Advertisement

சௌமியாவின் தங்கை விஷயத்தில் ப்ரதீப் அடங்கிப்போனது மாறனால்தான். அவளுக்கு மாறனை பதினைந்து வருடங்களாகத் தெரியும். எதையும் மனதில் வைத்துக் கொள்ளும் ரகம் அவன் கிடையாது. முகத்திற்கு நேராக பேசிவிடும் ரகம் அவன். அவனிடம் அனைவரும் பயப்படும் குணம் ஒன்று உண்டு. அது பிடிவாதம்.
அவனது பிடிவாதம் அவனது முன்னேற்றத்திற்கு உதவியது என்பது மறுக்க முடியாது. அதே பிடிவாதம் எத்தனை உறவுகளை இழக்க வைத்தது என்பதை சௌமியாவே அறிவாள். அவனது மாமான்மார்களை அவன் ஏதோ விஷயத்தில் எதிர்த்துப்பேசி சண்டைபோட்டபோது அவர்களும் தடித்த வார்த்தைகள் விட்டுவிட, அந்த பந்தம் அன்றோடு அறுந்து விழுந்தது, தனது அன்னை அழுது புலம்பியபிறகும் இந்நாள்வரை அவர்களை அவன் வீட்டிற்குள் அனுமதிப்பது இல்லை. இது போல பல சொந்தங்கள் அந்நியமான கதையை மாறனின் அன்னை சௌமியாவிடம் கூறுவதுண்டு. 
மாறனின் அன்னை இறந்து இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டன. அதன்பிறகு மாறன் இன்னும் கடினமானவனாகத் தெரிந்தான் சௌமியாவிற்கு. அதனால் அவள் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டாள். அடையாரில் புது வீடு புகும்வரை தினம் ஒரு முறையாவது வண்டியில் செல்கையிலோ பஸ் ஸ்டான்டில் நிற்கையிலோ மாறனைப் பார்த்துவிடுவாள். ஆனால் புதுவீடு சென்ற அதே நேரத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பில் அவனாக இஷ்டப்பட்டு சேர்ந்துகொள்ள இருவரும் சந்தித்து வருடங்கள் பல கடந்துவிட்டன. 
அவளது நினைவில் மாறன் இல்லவே இல்லை.
அவனும் அவளை நினைத்து உருகவில்லை. அவனது சிறுவயது தோழி என்பதைத்தாண்டி இருவருக்குள்ளும் எதுவும் தோன்றவில்லை. தனது தந்தை சில புகைப்படங்களை அவன் கையில் கொடுத்து “இது எல்லாம் நம்ம கட்சிக்காரங்களோட பொண்ணுங்க ஃபோட்டோ. இதில் எது புடிச்சிருக்கோ அதை சொல்லு. பேசி முடிச்சிடலாம். இன்னும் இரண்டு நாளில் நடக்கப்போகும் இலவச திருமணத்தில் நீயும் ஒரு ஜோடி. கட்சி பப்ளிசிட்டிக்காக பதினோரு ஜோடியில் ஒருத்தனாக நில்லு. அப்புறம் ரிசப்ஷன் கிரான்டா வச்சிடுவோம். இளைஞர் அணி உறுப்பினர் ஆகனும் என்றால் இதுதான் என்னோட கண்டிஷன்.” என்று கூறியபோதுவரை மாறன் சௌமியாவைப்பற்றி நினைக்கவில்லை.
செல்போன் திருட்டு முயற்சியின்போது சௌமியாவைப் பார்த்ததும் மாறன் மனதில் சிறு சலனம் வந்தது. தந்தை திருமணத்தைப் பற்றிப்பேசிய போது அவன் அந்த சலனத்திற்கு உயிர் கொடுத்தான். சிறு சலனம் உறுதியான முடிவாக மாறியது.
          * * *  * *
வீட்டில் மாறனது பேச்சுக்கள் போன திசையில் திடுக்கிட்ட சௌமி அவனிடம் பாலாவைப் பற்றி நாசூக்காய்ச் சொல்லி விடலாமா? என்று நினைக்கக்கூட செய்தாள். அப்பாவுக்கு அவளும் பாலாவும் காதலிப்பது தெரியும். ஜாதகம்கூட பார்த்துவிட்டார். அவளுக்கு இருபத்திஆறில் திருமணம் செய்தால் தாலி பாக்கியம் கெட்டியாக இருப்பதாகச் சொல்லவும், இருபத்தி ஆறு வரை கல்யாணப்பேச்சை எடுக்காமல் இருந்தார். 
