Advertisement

பாலாவின் மடியில் சௌமியா தலைசாய்த்துப் படுத்து அழுது புலம்பி மூன்று நாட்கள் கழிந்திருந்தது. மறுநாள் பாலா வந்து பெண் கேட்பதாகச் சொன்ன மன நிறைவில் சௌமியா மொட்டை மாடியில் இரவு நிலவை ரசித்துக்கொண்டிருந்த போது மாறன் அங்கு வந்தான்.
பத்து நிமிடம் கழிந்தவேளையில் “மாறன் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம். விளையாடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு.” என்று சிடு சிடுவென முகத்தை வைத்துக்கொண்டு சௌமியா மாறனிடம் கேள்வி கேட்டுக் கொண்டு தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தாள். 
நேற்று தனது பிறந்த நாளை பாலாவின் நெஞ்சில் கழித்தபோது “ஹாப்பி பர்த்டே சௌமி. தாலி வாங்கியாச்சுடி. சேலையும் வாங்கிட்டேன்.” என்று அவன் சொன்னபோது அன்றைய நாள் அவள் வாழ்நாளில் அழகான பிறந்தநாள் ஆனது. மறுதினமே ஏன்தான் பிறந்தோம் என்று தோன்றும் நிலை அவளுக்கு வந்துவிட்டது. 
தனது கைக்கடிகாரத்தில் மணியைப்பார்த்துவிட்டு “நைட் பன்னிரெண்டு மணிக்கு.. இந்த திடீர் விசிட்டிற்கு என்ன அர்த்தம்னு கேட்கிறியா இல்லை. உன்கிட்ட கொடுத்த மோதிரத்திற்கு என்ன அர்த்தம்னு கேட்கிறியா?”
“இரண்டுக்குமேதான்.”
“ஓ.. உன் வீட்டுக்கு இப்ப நைட் பன்னிரெண்டு மணிக்கு வந்த காரணம் நம்ம ரெண்டு பேருக்கும் நாளை காலை ஏழு மணிக்கு கல்யாணம். அடுத்து அந்த மோதிரம் என்னோட கல்யாணப் பரிசுன்னு அர்த்தம். அப்பா என்னை நாளைக்கே நீ கல்யாணம் செய்துக்கணும் என்று சொன்னப்ப, எனக்கு உன்னைத் தவிர எந்த பொண்ணும் மனசுக்கு பிடிக்கலைன்னு அர்த்தம். இன்னும் கொஞ்ச வருஷத்தில் நமக்கு இரண்டு அழகான பிள்ளைகள் பிறக்கப் போறாங்கன்னு அர்த்தம்.”
“அய்யோ.. மாறன்..” என்ற அவளது பதில் அவனது சந்தேகத்தைக் கிளற..  
“அன்னைக்கு உன் மனசில் யாரும் இல்லைன்னு தான சொன்ன? அன்னைக்கு செல்ஃபோன் உடைந்தபோது உன்கிட்ட “காதல் கீதல் எதுவும் இன்னும் வரலை போல சௌமிக்கு” என்று நான் சொன்னதுக்கு வாய மூடிக்கிட்டு இருந்த?” என்றான்.
“நான் சொன்னது சரியாக காதில் கேட்கலைன்னு சொல்லு. அப்புறம் நடு ரோட்டில் வைத்து சொல்ற விஷயமாக அது எனக்குப் படலை.. இப்ப நான் சொன்னால் என்ன சொல்லாட்டி என்ன? நான் யாரையும் லவ் பண்றேன் பண்ணாமல் போறேன், உனக்கு அது தேவையில்லாத விஷயம். எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்க இஷ்டம் இல்ல.. நீ என்றைக்குமே என்னோட ஃப்ரண்ட் மட்டும்தான். “
“அன்னைக்கு உன்னோட மெம்மரி கார்டும் ஃபோனும் என்கிட்ட இருக்கட்டும்ன்னு நீ சொன்னப்ப நான் உனக்கு யாரோடையும் ரிலேஷன்ஷிப் இல்லைன்னு நினைச்சேன்.” என்றான் நெற்றியில் அவனது கைகளால் அழுத்தம் கொடுத்துக்கொண்டே. 
