Advertisement

அன்று காலை விடிந்ததில் இருந்தே நகத்தை கடித்து கொண்டு, தனது அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்த படியே இருந்தாள் யாழினி.
தான் வந்த வேலை முடிந்திருக்க, செய்ய வேண்டிய வேலைகள் பல காத்திருக்க, இன்று இளவளவன் அவனின் கூட்டிற்கு திரும்பும் நாள்.
தனக்காக அவன் வெளிநாட்டு வாசம் முடிந்தவுடன் பெற்றோருடன் கூட இல்லாமல், இங்கே வந்ததை யாழினி அறிவாள் தான்.
இளவளவன் திரும்பி செல்ல வேண்டியதன் அவசியத்தையும், அவன் இங்கே நிரந்தரமாக இருக்க முடியாது என்பதையும் அவள் புரிந்து தான் இருந்தாள்.
ஆனால் இனி அவன் தன்னுடன் ஒரே வீட்டில் இருக்க மாட்டான் என்ற நிதர்சனத்தை ஏற்று கொள்ள முடியாமல், அவளின் காதல் மனம் முரண்டி கொண்டிருந்தது.
இப்படியே யாழினி கீழே சென்று, இளவளவனை வழியனுப்பும் நேரத்தை தள்ளி போட்டு கொண்டே இருக்க, அவனே அவளின் அறைக்கு வந்து விட்டான்.
வந்தவனின் முகத்தில் காதலியை பிரிவதை நினைத்து வருந்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, மாறாக ஏதோ ஒன்றை தீவிரமாக பேச ஒத்திகை பார்க்கும் பாவம் மட்டுமே.
அவனின் முகம் வழியே அகத்தை படித்த யாழினியோ,
“ஹுக்கும் இவனுக்காவது எதாவது பீலிங்ஸ் இருக்கிறதாவது, தண்டம் தண்டம்”
என்று அவனை வைதவள்,
“இனிமே போட குண்டு எதுவுமே இல்லையே, இப்போ எதுக்கு இவன் மூஞ்சிய இப்படி சீரியஸா வச்சிக்கிட்டு பில்டப் கொடுக்கிறான்”
என்று யோசிக்க, இளவளவன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“நான் இன்னைக்கு வீட்டுக்கு கிளம்புறேன் தெரியும் இல்ல”
என்று கேட்க, யாழினி மேலும் கீழும் தலையசைத்ததும்,
“ஹ்ம்ம்ம்”
என்றவன், அசௌகர்யத்தில் இருப்பவன் போல இப்படியும், அப்படியும் திரும்பினான். சில நிமிடம் அமைதியிலே கழிய, பின்பு யாழினியிடம்,
“நீ திரும்ப கச்சேரியில பாடுறதை பத்தி என்ன நினைக்கிற யாழி”
என்று கேட்க, இந்த பேச்சை எடுப்பான் கிஞ்சித்தும் எதிர்பார்க்காத யாழினியின் முகம் முதலில் அதிர்ச்சியை காட்டி, பின்பு முழு வேதனையில் மூழ்கி,
“நா…… நா……ன் எ……ப்……ப……டி”
என்று திக்கி திணற, இளவளவன் வாய் வார்த்தையால் பதில் சொல்லாமல், தன் கைப்பேசியை எடுத்து, அதை திறந்து அவளிடம் கொடுத்தான்.
யாரோ ஒருவருடன் இளவளவன் பேசிய உரையாடலின் தொகுப்பு என்பது அது என புரிய, அதை படிக்காமல் யாழினி அவனை கேள்வியாக பார்க்க இளவளவனோ,
“நான் இந்த வீட்டுக்கு வந்த அப்புறம், நீ சும்மா பாடுன இரண்டு சாங்கையும் ரெகார்ட் பண்ணி, உன்னோட குரு லட்சுமி மேடமுக்கு அனுப்பி இருந்தேன், அதுக்கு அவங்க அனுப்பி இருக்க பதிலை நீயே பாரு”
என்று சொல்ல, கைகள் நடுங்க கையேசியை இறுக்கி பிடித்த யாழினி, உரையாடலை படிக்க ஆரம்பித்தாள்.
