Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 11

வர்ஷாவின் மருத்துவ படிப்பு நிறைவடைந்துவிட, அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வேதவள்ளி இரண்டு நாட்கள் மகளுக்கு ஓய்வளித்துவிட்டு, ‘அடுத்து என்ன..’ என்ற கேள்வியுடன் அவள் முன் நின்றார்.

சரித்திரன் போனில் இருந்தவன் வைத்து தங்கை பக்கம் வந்து அமர்ந்தான். வேதவள்ளி மக்கள் இருவரையும் பார்த்திருக்க, “படிக்க தான் போறேன்ம்மா..” என்றாள் மகள் தெளிவாக.

“ஓகே.. எங்க படிக்க போற, என்ன படிக்க போற..?” என்று கேட்க,

வர்ஷாவிடம் ஒரு சின்ன அமைதி. சரித்திரன் என்ன வர்ஷா என்று கேட்க, “எனக்கு USல படிக்க ஆசைண்ணா.. என் ப்ரண்ட்டும்  நானும் பிளான் பண்ணியிருக்கோம்..” என்று அம்மாவை பார்த்தே சொன்னாள் மகள்.

“சரி.. உனக்கு அங்க படிக்க ஆசைன்னா படி.. எக்ஸாம் என்ன, எப்படின்னு எங்களுக்கு சொல்லு..” என்றான் அண்ணன்காரன்.

“எப்படியும் அவ படிக்க US தான் போக போறா, ஆனாலும் நாங்க சொல்றதை கேட்க மாட்டீங்க இல்லை..” என்று வேதவள்ளி ஆதங்கத்துடன் கேட்க,

“ம்மா..  படிக்கன்னு US போறதுக்கும், கல்யாணம் பண்ணிட்டு  US போறதுக்கும் நிறைய வித்தியாசம்  இருக்கு..” என்றான் மகன்.

“கல்யாணம் முடிச்சாலும் அவ படிக்கலாம். நாம அவங்ககிட்ட சொல்லி..”

“ம்மா.. ஹோல்ட் ஆன்.. நான் படிக்க அவங்ககிட்ட ஏன் சொல்லணும்..?” வர்ஷா கேட்க, வேதவள்ளி இதென்ன என்று தான் பார்த்தார்.

“இது தான் வேண்டாம்ன்னு நான் சொல்றேன், என்னோட விருப்பத்திற்கு நான் ஏன் இன்னொருத்தர்கிட்ட அனுமதி வாங்கணும். அப்படி ஒரு கமிட்மென்ட் எனக்கெதுக்குங்கிறேன். அண்ட் ப்ளீஸ் எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியாவே மைண்ட்ல இல்லை ம்மா. இவ்வளவு சீக்கிரம் என்னால எந்த கமிட்மென்ட்லயும்  சிக்க முடியாது. எனக்கு ப்ரீடம் இருக்காது.  என்னை விட்டுடுங்க..” மகள் சொல்லி சென்றுவிட, வேதவள்ளி  முகம் சுருங்கி போனது.

அவர் கை பிடித்து அமர வைத்த சரித்திரன், “அவளுக்கு இஷ்டம் இல்லன்னா விட்டுடலாம்,  இப்போவே மேரேஜ் பண்ணியாகணும்னு அவளுக்கு எந்த கட்டாயமும் இல்லையே, அப்பறம் என்னம்மா..?” என்றான்.

“உனக்கு புரியாது இது.. ஒவ்வொரு பெத்தவங்களுக்கும் இருக்கிற அங்கலாய்ப்பு தான் எனக்கும். கண் முன்னாடி நல்ல வரன் கை நழுவி போகுதேன்னு இருக்கு..” வேதவள்ளி ஆதங்கத்துடன் சொன்னார்.

“ம்மா. இது நல்ல வரன் தான், நான் இல்லைங்கலை. அதுக்காக இதை விட்டா வேற நல்லா வரனே வராதா என்ன..?” என்று கேட்க,

“அப்பறம் வரது அப்பறம் பார்ப்போம். அதுக்காக  இப்போ அமையறதை ஏன் விடணும்னு கேள்வி இருக்கு இல்லைப்பா. இவளுக்கும் கல்யாண வயசு தானே. அங்க கல்யாணம் முடிச்சு கொடுத்தா நிச்சயம் எந்த குறையும் இல்லாமல் நல்லா இருப்பான்னு தெரிஞ்சும் விடுறது.. ம்ஹ்ம்.. என்னவோ பண்ணுங்க, உங்களை வற்புறுத்தி எதுவும்  பண்ண முடியாது..” என்று எழுந்து சென்றுவிட்டார்.

