Advertisement


யாழினி அப்படி ஒரு கேள்வி கேட்பாள் எதிர்ப்பார்க்காத இளவளவன் உறைந்து நின்றான்.
இது கனவா, நினைவா என்றே புரியாமல் மலங்க மலங்க விழித்தும் வைத்தான்.
அவனின் நிலையை பார்த்த யாழினி, அவனின் கையை பிடித்து லேசாக உலுக்கி,
“பச் கண்ணா கேட்கிறேன் இல்ல, பதில் சொல்லு”
என்று கேட்க, கனவில் இருந்து விழித்த இளவளவனுக்கு, அவளின் கேள்வியை தான் சரியாக தான் உள்வாங்கினோமா என்ற புதிய சந்தேகம் ஒன்று முளைக்க, சிறிய குரலில்,
“என்ன கேட்ட”
என்று மீண்டும் கேட்க, அவளோ,
“நாளைக்கு நம்ப பாப்பாக்கும் என்ன மாதிரியே ஆகிட்டா என்ன பண்றது”
என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாய் கேட்டாள்.
அவளின் கேள்வியில் பொதிந்திருந்த அர்த்தத்தில், காட்டாற்று வெள்ளம் போல மகிழ்ச்சி அடித்து செல்ல, சுகமாய் அதில் அமிழ்ந்து போனான் இளவளவன்.
உள்ளூரும் உற்சாகத்துடன் யாழினியை பார்த்தவனுக்கு, தன்னவளின் முகத்தில் இருந்த பாவம், அவனை கொஞ்சம் நிதானப்படுத்தியது.
யாழினியின் முகம் முழுக்க வெட்கமோ, குறைந்தபட்சம் தன் மனதை வெளிப்படுத்திய மகிழ்ச்சியோ இல்லாமல், தான் கேட்ட கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளும் பாவம் மட்டுமே.
துள்ளி குதித்து கொண்டிருந்த மனதை, தலையில் தட்டி, தன்னிலை வந்தவனுக்கு, அப்போது தான் யாழினியின் கேள்வியில் ஒளிந்திருந்த, அவளின் பயமும் புரிந்தது.
இப்போது அவளின் பயத்தை போக்குவதில் உள்ள அவசியம் புரிய, தன் உணர்வுகளை ஒதுக்கி வைத்தவன், யாழினியை அழைத்து கொண்டு தோட்டத்தில் இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“உனக்கு உன்னோட டிசீஸ் பத்தி எதாவது தெரியுமா”
என்று கேட்க, யாழினி மறுப்பாக தலையசைத்தும்,
“சரி இதுக்கு பதில் சொல்லு, பொதுவா இந்த மாதிரி பிராபளம்க்கு ஹியரிங் எயிட் யூஸ் பண்ணுவாங்க இல்ல, உனக்கு ஏன் அதை டாக்டர் சஜஸ்ட் பண்ணல”
என்று கேட்க, சில வினாடிகள் யோசித்த யாழினி,
“நான் அந்த ஸ்டேஜ் அஹ தாண்டிட்டேனு சொன்னாங்க, ஹியரிங் எயிட் வச்சாலும் யூஸ் இல்லையாம்”
என்று நினைவுகூற, அவளை வலியுடன் பார்த்தவன், உடனே தன் பார்வையை மாற்றி கொண்டு,
“நமக்கு உன்னோட டிசீஸ் பத்தின அவேர்னஸ் இருந்து இருந்து, உனக்கு சிம்டம்ஸ் காட்டும் போதே டாக்டர் கிட்ட போய் இருந்தா, உனக்கும் ஹியரிங் எயிட் யூஸ் புல் அஹ இருந்து இருக்கும்”
என்று சொன்னவன், அவளின் முகத்தில் இழந்துவிட்ட வாய்ப்பை குறித்த ஏக்கம் தெரிய, அவளை அதில் உழல விடாமல்,
“நமக்கு பர்ஸ்ட் டிசீஸ் பத்தி தெரியணும், அதான் நான் நிறைய படிச்சேன், டாக்டர் கிட்ட எல்லாம் கன்செண்ட் பண்ணேன்”