அவளின் கண்களில் முதலில் பட்டது, அவளின் குரு,
“யாழினி எப்போ பாடுன பாட்டு இது, வழக்கம் போல சுருதி சுத்தமா பாடி இருக்கா”
என்று அவளின் பாடலை பற்றி உரைத்திருந்தது தான். அதை பார்த்ததும் தான் எப்படி உணர்கிறோம் என்றே யாழினிக்கு புரியவில்லை.
அவளின் கண்களில் கண்ணீர் அதுபாட்டுக்கு பெருக்கெடுக்க, மேவிய அதிர்ச்சியில் கைகளால் வாயை மூடி கொண்டாள்.
அவளின் நிலை புரிந்த இளவளவன் அவளை நெருங்க போக, அவனின் சட்டையை பிடித்து கொண்ட யாழினி,
“என்னால திரும்ப பாட முடியுமா கண்ணா”
என்று தன் குருவின் வார்த்தை தந்த நம்பிக்கையில் கேட்டவள், அடுத்த நிமிடமே தன் நிலை உரைக்க, வலியுடன்,
“நான் பாடுறது எனக்கே கேட்காதே, சரியா பாடுறானா தப்பா பாடுறானானு எனக்கு தெரியாது இல்ல”
என்று அழுகையில் சுயபட்சாதாபத்தில் கரைய, இளவளவனின் கண்களும் சற்றே கலங்க, அவளை சற்று இறுக்கமாகவே அணைத்து கொண்டான்.
தன்னவளின் கண்ணீர் தொடர்ந்து சட்டையை நனைக்க, யாழினி அழுகையை நிறுத்த மாட்டாள் என புரிய, மனமே இல்லாமல், அவளை தன்னில் இருந்து பிரித்து, இருக்கையில் அமர வைத்தான்.
அவளுடன் சேர்ந்து கண் கலங்கிய தன்னை தானே மானசீகமாக கொட்டி கொண்டவன், தன்னவள் குடிக்க நீரை கொணர்ந்து வந்து கொடுத்தான்.
நீரை பருகியதும் யாழினி சற்று தெளிய, தன் பெரிய கையில், அவளின் சிறிய கையை பொதித்து கொண்டவன்,
“என்ன சொன்ன, நீ பாடுறது உனக்கே சரியா தப்பான்னு தெரியாதுன்னு தானே சொன்ன, இப்போ டெக்னாலாஜி எவ்ளோ அட்வான்ஸ் அஹ இருக்கு, நீ பாட, பாட அது என்ன இராகம், எங்க சுருதி மிஸ் ஆகி இருக்குன்னு சொல்ல எல்லாம் சாப்ட்வேர் இருக்கு”
என்று சொல்ல, யாழினியின் முகத்தில், நிறுத்திய அழுகையை மீண்டும் தொடர போவதற்கான அறிகுறி தெரிய, அவன் ஓர் வேகத்துடன்,
“என்னை கேட்டா, உனக்கு அந்த சாப்ட்வெர் கூட தேவையில்லை, நீ மியூசிக் அஹ உயிரா நினைச்சி கத்துகிட்டவ யாழி, கண்ணை மூடி, உன்னோட குறைப்பத்தி யோசிக்காம, பாடுனாலே போதும்டா”
என அவளை தேற்றியவன், யாழினியின் முகம் பாதி நம்பிக்கையிலும் மீதி அவநம்பிக்கையிலும் மிளிர, அவளின் முடியை மெதுவாக கோதி விட்டவன்,
“தி கிரேட் பீத்தோவன் பியனோயிஸ்ட் தெரியும் இல்ல, இப்போ வரைக்கும் அவரோட சிம்பனி தான் பெஸ்ட் அஹ இருக்கு, ஆனா அவரும் யங் ஏஜ்ல டெப் ஆனவர் தான்”
என்று சொல்ல யாழினி கண்களை விரிக்க தொடர்ந்தவன்,
