Advertisement

வீட்டிற்குள் ஓடிய அம்மு, முதல் வேலையாக, பேரங்காடியில் நடந்ததை வீட்டில், அபிநயத்துடன் ஒளிபரப்பு செய்து விட்டாள்.
ரவிச்சந்திரனும், லீலாவதியும் பதறி யாழினியின் நலத்தை பரிசோதித்து விட்டு,
“இது எல்லாம் உனக்கு எதுக்கு யாழிமா”
என்று அவளை கண்டிக்க, அவளோ பதில் என்று ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள்.
பின்னால் வந்த இளவளவன் தான், யாழினியின் சாகசத்தை புகழ்ந்து, அதனால் விளைந்த நன்மையை விளக்கி ஒருவாறு நிலமையை சமாளித்தான்.
இருந்தாலும் பெற்றோர் இருவருக்கும், இந்த விஷயத்தில் யாழினி மீதும், அவளுக்கு துணை நிற்கும் இளவளவன் மீதும், மன வருத்தம் தான்.
அதை எல்லாம் கிஞ்சித்தும் கவனிக்காத யாழினி, தனிமையை நாடி தனது அறைக்கு சென்று விட்டாள்.
அதற்கும்,
“பார் கண்ணா, அங்க நடந்ததுல யாழினி பயந்துட்டா போல, நீயாவது பொறுப்பா அவளை தடுத்து இருக்கலாம் இல்ல”
என்று லீலாவதி இவனிடம் காய, இவனோ,
“யாரு, உங்க பொண்ணு, பயந்துடுச்சா, அவனை புரட்டி எடுத்ததை பார்த்து இருந்தா, இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்க”
என்று மனதிற்குள் நினைத்து கொண்டவன், வெளியில் அவரை சமாதானம் செய்ய வெகுவாக முயன்று கொண்டிருந்தான்.
அதே சமயம் யாழினியின் முகத்தில் இருந்த தீவிர சிந்தனையின் சாயல், இவனின் புருவங்களை உயர்த்தவும் செய்தது.
இந்த விஷயத்தை என்னவென்று கவனிக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்து கொண்டான் அவன்.
இப்போது தான் அவள் கொஞ்சம் மீண்டு வருவது போல இருக்க, எங்கே வேண்டாதை எல்லாம் யோசித்து, பழையபடி தன் கூட்டிலே சுருண்டு கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு.
ஆனால் அதற்கு நேர்மாறாக, இரவு உணவுக்கு கீழே வந்த யாழினியின் முகம், அவ்வளவு தெளிவாக இருந்தது.
உணவை முடித்து அவள் மேலே செல்ல போக, அவளை தடுத்த இளவளவன்,
“நாளைக்கு கடைக்கு விசிட் போகணும்னு சொன்னேனே நியாபகம் இருக்கு இல்ல, மார்னிங் சீக்கிரமா ரெடி ஆகி வந்துடு”
என்று சொல்ல, யாழினி மண்டையை உருட்ட, நிலவின் குளிர்ந்த ஒளியை போல, ஒரு வித சோபையில் மிளிர்ந்த அவளின் முகத்தில் இருந்து, கண்ணை எடுக்க முடியாத அவன் தொடர்ந்து,
“நகைக்கடை ஓனர் மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு வா, நேத்து மால்க்கு வந்தியே அந்த மாதிரி வராத புரியுதா”
என்று கூடுதலாக சொல்ல, அவனை பார்த்து பளீரென புன்னகைத்த அவளோ,
“எப்படி வரேன்னு, நாளைக்கு காலையில் பாருங்க மிஸ்டர்”
என்று சொல்லி மாடியேற, அவளின் சிரிப்பில் ஏகிறி கீழே விழ பார்த்த இதயத்தை, அதன் இடத்தில் அழுத்தி பிடித்து கொண்டவன்,
“என்ன ஆச்சு இவளுக்கு, ஆளும் பேச்சும் ஒரு மார்க்கமா இருக்கு”
என்றவன், பிரம்மை பிடித்தவன் போலவே சில நிமிடங்கள் அங்கேயே உறைந்து நின்றான்.
