Advertisement

சந்திர கதிர்கள்- 2
“அவ்வாறென்றால்? நீ கூற வருவதென்ன ?” எனச் சீற்றத்துடன் ஒலித்தது உப கலபதியின் குரல்.
 
“அச்சம் கொண்டேன் வாலிபனே! மிகுந்த அச்சம் கொண்டேன்!” எனக் கூறிப் பெரிதாக நகைத்த கொள்ளையர் தலைவனின் குரலில் எள்ளல் பரிபூரணமாய்ப் படர்ந்திருந்தது.
 
“கொள்ளையர்கள்! அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஒடுங்கி நில்லுங்கள். ஹ்ம்ம் ஆகட்டும்… என்ன வாலிபனே இந்த அச்சம் போதுமானதாய் இருக்கின்றதா ?
 
என்முன்னால் குரலை உயர்த்தும் துணிவை உமக்கு யார் தந்தது ?
 
ஒருவேளை உனக்குப் பாண்டிய சக்கரவர்த்தி என்ற எண்ணமோ ? கோபத்தைக் குறைக்கவில்லையெனில் பெரும் சோகத்தை உமது உறவுகள் அனுசரிக்க நேரிடும். ஜாக்கிரதை” என எள்ளலில் ஆரம்பித்து எச்சரிக்கையுடன் முடிக்க, உப கலபதியின் குருதி கொதிநிலையை எட்டியது.
 
“வாயை மூடு. மாவீரரான பாண்டிய சக்ரவர்த்தியின் திருநாமத்தை உச்சரிக்கும் அறுகதை கூட அற்றவன் நீ. அற்ப பதர் நீ. மறுமுறை மகா கணம் பொருந்திய அவரின் நாமத்தை உமது நாவு உச்சரிக்குமேயானால் அதுவே உம்முடைய நாவு உச்சரித்த இறுதி வார்த்தையாகும்” என எச்சரிக்கவும் செய்தான்.
 
“பலே! பலே!… என்னவொரு ஆவேசம் என்னவொரு கோபம். நீ யார் ? உனது பெயரென்ன ? இக்கலத்தின் அதிபதியா ? கலபதியா ?”
 
“இவ்விரண்டுமில்லை நான்! நான் இக்கலத்தின் உப கலபதி. பாண்டிய விசுவாசி முஹம்மது” என நெஞ்சை நிமிர்த்திக் கர்வத்துடன் அறிவித்தவனை சற்றே ஏளனத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்தான் கொள்ளையர்களின் தலைவன். முஹம்மதுவின் மீது கொண்ட சந்தேகம் அபுவின் மீதும் திரும்பியது.
 
“நீ ரோம் நகரத்திலிருந்து தானே வருவதாய்க் கூறினாய்? இவனென்னவென்றால் பாண்டிய நாட்டிற்கு உயிரை கொடுப்பவன் போன்று தர்க்கம் செய்கிறான்? என்னிடம் விளையாடும் எண்ணம் எதுவும் உண்டோ ?” எனக் கூர்பார்வையுடன் அபு பக்கரை இனம் காண முயன்றபடி கேள்வியை முன்வைக்க, மறுகணமே சற்றும் தாமதிக்காமல் அபு பக்கரின் வார்த்தைகள் மற்றொரு கேள்வியை முன் வைத்தன.
 
“உமது கொள்ளையர் கூட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே நாட்டினர் என்று கூற இயலுமா?” என வினவிய அபு பக்கரின் குரலில் ஒளிந்திருந்தது என்னவென்று கடற்கொள்ளையனால் இனம் காண முடியவில்லை. ஆனால் பக்கரின் கூற்றை மட்டும் தெளிவாக உள்வாங்கிக்கொண்டான்.
 
ஒன்றாகத் தொழிலில் இருப்பவர்கள் யாவரும் ஒரே தேசமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லையென்று. ஆதலால் மேற்கொண்டு கொள்ளையர்களின் தலைவன் பேச்சை வளர்க்க பிரியப்படாததாலும், அடுத்தக் கட்ட செயலில் இறங்கி துரிதமாக இங்கிருந்து புறப்படும் அவசரகதியில் இருந்ததாலும் தரணி கப்பல் வாசிகளின் மீது கொண்டுள்ள ஐயத்தைத் துச்சமென மதித்து உதறினான்.
 
உப கலபதியின் மீதொரு அலட்சிய பார்வையைப் பதித்தவன், அபு பக்கரை நோக்கி, “மீண்டுமொருமுறை இவன் என் முன்னால் நின்று பேச துணிந்தால் நான் என் வாக்கை கடைபிடிப்பது சாத்தியமல்ல.” என எச்சரிக்க, அபு பக்கர் சீற்றம் நிறைந்த தன் விழிகளை முஹம்மதுவின் மீது ஓட்டி, “உன்னுடைய கோபம் மற்றவருக்குக் கேடாகாமல் பார்த்துக்கொள். கலபதியாரே, உமது உதவியாளரை அமைதி கொள்ளச் செய்யுங்கள்” எனக் கூறியவனின் குரலில் மிதமிஞ்சிய ஆவேசமிருந்தது.
 
அந்த ஆவேசம் முஹம்மதுவிற்குப் பிரியப்படாத சூழலை உருவாக்கியது. இருந்தும் கலபதியும் அபு பக்கரின் சொல்லிற்கு இணங்க, இவனோ முகத்தைச் சுழித்துத் தன் எதிர்ப்பை பறைசாற்றினான். ஆனால் அவனைக் கண்டுகொள்ளவோ கருத்தில்கொள்ளவோ யாருக்கும் காலமில்லாமல் போனது.
 
முஹம்மதுவின் எதிர்ப்பை மடுவை போல உதாசீனப்படுத்திய கொள்ளையர்களின் தலைவன், “உடனடியாகச் சுக்கானை திருப்புங்கள். நீங்கள் அனைவரும் இக்கணமே என்னோடு கடலோட வேண்டும்.” எனக் கட்டளையாக அறிவித்தவன் சிறிது இடைவெளிவிட்டு, குரூரமான முறுவலுடன், “அடிமையாக!” என அழுத்தம் கொடுத்து அவ்வார்த்தையை உச்சரிக்க, அனைவரும் அவனின் வார்த்தையில் திக்பிரம்மை கொண்டனர்.
 