“இன்பாக்ட் அதுக்கு அப்புறம் கூட அவர் புதுசா, புதுசா சிம்பனி அஹ ப்ரோடியூஸ் பண்ணி கிட்டே தான் இருந்தார், ஏன் கான்சர்ட்ஸ் கூட பண்ணார் “
என யாழினியின் கண்களில் லேசாக நம்பிக்கையின் சாயல் தெரியவும், நிதானமாக தொடர்ந்தவன்,
“அவர் படிப்படியா கேட்கும் திறனை இழந்த போதும் சரி, முழுசா காதே கேட்காத போதும் சரி பியானோ வாசிக்கிறதை நிறுத்தவே இல்லை”
என்று யாழினியின் கண்களில் தோன்றிய நம்பிக்கை சுடரை தூண்டி விட்டவன், அவளின் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு,
“உன்னை மாதிரியே குறை இருந்த ஒருத்தரால புது சிம்பனியையே உருவாக்க முடியும்ன்னா, உன்னால நீ இத்தனை வருஷம் கத்துகிட்டதை பாட முடியாதா என்ன”
என்று கேட்டவன், கண்களில் யாசகத்துடன்,
“எனக்காகவாது ஒரு முறை முயற்சி பண்ணி தான் பாரேன் யாழி”
என்று சொல்ல, அவனின் பாவத்தில் அப்படியே யாழினி திகைத்து அமர்ந்திருக்க, இருக்கையில் இருந்து எழுந்தான் இளவளவன்.
நின்ற வாக்கிலே ஒருமுறை அவளை அணைத்து பிரியா விடை பெற்றவன், அவளின் உட்சந்தலையில் தன் முதல் முத்தத்தையும் பதித்தான்.
தன்னவனின் செய்கையில் யாழினி வெட்கம் கொள்ளவும் மறந்து, திகைப்புடன் அவனை பார்க்க, அவனோ,
“நான் சொன்னதை யோசி, உன்னோட குரு சொன்னதையும் யோசி, நல்ல முடிவா எடு, உன்னோட பதிலுக்காக நான் காத்து கிட்டு இருப்பேன்”
என்று சொல்லி விட்டு, அவளின் கையில் ஒரு புது கைப்பேசியையும் திணித்தான் இளவளவன்.
இது எதற்கு தனக்கு என்று புரியாமல் யாழினி தன் பெரிய கண்ணை திறந்து விழிக்க, தன்னவளின் பாவத்தில், அவளை அப்படியே அள்ளி அணைக்க துடித்த கைகளை வெகுவாக கட்டுப்படுத்தியவன்,
“இனி தினமும் முன்ன மாதிரி பார்க்க முடியாது, பேச முடியாது, அதுக்கு தான் போன், வீடியோ கால், மெஸேஜ்னு பேசிக்கலாம் இல்ல, நானே புது சிம் போட்டு நம்ப பேமிலி நம்பர் எல்லாம் சேவ் பண்ணிட்டேன்”
என்று சொல்ல, இப்படி எல்லாம் யோசித்து, யோசித்து செய்யும் இவனையா, பிரியும் வருத்தமே இல்லை, காதல் உணர்வேயில்லை என்று சற்று முன்பு தாம் திட்டினோம் என்று யோசித்த யாழினி, அவனை காதலுடன் பார்த்து வைத்தாள்.
யாழினியின் பார்வை இளவளவனை கட்டி இழுக்க, தன்னை மறந்து அவளின் அதரங்களை முத்தமிட நெருங்கியவன், கடைசி நொடியில் சுதாரித்து, சட்டென்று விலகினான்.
இப்படி ஏதேனும் நடக்கும் என்று தானே அவளை தனிமையில் சந்திப்பதை இத்தனை நாள் அவன் தவிர்த்தது.
