Advertisement

ஆறு மாதத்திற்கு பிறகு……………
சென்னையின் அந்த புகழ்வாய்ந்த இசையரங்கு, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
பின்னே காரணமே சொல்லாமல் பாடுவதை நிறுத்திய, இசை இளவரசி இரண்டு வருடங்களுக்கு பிறகு செய்யும், முதல் கச்சேரி அல்லவா இது.
முதல் வரிசையில் மாமா, அத்தை மற்றும் தன் பெற்றோரோடு அமர்ந்து இருந்த இளவளவன் வெகுவான பதட்டத்தில் இருந்தான்.
பெரிய பெரிய ஜாம்பவான்களும், பத்திரிகை நண்பர்கள் எல்லாம் இந்த கச்சேரிக்கு அழைக்கப்பட்டிருக்க, யாழினி ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக பாடி முடிக்க வேண்டுமே என்ற பயம் அவனுக்கு.
அவளவனின் திறமையில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும், அவளின் தன்னிரக்கத்தை பற்றி அறிந்தவனாதலால் முழுதாக நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை அவனால்.
வாத்தியகாரர்கள் எல்லாம் வந்து மேடையில் அமர, அவர்களை தொடர்ந்து பாசிபச்சை நிற பட்டு புடவையில், கம்பீரமாக யாழினியும் வந்து சேர்ந்தாள்.
மேடையில் அமர்ந்ததும் யாழினியின் கண்கள் அரங்கை முழுவதும் ஒரு முறை வட்டமிட்ட பின்பு, முதல் வரிசையில் வந்து நின்றது.
பெற்றோரை, அத்தை மாமாவை பார்த்து தலையசைத்தவள், இளவளவனை நோக்கி ஒரு ஆழ்ந்த பார்வையை செலுத்தி விட்டு, ஆறுதலாக ஒரு முறை கண்ணை மூடி திறந்து விட்டு, சபையை நோக்கி வணங்கி விட்டு, கண்களை மூடி பாட ஆரம்பித்தாள்.
அடுத்த இரண்டு மணி நேரம் அரங்கம் முழுவதிலும் இருந்த மக்கள் அனைவரும் யாழினியின் குரலில், அதன் பாவத்தில் கட்டுண்டு கிடக்க, அவளின் குரலை தவிர சிறு சத்தமும் இல்லை அங்கு.
யாழினி பாடலின் கடைசி வரியை முடித்து, கண்ணை திறக்க, மக்கள் தங்கள் கை தட்டலினால், அரங்கையே அதிர வைத்தனர்.
அந்த ஓசை கேட்கா விட்டாலும், அவர்களின் செய்கை புரிய யாழினி மகிழ்ச்சியுடன் இளவளவனை பார்க்க, அவன் எழுந்து நின்று கைதட்ட யாழினிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
பின்பு ஒவ்வொருவாக ஒலிவாங்கியில் யாழினியிடம்,
“இப்படி ஒரு இசை ஞானத்தை வச்சிக்கிட்டு, ஏன்மா இத்தனை நாள் பாடாமா இருந்தே”
என்பதையே வேறு வேறு வார்த்தைகளில் கேட்க, ஒருவரோ,
“உன்னை இசை இளவரசி இல்ல,  இசையரசின்னே சொல்லலாம், அவ்ளோ அருமையா பாடுறேமா”
என்று வாழ்த்த, இன்னோருத்தரோ,
“இப்படி பாடுறது எல்லாம் ஒரு வரம் குழந்தை, எதுக்காகவும் இனி கச்சேரி செய்யுறதை நிறுத்த கூடாது என்ன”
என்று செல்ல மிரட்டல்கள் என்று தங்கள் பாராட்டை பல விதமாக வெளிப்படுத்தினர்.
அதை எல்லாம் இளவளவன் சைகை மொழியில் யாழினிக்கு மொழிபெயர்க்க, அவள் அவர்களின் பாராட்டுக்கு உரிய பதில் அளித்த வண்ணம் இருந்தாள்.
ஒரு வழியாக அவர்கள் எல்லாம் பேசி முடித்ததும், தொண்டையை கனைத்து கொண்ட யாழினி,
“உங்க எல்லாரோட அன்புக்கும், பாராட்டுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி, இப்போ நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போறேன்”
என்று சொல்ல, அரங்கில் இருந்தவர்கள் மட்டுமல்ல, அவளின் குடும்பத்தவரும் அவளை ஆச்சர்யத்துடன் தான் பார்த்தனர், அவள் என்ன பேச போகிறாள் என்று.