ஜாதகம் பொருத்தமாக இருக்குன்னு அவர் சொன்னதே போதும் அவரிடம் மேலும் நச்சரிக்கக்கூடாது என்று சௌமியாவும் பாலாவும் அமைதியாக இருந்தனர்.
மாறனுக்கு பாலாவைப்பற்றி தெரியாது. அவன் இருப்பது வேளச்சேரியில். சௌமியாவின் குடும்பமும் மாறனின் குடும்பமும் இருந்தது தண்டையார்பேட்டையில். மாறனின் தந்தை மினிஸ்டர் பதவியில் இருப்பவர். சௌமியாவின் தந்தை அதே கட்சியில் இருபது ஆண்டுகால உறுப்பினர். ஒரு முறை தேர்தலில்கூட நின்று தோற்றிருக்கிறார்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பாலாவை காதலிப்பதை சௌமி தனது தந்தையிடம் சொன்னாள். 
சரியான ஜாதக தாசனான அவர் ஜாதகப் பொருத்தம் இருக்கவும் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார். இனத்தைத் தவிர மறுக்க வேறு காரணம் அவருக்கு இருக்கவும் இல்லை. அந்த விஷயத்தில் மட்டும் அவரது கட்சிக் கொள்கையை பின்பற்றினார் என்றும் சொல்லலாம்.
பதினைந்து ஆண்டுகால காதல் ஒருவழியாக விரைவில் கல்யாணம் என்ற நிலைக்கு இப்போதுதான் வந்து நிற்கிறது.
மாறனிடம் “வெளியே போறேன்.” என்று கூறிவிட்டு தனது வண்டியை தண்டையார்பேட்டை கிரவுன்டிற்கு விரட்டினாள். அந்த மைதானத்தில் தான் இருவரும் வழக்கமாக சந்திப்பது. சௌமியாவின் வீட்டின் அருகே இருந்தது அந்த மைதானம். பாலாவின் அலுவலகத்திலிருந்து அரை மணி நேரப்பயணம் மட்டுமே. வேளச்சேரிக்கும் தண்டையார்பேட்டைக்கும் இருக்கும் தூரம் அதிகம் என்பதால் இருவரும் இந்த மைதானத்தில் சந்தித்துக் கொள்வார்கள். பாலாவின் அலுவலக நேரம் முடிந்ததும் தினம் ஒரு மணி நேரம் இல்லை இரண்டு மணி நேரம் மைதானத்தில் செலவிடுவார்கள். அந்த பரந்து விரிந்த மைதானத்தில் கிரிக்கெட்டும் கபடியும் களைகட்டும். எப்போது சென்றாலும் பள்ளி சீருடைகளுடன் மாணவர்கள் கபடியோ, கொக்கோவோ விளையாடிக் கொண்டிருப்பர்.
அவளது தந்தையின் கட்சி மீட்டிங்கும் இங்குதான் அடிக்கடி நடைபெரும். இரண்டாயிரம் மக்கள் ஒன்றாக அமரக்கூடிய விளையாட்டுத்திடல் அது. அது ஒரு அரசுபள்ளியின் விளையாட்டுத்திடல். பொது மக்களும் உபயோகிக்கும் விதமாக கட்டப்பட்டிருந்தது.
மைதானத்திற்குள் நுழைய கட்சி ஐ.டி கார்ட் இருந்தால் போதும். மாணவர்களுக்கு அவர்களது பள்ளி ஐ.டி கார்ட் இருந்தால் போதுமானது. சௌமியா தனது தந்தையின் கட்சி ஐ.டி கார்ட் காண்பித்து உள்ளே செல்லும் அனுமதி பெற்றிடுவாள். திறந்த மைதானத்தில் பத்து மாணவர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் தங்களை மீறி எந்தத்தவறும் நடக்காது என்பதால் தான் சௌமியா இந்த இடத்தை தேர்வு செய்ததன் காரணம்.
மைதானத்தின் பெரிய ஸ்டேஜ்தான் இவர்கள் இருவரும் அமர்ந்து பேசும் இடம். அங்கேதான் இருவரும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார்கள்.
கிரவுன்டிற்குள் நுழையும்போதெல்லாம் இருக்கும் உற்சாகம் இன்று துளியும் அவளிடத்தில் இல்லை. பதட்டம் மலையளவு இருந்தது. கண்கள்கூட கலங்க ஆரம்பித்திருந்தது. தூரத்தில் பாலாவின் பைக் தெரியும்வரை அவள் தனது மனோ பலத்தை இழந்துகொண்டே இருந்தாள்.
