Advertisement

குமரகுரு தான் இருவருக்குள்ளும் மாட்டிக்கொள்வார்.  போர்டில் அவர் பவரை வேறு  மகனுக்கு  கொடுத்துவிட, “எனக்கும் ரைட்ஸ் இருக்கு..” என்று நின்றான் மகன். அவனுக்கும் ஷேர் வேதவள்ளியே கொடுத்திருந்தார்.

வர்ஷாவிற்கும் குறிப்பிட்ட வயதில்  ஷேர் சென்று சேர, “எனக்கு பவர் கொடுக்கிறியா சிஸ்டர்..?” என்று தங்கையிடம் கேட்டான் நல்லவன்.

“நான் ஏன் கொடுக்கணும் பிரதர். வேணும்ன்ன உங்க பவரை எனக்கு கொடுங்க, உங்களை விட நான் இன்னும் நல்லாவே பிஸ்னஸ் பண்ணுவேன்..” என்றாள் அவள்.

“அதானே வேதவள்ளி மகளாச்சே நீ.. இப்படி தான் இருப்ப..” என்று அம்மாவை வம்புக்கு இழுத்து, அவரிடம் தலையில் கொட்டு வாங்கி கொண்டான்.

வர்ஷாவின் அவுஸ் சர்ஜன் முடியும் கட்டத்தில் இருக்க, “அடுத்து என்ன..?” என்று மகளிடம் கேட்டார் வேதவள்ளி.

“இந்த அடுத்து என்ன’ல நான் தப்பிச்சேன்டா சாமி..” என்றான் சரித்திரன் இடையிட்டு.

வேதவள்ளி மகனை முறைத்தவர், “அதெல்லாம் அந்த காலம். இப்போ தான் நீ என்னையே ஆட்டி படைக்கிறியே..?” என்றார் தாங்கலாக.

“ம்மா.. நீங்க சேபர் சைட் பிஸ்னஸ் பண்ற ஆளு. நான் அடுத்த ஜெனரேஷன், அடிச்சு ஆட தான் பார்ப்பேன். இதை எல்லாம் பெர்சனலா எடுத்துப்பீங்களா..?” என்று கேட்டான்.

வேதவள்ளி சில நொடி அமைதியாகி, “உங்க தாத்தாக்கு அப்புறம் எல்லாம் என் முடிவே. உன் அப்பா, மத்த போர்ட் மெம்பரஸூம் கூட என்கிட்ட கேள்வி கேட்க மாட்டாங்க. நான் சொல்றது தான் அங்க. பர்ஸ்ட் டைம் நீ என்னை மீறி எல்லாம் செய்யும் போது என்னால ஏத்துக்க முடியலன்னு நினைக்கிறேன்..” என்றார் வெளிப்படையாகவே.

கணவரும், பிள்ளைகளும் அவரின் ஒப்பு கொடுக்கும் பாங்கில் பெருமை கொண்டாலும், “அதான் எங்களுக்கு தெரியுமே. அதுக்கு தான் முதல்லே உங்ககிட்ட இருந்து  பவர் வாங்கினது..” என்றான் மகன்.

“ம்ஹ்ம்.. நீ சரியான காரியக்காரன் தாண்டா. தொழில், காதல் எல்லாம் சைலன்ட்டா சாதிச்சுக்கிற..?” என்றார் வேதவள்ளி.

“என்ன சாதிச்சு என்ன பிரயோஜனம்..? இன்னும் இந்த வீட்டோட முக்கியமான ஆள்கிட்ட உன் ஆளை கூட்டி வந்து காட்டலையே..?” என்றாள் வர்ஷா மிதப்பாக காலரை தூக்கிவிட்டபடி.

“ம்மா அவ அப்படி தான் எதாவது நான்சென்ஸா பேசுவா. நீங்க ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொன்னீங்களே, என்ன அது..” என்று கேட்டான் மகன்.

நான்சென்ஸா.. டேய்ண்ணா.. என்று பல்லை கடித்தவள், “நல்லா யோசிச்சு பேசுங்க பிரதர். உங்க கல்யாணத்தப்போ விளக்கு பிடிக்க என்கிட்ட தான் வந்து நின்னாகனும் பார்த்துக்கோங்க..” என்றாள் மிரட்டலாக.

“நீங்களும்  நல்லா யோசிச்சு பேசுங்க சிஸ்டர்.. உங்க பிள்ளைகளுக்கு நான் தான் தாய்மாமன், நான் இல்லாம உங்களுக்கு எந்த பங்கஷனமுமே  இல்லை, பார்த்துக்கோங்க..” என்றான் இவனும் மிரட்டலாக.

