Advertisement

சந்திர வாள்
அபுபக்கரும் ஆழ்கடலும் –1
சமுத்திர அரசனின் கர்ஜனை அந்தக் கடல் பிராந்தியத்தைக் கிடுகிடுக்க வைப்பதாகவும் அதிபயங்கரமானதாகவும் ஆக்கியிருக்க, கடலரசனோ தன்னுடைய இராட்சச அலைகளை ஆக்ரோஷத்துடனும் பேரிரைச்சலுடனும் எட்டுத்திசைகளிலும் அதிபயங்கர சூழலை சிருஷ்டித்திருந்தான். காற்றும் ஒரே சீராக இல்லாது திடீரென்று வேகமெடுத்தும் திடீரென்று சுழன்றுமென ஜாலங்கள் பல புரிந்து அந்த மரக்கலத்தை நிலைக் குலைய வைத்துக்கொண்டிருந்தன.
அலைகளின் அராஜக செயல்களினால் பாதிக்கப்பட்ட அக்கலமோ அலைகளின் சீற்றத்தினால் தத்தளிக்க, மேலும் அக்கலமானது கடலில் இரண்டாகப் பிளந்து மூழ்கி விடாமல் இருக்க மாலுமிகள் சதா ஓயாது துடுப்பை வலித்துக்கொண்டிருக்க, காற்றின் திசைக்கு ஏற்ப சுக்கானை திருப்பிப் பெரும் முயற்சிகொண்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றுகொண்டிருந்தனர் கப்பல் வாசிகள். முழுவதுமாகக் கதிரவனைத் தனக்குள் இழுத்துக்கொண்ட கடலரசனோ, விழுங்கிய நெருப்புப் பந்தின் உஷ்ணத்தைத் தாளாதவனாகக் கொதிப்பதை போன்ற பிரம்மையைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருந்தான். குளிர்காற்று தான் என்றாலும், காற்றின் வீரியம் பெரியதொரு பிரளயத்தின் முன்னறிவிப்போ என்ற அச்சத்தை அளித்தன.பெரும் வீரியங்கொண்ட அலைகள் ‘சடார் சடார்’ என அந்த விசேஷ வகையான *தீர்கா கலத்தின் மீது நீரை பாய்ச்சின. சுழன்று வரும் நீரின் வேகத்தையும் விர்ரென்று வீசுகின்ற காற்றையும் தாக்குப்பிடிக்க முடியாது தீர்காவின் தரணி ஆட்டம் கண்டது.
*தீர்கா – மரக்கலத்தில் இரண்டு வகையுண்டு. அதில் தீர்கா ‘விசேஷ’ வகையைச் சார்ந்தது.**தரணி – தீர்க்காவின் நீள அகலத்தைக் கொண்டு பத்து வகைப்படுத்தலாம். அதில் தரணி 48 நீளம் 6 அகலம் 4 4/5 உயரம் கொண்டவை.
கலத்தோடு சேர்ந்து துடுப்பு வலிக்கும் மாலுமிகளும் உயிர் பயத்தால் ஆட்டம் காண தொடங்கினர்.
இந்த அதிபயங்கரச் சூழலிலும் சற்றே திடமான குரலில், “பாய்மரங்களை அவிழ்த்துவிடுங்கள்.காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கப் பாய்மரங்கள் கிழிவதோடு மட்டுமல்லாது கலத்தின் வேகத்தை மிதம் மிஞ்சியதாக்கிவிடும் பேரபாயம் உள்ளது. துடுப்புகளை விரைந்து செலுத்துங்கள்..ஹ்ம்ம் ஆகட்டும்” எனப் பற்பல உத்தரவுகளைத் தன்னுடைய கணீர் குரலில் மாலுமிகளுக்குக் கொடுத்தபடியே துரிதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தான் *ஷேக் அபுபக்கர்.
கணமும் தாமதிக்காமல் கப்பல் தளபதியிடம் சென்றவன், “கலபதியாரே…மச்சஇயந்திரம் காட்டும் திசை யாது ? இந்தப் பேய் காற்றில் நாம் தடம் மாறிவிட்டோமா ?” என மனதில் உறுதி இருந்தபோதிலும் கப்பல் வாசிகளின் உயிரை குறித்த சிந்தனையில் சற்றே கவலை தொனித்த குரலில் வினவ, “இல்லை மரக் கல நாயகரே! நிகழ்ந்துகொண்டிருக்கும் அசம்பாவிதத்திலும் ஆச்சரியமாகக் கலம் பாண்டிய நாட்டை நோக்கியே செல்கிறது. இன்னும் சில கணங்கள் மாத்திரம் மாலுமிகள் சோர்ந்திடாதும் இடைவிடாதும் துடுப்பு வலித்தால் நிகழவிருக்கும் இந்தப் பேராபத்திலிருந்து நாம் தப்பும் மார்க்கம் கிட்டலாம். இல்லையெனில், தாங்கள் தொழும் அல்லாவோ இல்லை நாங்கள் வழிபடும் **மணிமேகலா தெய்வமோ விட்ட வழியென்று கப்பலை செலுத்துவோம்” எனக் கலபதி நம்பிக்கையும் கவலையும் தொனித்த குரலில் ஒருங்கே கூற, அவன் எக்கணத்தில் கூறினானோ அக்கணம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டதாய் இருந்திருக்க வேண்டும்!
*கதை நடந்துகொண்டிருக்கின்ற காலகட்டத்தில் காயல் பட்டினத்திலும் மரக்காயர் பட்டினத்திலும் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுள் பலர் கப்பல் மாலுமிகளாகவும் மரக்கல நாயகர்களாகவும் கலபதிகளாகவும் இருந்தனர்(கடல் வணிகம் – நரசய்யா). **தமிழ் மக்கள் கடல் தெய்வமாக வருணனை வழிபட்டனர். சிலப்பதிகாரம் காலத்திற்குப் பிறகு கடல் தெய்வமாக மணிமேகலா தெய்வத்தை வழிபடத் தொடங்கினர். சோழ மன்னருக்கும் பீலிவளைக்கும் பிறந்த பெண்ணே மணிமேகலை.
 
