வீடு வர, குமரகுரு படுக்க சென்றுவிட்டார். வேதவள்ளியும் வந்துவிட, அம்மாவும் மகனும் அமர்ந்து டீ குடிக்கும் நேரம் கேட்டில் ஒரே சத்தம்.

சரித்திரன் அதை என்னெவென்று பார்க்க செல்ல, வேதவள்ளியும் இணைந்து கொண்டார். கணேசனின் குடும்பம் நிற்க, அவர்களுடன் கட்சி ஆட்கள். உறவினர்கள் சிலர் இருந்தனர்.

“வாங்க.. உள்ள வாங்க..” சரித்திரன் எல்லோரையும் வெளி ஹாலில் அமர வைக்க, குடிக்க உடனே வந்தது.

“நாங்க சாப்பிட ஒன்னும் இங்க வரல. எங்க வீட்டு பிள்ளைக்கு நியாயம் கேட்டு வந்திருக்கோம்..” என்றனர்.

“என்ன ஆச்சுக்கா..?” சரித்திரன் கணேசன் மனைவியிடம் கேட்க,

“என்ன ஆச்சா..? ஏன் உங்களுக்கு தெரியாதா..? உங்க அப்பா செல்வி புள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன்னு, ஒரு குடிகாரனை கை காமிச்சிருக்கார். அடுக்குமா இது உங்களுக்கு..? அப்பா இல்லைனா என்ன வேணா பண்ணுவீங்களா.? உங்களுக்காக ஓடி ஓடி உழைச்ச மனுஷனுக்கு பண்ற கைமாறா இது..?” என்று ஆளாளுக்கு பேச,

சரித்திரனுக்கு இது புதிது. திரும்பி அம்மாவை பார்க்க, அவர் ஆம் என்று தலையசைத்தார். “நல்ல பையன்னு தான் பொண்ணு பார்க்க போக சொன்னார் தம்பி. இது என்னன்னு தெரியல..” என்றார் வேதவள்ளி.

“எங்க அவர். கூப்பிடுங்க நியாயம் கேட்போம்..” என்று குமரகுருவை அழைக்க குரல் உயர்த்தினர்.

அவருக்கு இது நிச்சயம் மனஅழுத்தத்தை தூண்டிவிடும் என்பதால், பின்னால் கண் காட்டி வீட்டு கதவையே மூட சொன்னவன், கணேசன் மனைவியிடம் “க்கா.. நடந்ததுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன். அப்பா அறியாம நடந்த தவறு இது. அதுக்கான முழு பொறுப்பு என்னது. செல்வி வாழ்க்கைக்கு நான் பதில்..” என்றான் சரித்திரன்.

“நீங்க பதில்ன்னா.. தெளிவா சொல்லுங்க தம்பி..”

“அட உனக்கு புரியலையாப்பா.. தம்பி நம்ம கணேசனை மாமா தான்னே கூப்பிடுவார்..”

“இப்போ புரியுது இப்போ புரியுது..”

“என்ன இருந்தாலும் நம்ம தலைவர் மகனுக்கு நல்ல மனசு. கட்சிக்காரர் மகளை கட்டிக்கிறேன் சொல்றார். என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்..”

“நாம எல்லாம் இவங்க கட்சியில இருக்க கொடுத்து வைச்சிருக்கணும்..” என்று ஆளாளுக்கு பேசி கொண்டே போக,

‘இது என்ன புது பூதம்..?’ என்று பார்த்தார் வேதவள்ளி. கணேசன் குடும்பத்தினரும் அதிர்ந்து இவர்களை பார்த்து மறுப்பாக தலையசைத்தனர்.

சரித்திரன் முதலில் திடுக்கிட்டாலும், பின் எல்லாரையும் நிதானமாக அவதானித்தான். யாரோ சொல்லி கொடுத்ததை அப்படியே செய்யும் கூட்டம் இது. கண்டு கொண்டவன்,

“க்கா.. நீங்க என்னை நம்புறீங்க தானே..? கவலைப்படாம வீட்டுக்கு போங்க. நான் பார்த்துகிறேன்..” என்றான் கணேசன் மனைவியிடம்.

