Advertisement

பெற்றோரோடு கதைப்பது, அலுவலக வேலை, அதோடு முக்கிய வேலையாக இளவளவன் பார்க்காத போது எல்லாம், அவனை பார்ப்பது என்று நாட்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது யாழினிக்கு.
அதோடு இளாவும் அவளை ஒரு நிமிடம் கூட தனியாகவோ, சோம்பியோ உட்கார விடாமல், ஏதாவது சின்ன, சின்ன வேலைகள் கொடுத்து கொண்டேயிருந்தான்.
இப்போது எல்லாம் நடந்ததை நினைத்து யாழினி தன்னை, தானே காயப்படுத்தி கொள்வதும் குறைந்து இருந்தது.
அதற்கு எல்லாம் அவளுக்கு நேரம் இல்லாத வகையில், பார்த்து கொண்டான் இளவளவன் என்பது தான் பொருந்தும்.
ஓரளவு வீட்டில், தன் வீடு என்ற எண்ணத்துடன் இயல்பாக வலம் வர ஆரம்பித்திருந்தாள் யாழினி.
அவள் வீட்டில் மீண்டும் பழைய படி தன்னை அழகாக பொருத்தி கொண்டதும், அவளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தயரானான் இளவளவன்.
அன்று அவன் யாழினியின் அறையில் இருந்து களவாடிய சித்திரத்திற்கு எல்லாம், உருவம் கொடுக்க பணித்திருக்க, அந்த வேலை எல்லாம் முடியும் தருவாயில் இருந்தது.
இளவளவன் சென்னையில் உள்ள பணக்காரர்களை அழைத்து, பெரிய அளவில், யாழினியின் படைப்புகளை கண்காட்சி போல வைக்க நினைத்திருந்தான்.
அது ஒரு பெரும் தொகையை ஈட்டி தரும் என்பதோடு, அந்த வெற்றி யாழினிக்கு ஒரு தன் மீது, ஒரு தன்னம்பிக்கையை தரும் என்பது அவனின் எண்ணம்.
அந்த கண்காட்சிக்குள் யாழினியை வெளி இடங்களுக்கு சென்று வருவதற்கும், புது மனிதர்களை சந்தித்து சாதாரணமாக உரையாடவும் தயார் செய்ய வேண்டியது அவசியம்.
இதை எல்லாம் யோசித்த இளவளவன், அன்று மாலை யாழினி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது, அவளின் முன் சென்று நின்றான்.
முன்னால் யாரோ நிற்பது போல இருக்க, சட்டென்று நிமிர்ந்து பார்த்த யாழினிக்கு, லேசாக தலை சுற்றுவது போல இருந்தது.
யாழினி லேசாக தடுமாற, பிடிமானம் தேடி காற்றில் அலைந்து கொண்டிருந்த அவளின் கையை, ஆதரவாக பற்றிய இளவளவன், அவளை அருகில் இருந்த இருக்கையில் அவளை அமர வைத்தான்.
வேலைக்காரரை அழைத்து அவளுக்கு தண்ணீர் எடுத்து வர சொன்னவன், அவள் அதை பருகி, தெளியும் வரை அமைதியாக காத்திருந்தான்.
வீசிய தென்றலிலும், குடித்த குளிர்ந்த நீரினாலும் சில நிமிடங்களிலே சுயம் திரும்பி யாழினி, அவனிடம் நேராடியாக,
“என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க”
என்று வெளியில் சாதாரணம் போலவே கேட்டாள். ஆனால் அவளின் மனமோ,
“ஆத்தி, இந்த இம்சை இப்போ என்ன செய்ய காத்திருக்குன்னு தெரியலையே”
என்று திக்திக்கென்று அடித்து கொண்டது.
பின்னே முன்னர் எல்லாம் எப்போது, இப்படி இவன் பேச வருகிறானோ அப்போது எல்லாம், அவளுக்கு பிடிக்காததை அல்லவா செய்ய வைத்திருக்கிறான்.
அதோடு யாழினி, இளவளவன் எப்போது எல்லாம் தன்னை பதற வைக்கும் படி ஏதேனும் செய்கிறானோ அப்போது எல்லாம் அவனை இம்சை என்றும், மீதி நேரம் எல்லாம் கண்ணா என்றும் அழைக்க ஆரம்பித்திருந்தாள்.
