Advertisement

அன்றைக்கு சரித்திரன் அவரிடமே நேரே கேட்டு மகளை சமாதானம் செய்ய அழைத்து சென்றது அவரை யோசிக்க வைத்தது.

அவனுடன் அழுவது போல் சென்ற மகள், அடுத்த சில நிமிடங்களில் முகம் சிவக்க, மலர்ந்து போன முகத்துடன் வர, அம்மாவாக அவருக்கு புரிந்து போனது. மகள் அவளின் மகிழ்ச்சி மொத்தத்தையும் அவனிடம் மட்டுமே கொடுத்து வைத்துள்ளாள் என்பதை.

மகள் உறுதியுள்ள பெண். தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்ற தெளிவுள்ளவள். அவளிடம் சிறு பிள்ளை தனங்களை எப்போதும் அம்மாவாக அவர் கண்டதில்லை. விவரம் தெரிந்த நாளில் இருந்து மிக நேர்த்தியாக அவளின் வாழ்க்கையை கொண்டு செல்பவள், வாழ்க்கை துணையை மட்டும் தவறாகவாக தேர்ந்தெடுத்திருக்கக்க போகிறாள்..?

எக்காலத்திலும் அவளின் மனது மாற போவதில்லை. பிறகெதுக்கு சரித்திரன் குடும்பத்திடம் முகம் திருப்ப வேண்டும், என் பெண் அங்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான். அதற்கு அம்மாவாக நான் நிச்சயம் துணை நிற்பேன். அவரின் எண்ணம் இது. அதன் பிரதிபலிப்பே திருமணத்திற்கு சென்று வந்தது.

மாலை அலுவலகத்தில் இருந்து வந்த மகள், பாய்ந்து சென்று அம்மாவை கட்டி கொண்டாள். “ரொம்ப தேங்க்ஸ்ம்மா..” என்று அவரின் கன்னத்தில் முத்தம் வைக்க,

“க்கும்..” என்று வந்தார் விசுவநாதன். ராகவர்த்தினி அமைதியாக, “இங்க வா..” என்றார் தந்தை. மகள் பக்கத்தில் சென்று நிற்க, “சோஷியல் மீடியா பார்த்தியா..? பேஸ்புக்ல  அக்கவுண்ட் வச்சிருக்க இல்லை. எடுத்து பாரு இந்த கல்யாணத்தை பத்தி என்ன எல்லாம் பேசியிருக்காங்கன்னு..” என்று அவரே எடுத்து கொடுக்க,

ராகவர்த்தினி பார்க்கவே இல்லை. “ராகா..” என்று மீண்டும் கொடுக்க,

“நான் பார்த்தாலும் யூஸ் இல்லப்பா. எனக்கு அவர் பேமிலியை தெரியும். அவரை தெரியும். தெரியாதவங்க பேசியிருக்கிறதை நான் ஏன் பார்க்கணும்..?” என்றாள் மகள்.

விஸ்வநாதன் மனைவி, மகள் இருவரையும் முறைத்து உள்ளே சென்றுவிட்டார். பிடித்த பிடியிலே நிற்கும் தந்தையை எப்படி சம்மதிக்க வைக்க என்று ராகவர்த்தினிக்கு உண்மையிலே தெரியவில்லை. திணறினாள் பெண்.

இன்று வர்ஷாவின் திருமணத்திற்கு செல்ல அவ்வளவு ஆசை. அதற்கென தனியாக புடவை கூட புதுசு வாங்கி வைத்தாள். ஆனால் விஸ்வநாதன் இரவு அழைத்து நீ போக கூடாது என்று பிடிவாதமாக நின்றுவிட்டார். அவரை மேலும் கோவப்படுத்த கூடாது என்று ராகவர்த்தினியும் நின்றுவிட்டாள்.

ஆனாலும் அவரின் இந்த பேச்சு அவளை வருத்தியது. சித்ரா தான் மகளை சமாதானம் செய்தார். அவளின் பிடித்தமான சரித்திரன் தங்கை வர்ஷாவின் திருமணம் பற்றி பேச, ராகவர்த்தினி முகம் நொடியில் மலர்ந்து போனது. கதை கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

சரித்திரன் வீட்டில் புதிதாக திருமணம் முடிந்த தம்பதிகள், ஹனிமூன் சென்று வந்தனர். தொடர்ந்த நாட்களில் US கிளம்பவும் ஏற்பாடு நடந்தது. ஹரீஷுக்கு எல்லாம் தயாராக இருக்க, வர்ஷாவிற்கு விசா கிடைக்க தாமதம் ஆனது.

