Advertisement

இரவு வீட்டிலும் சொல்ல, சரித்திரனுக்கு இத்தனை நடந்தும் முதன் முறை  நம் வீடு தேடி ஒருவர் என்ற நல்லுணர்வு அவர்கள் மேல் விழுந்தது, அதே தான் அப்பாவும், மகளுக்கும் கூட.

மறுநாள் சொன்னது போல அவர்கள் வர, வரவேற்று அமர வைத்தனர். தம்பதி மட்டும் வருவர் என்று பார்த்திருக்க, மொத்த குடும்பமும், மாப்பிள்ளையுடன் வந்திருக்க, வேதவள்ளி குடும்பத்தினர் முகம் பார்த்து கொண்டனர்.

ப்ரண்ட்லி மீட் என்று வர்ஷாவும் அங்கு தான் இருந்தாள். ஹரீஷ் அவளை கூடுதலாகவே பார்த்தான். அதில் பெண்ணுக்கு சங்கடம். ஹரீஷின் அக்கா அவளை பக்கத்தில் அமர வைத்து கொண்டார்.

“சாரி நடந்தது எங்களுக்கு வருத்தமே. ஆனால் சிலது அப்படியே விட்டுடனும். நான் தொழில் முறையில் பல முறை சம்மந்தியை சந்திச்சிருக்கேன். எனக்கு அவரை தெரியும். அந்த பணம் பத்தி, அவர் மேல இருக்கிற குற்ற சாட்டு பத்தி எங்களுக்கு கவலையில்லை. ஆகுறதை பார்ப்போம்..” மாப்பிள்ளையின் அப்பா சொல்ல,

“நாங்க முதல்லே வந்திருப்போம். ரொம்ப இக்கட்டுல இருக்கீங்க. தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு தான் வரலை. முன்ன கேட்டது தான், எங்களுக்கு வர்ஷாவை பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேன்னா நாம மேற்கொண்டு பேசலாம்..” என்றார் மாப்பிள்ளையின் அம்மா.

“நீங்க கேட்டது ரொம்ப சந்தோசம். சொந்தம், பந்தம் எல்லாம் எங்களை விட்டு தள்ளி நிக்கும் போது நீங்க எங்களை நம்பி எங்க வீட்டு பொண்ணை கேட்கிறீங்க. ஆனா. வர்ஷா.. அவளை கேட்டுட்டு நாங்க சொல்லவா..?” என்றார் வேதவள்ளி.

“கண்டிப்பா.. பொண்ணு விருப்பம் தான் முக்கியம். நீங்க பொறுமையாவே கேட்டு சொல்லுங்க..” என்றவர்கள் அதன் பின் நெடு நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு, காபி குடித்தே கிளம்பினர்.

வர்ஷா அறைக்கு சென்றுவிட, “அப்பறம் கேட்கலாம் அவகிட்ட..” என்றுவிட்டான் சரித்திரன்.

கடந்த மாதங்களின் கடுமையில் முதல்முறை ஒரு மகிழ்ச்சியான விஷயம் வீட்டில். இளைப்பாறுதலாக உணர்ந்தனர். சரித்திரனின் மனது தானே ராகவர்த்தினியிடம் சென்றது. அவளிடம் சரியாக கூட பேச  முடியவில்லை. இன்று அதற்கும் சேர்த்து  உற்சாகத்துடன் அவளுக்கு அழைத்தான்.

அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவள், சரித்திரன் பெயர் தாங்கி ஒலித்த போனை பார்த்தே இருந்தாள். எடுக்கவில்லை. கடைசியாக அவனே எப்போது அவளுக்கு அழைத்தான் என்பது கூட நினைவில் இல்லை.

நின்ற அழைப்பு திரும்ப வரவில்லை. அதுவும் பெண் முகத்தை கோவத்தில் சிவக்க வைத்தது. மாலை வரையிலும் அவன் அழைக்கவில்லை. இவள் வீட்டுக்கு சென்ற சேர்ந்த நேரம், அழைத்தான்.

