Advertisement

அது நப்பாசை என்பது தாமதமாக அவள் உணர்ந்தாள். அவளது பார்வையின் பொருள் புரிந்தவர் அவளிடம் சொன்னார் “இந்த வண்டியில் ஜி.பி.எஸ் இருக்குமா. மாறன் யாரையும் நம்ப மாட்டான். என்னைக்கூடத்தான். எந்த இடத்திலும் வண்டி நிற்கக் கூடாது என்பது எனக்கு வந்திருக்கும் ஆர்டர். உன் விஷயத்தில் அவன் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறான்டா. எனக்கு பாலாவைப் பற்றித் தெரியும்..” 
“அய்யோ.. கடவுளே.. என்னால தாங்க முடியலையே..”
“சௌமியா.. இந்தா பாரு.. என்னைப்பாரு.” அவள் கஷ்டப்பட்டு அவரது முகத்தைப் பார்த்தாள்.
மாறனின் அப்பாவைப்பற்றி உனக்கு தெரியும்ல?   இனி நீ போகும் பாதையில் நேராத்தான் போக முடியும். திரும்பி பார்க்கணும் என்று நினைக்காத. அப்படி மீறித் திரும்பி யாரையாவது பார்த்தீனா.. நீ யாரைப் பார்த்தியோ அவுங்களை மீண்டும் இந்த ஜென்மத்தில் நீ பார்க்க முடியாது. புரியிதா? அவுங்க முண்டம்கூட கிடைக்காது மசுருகூட கிடைக்காது. அது உன் அப்பாவாக இருந்தாலும் சரி பாலாவாக இருந்தாலும் சரி.”
“அண்ணே.. அண்ணே..” என்பதற்கு மேல் அவளிடம் வார்த்தைகள் இல்லை.
“அண்ணேன்னு சொல்றதாலதான் இவ்வளவு தூரம் சொல்றேன். மணமேடையில் ஏதாவது பிரச்சனை பண்ணணும் என்று மட்டும் நினைச்சிடாதம்மா. உன் அப்பாவின் உசுரை நீயே எடுத்திடாதம்மா. பாவம் அவரே பாதி செத்திட்டார். மிச்சம் மீதி இருக்கும் உயிர் உன் தங்கச்சிக்காக வச்சிக்கிடட்டுமே? கொஞ்சம் யோசிச்சுக்கோம்மா. மனசை மாத்திக்கிறது கஷ்டம் தான். இல்லைன்னு யார் சொன்னா? ப்ரீத்தி, பாலா, உன் அப்பா இவுங்களை ஒரே ஒரு நிமிஷம் நினைச்சுப்பாரு. மூனு உசுரு உன் கையில இருக்கும்மா.” சட்டென்று பேச்சை நிறுத்தியவர் அவளிடம் “ப்ரீத்தி எங்க?” என்றார்.
“அவ ஹாஸ்டலில் தான் இருக்கா. நேத்து நைட் மாறன் வந்ததோ.. இன்றைக்கு அவனுக்கும் எனக்கும் கல்யாணம் என்பதோ அவளுக்கு தெரியாதுன்னு நெனைக்குறேண்ணே.. அண்ணே என்னை ப்ரீத்திகிட்டகூட்டிட்டு போங்கண்ணே. அவளையும் அழைச்சிட்டு பாலாவுடன் நான் பெங்களூர், இல்ல மங்களூர் போயிடுறேன். ப்ளீஸ்ண்ணே. அப்பா எப்படியாவது சமாளிச்சிடுவார். மாறன் அப்பாவுக்கு எதுவும் ஆகவிடமாட்டான். ப்ளீஸ்ண்ணே..”
“உன் தங்கச்சி ஊட்டியில் படிக்குது. நாம இருப்பது சென்னையில்.எவ்வளவுதான் அழுத்திப்போனாலும் கோயம்பத்தூர் தாண்ட முடியாது. அதுக்குள்ள மாறன் ஆளுங்க நம்மை பிடிச்சிடுவாங்க. அப்படியே போனாலும் எண்ணி பத்து நாளுக்குள் முதல்ல ப்ரீத்தியைதான் பிடிப்பானுங்க. மூனு நாளில் அவ படிக்கும் ஸ்கூல் வாசலில் அவ பொணம் கிடைக்கும். அடுத்து பாலாவை பிடிச்சி..”
