Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 14

சென்னை மத்தியில் மிக பிரம்மாண்டமான திருமண மண்டபம்.  வர்ஷா.. ஹரீஷ்க்குமான திருமணம் அங்கு தான் நடந்து கொண்டிருந்தது. அந்த அதிகாலை நேரத்திலும் கூட்டம் அலைமோதியது. வேதவள்ளி முதலில் பூஜை செய்து அதன் பின்னே முகூர்த்தம் வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.

மகள் திருமணம் இந்த நேரம் நடப்பதால் நிச்சயம் எல்லார் கண்ணையும் உறுத்தும் என்பதோடு பேசவும் செய்வர் என்பதால் அந்த பூஜை.

என்னதான் நம் மேல் தவறே இல்லையென்றாலும், மற்றவர்களிடம் இருந்து அடிக்கடி வாங்கும் பேச்சுக்கள் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் மகள் வாழ்க்கையை பாதிக்கும் என்பது அவர் எண்ணம்.

மாப்பிள்ளை வீட்டினரும் இதை புரிந்து கொண்டனர். முதலிலே “உங்களுக்காக வேணும்ன்னா சிம்பிளா கல்யாணம் வைச்சுக்கலாம்..” என்று மாப்பிள்ளையின் அப்பா சொல்ல,

உடனே மறுத்தது சரித்திரன் தான். “நம்ம எல்லார் ஆசைப்படி கிராண்ட் வெட்டிங் தான் அங்கிள். உங்களுக்கும் ஒரே பையன். எங்க வீட்டுல பிறந்ததும் அவ ஒரே லட்சுமி தான். அவளை சகல மரியாதையோட, கௌரவத்தோட அனுப்ப வேண்டியது எங்க கடமை, பொறுப்பு..?” என்றான்.

அவர்களுக்கும் மகன் திருமணம் பற்றி எக்கச்சக்க கனவு இருப்பதால், அமைதியாக ஏற்று கொண்டனர். வேதவள்ளி தான் வீட்டில் வைத்து மகனிடம், “ஏன் வேண்டாம் சொன்ன..?” என்று கேட்டார்.

வர்ஷாவும் இந்த பிரம்மாண்ட திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தான் அண்ணனை பார்த்தாள். “இங்க வா வர்ஷூ..” என்று தங்கையை தன் பக்கத்தில் அமர வைத்தவன், “சோஷியல் மீடியா பார்த்து பார்த்து உன்னை நீயே காயப்படுத்திகிட்டன்னு தான் கவுன்சிலிங் போன, அப்பறம் என்ன..?” என்று கேட்டான்.

“இல்லைண்ணா.. நான் சொன்னேன் இல்லை என் குளோஸ் ப்ரண்ட் அவ கூட என்னை அவாய்ட் பண்ணிட்டா. எதோ நாம  தப்பு பண்ணது போல தான் எல்லோரும் பார்க்கிறாங்க. இப்போ போய் கிராண்ட் வெட்டிங்ன்னா, அந்த பணம் தான்னு பேசுவாங்க..” என்றாள்.

“இல்லைன்னு நமக்கு தெரியும் இல்லை.. வெய்ட்  வர்ஷூ.. இப்போ நாம சிம்பிளா பண்ணா மட்டும், பாரு மாட்டிக்கிட்டாங்கன்னு ஒளிச்சு மறைச்சு கல்யாணம் பண்றாங்கன்னு தான் சொல்வாங்க. அவங்களுக்கு நடக்கிறது எதுவும் தெரியாது. சொல்றதும், காட்றது மட்டும் தான் தெரியும். அடுத்த டாபிக் கிடைக்கிற வரை அவங்க இதை பேசட்டும். அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு. நமக்கும் நம்ம லைப் லிவ் பண்ண உரிமை இருக்கு. புரியுது தானே..?” என்றான்.

வர்ஷா அப்போதும் தயங்கியே இருக்க, “நாம சம்மந்தி சொன்னதுக்கு அக்சப்ட் பண்ணிக்கலாம்..” என்றார் வேதவள்ளி. குமரகுரு எழுந்து உள்ளே செல்ல, மகனுக்கு கோவம் வந்துவிட்டது.

“ம்மா.. நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா..? அவங்க சொன்னதுக்கு அக்சப்ட் பண்றதுன்னா நாம தப்பு பண்ணியிருக்கோம்ன்னு அக்சப்ட் பண்றதுக்கு சமம்..” என்றான்.