“அதுக்கு எல்லாம் பல காலம் ஆகும் சார்.. நான் MDபடிக்க போறேன்..” என,

“இது பத்தி பேச தான் கூப்பிட்டோம்..” என்றார் வேதவள்ளி. பிள்ளைகள் கேள்வியாக பார்க்க, “வர்ஷாவுக்கு ஒரு நல்ல இடத்துல இருந்து வரன்  வந்திருக்கு..” என்று முழு விபரமும் சொன்னார்.

அவர்களும் தொழில் செய்யும் குடும்பம் தான் என்றாலும், இவர்களை விட இரண்டடி மேல் இருப்பவர்கள். சரித்திரனை விட ஒரு வயது பெரியவனாக இருப்பான் அந்த மணமகன் ஹரீஷ், சில இடங்களில் பேசி இருக்கிறான். நல்ல முறையில் தான் தெரிந்தான்.

“ஆனால் ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க..?” என்று கேட்டான் சரித்திரன்.

“அவங்களோட புது பிஸ்னஸை USல தொடங்க போறாங்களாம், அதை செட்டில் பண்ண இரண்டு மூணு வருஷம் ஆகிடும். அதோட அங்கே தான் மாப்பிள்ளையும் செட்டில் ஆகிற மாதிரி இருக்கும் சொல்றாங்க, அதான் இப்போவே மேரேஜ் பண்ணி அனுப்பி வைக்க கேட்கிறாங்க..” என்றார்.

வர்ஷாவின் முகம் சுருங்கி போனது. அவளுக்கு இப்போது திருமணத்தில் நாட்டமில்லை. அதை அவள் யோசித்ததும் இல்லை எனும் போது, உடனே மறுக்கவும் செய்தாள். “வர்ஷா.. நல்ல வரன், யோசிச்சு சொல்லு..” என்றார் வேதவள்ளி. குமரகுருவும் கூட அதையே சொல்ல, பெற்றவர்களுக்கு விருப்பம் இருந்தது புரிந்தது.

சரித்திரனோ, “அவளுக்கு விருப்பமில்லைன்னா விட்டுடுங்க..” என்றான்.

“யோசிச்சு சொல்லட்டும். அப்படியென்ன எடுத்ததும் முடியாது சொல்றது. நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாத..” என்றார் வேதவள்ளி. நல்ல வரன் என்ற ஆதங்கம் அம்மாவிற்கு.

“நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணாம..? அவளுக்கு இஷ்டம் இல்லைன்னா இல்லை தான். அதான் படிக்க போறேன் சொல்றாளே..” என்றான் சரித்திரன்.  திருமண விஷயத்தில் போய் போர்ஸ் பண்ணுவாங்களா என்பது அண்ணனுக்கு.

குமரகுரு தான் இடையிட்டு, “ஒன்னும் அவசரமில்லை.. இருங்க, எப்படியும் அவுஸ் சர்ஜன் முடிச்சுட்டு தானே எதுவும் செய்ய முடியும். நமக்கு டைம் இருக்கு, பார்ப்போம். நீங்க இரண்டு பேரும் அமைதியாகுங்க..” என்று முடித்துவைத்தார்.

வர்ஷா இரண்டு நாள் விடுமுறையில் இருக்க வந்தவள், மறுநாளே பாண்டி கிளம்பிவிட்டாள். அதற்கும் அண்ணன்காரன் அம்மாவை தான் பார்த்து சென்றான். “இவங்களுக்கு நல்லது சொன்னாலே நான் வில்லி ஆகிடுறேன்..” அவர் கணவரிடம் புலம்பினார்.

அன்று தான் வர்த்தினியை பார்க்க அவன் கிளம்பினான். வேதவள்ளி அவரின் தொழில் பார்க்க ஆரம்பித்துவிட, விசாகன் திரும்ப நண்பனிடமே வந்துவிட்டான். “இன்னைக்கு புல்லா எனக்கு நோ கால்ஸ், ப்ளீஸ்டா..” என்று மெசேஜ் அனுப்பிவைக்க, விசாகன் புரிந்து கொண்டான்.

ராகவர்த்தினி சொன்ன இடத்தில் இவன் முன்பே சென்று காத்திருக்க, பெண் வந்தவள் ஆச்சரியமாக பார்த்து தான் காரில் ஏறினாள். “ரொம்ப தான் கண்ணை விரிக்கிறடி..” என்று காரை கிளப்பினான்.

