Advertisement

லயம்.. லாளிதம்.. அவள் 10

“வர்த்தினி.. நான் சொன்ன அந்த ஒரு நாள், அது வேணும். நாளைக்கு ஓகேவா..?” சரித்திரன் போன் செய்து கேட்க, பெண்ணிடம் பதிலே இல்லை.

“என்னடி..” சரித்திரன் கேட்க,

“முதல்ல நீங்க ஒரு அக்ரீமெண்ட் எழுதி, சைன் வைச்சு, ரெஜிஸ்டர் பண்ணி எனக்கு அனுப்புங்க, அப்போ தான் நம்புவேன்..” என்றாள் பெண்.

இதற்கு முன் பல முறை இப்படி நடந்ததன் பலன் இது. எண்ணிக்கை இல்லாமல், நாளைக்கு போறோம், இந்த தேதிக்கு போறோம், அடுத்த சண்டே போறோம் என்று போனில் மட்டுமே சென்று வந்துள்ளனர் இருவரும்.

சரித்திரனுக்கு புரிய, சிரிப்புடன் தலை கோதி கொண்டவன், “நம்புடி..” என்றான்.

“நீங்க என் பக்கத்துல இருக்கும் போது நம்புறேன்..” என்றாள் பெண்.

ஒன்று சரித்திரனுக்கு வேலை இருக்கும், இல்லை வர்த்தினிக்கு ஏதாவது கமிட்மென்ட் இருக்கும். ‘பிளான் பிளாப்.’ அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுவர். இந்த முறையும் அப்படியான ஒன்று தான் நடக்கும் என்பதில் பெண்ணுக்கு பயங்கர உறுதி,

“சும்மா சும்மா எதிர்பார்ப்பு வைச்சு நான் ஏமாற விரும்பல, போங்க..” என்றாள்.

“இந்த டைம் கண்டிப்பா போறோம்..” என்றான் அவன்.

“ஆபிஸ்ல லீவ் சொல்லிட்டாலும்,  அம்மா, அப்பாக்கு என்ன சொல்ல..? நான் வரல போங்க..” என்றாள் சலிப்புடன்.

“என்னடி.. என்கூட இருக்க ஆசையே இல்லையா..? இவ்வளவு சலிச்சுக்கிற..?” அவன் உர்ரென்று கேட்டான்.

“ஆசை தானே இருந்துச்சு. கொள்ளை கொள்ளையாய் இருந்துச்சு. ஆனா இப்போ இல்லை, ஒரு முறை, இரண்டு முறைன்னா பரவாயில்லை. இரண்டு வருஷமா இதேன்னா எப்படி இருக்குமாம்..?” என்றாள் அவளும் கொஞ்சம் கடுப்புடனே.

“வர்த்தினி.. நான் தான் சொல்லிட்டேன் இல்லை. இந்த முறை கண்டிப்பா போறோம்.  நீ எங்க வரேன்னு மட்டும் சொல்லு, நான் பிக் அப் பண்ணிக்கிறேன்..” என்றான் சரித்திரன்.

‘உண்மையா தான் சொல்றாரா..?’ பெண்ணுக்கு ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

“இதான் லாஸ்ட். இந்த முறை போகலைன்னா அப்புறம் எப்போவும் கிடையாது. பார்த்துக்கோங்க..” என்ற மிரட்டலுடன், பிக் அப் பாயிண்ட் சொல்லி வைத்தாள்.

ஆம் இரு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த இரு வருடங்களில் சில மாற்றங்கள் அரங்கேறிவிட்டன. வேதவள்ளி ஆசைப்பட்டது போல் இரண்டாம் தொழிலை தொடங்கிவிட்டார். ராகவர்த்தினி மாஸ்டர் முடித்து ஒரு கம்பெனியில் வேலை பார்க்க தொடங்கிவிட்டாள்.

மாறாதது வேதவள்ளி, ராகவர்த்தினி இன்னும் பார்த்து கொள்ளாதது. சரித்திரன் அம்மா அலுவலகத்தில் வேலை செய்வது. உடன் விசாகனும் அங்கேயே இருப்பது. குமரகுரு அமைச்சர் பதவி. வர்ஷாவின் மருத்துவர் படிப்பு. உடன் இவர்கள் காதலும் தான்.  பல கட்டங்களை கடந்து இன்னும் காதலில் தீவிரம் பெற்றிருந்தனர்.