“அதெப்படி..? அவர் தானே கேட்டார்..?” வேதவள்ளி கேட்க,

“அவர் என்ன கேட்டார் உங்களுக்காக வேணும்ன்னா’ன்னு கேட்கிறார். ஏன் நமக்கு என்ன’ன்னு நான் கேட்கிறேன். நாம எங்கேயும் தப்பு இல்லை. நாம ஏன் நம்ம வீட்டு பொண்ணுக்கு சிம்பிளா கல்யாணம் பண்ணனும்..? அவளுக்காக செலவு பண்ண போற ஒவ்வொரு ரூபாயும் இத்தனை வருஷ உங்க உழைப்பு, என் உழைப்பு. எவன் வந்து நம்மளை கேட்டுட முடியும்..?” மகன் அழுத்தமாக கேட்க, வேதவள்ளி யோசித்தார்.

வர்ஷா தனக்குள் அண்ணன் சொல்வதை யோசித்தவள், “அண்ணா சொல்றது ரைட்ம்மா..” என்றாள் தெளிந்து. “எனக்கு இந்த வெட்டிங் ஓகே, என் அப்பாவை நான் என் மேரேஜ் மூலமா தான் டிஃபன்ட் பண்ண போறேன். அவரோட பொண்ணா இருக்கிறது எனக்கு எப்போவும் பெருமை தான். நான் தலை நிமிர்ந்தே தான் மணமேடையில் உட்காருவேன்..” என்றாள் திடமாக.

சரித்திரன் அவளை தோளோடு அணைத்து கொண்டவன், அம்மாவை புருவம் தூக்கி பார்த்தான். “என்னடா.. என்ன பார்வை. ம்ம்.. நான் அவரை கட்டிக்கிட்ட நாளில் இருந்தே நெஞ்சை நிமிர்த்தி ‘நான் வேதவள்ளி குமரகுரு’ன்னு  சொல்வேன். இப்போ நான் யோசிச்சது உங்க லைப்க்காக மட்டும் தான். ஓகே. பார்த்துப்போம்..” என்றுவிட, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக  நடந்தேறியது.

மூன்று மாதம் இடைவெளியில் நிச்சயம் செய்து, பட்டு எடுத்து, பத்திரிக்கை கொடுத்து என நாட்கள் பரபரப்பாகவே சென்றது. கட்சி ஆட்களுக்கு மொத்தமாக பத்திரிக்கை சென்று சேர்ந்துவிட்டது. கணேசன் குடும்பத்தினரை குமரகுரு குடும்பத்தோடு சென்று அழைத்து வந்தார்.

“ஜட்ஜ் வீட்டுக்குப்பா..?” என்று குமரகுரு கேட்க,

“பாருங்க என் அப்பா தான் கேட்டார்..?” அம்மாவை வம்புக்கு இழுத்த மகன், “நீங்க வேண்டாம்ப்பா.. நானும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வரோம்..” என்றான்.

சொன்னது போலே வேதவள்ளி, சரித்திரன் இருவரும் ராகவர்த்தினி வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்து அழைக்க, சித்ரா மரியாதையுடன் வாங்கி கொண்டார். விசுவநாதன் வரவேற்று அமர வைத்ததோடு சரி, அதன் பின் பெரிதாக பேசவில்லை.

அவருக்கும் சேர்த்து சித்ரா பேசியவர், காபி வரவைத்து கொடுத்தார். “ராகா.. இன்னைக்கு சீக்கிரமே ஆபிஸ் கிளம்பிட்டா..” என்றார் வேதவள்ளியிடம் தானே.

“நாங்க வரது அவளுக்கு தெரியாது ஆன்ட்டி..” சரித்திரன் சொன்னவன், அம்மாவை அழைத்து கொண்டு சீக்கிரமே கிளம்பிவிட்டான். ஜட்ஜ் ஏதாவது பேசிவிட்டால் எதற்கு வம்பு என்ற உஷார் தான்.

“விவரம்டா நீ..” வேதவள்ளி அவன் தலை கொட்ட, “பின்ன உங்களோட மோதவிட சொல்றீங்களா..?” என்று  சிரித்து கொண்டான்.

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மணமக்களை மேடையில் அமர வைத்திருக்க, சித்ரா மட்டுமே திருமணத்திற்க்கு  வந்தார். வர்த்தினியை நிச்சயம் விஸ்வநாதன் அனுப்ப மாட்டார் என்று சரித்திரனுக்கு தெரியும் என்பதால், சித்ரா வந்ததே ஆச்சரியம் தான்.

சரித்திரன் மேடையில் இருந்து இறங்கி சென்று அவரை வரவேற்று முதல் வரிசையில் அமர வைக்க  போக, “மேடைக்கு கூட்டிட்டு வா..” என்றார் வேதவள்ளி.