மேற்கொண்டு சம்பாஷணையிலோ தர்க்கத்திலோ ஈடுபட முனைந்த முஹம்மதுவை கையசைவில் தடுத்த அபு பக்கர், நிதானமான குரலில், “ஆகட்டும்! அப்படியே செய்கிறோம்” என்று கூறவே, கப்பல் வாசிகள் சலசலக்க தொடங்கினர்.
 
அவர்களின் விழிகளில் மரணத்தின் சாயல் கணத்திற்குக் கணம் அதிகரித்துக்கொண்டே சென்றன.
 
ஒருபுறம் கொள்ளையர்களின் மிரட்டல் மறுபுறமோ அபு பக்கரின் புரியாத புதிரான போக்கு. இவ்விரண்டிற்கும் இடையே அவர்களின் வாழ்க்கை அதகளப்படுவதை அவர்கள் நன்கு உணர்ந்துகொண்டனர். மேலும் சிலரோ முன்பே அபு பக்கர் கொள்ளையர்களிடம் கூறிய தகவல்களில் உள்ள முரண்களை எண்ணி எண்ணி ஐயம் கொண்டிருக்க, இப்போது அவனின் போக்கு அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்குப் பதிலாய் அவநம்பிக்கையையே அளித்தன.
 
இருந்தும் வேறு மார்க்கம் கிட்டாத காரணத்தினால் அமைதிகாப்பதை தவிர வேறு எவ்வித வழியும் புலப்படாததால் மௌனம் சாதித்தனர்.
 
“சகாக்களே! இக்கலத்தில் உள்ள அனைத்தையும் சூறையாடுங்கள். பொன் பொருள் மட்டுமின்றி உணவு நீர் என்று அனைத்தையும் நமது கலத்திற்குக் கொண்டு சேர்க்க ஆயத்தம் செய்யுங்கள். அடிமைகளுக்கு உணவெதற்கு ?” என அவனின் கரடு முரடான குரலில் உத்தரவுகளைப் பிறப்பிக்க, சட்டென்று இடை புகுந்தான் அபு பக்கர்.
 
“நீங்கள் இங்கிருந்து எதைவேணுமென்றாலும் அள்ளிக்கொள்ளலாம். நாங்களும் உம்மோடு அடிமைகளாக வர சித்தமாகவே உள்ளோம். ஆனால்… நமது வாணிபம் இன்னமும் நிறைவு பெறவில்லையே?” என்ற கேள்வியோடு தலைவனின் முன்பாக நிற்க, கொள்ளையர் தலைவனோ கேள்வியாக அவன் மீது பார்வையை நிலைக்கவிட்டான்.
 
“உமது வாணிப அழைப்பு எமக்கு அவசியமற்றது. உனது வெள்ளைக்கொடிக்கு பணிந்தோ ரோம நாணயங்களுக்கு அவா கொண்டோ உங்களை உயிரோடு விடும் எண்ணம் எனக்கேற்படவில்லை. உங்களனைவரையும் விற்பதால் எனக்குக் கிடைக்கவிருக்கும் பெரும் இலாபத்தை முன்னிட்டே உங்களது செங்குருதி இன்னமும் சிதறாமல் இருக்கின்றது” என அலட்சியமாக தோள்களைக் குலுக்கியபடி கொள்ளையர்களின் தலைவன் கூறினான்.
 
கொள்ளையர் தலைவனின் குரலில் இருந்த திடத்தை அறிந்துகொண்ட அபு பக்கர், சற்றே நிதானித்தான். இந்த ஆபத்தான சூழலை சூழ்ச்சியால் வெல்வதே சிறந்ததென்று தனக்குள் முடிவுகட்டிக்கொண்டவனாய், மெல்ல மெல்ல அந்தச் சொற்களை உதிர்த்தான்.
 
“தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் இலாபம் இரட்டிப்பானால்?”
 
“என்ன உளறுகிறாய்? உம்மிடம் இனி கொடுப்பதற்குச் செல்வமில்லை. அவ்வாறே இருந்தாலும் அதை எடுக்கும் நிலையில் நான் இருக்கும்வரை கொடுக்கும் நிலையில் நீ இல்லவே இல்லை. எந்தத் துணிச்சலில் எனக்கு ஆசை வார்த்தை கூறுகிறாய் ?” என மிரட்டும் குரலில் கேட்டவனின் வார்த்தைகளில் கோபத்தின் சாயல் மிதம் மிஞ்சி படர்ந்திருந்தது.
 
“மெய்தான்! ஆனால் என்னிடமில்லாதது எவ்விடம் கிடைக்குமென்ற தகவல் உள்ளது. அஃது உனக்கு அவசியமானது” என மெல்ல அபு பக்கர் தன் சூழ்ச்சியின் சுழலில் சிக்கவைத்தான்.
 
“என்ன உளறல் இது?” எனக் கேட்ட தலைவனின் குரலில் சீற்றமிருந்தாலும் அதையும் தாண்டிய பேராசை அவன் கண்களில் துளிர்விடலானது.
 
அதை மிகச்சரியாகக் கவனித்துவிட்ட அபு பக்கர், மேலும் ஆசை வார்த்தைகளைக் கூறலானான்.
 
“உளறல் அல்ல. உண்மை, அஃது இலாபத்தின் உச்சம்”
 
“அவ்வாறென்றால் அந்த உண்மையைக் கூறும். அவை இலாபகரமானதா ? அபாயகரமானதா ? என்பது என்னால் தீர்மானிக்கப்படும்”
“நூற்றுக்கும் மேற்பட்ட அரபு குதிரைகளும், பொன் நாணயங்களும்… இவை இலாபகரமானது என்பதை அதன் மதிப்பு தெரிந்த எவரும் ஒப்புக்கொள்வர்”
“என்ன? நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகளா ? நீ சொல்வது மெய்யா ? எங்கே இருக்கின்றது ? உனக்கெப்படி நிச்சயம் ? என்னிடம் பொய்யுரைத்து தப்பிக்க ஏதும் தந்திரம் செய்கிறாயா ?”
 