அதுவரை அவள் இரு வீட்டிலும் மாற்றி மாற்றி இருக்க, சரித்திரனுக்கும், தங்கை கணவனுக்கும் இடையில் ஒரு நல்ல பந்தம் உருவானது. சில நேரம் விசாகன், சரித்திரன், ஹரீஷ் மூவரும் படம், சின்ன ட்ரிப் கூட சென்று வந்தனர். வர்ஷாவின் விருப்பத்தின் பேரில் பேமிலி அவுட்டிங் அடிக்கடி நடந்தது.

இடையில் சரித்திரனை தொந்தரவு செய்து ராகவர்த்தினியையும்  சந்தித்தாள் வர்ஷா. விஸ்வநாதனை நினைத்து சரித்திரன் தயங்க, ராகவர்த்தினியோ  அப்பாவிடம் சொல்லியே வர்ஷாவை சந்திக்க மால் வந்தாள்.

“எனக்கு தெரிஞ்சு போச்சுடி.. நீ இப்படியே பண்ணிட்டு இரு, ஜட்ஜ் கண்டிப்பா என்னை காய விட போறார்..” என்று அவளிடம் முகம் திருப்பி கொண்டான் காதலன்.

இரு பெண்களும் அவனை பற்றி கவலைப்படாமல், ஷாப்பிங், படம் என்று சுற்றி வந்தனர். இருவருக்கும் ஒரே வயது என்பதும் அங்கு சாதகமாகி போனது. ராகவர்த்தினி கிப்ட் கொடுக்க, வர்ஷா மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டு விடைபெற்றாள்.

விசா கிடைத்ததும் வர்ஷா கண்ணீர் கடலில் மிதந்துவிட்டு, கணவனுடன் US பறந்தாள். வேதவள்ளி வீட்டினருக்கு அவள் பிரிவை ஏற்க அதிக நாட்களே ஆனது. குமரகுரு மீதான விசாரணையும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தொழிலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

சரித்திரன் அதிகளவிலான பணத்தை தனியே எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தான். வேதவள்ளிக்கு தெரிய அன்றிரவு மகனிடம் அது பற்றி கேட்டார்.

சரித்திரன் அப்போது தான் இரவு உணவு முடித்து ஓய்வாக அமர்ந்திருக்க, வேதவள்ளி வந்தவர், அந்த பணம் பற்றி கேட்க, “பின்னால தேவைப்படும்மா..” என்றதோடு முடித்து கொண்டான்.

குமரகுரு அருகில் இரு கைகளையும் தலைக்கு கொடுத்தபடி சாய்ந்தமர்ந்த சரித்திரன், “ரொம்ப நாள் ஆனது போல இருக்குப்பா.. இப்படி ரிலாக்ஸா இருந்து..” என்றான்.

குமரகுருவிற்கு மகனின் ஓட்டம் கண்ணில்பட்டு கொண்டு தானே உள்ளது.  தந்தையாகவும் சரி, கட்சி தலைவனாகவும் சரி நான் தோற்று விட்டேனா..? அவர் முகம் சுருங்கி போனது.

“பாலாவோட பேக்டரி விலைக்கு வருதுன்னு  சொல்றாங்க, வாங்கலாமா..?” வேதவள்ளி கேட்க,

“நோ’ம்மா.. இப்போதைக்கு எதுவும் முடியாது..” என்றான் மகன் உடனே.

“ஏண்டா..? வாங்கி போட்டா உனக்கு பின்னால தேவைப்படும், நல்ல மெயின் இடம். எல்லா வசதியும் இருக்கு..” வேதவள்ளி சொல்ல, மகனிடம் மறுப்பு மட்டுமே.

 அவனுக்கு பணத்தேவை அதிகளவில் உள்ளது. பெற்றவர்களிடம் சொல்ல விரும்பாமல், “எனக்கு ரெஸ்ட் வேணும்மா..” என்றான்.

“இருபத்தைஞ்சு வயசு தானே ஆகுது உனக்கு, அதுக்குள்ள என்னடா ரெஸ்ட்..?” வேதவள்ளி கேட்க,

“இருபத்தைஞ்சு வயசு முடிய போகுதும்மா..” என்றவன், “எனக்கு என்னமோ முப்பது வயசு மாதிரி இருக்கு..” என்றான்.