யாழினியின் எதிர்பார்ப்பை பொய்யாக்காத இளவளவனும்,
“இல்ல அங்கிள் உடம்பு சரியில்லாமா ஆனதுல இருந்து வீட்டுலயே அடைஞ்சி கிடக்குறாரு, அவருக்கும் அது என்னமோ மாதிரி தானே இருக்கும், அதனால”
என்று சொல்லி நிறுத்த, யாழினியின் மனமோ, “அதனால” என்றபடி அடுத்து வர போவதை நினைத்து எச்சில் விழுங்க, அவனோ,
“அதனால நீ என்ன பண்ற, தினமும் அவரை பக்கத்துல இருக்கிற பார்க்கு கூட்டிகிட்டு போயிட்டு வா, அங்க அவரோட பிரின்ட்ஸ் எல்லாம் வருவாங்களாமே, அவருக்கும் ஒரு சேஞ் அஹ இருக்கும் இல்ல”
என்று இவளை தினமும் வெளியில் அனுப்ப ஒரு சரியான காரணத்தை கண்டுபிடித்து சொல்ல, யாழினியோ,
“அப்பா பிரின்ட்ஸ்கு எல்லாருக்கும் என்ன தெரியும், என்னை கூப்பிட்டா, என் கூட பேச ட்ரை பண்ணா நான் என்ன செய்யுறது”
என்று இளவளவனிடம் கேள்விகளை அடுக்க, அவனோ மனதிற்குள்,
“அதுக்காக தானே உன்னை அங்க போக சொல்றதே”
என்று நினைக்க, தன் தலையை அழுத்தம் திருத்தமாக மறுப்பாக அசைத்த யாழினி,
“அவங்க யாருக்கும் எனக்கு நடந்ததது தெரியாது, எப்படி அவங்களை நான் பேஸ் பண்ணுவேன், என்னால முடியாது, நான் போகலை”
என்று படபடவென்று பெரிந்தவள், தன் தலையை குனிந்து கொண்டாள். அவளின் செய்கையை பார்த்த இளவளவன்,
“இது வேற புதுசா இப்போ, பதில் கேட்க வேண்டாம்னா பேசிக்கிட்டு இருக்கும், போதே தலையை குனிந்து கொள்வது, இவளை”
என்று முணுமுணுத்தவன், தன் ஆள்காட்டி விரல் கொண்டு அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
அவளின் முகத்தில் இருந்த சோகம் தன்னையும் தாக்கிய போதும், வேறு வழியில்லை என்பது புரிய இவன்,
“உனக்கு யாரு கிட்டயும் பேச பிடிக்கலைன்னா, பெரிய ஹெட் செட்டை மாட்டிக்கிட்டு போ”
என்று சொல்லவும், அவளின் முகபாவம் வெகு வேகமாக மாற, அவசரமாக அவளின் முன் ஒரு கையை காட்டியவன்,
“இரு, இரு, சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்புறமா கோவப்படு”
என்றவன், பின்பு விளக்கமாக,
“பேச பிடிக்காம நீ அவங்களை அவாய்ட் பண்ணாலும், அவங்க கூப்பிட்டு நீ திரும்பலைன்னா கூட ஹெட் செட் போட்டு இருக்கிறததுனால தான், உனக்கு அவங்க கூப்பிட்டது கேட்கலைன்னு அவங்களே நினைச்சிப்பாங்க”
என்று அவள் பிரச்சனை என்று சொன்னதற்கு வழக்கம் போல, தன் பாணியில் ஒரு தீர்வு சொன்னான் இளவளவன்.
யாழினியோ உலக சோகங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டவள் போல, வலி நிறைந்த முகத்துடன்,
“என்னை விட்டுடேன் பிளீஸ்”
என்று கண்களில் இறைஞ்சலுடன் அவனை பார்க்க, அதில் கரைய துடித்த மனதை இறுக்கி பிடித்து இளவளவன், அவளின் கண்களின் மொழி புரியாதவன் போல,
“இன்னைக்கு லேட் ஆகிடுச்சி, அதனால அங்கிளை நாளையில் இருந்து பார்க்க்கு கூட்டிட்டு போ என்ன”
என்றவன் அவளின் முகத்தில் தெரிந்த மறுப்பின் சாயலில்,
“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பிஸிக்கல் ஹெல்த்கு, மென்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம், உன்னோட அப்பாக்கு இது இப்போ முக்கியம், அவ்ளோ தான் சொல்லுவேன்”
என்று அவளை அசைக்கும், தன் கடைசி ஆயுதமான அவளின் தந்தையின் உடல்நிலையையும் குறிப்பு காட்டியவன், அதோடு தன் வேலை முடிந்தது என்பது போல எழுந்து சென்று விட்டான் இளவளவன்.
யாழினியை சமாளிக்க அவன் கஷ்டப்பட்டதை விட, அவளின் தந்தையை சமாளிக்க தான் அவன், பெரிதும் திணறி விட்டான்.