“தம்பி.. இங்க நாங்களும் இருக்கோம். எங்ககிட்ட பேசுங்க. எங்களுக்கு உறுதி கொடுங்க..” என்றனர்.

“உங்களுக்கு நான் என்ன உறுதி கொடுக்கணும்..?” சரித்திரன் கை கட்டி கேட்டான்.

“அதான் செல்வி பிள்ளையை கட்டிக்கிறேன்னு தான்..”

“நான் எப்போ உங்ககிட்ட அப்படி சொன்னேன். நீங்களா தானே பேசுனீங்க..?” என்றான்.

“சரி.. நாங்களா பேசினதா கூட இருக்கட்டும். உங்க கட்சியில உழைச்சவருக்காக நீங்க இதை பண்ண மாட்டிங்களா..?”

“கணேசன் மாமா குடும்பத்துக்கு என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். நீங்க சொல்லணும்ன்னு இல்லை..”

“நாங்க சொல்லாம..? நாங்களும் உங்க கட்சி ஆளுங்க தான்ப்பா..”

“கட்சி வைச்சு என்னை கார்னர் பண்ண  நினைக்கிறீங்க. ரைட். நீங்க எப்படி பேசினாலும் என் பதில் ஒன்னு தான். செல்விக்கு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சு கொடுப்பேன். ஆனா என் வாழ்க்கையை அவளுக்கு கொடுன்னு நீங்க சொல்றதுக்கு நான் உடன் பட மாட்டேன்..”

“எனக்கு வர்த்தினி இருக்கா. அவ தான் என் லைப். கூடிய சீக்கிரம் நான் காதலிக்கிற பொண்ணோட என் கல்யாணம் நடக்க போகுது. உங்க சீப் ட்ரிக்ஸ் எல்லாம் என்கிட்ட வைச்சுக்காதீங்க. கிளம்புங்க..” என்றுவிட்டான் அழுத்தமாக.

காலையில் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று வந்த பிறகே இப்படியான ஒன்று என்றால், ஏதோ எங்களை சுற்றி நடக்கிறது. யாரோ இவர்களை ஆட்டுவிக்கிறார்கள்..? யார் அது..? ஒருவரா, பலரா..? அவர்களுக்கும் அந்த பணத்துக்கும் கூட சம்மந்தம் உண்டா..? இல்லையென்றால் நடப்பதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்களா..? தீனதயாளன், அண்ணாச்சி. இதில் யார்..? எண்ணில்லா கேள்விகள்.

வந்திருந்த ஆட்கள் இதை எதிர்பார்க்கமல ஆளுக்கொன்று பேசி கொண்டே இருக்க, “தம்பி.. இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை. எங்களை வம்படியா கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்றாங்க..” என்றார் கணேசனின் மனைவி.

“எனக்கு உங்களை தெரியாதாக்கா..? நீங்க விடுங்க, இனி இவங்க யாரும் உங்களை அண்டாம நான் பார்த்துகிறேன்..” என்றான் சரித்திரன்.

செல்வி அவனை பார்க்க முடியாமல் திணற, “இங்க வாம்மா..” என்று பக்கத்தில் அழைத்தவன், “நீ வளர்ந்துட்ட.. இப்படி யார் வந்தாலும் அடிச்சு விரட்டு, சரியா..? நான் உன் அப்பாவை மாமான்னு கூப்பிட்டாலும் நீங்க எனக்கு தம்பி, தங்கச்சி மாதிரி தான். என்னை நம்புறீங்க இல்லை..” என்று கேட்க,

“நம்புறோம்ண்ணா..” என்றனர் கணேசனின் பிள்ளைகள். அப்பா இறுதி மூச்சு வரை இவர்கள் மேல் வைத்திருந்த மரியாதை, விசுவாசம் அவர்கள் அறியாததா..?

நம்பிக்கையான ஆட்களை வைத்து கணேசன் குடும்பத்தாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தவன், மிச்சம் இருந்தோர் கத்தலை காதில் வாங்காமல் அம்மாவுடன் வீட்டுக்குள் சென்றுவிட்டான்.