என்றவன், அவளின் உடல் உபாதையை அவளுக்கு விளக்கும் வண்ணமாக,
“பொதுவா நம்ப உடம்புல வொய்ட் பிளட் செல்ஸ் இருக்கும், அது தான் வைரஸ், பாக்டீரியானு எதாவது கிருமி நம்ப உடம்புக்குள்ள வந்தா, அதை கண்டுபிடிச்சி அழிக்கும்”
என்று சொல்ல, யாழினி ஆமோதிப்பாக தலையசைக்க தொடர்ந்தவன்,
“உன்னோட கேஸ்ல, உன்னோட வொய்ட் பிளட் செல்ஸ், உன்னோட காதுல இருக்கிற பார்ட்ஸை எல்லாம், கிருமின்னு நினைச்சி அட்டாக் பண்ணிடுச்சி”
என்றவன் அவள் புரிந்துகொள்ள ஒரு சிறு இடைவெளி விட்டு, மீண்டும்
“உன்னோட பாடி ஏன் அப்படி ரியாக்ட் பண்ணிச்சின்றதுக்கு மெடிக்கல் சைடுல எந்த விளக்கமும் இல்லை, அதோட அது ஜெனிட்டிக்கலா அடுத்த ஜெனேரேஷனுக்கு பாஸ் ஆகுமான்னும் தெரில”
என்று சொல்ல, யாழினி இப்போது தான் தன் நோயின் சாராம்சத்தை உள்வாங்க முயன்று கொண்டிருக்க, அவளின் கையை பிடித்து அழுத்தியவன்,
“நம்ப பாப்பாக்கு”
என்று சொல்லவும், அவனின் தலை முதல் கால் வரை சொல்லவென்னா உணர்வு ஒன்று பாய, ஒரு நிமிடம் அப்படியே பேசுவதை நிறுத்தினான் இளவளவன்.
யாழினி பதிலுக்காக தன் முகத்தையே பார்க்கவும், தன்னை சமாளித்து கொண்டவன் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து,
“நம்ப பாப்பாக்கு வரதுக்கு சான்ஸ் பிப்டி, பிப்டி தான், வராமலே போகலாம், ஒரு வேளை, ஒரு வேளை வந்தா, இப்போ இதை பற்றி அவேர்ன்ஸ் நமக்கு இருக்கிறதுனால முன்னாடியே கண்டுபிடிச்சுடலாம்”
என்றவன்,
“அப்படி பண்ணா, ஹியரிங் எயிட் யூஸ் பண்ணி கேட்குற மாதிரி பார்த்துக்கலாம்”
என்று சொல்ல, ஒரு மாதிரி தலையாட்டிய யாழினி, கொஞ்சம் யோசனையுடனே எழுந்து செல்ல போக, அவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் இளவளவன்.
அவளின் பயத்தை புரிந்து கொண்டு அதற்கு விளக்கம் தந்தவனுக்கு, இப்போது தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளும் ஆர்வம்.
“ஆமா நம்ப பாப்பானு சொன்னியே அதுக்கு என்ன அர்த்தம்”
என்று அவள் அதை உணர்ந்து தான் சொன்னாலா என்று அறிய கேட்டான்.
அவனை பார்த்த யாழினியோ, வெகு நிட்சயமான, சத்தியமான உண்மையை, ‘இது நிஜமா’ என்று சந்தேகத்துடன் கேட்கும் ஒருவரை பார்க்கும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து வைத்தாள்.
அவளின் பார்வையில், ஏதோ தவறு செய்து விட்டவன் போல இளவளவன் தடுமாற, யாழினியோ,
“நான் சொன்னதுக்கு ஒரு அர்த்தம் தான் இருக்கு, அதுகூட உனக்கு புரியலைன்னா நாளைக்கு என் நிலமை கஷ்டம் தான் போல”
என்று இளக்காரமாக சொன்னவள், அவன் சுதாரிக்கும் முன்னர் உள்ளே ஓடி விட்டாள்.
