Advertisement

தன் முடிவை பெரியவர்களிடம் சொல்லிய இளவளவன், அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, அவர்களோ முதல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தனர்.
அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக, தன் திருவாய் மலர்ந்த ஆவுடையப்பரோ,
“இது இலண்டன் இல்ல தம்பி, வயசு பொண்ணு இருக்கிற வீட்டுல உன்னை எப்படி தங்க வைக்கிறது, யாராவது ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டு எல்லாருக்கும் வருத்தமா ஆகிடும்ப்பா”
என்று தன் ஆட்சேபனையை தெரிவிக்க, அவரின் உடன்பிறவா சகோதரி லீலாவதியும், அவரின் எண்ணம் தான் தனக்கும் என்பது போல அமைதியாக இருந்தார்.
இளவளவன் அவரின் பிரியத்திற்குரிய மருமகன் தான் என்ற போதும், நாளை இன்னொருவர் வீட்டிற்கு திருமணம் செய்து, அனுப்பி வைக்கப்பட வேண்டிய பெண் அல்லவா யாழினி.
ஒரு தாயாக மகளுக்கு, ஏதேனும் அவப்பெயர் வந்து விடுமோ, என்பதிலே தான் அவரின் எண்ணம் சுழன்றது.
அதற்கு மாறாக, தீவிர சிந்தனையில் இருந்த ரவிச்சந்திரனோ தன் வாய் திறந்து,
“மத்தவங்க என்ன சொல்லுவாங்க, என்ன நினைப்பாங்க அப்படின்றது விட, இப்போ இந்த சூழ்நிலையில், நமக்கு யாழினி தானே முக்கியம்”
என்று இளவளவன் இங்கு தங்கும் பட்சத்தில், தங்கள் மகள், தங்களுக்கு பழைய மாதிரி கிடைப்பாள் எனும் போது, அதில் யோசிக்க எதுவும் இல்லை என்ற ரீதியில் பேசினார்.
லீலாவதியும் சரி, ரவிச்சந்திரனும் சரி, யாழினி மீது இருக்கும் தங்களின் மேவிய பாசத்தை, வெவ்வேறு விதத்தில், வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தினர்.
மற்றவரின் கருத்துக்களை அமைதியாக செவிமடுத்து கொண்டிருந்த அபிராமி அம்மையாரோ,
“எனக்கும் அண்ணா சொல்றது தான் சரின்னு படுது. நாம என்ன பண்ணாலும், பேசுறவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க, அதுக்காக எல்லாம் பார்த்தா சரி வராது”
என்றவர் ஒரு இடைவெளி விட்டு,
“அதுவும் இல்லாம, குட்டிமா எப்படியும் எங்க வீட்டுக்கு தான் வர போறா அப்படின்ற போது, எதுக்கு மூணாவது மணிஷங்களை பத்தி நாம யோசிக்கணும்”
என்று இளவளவன், யாழினி திருமண பேச்சை ஆரம்பித்தவர், தான் சொன்னதை உறுதிப்படுத்தி கொள்ளும் விதமாக,
“என்ன அண்ணா, என்ன லீலா நான் சொல்றது சரிதானே”
என்று அவர்களை வேறு கேட்க, கண்களில் நீர் திரள தலையசைத்த லீலாவதிக்கு சந்தோஷ மிகுதியில் பேச்சே வரவில்லை.
ரவிச்சந்திரனோ தான் கேட்டதை நம்ப முடியாமல், மகிழ்ச்சியில் உறைந்து போனவர், இளவளவனின் சம்மதத்தை அறியவேண்டி, அவனை பார்த்தார்.
கண்களில் ஆவல், ஆனந்தம் சரிசமமாக போட்டியிட தன்னை பார்த்தவரின் கைகளை இளவளவன் ஆதரவாக பிடித்துக்கொள்ள, ஆவுடையப்பரோ,
“ரவி ரொம்ப உணர்ச்சி வசப்படாத, உன்னோட உடம்புக்கு நல்லது இல்லடா”
என்று அவரை இயல்பாக்க முயற்சி செய்ய, இளவளவனோ, அவரின் கைகளில் சிறு அழுத்தம் கொடுத்து,
“எனக்கு முழு சம்மதம் மாமா”
என்று அவர் தன் வாயால் கேட்க நினைத்த, தன் சம்மதத்தை சொல்ல, அந்த இடமே விளக்கேற்றி வைத்தது போல, சட்டென்று மகிழ்ச்சி ஒளி பரவியது.