“அண்ணே சொல்லாதீங்க.. சொல்லாதீங்க..”
“அதான் நடக்கும் சௌமியா. மாறன் இந்த கொடுமை செய்ய மாட்டான். ஆனால் அவனோட அப்பா இதை கண்டிப்பா செய்வார்.”
அத்தனை நேரம் நின்றிருந்த அழுகையும் கண்ணீரும் மீண்டும் ஆரம்பித்தது “அம்மா, அம்மா” என்று அழுத சௌமியாவைத் தேற்றும் விதமாக அவளிடம்,  
“மாறன் தம்பி நல்லவன் தான்டா. உன்னை நல்லா வச்சிப் பார்த்துக்குவான்.” என்றார்.
மாறனைப்பற்றி அவர் பேச ஆரம்பித்ததும் பாறையாய் இறுகிய முகத்தை குனிந்து அவரிடமிருந்து மறைத்துக்கொண்டாள். அதன் பிறகு அவர் கேட்ட கேள்விகளுக்கும் சொன்ன விளக்கங்களுக்கும் பதில் தராமல் ஊமைபோல வந்தாள்.  திருமணப் பந்தல் வந்தபிறகு அவளை “சௌமியா” என்று அழைத்து பேச நினைத்தவரை நிமிர்ந்து பார்க்காமல் முன்னே நடந்தாள்.
சென்னி மாறனைத் தூக்கி வளர்த்தவர். அவனது பிடிவாதம் பற்றி நன்கு அறிந்தவர். அவனிடம் ஒரு நாளில் எத்தனை வார்த்தைகள் பேச வேண்டும், பேச்சில் எந்த எல்லையில் நிற்க வேண்டும் என்பதை அறிந்தவர். இருபது வருட பழக்கமே என்றாலும் இருபது நொடிகளுக்கு மேல் அவர் அவனிடம் நின்று பேசுவதில்லை. ஒரு நாளுக்கு இருபது நிமிடங்கள் என்பது அவரது கண்டிப்பான வரையறை. இந்நாள் வரை அதை அவர் மீறியதில்லை. ஆனால் சௌமியா விஷயத்தில் முதல் முறையாக மீறினார். ஒரு மணிநேரம் அவனிடம் பொறுமையாய் எடுத்துக் கூறினார்.
“மாறன் இது சரி வருமா? சௌமியா ஏற்கனவே ஒரு பையனை..”
“தெரியும் சென்னி அண்ணே. அதைப் பற்றி பேச வேணாமே..”
“அந்த பையன் ரொம்ப நல்ல பையன் தம்பி.”
“அந்தப் பையனைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? என் கண்ணுல எப்படிப் படாமல் போச்சு?”
“அவுங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் தம்பி. எனக்குத் தெரிஞ்சி ஒரு பத்து வருஷப்பழக்கம். வேணாம் தம்பி சௌமியா விஷயத்தில் நீ அவசரப்படுறப்பா.”
“சென்னி அண்ணே.. நான் ஒண்ணு கேட்பேன் நீங்க மறுக்காமல் பதில் சொல்லணும்.” 
“கேளுப்பா.”
“வைரம், தங்கம், காசு, பணம்ன்னு ஆயிரம் ஆயிரம் விலை மதிப்பே இல்லா பொருளைக் கொடுத்து உங்க பொண்டாட்டியை யாராவது விலை பேசினா வித்திடுவீங்களா?”
“இல்ல மாட்டேன்.” என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு.
“நானும்தான் மாட்டேன். சௌமியா தன்னோட காதலை காரணமாக வைச்சி என்னோட எண்ணத்தை விலை பேசினா நானும் மசியமாட்டேன்..”
“நீங்க நினைக்கிறது புரியிது.. நீ சௌமியாவை ஒரு மாதமாகத்தான கல்யாணம் என்ற பார்வையில் பார்க்கிற.. சௌமியா அவனை பத்து வருஷமா லவ் பண்ணுறாளேன்னு கேட்கிறீங்க. அதுக்கும் என்கிட்ட பதில் இருக்கு. என்னோட அன்பை சௌமியா உணரும்போது அவனோட காதலை விசிறி எறிஞ்சிடுவா.” 