சரித்திரன் உங்களுக்கு ஓகேவா என்று மாமியாரை பார்க்க, அவரோ எனக்கென்ன என்று அவனுக்கு முன் மேடையேறி வேதவள்ளி அருகில் சென்று நின்று கொண்டார்.

சரித்திரன் நொடி முழித்தவன், “ஜட்ஜ் தான் அவுட்டா..? இந்த லேடிஸ் மட்டும் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஈஸியா அசால்ட்டு பண்ணிடுறாங்கப்பா.. ” அடக்கப்பட்ட சிரிப்புடன் மேடைக்கு சென்றான்.

முகூர்த்த நேரத்தில் மணமகன் ஹரீஷ், வர்ஷா கழுத்தில் தாலி கட்டி தங்கள் பந்தத்தை உறுதி செய்தான். அதை தொடர்ந்த சடங்குகள் நடந்து முடிய, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். சித்ராவிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொள்ள, அவர் யார் என்ற கேள்வி அங்கு எழுந்தது.

வேதவள்ளி அதை ஒதுக்கிவிட்டு, சித்ராவை மகனுடன் உணவுக்கு அனுப்பி வைத்தார். மணமக்களுடன் விருந்தினர்கள் புகைப்படம் எடுத்து கொள்ள, தீனதயாளன், அண்ணாச்சி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். குமரகுரு அந்த நொடி மனதார மகிழ்ந்து அவர்களை மணமக்களுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

சித்ராவை வழியனுப்பி வைத்துவிட்டு வந்த சரித்திரன் இதை பார்த்து மூச்சிழுத்துவிட்டான். “என்ன நடந்தாலும்  அப்பாவிற்கு அந்த கட்சி கொடுக்கும் உணர்வு வேறு தான்..” புரியாமல் இல்லை. ஆனால் கட்சி ஆட்கள் சிலர். அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது மேல் இல்லையா..?

மண்டபத்தில் எல்லாம் முடியவும் மணமகன் வீட்டிற்கு மணமக்கள் கிளம்பினர். அங்கிருந்து மாலை போல குமரகுரு வீடு. எனவே வேதவள்ளியும் தன் வீடு கிளம்பி சென்று அங்கு ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பிக்க, சரித்திரன் அப்பாவை உடன் வைத்து மண்டபம் செட்டில் செய்தான்.

மாலை வர்ஷா கணவனுடன் வீடு வந்தாள். ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தவர்கள், இங்குள்ள சடங்குளை முடிக்க, உறவுகள் பலரும் இரவு உணவுடன் விடைபெற்றனர். வர்ஷாவை குளிக்க வைத்து, முதல் இரவுக்கு அனுப்பி வைக்க, ஹரீஷ் அவள் கை பிடித்து பக்கத்தில் அமர வைத்து கொண்டான்.

வர்ஷாவிற்கு இன்னமும் ஆச்சரியம் தான். ஒரு நாள், சில நிமிடங்கள் தான் இருவரும் பேசியது. அதிலே பெண் இவனுக்கு சரி என்றுவிட்டாள்.  அன்று ஹரீஷ் குடும்பத்துடன் வந்து பேசி சென்ற பிறகு, ஓர் நாள் இரு வீட்டின் அனுமதியுடன் வர்ஷாவை காபி ஷாப் வர வைத்தான்.

வர்ஷாவிற்கு அந்தளவு விருப்பம் இல்லையென்றாலும் வீட்டினர் கேட்டுக்கொண்டதற்காக அவன் முன் அமர்ந்திருக்க, “சாரி உங்களை வர சொல்லி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” என்று கேட்டான் ஹரீஷ்.

“அப்படி இல்லை..” வர்ஷா மேம்போக்காக சொல்ல,

ஹரீஷ் சிரித்தவன், “எனக்கு மேரேஜ்ல சுத்தமா இஷ்டம் இல்லை. இவ்வளவு சீக்கிரம் யாராவது கமிட்மெண்ட்ல சிக்கிப்பாங்களான்னு தான் இருந்தது. வீட்ல கம்பல் பண்ணவும் தான்  உங்க போட்டோ பார்த்தேன். பார்த்த செகண்ட் ஏன் கூடாது’ன்னு யோசிக்க வைச்சிட்டீங்க..” என்றான் அழகாக, ஆழமாக.