பெரிய இராட்சசனை போன்று தாண்டவம் ஆடிய கடற் காற்று மெல்ல மெல்ல குறைவதை போன்ற போக்கை காட்டவே, கப்பல் மாலுமிகளும், கலபதியும், மரக்கல நாயகன் ஷேக் அபுபக்கரும் இயற்கையின் மாற்றத்தை எதிர்ப்பார்ப்போடும் ஒருவித பயத்தோடும், இக்கலவையான உணர்வுகளை மீறிய இறை நம்பிக்கையுடனும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரு சில கணங்களில் முழுமையாக, அலைகள் தனது ஆக்ரோஷத்தை குறைத்துக்கொள்ள, மெல்ல மெல்ல தரணி நிதானமாகக் கடலோட தொடங்க கப்பல் வாசிகளின் முகத்திலும் அகத்திலும் நிகரற்ற நிம்மதி பிறந்த அதே கணம் எண்ணையில் மிதந்துகொண்டிருந்த தட்டையான இரும்பினாலான திசைகாட்டும் *மச்சஇயந்திரம் காயல் பட்டினம் போகும் திசையைக் காட்ட, காற்றின் வேகம் குறைந்துவிட்டதனால் பாய்மரங்கள் கூம்பில் ஏற்றி விரித்துவிடப்பட்டன.
திகிலூட்டும் கொடிய கணங்களை அவர்கள் மறந்து நிதானத்திற்குப் பயணித்த மறுகணமே அவர்களின் எண்ணத்தை அடியோடு அழிப்பதை போன்ற அதிபயங்கர ஆபத்தொன்று எதிர்நோக்க, மீண்டும் அவர்கள் மரணப் பீதியில் சிக்கி தவித்தனர்.
ஷேக் அபூபக்கரே முதலில் அந்தப் பேராபத்தைக் கவித்தவன்…. பார்த்த மாத்திரத்தில் கணமும் தாமதிக்காது அபாய ஒலியை எழுப்பும் கருவியெடுத்து தன் வாயில் வைத்து ஊத அனைவரின் முகத்திலும் விவரிக்க முடியாத அச்ச ரேகைகள் படர தொடங்கின.
*மச்ச இயந்திரம் – கப்பல் கட்டுவதில் நிகரற்றவர்களான நம் நாட்டவர்கள் கப்பலுக்குத் தேவையான உபகரணங்களைத் தாமே வைத்திருந்தனர் என்று ஜே.எல்.ரீட் என்ற ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. J.L. Reid, Member of the institute of Naval Architects and Ship Builders in England at around the beginning of the present century
அதில் ஒரு சில மாலுமிகள் வாய்விட்டே, “இந்த அபாயச் சூழலில் சிக்கி சித்திரவதை படுவதற்கா புயலில் இருந்து தப்பினோம்?” என முணுமுணுக்கவும், மற்றவர்களுக்கும் அதே எண்ணம் தான் என்பதை அவர்களின் கிலி படர்ந்த முகங்களே பறைசாற்றின.
சூழலை உணர்ந்துவிட்டக் கலபதியின் உதடுகளோ, “கடல் கொள்ளையர்கள்” என்ற சொற்களை மிகுந்த அச்சத்துடன் உச்சரித்தன.
எத்தனை மெல்லிய ஓசையில் முணுமுணுத்தபோதும், வங்கத்தின் கலபதி உதிர்த்த அந்தச் சொற்கள் மட்டும் அதிபயங்கரமானதாய் இருந்தன. அச்சொற்களின் பயங்கரத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் அவர்களைச் சமீபித்துக்கொண்டிருந்த கொள்ளையர் கப்பலும் பார்ப்போர்களைப் பார்த்த கணத்தில் திக்பிரம்மை கொள்ளச் செய்வதாய் ஸ்ரிஷ்டிக்கப்பட்டிருந்தது.
இருண்டிருந்த வானமும் அடர்ந்திருந்த ஆழ்கடலும் கருஞ்சாயம் பூசப்பட்ட கொள்ளையர் மரக்கலத்தை, தரணி கப்பல் வாசிகளின் கண்களுக்கு மறைத்தனவோ? சற்று முன்பாக வீசப்பட்ட காற்றினால் இத்தனை துரிதத்தில் கொள்ளையர் கப்பல் தங்களை நோக்கி நெருங்கி வந்ததோ ? என்னவென்று கப்பல் வாசிகளுக்கு மட்டுமில்லாது மரக்கல நாயகனான அபுபக்கருக்கும் திட்டமாகத் தெரியாத நிலையே. கலத்தின் உரிமையாளனாய் பேரதிர்ச்சிக்கு உள்ளானான். வாணிபம் செய்ய, தான் தேர்வு செய்த நேரமும் காலமும் நல்லவை அல்லவோ எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். எதையுமே சிந்திக்கும் சக்தியற்றவனாய் குழப்பத்தின் உச்சியில் நின்றான்.
இயற்கையின் கோரத்தாண்டவதோடு போராடுவோம் என்று எண்ணம் கொண்டிருந்தவனின் சிந்தை இந்த இரக்கமற்ற கொள்ளையர்களைக் கண்டதும் அச்சம் கொண்டுவிட்டனவோ என மாலுமிகளும் உப கலபதியும் தமக்குள் எண்ணங்களை ஓட்டலாயினர்.
