Advertisement

இளவளவன் தன் அத்தை, மாமாவின் அறைக்கு சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், தங்களின் திட்டத்தைப்படி மாடிக்கு படியேறினாள் அம்மு.
மெதுவாக மாடி அறையின் கதவை திறந்து அம்மு உள்ளே செல்ல, வரவேற்பரையில் யாழினி இல்லாமல் போக, ஒவ்வொரு அறையாக அவளை தேடியபடி நடக்கலானாள்.
சுவரின் ஒரு பக்கம் முழுக்க கண்ணாடியால், அதுவும் உள்ளே இருந்து மட்டும் வெளியில் பார்க்க கூடிய சிறப்பு வகை கண்ணாடியை கொண்ட ஓவிய அறையில், சிலையென நின்றிருந்தால் யாழினி.
அம்மு பார்த்து கொண்டிருக்கும் போதே, கண்ணாடி வழியே எதையோ உற்று கவனித்து கொண்டிருந்த யாழினி, தீவிர சிந்தனையுடன், கணினியை நோக்கி நடந்து, அதை இயக்கி, வேலை செய்ய ஆரம்பித்தாள்.
ஏதோ மேடையேற போகும் நடிகையென, பேச வேண்டிய வசனத்தை எல்லாம் மனதுக்குள் ஒரு முறை ஓட்டி ஒத்திகை பார்த்து கொண்ட அம்மு, நடந்து சென்று யாழினியின் முன்பு நின்றாள்.
கணினியில் மூழ்கி இருந்த யாழினியோ, தன் முன் நிழலாட நிமிர்ந்து பார்க்க, அங்கு அம்மு நிற்க கண்டவளுக்கோ, தோட்டத்தில் கண்ட காட்சி தான், கண் முன் வந்தது.
அம்முவும், அந்த புதியவனும் சிரித்து கொண்டிருந்ததை நினைக்கும் போது, ஏனோ எல்லாரும் அவனுடன் சேர்ந்து கொண்டதை போலவும், தான் மட்டும் தனித்து நிற்பதை போலவும் தோற்ற மயக்கம் யாழினிக்கு.
அந்த எண்ணம் தந்த எரிச்சலை, அணுவளவும் முகத்தில் காட்டாத யாழினி, அதேநேரம் எந்த கேள்வியும் கேட்காமல் வெறுமெனே பார்க்க மட்டும் செய்ய, அவளின் பார்வையில் லேசாக நெளிந்த அம்மு,
“அதுவந்து அக்கா சாப்பாடு வேண்டாம்னு சொன்னிங்களாமே”
என்று தானே பேச்சை ஆரம்பிக்க, யாழினி இப்போதும் பேசாமல் தலையை மட்டும் ‘ஆமாம்’ என்னும் விதமாக அசைத்தாள்.
அவளின் அமைதியில், அம்முவுக்கு பதற்றம் கிடுகிடுவென உயர,
“அம்மா கிட்ட நீங்க சொன்னதை, அம்மா, அம்மா கிட்ட சொல்லும் போது, ஐயா கேட்டுட்டாங்க, அதனால்”
என்று சடசடவென பொரிந்து தள்ள, யாழினிக்கோ, அம்மு சொன்னவற்றில் ஒரு வார்த்தை கூட புரியவில்லை.
குழப்ப ரேகை விரவிய முகத்துடன் அம்முவை பார்த்த யாழினி, கேள்வியாக தன் புருவங்களை உயர்த்தவும் செய்தாள்.