பின் தன் அறைக்கு சென்ற அவனுக்கு, தன்னவள் மறுநாள் இதை விட பெரிய அதிர்ச்சியை தனக்கு தர காத்திருக்கிறாள், என்று தெரிந்திருக்க நியாயமில்லை தானே.
மறுநாள் காலையில் சற்று முன்னரே கிளம்பி வந்த இளவளவன், வரவேற்பறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்தபடி மாடியையே பார்த்து கொண்டிருந்தான்.
நேற்று அவள் சொல்லி சென்ற விதத்தில், அவள் நல்ல விதமாக சொன்னாலா அல்லது கிறுக்கு தனம் எதுவும் செய்ய திட்டம் தீட்டி இருக்கிறாளா என்று இளவளவனுக்கு புரியவில்லை.
மாடி கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், நிமிர்ந்து பார்த்த இளவளவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, யாழினி வந்த தோற்றத்தில் வாயை பிளந்த படி நின்றான் அவன்.
நேற்று வாங்கி வந்த உடையில் அடர் ரோஜா வண்ண பாவாடை அணிந்து, அதற்கு தோதாக அடர் நீளத்தில் முழு கை வைத்த நீளமான மேல் சட்டை அணிந்திருந்தாள் யாழினி.
வெள்ளை தங்கத்தில், ரோஜா நிறத்தில் வைரக்கல் வைத்து, கழுத்தை ஒட்டியபடி மெல்லிய சங்கிலி ஒன்றையும், அதற்கு ஜோடியாக காதணியையும் அணிந்து இருந்தாள்.
சிறிய சிறிய ரோஜாவை அடுக்கி வைத்தது போன்ற ஒரே ஒரு வளையலை ஒரு கையிலும், இன்னோரு கையில் இளவளவன் பரிசளித்த கைக்கடிகாரத்தையும் அணிந்திருந்தாள்.
தன் குவளை கண்ணுக்கு மையிட்டு, லேசாக ரோஜா நிறத்தில் உதட்டு சாயம் பூசி, உட்சி முடியை மட்டும் அள்ளி கிளிப் போட்டு, மீதி முடியை விரித்து விட்டு, அதிலும் பாதியை தூக்கி முன்னால் போட்டு அமர்க்களமாக படியிறங்கி வந்தாள்.
அவள் பூசியிருந்த அரிதாரங்களை விட, அதரத்தில் சூடி இருந்த மோகன புன்னகையும், அகத்தின் இருள் விலகியதில், முகத்தில் தோன்றிய பிரகாசமுமே அவளை பேரழகியாக காட்டியது.
இளவளவனின் தோற்றத்தை பார்த்த லீலாவதி,
“இவன் என்ன இப்படி பேயை பார்த்த மாதிரி நிக்கிறான்”
என்று யோசித்தபடி வந்தவர், தேவதை போல இறங்கி வந்த மகளை பார்த்ததும், கை கொண்டு வாயை மூடியவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
மகளிடம் இப்படி ஒரு திடீர் மாற்றத்தை அவர் எதிர்பார்க்கவேயில்லை. அதற்குள் கீழே வந்திருந்த யாழினியின் தலையை வருடி விட்டவருக்கு பேசவே முடியவில்லை.
திக்கி திணறி,
“உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்குடா யாழி”
என்று சொல்ல, அவரை அணைத்து கொண்ட யாழினி, இன்னமும் திகைப்பில் இருந்து வெளிவராத இளவளவனை பார்த்து கண் சிமிட்டினாள்.
அதில் மெல்லிதாக திடுக்கிட்ட அவன், தன்னையும் மீறி கண்களில் வழிந்த மகிழ்ச்சியுடனும், மேவிய காதலுடனும் தன்னவளை பார்த்து வைத்தான்.