அவனது மறுகையில் அவனது கைபேசியை இறுக்கமாகப் பற்றியிருந்தான். அவனது நரம்புகள் தந்த அழுத்தத்தால் அவன் கைகளில் இருந்த டைட்டன் கடிகாரம் இறுக்கமாய் புடைத்துக் கொண்டு இருந்தது. அவனுக்கு அவளது பதில் தெரியும், ஆனால் கடுமையான எதிர்ப்பு அவளிடத்தில் இருந்து கிளம்பும் என்பது அவன் நினைத்துப்பார்க்காதது.
“ஓ.. அன்று நான் மெம்மரி கார்ட் உன்கிட்ட கேட்காமல்  இருந்ததுதான் தப்பா போச்சு இல்ல? அதனால்தான் எனக்கு லவ்வர் இல்லை என்று கணக்கு பண்ணிட்ட இல்ல? மாறன் என்னோட மெம்மரி கார்டை இப்ப என்னிடம் கேட்டுப்பாரேன்.” 
முகம் முழுதும் பதட்டம் கோபம் தொற்றிவிட மாறன் அவளிடம் நிதானமாகக் கேட்டான்.. “கேட்டா தருவியா மாட்டியா?”
“மாட்டேன்” என்ற அர்த்தத்தில் இடதும் வலதும் அவள் தலையசைத்தபோது கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்த மாறன் அவளது செல்ஃபோனை அவளது கைகளில் இருந்து பிடுங்கி அந்த மொட்டைமாடியில் இருந்து கீழே தூக்கி எறிந்தான். அவனது சந்தேகத்தை அவள் வாய் வழியாக உண்மை என்று அறிந்த பிறகு அவன் கோபம் கட்டுக்குள் இல்லை.
அவனது கோபத்தைக் கண்டு பயம் கொண்டாலும் மனதில் முழுதும் தைரியத்தைத் திரட்டிப் பேசினாள் “அன்றைக்கு.. அதான் செல்ஃபோன் உடைந்துபோனபோது நீ கேட்டதை நான் சரியா கவனிக்கலை மாறன். மனசுக்கு பிடிச்சவங்களை நேரில் பார்க்க முடியிறபோது ஃபோன் எதுக்கு மாறன்? நானும் அவனும் பதினைந்து வருஷமா நேரில் பார்த்துக்கிறபோது..”
மாறன் “ஸ்டாப் இட் சௌமி” என்றான். 
ஆனால் அவள் அவன் சொன்னதுபோல தனது பேச்சை நிறுத்தவில்லை.  மீண்டும் தொடர்ந்தாள் “மாறன் ஐ லவ் ஹிம் டீப்லி, ட்ரூலி, அன்ட் மேட்லி .. உன்னையும் நான் பதினைந்து வருஷமா பார்த்திட்டு வர்றேன். உன்கிட்ட எனக்கு ஃப்ரண்ட் என்பதைத் தவிர வேற எந்த நினைப்பும் வரலை. ஆனா அவன் என்னைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிஷமும் நான் என்னோட..” அவன் முகம் பார்க்காமல் திரும்பிக்கொண்டாள். 
கொஞ்சம் பொறுத்திருந்து மீண்டும் அவன் முகம் பார்க்காமல் திரும்பி நின்றுகொண்டு தொடர்ந்தாள் “அவன் என்னைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிஷமும் நான் என்னோட பெண்மையை உணர்ந்தேன் மாறன். நான் பெண் என்பதை என்னோட பதினோரு வயதில் உணர வைத்தவனை.. சிரிப்பா இருக்குல்ல? எனக்கும்தான் சிரிப்பா இருக்கு.. அந்த விபரம் தெரியாத வயதில்கூட என்னை அவ்வளவு பாதித்தவன் இப்போது என்னை எவ்வளவு பாதிப்பான் என்பது உனக்கு நான் சொல்லிப்புரிய வைக்க முடியாது மாறன். ப்ளீஸ் இனி விளையாட்டுக்குகூட உனக்கும் எனக்கும் கல்யாணம் என்றெல்லாம் சொல்லாத..”