பாலா வந்ததும் அந்த பரந்து விரிந்த மேடையில் தூணிற்கு மறைவாக இழுத்துச்சென்றாள். எப்போதும் இப்படி தனிமையை விரும்பாதவள் இன்று தனியே அழைத்துச்சென்றதே அவனை அதிசயிக்க வைத்தது.
அவளிடம் மறுப்புக்கூறாமல் தூண் மறைவில் சென்று அமர்ந்தான்.
இருவரும் அமர்ந்த நொடி அவனது மடியில் சௌமியா படுத்துக்கொண்டாள். அவனது பேன்ட் அவளது கண்ணீரில் நனைந்தது. ஈரம் உணர்ந்து “டேய் என்னடா? என்னாச்சு?” என்று பதட்டமாக பாலா கேட்டான்.
அவளது தலையை அவன் நிமிர்த்தியபோது மெல்ல அவன் முகம் பார்த்தவள் அவனது கண்களைப் பார்த்து சொன்னாள் “பாலா நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்குவோம். ப்ளீஸ். என் பிறந்தநாள் வரையெல்லாம் வெயிட் பண்ண வேண்டாம்ப்பா..” 
“சௌமி.. இன்னும் இரண்டு நாளில் உன்னோட பர்த்டே வருது.. அதுக்கு மறுநாளே நானும் அம்மாவும் பெண் கேட்டு வரப்போறோம். ஒரே வாரத்தில் நம்ம கல்யாணம். இதுதான நம்ம ப்ளான். ஏன்டா திடீர்ன்னு என்னென்னமோ உளறுகிற?”
“இல்லடா பாலா.. எனக்கு பயமா இருக்கு. இன்னும் இரண்டு நாள்தான இருக்கு? வா இப்பவே ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டு. வா வா எழுந்திரி.. “
“அதைத்தான்டி நானும் கேட்கிறேன். இன்னும் இரண்டு நாள்தான இருக்கு.. எதுக்கு இப்ப அவசரப்படணும்? உன் அப்பாவை கோபப்படுத்தணும்? என் தம்பி கல்யாணம் முடிச்சதும்  உன்னைக் கட்டிக்கொடுங்கன்னு உன் அப்பாகிட்ட கேட்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? ஆனா உன் அப்பாவின் முழு சம்மதம் கிடைக்குணும் என்றுதான நான் உன்னோட இருபத்தாறாவது வயசு வரை காத்திருக்கேன். இத்தனை நாள் கல்யாணத்தைப் பற்றி தீவிரமாக பேசாமல் திடீர்ன்னு ஏன்டா அதைப் பத்தி இவ்வளவு சீரியஸாக பேசுற? என்னடா பிரச்சனை?”
“மாறன் இன்னைக்கு என் வீட்டுக்கு வந்தான் பாலா.”
“சரி.”
“அவனோட பார்வையே சரியில்லை.”
“ஹா.. ஹா.. பசங்களா பொறந்தா பத்து பொண்ணுங்களை ஸைட் அடிக்கணும் செல்லம். இல்லைன்னா விஷயம் வேறமாதிரிப் போயிடும். எனக்குத்தான் அந்தக்கொடுப்பனை இல்லை. மத்தவனாவது என்ஜாய் பண்ணட்டுமே சௌமி.”
“பாலா நான் சீரியஸாக இருக்கேன்.”
“சரி. சரி நானும் சீரியஸாக பேசுறேன். மாறன் உன் வீட்டுக்கு வந்தான். உன்னை ஸைட் அடிச்சான். அப்புறம்?”
“அவனோட பார்வையே சரியில்லை. என்னைத் திங்கிற மாதிரி பார்க்குறான்.” 
“அவனோட கண்ணை நோண்டிடுறேன். அப்புறம்?”
“இல்லை. யார் கண்ணையும் நீ நோண்ட வேண்டாம். பேசாமல் இப்பவே என்னை கல்யாணம் பண்ணு. ரெஜிஸ்டர் மட்டுமாவது பண்ணிப்போம். மற்றதை இரண்டு நாள் கழித்து பார்த்துக்கலாம்.”
‘ மற்றது என்றால் என்ன ’ என்று புரிந்துபோனபோது பாலா தனது நெஞ்சை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். 