யாழினி சொன்னதன் அர்த்தம் புரிந்த இளவளவன், இப்போது உண்மையாகவே துள்ளி குதிக்க, அப்போது தான் அவள் தன்னை ‘கண்ணா’ என்று அழைத்ததும் உரைக்க,
“இதை எப்போ கண்டுபிடிச்சா இவ”
என்று தனக்கு தானே பேசிக் கொண்டவனின் முகம் முழுக்க, முழுக்க புன்னகை உபரியாக, வலது கண்ணீன் ஓரம், ஓர் துளி ஆனந்த கண்ணீர் வேறு.
அவளை சகஜமாக்கவே, தான் இவ்வளவு பாடுப்பட்டிருக்க, அவளிடம் தன் மனதை புரியவைக்க எவ்வளவு பாடுபட வேண்டுமோ என்று அவன் பயந்த பயம் அவன் மட்டுமே அல்லவா அறிவான்.
ஆனால் அவள் வெகு வெகு இயல்பாக தன்னுடனான பிற்கால வாழ்க்கையை பேசி சென்றது, அவனை வெகுவாக உணர்ச்சி வசப்படுத்தி இருந்தது.
இது முழுக்க முழுக்க அவள் தன் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடு அல்லவா,
மனம் இறக்கைக்கட்டி பறக்க, தலைக்கு கையை வைத்து, அப்படியே தோட்டத்தில் இருந்த புல்வெளியில் படுத்து விட்டான் இளவளவன்.
காதலை சொன்னவள் அப்படி சொல்லவே இல்லை என்பது போல, வெகு சகஜமாக அன்றாட வேலைகளில் மூழ்க, இளவளவன் தான் பாவம்.
காதலை சொல்லுவதற்கு முன் எப்படியோ ஆனால் காதலை பகிர்ந்து கொண்ட பிறகு, கண்ணுக்கு எதிரே காதலியை வைத்து கொண்டு, நல்ல பிள்ளையாக இருப்பது எல்லாம் கொடுமை அல்லவா.
அதோடு அவள் எப்போது தன்னை கண்ணன் என்று கண்டு கொண்டால் என்பதை கேட்க கூட, அவள் அவனுக்கு தனிமையோ, வாய்ப்பையோ கொடுக்கவில்லை.
இப்படியே யாழினியின் காதல் கள்ளத்தனுத்துடனும், இளவளவனின் ஏக்கத்துடனும் அந்த வாரம் நகர, நாளை இளவளவன் எதிர்பார்த்திருந்த அந்த முக்கிய நாள்.
முன்பு போல இயல்பாக யாழினியின் அறைக்கு சென்று உரையாட, இப்போது தன்னால் முடியாது என்பதை இளவளவன் நன்கு உணர்ந்திருந்தான்.
யாழினி தனது அறைக்கு போகும் முன்னர், கூடத்திலே அவளை தடுத்தவன்,
“யாழினி நாளைக்கு ஒரு எக்ஸிபிஷனுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம்”
என்று பொதுவாக சொல்ல, யாழினியோ அவனை கேள்வியாக பார்க்க, தன் கையில் இருந்த கைப்பேசியை திறந்து, அதில் இருந்த புகைப்படத்தை அவள் முன் நீட்டினான்.
அதை வாங்கி பார்த்த யாழினிக்கு, முதலில் ஒன்றும் புரியவில்லை. தன் கைகளில் இருந்தவற்றை சற்று உற்று பார்த்தவளின் கண்கள் மெல்ல மெல்ல வியப்பால் விரிந்தது.
பின்னே அவள் ஓவியங்களாக தீட்டி இருந்த நகைக்கான மாதிரிகளை, உண்மையான நகையாக பார்க்க, பார்க்க அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.
அதை எல்லாம் பார்த்தவள் வியப்புடன்,
“இதை எல்லாம் எப்போ பண்ண கண்ணா, ஆமா முதல்ல நான் பண்ண டிசைன் எல்லாம் உனக்கு எப்படி கிடைச்சுது”
என்று கேள்விகளாக அடுக்க, அதற்கு ஒரு புன்னகையையே சிந்தியவன்,
“உன்னோட ரூம் அஹ புல் அஹ சேஞ் பண்ணேன் இல்ல அப்போ தான் கிடைச்சது இது, நாளைக்கு ****** ஹோட்டல்ல உன்னோட ஜெவெல்ஸ் எஸ்சிபிஷன் இருக்கு”
என்று சொன்னவன், அவளிடம் கொடுத்த கைபேசியை வாங்கி கொண்டு, தனது அறைக்கு சென்று விட்டான்.