சரித்திரன் அம்மாவின் முன்பான தொழிலை பார்த்து கொள்ள, வேதவள்ளி புதிய தொழிலான அழகு சாதனம் தயாரிக்கும் கம்பெனியை பார்த்து கொண்டார். “நான் உனக்கு கைட் பண்றேன்டா.. நீ புது பிஸினஸை பார்த்துக்கோ..” என்று வேதவள்ளி ஆரம்பிக்கும் போதே சொல்ல, மகன் மறுத்துவிட்டான்.

“எனக்கு எஞ்சின் சம்மந்தமான வேலை தான் பிடிச்சிருக்கு. இந்த மேக் அப் மேட்டர் எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க..” என்றுவிட்டான்.

“அது நான் டெவலப் பண்ண தொழில். நீ தனியா ஒரு தொழிலை எடுத்து நடத்த மாட்டியா..?” என்று மெல்ல அவனை சீண்டிவிட பார்க்க,

சரித்திரன் சிரித்தவன், “நீங்க கேடி மம்மினு எனக்கு நல்லா தெரியும். இந்த ட்ரிக்கர் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட நடக்காது..” என்றுவிட்டான்.

“அப்புறம் உன்னை எப்படி நீ ப்ரூப் பண்ணுவ..? புது தொழிலை சக்ஸஸ் பண்ணி..”

“ம்மா.. முதல்ல  உங்களோட ஐடியாலஜியே தப்புன்னு நான் ப்ரூப் பண்ணி காட்டுறேன்..”  என்றவன், அதை செய்தும் காட்டியிருந்தான்.

வேதவள்ளி வசம் இருந்த எஞ்சின் மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றான். புது புது யுக்திகள் புகுத்தினான். தேவையில்லாத கட்டுப்பாடுகளை தளர்த்தினான். முதலில் அவர்களின் வேலை நேரத்தை மூன்று ஷிப்ட்களாக மாற்றினான்.

“அதெப்படி நீ அப்படி பண்ணலாம்.. இரண்டு ஷிப்ட். இடையில பிரேக் அப்படி தானே நம்ம முறை..” வேதவள்ளி மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“நம்ம முறைங்கிறது இல்லை உங்களோட முறை அது. என்கிட்ட கொடுத்ததுக்கு அப்புறம் என்கிட்ட நீங்க இதை கேட்கவே கூடாது..” என்றான் மகனும்.

“நான் கேட்காம.. போர்ட்ல நான் தான் டிசைடிங் அத்தாரிட்டி தெரியும் இல்லை..” என,

சரித்திரன் இல்லை என்று தலையாட்டியவன், “அந்த பவரை எனக்கு கொடுத்துதான் நான் உள்ளேயே வந்தேன். மறந்துட்டீங்களா..” என்றான்.

விடாப்பிடியாக அவன் அப்போது பவர் வாங்கியது ஏன் என்று இப்போது புரிந்தது. “நீங்க தான் இதுக்கு முக்கியமான காரணம். உங்களால தான் அவனுக்கு பவர் கொடுத்தேன். நீங்க தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணீங்க..” என்று குமரகுருவிடமும் சண்டை.

“காலேஜ் படிக்கும் போதே நான் என் மகனை நம்புனவன். இப்போ உங்கிட்ட இருக்குற பவரை அவனுக்கு வாங்கி கொடுக்க மாட்டேனா..? பொறுமையா இருந்து பாரு வேதா, என்னதான் பண்ணுறான்னு பார்ப்போம்..” குமரகுருவும் சொல்ல, வேதவள்ளிக்கு கோவம் தான்.

“ம்மா.. எனக்கு உங்களை தெரியும். உங்களோட தலையீட்டுல என்னால எதையும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு தான் பவர் வாங்கினேன். கண்டிப்பா அதை நான் மிஸ்யூஸ் பண்ண மாட்டேன். நம்புங்க. கொஞ்ச டைம் கொடுங்க. அவுட்புட் பாருங்க. அப்பறம் கேள்வி கேளுங்க. இப்போ நோ மோர் ஆர்கியூமென்ட்..” என்றுவிட்டான்.