தரணி கப்பல்வாசிகளோ அச்சம் முழுமையாக வியாபிக்கப்பட்டிருந்த கண்களால் தங்களை நெருங்கி வந்த கொள்ளையர் மரக்கலத்தின் மீது பார்வையை ஓட்டலாயினர். பாய்மரங்கூம்பின் உச்சியில் பெரிய வடிவ ஆந்தை ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. அது மரத்தினால் ஆனதோ உயிருள்ள இராட்சச ஆந்தையோ என அஞ்சும் வண்ணம் அக்கப்பலின் தச்சு வினைஞன் அதை ஸ்ரிஷ்டித்திருக்க, “அபாயம்…” , “அபாயம்” என அனைவரும் ஒரே குரலாக முணுமுணுக்க, கண்ணிமைக்கும் குறைவான நேரத்தில் சட சட வென்று ஈட்டி மழை தரணியில் பொழிய தொடங்கியது.
கோர சிரிப்புகளுடனும் அகோர ஒலிகளுடனும் மிருகத்தனமாக, கருணை என்பது கையளவு கூட இல்லாது, இலக்கெதுவும் இன்றி நாலாபுறமும் ஈட்டிகளைக் கொள்ளையர்கள் வீச, கலபதியும் மரக்கல நாயகனும் சட்டென்று மறைந்துக்கொள்ள, அவர்களைப் பார்த்த மாலுமிகளும் தற்காப்பிற்காய் ஆங்காங்கே பதுங்கினர். வீசப்பட்ட ஈட்டிகள் ஒன்றோடொன்றுன்று மோதி ‘டணார் டணார்’ என்ற பேரொலியை கிளப்பிவிடவே மறைந்துள்ளோர்களுக்குத் தாங்களிருப்பது மரக்கலமோ போர்களமோ என்ற கேள்வி ஜனித்தது.
உப கலபதியோ, “கலபதியாரே! இப்படிப் பதுங்குவதற்குப் பதிலாக நாம் ஏன் விரைந்து முன்னேற கூடாது ? முயலாமல் ஒளிந்துகொள்வது வீரமா ?” எனத் தன் ஐயத்தை முன்வைக்க, நிதானமான குரலில் அபுபக்கர், ” சில நேரங்களில் வீரத்தை விட விவேகம் அவசியமானது. கலபதியார் தெளிவான முடிவையே எடுத்துள்ளார். கொள்ளையர் கலத்திடமிருந்து தப்பிச் செல்ல, நாம் எதிர் திசையில் பயணிக்க வேண்டும். அதாவது காற்றுக்கு எதிர் திசையில். அவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வலித்தால் கூட, உமது எண்ணத்தின் வேகத்திற்கு நமது வங்கத்தால் ஈடு கொடுக்க இயலாது போகலாம்.
கொள்ளையர்களின் கப்பலோ கனம் நீளம் அகலம் உயரமென அனைத்திலும் நமது கலத்தை விடப் பெரியது. நாம் ஓடி சென்றால் அவர்கள் பின்னிருந்து நமது கலத்தைத் தாக்கினால் மறுகணமே எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இக்கலமானது இரண்டாக உடைந்து கடலுக்குள் மூழ்கிவிடும். அதை அறிந்தே கலபதி அமைதிக்காக்கின்றார்” எனக் கூற, அங்கிருந்தோருக்கு அவரின் விளக்கத்தில் மிதமிஞ்சிய ஆச்சர்யமே!
கடலோடும் தாங்களே பதற்றத்தின் விளிம்பில் நன்கு அறிந்த செய்தியை மறந்தவர்களாக சிந்தனையை ஓட்டியிருக்க, வாணிபம் செய்யவந்த இளைஞன் இத்தனை நிதானமாய்ச் சிந்திப்பது அந்த அதிபயங்கரச் சூழலிலும் அவர்களுக்கு ஆச்சர்யத்தையே அளித்தன என்றால் அது மிகையன்று.
ஆச்சர்யம் ஒருபுறமிருந்தாலும் தங்களை வாணிபமென்றழைத்து வந்து இப்போது தத்துவம் பேசுபவன் மீது சினம்கொண்ட துணை கலபதியோ, “தங்களின் அறிவுரையை உயிர் பிழைத்திருந்தால் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் விவேகம் எம் அனைவரின் உயிர் காக்கும் வல்லமை கொண்டனவா ?.
கொள்ளையர்கள் கையில் சிக்கிய மறுநிமிடம், ஒன்று நாம் அனைவரும் அடிமைகளாக விற்கப்படுவோம் அல்லது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்படுவோம். இங்குச் சுற்றி திரியும் சுறாக்களுக்கு எங்களது சரீரம் இன்று நல்ல விருந்தாகும் என்பதில் ஐயமில்லை. எதுவாகினும் இன்றோடு எம் அனைவரது வாழ்வும் நிரந்தரமற்றதாகப் போகின்றது” என்ற சொற்களைக் கூறியவனோ, மரக்கல நாயகனிடம் கேள்வியில் ஆரம்பித்து இயலாமையில் முடித்தான்.
அவனுடைய கோபம் கலந்த எரிச்சலுக்கு மற்றொரு காரணமும் இருக்கவே செய்தது. அது கப்பல் கலபதியின் மௌனம். கரையிலிருந்து புறப்பட்ட கணத்திலிருந்து உத்தரவுகளை எப்போதும் பிறப்பிக்கும் கலபதியின் அசாத்திய மௌனம். கப்பலின் உரிமையாளனான மரக்கல நாயகனுக்கு அனைத்து உரிமைகளும் இருந்த போதினிலும் இந்தப் பயணத்தில் அது சற்று அதிகமாகவே இருந்ததாகப் பட்டது.
 