இன்று தன்னை மீறி இப்படி நடந்திருக்க, தன் பின்னந்தலையை அழுந்த கோதி, தன்னை நிலைப்படுத்தி கொண்டவன், அவளிடம்,
“நான் கிளம்புறேன்”
என்று முகம் சிவக்க சொல்லிவிட்டு, சென்று விட்டான். அதற்கு பிறகு நாட்கள் வேகமாக உருண்டோட ஆரம்பித்தது.
இளவளவன் தன் கனவான நட்சத்திர விடுதியை கட்ட ஆரம்பிக்க, யாழினி இளவளவன் சொல்லியபடி மீண்டும் பாட பயிற்சி செய்ய ஆரம்பித்தாள்.
பகலில் வேலை, இரவில் காதல் என்று அட்டவணை போட்டு காதல் பயிரை வளர்த்து வந்தனர் இருவரும்.
அப்படி ஒரு நாள் பேசி கொண்டிருக்கும் போது தான் இளவளவன்,
“நான் கொடுத்த புக் அஹ என்ன பண்ண யாழி, அதை படிக்கிற ஐடியா இருக்கா இல்லையா உனக்கு”
என்று கேட்க, அலட்சியமாக உதட்டை சுளித்த யாழினியோ,
“எனக்கு எதுக்கு சைன் லாங்குவேஜ் கண்ணா, அதான் எனக்கு லிப் ரீடிங் பண்ணாலே மத்தவங்க பேசுறது புரியுதே”
என்று சொல்ல, அவளின் பதிலில் பல்லை கடித்த இளவளவன்,
“அடியேய் அன்னைக்கு எஸ்சிபிஷன்ல அப்பா ஸ்டேஜ்ல பேசுனதை நான் பக்கத்துல உட்காந்து உனக்கு மெசேஜ் அஹ டைப் பண்ணி காமிச்சேன், ஒரு வேளை நீயும் மேடையில் இருந்து இருந்தா என்ன பண்ணி இருக்க முடியும்”
என்று சொன்னவன் தொடர்ந்து,
“நாளைக்கு நீ கச்சேரி பண்ணும் போது, ஆடியன்ஸ் கமெண்ட்ஸ் சொன்னா, கேள்வி கேட்டா நீ பதில் சொல்லணும் இல்ல, அவங்க என்ன பேசுறாங்கனு புரியாம எப்படி பதில் சொல்லுவ”
என்று கேட்க, யாழினியோ,
“அதான் இப்போ என் கிட்ட போன் இருக்கு இல்ல, நீ கீழ உட்கார்ந்து மெசேஜ் பண்ணா, நான் மெசேஜ் அஹ பார்த்துட்டு, அவங்களுக்கு பதில் சொல்லுறேன்”
என, அவளை கோபத்துடன் பார்த்த இளவளவன்,
“உன்னோட நிலைமை யாருக்கும் தெரியாது, அப்படி இருக்கும் போது, அவங்க பேசும் போது நீ கீழ குனிஞ்சி மொபைலை பார்த்து கிட்டு இருந்தா என்ன நினைப்பாங்க”
என்று கேட்க, யாழினியோ முனகலாக,
“சரி நான் கத்துக்கிறேன்னே வச்சிக்குவோம், என் கூட பேசுறவங்களை எல்லாம் சைன் லாங்குவேஜ் கத்துக்க சொல்ல முடியுமா”
என்று கேட்க, அவளை முறையோ முறை என்று முறைத்த இளவளவன்,
“லூசு, சைன் லாங்குவேஜ் தெரிஞ்ச ஒருத்தரை உனக்கு பி.ஏவா அப்பாயிண்ட் பண்ணிடுவோம், அவங்க மத்தவங்க பேசுறதை உனக்கு சொன்னா, அதை பார்த்து நீ கேள்வி கேட்குறவங்களுக்கு பதில் சொல்லு”
என்று விளக்க, தனக்காக இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து யோசித்து செய்யும் இவனை அடைய, தான் என்ன தவம் செய்தோம் என்றே யோசிக்க தோன்றியது யாழினிக்கு.