வேதவள்ளிக்கும் புரிந்தது. அவன் தலையெடுத்து நிறைய விஷயங்கள் நடந்துவிட்டனவே. “கல்யாணம் மட்டும் தான் உனக்கு நடக்கலை. மத்தபடி எல்லாம் பார்த்துட்ட இல்லை..” என்றார் மகன் கையை தட்டி கொடுத்தபடி.

“நீங்க பண்ணி வைக்கலை சொல்லுங்க. உங்களுக்கு மேல ஜட்ஜ் இருக்கார்..” என்றான் அவன்.

“சும்மா பேச்சுக்கு சொன்னா உடனே கேட்கிற, அலைஞ்சான்டா நீ..” வேதவள்ளி அவன் கையை அடிக்க,

“அலையற மாதிரியா இருக்கு. போங்கம்மா. வர்த்தினியோட என்னால டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியறதில்லைன்னு வருத்தமா தான் இருக்கு. இதுல நாங்க என்னமோ ஓடி ஓடி லவ் பண்ற மாதிரி அந்த மனுஷன் வேற அவளோட பேசாம படுத்துறார். என்னடான்னு இருக்கு..” என்றான் சலிப்பாக.

“ஜட்ஜ் பத்தி தெரிஞ்சு தானே லவ் பண்ண, அப்பறம் என்ன ஓவர் சலிப்பு, எல்லாம் எங்களை மாதிரி இருப்பாங்களா..” வேதவள்ளி சொல்ல,

“என்னது..” சரித்திரன் வேகமாக எழுந்தமர்ந்தவன், “அம்மா தாயே.. விஷயம் தெரிஞ்சு நீங்க என்னை வேலை வாங்கியே கொன்னதை மறந்துட்டீங்களா..”  என்று நெஞ்சில் கை வைத்து கேட்டான்.

“அது.. அது ஏதோ கொஞ்சம் தான்.. சரி விடுடா. ரொம்பதான்..”

“அது சரி.. பெத்தவங்கன்னாலே இப்படி தானா..?” சரித்திரன் பேச, பதிலுக்கு மகனிடம் வேதவள்ளி பேசினாலும் மனதில் வேறு ஒன்று ஓடியது.

தூங்க அறைக்கு சென்ற பின் குமரகுருவிடம் அது பற்றி பேச, அவருக்கு பரிபூரண சம்மதம் என்றார். அதன்படி அடுத்த நாள் எப்படி உள்ளது என்று பார்த்து காலையிலே இருவரும் ராகவர்த்தினி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

செக்கியூரிட்டி சொல்ல, விஸ்வநாதனுக்கு கொஞ்சம் அதிர்வு தான். அனுமதி கொடுத்தவர் மனைவியிடம் விஷயத்தை சொல்ல, சித்ரா வாசலுக்கே சென்று குமரகுரு தம்பதியை வரவேற்றார்.

“உட்காருங்க..” விஸ்வநாதன் இருவரையும் அமர சொன்னார். வேதவள்ளி கையில் இருந்த பூ, பழம், இனிப்பை சித்ராவிடம் கொடுத்தார். அவர் காபி எடுத்து வந்து கொடுக்க, மறுக்காமல் குடித்தனர்.

ராகவர்த்தினி குளித்து அலுவலகம் செல்ல கிளம்பி வந்தவள், ஹாலில் இவர்களை பார்த்து அதிர்ந்துவிட்டாள். வேதவள்ளி, குமரகுரு தம்பதி முதல்முறை அவளை பார்க்கின்றனர். பெண் திணறி அருகில் வந்தவள், இருவருக்கும் “வணக்கம்” வைத்தாள்.

வேதவள்ளி தம்பதி முகம் மருமகளை கண்டவுடன் தாராளமாக மலர்ந்திருக்க, விஸ்வநாதனிடம் நேரடியாகவே, “உங்க பொண்ணை என் மகன் சரித்திரனுக்கு கேட்டு வந்திருக்கோம்..” என்றார் குமரகுரு பளிச்சென.

எடுத்ததும் பெண் கேட்பார்கள் என்று விஸ்வநாதன் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் காதல் பற்றி பேசுவர், நாம மறுக்கலாம் என்றிருந்தவர்,  மகளை தான் பார்த்தார். அவள் கண்களில் தேங்கிவிட்ட நீருடன், அப்பாவை கெஞ்சுதலாக பார்த்தாள்.

சித்ரா கணவரின் தோள் மேல் கைவைத்து சரி சொல்லுங்க என்பதாய் அழுத்தம் கொடுத்தார். விஸ்வநாதன் மௌனம் சாதிக்க, “நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..” என்றார் வேதவள்ளி.

