Advertisement

லயம்.. லாளிதம்.. அவள்  1

“வைரவேல்.. வைரவேல் சார்..” போனில் அழைத்து கொண்டிருக்க,

“சார் சொல்லுங்க கேட்குது..” என்றார் வைரவேல் இந்த புறம்.

அவரின் முதலாளி பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து அழைக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டவர்கள், “பிரின்சிபல் உடனே ஸ்டூடண்ட்ஸ் பேரண்ட்ஸை வர சொல்றார்..” என்றார்கள்.

“என்னாச்சு சார்.. எதாவது பிரச்சனைங்களா..? பிள்ளைகள் நல்லா இருக்காங்க தானே..?” வைரவேல் விசாரித்தார்.

“ஹெல்த் எல்லாம் ஓகே.. இது வேற.. முடிஞ்ச வரை சீக்கிரம் வர சொல்லுங்க..” என்று வைத்துவிட்டனர்.

வைரவேல் புருவம் சுருக்கி யோசனையுடன் போனை அதன் தாங்கியில் வைத்தவர், ஆபிஸ் அறையை எட்டி பார்த்தார். மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. இவர் தன் முதலாளி பார்வை படும் இடத்திலே நின்றார். அவசரம், முக்கியமான விஷயம் என்றால் இப்படி தான்.

வைரவேல் நிற்பதை அடுத்த சில நொடிகளில் உள்ளிருந்த முதலாளியும் கண்டுகொண்டிருக்க வேண்டும். கையசைத்து அவரை உள்ளே வர சொன்னார்.

வைரவேல் அனுமதியுடன் கதவை தட்டி உள்ளே சென்றவர், நடுநாயகமான இருக்கையில் அமர்ந்திருந்த ‘வேதவள்ளி’யிடம் மெல்ல விஷயத்தை சொன்னார். கண்ணாடியை கழட்டி வைரவேலை பார்த்தவர், “பிள்ளைங்க ஓகே தானே..?” என்று கேட்க, “எஸ் மேம்” என்றார் வைரவேல் பணிவுடன்.

“ஓகே.. மருமக பேர்ல பிளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க..” என்ற உத்தரவுடன் மீட்டிங் தொடர்ந்தது.

மறுநாள் காலை ஊட்டியில்  இருக்கும் அந்த பள்ளியின்  பிரின்சிபல் அறை முன் மூன்று மாணவர்கள் நின்றிருந்தனர். பலநூறு வருடங்கள் பழமையான பள்ளி அது. அதன்  பிரமாண்ட கட்டிட அமைப்புடன் அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலமுமே  அந்த பள்ளியின் செழுமையை, முதன்மையிடத்தை சொன்னது. நாட்டின் மிக முக்கிய பிரபலங்களின் பிள்ளைகளை அங்கு காணலாம். அதனாலே அங்கு பாதுகாப்பும், கட்டுப்பாடும் அதிகமே.

நாளை அவன் வளர்ந்து இந்த பதவி ஏற்க வேண்டும். இந்த தொழில் எடுத்து நடத்த வேண்டும். அதற்கு என்ன தேவையோ அதை செய்து விடுங்கள். பணம் எங்களுக்கு பிரச்சனையில்லை. எவ்ளவு கேட்டாலும் கொட்டி கொடுக்கிறோம். எங்களுக்கு தேவையானது எங்கள் பிள்ளை எல்லாம் கற்று சரியான முறையில் வளர வேண்டும் அவ்வளவு தான். பெற்றவர்களின் ஒரே எதிர்பார்ப்பு இவை மட்டும் தான். பள்ளியும் அதை செய்வதில் தவறுவதில்லை.

அதற்காக அங்கு படிப்பு மட்டுமே பிரதானம் என்பது இல்லை. அதுவும் ஒரு அங்கம் அவ்வளவு தான். அது தவிர மீதம் எல்லாமும் உண்டு. எல்லாவிதமான கலைகளையும் அங்கு கற்று தரப்படும். கலை துறையில் ஆரம்பித்து விளையாட்டு, தற்காப்பு துறை வரை.