ஆனால் அவளை சைகையில் நிறுத்தி அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து சற்றுமுன் அடைந்த பதற்றம் ஏமாற்றம் எதுவும் இல்லாமல் தெளிவாகவே பேசினான் மாறன். “சௌமி நான் அந்த ஃபோனில் அவனது விபரம் தெரிஞ்சிகிட்டு விசிறி எறிந்திருக்கலாம். ஆனா செய்யலை. ஏன் தெரியுமா? அவனை இதே மாதிரி நாலுபேர் மொட்டை மாடியில் இருந்து விசிறி எறிவதை நீ விரும்ப மாட்ட என்பதால்தான். அவன் விபரம் தெரிஞ்சா நான் கண்டிப்பா அதைச் செய்வேன்னு உனக்குத் தெரியும். என் பொண்டாட்டியா நீ ஒருத்தியைத்தான் என்னால நினைக்க முடியும். என்னோட மனசை உன்னால்தான் தெளிவா புரிஞ்சிக்க முடியும். நாமளும் ஒரு பதினைந்து வருஷம் பழகிருக்கோம்..” 
உள்ளுக்குள் ஏதோ பயங்கரமாக வலித்தது. இதயமா? மாரடைப்பு என்றால் என்ன? என்று அவளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தான் மாறன்.
வலி வேதனை தாளாமல் சௌமி பேச வாயைத் திறந்தபோதே அவன் இடைமறித்து பேசுவதைத் தொடர்ந்தான். “நீ என்ன சொல்லவர்ற என்று எனக்குப் புரியிது. நாம ஃப்ரண்ட்ஸாகத் தான் பழகினோம். ஆனா அந்த ஃப்ரண்ட்ஷிப் எனக்கு போதும். என்கூட யாரும் ஃப்ரண்ட்ஸாக இருப்பதே பெரிய விஷயம். நம்ம ரெண்டுபேரும் எனக்குத் தெரிஞ்சி ஒரு தடவைகூட சண்டை போட்டு பிரிஞ்சது இல்ல. என்னோட மனசை புரிஞ்சிக்கிட்டு என்கூட பழகுறதே பெரிய விஷயம். அந்த புரிதல் எனக்குப் போதும். உன்னிடம் இருக்கும் அந்த புரிதல் எனக்குப் போதும் சௌமி.” என்றவன் தன்னை மறந்து இரண்டு நொடிகள் தாமதித்தபோது சௌமியா அவசரமாக அவனிடம் பதில் தந்தாள்.
“ஆனா புருஷன் பொண்டாட்டியா வாழ அந்த ஃப்ரண்ட்ஷிப் மட்டும் பத்தாது மாறன்.. உனக்கு கண்டிப்பா உன்னைப் புரிஞ்சிக்கிற நல்ல பொண்ணு மனைவியா கிடைப்பா மாறன்.”
அவளது கைகளை முரட்டுத்தனமாகப் பற்றி ஒரு விரலில் தனது மோதிரத்தை அணிவித்துவிட்டு வேகமாகச் சொன்னான் “எனக்கு வேற யாரையும் பிடிக்கலை சௌமி..  நீ நாளைக்கு என் பொண்டாட்டி ஆகப்போற.. அதற்கு அடுத்த செகன்டுல இருந்து என் பொண்டாட்டியாதான் வாழப்போற. என் பிள்ளைகளைதான் நீ.. ச்ச.. உன்கிட்ட என்ன பேசணும்னு நினைச்சிட்டு வந்தேன் தெரியுமா சௌமி? இப்படி என்னை கெஞ்ச..” என்றவன் சிறு தடுமாற்றத்திற்குப் பிறகு, “சௌமி என் பலமும் உனக்குத் தெரியும். என் பிடிவாதமும் உனக்குத் தெரியும்.” என்று கூறியவன் ஆட்காட்டி விரலை இடதும் வலதும் அசைத்து “என்னிடம் வம்பு வேண்டாம்” என்று சைகை செய்தான்.  