“உன் கணக்கு தப்பிடுச்சுனா? அந்தப் பொண்ணு உன்னைவிட பிடிவாதமா இருந்தா? என்ன செய்வ தம்பி? அப்ப ரெண்டு பேர் வாழ்க்கையும் தானே வீணாகப்போயிடும்?”
மாறன் லேசாக சிரித்துவிட்டு அவரிடம் “என்னைவிட பிடிவாதமா? யாருக்காவது அப்படி ஒரு பிடிவாதம் இருக்க வாய்ப்பிருக்கா? சொல்லுங்கண்ணே. என் மாதிரி பிடிவாதம் யாருக்காவது இருக்குமா? அதுவும் ஒரு பொண்ணுக்கு இருக்குமா? “
“இருக்காதுதான் ஆனாலும் மாறன்.. கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு..” 
“இல்லண்ணே. இதில் என்போக்குல விட்ருங்க. என் மனசை நானும் மாத்திக்க எவ்வளவோ டிரை பண்ணேன். என்னாலயே என் மனதை மாத்திக்க முடியாதபோது நீங்க சொல்றது எதுவுமே என் புத்திக்கு ஏறாது. என் மனசுக்கு யார் சொல் பேச்சும் கேட்கத் தெரியாது. ப்ளீஸ். என்னைத் தனியா விடுறீங்களா?” 
சென்னி அதற்குமேல் ஒன்றும் பேசாமல் வாசலில் நின்று கொண்டிருந்த குவாலிஸ் நோக்கி நடந்தார்.
மாறன் அவர் சென்றுவிட்டதை குவாலிஸின் என்ஜின் உருமியதை வைத்து அறிந்தவன் அவர் கூறிய சாதக பாதகங்களைப் பற்றி யோசித்தான். இல்லை அவர் பாதகங்களைப் பற்றி மட்டுமே சொன்னார். அதைப் பற்றித்தான் அவனும் யோசித்தான். ‘ஐந்து வயதில் இருந்து சௌமியாவைத் எனக்குத் தெரியும் அவ நிச்சயம் மாறுவா. கல்யாணம் முடிஞ்சிடுச்சினா எல்லாம் சரியாகிடும்..’ என்று நம்பிக்கை வைத்தான். அந்த நம்பிக்கை ஒரு மாயை என்றுகூடத் தெரியாமல்.
வரண்ட பாலைவனத்தில் தொலைதுரத்தில் தெரிந்த பொருளை வெள்ளிக் கிண்ணம் என்றும், அதில் நேற்று பெய்த மழைநீர் தேங்கியிருக்கும் என்றும் நினைத்தானாம் ஒருவன். ஒரு அரை மணி நேரம் நடந்து அதன் அருகில் செல்லும் வரை அந்த வெள்ளிக் கிண்ணம் என்னும் மாயை அவனைப் பிடித்திருந்தது. ஆனால் அதனை நெருங்கிய பின்னர்தான் அது ஒரு மனிதனின் மண்டை ஓடு என்றும் அதில் தண்ணீர் இல்லை மண்புழுக்களும் கரையான்களும் இருக்கின்றன என்பதும் அவனுக்குத் தெரிந்ததாம். மாறனின் நம்பிக்கையும் அப்படி ஒரு மாயைதான் என்பது அவனுக்குத் தெரியவரும் போது அவனது தோல்வியை அவனது மனம் ஒப்புமா என்பது கேள்வி.
 நிச்சயம் ஒப்பாது என்பது பதில். 
சில நேரங்களில் கேள்விகளை விட பதில்தான் கடினமாக இருக்கிறது. மனதுக்கு ஒப்பாத காரணத்தால் பதில்தான் ஒப்பாமல் இருக்கிறது.
கேள்வி மட்டும் இல்லை. பதிலும் சில நேரங்களில் கடினமானதுதான்.
  * * * * *
  
மணமேடையில் மாறன் அவளது முகவாட்டத்தை கவனிக்காததுபோல இருந்துகொண்டான். மேடையில் இருந்த பத்து புதுமண ஜோடிகள் இயந்திரமாய் தாலி கட்டியதுபோல்தான் மாறனும் சௌமியா கழுத்தில் தாலியைக் கட்டினான். ஆனால் அவன் மனதில் சௌமியாவை முழுதும் ஆட்சிசெய்யத் துடித்தான். உடலாலும் மனதாலும். தாலி கட்டி உடலால் ஆட்சி செய்யப் போவதை உறுதி படுத்திக்கொண்டான். ஆனால் மனதை?