லீலாவதி, ரவிச்சந்திரன் தம்பதியருக்கு, எதிர்பார்க்காத சுப தகவல் இது.
இதே இரண்டு வருடங்களுக்கு முன்பு என்றால், உரிமையாக, ஏன் மிரட்டலாக கூட தங்கள் மகளுக்கு, இளவளவனை கேட்டு இருப்பார்கள்.
ஆனால் தங்கள் மகள் தற்போது இருக்கும் நிலைமையில், அவர்களுக்கு அபிராமி, ஆவுடையப்பர் தம்பதியரிடம்
இதை பற்றி கோடிட்டு காட்டக்கூட தைரியம் இல்லை.
அபிராமி, ஆவுடையப்பரை பற்றி நன்கு அறிந்து இருந்த போதிலும், யாழினியின் தற்போதைய நிலையால், அவர்கள் திருமணத்தை மறுத்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் அவர்களுக்கு.
தங்களின் மகளை பற்றி குறைவாக ஒரு வார்த்தையை கூட தாங்க முடியாது என்பதோடு, அவர்களின் உறவையும் இழக்கும் அபாயம் இருப்பது அறிந்தே யாழினியின் பெற்றோர் அமைதி காத்தது.
ஆனால் இன்று அவர்களே முன்வந்து திருமணப் பேச்சை ஆரம்பிக்கவும், மகளின் வாழ்க்கையை பற்றிய பெரிய கவலை தீர்ந்த உணர்வு அவர்களுக்கு.
நன்கு அறிந்த, நல்ல குடும்பத்தில் மகளின் வாழ்க்கை அமையப் போகும் மகிழ்ச்சியில் ரவிச்சந்திரன்,
“ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை”
என்று இளவளவனிடம் உணர்ச்சி பெருக்கில் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, ஆவுடையப்பரோ தன் மகனை பார்த்து கண்களை சிமிட்டினார்.
தன் அம்மாவின் வார்த்தையிலும், அப்பாவின் கண் சிமிட்டலிலும் கொஞ்சமே கொஞ்சம் முகம் சிவந்த இளவளவன், குனிந்து தன் முகத்தை மறைந்து கொண்டான்.
தங்கள் மகனின் சிவந்த முகத்தை பார்த்த அவனின் பெற்றோருக்கோ, அன்று ரவிச்சந்திரனை மருத்துவமனைக்கு பார்க்க செல்லும் முன்பு, வீட்டில் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.
யாழினியை பற்றி, அவளின் தற்போதைய நிலைமை வரை அனைத்தையும் அபிராமி அம்மையார், சொல்லி முடிக்க, அங்கு அப்படி ஒரு அமைதி.
கடிகாரத்தின் நொடி முள்ளின் ஓசை மட்டும் கேட்டபடி இருக்க, அவர்கள் இருவரும் இளவளவனின் முகத்தையே தான் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்.
சிறு வயதில் இருந்தே, யாழினி மீது இளவளவன் கொண்ட பாசத்தை அவனின் பெற்றோர்கள் அறிவார்கள் தான்.
ஆனால் வெளிநாடு எல்லாம் சென்று படித்து, முழு ஆண் மகனாக வளர்ந்து நிற்கும் தங்கள் மகனுக்கு, அவனின் துணை பற்றிய எதிர்பார்ப்புகள் இருக்க தானே செய்யும்.
அப்படி இருக்கும் பட்சத்தில், அதை குறையாகவும் கூற முடியாது அல்லவா.
தங்கள் மகனின் எண்ணம் தெரியாமல், யாழினி பெற்றோருக்கு எந்த நம்பிக்கையும் தர இவர்கள் விரும்பவில்லை.
முன்பு எல்லாம் இளவளவனை வாய் நிறைய “மருமகனே” என்று அழைக்கும் யாழினி பெற்றோர், இம்முறை அந்த வார்த்தையை கவனமாக தவிர்த்ததை இவர்கள் உணர்ந்து தான் இருந்தனர்.
அவர்களின் தயக்கமும், பயமும் அபிராமி அம்மையார் மற்றும் ஆவுடையப்பருக்கு புரியத்தான் செய்தது.
அதனால் தான், இவர்களும் எதுவும் பேசும் முன், தங்களின் மகனின் விருப்பத்தை அறிய விரும்பியது.