பணம் படைத்த பிள்ளைகள் மேல் பொதுவாக வைக்கும் அபிமானம் அங்கு இல்லை. சிறு வயதில் இருந்தே அவர்களை நெறிப்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். எல்லாம் அட்டவணை படி தான். இவ்வளவு நேர படிப்பு. இவ்வளவு நேர விளையாட்டு, இவ்வளவு நேர தூக்கம். திட்டமிடுதல் அங்கேயே தொடங்கி விடுகிறது.

இவ்வளவு கட்டுப்பாட்டிலும் திசை மாறும் பிள்ளைகள் இருக்க தான் செய்கின்றனர். எல்லா விரலும் ஒன்று போல் இல்லையே. அப்படி தவறி நிற்கும் சில மாணவர்களால் மற்ற மாணவர்களுக்கு  தொந்தரவே.

அப்படியான ஒன்று தான் நேற்று பள்ளியில் நடந்தது, அதன் விளைவே இப்படி பிரின்சிபல் அறை முன் மூவர்  நிற்க வேண்டிய கட்டாயம். அதிலும்  மூவரில் இருவர் இந்த வருடம் தான் அந்த பள்ளியில் சேர்ந்திருந்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள்.

 அப்போதும் ஆராதனா, “இருந்தாலும் இவ அப்பாவை அப்படி பேசியிருக்க கூடாது இல்லை..” என்று ஆதங்கத்துடன் கேட்க, பக்கத்தில் இருந்தவனிடம் இருந்து சத்தமே இல்லை. “ண்ணா..” என்று பெண் மீண்டும் அழைக்க,

“ஷட் அப் ஆராதனா..” என்றான் அவன். அதன் பின் அவளிடம் முழு அமைதி.

இவர்களுக்கு எதிரில் நின்றிருந்த பெண்ணோ திமிராக, நக்கலாக இன்னும் கூட பார்வையால் ஆராதனாவை சீண்டியபடி தான் இருந்தாள்.  அதில் ஆராதனாவிற்கு உள்ளுக்குள் அவ்வளவு புகைச்சல். விட்டால் மீண்டும் அவள் மேல் பாயந்து விடுவாள் தான்.

அப்பாவின் செல்ல பிள்ளை, வெல்ல பிள்ளை அவள். தாங்கவே முடியாது அவருக்கு எதிரான ஒரு சொல்லையும். இவளோ “அரசியல்வாதி மக தானே நீ.. எங்க அப்பாகிட்ட கை நீட்டி காசு வாங்குற கூட்டம் உனக்கென்னடி மரியாதை? என்றல்லவா கேட்டிருந்தாள்.

நடந்தது இது தான். முந்தின நாள் மாலை டென்னில் ஆரம்பகட்ட ட்ரைனிங்  நடந்து கொண்டிருந்தது. அதில் பந்து  இருமுறை ஆராதனா மேல் பட்டு சென்றது. வேண்டுமென்றே தான் அந்த பெண் செய்கிறாள் என்று ஆராதனாவிற்கு புரிய, மூன்றாம் முறை விலகி விட்டதுடன் ஏன் இப்படி என்று கேட்க, அந்த பெண்ணோ.. “அப்படி தான் பண்ணுவேன்.. நான் யார் தெரியுமா..? உன் அப்பா மாதிரி கை நீட்டுற கூட்டமா?” என்று அவளின் அப்பாவை வைத்து அதிகமாக பேசிவிட்டாள்.

ஆராதனா பல்லை கடித்து நிற்க, பந்து திரும்ப வேகமாக அவளை காயப்படுத்தும் நோக்கத்துடன் வந்தது. இவள் கோவத்தில் திரும்ப அடித்த வேகத்திற்கு அந்த பெண்ணால் பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. பந்து அவள் கன்னத்தை வீங்கவைத்து சென்றுவிட்டது.

அதன் விளைவு இப்படி பிரின்சிபல் அறை முன் நிற்பது. அவளுடன் அவளின் அண்ணன் ஆதவனும் நின்றான். அண்ணன் என்றால் வருடங்கள் முன் பிறந்தவன் இல்லை. நொடிகள் முன் பிறந்தவன். இரட்டை பிறவிகள். உருவம், குணம் அத்தனையும் வேறான இரட்டை பிறவிகள்.