எடுத்தவள் மௌனமாக இருக்க, “வரத்தினி..” என்றான்.

“என்னடி.. பேசு..”

“என் மேல கோவமா..? சாரி. இப்போ தான் எல்லாம் கொஞ்சம் கண்ட்ரோலுக்கு வருது. உனக்கு தெரியுமா வர்ஷாக்கு வரன் வந்ததுன்னு முன்ன சொல்லியிருந்தேன் இல்லை. அவங்க திரும்ப இன்னைக்கு வீட்டுக்கே வந்து பேசினாங்க. வர்ஷாவை கேட்கிறாங்க. அப்பா மேல இருக்கிற கேஸ் பத்தி அவங்க கவலைப்படலை, நாங்க அவரை  நம்புறோம்ன்னு சொன்னாங்க. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது..”

“நல்ல விஷயம்..” அவ்வளவு தான் திரும்ப அமைதியாகிவிட்டாள்.

“வர்த்தினி..”

“ம்ப்ச்.. என்னடி, என்ன கோவம் சொன்னாதானே தெரியும்..”

“சரி.. என்னவா இருந்தாலும்  பில்லியன்ஸ் டைம் சாரி. பேசுடி..”

“நீ பேசாமலே இருந்த உன் வீட்டுக்கே வந்திடுவேன். பார்த்துக்கோ..”

“வாங்க..” என்றாள் பெண்.

“வர்த்தினி..”

“வாங்கன்னு தானே சொன்னேன். ஏன் வர மாட்டிங்களா..?”

“என் மாமியார் வீட்டுக்கு வர எனக்கு என்ன..? ஜட்ஜ் நினைச்சா தான். நீ தான் அவர்கிட்ட பேச இன்னும் பெர்மிஷன் கொடுக்க மாட்டேங்கிறியே..”

“அவருக்கு எல்லாம் தெரியும். நீங்க வாங்க..” என்றாள் பெண்.

“வர்த்தினி.. என்னடி சொல்ற..? எப்போ, எப்படி, நீயே சொல்லிட்டியா, எதாவது பிரச்சனையா.? உன்னை ஏதும் பேசிட்டாரா..?” காரை இவள் வீட்டுக்கு திருப்பிவிட்டான்.

“அவர்.. அவர் என்கிட்ட பேசவே மாட்டேங்குறார்..” பெண் விசும்பினாள்.

அன்று நடந்ததை சொன்னவள், “அப்போ என்கிட்ட கோவப்பட்டு பேசினதோட சரி, அப்புறம் என் முகம் கூட பார்க்க மாட்டேங்கிறார். என் வீட்டிலே எனக்கு எப்படியோ இருக்கு. அம்மாவும் முன்ன போல இல்லை.  ரொம்ப கஷ்டமா இருக்கு. என் அப்பா, அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்..” என்று விம்ம, சரித்திரனுக்கு அவ்வளவு வருத்தமாகிவிட்டது.

அவளின் கண்ணீர் குரல் இவன் வேகத்தை கூட்ட வைக்க, சில நிமிடங்களில் அவர்கள் வீட்டில் இருந்தான். விஸ்வநாதன் அன்று வீட்டிலே இருக்க, செக்கியூரிட்டி போன் செய்து இவன் வருகையை சொன்னார். மகள் அறையை பார்க்க, அவளும் அப்போது தான் முகம் துடைத்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“உள்ள அனுப்புங்க..” என, சரித்திரன் சில நொடிகளில் அவர் முன், “வணக்கம் சார்..” என்று கை குவித்து நின்றான்.

அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்ததன் களைப்பு முகத்தில் தெரிய, ராகவர்த்தினி அவனுக்கு வாட்டர் பாட்டில் எடுத்து வந்து கொடுத்தாள்.

“ஏண்டி..?” அவன் கண்ணால் கண்டித்து வாங்கி கொண்டான். ஜட்ஜ் முகம் கடுப்பாக, இவளே ஏத்திவிடுவா போல.