யாழினியின் முகபாவத்தை பார்த்த அம்முவுக்கு, தான் உலறி கொண்டிருக்கிறோம் என்பது புரிய, இளவளவனின் எச்சரிக்கையும் நியாபகம் வர, தன்னை சுதாரித்து கொண்டவள்,
“அது வந்து அக்கா, நீங்க என்னோட அம்மாகிட்ட வந்து உங்களுக்கு சாப்பாடு வேண்டாம்னு சொன்னிங்களா”
என்று நிறுத்தி நிதானமாக கேட்டவள், யாழினி தலையசைத்ததும்,
“அதை என்னோட அம்மா, லீலாவதி அம்மா கிட்ட சொல்லும் போது, ஐயா கேட்டுட்டாங்க”
என்று தன் கைகளால் அபிநயம் பிடிக்க, அம்மு சொல்வதை கேட்ட யாழினியின் மனமோ,
“அப்பா இந்த நேரம் கடையில் தானே இருக்கனும், ஏன் வீட்டுல இருக்காரு, எதாவது எடுக்க வந்து இருப்பாரா, ஆனா……”
என்று தன் போக்கில் யோசனையில் மூழ்க, யாழினியை ஓர கண்ணில் பார்த்த அம்மு, அவளின் முகத்திற்கு முன்பு கையசைத்து யாழினியின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவள்,
“என்னோட பொண்ணு சாப்பிடாமா இருக்கும் போது, எனக்கும் சாப்பாடு வேண்டாம்னு ஐயா சொல்லிட்டாராம்”
என்று தன் முகத்தை முன்னினும் சோகமாக வைத்து கொண்டு சொன்னவள், யாழினியின் முக மாற்றத்தை அளவிட்டவம் மறக்கவில்லை.
பின்பு இயல்பாக சொல்லுவதை போல,
“நீங்களே சொல்லுங்க அக்கா, சாப்பிடாம எப்படி மாத்திரை போட முடியும், டாக்டர் சொன்ன மாதிரி சரியா நடந்த தானே, ஐயா உடம்பு”
என்று சொல்லி கொண்டே வந்த அம்மு, சொல்ல கூடாதை சொல்லிவிட்டவள் போல, பேச்சை சட்டென்று நிறுத்தி, வாயில் கைவைத்து, முட்டை கண்ணை விரித்து, தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள்.
“அய்யயோ உளறிட்டேன், என் அம்மாக்கு தெரிஞ்சா என்ன துவச்சி காய போட்டுடும், நான் தான் சொன்னேன்னு யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க அக்கா, பிளீஸ், பிளீஸ்”
என்றவள், யாழினியின் பதிலுக்கு காத்திருக்காமல், கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
யாழினியின் மனம்,
“அப்பாவுக்கு உடம்பு என்னமோ ஆகிடுச்சி, அதுவும் கடைக்கு போகாம வீட்டுல ரெஸ்ட் எடுக்குற அளவுக்கு”
என்ற உண்மையை உணர்ந்து கணம், அவளின் கண்களில் இருந்து, சரசரவென கண்ணீர் வழிந்தது.
மகிழ்ச்சி பூக்கள் மட்டுமே நிறைந்திருந்த, யாழினியின் வாழ்க்கை எனும் நந்தவனத்தில் வீசிய முதல் புயல், ஒன்னரை வருடங்களுக்கு முன்பான ‘அந்த நாள்’.
அதன் தாகத்தில் இருந்தே யாழினி விடுபடாத நிலையில், இன்று அவளின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பது, அவளை பெரிதும் பாதித்தது.
யாழினி ஈன சுரத்தில்,
“அம்மு”
என்று அழைக்க, அவள் அழைப்பதற்காகவே அடி மேல் அடி வைத்து, மெதுவாக சென்று கொண்டிருந்த அம்மு, நின்று திரும்பி பார்த்தாள்.
தன் இருக்கையில் இருந்து எழுந்த யாழினி, அழுகையில் கம்மிய குரலில் அம்முவிடம்,
“அப்பாவுக்கு என்ன ஆச்சு”
என்று கேட்க, யாழினியின் கண்ணீர் முகம் மனதை பெரிதும் தாக்க, அம்முவுக்கு அழுகை வரும் போல இருக்க, உண்மையில் சுண்டி போன முகத்துடன்,
“அது வந்து, அது வந்து, எனக்கும் முழுசா தெரியாது அக்கா”
என்று என்ன சொல்வது என்று தெரியாமல் மென்று விழுங்க, தந்தையின் நிலை என்னவென்று அறியாத பயத்தில் இருந்த யாழினியோ,
“பரவயில்லை அம்மு, உனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லேன் பிளீஸ்”
என்று கிட்டத்தட்ட கெஞ்ச, அதற்கு மேல் மறுக்க முடியாத அம்மு, சிறிது தயக்கத்துடனே,
“ஒரு வாரம் முன்னாடி ஐயாவை ஹாஸ்பிட்டல்ல ஒரு ரெண்டு, மூணு நாள் வச்சிருந்து கூட்டிக்கிட்டி வந்தாங்க, அதுல இருந்து ஐயா வீட்டுல தான் ரெஸ்ட் எடுக்குறாங்க”
என்று தனக்கு தெரிந்த விவரத்தை எல்லாம், தங்களின் திட்டத்தை மறந்து சொல்லி விட்டாள்.