“இல்லை! நான் கூறுவது மெய்”
 
“அவ்வாறென்றால் விளக்கமாகச் சொல்”
“கூறுகிறேன்! வல்லிபுரம் அறிந்திருப்பீர்கள் தானே ? யாழ்ப்பாணத்தில் கடலோர ஊர். அங்குதான் நான் அந்தத் தகவலை அறிந்தேன்” எனக் கூறிய அபு பக்கரின் குரல் விரக்தியாய் ஒலித்தது.
“அந்த ஊருக்கென்ன கேடு? நீ கூற வந்ததை முழுவதுமாகச் சொல்லிவிடு. எனது பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு” என அபு பக்கரின் நிதானத்தைக் கண்டு எரிச்சலுற்ற கொள்ளையர்களின் தலைவன் அவசரப்படுத்தினான்.
“சொல்கிறேன்! அங்கே தான் குடிநீர் சேகரிப்பிற்காக எங்களது கலமானது நங்கூரமிடப்பட்டது. நாங்கள் புறப்படும் வேளையில் அங்கே ஒர் அரபு நாட்டு கப்பல் உட்புகுவதையும் கவனித்தேன்”
“துறைமுகங்களில் கப்பல் நங்கூரமிடப்படுவதும் வணிகம் செய்வதும் இயல்புதானே? அதிலென்ன எனக்கு இலாபமிருக்கிறது ?” என மேலும் அவசரப்படுத்தினான் தலைவன்.
“சற்றுப் பொறுமையாக இருங்கள்! என்னை முழுவதுமாகத் தகவலை தர அவகாசம் கொடுங்கள்” எனச் சற்றே கண்டிப்பை குரலில் காட்டி அபு பக்கர் கூற, கொள்ளையர் தலைவன் சிறிது நிதானித்தான்.
அபு பக்கர் தொடர்ந்து, “அந்தக் கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உயர் ஜாதி *அரபு குதிரைகள் இருந்தன. அவை பாண்டிய நாட்டிற்குக் கொண்டு செல்ல படுகின்றன. வழியில் கலபதி திடீரென்று கடல் காய்ச்சலால் நோய்வாய் பட்டுவிடத் தலைவன் இல்லா வல்லம் ஆட்டம் காண தொடங்கிற்று. ஆதலால் அவர்கள் கலபதிக்குச் சிகிச்சை மேற்கொள்ளவே அங்கு வந்து சேர்ந்தனர்.
கலபதி அற்ற கலமோ தளபதி அற்ற களம்!!
பாண்டிய நாடு செல்லும் மரக்கலத்தில் உயர் ஜாதி புரவிகளும் உண்டு, முத்துக்களை அள்ளிச் செல்ல கொள்ளை செல்வமும் உண்டு. எம்மனைவரையும் அடிமையாக்கி விற்றால் கூட உமக்கு இதில் வருகின்ற இலாபம் அதில் கிட்டாது. இத்தகவலை கூறி எங்களது சுதந்திரத்தையும் உயிரையும் மீட்பது இழிவான செயலென்று நான் அறிவேன். அறிந்தும் வேறெதுவும் செய்ய முடியாத நிலையியே இதை நான் உனக்குக் கூறுகிறேன்” என ஒலித்த அபு பக்கரின் குரலில் வலியும் விரக்தியும் போட்டி போட்டன.
மார்க்கோ போலோ என்ற வெனிஸ் நகரை சேர்ந்த வர்த்தகப் பயணி, தன்னுடைய குறிப்பில் பாண்டியநாட்டில் புரவிகளை இறக்குமதி செய்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“The region does not breed horses but imports them from Aden and beyond. Over 2000 steeds arrive on ships each year” – Marco Polo
 
அதைக் கண்டுகொண்ட கொள்ளையர் தலைவனும், ஒர் விகார சிரிப்புடன், “நீ வாழ பிறரை அழிப்பதொன்றும் பாவமில்லை. அதையும் மீறி நீ பரிதாபம் கொள்வதனால் ஆவதற்கு ஏதுமில்லை.
 
நீ தெரிவித்த தகவல் உத்தமமே. ஆனால் அதை அறிந்த பிறகும் நான் எதற்காக உங்களை விடுவிக்க வேண்டும் ?” என அவனின் வஞ்சக புத்தியை நிலைநாட்ட, அபு பக்கரோ நிதானமான குரலில், “நான் யாருடன் வாணிபம் செய்கின்றேனோ அவர்களாகவே மாறுவதே என் வழமை.
 
வணிகர்கள் இடத்திற்கு ஏற்றவாறும் மொழிக்கு ஏற்றவாறும், அந்தந்த மக்களுக்கு ஏற்றவாறும் வாணிபம் செய்யவேண்டும்.
 
அவ்வாறு பார்த்தால், உன்னுடன் நான் ஏற்படுத்திக்கொண்ட வாணிபத்தில் முன்னெச்சரிக்கை இல்லாது செயல்படுவேன் என்று எவ்வாறு எண்ணம் கொண்டாய் ?” என மிடுக்குடன் வினவ, கொள்ளையர் தலைவன் சிறிது தடுமாறி பின் அவசரவசரமாய்த் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், பழைய நிமிர்வான குரலிலே, “என்ன பிதற்றல் இது ?” எனக் கோபம் பரவிய குரலில் வினவினான்.
 
“பிதற்றல் இல்லை. தற்காப்பு!
 
உன் நாவிற்கு எலும்பில்லை என்பதை நான் உன்னைக் கண்ட கணமே உணர்ந்துகொண்டேன். ஆதலால் தகவலை கூறிய நான், அது வந்து சேரும் கணத்தைக் கூறவில்லை.
 
எம்மனைவரது உயிருக்கும் சுதந்திரத்திற்கும் நீ உன் தொழிலின் மீது உத்தரவாதம் கொடுப்பாயானால், நான் பாண்டிய நாடு நோக்கி செல்லும் கலம் வந்து சேரும் காலத்தைக் கூறுகிறேன்” என வணிகனாக வியாபாரம் பேசினான்.
 
சில கண்ணிமைகளின் சிந்தனைக்குப் பிறகு, “அவ்வாறே ஆகட்டும்!. தகவலை கூறு. நான் உனக்குத் தரும் வாக்கு, எனக்குக் கிட்டவிருக்கும் அதீத இலாபத்திற்காக அல்ல. நான் முன்பே செய்துகொடுத்த சத்தியத்திற்காக” எனக் கூறிய கடற்கொள்ளையனின் குரல் ஏதோ கனவில் ஒலிப்பதை போன்று ஒலித்தது.
 