சித்ரா  வந்தவர் இவனை பார்த்து கணவர் பக்கம் நின்றார். அவருக்கும் எழுந்து வணக்கம் சொன்னவன்,

“இது லேட். நான் முன்னமே உங்ககிட்ட பேசியிருக்கணும். சூழ்நிலை சரியா அமையல. நானும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். நீங்க.. ம்ஹ்ம். சாரி சார். உங்களை தெரியறதுக்கு  முன்னாடியே  எனக்கு அவளை தெரியும். எங்களை மீறி இட் ஹாப்பண்ட். எப்படி இருந்தாலும் சாரி. இந்த விஷயம் என் பேரண்ட்ஸ்க்கு முன்னாடியே தெரியும். அவங்களுக்கு ஓகேதான்..”

“அப்போ எங்களுக்கு மட்டும் நீ சொல்லலை, அப்படி தானே ராகா..?” சித்ரா மகளிடம் கோவமாக கேட்க, அவளோ இவனை அடிக்கண்ணால் முறைத்து வைத்தாள்.

இப்போ இது ரொம்ப முக்கியமா என்று.

‘இவர் ஜட்ஜா. என் மாமியார் ஜட்ஜா. பாயிண்ட் பிடிச்சு கேள்வி கேட்கிறாங்களே..?’ சரித்திரன் கண்ணை சுருக்கி பெண்ணை சமாதானம் சொன்னான்.

விஸ்வநாதன் தொண்டை செரும. “அதான் சார்..  உங்களுக்கும் விருப்பம் இருந்தா. நீங்க எனக்கு சம்மதம் சொன்னா நான் அம்மா, அப்பாவை முறையா பொண்ணு கேட்க கூட்டிட்டு வரேன்..” என்றான்.

“எங்களுக்கு சம்மதம் இல்லைன்னா..” ஜட்ஜ் கேட்க,

“இப்போ இல்லேன்னாலும், பின்னாடி சம்மதம் சொல்வீங்கன்னு  நம்பிக்கை இருக்கு சார்..” என்றான் அவன்.

“உங்க அப்பா இப்போ மாட்டியிருக்குற கேஸ். அதனோட சீரியஸ்னஸ் தெரியும் இல்லை. நீங்க என் ஆளுங்கன்னு கூட நான் பார்க்கலை. பார்க்கவும் மாட்டேன். ஆனா என் தொழில். அது எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்கு களங்கம் ஏற்படுற எந்த விஷயத்தையும் நான்  ஏத்துகிறதா இல்லை..” விஸ்வநாதன் தெளிவாக சொல்ல,

“அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையாப்பா..?” என்று பெண் கேட்டிருந்தாள்.

“ராகா..”

“வர்த்தினி.. பொறுமையா இரு..”

“நான் ரொம்ப நாளா பொறுமையா தான் இருக்கேன். இவர்.. இவர் தான் என்னை பார்க்காம, என்கிட்ட பேசாம என்னை பனிஷ் பண்ணிட்டிருக்கார்..” பெண்ணுக்கு அவ்வளவு ஆதங்கம், கண்ணீர்.

“நீ பண்ணி வைச்ச வேலைக்கு எங்ககிட்ட வேறென்ன எதிர்பார்க்கிற ராகா..?” சித்ரா மகளிடம் கேட்டார்.

“என்ன.. என்ன பண்ணிட்டேன்..? இவர் மேல லவ், அது எனக்கு எப்போ, எப்படின்னு தெரியல. வந்துடுச்சு. நான் என்ன பண்ணட்டும். என்னால அதை விட முடியல. இவரை விட முடியல. அதுக்காக நீங்க என்னை இப்படி ஒதுக்குவீங்களா..?  நான் உங்க ரெண்டு பேரை எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா..? இவரை லவ் பண்ணிட்டேங்கிறதுக்காக நீங்க எனக்கு இல்லைன்னு ஆகிடுமா. அது வேற பீலிங். நீங்க எனக்கு வேற. ஏன் இரண்டையும் போட்டு என்னை இப்படி படுத்துறீங்க..” பெண் கண்ணீர் வழிய சுண்டி விட்டு கொஞ்சம் கோவமாகவே கேட்டாள்.