கடந்த பல வருடங்களில், அவன் யாழினியை பற்றி அவர்களிடம் பேசியிருக்கவேயில்லை.
ஒருவேளை அவளை பற்றிய நினைவே இல்லையோ, மொத்தமாக மறந்து விட்டானோ என்பது தான் பெற்றோர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் இன்று முதல் பார்வையிலே அவள் யாழினி தான், என்று கண்டு கொண்டதிலே தங்கள் மகனின் மனம் அபிராமி, ஆவுடையப்பர் தம்பதியருக்கு புரிந்துவிட்டது.
அதேபோல் தன் மனதில் யாராவது இருக்கிறார்களா என்று மறைமுகமாக கேட்டு அறிந்த பிறகு, யாழினியின் காணொளியை பெற்றோர் காட்டிய காரணத்தையும் இளவளவன் புரிந்து கொண்டான்.
எனவே பெற்றோரின் புரிதல் சரிதான் என்று சொல்லும் விதமாகவும், அவர்கள் கேட்காமல் விட்ட கேள்விக்கு பதிலாகவும், அடைத்த தன் தொண்டையை கனைத்து சரி செய்து கொண்ட இளவளவன்,
“எனக்கு யாழினியை கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம் அம்மா”
என்று அவளை பற்றி அறிந்த பிறகும், தன் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று, முன்பு தன் கண்கள் தெரிவித்த செய்தியை, வார்த்தைகளில் பட்டவர்த்தனமாக அறிவித்தான்.
இளவளவன் முடிவை கேட்டதும், கண்களில் மெல்லிய நீர்ப்படலத்தோடு, அவனின் தலையை வருடிவிட்ட அபிராமி அம்மையார்,
“ரொம்ப சந்தோஷம் தம்பி”
என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவரின் கையை பிடித்து கொண்ட இளவளவனோ, அவரின் தோளில் சாய்ந்து கொள்ள, சரியாக அந்த நேரம் தான் லீலாவதியின் அழைப்பு வந்தது.
அந்நாள் நினைவில் இருந்த அபிராமி அம்மையார், தன் கைகளை பிடித்து கொண்டிருந்த லீலாவதியை ஆதரவாக தட்டி கொடுத்தவர், சூழலை மாற்றும் விதமாக,
“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்”
என்று பூடமாக ஆரம்பித்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர்,
“இளா யாருன்னு யாழினி கிட்ட இப்போதைக்கு யாரும் சொல்ல வேண்டாம்”
என்று தீவிரமான குரலில் சொல்ல, மற்றவர்கள் கண்களில் “ஏன்” என்ற கேள்வியை தேக்கி அவரை பார்க்க, தொடர்ந்த அவரோ,
“இளா யாருன்னு யாழினிக்கு தெரிஞ்சா, கண்டிப்பா அவன் சொல்றது எதையும் கேட்கவே மாட்டா அதான்”
என்று அவர்களின் சிறுவயதை நினைவு கூர்ந்து கிண்டலுடன் சொல்ல, பெரியவர்களின் முகத்தில் புன்னகையின் சாயல் என்றால், இளவளவனோ தன் தாயை முறைத்து வைத்தான்.
அதன் பிறகு சிறுது நேரம், உரையாடல் பொதுவாக நீள, அந்த முழு நேரமும்
ரவிச்சந்திரன் கண்களில் நிறைவுடன் இளவளவனை தான் பார்த்து கொண்டிருந்தார்.
“மகளின் வாழ்வு இப்படியே, அவளின் அறையிலே முடிந்து விடுமோ????”
என்ற தீராத யோசனையின் பலனாய் உடல் உபாதைகளை இழுத்து கொண்ட அந்த பாசமிகு தந்தைக்கு, இளவளவனை காண, காண மனதில் கரைக்காணா நிம்மதி பரவுவதை தவிர்க்க முடியவில்லை.
ஒரு வழியாக இளவளவன் அவனின் பெற்றோருடன் விடைப்பெற, மகளின் வாழக்கையில் வசந்தம் திரும்பும் என்ற நம்பிக்கையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு, அந்த இரவு நிம்மதியாக உறங்கினார் அவர்.
அடுத்த இரண்டு நாட்களில், மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும் ரவிச்சந்திரனின் உணவை கவனித்து கொள்ளும், “ஊட்டசத்து நிபுணர்” என்ற பெயரில் வந்து சேர்ந்தான் இளவளவன்.