வேதவள்ளிக்கு பயத்தின் காரணமே கோவம். இத்தனை வருடங்கள் பாடுபட்டு வளர்த்த தொழில். கிட்டதட்ட மகனின் வயதும், அதன் வயதும் ஒன்றே. அதன் சிறு சறுக்கலும் அவரை சாய்த்துவிடும் எனுமளவு அதனுடன் உணர்வு பூர்வமாக கலந்திருந்தார். அதன் அச்சமே மகனை விடாமல் தொல்லை செய்ய வைத்தது.

தொடர்ந்த நாட்களில் அவரின் புது தொழிலை கூட  விட்டுட்டு, இங்கேயே குடி இருக்க ஆரம்பித்துவிட்டார். விசாகன் தான் அவரிடம் மாட்டி கொண்டு முழித்தான். “டேய் யப்பா.. என்னால முடியலடா..” என்று  நண்பனிடம் புலம்பும் அளவு அவனை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்.

சரித்திரன் யோசித்தவன்,  “நீ அவங்களோட புது பிஸ்னஸ் பாரு. உனக்கு தான் தொழில் நடத்த தெரியும் இல்லை. இங்க நான் அவங்களை பார்த்துகிறேன்..” என்று நண்பனிடம் அதன் முழு பொறுப்பையும் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டான்.

வேதவள்ளிக்கு சொல்ல, அவர் ஏற்று கொண்டவர், “பாரு.. ஆனா இவனை மாதிரி புது ஐடியாஸ் ஏதும் இம்ப்ளிமென்ட் பண்ண கூடாது..” என்ற ஒற்றை கட்டுப்பாட்டுடன் விட்டுவிட்டார். மகனை போல விசாகன் அவருக்கு. அவன் மேல் நம்பிக்கை இருந்தது.

ஆனால் அந்த நம்பிக்கைக்கும் அவர் ஓர் எல்லை கோடு வைத்திருப்பதை தான் நண்பர்கள் இருவரும் விரும்பவில்லை.

விசாகன் கிளம்பவும், வேதவள்ளி மகனை கேள்வி கேட்க ஆரம்பிக்க, “நோ’ம்மா.. ஸ்ட்ரிக்ட் நோ.. எனக்கு ஒரு வருஷம் டைம் கண்டிப்பா வேணும். அதுவரைக்கும் நீங்க என்னோடே கூட இருங்க. ஆனா கேள்வி மட்டும் கேட்க கூடாது..” என்றுவிட்டான் மிக உறுதியுடன்.

“கேட்டா என்னடா பண்ணுவ.. என்னையே மிரட்டுற..” வேதவள்ளி பேச, மகன் அவரையே பார்த்திருந்தான்.

தனக்கும் மேல் வளர்ந்து, நீட் பார்மல் உடையில், இரு கைகளையும் பேண்ட் பேக்கெட்டில் விட்டபடி தன்னையே பார்க்கும் மகனை வேதவள்ளி ரசிக்காமல் இல்லை. ஆனாலும், “என்னடா வளர்ந்துட்டன்னு எனக்கு காட்டுறியா..?” என்று கேட்டார்.

சரித்திரனிடம் பதிலே இல்லை. அம்மாவை பார்த்தே இருக்க, “நமக்கு அதிகளவு லாபம் வேணாம்ன்னு தான் இரண்டு ஷிப்ட் மட்டும் வைச்சு வேலை பார்க்குறோம். மெஷின்ஸ் தான் அதிகம் பயன்படுத்துறோம்ன்னாலும், மேன் பவரும் நமக்கும் வேணும். எந்நேரமும் பிளான்ட்ல வேலை நடந்துட்டே இருக்கணும்ன்னு இல்லைடா. வர லாபமே நமக்கு தாராளம்..” என்று பொறுமையாக பேச,

“ம்மா..  முதல்ல உட்காருங்க..” என்று அவரை அமர வைத்த மகன், “நாம புது பிஸ்னஸ் ஆரம்பிச்சப்போ எவ்வளவு பணம் ஸ்பென்ட் பண்ணோம்..” என்று கேட்டான்.

“உனக்கு தான் தெரியும் இல்லை..” என,

“அத்தனை கோடியில நம்ம பிஸ்னஸ்க்குன்னு இன்வெஸ்ட் பண்ணது பாதி தான். மீதி பாதி பணம் எங்க போச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்..” என்றான் மகன்.