சரித்திரனுக்கு அவள் பேச்சு, கண்ணீர் காணவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் முதல் முறை அவளை இப்படி காண்கிறான். உள்ளுக்குள் பிசைந்தது காதலனுக்கு. ‘ஆகுறது ஆகட்டும், நீங்க எப்படி அவளை இப்படி பண்ணலாம்ன்னு ஜட்ஜ்கிட்ட சண்டை போட்டுடலாமா..?’ என்று கூட தோன்றிவிட்டது. கட்டுப்படுத்தி அமர்ந்திருக்க, விஸ்வநாதனோ கல் போலவே அமர்ந்திருந்தார்.

“ப்பா.. நான் உங்ககிட்ட தான் கேட்கிறேன்..” பெண் அவருக்கு முன் சென்று நின்றாள்.

“ராகா என்ன பண்ற..? அமைதியா இருடி..” சித்ராவிற்கு அச்சம்.

“நான் ஏன் அமைதியா இருக்கணும்..? என் அப்பாகிட்ட நான் பேச கூடாதா..? என் விருப்பத்தை சொல்ல கூடாதா..? அப்படியா அடிமையா அவர் என்னை வளர்த்திருக்கார்..? என்னப்பா. நீங்க என்கிட்ட கோவப்பட்டு கத்தினாலும் சரி, அடிச்சாலும் சரி, என்கிட்ட பேசுங்க. அவ்வளவு தான்..” மகள் அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

சரித்திரன் எழுந்து அவளின் பக்கம் நிற்க, விஸ்வநாதன் அவனை பார்த்தவர், “உன்னை நினைச்சு நான் எவ்வளவு  பெருமை பட்டேன். ஆனா நீ..” என,

“சார்.. இப்போவும் நீங்க என்னை நினைச்சு பெருமை பட்டுக்கலாம். எப்போவும் பெருமையா என் மருமகன்னு சொல்லிக்கலாம். நிச்சயம் நான் எங்கேயும் தவற மாட்டேன்..” என்றான் சரித்திரன் உறுதியாக.

விஸ்வநாதன் மௌனம் காக்க, “தம்பி.. நாம இதை அப்புறம் பேசலாம்..” என்றார் சித்ரா.

சரித்திரனும் உடனே சம்மதம் கிடைக்கும் என்றெல்லாம் வரவில்லை. அவரிடம் பேச வேண்டும். பெண் கேட்க  வேண்டும். என்பது தான். இனி அவருக்கும் நேரம் கொடுக்க வேண்டுமே..?

“சார்.. அப்பா கேஸ் சீக்கிரம் முடிச்சிடுறேன். அவர் மேல் தப்பில்லை. பணம் கையில இருக்கிறதால மட்டுமே யாரும் குற்றவாளி ஆகிட முடியாது. உங்களை விட யாருக்கு இது தெரிஞ்சுட போகுது. உங்ககிட்ட ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்தான். ப்ளீஸ்  ப்லைண்டா நோ சொல்லாதீங்க. யோசிங்க, விசாரிங்க. எவ்வளவு வேணும்ன்னாலும் நாங்க வெய்ட் பண்றோம். கண்டிப்பா மூவ் ஆன் பண்ண மாட்டோம். நான் வரேன்..” என்று பொதுவாக விடைபெற்று பெண்ணுக்கு தலையசைக்க, அவள் எழுந்து இவனுடன் வந்தாள்.

“ஹேய்.. ஏண்டி என்னோட வர. ஜட்ஜ் எஸ் சொல்றதை கூட நீ கெடுத்துடுவ போல..” சரித்திரன் வெளியே வந்து அவளை கடிந்து கொண்டான்.

பெண் முகம் துடைக்க, “இனி இப்படி அழுகாத. இட் ஹர்ட்ஸ் மீ..” என்றவன்,  அவள் விரல் பிடித்து கோர்த்து கொண்டான்.