பக்கத்தில் பத்தடியில் நின்றிருந்த அவனது பாடிகார்டை சொடக்குபோட்டு வரவழைத்து “மேடமுக்கு ஃபுல் ப்ரொடக்ஷன் கொடுங்க.” என்று கட்டளை தந்துவிட்டு “ஆறு மணிக்கு சென்னி வந்திடுவார். ரெடியா இருக்கணும். சரியா? செல்ஃபோன் விழுந்த இடத்தில் அப்படியே இருக்கும். அந்த மெம்மரிகார்டை நான் டச் பண்ண மாட்டேன்.. நீ ஒழுங்கா இருக்கும் வரை.. இல்ல யாருக்காவது கான்டாக்ட் பண்ணி நாளைக்கு நடக்கப்போகும் கல்யாணத்தை நிறுத்தனும் என்று நீ ப்ளான் பண்ணால்.. நான் அந்த மெம்ரி கார்ட் எடுத்து அவனோட டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண வேண்டியிருக்கும்.” என்று சௌமியாவிடம் இறுதியாக பேசிவிட்டு நகர்ந்தான் மாறன்.
              
மாறன் சென்றபிறகு இரவில் பன்னிரெண்டு மணிக்கு மேல் பாத்ரூம் செல்வதுபோல ஒவ்வொரு அரை மணி நேரமும் அவளது மற்றொரு கைபேசியில் சௌமியா பாலாவைத் தொடர்பு கொண்டாள். ஆனால் அவளது அழைப்பை ஆழ்ந்த உறக்கத்தில் கவனிக்காதவன் தூக்கம் கலைந்து எழுந்ததும் காலை ஏழு மணிக்குத்தான் கவனித்தான்.  
அவளது பழைய எண்ணில் இருந்து அழைப்புகள் வந்ததை தாமதமாக உணர்ந்தான். அந்த எண்ணிற்கு அழைத்துப் பார்த்தான். பதில் இல்லை. அதன்பிறகே குறுந்தகவல்களை பரிசோதித்தான். அதில் ஐந்து செய்திகள் மிஸ்ட்கால் வந்த எண்ணில் இருந்து வந்திருந்தது.
அவளது குறுஞ்செய்திகளைப் பார்த்தவனுக்கு உடல் முழுதும் வியர்த்தது. முதல் குறுஞ்செய்தியில் “பாலா எனக்கு நாளைக்கு ஏழு மணிக்கு கல்யாணம். என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடு” என்று எழுதியிருந்தது.
அடுத்த செய்தியில் “பாலா நாம லவ் பண்ண ஆரம்பிச்சு பதினைந்து வருஷம் ஆகிடுச்சு. ஆனா அந்த பதினைந்து  வருஷக்காதல் இன்னும் எத்தனை நிமிஷம் உயிரோட இருக்கப் போகுதுன்னு தெரியலை.. எனக்குப் பயமா இருக்குடா.. சீக்கிரம் வாயேன்.”
அடுத்த செய்தியில் வார்த்தைகள் அதிகம் இல்லை. “ஐ லவ் யூ பாலா என்றும் ஐ ஹேட் யூ பாலா” என்றும் வந்திருந்தன.
அடுத்த செய்தியில் “நீ இப்ப வரலைன்னா என்னை உயிரோடயே பார்க்க முடியாது.. சொல்லிட்டேன்.” என்று வரிகள் அவனைக் கலவரப்படுத்தியது.
அடுத்த செய்தியில் “சரி.. டென்ஷன் ஆகாத.. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. மணி ஐஞ்சுதான ஆகுது? நான் வெயிட் பண்றேன்.. உனக்காக..” என்ற வரிகள் அவனை இம்சித்தது.
அடுத்து எந்த செய்தியும் இல்லை.. மணியைப் பார்த்தான். மணி  ஏழு  பத்து..
   *   *   * * *
உயிர் போயிடுச்சு என்று யாரோ அவள் காதில் சத்தமாகக் கத்தினார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவளும் நம்பினாள். அவள் தான் மூச்சு விடவில்லையே? உயிர் போயிடுச்சு என்று அவளது காதினில் அவளது மனசாட்சி சொல்லியது. தனது பிணத்திற்குத்தான் மாலை அணிவித்து பட்டணிந்து நிற்க வைத்திருக்கிறார்கள் என்று நம்பினாள். ஏன்? அவளால் தான் மூச்சு விடமுடியவில்லையே?