அவன் பேச்சிலிலுள்ள மறைபொருளை உணரமுடியாத அபுபக்கர் அவனிடம், “என்ன கூறுகிறாய் ? விளங்கவில்லை” என அறிந்துகொள்ள முயன்ற போது, கடற் கொள்ளையனின் தலைவன் ஒர் கூர்பார்வையைப் பக்கர் மீது பதித்தபடி, “அச்செய்தியை அறிய அவா கொண்டால் உன் கதி அதோ கதி என்பதை உன் மதியில் பதித்துக் கொள்” என எச்சரிக்க, பக்கரின் முகம் இறுக தொடங்கியது. அதோடு அவனுடைய உதடுகளை அழுந்த மூடிக்கொண்டான்.
 
கொள்ளையர்கள் தரணிக்குள் உட்புகுந்து நான்கு நாழிகைக்குமேல் ஆகியிருந்தது. நேரம் இரண்டாம் ஜாமம் ஆதலால், முழுமையாக இருள் கவிழ்ந்திருந்தாலும் இரவின் அரசனான சந்திரனோ அவனின் காவலர்களான வெள்ளிகளோ விண்ணில் வலம் வராத காரணத்தினால் வெளிச்சமென்பது கொஞ்சமும் இல்லாது இருந்தது.
 
கலத்தில் ஏற்றிவைக்கப்பட்ட தீச்சுளுந்துகள் மட்டும் இரண்டு கலங்களுக்கும் தங்களால் இயன்ற மட்டும் கடற் காற்றோடு போராடி வெளிச்சத்தை அளித்துக்கொண்டிருந்தன. அந்த மந்தக வெளிச்சத்திலும் கடற்கொள்ளையர்களின் தலைவனின் முகம் விகாரமாகக் காட்சி அளித்தது. இரையைத் தேடும் வேட்டை நாயின் கண்களைப் போல ஒர் குரூரம் அந்த மந்தமான வெளிச்சத்திலும் நன்கு சுடர்விட்டது. அவனுடைய சிவப்பு ஏறியிருந்த கண்கள் எதையோ எதிர்பார்த்திருந்தன என்பதை நிலையின்றிச் சுற்றி திரிந்த அவனுடைய கருவிழிகள் பறைசாற்றின.
 
ஆம் கடற்கொள்ளையன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது பாண்டி நாடு செல்லும் மரக்கலத்தை. அபு பக்கர் தன்னை நம்பிய மாலுமிகளுக்காக அவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு, நாழிகையைக் கணக்கிட்டுக் கூறிவிட்டிருந்தான்.
 
பக்கர் முழுச் சுதந்திரத்தை எதிர்ப்பார்த்து தகவலை தெரிவித்திருக்க, தலைவனோ வேறு காரணம் மொழிந்தான்.
 
“நீ செல்லலாம் ஆனால் அக்கலாமானது என் வசமான பின்” எனத் திட்டமாக அறிவித்துவிட்டு அவன் சகாக்களிடம் ஏதோ அறிவிக்கவோ அறிவுறுத்தவோ சென்றிருக்க, இங்கோ தரணி கப்பல் வாசிகளும் முஹம்மதுவும் மரக்கலநாயகனை சூழ்ந்துகொண்டனர்.
 
அவர்களின் முகத்தில் கோபத்தின் ரேகைகள் நன்றாகப் பரவி படர்ந்திருக்க அவர்களது வார்த்தைகளும் தணலுக்குச் சற்றும் குறைவில்லாத உஷ்ணத்துடன் வெளிவந்தன.
 
“மரக்கல நாயகரே! நீங்கள் கொள்ளையரிடம் பேசியிருப்பது அதர்ம வாணிபம்” எனக் கோபமும் வெறுப்பும் கலந்த குரலில் வெளிவந்தன முஹம்மதுவின் வார்த்தைகள்.
 
“அதர்மியிடம் தர்ம வாணிபம் செல்லாது உபகலபதியாரே!” என உச்சரித்த அபு பக்கரின் குரலில் எந்தவொரு உணர்வும் பிரதிபலிக்கவில்லை. உணர்ச்சிகளை முற்றிலுமாகத் துடைத்தெறிந்த குரலும் முகமும் பக்கரிடம் இருக்க , இவ்வாறு பதில் தருபவரிடம் தாங்கள் என்ன எடுத்துரைக்க இயலும் என்று புரியாமல் முஹம்மது உட்பட அனைவரும் குழப்பத்தின் பிடியில் சிக்கினர்.
 
இப்போதும் கலபதி மௌனமே சாதித்தான்.
 
“உங்களது பேச்சில் நியாயமில்லை நாயகரே!” எனக் கப்பல் வாசிகளில் ஒருவன் கூற, மீண்டும் அதே பழைய நிதானமான குரலில், “நியாயத்தைக் காப்பாற்றினால் அநியாயமாக உங்களது உயிரை காப்பாற்ற இயலாது போய்விடும்” எனக் கூற, அவர்கள் சலசலக்க தொடங்கினர்.
 
முடிவாக முஹம்மது, “நாங்கள் உங்களின் அதர்ம வாணிபத்திற்கு ஒப்புக்கொள்ளவோ ஒத்துழைக்கவோ விரும்பவில்லை. எங்களால் ஒரு போதும் பாண்டிய நாட்டிற்கும் பாண்டிய சக்கரவர்த்திக்கு எதிரான காரியத்தில் ஈடுபட இயலாது. பாண்டிய நாட்டின் மீதும் பாண்டிய இளவலின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தக் கடல் பிராந்தியத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு வரும் வணிகக் கலத்திற்கு ஆபத்தென்றால் அஃது எங்களது நாட்டின் பெருமைக்கு இழுக்காகும். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.எங்களது உயிரை துறந்தாலும் துறப்போம் விசுவாசத்தை அல்ல” எனத் திட்டமாக அறிவிக்க, இம்முறை அபு பக்கரின் முகம் கோபத்தைக் காட்டியது.
 
“உங்களிடம் நான் அபிப்ராயம் வினவவில்லை. அஃது எனக்கு அவசியமற்ற ஒன்றும் கூட. இக்கலத்தில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் நானும் கலபதியுமே தவிர, தாம் யாருமில்லை. அதை மனதில் நிறுத்தி அதற்கேற்ப உமது நாவு வார்த்தைகளை உச்சரிப்பது உத்தமம்” எனக் கூறியவன் அங்கே ஒர் கண்ணிமைகூடத் தாமதிக்காது விடுவிடுவென்று அவர்களைக் கடந்து செல்ல, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
 
அனைவரது முகமுமே பகிரங்கமாய் அதிருப்தியையும் கோபத்தையும் இயலாமையையும் ஒரு சேர வெளிக்காட்ட, அவர்களின் உள்ளக் குமுறல்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கலபதியோ ஏதும் சொல்ல பிரியப்படாதவனாய் அபு பக்கரின் பின்னே செல்ல, அவர்கள் செய்வதறியாது திக்பிரம்மை கொண்டனர்.
 