இளவளவனை ஒரு முறை யாழினியின் பார்வை தொட்டு மீள, அனைவரையும் பார்த்த யாழினி,
“நான் ஏன் கச்சேரி செய்யுறதை நிறுத்திட்டேன்னு உங்களுக்கு தெரியாது இல்ல, அதுக்கு காரணம் என்னன்னா, திடீர்ன்னு எனக்கு காது கேட்காம போயிடுச்சு”
என்று சொல்ல, இளவளவன் அவளை ஆச்சர்யமாக பார்க்க, அரங்கத்தில் இருந்த மக்களோ அவளை புரியாமல் பார்த்தனர்.
தன் நோயை பற்றி, தனக்கு தன்னவன் சொன்ன தகவல்களை எல்லாம் எல்லாருக்கும் புரியும் வண்ணம் விளக்கமாக சொன்ன யாழினி,
“என்னோட மூணு வயசுல இருந்து நான் பாட்டு கத்துகிறேன், பாட்டு தான் எனக்கு உயிர், அதை நல்லா புரிஞ்சிக்கிட்டு, உன்னால முடியும்ன்னு சொல்லி சொல்லி, மறுபடியும் கச்சேரி செய்ய என்னை மோட்டிவேட் பண்ண, என்னோட இம்சையரசனுக்கு பெரிய தேங்க்ஸ்”
என்று இளவளவனை நோக்கி கண்ணை சிமிட்ட, அனைவரின் பார்வையும் அவனை நோக்கி திரும்ப, இருக்கையில் கூச்சத்தில் நெளிந்தான் அவன்.
தொடர்ந்த யாழினி,
“என்னோட குறையை சொல்லாமலே மறைத்து இருக்கலாம், ஆனால் அப்படி பண்ணா, என்னை நானே முழுசா ஏத்துக்காத மாதிரி ஆகிடும், அதான் இன்னைக்கு உண்மையை சொல்லிட்டேன்”
என்றவன் அழகிய புன்னகை ஒன்றை மக்கள் கூட்டத்தை நோக்கி செலுத்திவிட்டு,
“இனி நான் ரெகுலரா கச்சேரி செய்யவேன், என் மேல, என் இசை மேல நம்பிக்கை வச்சி, உங்க ஆதரவை எனக்கு இப்போது போல் எப்பவும் தரணும்ன்னு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்”
என்று கையெடுத்து கும்பிட்டு, சபையை நோக்கி தலைவணங்கினாள் யாழினி.
யாழினி சொல்லிய உண்மையில் ஸம்பித்து நின்ற மக்கள், சில நிமிடங்களுக்கு பிறகே தெளிந்து, அவளுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வண்ணம், விண்ணை தொடும் சத்தத்தில் கையை தட்டினார்.
மேடையில் தலைவணங்கி நின்ற யாழினியை தான், பல உணர்வுகளின் கலவையாக, கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான் இளவளவன்.
அடுத்த நாள் யாழினியின் பேச்சு, பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக இடம் பெற்றது என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை தானே.
ஒருவாறாக கச்சேரி முடிந்து அனைவரும் வீட்டிற்கு திரும்ப, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வருவதாக சொல்லி யாழினி அறைக்கு செல்ல, இளவளவனும் மெல்ல நழுவி அவளின் அறைக்கு சென்றான்.
பெரியவர்கள் அதை கவனித்தாலும், கண்டும் காணாதது போல தங்களுக்குள் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அறையின் உள்ளே அப்போது தான் நுழைந்த யாழினியை, பின்னால் இருந்து அணைத்தான் இளவளவன்.
இதை எதிர்பார்த்தவள் போல அமைதியாக நின்ற யாழினி, பின்பு,
“இப்போ என்னோட கண்ணா ஹாப்பி தானே”
என்று கேட்க, தன் அணைப்பில் இருந்து அவளை விலக்காமல், அறையின் ஓரத்தில் இருக்கும் கண்ணாடி முன்பு அவளை அழைத்து சென்று நிறுத்தியவன்,
“ரொம்ப ரொம்ப”
என்று சொல்ல, கண்ணாடி வழியே அவனின் பதிலை கேட்ட, யாழினி தன் தலையை அவனின் நெஞ்சில் அப்படியே சாய்த்து கொண்டாள்.
தலைவனின் அணைப்பில் உருகி, காலநேரம், இடம் எல்லாம் மறந்து அப்படியே மெய்மறந்து நின்றாள் தலைவி.
மோகன நிலையில் இருந்து திடிரென வெளிவந்த யாழினி,
“ஏன் கண்ணா, நம்ப பாப்பா அழுதா கூட எனக்கு கேட்காது இல்ல, நான் எப்படி பாப்பாவை பார்த்துப்பேன்”
என்று கேட்டாள். இது அவர்களுக்குள் அடிக்கடி நிகழும் நிகழ்வு தான். அவ்வப்போது எதையாவது யோசித்து, இந்த மாதிரி கேள்வி கேட்டு வைப்பாள் யாழினி.