சரித்திரனுக்கு அம்மாவின் பேச்சு சிறிது வருத்தம் கொடுத்தது உண்மை. ஆனாலும் தங்கைக்கு ப்ரியமில்லாததை செய்வதில் அவனுக்கு உடன்பாடில்லை. வர்ஷா திரும்ப திரும்ப அவனிடம் போனில் சொல்வது,  “நீ அம்மாகிட்ட பேசு, என்னை விட்டுட சொல்லு, நான் ப்ரண்ட்ஸ் கூட ஜாலியா படிக்க போறேன். இப்போ போய் இந்த கல்யாணம் எல்லாம் வாய்ப்பே இல்லை.” என்பது  தான்.

அதையும் மீறி அவளை வற்புறுத்தவா முடியும்..? அவளென்ன சின்ன பிள்ளையா..? டாக்டர் முடிச்சுட்டா. அவளுக்கு தெரியாதா..? அண்ணன்காரன் தங்கைக்கு சப்போர்ட்டாக நின்றான்.

வேதவள்ளி அன்றிரவு விரைவாகவே உணவை முடித்துவிட்டு அறைக்குள் அடங்கிவிட்டார். பிள்ளைகள் புரிந்து விலகி அமைதி காத்தனர். அதிலும் வர்ஷாவிற்கு தான் ஏதாவது பேச போனால், அம்மா  திரும்ப திருமணம் பற்றி ஆரம்பித்துவிடுவாரோ என்ற பயம்.

பிள்ளைகளுக்கு நல்லது சொல்வதற்கும் ஒரு காலம் தான். எல்லா நேரத்திலும், எல்லா வயதிலும் சொல்லிவிட முடியாது..  இரண்டாம் முறையாக இந்த எண்ணம் வேதவள்ளிக்கு.

ஏற்கனவே மகன் காதல் விஷயத்தில் அவருக்கு அதிருப்தி தான். நான் அவனுக்கு நல்லா பொண்ணா பார்த்து கட்டி வைக்க மாட்டேனா..? எனக்கு அந்த உரிமை இல்லையா..? அம்மான்னா பெத்து, வளர்க்கிறதுக்கு மட்டும் தானா..? பல கேள்விகள்.

இப்போது மகளும்,  ‘எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை தான், என் விருப்பத்துக்கு நான் ஏன் இன்னொருத்தர்கிட்ட கேட்கணும் சொல்றா, அப்போ  அந்த இன்னொருத்தர்ல நானும் வருவேனா..?’ நினைத்த கணம் அவருக்குள்ளே  எதோ கனத்தது.

“வேதா.. என்ன பண்ற..?” என்று குமரகுரு அறைக்கு வர, “வாங்க..” என்று கட்டிலில் சாய்ந்திருந்தவர் நேராக அமர்ந்தார்.

“இதை பிடி..” என்று குமரகுரு அவரிடம் ஒரு பெட்டியை கொடுத்தார்.

“என்னங்க இது..?” வேதவள்ளி எழுந்து வாங்கி கொண்டார்.

“பணம் தான்.. ** கோடி. இதுவரைக்கும் உங்களுக்கு கொடுக்காத பணத்துக்கும் சேர்த்து மொத்தமா, ஒரே பேமெண்ட்டா கொடுத்துட்டேன், இனி என்கிட்ட எல்லாம் சொல்வீங்க இல்லை..? எனக்கான மரியாதை கொடுப்பீங்க இல்லை..” என்று சாதாரணமாக, ஆனால் உள் வைத்தே கேட்க,

“என்னங்க..” என்று கத்திவிட்ட வேதவள்ளியின் கண்கள் கலங்கி போக, அந்த பெட்டியை கட்டிலில் தொப்பென்றே போட்டுவிட்டார்.

“வேதா..”

“பேசாதீங்க..” வேதவள்ளிக்கு தாங்கவே முடியவில்லை.

“வேதா.. டென்சன் ஆகாத, அந்த பணம்..”