அவளவனின் பாசத்தில், அக்கறையில் கண்கள் எல்லாம் பணிக்க, முதல் முறையாக,
“லவ் யூ சோ மச் கண்ணா”
என்று நேரடியாக காதலை சொல்ல, அதற்கு பிறகு அவர்கள் பேசியது எல்லாம் காதலின் தனி மொழி.
அவளை சைகை மொழி கற்று கொள்ள சொன்னதோடு அல்லாமல், தானும் அவளுடன் அதை சேர்ந்தே பயின்றான் இளவளவன்.
அதேபோல அன்று தான் யாழினியிடம் சொல்லியப்படி, அவள் தனியே பயிற்சி செய்ய ஏதுவாக, தான் சொன்ன செயலியை கணினியில் இயக்கி, அதை பயன்படுத்தும் முறையையும் சொல்லி கொடுத்தான்.
அவ்வபோது யாழினியின் குருவும் வீட்டிற்கு வந்து, யாழினி பயிற்சி செய்ய உதவினார்.
உண்மையில் பாட்டு பாட யாழினிக்கு எந்த பயிற்சியும் தேவைப்படவில்லை. அவளின் தயக்கத்தை, தன்னிரக்கத்தை துறந்து இசையோடு ஒன்றி, இராகத்தில் மூழ்கவே பயிற்சி தேவைப்பட்டது.
முதலில் தனியாக பாடி பயிற்சி செய்து தன் மீது அவளுக்கே ஓர் அளவுக்கு நம்பிக்கை வந்ததும், அவளுடன் வாசிக்கும் இசை கலைஞர்களை வர சொன்னாள்.
அவர்களிடம் தன் நிலையை விளக்கி அவர்களுக்கு தன்னுடன் கச்சேரி செய்ய சம்மதமா என்று பலமுறை கேட்டு உறுதி படுத்தி கொண்டாள்.
சிலர் அவளின் மீது இருந்த நம்பிக்கையில் உடனே ஒப்பு கொள்ள, தயங்கிய சிலரையும் அவளின் குரு லட்சுமி அம்மா, பேசி சம்மதிக்க வைத்தார்.
குழுவுடன் பாடுவது யாழினிக்கு சற்று சவாலாகவே இருந்தது. இசை காதில் விழும் போது, அதனோடு ஒன்றி பாடுவது எளிது.
ஆனால் இப்போது அதை கேட்க முடியாது எனும் போது, கால அளவை கணக்கிட்டே யாழினி பாட வேண்டிய கட்டாயம்.
ஆரம்பத்தில் இசையோடு ஒன்றி பாட முடியாமல் யாழினி வெகுவாக திணறிய போதும், போக போக விடா முயற்சியுடன் போராடி அதற்கும் பழகி கொண்டாள்.
இடையில் பல முறை தன்னால் இதை செய்ய முடியாது என்று யாழினி துவளும் போது எல்லாம், அவளுக்கு பெரிதும் நம்பிக்கை அளித்ததும், அவளின் நம்பிக்கையாய் இருந்ததும் இளவளவன் தான்.
யாழினி எந்த துறையில் எவ்வளவு பெரிய ஆளானாலும், தான் உயிராக நேசித்த இசையை தொடர முடியாமல் போவது, அவளை உள்ளூர உறுக்கும் என்பதை இளவளவன் நன்கு அறிந்து இருந்தான்.
அவனை பொறுத்தவரை, தன்னவளின் குறையால், அவள் எதையும் இழந்ததாக இருக்க கூடாது என்ற ஒரு வகை பிடிவாதம் அவனுக்கு.
அதனால் அவளின் சிறந்த சரிபாதியாக, தன்னால் முடிந்த வரை எல்லா வகையிலும், யாழினி தன் இசை பணியை தொடர ஊக்குவித்தான் இளவளவன்.

Advertisement