ஆயிரம் வெள்ளை வேட்டி சட்டைகாரர்கள் அந்த கிரவுன்டில் இருந்தார்கள். எந்த கிரவுன்டில் சௌமியும் பாலாவும் கிரிக்கெட் விளையாடி ரன் எடுக்க ஓட்டமாய் ஓடினார்களோ அதே மைதானத்தில் இன்று சௌமியின் உயிர் பறிக்கப்பட்டது. எந்த உடலை அவள் தனது பாலாவுக்கு என்று நினைத்து பூரித்திருந்தாளோ அந்த உடல், உயிர் இருந்தும் இல்லாமல் மணமேடையில் மற்றவர்கள் பார்க்க ஒரு காட்சிப்பொருளாய் இருந்தது. 
சௌமியாவின் தந்தை அவள் முகத்தைப்பார்த்து குங்குமம் இட்டபோது, அவள் அவரது கண்களைப் பார்க்கவேயில்லை.
யாரவது பார்க்கணும்னா பார்த்துக்கோங்க.. மூடப்போறேன்.. மூடப்போறேன் என்ற வெட்டியான் சொல்லும் நேரத்தில் உடன்பிறந்தவர்கள், இரத்த சொந்தங்கள் அலறித் துடிப்பதுபோல அவரது மனம் அலறித் துடித்தது.
தாலிகட்டும் நேரம் வரை வாசலில் பித்தனைப்போல் அலைந்து திரிந்த அவளது கண்கள் தாலி கழுத்தில் ஏறிய பிறகு ஏதோ ஒரு திசையில் குத்திட்டு நின்றன.
கெட்டி மேளச்சத்தம் அடங்க நேரம் ஆனது. பதினோரு திருமணங்கள் ஒன்றாக நடக்கும் மேடை அல்லவா? அதனால் அதிக நேரம் கெட்டி மேளச்சத்தம் கேட்டது. என் காதல் செத்துப்போச்சே என்று கத்திக் கதற வேண்டும் போல இருந்தது. ஆனால் இந்த விஷயம் தெரிய வரும்போது பாலா எப்படித் துடித்துப்போவான் என்பதுதான் அவளுக்கு இன்னும் வேதனை தருவதாக இருந்தது.
தாலிகட்டும்போது மாறனின் முகத்தில் பளார் என அறைந்து அவனை நாலு பேர் முன்னிலையில் அசிங்கப் படுத்தவேண்டும். ப்ரஸ்காரர்கள் உதவியுடன் பாலாவிடம் சேர்ந்துவிட வேண்டும் என்று அவள் போட்ட கணக்குகள் அவள் மணமேடைக்கு வரும் வழியிலேயே தவிடு பொடியாக்கப்பட்டது.
அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட குவாலிஸ் வண்டியில் திருமணம் நடக்கவிருந்த கிரவுன்டுக்கு புறப்பட்ட போது மாறனின் வண்டி ஓட்டுநர் சென்னிமலை என்னும் சென்னி அவளிடம் பேச்சுக்கொடுத்தார். நல்ல மனிதர். மாறன் வீடும் இவளது வீடும் அருகே இருந்தபோது ஏற்பட்ட அறிமுகம். அவனது வீட்டு கார் ஓட்டுநர். அவளுக்கு பதினைந்து ஆண்டுகளாகத் தெரிந்தவர். அவளை ‘சௌமியா’ என்று அழைக்கும்போதே தனது பாசத்தைக் கொட்டிக் காண்பிப்பவர். 
இன்றும் மணமேடைக்குச் செல்லும்முன் காரில் பயணித்தபோது அவர் அதே போல ‘சௌமியா’ என்று  அழைத்தபோது அவள் “அண்ணே என் நிலைமையைப் பார்த்தீங்களா?” என்று கதறிவிட்டாள்.
அழகான இளவரசியை கொலை செய்ய ஏவப்பட்ட பணியாள், கடைசி நேரத்தில் அந்த சிறுமியின் முகம் பார்த்து கொல்லாமல் காட்டில் தப்பிச் செல்லவிட்ட கதை அவளது மனதில் படமாய் ஓடியது. அதே போல வண்டியை வேறு திசையில் செலுத்தி தன்னைக் காப்பாற்றிவிடமாட்டாரா? என்ற ஆசை அந்த அதிர்ஷ்டக் கட்டைக்கு அந்நேரத்தில் வந்தது.

Advertisement