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாம்..? இந்த பணத்துக்காக தான் நான் இத்தனை வருஷம் உங்களோட குடும்பம் நடத்திட்டு இருந்தேனா..?”

“வேதா.. அப்படி இல்லை..” குமரகுரு பதறி பேச வர,

“வேறெப்படி சொல்லுங்க.. ம்ம்.. சொல்லுங்க. பணத்தை கொடுத்துட்டு எனக்கான மரியாதை கொடுங்கன்னா.. அப்போ.. அப்போ நான் அப்படியா..?”

“வேதா.. முதல்ல பொறுமையா இரு. நான் எல்லாம் சொல்றேன்..” குமரகுரு மனைவிக்கு வேகமாக தண்ணீர் எடுத்து கொடுக்க, வேதவள்ளி அதை வாங்கவே இல்லை.

“நான்.. நான் தான் நிறைய விஷயத்துல தப்பு. நீங்க எல்லாம் சரியா தான் இருக்கீங்க. நான்.. நான் தான் தப்பு..” வேதவள்ளி கட்டிலில் அமர்ந்துகொண்டார்.

“வேதா.. நான் தப்பா பேசிட்டேன். அது உன்னை காயப்படுத்தணும்ன்னு இல்லை. எனக்குள்ள இருந்த சின்ன கோவம், அதை இப்படி சொல்லிட்டேன். சொல்லியிருக்க கூடாது. சாரி, நீ இப்படி கண் கலங்காத, அது உனக்கு அழகில்லை. என் பொண்டாட்டி இப்படி இருக்க கூடாது..”

“உங்களோட கோவம் நியாயம் தான். அதுக்காக என்னையும் நீங்க இப்படி பேசியிருக்க கூடாதுங்க. நான் ஓடி ஓடி உழைச்சது யாருக்காக. உங்களுக்காக, நம்ம பசங்களுக்காக. ஆனா இன்னைக்கு உங்க மூணு பேருக்கும் நான்.. நான்..” வேதவள்ளி விம்மியேவிட்டார்.

“யார்.. யார் என்ன சொன்னா உன்கிட்ட, நம்ம பசங்களா. என்ன பேசினாங்க, சொல்லு நான் கேட்கிறேன்..” குமரகுரு மனைவி கண்ணீரை துடைத்து தண்ணீர் குடிக்க வைத்தார்.

வேதவள்ளி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார். கொஞ்சம் தன்னை மீட்டும் கொண்டார். “வேதா என்ன சொல்லுமா..?” குமரகுரு திரும்ப கேட்க,

“அது.. அது பெருசா ஒன்னுமில்லைங்க. நான் தான் ஏனோ டக்குன்னு உணர்ச்சி வசபட்டுட்டேன்..” என்றார் முகம் துடைத்து.

“அது பெருசோ, சிறுசோ, என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு..?” குமரகுருவிற்கு மனைவி கண்ணீர் சுட்டுவிட்டது.

“வர்ஷா அந்த வரனுக்கு முடியவே முடியாதுன்னு மறுத்துட்டா. அதுல கொஞ்சம் அப்செட். நீங்களும் இப்படி பேசவும் எமோஷன்ல ஆகிட்டேன்..”

“வர்ஷா வரன் விஷயமா..?” குமரகுரு ஆசுவாசம் கொண்டவர்,  “பிள்ளைங்களை ஓர் அளவுக்கு மேல நாம போர்ஸ் பண்ண முடியாதுமா, அவங்களுக்கே பிடிச்சிருந்தா நாம முன்ன நின்னு பண்ணி வைக்கலாம். இல்லைன்னா அவங்க விருப்பம் தான்..”

“உண்மை தாங்க.. என் கடன் பெத்து வளர்க்கிறது மட்டும் தான். முடிச்சுட்டேன். அப்பறம் அவங்க விருப்பம் தான். எனக்கு.. நான் தான் ஏதோ பெருசா எதிர்பார்த்துட்டேன் போல. ஒரு வயசு வரை நம்ம பேச்சு. ஒரு வயசுக்கு மேல அவங்க பேச்சு. அவ்வளவு தான். புரிஞ்சுக்கிட்டேன்..” என்றார்.