இன்னும் சிறிது நேரத்தில் பெற்றவர்கள் வந்துவிடுவார்கள். அப்பா வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் மகள் வழியைவே பார்த்து கொண்டிருக்க வந்ததோ அவளின் அம்மா.  “போச்சு..” ஆராதனா பாவமாக அண்ணனை பார்த்தாள். அவனோ அம்மாவை பாசமாக பார்த்து கொண்டிருந்தான்.

 “போடா அம்மா கோண்டு..” ஆராதனா உள்ளுக்குள் பொசுங்கி போனாள்.

பிள்ளைகளின் அருகில் வந்த அவர்களின் அம்மா ராகவர்தனி,  “இந்த ஸ்கூல் சேர்ந்து இரண்டு மாசம் தான் ஆகுது ஆராதனா..” என்றாள் மகளிடம் கண்டிப்புடன்.

மகள் “சாரி” என்றாள் மென்குரலில். ராகவர்தனி மூச்சை இழுத்துவிட்டு மகள், மகன் தலையை வருடியவள் பிரின்சிபல் அறைக்குள் சென்றாள். தொடர்ந்து எதிரில் நின்ற பெண்ணின் அப்பாவும் வர மாணவர்கள் அறைக்குள் அழைக்கப்பட்டனர்.

நடந்ததை பெற்றவர்களுக்கு சொல்ல, ராகவர்தனி மகளை பார்த்தாள். “பர்ஸ்ட் அவங்க தான் ஆரம்பிச்சாங்க..” என்றாள் மகள். அந்த பெண் மறுக்க “ட்ரைனரை வர சொல்லி என் முன்னாடி விசாரிங்க.  சிசிடிவி செக் பண்ணுங்க..?” என்றாள் ராகவர்தனி. மகள் மேல் நம்பிக்கை அதிகமே.

அதில் நடந்தது தெளிவாக, அந்த பெண்ணிற்கு சஸ்பெங்க்ஷன் கொடுக்கப்பட்டது. உடன் டொனேஷனாக பெரிய தொகையும் கட்ட சொல்ல, பெண்ணின் பெற்றவர் வேறு வழி இல்லாமல் செக் எழுதி கொடுத்தவர், “சாரி மேடம்.. நான் மினிஸ்டர் சார்கிட்ட பேசுறேன்..” என்று ராகவர்தனியிடம் சொல்லி விடைபெற்றார்.

அடுத்து ஆராதனாவிற்கு, “இனியொரு முறை இப்படி நடக்க கூடாது..” என்று வார்னிங் கொடுத்ததுடன் சில லட்சத்தை டொனேஷனாக கட்ட சொன்னார். அப்போது புதியவன் ஒருவன் அனுமதி பெற்று உள்ளே வந்தான்.

‘விசாகன்..’  ராகவர்தனி முணுமுணுக்க, அவன் நேரே இவளிடம் வந்து ஏதோ சொன்னான். அவள் அதிர்ந்து மறுப்பாக பார்க்க, “சாரோட ஆர்டர் மேடம்..” என்றான் அவன். ஆர்டர் என்றுவிட்ட பின் மறுக்க முடியாது. மறுக்க இவளுக்கு ஆசை தான். ஆனால் அவன் வேறு மாதிரி பாய்வான்.

ராகவர்தனி பிரின்ஸிபலிடம் அனுமதி கேட்டு வெளியே சென்று போன் எடுத்து வேதவள்ளிக்கு அழைத்து விஷயத்தை சொன்னாள். “என்ன பண்ணலாம் ராகா.. நீ சொல்றது தான்..” என்றார் அவர்.

“இல்லைத்தை அவர்..”

“அவன் ஆர்டர் போட்டுட்டா.. நீ சொல்லு, உன் முடிவு தான்.. அவனை பார்த்துக்கலாம்..” என்றார் அவர். ராகவர்தனி அமைதி காத்தாள். முன்பொரு முறை இப்படி செய்ததற்கு தான் அம்மா அலுவலகத்திற்கே ரெயிட் விட்டிருந்தான் மகன்.