அதற்குள் அங்கிருந்த கொள்ளையர்கள் மீண்டும் அவர்களைச் சூழ்ந்துகொள்ள, ஏதும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 
கொள்ளையர் தலைவன் சிறிது நேரத்தில் பகட்டுடனும் மிடுக்குடனும் வந்தவன், அவனுடைய கரகரப்பான குரலில் திடீரென்று விகாரமாகச் சிரிக்கத் தொடங்கவே, அவனது கோர சிரிப்பொலி அந்த இரண்டாம் ஜாமத்தின் அமைதியையும் கடல் அலைகளின் இலேசான சலசலப்பு ஒலியையும் ஊடுருவி சென்று அனர்த்தமான அமானுஷ்ய சூழலை சிருஷ்டித்தது.
 
அவனது சிரிப்பொலி, அதிருப்தியை அடைந்திருந்த தரணி கப்பல் வாசிகளின் நெஞ்சில் அச்சத்தை மூட்டியது. அவர்களின் அச்சம் அவனுக்கு இன்னமும் வெறியை கூட்டியது. அகங்காரமாய், “சொல்வதை அப்படியே செய்தால், இரவின் நான்காம் ஜாமத்தில் உங்களது உயிரும் சுதந்திரமும் உங்களுக்கு. மீறினால் அவை இரண்டும் எனக்கு.
 
இக்கணத்திலிருந்து என் சொல்லே உங்களுக்கு வேதமாக வேண்டும்.
 
எதிர்கேள்வி கேட்பவர்கள் என் எதிரியாகப் பார்க்கப்படுவீர்கள். இதுவரை எனக்கு எதிரிகள் இருந்ததில்லை, இனிமேல் எதிர்ப்பவர்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை” என அழுத்தமாக உச்சரித்தவனின் குரலில் எச்சரிக்கை மித மிஞ்சி காணப்பட்டது.
 
அனைவரையும் எச்சரித்தவன், அவனின் கூட்டத்தில் ஒருவனை அழைத்து, “கதம்பா! இவர்கள் செய்யவேண்டியதை கட்டளையிடு” எனப் பணிக்க, அந்தக் கதம்பன் என்பவன் விவரிக்கத் தொடங்கினான்.
“கொள்ளையர்களே! இன்னும் ஒரே நாழிகையில் நாம் எதிர்பார்க்கின்ற வங்கம் இங்கு வந்து சேரலாம். ஆகையால் துரிதமாகச் செயலில் ஈடுபடுங்கள். என் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றுங்கள்.
 
  1. தீச்சுளுந்துகள் அனைத்தும் அணைக்கப்படட்டும்
  2. கலபதி மரக்கலநாயகன் இவ்விருவரையும் தவிர மற்றவர்களின் கைகளிலும் கால்களிலும் கயிற்றை இறுக பிணையுங்கள். அதோடு வாயில் வஸ்திரத்தை வைத்து வாய் திறக்கவோ ஒலியெழுப்பவோ இயலாத வண்ணம் கட்டுங்கள்.
 
ஹ்ம்ம் ஆகட்டும்” எனத் துரிதப்படுத்த, காற்றின் வேகத்தில் காரியங்கள் அரங்கேறின.
 
கண்ணிமைக்கும் நேரத்தில் தரணி கப்பல் வாசிகளின் வாயும் கை கால்களும் கட்டப்பட்டன. முஹம்மது இயலாமையால் முகம் சிவக்க நின்றிருந்தான். அவனின் முழுக் கோபமும் கப்பல் கலபதியின் மீது திரும்பியது. அபு பக்கர் இந்நாட்டவன் இல்லையாகையால் இந்த மகா பாதகச் செயலில் இறங்க துணிந்தான். ஆனால் இந்தக் கலபதிக்கு என்ன கேடு நேர்ந்தது எனத் தன்னையே கேட்டுக்கொண்டான்.
 
உயிர் பிச்சைக்காகச் சொந்த ராஜ்யத்திற்கு அவப் பெயர் கிடைக்கச் செய்வதா ? கூடாது. உயிரை நாமே மாய்த்துக்கொள்ளலாம் என என்னனென்னவோ எண்ணியவன் இறுதியாக அவ்வெண்ணத்தைக் கைவிட்டவனாக, அவர்கள் கொள்ளையடிக்கவிருக்கும் மரக்கலம் வந்தவுடன் கத்தியோ கூச்சல்லிட்டோ இல்லை போரிட்டோ ஏதோவொரு வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் குறித்துக்கொண்டான்.
 
அதையே தரணி மாலுமிகளிடமும் அவன் கூறியிருக்க, அவர்களும் அதற்கு உடன்பட்டனர். ஆனால் கடற்கொள்ளையனின் இந்த அதிரடி முடிவை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் முகத்தில் படர தொடங்கிய ஏமாற்ற ரேகைகள் தெள்ளன பறைசாற்றிவிட, அதைக் கண்டுகொண்ட தலைவனோ ஒர் அலட்சிய முறுவலை முஹம்மதுவை நோக்கி உதிரவிட்டான்.
 
அந்த அலட்சிய சிரிப்பை கண்டுகொண்ட மாலுமிகளோ நெஞ்சம் குமுற அசைய இயலாது முடங்கிக் கலத்தில் சரிந்திருந்தனர்.
 
“கதம்பா! மேற்கொண்டு நானே கூறுகிறேன்.
 
கொள்ளையர்களான நாம் இங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் இருக்கின்றோம். அதில் பத்து நபர்கள் இங்கிருக்கும் இருபது நபர்களை ஈட்டி முனையில் காவல் புரியுங்கள். ஒருவனின் உயிர் கூடப் பிரியக்கூடாது.
 