மறுநாள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெந்தைய நிற பட்டு புடவை மேனியை தழுவி இருக்க, அழகாக தயாராகி வந்தால் யாழினி.
இவர்கள் நால்வரும் கிளம்பி, கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நட்சத்திர விடுதிக்கு செல்ல, யாழினிக்கோ வெகுவான பதற்றம்.
இரண்டு முறை வெளியில் சென்று இருந்தாலும், மக்களோடு பெரிதாக உரையாடும் வாய்ப்பு இருக்கவில்லை.
ஆனால் இன்று நடப்பது தன்னுடைய நிகழ்ச்சி என்பதால், நிறைய பேரிடம் உரையாட வேண்டியிருக்கும், எப்படி யாரின் கேலிக்கும் விருந்தாகாமல், சமாளிக்க போகிறோம் என்ற எண்ணமே யாழினியை மிரட்டியது.
வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதாவது ஒரு பயம் நிட்சயம் இருக்கும்.
சிலருக்கு தோல்வியை நினைத்து………
சிலருக்கு விருப்பமானவற்றை இழந்து விடுவோமோ என்று…………
இப்படி உணர்வுகள் சார்ந்து மட்டும் இல்லாமல், இருட்டு, உயரம், பேய் என்றும் பயங்களின் பரிணாமமும், பட்டியலும் நீளும்.
பிறக்கும் போதே ஏதோ ஒரு உடல் குறையோடு பிறந்து, வளர்பவர்களுக்கே, தங்களின் குறையை பற்றி மற்றவர் பேசுவதும், குறிப்பிடுவதும் பிடிக்காது.
நாம் சாதாரணமாக சொல்கின்ற வார்த்தைகள், காட்டுகிற அக்கறை கூட, அவர்களின் இயலாமையை சுட்டி கட்டுவது போல அவர்களுக்கு தோன்றும்.
சிலர் அந்த சூழ்நிலையை, வலியை அமைதியாய் கடக்க, சிலர் தங்கள் வலியை கோவமாக வெளிப்படுத்துவார்கள்.
இங்கு யாழினியோ, இளவரசியாக பிறந்து, மகாராணியாக வளர்ந்தவள்.
திடிரென எந்த வித முன்னறிப்பும் இன்றி, ஒரு நாள் கேட்கும் திறனை முழுமையாக இழக்க, அவளின் உலகம், அவளின் விருப்பம் இன்றியே நிரந்தர அமைதியில் அமிழ்ந்து போய் விட்டது.
இசையே மூச்சு என்று வளர்ந்தவளுக்கு, இனி அந்த இசையை தன்னால் கேட்க முடியாது, பாட முடியாது என்பது எப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சியாக, தண்டனையாக இருந்திருக்க கூடும்.
இதில் தான் பெரிதாக போற்றப்பட்ட உலகத்தில், எங்கே தன் குறை தெரிந்து, மற்றவரின் கேலிக்கு ஆளாகிவிடுமோ என்ற அவளின் பயத்தை, எளிதாக ஒதுக்கி தள்ள முடியாது தானே.
ஓர் அளவுக்கு பாதிப்பில் இருந்து தேறி, வாழக்கையை எதிர் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டலும், உள்ளுக்குள் இருதயம் மத்தளம் வாசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
இனி தொடர்ந்து இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பழக, பழக அவளின் பயங்கள் குறைந்து, அவள் இதையெல்லாம் சகஜமாகக் ஏற்ககூடுமோ என்னவோ…
பெரியவர்கள் இருவரையும் விடுதியின் வாசலில் இறக்கி விட்ட இளவளவன்,
“நீங்க போங்க அத்தை, நான் கார் அஹ பார்க் பண்ணிட்டு வரேன்”
என்று சொன்னவன், விடுதி வந்ததை கூட உணராமல் அமர்ந்திருந்த யாழினியை கவலையுடன் பார்த்தான்.
என்னத்தான் இது எல்லாம் சிறிய குறை, இதை தாண்டி வாழ வேண்டும் என்று எளிதாக சொன்னாலும், அந்த நிலையில் இருந்து பார்த்தால் தானே, அவர்களின் வலியும், வேதனையும் புரியும்.