இத்தனைக்கும் வேதவள்ளி மிக மிக நேர்மையான பெண்மணி. கை சுத்தம், தொழில் சுத்தம் என்பது தொழில் வட்டாரத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவரை தொந்தரவு கொடுக்கவே செய்தான் மகன். அதில் அமைச்சருக்கு இன்னும் புகழ் கூடியது என்பது வேறு விஷயம்.

அடுத்து நீ தான் என்பது போல் மிரட்டலாக பார்த்து சென்ற கணவன் பார்வை இப்போதும் மனைவி தலையை சிலுப்ப வைத்தது. ஆனாலும் பிள்ளைகள் படிப்பு என்பது தான் யோசிக்க வைத்தது. மாமியாரும், மருமகளும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

பிரின்சிபல் அறைக்குள் வந்த ராகவர்தனி, “நாங்க பசங்களை டிஸ்கன்டினியூ பண்ணிக்கிறோம் சார்..” என்றுவிட்டாள்.

பிரின்ஸிபல் இதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து போனவர் பதட்டத்துடன், “ஏன் மேடம்.. நாங்க ஜஸ்ட் வார்னிங் தான் கொடுத்தோம்.. அந்த.. அந்த டொனேஷன் கூட ஸ்கூல்.. ஸ்கூல் வளர்ச்சிக்கு தான். உங்களுக்கு வேண்டாம்ன்னா விட்டுடுங்க. கம்பல்ஷன் இல்லை..” என்றார் வேகமாக.

“சார்.. மினிஸ்டர் சொன்னது இது, நீங்க சீக்கிரம் ப்ரொசீஜர் பாருங்க..” என்ற விசாகன், அடுத்த அரை மணி நேரத்திலே எல்லாம் முடித்து காரை மலை விட்டு இறக்கியிருந்தவன், அந்த நாள் இரவிலே இவர்களை வீடும் சேர்த்துவிட்டான்.

சென்னை மத்தியில் இருந்த அந்த பெரிய கேட் முன் இந்த இரவு நேரத்திலும் ஓயாத கூட்டம் இருக்க, நிமிடங்கள் எடுத்து ஒதுங்கி தான் வீட்டிற்குள் செல்ல வேண்டியிருந்தது. “இரிடேடிங்..” ஆதவன் உதடுகள் முணுமுணுத்து கொண்டது.

கூட்டம், கோஷம், கட்சி வேட்டி  எல்லாம் அலர்ஜியாகிவிட்ட குடும்பத்தில் ஒருவன் மட்டுமே அதிலே ஊறி போயிருந்தான். அப்பா, அம்மா, மனைவி, இரு பிள்ளைகள், தங்கை குடும்பம் என எல்லோரிடமும் இருந்து விலகி தனி ஒருவனாய்.. அவன் ஒருவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சரித்திரன்..

ஒரே காம்பவுண்டில் தனி குடித்தனம் செய்து கொண்டிருப்பவன்.

சரித்திரன்  ******* அமைச்சர்.. என்ற பலகையை பார்க்காமல் கடந்து உள்ளே சென்று கொண்டிருந்த ஆதவனின் ஷூ சத்தம் வழக்கத்தை விட அதிக சத்தத்தை கொடுத்தது.

அண்ணனை தொடர்ந்து சென்ற ஆராதனாவோ அப்பாவின் பலகையில் சிக்கியிருக்கும் நூலை எடுத்துவிட்டு தன் முழங்கையால் அதை தொடைத்து, ரசித்து உள்ளே சென்றாள்.

பிள்ளைகளை தொடர்ந்து சென்ற ராகவர்தனியின் கண்கள் அந்த பலகை பக்கமே செல்லவில்லை. ஆனால் மனம் மட்டும் அந்த பேரை உள்ளுக்குள் உச்சரித்து தான் சென்றது. அவளின் அனுமதி இல்லாமலே. நிற்பது.. நடப்பது போல் அவளின் அன்றாட பழக்க வழக்கங்களில் அதுவும் ஒன்று என்றான பிறகு அவளாலே தன்னை கட்டுப்படுத்த தான் முடியவில்லை.

விட்டுவிட்டாள்..  அதை மட்டுமில்லை..?

Advertisement