“நீ இவ்வளவு வருத்தப்படுற அளவு நம்ம பசங்க இல்லை வேதா. அவங்களோட விருப்பத்தையும், மறுப்பையும் நம்ம கிட்ட வந்து நேரா சொல்றாங்க. மறைக்கலையே. இன்பேக்ட் நாம இதுக்கு பெருமை தான் படணும்..” என,

“ம்ஹ்ம்.. சரி தான். நம்மகிட்ட சொல்றாங்க. அவங்களையும் நாம புரிஞ்சுக்கணும் தான். என்னை நான் மாத்திக்கிறதுக்கான நேரம்ங்க இது..” என்றவர்,

“இந்த பணத்தை யார்கிட்ட வாங்கினீங்களோ, அவங்ககிட்டே கொடுத்துடுங்க. நான்  ஏன் உங்ககிட்ட தம்பி லவ் விஷயம் சொல்லலைன்னு காரணம் சொல்லியும், நீங்க இன்னைக்கு என்னை அந்த வார்த்தை.. ம்ப்ச்.. அப்போ என்மேல உங்களுக்கு இவ்வளவு தான் அபிப்பிராயம் இல்லை..”

“வேதா.. நான்..”

“விடுங்க.. எதுவும் சொல்லாதீங்க, என்னால அதை அக்சப்ட் பண்ணவும் முடியாது. உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் வந்ததுக்கு அப்புறம் நான் அங்க புரிய வைக்கவும் ஏதுமில்லை. மனசு விட்டு போன மாதிரி இருக்கு. உங்களுக்கு என் பிள்ளைங்களே பரவாயில்லை..”  திரும்ப அவரிடமே பணப்பெட்டியை  கொடுத்து படுத்துவிட்டார்.

குமரகுருவிற்கு நிச்சயம் தன் செயலில் வருத்தம் தான். எனக்குள்ளே இருந்த கோவத்தை இன்று நான் இப்படி பணத்தை கொடுத்து பேசியிருக்க கூடாது. நன்றாகவே புரிந்தது. ஆனால் செய்யும் வரை அது தவறென்று அவருக்கு தெரியவில்லை.

‘இப்போ போய் இந்த பணத்தை பத்தி நான் சொல்ல முடியாது, அவ நார்மலாகட்டும். சொல்வோம்..’ பணப்பெட்டியை தனக்கான லாக்கரில் வைத்துவிட்டார்.

மறுநாள் அம்மாவின் முகம் பார்த்த சரித்திரன் அவரிடம் அமர்ந்து பொதுவாக பேசினான். உணவு பரிமாறினான். அலுவலகம் வரை உடனும் வந்தான். “நான் ஓகே தான்டா.. நீ எனக்கு பாலிஷ் போடாத..” என்றார் வேதவள்ளி ‘வேதவள்ளியாக’

“நான் ஏன் உங்களுக்கு பாலிஷ் போட போறேன்.. வெய்ட் வெய்ட்.. இருக்கே.. உங்க பார்ம் அவுஸ். செம பிளேஸ். மதிப்பே இல்லாத சொத்து. உங்க மாமியார் உங்களுக்கு கொடுத்தது. அது எப்போ எனக்கு கொடுக்க போறீங்க..?” என்று கேட்க,

“பார்றா.. உனக்கு இந்த ஆசை வேற இருக்கா. கனவுல கூட நினைக்காதடா, என் மாமியார் எனக்கு கொடுத்ததை நான் என் மருமகளுக்கு தான் கொடுப்பேன்..” என்றார் வேதவள்ளி.

“அவகிட்டேயா கொடுக்க போறீங்க. போச்சு போங்க. அதுக்கு என் பொண்ணுக்கு கொடுத்தா என்னவாம்..?” என்றான்.

“உன் பொண்ணு உன்னை மாதிரி தான் இருப்பா. அவளுக்கு கண்டிப்பா கொடுக்க மாட்டேன்..” வேதவள்ளி இப்போதே உர்ரென்று சொன்னார்.

“அப்போ என் மகனுக்கு..”

“ஏன் உங்க பொண்டாட்டிக்கு கொடுக்கிறதுல சாருக்கு என்ன பிரச்சனை..?”

“அவ இன்னொரு வேதவள்ளியா இருக்கிறது தான் பிரச்சனை..”

“ஹாஹா.. அப்படியாடா. உண்மையாவா சொல்ற, நல்லது.. நல்லது.. உனக்கு அப்படி இருந்தா தான் நீயும் சரிப்பட்டு வருவ, இல்லை எங்க தலையில மிளகாய் அரைச்சிட மாட்ட..?”