“அதிசயத்தை பார்த்தா கண்ணை விரிக்காம இருக்க முடியுமா..?”  ராகவர்த்தினி கேட்க, சரித்திரன் திரும்பி அவளை பார்த்தான். நன்றாகவே முகம் மலர்ந்து, மினுமினுத்தாள் பெண்.

“எப்படி இந்த அதிசயம்..” ராகவர்த்தினி அவனை நன்றாக பார்க்கும்படி அமர்ந்தாள்.

“நேரா உட்காருங்க மேடம்..” என்றான் அவன்.

“முடியாது.. இப்படி தான் இருப்பேன். நாம லாஸ்ட்டா எப்போ பார்த்தோம் சொல்லுங்க..?” என்று கேட்க,

“நீ இப்படியே உட்கார்ந்துக்கோடி..” என்றுவிட்டான் அவன் வேகமாக.

“எனக்கு தெரியும் என் அளவுக்கு நீங்க இல்லை. எப்போவும் நான் தான் பார்க்க, பேச கேட்கிறேன். நீங்க இல்லை..”

“இன்னைக்கு புல்லா நாள் இருக்குன்னு இப்போவே ஆரம்பிக்காதமா..” அவன் அலறினான்.

“நீங்க ரொம்ப பயந்தவர்.. நம்பிட்டேன்..” அவள் உதடு சுளிக்க, சரித்திரன் அவளை நோக்கி ஒற்றை கை நீட்டினான். பெண் எப்போதும் போல அழகாக கை கொடுக்க, விரல்கள் கோர்த்து கொண்டான்.

“இதை தான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்டி..” என்றான் முத்தம் வைத்தபடி.

ராகவர்த்தினி அவனின் அரிதான முத்தத்தில், கண் மூடி அமர்ந்து கொண்டாள். கோர்த்த விரல்கள் நெருக்கமும், மௌனமான காதல் ராகமும் இடம் சென்று சேரும் வரை இசைத்திருந்தது.

“முதல்ல கோவிலுக்கு தான் போகணும்..” என்று வர்த்தினி பல காலமாக சொல்லியிருக்க, இன்று தான் அது நிறைவேறியது. இருவரும் சாமி தரிசனம் கண்டு, பிரகாரம் சுற்றி, அங்கேயே சில நிமிடங்கள் அமர்ந்தனர்.

அடுத்து காலை உணவுக்கு சென்றனர். முடித்து படம். அது முடியவும் ஷாப்பிங். அவளுக்கு அவன் வாங்க, அவனுக்கு அவள் வாங்கி தந்தாள்.

இதற்கு முன் பல முறை இருவரும் கிப்ட் கொடுத்து கொண்டிருந்தாலும், உடன் இருந்து,  முகம் பார்த்து,  பிடித்தம் கேட்டு வாங்கி கொடுப்பது  என்பது ஒருவித நிறைவை கொடுத்தது.

சரித்திரன் அவளுடன் கோர்த்த விரல்களை விடாமல் மதிய உணவை முடிக்க, முன் மாலையே ஆகிவிட்டது. இன்னும் சில மணி நேரங்களே. கிளம்ப வேண்டும்.

“இவ்வளவு சீக்கிரமா நாள் போயிடுச்சு..” ராகவர்த்தினி முகம் வாடி போனாள்.

“அடுத்து எங்க போலாம்..” சரித்திரன் அவளிடம் கேட்க,

“எங்கேயும் வேணாம். இப்படியே என்னோட இருங்க..” என்றாள் பெண்.

“பக்கத்துல தான்  நம்ம புது வீடு இருக்கு, பார்க்கிறியா..? உனக்கு காட்டணும்ன்னு ரொம்ப நாள் ஆசை..?” என,

ராகவர்த்தினி சரி  என்றுவிட, சரித்திரன் அவள் தலை பிடித்து ஆட்டி, கார் எடுத்தான். பீச் ஓரம் தனி வீடு. சரித்திரனின் சம்பாத்தியம். உடன் லோனும். மொபைலில் வீடு காட்டியிருந்தான். இப்போது தான் நேரில் பார்க்கிறாள் பெண்.

கோர்த்த கைகளுடன் வலது கால் எடுத்து வைத்து அவனுடன் நுழைந்தவள்,  “அழகா இருக்கு..” என்றாள் சுத்தி பார்த்து.

“உனக்கு பிடிக்கும்ன்னு தெரியும்..” என்றவன், கொண்டு வந்திருந்த இனிப்பை கொடுத்தான். அவளும் பதிலுக்கு ஊட்டிவிட்டவள், “மெயின்டனன்ஸுக்கு ஆள் இருக்கா..?” என்று வீடு சுத்தமாக இருப்பதில் கேட்டாள்.