அந்த பார்வை யாழினியின் மனதை சாரலாக நனைக்க, வெட்கத்தில் கண்களை தாழ்த்தி கொண்டாள்.
யாழினியை இப்படி பார்த்த ரவிச்சந்திரனும், சந்தோஷ மிகுதியில் அதிகமாக உணர்ச்சிவசப்பட, யாழினியே அவரின் அருகில் அமர்ந்து, அவரை தேற்றி சமாதானப்படுத்தினாள்.
பிறகு இளவளவனுடன் கடைக்கு கிளம்பினாள் யாழினி. கடைக்கு யாழினியை அனுப்ப வேண்டும் என்று இளவளவன் நினைத்தற்கு காரணம் உண்டு.
முதலாளி என்ற முறையில் நிட்சயம் மேலாளர்கள் அவளிடம் தாங்களாகவே வந்து உரையாடுவார்கள்.
இவள் பதில் அளிக்க வேண்டும் என்று எல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை, குறைந்த பட்சம் வெளியாட்கள் பேசுவதையாவது அவள் கவனிக்க வேண்டும் என்பதே, அவனின் நோக்கமாக இருந்தது.
அதே போல யாழினி கடைக்கு வந்ததும், அவளை பார்த்த மேலாளர் ஓடி வந்து வரவேற்று, உபசரிக்க ஆரம்பித்தார்.
இளவளவன் இதை தான் எதிர்பார்த்தான் என்பதால் அமைதியாக நிற்க, அங்கு அவன் எதிர்பார்க்காத சம்பவமும் அரங்கேறியது.
ஓரு தலையசைப்புடன் அவரின் வரவேற்பை ஏற்ற யாழினி, சிரித்த முகத்துடன்,
“நீங்க போய் ஒர்க் அஹ பாருங்க சார், நான் சும்மா விசிட்கு தான் வந்து இருக்கேன், எதாவது தேவைப்பட்டா கேட்கிறேன்”
என்று சொன்னவள், நிமிர்ந்த நன்னடையுடன் முன்னே செல்ல, இளவளவனோ,
“ஒரே நாள்ல நீ இவ்வளவு ஷாக் கொடுத்தா, என்னோட சின்ன இதயம் எப்படி தாங்கும் பேபிமா”
என்று சிணுங்கியவன், அவளின் உதவியாளன் போல ஒன்றும் பேசாமல், அவளை பின் தொடர்ந்தான்.
மூன்று மாடியை கொண்ட அந்த நகை கடையை ஒரு சுற்று சுற்றியவள், காட்சிக்கு வைத்திருந்த, சில நகைகளை எடுத்து விட்டு, மக்களை கவரும் படி வேறு சிலவற்றை மாற்றி வைக்க சொன்னாள்.
இதே மாதிரி அடுத்த இரண்டு கடையையும் பார்வையிட்டவர்கள், கடைசியாக அவர்களின் முதன்மை பிரிவிற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கும் ஒரு முறை சுற்றி பார்த்தவள், கணக்கு வழக்குகளை எடுத்து வர சொல்லிவிட்டு, மேல் மாடியில் இருந்த தன் அப்பாவின் அறைக்கு சென்று விட்டாள்.
அங்கு சென்று அமர்ந்த யாழினி ஏதோ யோசனையில் இருந்தவள், இளவளவனும் மேலாளரும் ஒன்றாக உள்ளே வரவும், அவர்களை பார்த்து புருவத்தை கேள்வியாக உயர்த்தினாள்.
தான் சொல்லியிருந்த வேலையை பற்றி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொண்ட இளவளவன், யாழினியின் கேள்வியை கவனிக்காதவன் போல சாதரணமாக இருக்கையில் அமர்ந்தான்.
இளவளவனை தொடர்ந்து உள்ளே வந்த மேலாளர், யாழினி பார்க்க வேண்டிய கோப்புகளை, அவளின் முன் மேசையில் வைத்தார்.