நமது வசமிருக்கும் தரணியும் நம்முடைய கொள்ளையர்களின் கப்பலும் சற்றே இடைவெளிவிட்டு நிறுத்தப்படும். விளக்குகள் அணைக்கப்பட்ட காரணத்தினால் எதிரி கலத்திற்கு நாம் இருப்பது இருளில் தெரியாது; நம்மிரு கலத்திற்கு நடுவே வருகின்ற பொழுது அகப்பட்டுக்கொண்டுவிடும். அக்கணம், அவர்கள் எதிர் பார்க்கா தருணத்தில் தாக்க வேண்டும்” எனக் கூறியவன், அபு பக்கரை சுட்டி காண்பித்து, “இதோ இவன் நமக்குக் கொடுத்த தகவலின் படி, உள்ளே புரவிகள் இருக்கின்றன. ஆகையால் வெளியே இருந்து கலத்தை நாம் தாக்க முயற்சிக்க வேண்டாம்.
 
நாம் தாக்குவதால் சலசலப்பு ஏற்பட்டு வங்கம் ஆட்டம் கண்டால், புரவிகளும் பதற்றம் அடைந்து ஓட்டம் பிடிக்க, கலம் கடலில் மூழ்கிவிடலாம். ஆகையால் நம்முடைய பழைய முறையைப் பின்பற்ற வேண்டாம்.” எனக் கூறி நிறுத்தினான். தலைவனின் குரலில் உறுதி பரிபூரணமாக இருந்தது.
 
எக்காரணம் கொண்டும் வருகின்ற செல்வத்தைத் தன் வசம் கொள்ளும் பேராசை நிறைந்த திடம் அவனுள் நிறைந்திருக்க, அவனுடைய கண்கள் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தன. ஏதோ வேறு உலகத்தில் சஞ்சரிப்பவனைப் போலப் பேசிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவனுடைய உடல் மொழியிலும் குரலிலும் மிகையற்ற உறுதி நிலைத்திருந்தது.
 
இதைக் கொள்ளையர்கள் மட்டுமின்றி அபு பக்கரும் நன்கு புரிந்துகொண்டான்.
 
அப்போது தலைவனிடம், “அவ்வாறென்றால் ? நாம் புது யுக்தியை கையாள போகின்றோமா ?” எனக் கேட்ட கதம்பனின் குரலில் சிந்தனை நன்றாகத் தொனித்தது.
 
“ஆம்!” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்த தலைவன், ஒர் நொடி அமைதிக்கு பிறகு, கொள்ளையர்களில் ஒருவனை அழைத்தான்.
 
“இதோ பார்! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அச்சு பிறழாது செய்தால் மட்டுமே உன் மூச்சு பிரியாது” என எச்சரிக்கையுடன் ஆரம்பித்துக் கூற முற்பட்டான்.
 
“எதிரி கலம் உள்ளே வந்தவுடன் இருபுறமும் நமது கலங்களிலிருக்கும் வீரர்களும் அதற்குள் உட்புக வேண்டும். உள்ளே இருக்கும் பொன்னையும் பொருளையும் நமது கப்பலுக்குக் கொண்டு சேர்த்துவிடுங்கள். புரவிகளை என்ன செய்யவேண்டும் என்பதை நான் பிறகு கூறுகிறேன். பொருட்களை நமது வசப்படுத்திய பின்னர் இங்கிருந்து சென்றவர்களில் பத்து நபர்கள் மட்டும் மீண்டும் தரணிக்கே திரும்பிவிடுங்கள்.
 
மற்ற அனைவரும் நம்முடைய கப்பலுக்குச் செல்லலாம். திட்டம் விளங்கியது தானே ?” என அவனுடைய சகாக்களைப் பார்த்து வினவ, அவர்களோ ஏதோவொரு விசேஷ ஒலியை எழுப்பி அதற்குச் சம்மதம் கூறினர்.
 
முதலில் அழைக்கப்பட்டவனிடம் மட்டும் இந்தச் செய்தியை கொள்ளையர் கலத்திலிருப்போர்களிடம் தெரிவிக்கும் படியாகக் கூறி அனுப்பி வைக்க, அவனும் அப்படியே செய்வதற்காகச் சட்டென்று கடலில் குதித்து நீந்த தொடங்கிய அதே கணத்தில் அவர்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த மரக்கலம் ஜனசந்தடியில் சிக்கிக்கொண்ட தேர் போன்று பதறாமல் அசைந்து அசைந்து அலைகளின் தாளத்திற்கு ஏற்ப நாட்டியம் புரியும் கன்னிகையைப் போல அவர்களைச் சமீபித்தது.
 
நான்கு பாய் மரங்கள் கொண்ட பெரிய வகை விசேஷ கலம் அது. முகப்பில் சிங்கத்தின் தலையை வடிவமைத்திருந்தனர். இரண்டு அடுக்குகள் கொண்டு பிரம்மாண்டமாக அலைகளைக் கிழித்தபடி முன்னேறிக்கொண்டிருக்க, அக்கலத்திலும் பெரியதொரு வெளிச்சம் என்பது இல்லாமலே இருந்தது. ஆங்காங்கே மின்மினி பூச்சிகளைப் போன்று எரிந்துகொண்டிருந்த இரண்டோ மூன்றோ சுளுந்துகள் கவிழ்த்திருந்த இருளை விலக்கும் சக்தியற்றனவாய் இருந்தன.
 
அந்த மந்த ஒளியிலும் எதிரியின் கப்பலை ஊடுருவி பார்த்தன கொள்ளையர் தலைவனின் சிவந்த கண்கள். நிலைத்த கண்களைக் கொஞ்சமும் அசைக்காது பார்த்தவன் சிறு யோசனையை முகத்தில் படரவிட்டு, “ஹ்ம்ம் ஆகட்டும்…” என்ற உத்தரவை கொடுக்கவும், பாண்டி நாடு செல்கின்ற மரக்கலம், தரணிக்கும் கொள்ளையர் கலத்திற்கும் நடுவே வந்து அகப்பட்டுக்கொள்ளவும் சரியாக இருந்தது.
 
இரண்டு புறமும் இரண்டு கலங்களால் சூழ பெற்றிருக்க, சட்டென்று கதம்பன் எரியம்பு ஒன்றை எடுத்து வானை நோக்கி செலுத்த, அவர்களின் சமிஞ்கை பாஷையை உணர்ந்துகொண்ட கொள்ளையர் கலத்திலிருந்த கொள்ளையர்களும் தரணியிலிருந்த கொள்ளையர்களும் ஒரே கண்ணிமையில் மீன்களைப் போலக் கடலுக்குள் குதித்தனர்.
 