தன்னவளின் கலங்கிய முகத்தை பார்த்தவன், அவளின் கையை பிடித்து அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான்.
அதில் சுயநினைவுக்கு வந்த யாழினி அவனை பார்த்து சிரிக்க முயல, அதற்கு மேல் அவளின் அலைப்புறுதலை பொறுக்க முடியாதவன், அவளை மென்மையாக அணைத்து கொண்டான்.
மகிழ்ந்து தரிப்பிடத்தில் இருந்த மங்கிய ஒளியில், எதில் இருந்தோ தன்னை காப்பவன் போல அணைத்து இருந்த, தன்னவனின் அரவணைப்பில் இருந்த யாழினியின் இதயம் கொஞ்சம், கொஞ்சமாக சமன்ப்பட்டது.
இளவளவன் தன் அணைப்பில் இருந்து தன்னவளை விலக்கி, தன்னவளின் முகம் பார்க்க, யாழினி அவனை பார்த்து மென்னகை புரிய, இருவரும் கைகளை கோர்த்தப்படியே, கண்காட்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தனர்.
அங்கு தன் பெற்றோரை பார்த்த யாழினி, அவர்களை நோக்கி இளவளவனுடன் செல்ல, அவர்களோடு பேசி கொண்டிருந்தவர்களை பார்த்தவள், வானத்துக்கும், பூமிக்கும் குதிக்காதது ஒன்று தான் குறை.
இத்தனை வருடங்களுக்கு பிறகு, தன் செல்ல அபி அத்தையும், மாமாவையும் பார்த்த யாழினியின் ஆனந்தத்தை சொல்ல வேண்டுமா என்ன.
ஓடி போய் தன் அத்தையை அணைத்து கொண்ட யாழினி,
“எப்படி இருக்கீங்க அத்தை”
என்று பாசத்துடன் கேட்டவள், அவர் பதிலளிக்கும் முன்பே,
“ஏன் இத்தனை நாள் என்ன பார்க்க வரல, உங்க மேல நான் கோவமா இருக்கேன், பேச மாட்டேன் போங்க”
என்று சிணுங்கி கொண்டே திரும்பி கொள்ள, ஆவுடையப்பர் அவளின் செயலில் சிரிக்க, அபிராமியோ அவளை பேசி சமாதானப்படுத்தினார்.
அத்தை, மாமாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு அளவளாவியதில் யாழினி, நிரம்பவே இயல்புக்கு திரும்பி இருக்க, அதற்குள் கண்காட்சிக்கு அழைத்திருந்தவர்களின் பெரும்பாலானோர் வந்து விட்டனர்.
அவர்களை வரவேற்று உபசரித்து என்று இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்த இளவளவன், நேரம் நெருங்கியதும், ஆவுடையப்பரை சில வார்த்தைகள் பேசி நிகழ்ச்சியை தொடங்க சொன்னான்.
இப்படி ஒரு கண்காட்சி தங்களின் விடுதியில் நடப்பது தங்களுக்கு பெருமை என்று ஆரம்பித்து, இந்த சிறு வயதில் யாழினிக்கு இருக்கும் திறமையை பாராட்டி சில வார்த்தைகள் பேசினார் அவர்.
ஒலிவாங்கியின் ஆவுடையப்பர் பேச, யாழினியின் அருகில் அமர்ந்திருந்த இளவளவன், கைப்பேசியில் அவர் பேசுவதை வார்த்தைகளாக தட்டச்சு செய்து, யாழினிக்கு காட்டி கொண்டிருந்தான்.
அடுத்ததாக யாழினியை பேச அழைக்க, மீண்டும் யாழினியின் கைகள் சில்லிட ஆரம்பித்தது.
இதை விட பல மடங்கு கூட்டத்தின் முன்பு எல்லாம் அவள் கச்சேரி செய்திருக்கிறாள் தான், ஆனால் இப்போது நிலைமை வேறு அல்லவா.