“என் அப்பா உள்ள இருந்து பார்த்துட்டு இருப்பார்..” பெண் கோர்த்த விரல்களை பார்த்து சொல்ல,

“புரியுது. பட் என்னால முடியல. கொஞ்ச நேரம்..” என்றவன் அவள் விரல்களுக்கு அழுத்தம் கொடுத்து, வருடி கொடுத்தான்.

ராகவர்த்தினி அவனை பார்த்தே இருந்தவள், “எனக்கு உங்களை கட்டி பிடிச்சுக்கணும் போல இருக்கு..” என்றாள்.

சரித்திரன் அவளை ஆச்சரியமாக பார்த்தவன், “இப்போவா இதை சொல்லுவ..? என்னடி நீ..” என்று திணறலுடன் தலை கோதி கொண்டான்.

சுற்றி அத்தனை கேமரா. கேட்டில் செக்கியூரிட்டி. ராகவர்த்தினியோ கண்ணால் வேணும் என்று நின்றாள்.

“நாளைக்கு..”

“எனக்கு இப்போ வேணும். ரொம்ப லோன்லியா இருக்கு..” என்றாள்.

சரித்திரன் யோசிக்கவே இல்லை. திரும்ப அவள் கை பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றவன், ஹாலில் சித்ரா மட்டுமே இருக்க அவரிடம் “வர்த்தினிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு போகட்டுமா..?” என்று கேட்டான்.

“ஹான்.. இங்கவா.. அவர்..” சித்ரா விழித்து ஒரு மாதிரி தலையசைக்க,

பக்கத்திலே இருந்த அறைக்கு அவளுடன் சென்றவன், இறுக்கமாக அவளை அணைத்து கொண்டான். அவன் நெஞ்சில் முகம் வைத்து இடையோடு அவனை கட்டி கொண்டாள் பெண்.

“சாரிடி.. என்னால தான் உனக்கு கஷ்டம்..” அவன் கரகரத்த போன குரலுடன் சொன்னான்.

பெண் மறுப்பாக அவனை நிமிர்ந்து பார்க்க, அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் வைத்தான். அணைத்தபடி நின்ற இருவரின் முகமும் ஒருவரை ஒருவர் பார்த்தே இருக்க, அந்த நொடி எல்லாம் கடந்து அங்கு அவர்களின் காதல் தென்றல் அளவுக்கு அதிகமாகவே அவர்களை வருடி சென்றது.

நேசத்துடன் அவளின் நெற்றி முட்டியவன், “சீக்கிரம் எல்லாம் சரி பண்றேன். உன்னை தட்டி தூக்குறேன். இந்த குட்டி குட்டி முத்தம் எல்லாம் போத மாட்டேங்குது. அதுவும் இப்படி கட்டிக்கிட்டு நிக்கும் போதெல்லாம். ஹப்பா.. முடியலடி..” என்றான் தவித்து திரும்ப திரும்ப அவளில் முத்தம் வைத்து.

ராகவர்த்தினி முகத்தில் அழுகை காணாமல், சிவப்பு படர ஆரம்பித்தது. ரசித்து பார்த்தவன், “நீ இப்படி பிளஷ் பண்ணி பார்க்கிறது கூட ரேர் தான் இல்லை. நான் உண்மையிலே ரொம்ப பேட் லவ்வர்டி. அட்லீஸ்ட் நல்ல புருஷனாவாவது  இருக்கணும்..” என்றான் உள்ளார்ந்த ஆசையுடன்.

“அதுக்கு தான் என் அப்பா ஓகே சொல்ல மாட்டேங்கிறாரே..” என்றாள் பெண் ஏக்கத்துடன்.

“சொல்லாம அவரை யார் விட்டா..? நீ கவலைப்படாத. முக்கியமா அழாத, நான் பார்த்துகிறேன்..” என்றவன் அழுத்தி பிடித்த கன்னத்து முத்தத்துடன் வெளியே வந்தவன், சித்ராவிற்கு நன்றி சொல்லி விடைபெற்றான்.

Advertisement