அனைத்து உத்தரவுகளும் அபுபக்கரிடமிருந்தே வரவும் ஏதோவொரு மர்மம் அவனிடம் மறைந்திருப்பதை உப கலபதி சந்தேகமற புரிந்துகொண்டதனால் அவனுள் அச்சத்தையும் மீறிய எரிச்சல் மூள தொடங்கியது.
இவை அனைத்தும் அபுபக்கரின் கண்களுக்குப் புலப்பட்டாலும் ஏதும் அறியாதவனைப் போலவே, நிதானமும் உறுதியும் நிறைந்த குரலில் “துணை கலபதியாருக்கு சிறிதேனும் பொறுமை அவசியம். அமைதியை தழுவுங்கள். இவ்வங்கத்தின் உள்ள ஓவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் பெயரால் உத்திரவாதம் தருகிறேன். எவரது உயிரும் பறிபோகவிடமாட்டேன்.
எவ்வாறு வாணிபத்திற்காக உங்கள் அனைவரையும் அழைத்து வந்தேனோ, அப்படியே எவ்வித சேதமுமின்றி அனுப்புவது என்னுடைய கடமை. இனி நகருகின்ற ஓவ்வொரு கணங்களையும் நான் பயணிக்கின்ற திசையில் பயணியுங்கள். என் பேச்சின் திசை அறிந்து செயல்படுங்கள்” என மறைமுகமாக அறிவுறுத்திய அபுபக்கரின் கண்களில் விபரீதமான ஒளியொன்று கண்ணிமையில் தோன்றி மறைந்தது.
 