முயன்றளவு சிரித்த முகமாக மேடையேறிய யாழினி,
“உங்க பிஸி டைம்ல, எங்க இன்விடேஷன் அஹ அக்ஸ்ப்ட் பண்ணி வந்திருக்க எல்லாருக்கும் என்னோட ரொம்ப பெரிய தேங்ஸ்”
என்றவள் தன்னுடைய பதற்றம் வெளியே தெரியாத விதத்தில்,
“உங்களோட டைம் அஹ நிறைய நான் எடுத்துக்க விரும்பல, உங்களுக்கு என்னோட டிசைன்ஸ் எல்லாம் பிடிக்கும்ன்னு நம்புறேன், எஸ்சிபிஷன் அஹ பார்க்கலாம்”
என்று தனது உரையை முடித்து, ஒப்புதலாக இளவளவனை பார்த்தாள். இளவளவன் தலையசைத்ததும் யாழினி மேடையில் இருந்து இறங்கினாள்.
இளவளவன் வேலையாட்களுக்கு கண்ணை காட்ட, அடுத்த அறையின் கதவுகள் திறக்கப்பட, அங்கு மக்களின் பார்வைக்காக கண்ணாடி பெட்டிக்குள் வீட்டிருந்தன, யாழினியின் படைப்புகள்.
மெல்லிய கழுத்து சங்கிலியில் ஆரம்பித்து, ஆரம், வளையல், காதணி மோதிரம் என்று அனைத்து வகை நகைகளும் அங்கு இருந்தன.
யாழினியின் ஒன்னரை வருட படைப்பு அல்லவா……
எல்லாமே இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் மெல்லிதாக, பெரிதாக கண்ணை உறுத்தாக வகையில், நுண்ணிய வெளிப்பாட்டுடன் யாழினி வடிவமைத்திருந்தாள்.
நடனமாடும் மயில் காதணி, இசைக்கருவியை மீட்டும் பெண்ணை கொண்ட சங்கிலி, பொடி பொடி பூக்களை தொடுத்தார் போல செய்ய பட்ட ஆரம் என்று யாழினி அசத்தி இருந்தாள்.
இது பரம்பரை, பரம்பரையாக நகைதொழில் செய்யும் மரபணு தந்த அறிவா, இல்லை அவள் விரும்பி கற்றதினால் வந்த திறமையோ, பதில் படைத்த பிரம்மனே அறிவான்.
இந்த நகைகள் தனித்துவமானவை, இதேப்போல வேறு யாரிடமும் இருக்காது என்பதால் பெரும்பாலானவை வந்த செல்வந்தர்களாலும், சீமாட்டிகளாலும் வாங்கபட்டு விட்டன.
செல்லும் முன்னர், சிலர் யாழினியை பாராட்டி இரண்டு வார்த்தை சொல்லவும் மறக்கவில்லை.
இத்தனை நாட்கள் வெளியில் வாராத யாழினியை பார்ப்பதற்காவே சிலர் வந்து இருக்க, வதந்திகளும், புரளி பேச்சுகளும் கூட சூடு பறந்தது அங்கு.
முகத்திற்கு முன்னால் பேசினால் தானே யாழினிக்கு தெரியும், புரியும் அவர்களின் பேச்சுகள்.
இதை அறியாத அவர்கள், அவளின் பின்னால் நின்று பேச, பாவம் அது எல்லாம் யாழினியை சென்று அடையவும் இல்லை, அவளை வருத்தவும் இல்லை.
அதேநேரம் ஏன் இப்போது பாடவில்லை என்றும், எப்போது மீண்டும் கச்சேரி செய்யவாள் என்பது போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன.
அவர்களின் பாராட்டு ஓர் அளவுக்கு யாழினியை நிமிர செய்தது என்றால், இப்படியான அவர்களின் நேர் கேள்விகள் அவளை சற்று துவளவும் செய்தது.
கண்காட்சி தான் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாகவே சென்றிருக்க, இளவளவன் மகிழ்ந்திருக்க, புரளி பேச்சை கேட்ட பெற்றோர் அதை புறந்தள்ள முயன்றபடி இருக்க, யாழினி கலவையான உணர்வுகளுடன் இருக்க, மகிழுந்து வீட்டை நோக்கி பறந்தது.
மோகனம் இசைக்கும்……………

Advertisement