“உங்க வேலைக்கு நீங்க யோசிக்கிறது ரொம்ப சரியும் கூட. நேர்மையான நீதிபதிக்கு இந்த இக்கட்டை கொடுக்கிறது எங்களுக்கும் சங்கடம் தான். ஆனா இதுல நாம செய்ய எதுவும் இல்லை. பொறுப்பான பிள்ளைங்க இரண்டு பேரும். அவங்க நியாயமான ஆசை இது. மறுக்க முடியாத இடத்துல நாம இருக்கோம்..”

விஸ்வநாதன் ஏதோ பேச வர, வேதவள்ளி இடைவெளியே கொடுக்காமல், “நாம  வேணாம் சொல்றதை நம்ம பிள்ளைங்க செய்ய போறதில்லை தான். ஆனா ஏன் வேணாம் சொல்லணும்ன்னு இருக்கு இல்லை. என் மகன்கிட்ட எந்த காலத்திலும் யாரும் தப்பு பார்க்க முடியாது. உங்க பொண்ணும்  தங்கம். ஏன் இவங்க இரண்டு பேரை உரசி பார்க்கணும். சேர்த்து வைக்கிறது தான் சரின்னு படுது..”

“என்னை வைச்சு நீங்க யோசிச்சா.. அது முழுக்க முழுக்க சரி தான். ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்லிக்கிறேன், அந்த பணம் நான் வாங்கின பணம் இல்லை. முறை தவறின பணமாவோ, லஞ்சமாவோ அது என்கிட்ட வரல. என்னை நம்புங்க. இல்லை நீங்க விசாரிச்சு கூட பார்த்துக்கோங்க, பட் ப்ளீஸ் என்னை வைச்சு என் மகனை மறுக்காதீங்க..” என்றுவிட்டார் குமரகுரு.

“உங்ககிட்ட வந்து பேசி உங்களை கஷ்டப்படுத்துறது எங்க நோக்கம் இல்லை. எங்க பிள்ளை சரித்திரனுக்கு நல்லது பண்ணனும்ன்னு ஆசை. அவன் கொஞ்ச வருஷமா நிறைய கஷ்டப்பட்டுட்டான். அவனோட சந்தோஷம் ராகவர்த்தினிகிட்ட இருக்கு. அவளோட லைஃபும் அவன்கிட்ட தான்னு உறுதியா இருக்கா. நம்ம பிள்ளைங்களை நாம சோதிக்கணுமா சொல்லுங்க..?” வேதவள்ளி கேட்டார்.

சரித்திரன் அடித்து பிடித்து இவர்கள் பின்னாலே வந்து விட்டிருந்தவன், வேதவள்ளி, “யோசிங்க சார்.. யோசிச்சு பொறுமையாவே சொல்லுங்க. அதுவரை நாங்க காத்திருக்கோம்..” என்றதில்,

வேகமாக முன் வந்தவன், “யோசிங்க சார்.. பட் எனக்கு இருபத்தைஞ்சு முடிய இன்னு சில மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள யோசிச்சு எஸ் சொல்லிடுங்க..” என்றான்.

“அட அல்பமே..” என்று வேதவள்ளி மகனை பார்க்க,

அவனோ மாமனாரிடம் பார்வையாலே “ஐ’ம் பாவம் யுவர் ஆனர்..” என்று கேட்டு கொண்டிருந்தான்.

ராகவர்த்தினி அவனை பார்த்து உதட்டுக்குள் சிரிக்க, “நீயும் கேளுடி..” என்று கண்ணால் அதட்டினான் காதலன்.

குமரகுரு மகனின் இந்த பரிமாணத்தில் மெலிதாக சிரிக்க, “ப்பா.. நீங்களுமா..” என்றான் மகன். அதை தொடர்ந்து எல்லார் முகத்திலும் புன்னகை. விஸ்வநாதன் தவிர.

“ப்பா.. ப்ளீஸ்..” என்றாள் மகள்.

“எனக்கு சரித்திரன்கிட்ட தனியா  பேசணும். பேசிட்டு என் முடிவை சொல்றேன்..” என்றார் விஸ்வநாதன்.

மொத்த பேரும் ரிலாக்ஸ் ஆகினர். எல்லோருக்கும் சரித்திரன் மேல் நம்பிக்கை இருந்தது. விஸ்வநாதனுக்குமே தான். என்ன அவர் வெளியே சொல்லவில்லை. அவ்வளவுதான்.

Advertisement