“மற்றதை அப்புறம் பார்த்துக்கலாமா? காலையில் கல்யாணம் முடிந்து எட்டு மணிநேரம் வெயிட் பண்ணி முதலிரவு நடப்பதே பதினைந்து வருஷமா உன்னை லவ் பண்ணும் எனக்கு பெரிய விஷப்பரிட்சை. இதுல நீ இரண்டு நாள் கழிச்சி பார்த்துக்கலாம் என்று சொல்றது நரகம்டி.. ரொம்ப ரொம்ப ஓவர்டி.. வேணும்னா இப்படி செய்யலாம் மற்றதை இன்னைக்கு முடிச்சிட்டு ரெண்டு நாள் கழித்து கல்யாணம் செய்துக்கலாம். ரெஜிஸ்டர் பண்றதைவிட இதுதான் ரொம்ப ஸ்ட்ராங்கா எங்கனாலும் பேசும்.  ஜோசியக்காரன் கல்யாணத்துக்குதான நாள் குறிச்சான், சாந்தி முகர்த்தத்துக்கு நான் குறிச்சிக்கிறேன். ம்?”  என்று கூறி கண்ணடித்தான்.
இவ்வளவு நேரமும் அழுகையும் கவலையும் சூழந்திருந்த கண்களில் வெட்கம் வந்தது.
“போடா. லூசு.” 
“லூசா? சொல்லுவடி சொல்லுவ. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஃப்ரண்ச் கிஸ், ஜப்பான் கிஸ், சைனா கிஸ்ன்னு தூள்கிளப்பும்போது நான் இன்னும் இந்தியன் கிஸ்கூட அரைகுறையாக வாங்குறேன்ல்ல.. என்னை லூசுன்னு சொல்லதான் செய்வ. ஏன் சொல்ல மாட்ட?”
“அதென்ன ஜப்பான் கிஸ்? சைனா கிஸ்?”
“அதுவா? அது ஹைட் சம்பந்தப்பட்ட விஷயம். உன்னோட பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. கல்யாணத்திற்கு பிறகு டீடெய்லாக சொல்லித்தர்றேன்டி.”
“அதெல்லாம் எனக்கு வேணாம். இப்ப கல்யாணம் மட்டும்தான் வேணும்.”
“என் செல்லம்ல்ல? இன்னும் ஒரு வாரம். ஒரே ஒரு வாரம்தான? ப்ளீஸ்டி என்னையும் குழப்பாமல் நீயும் குழம்பாமல் சமத்தா இப்ப வீட்டுக்கு போவியாம். நான் உனக்குப்பிடிச்ச கேக் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுப்பேனாம். அப்புறம் நான் உனக்கு பத்து இந்தியன் கிஸ் கொடுப்பேனாம். அதையும் நீ வாங்கிக்குவியாம் ஓகே?”
“அப்பன்னா நீ கல்யாணம் பண்ணமாட்ட?”
“யாரு பண்ண மாட்டேன்னு சொன்னா? அதுக்காகதானடி மாமா ஆறு வருஷமா வெயிட்டிங். இன்னைக்கு வேணாம் இன்னும் ஒரு வாரம் கழிச்சி பண்றேன்னு சொல்றேன்டி.”
சௌமியா உம்மென்று உட்கார்ந்திருந்தாள். மீண்டும் அமைதியாக அவனது மடியில் படுத்துக்கொண்டாள்.
“ஏய் சிக்ஸ்.” என்று மாணவர்களின் சத்தம் கேட்டது. கைதட்டல்கள் கேட்டது. சௌமியாவின் விசும்பல் கேட்டது.
“டேய்.. சௌமி”
சௌமியா அசையவில்லை.
“அடேய்..”
“டேய் சௌமி.. இந்தா என்னைப்பாரு..” சௌமியா அசையவில்லை.
“டேய் கண்ணம்மா.. என்னைப் பாரேன்.”
“மாறனை நினைச்சா கொஞ்சம் பயமா இருக்குடா.. அவன் பார்வையே சரியில்லை.” 
“இந்த பயம் தேவையில்லாதது நீ நடக்கவே நடக்கப்போகாத விஷயத்தை நினைச்சு கவலைப்படுற லூசு..”
“இல்ல பாலா..” என்று அவள் மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தபோது பாலா அவளது இதழ்களில் தனது இதழ்கொண்டு வருடினான். 
சௌமியா கண்களை மூடிக்கொண்டாள். மூடியிருந்த கண்களில் முத்தமிட்டான். அவன் இதழ் கொடுத்த மாற்று மருந்துயில்லா போதையில் தனது கவலையாவும் மறந்தவள் அவனிடம் “ஏய்..” என்றாள். 
கண்களில் அவனது இதழ் இருக்க விழிகள் திறக்காமல் “அவனிடம் எதுவும் தப்பா நடக்காதுல்ல?” என்று வினவினாள்.
“ச்ச.. ச்ச நடக்காதுடி. காட் ப்ராமிஸ்.” என்று அவனது உதடுகள் சொன்னது. விரல்கள் அவளது உதடுகளில் வேறொன்று சொன்னது.