திடீரென்று முளைத்த பிரச்சனையை மகன் சரியான முறையில் சமாளித்துவிட்டாலும், அம்மாவாக வேதவள்ளிக்கு கொஞ்சம் பயமே. இறந்தவர் பேரில் அரசியல் செய்யும் இவர்கள் மேல் எக்கச்சக்க வெறுப்பும் கூட.

‘நல்லவேளை என் புருஷன் கட்சியில இருந்து தள்ளி நிக்கிறார். இனி என் குடும்பத்துல யாரும் அந்த அரசியல்ல கிடையாது..’ அந்த நேரம் சந்தோச பட்டுக்கொண்டார் அவர்.

குமரகுரு காதிற்கு நடந்த விஷயம் தெரியாமல் பார்த்து கொண்ட சரித்திரன் இரண்டு நாள் இடைவெளியில் திரும்ப தந்தையிடம் மெல்ல அந்த பணம் பற்றி கேட்டான். அவனும் இத்தனை நாட்களில் நடந்ததை கண்டுபிடிக்க பலவழியில் முயன்று விட்டான். பலன் பூஜ்ஜியம் தான்.

பணம் அவர் கைக்கு வந்த நாளில் யாரும் அவரை பார்க்க வரவில்லை. எப்போதும் போல் கட்சி ஆபிஸ் சென்று வீடு கிளம்பியவர் கையிலும் பணப்பெட்டி இல்லை. இடையில் தான் யாரோ கொடுத்திருக்கின்றனர். யார் அது..?

அதை தெரிந்து கொள்ள தான் இப்போதும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு மெல்ல விசாரிக்க, குமரகுருவோ, “ஏன்ப்பா.. அது தெரியாம அப்பாக்கு நீ துணை நிற்க மாட்டியா..?” என்று கேட்டார்.

“ப்பா.. அந்த கேஸ்ல இருந்து உங்களை வெளியே கொண்டு வரத்தான்..”

“எனக்கு வெளியே வர வேணாம்ப்பா.. அவங்க கொடுக்கிற தண்டனையை நான் ஏத்துக்கிறேன்..” என்றுவிட்டார்  இப்போதும் முடிவாக.

சரித்திரன் ஆயாசம் கொள்ள, குமரகுரு ஏனோ பிடிவாதமாகவே இருந்தார்.

இரு துறை அதிகாரிகள் தரப்பில் இருந்தும் நிறைய அழுத்தம். கோர்ட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றனர். இவனும் எவ்வளவு தான் சமாளிக்க. சென்ற முறை நடந்த வழக்கில், இறுதி வாய்ப்பு கொடுத்துவிட்டனர். அதற்குள் குமரகுரு அந்த பணம் பற்றி சொல்லாவிடில் தண்டனை அதிகமாக இருக்கும்.

தந்தையை நியாயப்படுத்த அவன் போராட, அவருக்கோ அந்த நியாயமே எனக்கு வேண்டாம் என்று நிற்கிறார். அழுத்தி கேட்கவும் அவனால் முடியாது, அவர் மனநிலை அப்படி.

மருத்துவமனையில் அவரை வைத்திருந்த நேரம், ஒரு முறை பாத்ரூம் செல்கிறேன் என்று தலையை சுவற்றில் வலுவாக முட்டி கொள்ள ஆரம்பித்துவிட்டார். சத்தம் கேட்டு, அந்த கதவை இடித்து உள்ளே சென்று தான் அவரை காப்பாற்றினர். அவர்களுக்காகவே அங்கும் காயப்படுத்தும் பொருள் எதுவும் இருக்காது. பாத்ரூம் கதவும் பிளாஸ்டிக்கில் தான் இருக்கும்.

அந்தளவு தீவிரமாக பாதிக்கப்பட்டு தான் அவரை வெளியே கொண்டு வந்துள்ளனர். அப்படி இருக்க சரித்திரன் திரும்ப  அவரை வைத்து எந்த ரிஸ்க் எடுக்கவும் தயாரில்லை. போறது போகட்டும். நடப்பது நடக்கட்டும் என்ற இறுதி முடிவுக்கு வந்துவிட்டான்.

வேதவள்ளியை தனியே சந்தித்தவன் அவன் முடிவை கூறினான். அவருக்கும் அதில் உடன்பாடு இல்லையென்றாலும், வேறு வழியும் இல்லை.

Advertisement