ரவிச்சந்திரனிடம் விஷயத்தை சொல்ல, அவரோ,
“இல்ல இளா அது எல்லாம் வேண்டாம்”
எடுத்தவுடன் நிர்ச்சிந்தையாக மறுக்க, இவரின் மறுப்பை சற்றும் எதிர்பார்க்காத இளவளவனோ சற்றே திகைத்து,
“ஏன் மாமா”
என அவரோ,
“யாழிமாக்கு கஷ்டமா இருக்கும் மாப்பிளை, இப்படி வீட்டுல அவ கலகலப்பா இருந்தாலே எனக்கு போதும், முழுசா பழைய மாதிரி மாறணும்னு எல்லாம் எனக்கு பேராசை இல்ல”
என்று உணர்ச்சிவச பட்டவராக பேச, அவரை பார்த்த இளவளவனுக்கு ஆயசமாக இருந்தது.
ஒருவரின் மீது அதிகப்படியாக வைக்கும் பாசமும், ஒரு வகையில் தொல்லை தானோ என்று தான் நினைக்க தோன்றியது அவனுக்கு.
அவரின் கையை ஆதரவாக பிடித்து கொண்டவன்,
“நீங்க நினைக்கிறதை விட யாழினிக்கு அதிக பொட்டன்ஷியல் இருக்கு மாமா, இதை எல்லாம் அவளால கண்டிப்பா தாண்டி வர முடியும், அவளை நம்புங்க, பழைய யாழினியை விட அவ பெஸ்ட் அஹ வருவா பாருங்க”
என்று தேற்றி, அவரை ஒரு வழியாக தன் யோசனைக்கு சம்மதிக்க வைத்தான் அவன்.
இளவளவன் பேசி சென்றதை பற்றி யோசனையுடன் இருந்த யாழினி, பெற்றோரின் அறையில் நுழையவும், அவளை கவனித்ததும் அங்கு இருந்த இருவரும், தங்களின் பேச்சை வேறு திசையில் திசை திருப்பி விட்டனர்.
ஆனால் அவர்கள் யாழினியை கவனிப்பதற்கு முன்பு, வெகு நேரமாய் அவள் அங்கு நின்று, தங்களின் உரையாடலை கவனித்து கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் அறியவில்லை.
இளவளவன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அவன் வாய் வார்த்தையாய் கேட்கும் போது, யாழினிக்கு மனதின் வலு கூடியது போல ஒரு பிம்பம்.
அவனுக்காகவேணும் இதை எல்லாம் தாண்டி, தன் மன தடைகளை தகர்த்து வர வேண்டும் என்று என்பதாக உத்வேகம் உள்ளுக்குள் குமிழியிட்டது.
ஆனால் நாளை வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே, மீண்டும் பழைய எண்ணங்கள் தலை தூக்க, உருவான உத்வேக குமிழி, நீர் குமிழியென பட்டென்று சிதறவும் செய்தது.
யாழினி நாளை மாலை வரவே கூடாது என்று நினைத்தாலும், நேரத்தை அவளால் நிறுத்த முடியுமா என்ன.
அடுத்த நாள் மாலை பூங்காவுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட, ரவிச்சந்திரனும் கிளம்பி வந்து விட்டார்.
வந்தவரோ பதட்டத்துடன் இருந்த மகளின் முகத்தை கவலையாக பார்க்க, யாழினியோ இளவளவனை கண்களால் தேடியபடி இருந்தாள்.
மகிழுந்தும் கிளம்ப தயாராக, அப்போது தான் வந்தான் இளவளவன். அவனை பார்த்ததும், வேக நடை நடந்து அவனிடம் வந்த யாழினி சிறிய குரலில்,
“நீ… நீ..யு…ம் எ..ன் எங்க கூட பார்க்கு வரியா”
என்று அவனையும் உடன் அழைக்க, அவள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என நினைக்கும் இளவளவனுக்கு, அவள் கேட்டதை ஏற்கும் எண்ணம் இல்லை. எனவே,
“நீ போற இடத்துக்கு எல்லாம், நான் கூடவே துணைக்கு வர முடியுமா, எனக்கு வீட்டுல வேலை இருக்கு, நீங்க போயிட்டு வாங்க”
என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் மறுக்க, யாழினியின் முகம் இன்னும் சுருங்கியது.
தன்னவளின் முகத்தை பார்த்த இளவளவனுக்கும் மனதில் பாரம் ஏற, அவளை அப்படியே அனுப்ப அவனுக்கு மனம் இல்லை.
சோகம் கவிழ்ந்த முகத்துடன் திரும்பி மகிழுந்த்தில் அமர சென்ற யாழினியின் கையை, பின்னால் இருந்து பிடித்தவன், அவள் திரும்பியதும்,
“ஹெட் செட் எடுத்துகிட்ட இல்ல”
என்று வாயில் வந்ததை கேட்டு வைக்க, யாழினியோ நாலா பக்கமும் மண்டையை உருட்டி விட்டு, வண்டிக்குள் அமர்ந்தாள்.