“யாரு நானு.. உங்க இரண்டு பேர் தலையில.. க்கும்.. மாமியாரும், மருமகளும் தலை கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க. வளைச்சு பிடிச்சு என் தலையில சந்தனம் தடவிற மாட்டீங்க..?”

“அதுல என்ன சந்தேகம்..? நீ மிளகாய் எடுத்தா உனக்கு சந்தனம் தான்..”

“இன்னும் என் கையில அவ தாலியே வாங்கலை அதுக்குள்ள  கூட்டணி. வாங்கிட்டா நான் தனி கட்சி தான் போலயே..” சரித்திரன் அலறவே செய்தான்.

“உன் கட்சி வீக்கா இருந்தா தான் கூட்டணி அமையும்..?” வேதவள்ளி புருவம் தூக்கி சொல்ல,

“கட்சின்னு ஒன்னு இருந்தா தானே கூட்டணி எல்லாம். மொத்தத்தையும் கலைச்சிட மாட்டேன்..” என்றான் சரித்திரனும்.

“அப்போவும் என் கட்சி ஸ்ட்ராங்கான கட்சின்னு சொல்றானா பாரு. கலைக்கிறதுலே இருக்கான். அரசியல்வாதி மகன்னு அப்படியே ப்ரூப் பண்ற..” வேதவள்ளி நொடித்து கொள்ள,

“மேடம் மட்டும் என்னவாம்.. கட்சி, கூட்டணின்னு தான் பேசவே செய்றாங்க. இதுல என்ன சொல்ல வந்துட்டாங்க..” என்றான் மகனும் கேலியாக.

“உன்கிட்ட பேசுற அளவு நான் வெட்டியா இல்லை. என் கம்பனி வந்தாச்சு..” வேதவள்ளி இறங்க போக,

“மேடம்.. என்ன இது..? ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் உங்களுக்காக கார் ஓட்டிட்டு வந்திருக்கேன். அப்படியே  விட்டுட்டு போறீங்க..?”

“ஓஹ்.. சாரி. கூட்டிட்டு வந்ததுக்கு பணம் கொடுக்கணும் இல்லை.. இருங்க கால் டேக்சில எவ்வளவு ஸ்பேர் வருதுன்னு பார்த்து கொடுக்கிறேன்..” என,

“இன்சல்ட்.. இன்சல்ட்.. எனக்கு பணமா..?” மகன் நெற்றி குத்தினான்.

“அப்போ வேண்டாமா..?” வேதவள்ளி எடுத்த பணத்தை திரும்ப வைக்க போக,

“ஏன்..? அதான் கொடுக்க எடுத்துட்டீங்க இல்லை. கொடுக்கிறது தான் சரி. கொடுங்க..” என்று அவரிடம் இருந்து பிடுங்கி கொண்டான்.

வேதவள்ளி மகனை மேல் கீழ் பார்த்தவர், “நீ பொழைச்சுக்குவடா மகனே பொழைச்சுக்குவ..” என்றார்.

“நன்றி நன்றி. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தாயே..” என்றான் மகனும்.

வேதவள்ளி சிரித்துவிட்டவர், “ஆபிசுக்கு நேரம் ஆச்சு பாரு.. கிளம்பு..” என்று உள்ளே சென்றுவிட்டார்.

சரித்திரன் அவர் மறையும் வரை பார்த்திருந்து கிளம்பினான். அம்மாவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு ஒப்பாது.  ஆனால் அவர் முகம் வாடினாலும் இவனுக்கு தாங்காது. அப்பாவின் பொறுப்பையும் தன் தோளில் தாங்கும் அம்மாவை பார்த்து வளர்ந்தவன் தானே.

அவருக்கான மரியாதை, மதிப்பு அவனின் தலைக்கு மேலே.!

வேதவள்ளிக்கு மகன் கிளம்பவும் தான், அந்த பணம் பற்றி அவனிடம் சொல்லாதது நினைவு வந்தது. எப்படியும் கொடுக்க சொல்லிவிட்டோம். குமரகுரு கொடுத்துவிடுவார். நைட் பொறுமையா சொல்லிக்கலாம்.. என்று விட்டுவிட்டார்.