தங்கள் நண்பரின் மகன் இளவளவன் என்றும், நட்பின் காரணமாக மகனை, நண்பர் அனுப்பி இருப்பதாகவும், எந்த குறையும் இல்லாமல், அவனை கவனித்து கொள்ளும் படி வேலைகாரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த வீட்டில் இளவளவன் இயல்பாக பொருந்திக்கொள்ள, அவன் யாரின் காரணமாக வீட்டிற்கு வந்தானோ, அக்காரிகை மட்டும் கண்களில் காண கிடைக்கவேயில்லை.
மூன்று வேளையும் உணவு யாழினியின் அறைக்கே, வேலைக்கார பெண்மணியால் எடுத்து செல்லப்பட, அந்த உணவும் பெரும்பாலும் அவளால் தீண்டப் படாமலே திரும்பியதையும் இளவளவன் கவனித்தான்.
அன்று இரவு தோட்டத்தில் ரவிச்சந்திரனுடன் அமர்ந்து, பொதுவான விஷயங்களை பேசி கொண்டிருந்த இளவளவன் இயல்பு போல,
“ஏன் மாமா, யாழினி ரூம் ரொம்ப பெருசா”
என்று இதுவரை மாடி பகுதிக்கு சென்று இராதவன், எப்படி அவளால் அந்த ஒரு அறையிலே அடைந்து கிடக்க முடிகிறது என்று புரியாமல் கேட்க, அவனை பார்த்து புன்னகைத்த அவரோ,
“பெருசாவா, மாடி முழுக்க யாழினியோடது தான் மாப்பிள்ளை”
என்று சொல்ல, அதன் நீள அகலத்தை கணக்கிட்டு பார்த்த இளவளவன் வாயை பிளக்க, தொடர்ந்த அவரோ,
“ஒரு பெரிய ஹால், பாட்டு பிராக்டிஸ் பண்ண சவுண்ட் ப்ரூப் ரூம் ஒன்னு, அப்புறம் ட்ராயிங் ரூம், ஹோம் தியேட்டர், குட்டி டைனிங் ஹால், ட்ரெஸ்ஸிங் ரூம், பெட் ரூம்”
என்று பெருமையாக அடுக்கி கொண்டே போக, இளவளவன் மனதிற்குள்,
“இப்படி எல்லாமே இருந்தா, நீலாம்பரி மாதிரி இருபத்தைந்து வருஷம் கூட உள்ளவே இருக்கலாமே”
என்று நொடித்து கொள்ள, அவனின் முகத்தை பார்த்த ரவிச்சந்திரன் அக்கறையுடன்,
“என்ன மாப்பிள்ளை, ஏதும் பிரச்சனையா”
என்று கேட்க, அவரை பார்த்து காது வரை உதடுகளை இழுத்து புன்னகைத்தவன், மறுப்பாக தலையசக்க, அவரோ,
“இப்படி எல்லாமே மேல இருந்தாலும், முன்னாடி எல்லாம் யாழினி எப்பவுமே, அப்பா, அம்மான்னு எங்க பின்னாடி சுத்திக்கிட்டு, கீழவே தான் இருப்பா தெரியுமா மாப்பிள்ளை, தூங்க மட்டும் தான் மாடிக்கு போகும் யாழினி, ஆனா இப்போ”
என்று சொல்லும் போதே, அவரின் முகம் ஒரு வித இயலாமையால் விளைந்த வலியை பிரதிபலிக்க, அவரை ஆதரவாக பார்த்த இளவளவன்,
“எல்லாம் சீக்கிரமா சரியாகிடும் மாமா”
என்று அவருக்கு சொல்லுவது போல தனக்கும் சொல்லி கொள்ள, அவரும் அவனை பார்த்து புன்னகைக்க முயன்றவாறே,
“அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன் மாப்பிள்ளை”
என்று சொல்ல, அதே நேரம் லீலாவதி அவர்களை இரவு உணவுக்கு அழைக்க, அந்த உரையாடல் அங்கு முடிந்தது.
அன்று இரவு தூக்கத்தை தொலைத்த இளவளவன், அந்த பெரிய சாளரத்தை திறந்து வைத்தப்படி, மனதில் பல எண்ணங்கள் ஊர்வலம் போக, தோட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட நேரம் நடுநிசியை நெருங்கிய நேரம், துன்பம் வழிந்தோடும் குரலில், ஒரு கானம், இளவளவனின் செவியை நிறைத்தது.
மோகனம் இசைக்கும்……………

Advertisement