அவர்கள் இலாவகமாகக் குதித்ததிலிருந்தும் கணமும் தாமதிக்காமல் விலா மீனை போல ஒருவர் மீது ஒருவர் உரசாது துரிதமாக இலக்கை அடைந்ததிலிருந்தும் அவர்கள் களவு தொழிலுக்குப் பழக்கப்பட்டவர்கள் என்றும் அதில் கை தேர்ந்தவர்கள் என்றும் பார்ப்பவர்களால் யூகிக்க இயலும்.
 
அன்று ஏனோ வெளிச்சம் என்பது பெயருக்கும் இல்லாமல் போனது. இதுவரை எதிரியின் மரக்கலத்தில் எரிந்துகொண்டிருந்த சின்னச்சிறு விளக்குகளும் கொள்ளையர்கள் தடார் தடார் என்று குதித்தும் ஏறியும் தாவியும் பிரவேசித்திருந்ததால் உள்ளிருந்தோர்கள் அச்சத்தால் அங்குமிங்கும் ஓடியபடியால் அணைந்துவிட்டிருந்தன.
 
இப்போது அந்தக் கடல் பிராந்தியம் முழுமையும் இருளில் மூழ்கியிருந்தன. ஆனால் திட்டமிட்ட காரியங்கள் மட்டும் இனிதே நிறைவேறிக்கொண்டிருந்தன. கப்பலில் இருந்த பொக்கிஷங்கள் கைமாற்றப்பட்டன.
 
சிலரது கெஞ்சல் குரல், சிலரது மரண ஓலம், சிலரது வேதனை குரல் என ஓயாது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க, அந்த இடம் ரணகளமாகிக்கொண்டிருந்தது. தொடர்ந்து கடலில் நீந்தி செல்லும் வீரர்களின் சலசலப்பு ஒலியும், அவ்வாறு குதித்த வீரர்களைச் சிலர் துரத்தி சென்று வெட்டி வீழ்த்திய கோர ஒலியுமென அந்த ஆழ்கடல் அதிபயங்கரமானதாய் இருந்தது.
 
வாயும் கை கால்களும் கட்டப்பட்டிருந்த நிலையிலிருந்த தரணி கப்பல் வாசிகள் இந்தக் கொடூரத்தை காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டனர். செவிகளை அடைக்கும் வழி தெரியாமல் ஓலத்தின் குரலில் நடுநடுங்கி அமர்ந்திருந்தனர். முஹம்மதுவின் பார்வை மட்டும் பகிரங்கமாய் அபு பக்கரை குற்றம் சாற்றின.
 
இவ்வாறாக அந்த ஜாமமே அதகளப்பட்டுக்கொண்டிருக்க, அதில் சிறிதும் பாதிக்கப்படாதவனாக நின்றவன் அக்கூட்டத்தின் தலைவனான கடற்கொள்ளையன் மட்டுமே! அவனுடைய விகாரமான சிரிப்பில் பெரும் செல்வத்தை அடையப்போகும் பேராசை நன்கு துளிர்விட்டிருந்தது. அடுத்த இரண்டு நாழிகைக்குள்ளாக அனைத்தும் நிகழ்ந்து முடிந்து ஒரு கூட்டம் கொள்ளையர் கலம் நோக்கி நீந்திச்செல்ல, மீதமொரு கூட்டம் தரணியை நோக்கி வந்து நூலேணிகளில் ஏறி உட்புகுந்து மற்ற கொள்ளையர்களுடன் சென்று சாதுவாக நின்றுகொண்டது.
 
இத்தனை நேரம் பல உயிர்களைக் குடித்த மிருங்களா இவர்கள் என்று ஐயம் கொள்ளும்விதமாகச் சாதாரணத் தோரணையில் அவர்கள் நின்றதிலிருந்து இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்று தரணி கப்பல் வாசிகள் தங்களுக்குள் எண்ணத்தை ஓட்டலாயினர்.
 
அதில் வந்த ஒருவன் மாத்திரம், சற்றே முன் வந்து, “கொள்ளையடிக்கப்பட்ட பொற்காசுகளை நமது கலத்திற்குக் கொண்டு சென்றாயிற்று. ஆனால் நாம் தாக்கிய கலத்தில் புரவிகள் ஏதுமில்லை.
 
நமக்குக் கிட்டியது பொய்யான தகவல்கள்.
 
கிடைத்ததைச் சூறையாடிணோம், மார்தட்டினோர்களை வெட்டி வீழ்த்தினோம், மண்டியிட்டவர்களை இங்கிருந்து புறப்படும்படியாக உயிர்ப்பிச்சை போட்டோம்” என அங்கு நடந்ததைச் சுருங்க சொல்ல, தலையை மட்டும் அசைத்த அவர்களின் தலைவன், அபு பக்கரின் கண்களை நேராக ஊடுருவி, “பொய்யான தகவலை தந்திருக்கிறாய் ? அதற்கான பலனை நீ மட்டுமல்ல, விடுவிக்கப்பட்ட கலமும் அனுபவிக்க வேண்டும். என்ன பார்க்கிறாய் பக்கர் ? நீ புரவி இருக்கிறதென்று என்னிடம் ஆசை வார்த்தை காட்டினாய். நானோ உங்களை விடுவிக்கிறேன் என்று ஆசை வார்த்தை காட்டினேன்.
 
இரண்டிற்கும் சமமாகப் போனது” எனக் கூறி வன்மமாகச் சிறிந்தவனின் குரலில் சூழ்ச்சி இழையோடின.
 
மேலும் அவனே தொடர்ந்து, ‘கதம்பா! தரணி கப்பல் வாசிகளை விடுவிக்கும் எண்ணமில்லை. நம்மிடம் அகப்பட்டுக்கொண்டு பொருளை இழந்த கப்பல் இனி பாண்டி நாடு செல்வதிலும் பயனில்லை. ஆகவேண்டியதை கவனி” என உத்தரவிட, கதம்பனோ சற்றே முன்னேறி போய்க்கொண்டிருக்கின்ற அந்தக் கலத்தின் மீது பார்வையை பதித்தான். பிறகு கணமும் தாமதிக்காமல், “அடே! யாரங்கே ? ஒருவன் விரைந்து கூம்பின் உச்சியிலிருக்கும் கூண்டிற்கு ஏறிச் செல்லுங்கள். எரியம்பை எறிந்து விரைந்து அந்தக் கலத்தைத் தீக்கிரையாக்குங்கள்” என உத்தரவிட, சரசரவென்று ஒருவன் கூம்பிலிருந்த கூண்டிற்குச் சென்றான்.
 