எப்போதும் போல் வேலைகள் சரியாக இருக்க, அதில் கவனத்தை வைத்தார். புது தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது.  இதற்காக வாங்கியுள்ள கடனுக்காக மகன்  அதிகளவு உழைக்கிறான் என்பது அவரையும் அதிகத்துக்கு அதிகமே உழைக்க வைத்தது.

அவர்கள் பொருட்களை எந்தளவு சந்தை படுத்த முடியுமோ அந்தளவு சந்தை படுத்தினார். மார்க்கெட்டிங் சரித்திரனே வலுவாக அமைத்து கொடுத்திருக்க, அதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டார் வேதவள்ளி.

இன்றய காலகட்டத்தில் அழகு சாதனங்களும் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தது. அதிகளவில் தேடுகின்றனர். விரும்புகின்றனர். அவரவர் தன்மைக்கேற்ப, அவரவர் தோலுக்கேற்ப, எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பொருட்களை தயாரித்து கொடுப்பது என்பது அவருக்கு சவாலாகவே உள்ளது.

ஆனாலும் அவரின் விடாமுயற்சியில் ஓரளவு தொழில் கை கூடி வந்துள்ளது. இதை தவற விட அவர் அறவே தயாரில்லை. வளர்த்த மரத்தின் கனியை பறிக்க ஆரம்பித்திருக்கிறார். எப்படி விடுவார்..?

அன்றய வேலை நேரம் முடிந்த பின்னும் அம்மா, மகன் இருவரும் அவரவர் அலுவலகத்தில் இருக்க, போன் வந்தது. வேறு வேறு ஆள் தான். ஆனால் சொன்ன செய்தி ஒன்று தான்.

அமர்ந்திருந்த இருவரும் அதிர்ச்சியில் எழுந்துவிட்டனர். “என்ன சொல்றீங்க..?” என்று குரலை உயர்த்த,

“இப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான்.. ஆக்சிடென்ட். கணேசன்.. அவர் ஸ்பாட்லே.. ஹாஸ்பிடல்ல வைச்சிருக்கோம்..” என்றனர்.

சரித்திரன் நொடியும் தாமதிக்காமல் அந்த மருத்துவமனைக்கு ஓட, வேதவள்ளி அவர் அலுவலகத்திலே அமர்ந்துவிட்டார். கண்ணீருடன் வேர்த்து கொட்டியது அவருக்கு.  உதவியாளர் தண்ணீர் கொடுக்க, வாங்கி வேகமாக குடித்தார்.

சில நொடி சமன் செய்து கணவருக்கு அழைக்க, எடுத்தது அவரின் PA. “சார் விஷயம் கேள்விப்பட்டதுல இருந்து இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கார். வாயே திறக்கலை..” என்றார்.

“பார்த்துக்கோங்க.. நான் வரேன்..” என்று வைத்துவிட்ட வேதவள்ளி மகனுக்கு அழைத்து, எடுத்த விசாகனிடம் பேசி விட்டு குமரகுருவிடம் சென்றார்.

மருத்துவமனையில் சரித்திரன் அவரின் உடலை பார்த்த பின்னும் நம்ப முடியாமல் நின்றிருந்தான். “மாமா..” என்றழைத்தவனின் கண்கள் கலங்கி கொண்டே இருந்தது. துடைத்து துடைத்து அங்குள்ள பார்மாலிட்டி  எல்லாம் முடித்து, வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

வேதவள்ளி கணவருடன் அங்கு காத்திருக்க, குமரகுரு முதல் ஆளாக ஓடி சென்று  கணேசன் உடல் பக்கத்தில் நின்றார். ஆத்மார்த்தமான அன்பு. பிணைப்பு. அது கொடுக்கும் துயரம் தாங்காமல் தள்ளாடி நின்ற மனிதரை சரித்திரன் தாங்கி அமர வைத்தான்.

கணேசன் குடும்பம் கதறிய கதறல், கட்சி ஆட்களின் வருகை என்று மிக வேதனையான கணங்கள் அவை.

அன்றைய நாளும், மறுநாளும் அங்கேயே இருந்து எல்லாம் முடித்தே சரித்திரன் குடும்பம் வீடு திரும்பியது.

அதற்கு அடுத்த நாள், சரித்திரன் குடும்பம் திரும்ப ஒரு அதிர்ச்சியை சந்தித்தது.

Advertisement