முன்பு கீழே செல்ல வெகுவாக தயங்கிய யாழினியின் மனதில், இப்போது தந்தையின் உடல்நிலை குறித்த கவலை மட்டுமே வியாபித்து இருக்க, எதைப்பற்றியும் யோசிக்காமல் சரசரவென படி இறங்கினாள்.
தன் பெற்றோரின் அறைக்கு சென்றவள், மூடி இருந்த கதவை தட்ட, திறந்ததோ இளவளவன்.
கண்கள் தொடர்ந்து கலங்கி கொண்டே இருக்க, தன் முன்பு நின்றவனின் கலங்களான பிம்பத்தை எல்லாம், பொருட்படுத்தும் நிலையில் இல்லை யாழினி.
மனது முழுக்க ‘அப்பா, அப்பா’ என்று அரட்டி கொண்டிருக்க, முன்னால் நிற்பவனை கடந்து உள்ளே சென்றவன், சரியாக அவனை கடக்கும் நொடியில் சற்றே தள்ளாடினாள்.
தன் பார்வை முழுவதையும் யாழினியின் மீதே வைத்திருந்த இளவளவன், அவளின் நிலை புரிந்து, அவனவளின் தோள்களை பிடித்து, நிலையாக நிறுத்தினான்.
சாவதனமாக தன் கைகுட்டையை எடுத்தவன், யாழினியின் கண்ணீரை ஒற்றி எடுத்து, கண்களையும் துடைத்து விட்டு, அவளின் கண்களை பார்த்தபடி,
“மா… ஹக்கும் அங்கிள் முன்னாடி அழுகாத, அவரோட ஹெல்த்கு நல்லது இல்ல, என்ன புரியுதா ம்ம்ம்”
என்று ஒருமையில் சொல்ல, இன்னமும் இளவளவனின் ஒரு கை, யாழினியின் தோளில் தான் இளைப்பாறி கொண்டிருந்தது.
தான் கிட்டத்தட்ட, தன் முன்னால் நிற்பவனின் அரவணைப்பில் இருக்கிறோம் என்பதை கூட, அந்த நிமிடம் யாழினி உணர்ந்ததாக தெரியவில்லை.
இளவளவனின் அருகாமையும், அவனின் அரவணைப்பும், செயலும், என எல்லாமே, தனக்கு வெகுவாக பழக்கமான ஒன்று என்பது போல, அதை இயல்பாக ஏற்றப்படி நின்றிருந்தால் யாழினி.
இளவளவன் சொன்னதுக்கு, பதிலாக தலையை மட்டும் சம்மதமாக அசைத்தவள், அறையின் உள்ளே சென்றாள்.
மெத்தையில் சோர்ந்து அமர்ந்திருந்த தந்தையை பார்த்ததும், விரைந்து சென்று அவரின் கையை பிடித்து கொண்டவள்,
“அப்பா, என்னப்பா ஆச்சி உங்களுக்கு”
என்று முயன்று கண்ணீரை அடக்கியபடி கேட்க, நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னருகில் அமர்ந்து இருக்கும் தன் மகளை பார்த்த ரவிச்சந்திரனுக்கு கண்கள் கலங்கியது.
மகளின் தலையை வாஞ்சையுடன் வருடி விட்டவர்,
“அப்பாக்கு ஒன்னும் இல்லடா, அப்பா நல்லா இருக்கேன்”
என்று தன் மகளின் பயந்த முகத்தை பார்க்க முடியாமல் சொல்ல, யாழினியோ, தந்தையின் அருகில் அமர்ந்திருந்த தன் தாயிடம்,
“அம்மா நீங்களாவது சொல்லுங்க, அப்பாவுக்கு என்ன ஆச்சு”
என்று கேட்க, லீலாவதிக்கோ கண்ணீர் மட்டும் தான் வழிந்ததே ஒழிய பேச்சே வர வில்லை.