வர்ஷா அவனை நன்றாக நிமிர்ந்து பார்க்க, “பிடிச்சது.. நாள் போக போக ரொம்பவே பிடிச்சது. உங்களுக்கே தெரியாம பாண்டி வந்து உங்களை பார்த்தேன். எங்க வீட்ல பேசியும் உங்க சைட் பதிலே இல்லை. இடையில சடன்னா உங்க அப்பா பிரச்சனை வேற. எப்போடா இது முடியும்ன்னு காத்திருந்து தான் அன்னைக்கு வீட்டுக்கே வந்தது..” என்றவன்,

“உங்களுக்கு இஷ்டம் இல்லன்னு புரிஞ்சது. நோ சொல்லிடுவீங்களோன்னு பயம். அதான் பேச கூப்பிட்டேன். க்கும்.. நான் ஓகேவான்னு கேட்க இது சீக்கிரம் ஒன்னும் இல்லையே..?” என்று அவளிடமே கேட்க, வர்ஷாவிற்கு மெல்லிய புன்னகை.

ஹரீஷும் அவளின் புன்னகையில் தான் பதட்டத்தை கைவிட்டு கொஞ்சம் சாய்வாக அமர்ந்தான். அவ்வளவு டென்சனா..? பெண்ணுக்கு அவன் தவிப்பு அந்த நொடி மெல்ல உணர முடிந்தது. “நீங்க படிக்கணும்ன்னு சொன்னதா கேள்விப்பட்டேன். உங்க விஷ் தான். சப்போர்ட் பண்ண வேண்டியது மட்டும் என்னோட பொறுப்பு..” என்றான்.

வர்ஷா, “ஆமா MD படிக்கணும் தான். பட் நான் சரியா எக்ஸாம்க்கு ப்ரீபெர் பண்ணல..” என்றாள் வருத்தமாக.

“உங்க வீட்ல நடந்ததுல அப்செட் ஆகிட்டீங்களா.. உங்க அப்பா பணம் வாங்கினது பத்தி..”

“எங்க அப்பா பணம் வாங்கலை..” பெண் சட்டென கோவமாகிவிட்டாள்.

“ஹேய் ரிலாக்ஸ்.. நான் அந்த மீனிங்ல சொல்லலை. அந்த விஷயமா அப்செட்ன்னா கேட்டேன். அண்ட் அவரை பத்தி எங்களுக்கும் தெரியும். அவரோட அரசியல் அவரோட. நாம அதுக்குள்ள போகணும்ன்னு அவசியமில்லை. எனக்கு அது அவுட் ஆப் சப்ஜக்ட். உன்னோட விருப்பம் மட்டும் தான் எனக்கு வேணும்..” என்றான்.

வர்ஷா மௌனமாக, ஹரீஷ் தொடர்ந்து பேசினான். அவனை பற்றி, அவன் குடும்பம், தொழில் பற்றி எல்லாம். அவளையும் சிறிது சிறிதாக பேச வைத்தான். மெல்ல புன்னகைக்கவும் வைத்தான். இறுதியில் அவனை ரசிக்கவும் வைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் வர்ஷா அவனுக்கு சம்மதமும் சொல்லியிருக்க, இதோ இருவரும் கணவன், மனைவியாக அருகருகே. ஹரீஷ் அவளின் கை பற்றி வருட, பெண் சிலிர்க்க, அங்கு ஆரம்பம் ஆனது  அவர்கள் வாழ்க்கை.

ராகவர்த்தினியின் வீட்டில், சித்ரா வரவும், “அப்போ இந்த வீட்ல எனக்கு அவ்வளவு தான் மரியாதையா..?” என்று விஸ்வநாதன் கேட்டார்.

மகளை “கல்யாணத்துக்கு நீ போக கூடாது..” என்று கட்டுப்படுத்தி வைத்திருக்க, மனைவியோ அவர் பேச்சை மீறி சென்றதோடு,  “எப்படியும் என் பொண்ணு அங்க தான் வாழ போறான்னு தெரிஞ்ச பிறகு கல்யாணத்துக்கு போய் வரது தானே முறை..” என்றார்.

“முறை பார்க்க நாம ஒன்னும் அவங்க சம்மந்தி இல்லை. நான் அவளை கண்ட்ரோல் பண்ண பார்த்தா நீ போய் உறவாடிட்டு வர..” என்று கத்த,

“உங்க கண்ட்ரோலுக்கு உங்க மக வந்துட்டாளா முதல்ல..?” என்று சித்ரா கேட்டுவைத்தார்.

“நான் கொண்டு வந்திடுவேன். நீ இடையில இப்படி பண்ணாம இருந்தா போதும்..” என்று சண்டையிட்டு சென்றார் மனிதர்.சித்ரா உதடு பிதுக்கி அதையும் பார்ப்போம் என்றிருந்தார்.

Advertisement