செல்லும் அவளை பார்த்த இளவளவனுக்கோ, குழந்தையை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் தாயை போல ஏக கவலை.
ரவிச்சந்திரனும், யாழினியும் தற்போது செல்லும் பூங்கா, பணகார்களுக்காக சிறப்பாக, அவர்களிடம் இருந்தே பணம் வாங்கி பராமரிக்கப்படும் பூங்கா.
ரவிச்சந்திரன் மகளுடன் அங்கு சென்றதும், மகளிடம் ஆயிரம் முறை அவளின் நலனை உறுதி செய்த படியே இருந்தார்.
இத்தனை நாட்களுக்கு பிறகு தங்களின் நண்பனை பார்த்த ரவிச்சந்திரனின் தோழர்கள் ஆர்வமாக அவரை நோக்கி கையசைத்தனர்.
மகளை தனியே விட்டு செல்ல முடியாமல் தவித்த அவரை, வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் யாழினி.
தன்னை பார்த்து புன்னகைத்தவர்களுக்கு, பதிலுக்கு புன்னகை செய்ய வெகுவாக திணறி விட்டாள் யாழினி.
தந்தையை அனுப்பினாலும், அவரின் பயம் புரிந்தவளாக அவரின், பார்வையில் இருக்கும்படியான இருக்கையிலே அமர்ந்தாள் யாழினி.
தான் கையோடு கொண்டு வந்திருந்த கேட்பொறியை (Headset) எடுத்து, சும்மா பெயருக்கு அணிந்து கொண்டு, யாரையும் எதிர்கொள்ள விரும்பாமல் கண்களை மூடி கொண்டாள்.
நண்பர்களை பார்த்த மகிழ்ச்சி இருந்த போதிலும், மகளின் மீது கவனத்தை வைத்தப்படியே, தோழர்களுடன் அளவளாவி கொண்டிருந்தார் ரவிச்சந்திரன்.
முதல் நாள் என்பதால் மகளை அதிகம் கஷ்டப்படுத்த விரும்பாமல், அரைமணி நேரத்திலே திரும்பி வந்து விட்டார் ரவிச்சந்திரன்.
இவர் வந்த சிறிது நேரத்திலே கிளம்ப, அதிருப்தியான நண்பர்களிடம் இனி தினமும் வருவதாகவும், இன்று முக்கிய வேலை இருப்பதாகவும் சொல்லி விட்டு கிளம்ப ஆயுதமானார் அவர்.
மகளை நெருங்கிய அவருக்கு, அவள் அமர்ந்திருந்த தோற்றம் மனதை உருக்க, மெதுவாக அவளின் தலையை வருட, திடுக்கிட்டு கண்ணை திறந்த யாழினி, தன் முன்னால் நின்ற தந்தையை பார்த்தும் தான் ஆசுவாசமானாள்.
மகளிடம் கிளம்பலாம் என்று சொல்லி அவர் முன்னால் நடக்க, ‘இவ்வளவு சீக்கிரமாகவா’ என்ற எண்ணம் எழுந்த போதிலும், ஒரு விடுதலை உணர்வுடன் அவரை பின்தொடர்ந்தாள் யாழினி.
இவர்கள் திரும்பி வரும் வரையில், வாசலிலே தான் நடைப்பயின்று கொண்டிருந்தான் இளவளவன்.
இவர்கள் வந்ததும் யாழினியிடம், அவள் அங்கு என்ன செய்தால் என்று கேட்டு தெரிந்து கொண்டவனுக்கு, அவள் யாருடனும் உரையாடவில்லை என்பது சற்று ஏமாற்றமே.
சரி இன்று தானே முதல் நாள் என்று மனதை தேற்றிக்கொள்ள, அடுத்தடுத்த நாட்களும் அதுவே தான் தொடர்கதையானது.
செல்லவே மாட்டேன் என்றவளை, சமாதானம் செய்ய கேட்பொறி என்று ஒரு யோசனையை அவன் கொடுக்க, அவளோ அதை கேடையமாக பயன்படுத்தி, எல்லோரிடமும் பேசாமல் இருப்பாள் என அவனே எதிர்பார்க்கவில்லை.
தந்தைக்காக வேறு வழியே இல்லாதது போல வெளியில் சென்று வருபவள், இவன் நினைத்த படி வெளியுலக மக்களுடன் உறவாடவில்லை.
இந்த முயற்சி படுதோல்வியாக முடிய, கண்டிப்பாக வெளியாட்களுடன் அவள் பேசியே ஆக வேண்டிய அவசியம் இருக்கும் படியான இடத்திற்கு அவளை அனுப்ப வேண்டும்.
எங்கு அனுப்பலாம், என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் யாழினியின் இம்சையரசன்.
மோகனம் இசைக்கும்……………

Advertisement