மரக்கலநாயகனின் குரலிலிருந்து அவனது போக்கை உணரமுடியாது போனாலும், அவன் கொடுத்த நம்பிக்கை மற்றவர்களின் கவலையை சற்றே மட்டுப்படுத்த, தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றனர்.
 
இவர்களிடம் பேசியவன் சிறிதும் தாமதிக்காமல் பெரிய கூம்பொன்றில் வெள்ளை கொடியை பிணைத்து வேறெவரையும் பணிக்காமல் தானே அதை உயர தூக்கிப்பிடித்துக் கொள்ளையர் மரக்கலத்தை நோக்கி அசைக்க, கொள்ளையர்கள் தங்கள் கைகளிலிருந்த ஆயுதங்களைப் பிரயோகிக்கச் சிறிது தாமதித்தனர்.
 
சுமார் நூறு எண்ணிக்கையில் இருந்த கொள்ளையர்கள் ஒரு சேர, அவர்களின் தலைவனை ஏறிட, அவன் ஓர் விகார முறுவலை அவனுடைய அழுத்தமான உதடுகளில் படரவிட்டபடி, தாக்குதலை நிறுத்தும்படியாக உத்தரவை பிறப்பிக்க, சட்டென்று அம்புகளில் நெருப்பை வைத்து தரணியை நோக்கி எறியவிருந்த திட்டம் கைவிடப்பட்டது.
 
அபுபக்கர் ஒரு கணம் தாமதித்திருந்தாலும் கூட, தற்சமயம் தரணியும் தரணியின் கப்பல் வாசிகளும் தீக்கிரையாகியிருப்பர். சரியான வேளையில் சாதுரியமாய்ச் சமாதான உடன்படிக்கை நடவடிக்கையில் இறங்கிவிடவே, அடுத்தடுத்துக் காரியங்கள் மின்னலின் வேகத்தில் செய்யலாற்றப்பட்டன.
 
இரண்டு மரக்கலங்களும் அக்கம் பக்கமாய் நிறுத்தப்பட்டன. கப்பலிலிருந்த மரப்பலகைகளைப் பாலம் போல் இரண்டு கலங்களுக்கும் இடையே பொறுத்த கொள்ளையர்களின் தலைவன் செருக்குடன் அதன் மீது நடந்துவர, இன்னும் சில கொள்ளையர்கள் கடலில் குதித்து நீந்தி நூலேணி மூலம் ஏறி தரணியில் உட்புகுந்தனர்.
 