அப்போது அங்கு இருந்த ஒரு கவரை பார்த்த அவர்,
“இதை இன்னும் கொண்டு போய் கொடுக்கலையா அவன், நேத்தே கொடுக்க சொல்லி இருந்தேனே”
என்று முணுமுணுக்க, அதை செவிமடுத்த இளவளவன்,
“என்ன அங்கிள் என்ன பிரச்சனை”
என்று கேட்க, அவரோ,
“இல்ல இளா, இது நாம மன்ந்லி ஆசிரமத்துக்கு கொடுக்குற செக், குமார் கிட்ட சொல்லி, நேத்தே அங்க கொடுக்க சொல்லி இருந்தேன், மறந்துட்டான் போல”
என்று சொல்ல, இரண்டு வினாடி யோசித்த இளவளவன்,
“சரி என்கிட்ட கொடுங்க, எனக்கு அந்த பக்கம் ஒரு வேலை இருக்கு, போற வழியில் நானே கொடுத்துடுறேன்”
என்று சொல்ல, அவரும் மறுபேச்சே பேசாமல், அவனின் வசம், காசோலையை ஒப்படைத்தார்.
யாழினி கோப்புகளில் மூழ்கி இருக்க, அவள் இந்த உரையாடலை கவனிக்கவேயில்லை.
பின்பு அங்கு இருந்த வேலைகள் ஓர் அளவு முடிந்ததும், வீட்டிற்கு செல்ல ஆயுத்தமாகினர் இருவரும்.
மகிழுந்தில் ஏறிய யாழினியிடம் இளவளவன்,
“போற வழியில் ஆசிரமம் போய் இந்த செக் அஹ கொடுத்துட்டு போய்டலாமா யாழினி”
என்று கேட்க, அவளும் சரி என்று தலையாட்ட, ஆசிரமத்தின் முகவரியை ஓட்டுனரிடம் சொல்லி, அங்கு போக சொன்னான் இளவளவன்.
கடையின் கணக்கு, வழக்குகளை பார்க்கும் போதே, இளவளவன் இதை கவனித்து இருந்தான்.
அன்றே ஒரு முறை, அங்கு யாழினியை அழைத்து செல்ல வேண்டும் என்றும் நினைத்திருந்தான்.
இன்று யாழினியிடம் நேர்மறையாக நிறைய மாற்றங்கள் தெரிய, மேலாளரும் சரியாக ஆசிரமத்தை பற்றி பேச, ஏனோ இன்றே அங்கு சென்றால் என்ன என்று தோன்றிவிட்டது அவனுக்கு.
இருவரும் ஆசிரமத்துக்கு வந்ததும், காசோலையை கொடுக்க இளவளவன் உள்ளே செல்ல, யாழினியோ மெதுவாக அந்த இடத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தாள்.
அப்படி நடந்தவள் ஆசிரமத்தின் பின்புறம் இருந்த திடலுக்கு வந்திருக்க, அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும், அது உடல் குறைப்பாடுள்ள குழந்தைகளுக்கான ஆசிரமம் என்பது புரிந்தது.
சிறிதும் பெரியதுமான குழந்தைகள், பலவகை உடல்குறை இருந்த போதிலும், முகத்தில் குன்றா சிரிப்புடன், தங்களால் முடிந்த வகையில் சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.
அதை பார்த்த யாழினிக்கு மனது எல்லாம் என்னவோ பண்ணுவது போல இருக்க, அவளை தேடிக்கொண்டு அங்கு வந்த இளவளவன் மெதுவாக யாழினியின் தோளில் கை வைத்தான்.