“தினமும் மார்னிங் வந்து கிளீன் பண்ணிட்டு போவங்க..” என்றபடி அவளுடன் தரையில் கால் நீட்டி அமர்ந்தவன், அவளை தோளோடு அணைத்து கொண்டான்.

ராகவர்த்தினியும் அவன் தோள் சாய்ந்தவள், “இதுக்கு இரண்டு வருஷம்..?” என்றாள்.

“உனக்கே தெரியும் இல்லை நம்ம கமிட்மெண்ட்ஸ். அப்பா எலெக்ஷன், அம்மாவோட புது பிஸ்னஸ், அதுக்கான மார்க்கெட்டிங்ன்னு கிட்டத்தட்ட மொத்த நாடும் சுத்தி வந்துட்டேன். அடுத்து நம்ம  இண்டஸ்ட்ரி கவனிக்கனும். லோன் குளோஸ் பண்ணனும். உன்னோட படிப்பும் பார்க்கணும்ன்னு ஏகப்பட்ட பிரஷர். இப்போ தான் கொஞ்சம் ப்ரீயா இருக்கு..” என்றான் உச்சி முத்தம் வைத்து.

ராகவர்த்தினி அவன் அருகாமையில் அமைதி காண, “எதாவது பேசு..” என்றான்.

“பேச தோணல. நேரம் போகுதேன்னு தான் இருக்கு..” என்றாள்.

சரித்திரனுக்கும் அப்படி தான் இருக்க, “ஜட்ஜ்கிட்ட எப்போ பேசட்டும்..?” என்று கேட்டான்.

ராகவர்த்தினிக்கு பதில் சொல்ல முடியவில்லை. அப்பா, அம்மா என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி அவளை அமைதி காக்க வைத்தது. “இனியும் சொல்லாம இருக்கிறது சரியில்லை.  சீக்கிரமே சொல்லிடுறது பெட்டர். அதுவும் நாமளே சொல்றது தான் சரி..” என்றான் சரித்திரன்.

பெற்றவர்களின் மனநிலையை அவளால் உறுதியாக அனுமானிக்க முடியாததால், “அதை அப்பறம் பேசுவோம். இப்போ வேற ஏதாவது பேசுங்க..” என்றாள்.

சரித்திரனுக்கு அவள் மனநிலை புரிந்தது. அவனும் இதை பெற்றவர்களிடம்  கடந்து வந்தவன் தானே. “சரி சொல்லு.. ஆபிஸ் எப்படி போகுது..” என்று கேட்க, பெண் நிமிர்ந்து அவனை கோவமாக பார்த்தாள்.

“என்னடி..” என்று அவள் நெற்றி முடி ஒதுக்க,

“பேச வேற எதுவுமே இல்லையா உங்களுக்கு..?” என்றாள்.

சரித்திரன் சிரித்தபடி அவள் நெற்றி முட்டியவன், “நீயே பேசு. அப்பறம் என்கிட்ட கோவப்படுவ..” என்றான்.

“ஒன்னும் பேசவே வேணாம். எனக்கு உங்களோட இருந்தா போதும்..” என்றுவிட்டவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள.. அணைத்து, வருடி, சிறு சிறு முத்தங்கள் கொடுத்து, முகம் பார்த்து, நெற்றி முட்டி,  விரல் கோர்த்து என மற்றவரின் நெருக்கத்தை, வாசத்தை தங்களுக்குள் நிரப்பி கொண்டனர்.

அவர்களுக்கான நேரம் நொடிகளாக முடிய, எழுந்து கொண்டனர். மனமே இல்லாமல் கதவுக்கு செல்ல, சரித்திரன் அவள் கை பிடித்து நிறுத்தினான்.

ராகவர்த்தினி அவனை கேள்வியாக பார்க்க, அவளை நெஞ்சோடு இறுக்கி கொண்டவன்,  தன் முகத்துக்கு நேரே அவள் இடை பிடித்து தூக்கி கொண்டான். நெற்றி முத்தம், கன்னத்து முத்தம் இட்டான். ராகவர்த்தினி அவன் கழுத்தோடு கட்டி கொள்ள, இறுதியாக இறுக்கம் கொடுத்து விடுவித்தான்.

இருவருக்கும் இந்த நாள் சுத்தமாகவே போதவில்லை. ஆனாலும் பிரிய தான் வேண்டும். சரித்திரன் அவளை வீட்டின் அருகில் விட்டு, ஏக்கத்துடனே விடைபெற்றான்.

Advertisement