தன் முகத்தை பார்க்கும் படி யாழினியை திரும்பி நிறுத்திய இளவளவன், அவளின் இடது கையை தூக்கி பிடித்து, அதில் அவள் அணிந்திருந்த கைக்கடிகாரத்தை சுட்டி காட்டியபடி,
“இந்த வாட்ச்ல அலாரம், டோர் காலிங் பெல், நம்ப பாப்பா அழுகைன்னு
எல்லாத்துக்கும் தனி தனி பேட்டன்ல வைபேரட் ஆகுற மாதிரி செட் பண்ணி இருக்கேன், அதுவும் இல்லாம உன்னோட உள்ளுணர்வே சொல்லிடும் பாப்பா அழுதா”
என்று சொல்ல, யாழினியும் நல்ல பிள்ளையாக தலையாட்டி கேட்டு கொண்டாள்.
எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி தன்னை சார்ந்து இருக்கும் படி, அவளை நிறுத்த என்றுமே விரும்பவில்லை இளவளவன்.
இன்றைய அதிநவீன தொழிநுட்பத்தை துணையாக கொண்டு, யாழினியை மற்ற குறையற்ற மனிதர்களை போல, சாதாரண வாழக்கை வாழ அவளை தன்னால் முடிந்த வரை தயார் செய்தான் அவன்.
அப்போது யாழினியிடம் ஒரு கவரை இளவளவன் கொடுக்க, இவ்வளவு நேரம் அதை கவனிக்காத யாழினி, ஆசையுடன் அதை வாங்கி திறந்து பார்க்க, உள்ளே ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரண்டு மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன.
கையில் பரிசை வைத்திருந்த யாழினி, இளவளவனை பார்த்த கிண்டலாக சிரித்த போதும், அவளின் கைகள் அதை ஆசையாய் வருட, இளவளவன்,
“பத்து வருஷத்துக்கு முன்னாடி உனக்கு கொடுக்க வாங்குன கிப்ட், இப்போ தான் கொடுக்க நேரம் வந்து இருக்கு போல”
என்று சொல்லி பெருமூச்சு விட, யாழினியின் கண்கள் அவ்வளவு பெரிதாக விரிந்தது.
அன்று தங்கள் குடும்பம் சிதம்பரத்திற்கு குடிப்பெயரும் போது, இளவளவன் சென்றது இதை வாங்க தான் என அவனின் கூற்றில் புரிய, அதை நெஞ்ஜோடு இறுக்கி கொண்டாள் அவள்.
இத்தனை வருடங்கள் தன் மீது கோவத்தில் தன்னை தேடாமல் இருந்த போதும், தனக்காக அன்று வாங்கிய பரிசை, இன்றளவும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பவனை நிரம்ப, நிரம்ப பிடித்தது யாழினிக்கு.
இவ்வளவு நேரம் நின்ற படியே இருவரும் உரையாடி இருக்க, இருவரும் இருக்கையில் அமர, யாழினி உணர்வுகளின் பிடியில்,
“கண்ணா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா”
என்று பட்டென்று கேட்க, அவளை திகைத்து பார்த்த இளவளவன், அவளின் தலையில் ஒரு கொட்டு கொட்டி,
“என்ன வயசாகுது உனக்கு அதுக்குள்ள கல்யாணம், டிப்ளமோ தானே முடிச்ச நீ, நல்ல காலேஜ்ல யூ.ஜி அப்ளை பண்றேன், அதை படிச்சி முடி முதல்ல, அதோட கொஞ்சம் வெளி உலகத்தையும் தெரிஞ்சிக்கோ”
என்று சொல்ல, யாழினி அவனை பாவமாக பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்த இளவளவன், அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய படி,
“எனக்கும் இன்னும் கல்யாணம் பண்ணுற வயசு ஆகல, என்னோட ட்ரீம் பிராஜெக்ட் இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன், நிறைய சாதிக்கணும், ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டுமே யாழிமா”
என்று கொஞ்சலாக சொல்ல, அப்பாவியாய் கண்ணை சிமிட்டிய யாழினி,
“இதை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு பண்ணலாம் தானே”
என விடாமல் அவனை சோதிக்கவென்றே பேச, இருக்கையில் இருந்து எழுந்த இளவளவனோ,
“நானே மனசை கல்லாகிட்டு உன்னை படின்னு சொல்றேன், நீ என்னடான்னா என்னை உசுப்பி விட்டு கிட்டே இருக்க, இது வேலைக்கு ஆகாது, நான் கீழே போறேன், நீ வந்து சேரு”
என்று சொல்லி திரும்ப, பின்னால் யாழினியின் சிரிப்பு சத்தம் அவனை துரத்த, தலைதெறிக்க ஓடினான் இளவளவன்.
இம்சையாரசனும் அவனின் இசையரசியும் இப்படியே கேலி கிண்டலுடன், என்றென்றும் பெரு வாழ்வு வாழ, வாழ்த்தி விடைபெறுவோம் மக்களே.
          *****சுபம்*****

Advertisement