அனைவரும் ஒரே நேரத்தில் தட தடவெனக் கலத்தினுள் குதிக்க, மாலுமிகளோ வெளிறிய முகத்துடன் நின்றிருந்தனர். அபு பக்கரையும் சேர்த்தே அங்கிருந்ததோ இருபது நபர்கள் தான். அப்படியிருக்க இப்போதோ கலத்தில் குதித்த கொள்ளையர்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்க, அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சம் அனைவரது இருதயத்தையும் கவ்வி நிற்க, அகலவிரிந்த விழிகளுடன் கொள்ளையர்களின் தலைவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தனர்.
பெருத்த கரிய சரீரம். கரிய சரீரமா ? அல்லது கருமை பூசிக்கொண்டுள்ளானா ? வண்ணம் தான் பூசியிருக்க வேண்டும். ஏனெனில் இத்தனை அடர்ந்த கருமை நிறத்தை அவர்கள் யாரும் இதுவரை கண்டதே இல்லை.முகமும் பார்ப்போர்கள் அஞ்சும் விதமாக இருக்க மூக்கிலும் காதிலும் ஏதேதோ தொங்கவிட்டிருந்தவனின் கண்கள் இரத்தம் ஏறி அச்சுறுத்துவதாய் இருந்தன. முடிகள் சடை சடையாகவும் திரி திரியாகவும் அலங்கோலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் முகத்தினில் சரிய, அஃது அவனின் முகத்தை இன்னமும் விகாரப்படுத்திக் காண்பித்தது.
 
தன் கையிலிருந்த ஆயுதத்தால் மரக்கலத்தை ஓங்கி அடித்தவன் பேரொலியை கிளப்பிவிட்டபடி, அங்கிருந்த மரப்பலகையில் மிகுந்த செருக்குடன் வந்தமர்ந்தான்.
 
“பலே பலே… கொள்ளையனிடம் வெள்ளை கொடி பலனளிக்கும் என்ற பேராசை” என மெல்ல நகைத்தபடி கூறியவன், நிதானமாக அனைவரது மீதும் தன்னுடைய விழியை நிலைக்கவிட்டான்.
 
பிறகு அவனே தொடர்ந்து, “இங்குச் சமாதானத்திற்கு அழைத்தவன் யார் ?” எனக் கடலே அதிரும் வண்ணம் சப்தமெழுப்ப, ஓரடி ஒரே அடி மெல்ல முன்வந்து நின்றான் அபு பக்கர்.
 
“எதற்காகச் சமாதானம்? உம்முடைய பொருட்களைக் கொள்ளையடிக்காமல் காப்பாற்றுவதற்காகவா ?” என எள்ளலுடன் வினவிய குரலிலே அது சாத்தியமற்ற ஒன்று என்ற த்வனி நன்கு தெரிந்தது. அதையே ஊர்ஜிதப்படுத்தும் விதமாய், ஒற்றை விரலை அபுபக்கரின் முகத்திற்கு முன் நீள செய்து உன் சமாதானம் நடக்காது என்பதைப் போன்று அப்புறமும் இப்புறமும் ஆட்ட, தரணி கப்பல் வாசிகளோ அச்சம் கொண்டதோடு மட்டுமில்லாமல் தங்களின் விதியும் தங்களுக்கு வாக்களித்தவனின் விதியும் இதோடு முடிந்ததென்று தங்களுக்குள்ள சொல்லிக்கொள்ளவும் செய்தனர்.
 
ஆனால் அபுபக்கரோ கொள்ளையர்களின் தலைவனுக்கும் அச்சுறுத்தும் வார்த்தைகளுக்கும் சற்றும் சளைக்காது, துணிந்த குரலிலே, “உன்னுடன் வாணிபம் செய்வதற்காக” எனக் கூற, பக்கரின் மூன்று வார்த்தைகள் தரணி கப்பல் வாசிகளை மூச்சிறையாக்கின. கொள்ளையர்களோ குழப்பத்தின் வசம் சிக்கினர்.
 
அவர்களுள் சற்றே புத்தியை தீட்டுபவனான கொள்ளையர்களின் தலைவனோ சந்தேகச் சாயலை சுமந்திருந்த அவனுடைய சிவந்த விழிகளை அபு பக்கரின் மீது நிதானமாய் நிலைக்கவிட்டான்.
 