அதற்குள்ளாகக் கலத்தில் நாலாபுறமும் சுளுந்துகளை ஏற்றும்படியாகக் கதம்பன் உத்தரவிட அவை ஒருபுறம் நடக்கத் தொடங்கியது.
 
நடக்கப்போகும் விபரீதத்தைத் தடுக்க முடியாமல் முஹம்மது உள்ளம் பதைபதைக்க நின்றிருந்தான். சுளுந்துகள் ஏற்றப்பட்டன. மெல்ல மெல்ல வெளிச்சம் கலத்தில் பரவத் தொடங்கியது. அதே கணம் கூம்பின் உச்சியிலிருந்தவன் வில்லில் நாணை பூட்டி எரியம்பை பொறுத்தினான்.
 
மறுகணம், கண்ணிமைக்கும் நொடிக்கும் குறைவாகத் தீ, கலம் முழுவதும் விறுவிறுவென்று பற்றிக்கொண்டது. நீருக்குள் நெருப்பு என்பது சாத்தியப்படாத ஒன்று. ஆனால் கண்ணெட்டும் தூரம்வரை நீர் சூழ்ந்திருந்தும் கூட, பயனற்றதாய்த் தாக்கப்பட்ட மரக்கலம் தீ ஜுவாலையுடன் கொழுந்துவிட்டு எரிய தொடங்க, தரணியில் இருந்த அனைவரது கண்களும் அகல விரிந்தன.
 
ஆம்! தரணி மாலுமிகள் மட்டுமல்லாது கொள்ளையர்களும், கொள்ளையர்களின் தலைவனும் கூடக் கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்டிருந்த விபரீதத்தின் காரணமும் காரியமும் புரியாமல் சிலையென நின்றுவிட்டிருந்தனர்.
 
சுடர்விட்டு அந்த நீருலகை நெருப்பு மண்டலமாக மாற்றும்படியாகத் தகித்துக்கொண்டிருந்தது பாண்டி நாடு செல்லும் கலம் அல்ல. தீ ஜுவாலைக்குள் தன்னை ஐக்கியமாக்கி கொண்டிருந்ததோ கொள்ளையர்களின் மரக்கலம்!பார்ப்போர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் விதமாய்ப் பயங்கர ஆந்தையைத் தன் கூம்பில் வைத்தபடி கடல் இராட்சசனை போலப் பார்த்த கொள்ளையர் கலம் தான் தற்போது முற்றிலுமாக எரிந்துகொண்டிருக்கின்றது.
 
பட் பட் என்று கலத்தில் நெருப்பு எரியும் ஒலியும், உள்ளே இருக்கின்ற மொத்த கொள்ளையர்களின் கதறலுமென அந்தச் சூழல் திகிலூட்டுவதாய் இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துவிட்ட தரணியில் இருந்த கொள்ளையர் தலைவன் ஒரு சில கண்ணிமைகளில் சுதாரித்தவனாக, “மூடனே! என்ன காரியம் செய்துவிட்டாய் ? யாராடா நீ ?” என அண்டமே நடுநடுங்கும் குரலில் மொத்த கோபத்தையும் தேக்கி வினவ, இத்தனை நேரம் மேகம் சூழ்ந்திருந்த சந்திரன் மெல்ல வெளிவர ஆரம்பித்தான்.
 
கூம்பின் மீது நின்றவன் அதற்குப் பதில்  கூறும் முன்னதாக, தன் கழுத்தில் இத்தனை நேரமாக அழுத்தி கிடந்த கூர் ஆயுதத்தைத் துச்சமெனத் தட்டிவிட்ட அபு பக்கர், கொள்ளையர் தலைவனின் அருகில் சற்றே முன்னேறி, “மூடன் அவரல்ல! நீ…” எனக் கூற, கொள்ளையர்களும் அவனின் தலைவனும் அபு பக்கரின் இந்த அசாத்திய துணிச்சலை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
 
ஏற்பட்ட அதிர்ச்சி சிறிதும் விலகாத குரலில், “அவ்வாறென்றால், அங்கே நிற்பது?” என வார்த்தைகளை உச்சகட்ட அதிர்ச்சியின் விளிம்பில் நின்றவாறே தலைவன் பாதி உச்சரித்தும் மீதி உச்சரிக்க மறந்தவனாய் நிற்க, இப்போது வானின் அரசனான சந்திரன் முழுவதுமாகத் தன்னுடைய வெள்ளை கதிர்களைப் பரந்து விரிந்திருந்த கடல் மீதும், கலத்தின் மீதும் பாய்ச்சினான்.
 
அந்தப் பூரண வெளிச்சத்தில் கூம்பின் மீது நின்றிருந்தவனைக் கண்டவர்கள் அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர். அசாத்திய உடல் மொழியுடனும், இராஜ முகக்களையுடனும், இடையினில் ஒரு வாள் அதோடு ஒர் பொற் கோடரியுடனும் நின்றிருந்தவன் நிச்சயம் சாமானியனாக இருக்க வாய்ப்பே இல்லையென்று அனைவரது சிந்தனைகளும் ஓட, கொள்ளையர்களின் தலைவன் மட்டும் மெல்ல அச்சத்துடன் இதழ் பிரித்து, “இவர்?” என முணுமுணுக்க, கர்வத்துடனும் நிமிர்வுடனும், ” பாண்டிய இளவல்! அவரது திருநாமம்..” எனக் கூறி சிறிது நிதானித்தான். பிறகு மெல்ல இளவலின் திருநாமத்தை உச்சரிக்க முனைந்தான்
 
ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் சரித்திரத்தில் நீங்காத இடத்தையும் பாண்டிய சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற வீரன் என்னும் பார்போற்றும் புகழுக்கு உரியவனுமான, அந்தச் சரித்திர நாயகனின் பெயரை பயபக்தியுடன் உச்சரித்தன அபு பக்கரின் உதடுகள்.
 
“ஸ்ரீ சடையவர்ம வீர பாண்டிய தேவர்”
 
பயத்தின் ரேகைகள் முழுவதுமாகக் கொள்ளையர்களை வியாபித்து அவர்களின் துணிச்சலை மழுங்கடிக்க, முழுச் சந்திரக் கதிர்களும் அந்தச் சந்திர குலத்தோனின் மீது பாய்ந்திருக்க, அச்சத்துடன் அவனை அனைவரும் ஏறிட்டனர்.
 

Advertisement