யாழினி அவனை திரும்பி பார்த்ததும், இளவளவன்,
“அந்த குழந்தைகளை பார்த்தியா, எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க இல்ல”
என்று கேட்க, யாழினி ஆமாம் என்று தலையாட்ட, அவளின் ஒரு கையை பிடித்து கொண்ட இளவளவன்,
“அந்த பசங்களில் சில பேரால பார்க்க முடியாது, சிலரால கேட்க முடியாது, சிலரால நடக்க முடியாது, சிலரரோட ஆயுள் இன்னும் சில மாதங்கள் தான், ஆனாலும் அவங்க அதை நினைச்சி உட்கார்ந்து அழாமா, எப்படி சிரிப்போடு லைஃப் அஹ பேஸ் பண்றாங்க பார்த்தியா”
என்று கேட்க, முதலில் ஆமோதிப்பாக தலையசைத்த யாழினி, பின்பு மறுப்பாக தலையை அசைத்து,
“அவங்க எல்லாம் பொறந்ததுல இருந்தே இப்படி தான் இருக்காங்க இல்ல, அனுபவித்தே இல்லாத விஷயத்தோட அருமை அவங்களுக்கு எப்படி தெரியும், அப்போ அவங்க அதை நினைச்சி எல்லாம் வருத்தப்படவும் எதுவும் இல்லை தானே”
என்று சொன்னவள் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு,
“ஆனா நல்லா இருந்துட்டு திடிர்னு, ஒன்னை இழக்கும் போது, அந்த வலி ரொம்ப மோசமா இருக்கும் கண்ணா”
என்று தன்னை மறந்து அவனை கண்ணா என்று அழைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் நிறைய, அவளின் அழைப்பை உணராதா இளவளவனோ, அவளின் கூற்றுக்கு மட்டும் பதிலாக,
“அதிகாலை கீச்சிடுற பறவையின் சத்தம், அலையோசை, மிரட்டும் இடியோசை, வருடும் மழைதுளியின் மெல்லிசை, மழலையின் சிரிப்பு, கோவில் மணியோசை, இரகசியமாக காதில் உரையாடும் கொசுவின் மொழி, உன் பெற்றோரின் ஆசை மொழி, உன் சொந்த குரலினின் இன்னிசை”
என்று ஒவ்வொன்றாக யோசித்து சொன்னவன், அவளின் இரு சிறிய கையையும், தன் இரண்டு பெரிய கையால் இறுக்கி பிடித்து கொண்டு,
“இப்படி உலகில் கேட்டு இரசிக்க வேண்டிய எல்லா ஓசையையும் நீ கேட்டு இருக்க, அய்யோ இதை மிஸ் பண்ணிட்டனேனு வருத்தப்படவோ, அழவோ எதுவுமே இல்லை”
என்றவனும் ஒரு சிறு இடைவெளிவிட்டு பின்பு,
“வாழக்கையின் கடைசி நாள் வரைக்கும் இதை எல்லாம் இரசிக்க வாய்ப்பே கிடைக்காத அவங்க நிலமையை விட, அட்லீஸ்ட் இதை எல்லாம் கேட்டு இரசிக்க வாய்ப்பு கிடைச்ச நீ அதிர்ஷ்டசாலி தான்”
என்று அவளின் நிலையை, அவளை இயல்பாக ஏற்று கொள்ள வைக்க முயல, யாழினியோ அவனே பற்றுக்கோல் என்பது போல, அவனின் தோளில் தலையை சாய்த்து கொண்டாள்.
அவளை ஆதரவாக இளவளவனும் அணைத்து கொள்ள, சில நிமிடங்களில் கண்ணை துடைத்து கொண்டு நிமிர்ந்த யாழினி அவனிடம்,
“போகலாம்”
என்று சொல்ல, இளவளவனும், அவளும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தனர்.
இருவரும் மகிழுந்தில் ஏறி அமர, இருக்கையில் தலைசாய்த்து கண்களை மூடிய யாழினியின் நினைவு, ஒன்னரை வருடங்களுக்கு முந்தைய ‘அந்த கருப்பு’ தினத்திற்கு சென்றது.
மோகனம் இசைக்கும்……………

Advertisement