சந்தேகம் சற்றும் குறைந்திடாத தொனியில் அதை அபு பக்கரிடம் வினவவும் செய்தான்.
 
“அசாதாரணச் சூழலை உமக்குச் சாதகமாக்கும் திட்டமா உன்னுடைய வார்த்தைகள்?” என நேரடியாக வந்து விழுந்தன கடற்கொள்ளையர்களின் தலைவனது வார்த்தைகள்.
 
“இல்லை!” எனத் திட்டமாக மறுத்த பக்கர், ஒரு சிறு இடைவெளிவிட்டு, “அசாதாரணச் சூழலில் பாதகமாக ஏதும் நடந்திடாமல் இருக்கவேண்டும் என்ற திடம்” என மெல்ல யோசனை படர்ந்த முகத்துடன் கூற, அபுபக்கரின் ஓவ்வொரு அசைவுகளையும் கொள்ளை கூட்டத்தின் தலைவன் கிரகிக்க முயன்றான். இருந்தும் பக்கரின் வார்த்தைகள் அவனுக்குப் புதிராகவே இருந்தன.
 
“விளங்கவில்லையே?” என ஒற்றைச் சொற்களை உதிர்த்தன தலைவனின் விகார உதடுகள்.
 
“விளங்கவைப்பது எமது கடமை. உமக்கு விளங்கவைப்பது எவ்வாறு எனது கடமையோ அவ்வாறே இந்தக் கப்பல் வாசிகளின் உயிரை காப்பதும். இவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணத்தை மேற்கொண்டனர்.
ஆகையால் இவர்களின் பிராணம் எனக்குப் பிரதானம். உமக்கு வேண்டியது பொன்னும் பொருளும் தானே? இங்கிருக்கும் செல்வங்களை நீயும் உன்கூட்டமும் தங்கு தடையின்றி அள்ளிக்கொள்ளலாம்.
இவைகளை எடுத்துக்கொண்டு எமது சகாக்களின் உயிரை மீட்பதே எனக்கு உத்தமம். அதைமுன்னிட்டே சமாதானத்திற்கு உம்மை அழைத்தேன்” எனக் கூற,
கடற்கொள்ளையர்கள் இப்போது சற்றே எச்சரிக்கை அடைந்தனர்.
 
“சொல்…நீ யாரென்ற மெய்யை சொல்” என்ற சொற்களைக் கடினமுடன் உச்சரித்தன கடற்கொள்ளையனின் குரல்.
 
அவனின் இந்தத் திடீர் கடினத்தில் சற்றே கலக்கம் கொண்ட கப்பல் வாசிகள் அபு பக்கரின் மீது பயந்த விழிகளை ஓட்ட, அவனோ குழப்பத்துடன், “என்னை என்ன கூறுமாறு சொல்கிறாய் ?” எனச் சந்தேகச் சாயல் நன்றாகக் குரலில் படர்ந்திருக்க வினவினான்.
 
“நீ சூது வாது அற்றவனா? சூது நிறைந்தவனா ? என்று தான். ஏனெனில் எனது கூட்டத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாய் என்றே தோன்றிகிறது.
 
இத்தகைய அபாயச் சூழலில் சிக்கிய எவனும் தப்பிச் செல்லவும் தன் உடமைகளைக் காப்பாற்றிக் கொள்ளவுமே முயல்வான். ஆனால் நீ அதற்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
 
யார் நீ ? எங்கிருந்து வருகிறாய் ? எங்குச் செல்கிறாய் ?” என வினவிய கடற்கொள்ளையனின் குரலில் பொறுமை மருந்துக்கும் இல்லை. அவசரமும் கோபமுமே அவனுடைய குரலில் பரவி படர்ந்துகிடந்தன.
 
“நான் சூது வாது அற்றவனும் அல்ல; சூது நிறைந்தவனும் அல்ல.சுய புத்தி உள்ளவன். அதாவது வாழ்வில் எது அவசியம் என்று உணர்ந்தவன்.
 
என் உயிரும் என்னைச் சேர்ந்தோரின் உயிரும் அந்தரத்தில் ஆடும் பொழுதினில் புத்தி உள்ள எவரும் உயிரற்ற செல்வத்தின் மீது கவனத்தைச் செலுத்த மாட்டார்கள்.
 