ஒரு பெண்ணின் உடல் ஆணின் ஆட்சிக்குள் எளிதாய் சிக்கிவிடும். ஆண் என்பவன் வலிமை மிக்கவன் என்னும் காரணத்தால் ஒரு பெண்ணின் உடல் ஆணின் ஆட்சிக்குள் எளிதாய் சிக்கிவிடும்.  
ஆனால் பெண்ணின் மனம்? அதன் தியரியே வேறு. ஒரு ஆணின் மனதுக்குள் ஒரு பெண்ணின் மனம் கலப்பது என்பது மார்கழியில் பனியும் குளிரும் கலப்பது போல. இது  இயற்கையாக நடக்கும் ஒன்று.
சுண்டு விரல் அளவே இருக்கும் டெய்லர் பறவைகள் அதனைவிட ஐந்து மடங்கு உயரம் கொண்ட இரண்டு இலைகளின் ஓரங்களைத் தைத்துப் பிணைத்து தனது வீட்டைத்தயார் செய்வது போல அது இயற்கையாக நடக்கும் ஒன்று. 1.130 கிலோ மூளை கொண்ட நாம் மிளகளவு மூளைகொண்ட இவைகளை நினைத்து ஆச்சரியம் கொள்வது போல பெண்ணின் மனம் ஆணின் மனதுடன் கூட்டுசேர்வதும் ஒரு ஆச்சரியமான விஷயம்தான். 
உடலின் பிணைப்பு இரண்டு நிமிடங்கள் கூடுதலாக நீடித்தால் அது சிற்றின்பத்தின் பேரின்பம். இரண்டு நிமிடங்கள் கடந்தபிறகு அங்கே பிணைப்பு அறுந்துவிடும். மனதின் பிணைப்பு இணைந்தால் இணைந்துவிட்டதுதான். “யாராவது பார்க்கணும்னா பாருங்க முகத்தை மூடப்போறேன். யாராவது பார்க்கணும்னா பாருங்க முகத்தை மூடப்போறேன்..” என்று கையில் எருதை வைத்துக்கொண்டு வெட்டியான் நமது சவத்தைப் பார்த்துக் கத்தும் வரை அந்தப் பிணைப்பு அறுந்து போகாது. மனதில் ஏற்படும் பிணைப்பு சவக்குழிக்குள் செல்லும் வரை அறுந்து போகாது.
இது சத்தியம். 
இந்த சத்தியம் அறியாத மாறன் நாய் படாதபாடு பேய் படாத பாடு படப்போகிறான். ஆனால் படட்டும் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நன்றாக படட்டும்.
  * *  * * *  * *
  
மாலையும் கழுத்துமாய் சௌமியாவும் மாறனும் தனது வீட்டிற்குள் நுழைந்தபோது அனு ஆனட்டிதான் ஆலம் சுற்றி வரவேற்றார். நண்பர்களை கவனிக்க மாறன் பத்து நிமிடத்தில் கிளம்பிவிட, சௌமியா தனது அறைக்குள் நுழைந்தாள்.
அனு ஆன்ட்டியும் அவளைத் தொடர்ந்தார். 
கழுத்தில் இருந்த மாலையை கழற்றி ஆவேசமாய் வீசியவள் அனு ஆன்ட்டியைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
“பாலா ஏன் வரல ஆன்ட்டி? அவன் ஏன் என்னைக் கூட்டிட்டுப்போக வரல? நான் அவன்கூட போகணும் ஆன்ட்டி. என்னை அவன்கிட்ட கூட்டிட்டுப்போங்க.”
“சௌமி.. விதியை மாற்ற முடியாதும்மா. மாலையைக் கழற்றாதே.. யாராவது உன்னைப் பார்க்க வந்திட்டே இருப்பாங்கம்மா.” என்று கூறி அவள் கழுத்தில் அதை போட்டுவிட்டார்.
“எனக்கு இது வேணாம்..” என்று கதறியவள் மாலையில் கைவைத்தபோது மாறனின் தந்தை அவள் எதிரே நின்று கொண்டிருந்தார். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க பின்னால் இரண்டு அடிகள் நகர்ந்தாள். தனக்கு பின்னால் இருந்த சுவற்றில் தலைமோத, அசையாமல் நின்றாள்.