“ஏய் ராஸ்கல்..” என்று விழி திறந்து அவனது மடியில் இருந்து எழப்போனவளிடம் “சரி சும்மா இருக்கேன். நீ படு.” என்றான்.
இப்போது நன்றாக அவன் மடிமீது படுத்துக்கொண்டவள் அவனிடம் விரல்களில் ஒன்று இரண்டு மூன்று என்று காண்பிக்கவும் “ஐ லவ் யு” என்றான் பாலா சிரித்துக்கொண்டே.
இது அவர்களது சைகை பாஷை. அவள் 1, 2, 3 என்று சைகையில் காட்டினால் அவன் “ஐ லவ் யூ” சொல்ல வேண்டும்.
“என்ன  பயம் போயிடுச்சா?”
“ம் கொஞ்சம். நீதான் காட் ப்ராமிஸ் செய்திருக்கியே. அதான் கொஞ்சம் போயிடுச்சு.” 
அவள் நம்பிக்கையில் அவன் மனம் இளகியது. மீண்டும் அவளிடம் அவனது விரல்கள் பல சில்மிஷ வார்த்தைகள் பேச ஆசை கொண்டபோது அவள் மேலும் பேச நினைத்தது தடைபட்டது. 
அவனது விரல்களிடம் பயந்து விலகியவளிடம் “நீயாக ஒன்றே ஒன்று கொடு சௌமி.” என்று வழக்கம்போல கெஞ்சினான். அவன் கெஞ்சுவதும் அவள் பிடிவாதமாய் மறுத்துவிட்டு சென்றுவிடுவதும் எப்போதும் நடப்பதுதான். ஆனால் இன்று மனதில் இருந்த பாரம் அவளுக்கு தைரியம் கொடுக்க மிகுந்த தயக்கத்துடன் முத்தம் என்ற பெயரில் ஒன்றைக் கொடுத்தாள்.
“இன்னும் ஒண்ணே ஒண்ணுடி.. நான் அசையாமல் இருக்கேன்.. நீயாகவே கொடுடி சௌமி..” என்று காதல் செய்தான் அவளிடம்.
பத்து முறை அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்து எட்டு முறை அவனிடம் “மாட்டேன் போடா லூசு..” என்று சொல்லி ஆறு முறை “போ.. பாலா” என்று கொஞ்சிவிட்டு ஒரு ஒண்ணேமுக்கால் முத்தம் கொடுத்தாள். ஆமாம் இரண்டு என்று அந்த முத்தத்தை பாலாவால் கணக்கில் கொள்ள முடியவில்லை. இரண்டாவது தரும்போது மிகந்த அவசரம் அவளிடத்தில். அதனால் பாலாவின் கணக்கில் அது அரைகுறை முத்தம். இரண்டு என்று கணக்கில் அதனை வைக்கவில்லை அவன். ஆனால் அவளது கணக்கில் அது ஆயிரம் முத்தங்களுக்குச் சமம்.
அறியாத வயதில் ஆரம்பித்து பதின் வயதில் தீவிரமடைந்து இளமை நர்த்தனமாடும் வயதில் நிதானித்து காதலித்தனர்.
பாலாவிடம் சௌமியா “பதினைந்து வருஷக்காதல் .. சிக்ஸ்த் படிக்கும்போது என்கிட்ட நீ ஐ லவ் யூ சொல்லியிருப்பியா? நாட்கள் எப்படி ஓடிப்போயிடுச்சுன்னு பார்த்தியாடா..” என்று பூரித்த போதெல்லாம்… அவன் அவளிடம் இன்னும் “ஒரு வருஷம் சேத்துக்கோ சௌமி. ஃபிப்த் ஸ்டார்டிலேயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். சிக்ஸ்த்தில் தான் சொல்ல தைரியம் வந்திச்சு..” என்று சொல்லி அடி வாங்கியிருக்கிறான்.
இந்த பதினாறு வருடக்காதல் மடியக்கூடும் என்று இருவரும் கனவில்கூட நினைக்கவில்லை. ஆனால் மடிந்துதான் போனது. நரம்புகள் யாவும் அறுந்து இரத்தம் சொட்டச் சொட்ட மடிந்துகிடக்கும் சிறு பறவை ஒன்றைப்போல சௌமியா பாலாவின் காதல் துடித்து மடிந்தது.
ஈவு இரக்கமின்றி அந்த அழகிய பறவையின் கழுத்தில் தனது கால்களால் அழுத்தி மிதித்திருந்தது விதி. பறவையும் செத்தே போனது.. 
ஒரு காதலை ஒருவனின் ஆசை அழித்தது.
  

Advertisement