இந்தக் கப்பலில் உள்ள முழுமையுமே கொள்ளையடிக்கப்பட்டாலும் கூட இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் நான் மறுபடியும் இதே அளவு பொன்னையும் பொருளையும் சம்பாதித்துக்கொள்ள இயலும். ஆனால் உயிர் ? விலைமதிப்புள்ள பொன்னை விட விலைமதிப்பில்லாத உயிர் இப்புவியை விடப் பெரியது.
 
என்னைப் பற்றிக் கேட்டாய் தானே ?நான் அபு பக்கர். வணிகன். ரோமா புரிக்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே கடலோடி வாணிபம் செய்து பிழைப்பை நடத்துபவன். இப்போது கூட, பாண்டி நாட்டின் முத்துக்களை வணிகம் செய்வதற்காகச் செல்கிறோம். எங்களிடம் இருப்பது கூட *ரோம நாணயங்களே.  
*ரோம நாட்டுப் பெண்கள் அதிகளவில் பாண்டிய நாட்டு முத்துக்களைப் பயன்படுத்தியதால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமோ என்று அச்சம் கொண்ட அந்நாட்டு அரசு ஒர் தனிச் சட்டத்தை அமல்படுத்தியது. அஃது ‘தனி மனித செலவு அளவு சட்டம்’ “Sumptuary Law “இதை”Pliny : Chapter IX 54” பதிவு செய்கிறார்.
உனக்கு இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லையென்றால் உடனடியாக உன்னுடைய பணியாட்களையோ சகாக்களையோ இக்கலத்தைச் சோதனையிட சொல்வாயாக” என விளக்க, கடற்கொள்ளையன் சற்றே தெளிந்தான்.
 
அபு பக்கரின் நிதானமான குரல் அவனின் சந்தேகத்தை அறுக்கும் கூர் வாளாய் இருந்தது. மெல்ல தெளிந்துவிட்டதின் அடையாளமாய்க் கடற்கொள்ளையனின் உடல் மொழி மாற்றம் கொண்டது. சிறிது நம்பிக்கையும் அதே சமயம் அவநம்பிக்கையும் கொண்டவனாக, அபு பக்கரிடம், “இறுதியாக என்ன கூற வருகிறாய் ?” என யோசனை படிந்த முகத்துடன் ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காகக் கேட்டான் தலைவன்.
 
“நானொரு வணிகன்! வணிகம் செய்வதையே கூற வருகிறேன்” எனத் தெளிவாக உச்சரித்தன அபு பக்கரின் உதடுகள்.
 
“ஆக… உம்மனைவரது உயிருக்கும் ரோம நாணயங்கள் விலை. நல்ல வாணிபம்தான். இதை நான் ஏற்கிறேன். உம்மில் ஒருவருடைய உயிரைக்கூட என் ஈட்டிக்கு இரையாக்க போவதில்லை” என அறிவிக்க, தரணி கப்பல் வாசிகளின் முகத்தில் அளவுகடந்த நிம்மதி ஏற்பட அஃது அப்படியே அவர்களின் முகத்தில் சந்தோச ரேகைகளாகப் படர்ந்தன., ஆனால் அபு பக்கர் மட்டும் கலவையான உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டினான். அவனுடைய முகத்தில் ஓடிய ரேகைகள் சந்தேகத்தைக் குறிக்கின்றனவா சந்தோசத்தைக் குறிக்கின்றனவா என்பதைப் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாத நிலை.
 
அதைக் கப்பலின் துணை கலபதியும் கவனிக்கவே செய்தான். ஏனெனில் தொடக்கம் முதலே அபு பக்கரின் செயல்கள் ஏனோ அவனுக்குத் திருப்திகரமாகப்படவில்லை என்பதே மெய். அபுவின் மனதில் ஓடும் எண்ணங்களைப் படிக்க முயன்றவனைத் தடுத்தன அடுத்து கொள்ளையர் தலைவன் உச்சரித்த வார்த்தைகள்.
 
அவை வார்த்தைகள் அல்ல, அவர்களின் நிம்மதியை அடியோடு சீர்குலைக்கும் வல்லமை கொண்ட வாள்கள்.
 
அவை, “கொடுக்கப்பட்ட விலையானது உங்களின் உயிருக்கானது; சுதந்திரத்திற்கானதல்ல!”.
 
 

Advertisement