வேதவள்ளியிடம் மௌனம். “இத்தனைக்கும் நம்ம அப்பா மினிஸ்டர். பவர் இருக்குன்னாலும் கொடுக்க வேண்டியதை கொடுக்காம ஒரு சின்ன பேப்பராவது நகர்ந்துச்சா, இல்லையில்லை..”

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்..”

“இல்லைன்னு சொல்றீங்களா..? அவ்வளவு பணம் எப்படி வந்துச்சு நமக்கு. சேவிங்ஸ் அதுல கால் பங்கு மட்டும் தான். மீதி எல்லாம் இந்த இண்டஸ்ட்ரீ வைச்சு நாம லோன் வாங்கின பணம். ம்மா.. நோ.. எதுவும் சொல்லாதீங்க. இந்த வருமானமே போதும்ன்னா எப்படி லோனை குளோஸ் பண்ண..? புது பிஸ்னஸ் சூடு பிடிக்க குறைந்தது ஒரு வருஷமாவது வேணும். அதுவரைக்கும் அந்த கம்பெனிக்கும் இங்க இருந்து தான் பணம் போகணும், எப்படி எல்லாம் சமாளிக்க சொல்லுங்க..?”

“நம்ம வேற ப்ராப்பர்டி..”

“நான் ஏன் அதை எல்லாம் பண்ணனும்மா..? இங்க இருந்தே தான் பணம் எடுப்பேன். பெர்மிஷன் வாங்கி இன்னும் இரண்டு யூனிட் ரன் பண்ண போறேன். மேன்பவர், மெஷின்ஸ் எல்லாம் புதுசா இறக்க போறேன். குறைந்தபட்சம் மூணு வருஷ டைம். லோனை குளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்..” என்றான் கையை வீசி.

வேதவள்ளி மகன் பேச்சில் அப்படியே அமர்ந்துவிட்டார். அவன் தாத்தாவின் யோசிக்கும் திறன் இவனிடம் இருந்தது. ஆனாலும் அச்சம் இல்லாமல் இல்லை. அதே நேரம் மகன் சொல்வதும் சரியென்று தோன்றியது.

இரவு கணவரிடம் இதை சொல்ல, “தம்பி சொன்னது சரிதான் வேதா..” என்றார் அவர்.

“உங்களுக்கு அவன் எது பண்ணாலும் சரி தான்..” வேதவள்ளி சொல்ல,

“அப்படி இல்லை வேதா.. இப்படி யோசிச்சு பாரு, இதே நான் பவர்ல  இல்லைன்னா நீங்க என்ன பண்ணியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் உங்களால புது பிஸ்னஸ் ஆரம்பிச்சிருக்க முடியுமா..?” என்று கேட்க, வாய்ப்பே இல்லை என்று தான் வேதவள்ளிக்கு தோன்றியது.

“தம்பி இப்போவே இது எல்லாம் செய்றது தான் சரி. நாம அரசியல்ல பணம் பார்க்கிறதில்லை. இதுகூட செஞ்சுக்கலைன்னா எப்படி சொல்லு. இதனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ரூல்ஸ்படி தான் எல்லாம் செய்றோம்ன்னு போது, என்ன கவலை விட்டு தள்ளு, என் மகன் பார்த்துப்பான்..” என்றுவிட்டார்.

வேதவள்ளி யோசித்து கேள்விகளை குறைத்து கொண்டாலும், மகனை தொடர்வதை விட்டுவிடவில்லை. உடன் உடனே எல்லாம் செய்தான். சில மாதங்களில் அவன் சொன்னது போல மூன்று ஷிப்ட் ரன் ஆக ஆரம்பித்தது. லாபகணக்கு வேதவள்ளி எதிர்பாராத அளவு உயர்ந்து போனது.

சரித்திரன் வேகத்தில் நிதானமும் இருந்தது. சட்டென இழுத்து பிடித்தால் அவன் கட்டுப்பாட்டுக்குள் எல்லாம் வருவது போல் தான் வைத்திருந்தான். அப்போதும் அம்மா, மகனுக்கு முட்டி கொள்ளும். சரித்திரன் ஒரு இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டான். அதுவே வேதவள்ளிக்கு கோவம் கொடுக்கும்.

Advertisement