தன் கேள்விக்கு பெற்றோர் இருவரும் மௌனம் சாதிக்க, மீதமிருந்த இளவளவனை பதில் வேண்டி யாழினி பார்க்க, அவனோ அலட்டாமல்,
“ஹார்ட் அட்டாக், இப்போ நல்லா இருக்காரு, மெடிசன்ஸ் கொடுத்து இருக்காங்க, ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்ணு சொல்லி இருக்காங்க”
என்று செய்தி வாசிப்பவன் போல மறுத்த குரலில் சொல்ல, யாழினியின் பேச்சை கேட்காமல், அவளின் கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க,
“உங்களுக்கு எதாவதுன்னா, நான் தனியா என்ன ப..ண்…ணு…வே..ன்..ப்..பா”
என்று கேவலுடன் கேட்டவளுக்கு, அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இருபத்தியொரு வயது பெண் என்ற போதும், பெற்றோரின் அரவணைப்பிலே, பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண் யாழினி.
சிறிய வலி கூட தெரியாமல் வளர்க்கப்பட்ட அந்த சிறு பெண்ணுக்கு, தொடர்ந்து பெரிய பெரிய அடிகளாக விழ, மிகுதியான வலியில் அழுவதை தவிர, வேறு ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை.
தந்தையின் தோள் சாய்ந்து ஒரு மூச்சு அழுது முடித்தவள், பின்பு சிறுபிள்ளை போல தன் புறங்கையால், தன் பெரிய கண்களை அழுத்தி துடைத்து கொண்டவள்,
“ஏன்மா என் கிட்ட சொல்லல”
என்று ஓரே வீட்டில் இருந்தும், தனக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் கேட்க, லீலாவதியோ,
“எதுக்கு, இப்படி நீ அழறதை பார்க்கிறதுக்கா”
என்று விளையாட்டு போல சொல்லி, சூழ்நிலையை சகஜமாக்க முயல, யாழினியின் கண்களோ, மழை நின்ற பின்னும் தூறல் போல, ஒன்றிரண்டு கண்ணீர் துளிகளை சொரிந்து கொண்டிருந்தது.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இளவளவனின் பொறுமை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது.
தன்னவளின் கண்ணீர் முகத்தை, கண் கொண்டு பார்க்க முடியவில்லை என்பதோடு, அது ரவிச்சந்திரனின் உடல்நிலைக்கு நல்லதும் இல்லை என்பதால், அவன்,
“டேப்லெட் போட நேரம் ஆகிடுச்சி”
என்று அவர்களின் கவனத்தை திசைதிருப்ப முயல, லீலாவதியும்,
“நானும் மறந்துட்டேன் பாருங்க, நேரமாகிடுச்சி, யாழினி அப்பாவை சாப்பிட கூட்டிகிட்டு வாடா, நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்”
என்று யாழினிக்கு அவள் மறுக்க முடியாதபடி ஒரு பொறுப்பை கொடுத்து செல்ல, அவளும் எதுவும் சொல்லாமல், தந்தையின் கை பிடித்தப்படி, உணவு கூடத்திற்கு வந்தாள்.
தந்தையின் உடல் நிலை குறித்த வருத்தம் இருக்கும் போதிலும், இப்போது அவர் நலமாக இருப்பதில் ஓரளவு தன்னை சமாதானப்படுத்தி கொண்ட யாழினி, கொஞ்சம் சமாதானம் ஆகி இருந்தாள்.
இயல்புக்கு திரும்பியதும், தான் இருக்கும் இடம் உரைக்க, முகம் அசௌவுகர்யமாக, சுற்றும் முற்றும், யாரேனும் இருக்கிறீர்களா, என்று மருண்ட பார்வை பார்த்தாள் யாழினி.
அவளின் வீடு தான் என்ற போதிலும், ஏனோ யாழினிக்கு மற்றவர்களை எதிர்கொள்ள, மிகுந்த தயக்கம்.