தன்னுடன் வந்த நண்பரின் காதில் ஏதோ சொல்லிய மாறனின் தந்தை மெல்ல அறைக்குள் நுழைந்தார். அனு ஆன்ட்டி சௌமியாவின் அருகே சென்றதும், 
“பொறும்மா.. நான் சௌமியாவுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து கூட்டிட்டு வர்றேன். வீட்டில் பெரியவங்க இல்லைல்ல? அதான் தெரியலை. நான் சொல்லிக்கொடுத்து கூட்டிட்டு வர்றேன்.”
“வாம்மா” என்று அவர் அழைத்ததும் மறுபேச்சின்றி அவர் பின்னால் சென்றாள் சௌமியா.
அவளது வீடே அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. உயர் ரக சோபாக்கள் கிடைத்த இடத்தில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. அவள் உயரம் கொண்ட அவளது ஃபிரிஜ் இருந்த இடத்தில் ஒரு பெரிய காக்ரேஜ் பீரோல் உயரத்திற்கு ஒரு புதிய ஃபிரிஜ் இருந்தது. வீட்டின் வாசலில் பெரிய ஷாமியானா போடப்பட்டிருந்தது. மணி ஏழு நாற்பது. விடிந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டது. ஆனால் சிறுத்தைகள் நடமாடும் இருட்டான காடுபோல அவளது வீடு மாறிவிட்டதாக உணர்ந்தாள் சௌமியா.
அவளது அப்பாவின் அறையில் கிடந்த சோபாவில் அவளை அமர வைத்தார் அவர். 
அவள் எதிரே இருந்த  கட்டிலில் அவர் அமர்ந்து கொண்டார். நேராக விஷயத்திற்கு வந்தார். “நீ ஒரு பையனைக்காதலிச்ச..” அவளிடம் மிகுந்த அதிர்ச்சி. ஆனால் அவர் தெளிவாகவே இருந்தார். அவளது அதிர்ந்த பார்வையை பார்த்தபிறகும் மெல்லிய குரலில் தெளிவாகப் பேசினார்.
“அவனும் உன்னைக் காதலிச்சான். ஆனா மாறனுக்கு பொண்டாட்டியாகிட்டியே? இப்ப என்ன பண்ண முடியும்? என் கட்சிக்காரங்க முன்னாடி மாறன் உன்னை பொண்டாட்டியா ஏத்துக்கிட்டான். அதை மாற்ற முடியாது. கல்யாணத்துக்கு முன் மாறாத மாறன் கல்யாணத்திற்கு பிறகு உன்னை விட்டுக்கொடுத்து மாறுவான்னு நினைக்கிற? நிச்சயம் மாற மாட்டான். அந்தப் பையனும் மாறமாட்டான்னு தெரியும். அவன் பேரு பாலாதான?”
“என்னம்மா அப்படிப்பார்க்குற? ஆயிரம்கோடி சொத்துக்கு அதிபதியா வரப்போற பேரனைப் பெத்துக்கொடுக்கப்போற. அப்படிப்பட்ட பொண்ணப்பற்றி நான் விசாரிக்காமலா கல்யாணம் வரை முடிவெடுப்பேன்? என் பையன் உன்னைத்தவிர வேற சாய்ஸ் எனக்குக் கொடுக்கலை. கிடைத்த சாய்ஸ பெஸ்ட் சாய் மாத்துறதைப் பற்றி நான் யோசிக்காமல் காரியத்தில் இறங்குவேனாம்மா?” 
  “எங்க விட்டேன்? ம்.. பாலா உன்னைத்தேடி வருவான். நான் விசாரிச்சது சரின்னா கண்டிப்பா வருவான். அவன் முடிவில் அவன் மாற மாட்டான். நீ வேணும்னு வந்து நிப்பான். அப்ப என்ன செய்யலாம்?”
எச்சிலை விழுங்கினாள் சௌமியா.
“நீதான்மா மாறணும்.”
நிதானமாய் யாரோ அவளை கூர் வாள்கொண்டு கூறுபோட்டார்கள். அவள் முனங்கக்கூட இல்லை. அவளது கழுத்து வயிறு கை கால்கள் என்று நிதானமாகக் கிழிக்க அவள் அசையாது பார்ப்பதுபோல் உணர்ந்தாள்.

Advertisement