யாழினியின் நிலையை உணர்ந்தது போலவே காட்டி கொள்ளாத லீலாவதி, தன் கணவனின் பக்கத்தில், மகளை இருக்கையில் அமர வைத்தார்.
இளவளவன் அமராமல் நிற்பதை பார்த்து ரவிச்சந்திரன்,
“மாப்பிள்ளை நீங்க ஏன் நிக்கிறீங்க”
என்று கேட்க, அவனோ தலையை குனிந்தபடி அமர்ந்து இருக்கும் யாழினியை சுட்டிக்காட்டி, ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்தவன், பின்பு,
“இல்லை நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிடுறேன்”
என்றவன், அவர் மீண்டும் அவனை வற்புறுத்தும் முன்னர், வரவேற்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.
நீண்ட நாட்களுக்கு பிறகான அந்த சிறிய குடும்பத்தின் இனிமையான நேரத்தில், தான் உபரியாக இருக்க விரும்பாமல் விலகி விட்டான் இளவளவன்.
இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அம்மு, அவனின் பின்னோடு வால் பிடித்து கொண்டு, வரவேற்பறைக்கு வந்தாள்.
இருக்கையில் அமர்ந்து இருந்த இளவளவனை ஏகத்துக்கும் முறைத்து அம்மு,
“உங்க பிளானும் நீங்களும், அக்கா எப்படி அழுதாங்க தெரியுமா”
என்று அவனின் திட்டத்தை குற்றம் சாட்டி, தன் அதிருப்தியை காட்ட, அவளின் கேள்விக்கு பதில் அளிக்காத இளவளவனோ,
“ஆமா அது என்ன அந்த ஒட்டடகுச்சியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அக்கா, அக்கான்னு சொல்லுற, என்ன மட்டும் அண்ணா கூப்பிட மாட்டுற”
என்று வேறு ஒரு கேள்வி கேட்க, அவனை போலவே, அவன் கேட்ட கேள்வியை மொத்தமாக காற்றில் பறக்கவிட்டு அம்மு,
“அக்கா ஒன்னும் அவ்ளோ உயரம் எல்லாம் இல்லையே, எதுக்கு அவங்களை ஒட்டடகுச்சினு கிண்டல் பண்ணுறீங்க”
என்று இளவளவன் சொன்ன ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு, அவனோடு மல்லுக்கு நிற்க, அவனோ அசராமல்,
“உங்க அக்கா குச்சி மாதிரி ஒல்லியா இருக்கா, அப்புறம் அவ முடிக்கும், ஒட்டடடை அடிக்கிற பிரஷ்க்கும் எதாவது வித்தியாசம் இருக்கான்னு, நீயே பார்த்து சொல்லு”
என்று சுருள் சுருளான முடியை, வாரி சுருட்டி, உச்சியில் கொண்டையிட்டபடி, உணவு மேசையில் அமர்ந்து இருந்த யாழினியை சுட்டிகாட்டி, அம்முவிடமே கருத்து கேட்டு வைத்தான், இளவளவன்.
அதில் கடுப்பான அம்மு, இளவளவனை அடிக்க துரத்த, அவன் சிரித்தபடி ஓட, அவனின் சிரிப்பு சத்தம் அந்த வரவேற்பரை முழுக்க எதிரொலித்தது.
தன் உலகத்தில் மூழ்கி, தட்டில் இருந்த உணவை அளந்து கொண்டிருந்தாள் யாழினி.
அவள் எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்தவள், அவளின் பெற்றோரின் பார்வை ஒரு இடத்தில் புன்னகையுடன் நிலைத்து இருப்பதை கண்டு, யோசனையுடன் அந்த திசையை எட்டி பார்த்தாள்.
அங்கு இருக்கையை சுற்றி ஓடி கொண்டிருந்த இளவளவனும், அம்முவும், அவர்களும் சிரித்த முகமும் கண்ணில் பட,
“அது என்ன எப்போ பாரு கெக்கபிக்கேன்னு சிரிச்சிகிட்டே இருக்கு இந்த லூசு”
என்று மனதிற்குள், அவனையும், அவனின் சிரிப்பையும் பார்த்து கருவி கொண்டாள் யாழினி.
மோகனம் இசைக்கும்………

Advertisement