Advertisement

தன் அறையில் இப்படியும், அப்படியும் நடந்து யோசித்த இளவளவனின் மனம்,
“பேசாமா ஒரு ரெண்டு மூணு நாள் போய் அப்பா, அம்மாவை பார்த்துட்டு வருமோ”
என்று யோசிக்க, அவனின் மனசாட்சியாரோ,
“அப்படி போறதுனால என்ன நடக்கும்”
என்று சந்தேகம் கேட்க, அவனோ தாடையை தடவியபடி,
“இல்ல, இப்போ அவ என்ன தினமும் பார்த்துகிட்டு இருக்கா, திடிர்னு ஒரு நாலு நாள் பார்க்கலைன்னா, என்ன மிஸ் பண்ண வாய்ப்பு இருக்கு இல்ல”
என்று சொல்ல, மனசாட்சியோ,
“நீ அவளை படுத்தி எடுத்த பாட்டுக்கு, நீ போனதே நிம்மதின்னு நினைச்சி, அவ விடுதலை, விடுதலைன்னு பாட ஆரம்பிச்சிட்டா “
என்று குதர்க்கமாக கேட்டு வைக்க,
“விஷம், விஷம், நீ என்னோட மனசாட்சி தானே, ஒரு தடவை கூட எனக்கு சாதகமா பேச மாட்டியா”
என்று தன் மனசாட்சியாய பார்த்து பாவமாக கேட்ட இளவளவன்,
“நான் யாழினியை தினமும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்து இருக்கேன்றது உண்மை தான், ஆனா நல்லதோ, கெட்டதோ சடன் அஹ காணாம போகும் போது, மனசு அதை பற்றி யோசிக்கும், யாழினியும் என்னை பத்தி யோசிப்பா”
என்று நம்பிக்கையுடன் சொன்னவன்,
“அப்படி யோசிக்கும் போது, நான் பண்ணது எல்லாமே அவளுக்காக தான்னு உணர்ந்து, என்னை புரிஞ்சிக்க கூட வாய்ப்பு இருக்கு”
என்று தன் மனசாட்சியை சமாதானப்படுத்தியவனுக்கு, உறக்கம் தான் தூரமாக சென்றுவிட்டது.
முன்பு இளவளவனே தான், அவளுக்காக தான் அனைத்தையும் செய்கிறோம் என்று அவள் புரிந்து கொள்ளாத படி, கவனமாக இருக்க நினைத்தான்.
ஆனால் இப்போது அவனின் மனமே, அவள் அது எல்லாம் தனக்காக செய்தது என்று புரிந்துகொள்ள மாட்டாளா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தது.
தான் நேசிப்பவர்களுக்காக, உண்மை நேசத்துடன் நாம் ஒன்றை செய்யும் போது, வெளியில் அதை அவர்களுக்காக தான் செய்தோம் என்று காட்டி கொள்ள பெரும்பாலும் விரும்பது இல்லை தான்.
ஆனால் அகத்தின் ஆழத்தில் அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனதின் வித்தியாசமான விந்தை.
மனித மனம் தான், உலகின் வெகு விந்தையான ஜந்து. அது எப்போது எப்படி யோசிக்க ஆரம்பிக்கும் என்பது யாரும் கணிக்க முடியாத ஒன்றும் கூட.
வேலை முடிந்து படுக்க போகும் போதே, இப்போது தான் வேலை முடிந்தது என்றும், காலையில் தங்கள் இவருக்காக காத்திருக்க வேண்டாம் என்றும், ரவிச்சந்திரனுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தான் இளவளவன்.
அதனால் உணவு மேசையில் ரவிச்சந்திரன், லீலாவதி தம்பதியனர் மட்டும் அமர்ந்து உண்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இளவளவனை பார்த்த லீலாவதி,
“என்ன கண்ணா, அதுக்குள்ள எழுந்துட்ட”
என்று கரிசனதுடன் கேட்க, தூங்குனா தானே எழுந்துக்க என்று முணுமுணுத்த அவன், சத்தமாக அவரிடம்,
“தூக்கம் கலைஞ்சிடுச்சி அத்தை”
என்றபடி இருக்கையில் அமர்ந்தான். சில நிமிட அமைதிக்கு பிறகு,
“அத்தை, மாமா நான் ஒரு டூ ஆர் த்ரீ டேஸ் அப்பா, அம்மா கூட ஸ்டே பண்ணிட்டு வரலாமான்னு பார்க்கிறேன்”
என்று சொல்ல, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட லீலாவதிக்கும், ரவிச்சந்திரனுக்கும் இது சற்றே அதிர்ச்சி தான்.
முதற்கட்ட அதிர்ச்சி நீங்கியதும், இளவளவனை பதற்றத்துடன் பார்த்த ரவிச்சந்திரன்,
“என்ன மாப்பிள்ளை உங்களை இங்க யாராவது மரியாதை குறைவா நடத்துனாங்களா, ஏதாவது அசௌகரிமா இருக்கா, எதா இருந்தாலும் சொல்லுங்க மாப்பிளை”
என்று படபடத்தார். என்ன இருந்தாலும் தங்கள் ஆசை மகளின் வருங்கால கணவன் அல்லவா இளவளவன்.
ஒரு தந்தையாக அவர் பதற்றப்பட, அவரை பார்த்து வாய் நிறைய புன்னகை செய்த அவனோ,
“அய்யோ மாமா, அப்படி எல்லாம் எதுவுமே இல்லை, நான் தான் அம்மாவை மிஸ் பண்றேன், அதான் ஒரு ரெண்டு நாள்………”
என்று முடிக்காமல் இழுத்தவன், அவரின் அனுமதிக்காக காத்திருக்க, தலையை ஆட்டுவதை தவிர வேறு வழியில்லாமல் போக, சம்மதம் தந்தார் ரவிச்சந்திரன்.
இருந்தும் அவன் கிளம்புவதற்குள் கணவனும், மனைவியும் தனித்தனியாக அவனிடம்,
‘பிரச்சனை ஒன்றும் இல்லை தானே’
என்பதையே வேறு, வேறு வார்த்தைகளில் பல முறை கேட்டு உறுதி படுத்தி கொண்டனர்.
தான் கிளம்புவதற்கு முன், தாங்கள் இருவரும் நேற்று பார்த்து கொண்டிருந்த வேலையை, மாமனிடம் ஒப்படைத்து, எல்லாவற்றையும் விரிவாக எடுத்து சொல்லிவிட்டு தான் புறப்பட்டான் அவன்.
தன் பெற்றோருக்கு தான் வரும் தகவலை சொல்லிவிட்டு, தன் மாமனின் மகிழுந்திலே பயணத்தை தொடங்கினான் இளவளவன்.
யாழினியோ இது எதுவும் அறியாமல், தன் அறையில் மெத்தையில் உறங்கி கொண்டிருந்தாள்.
அன்று ஏனோ யாழினிக்கு
தாயின் முகம் சற்று வாடினார் போலவே பட்டது.
அவளும் என்னவென்று கேட்க, அவரோ ‘ஒன்றும் இல்லை’ என்று முடித்து விட, பலமுறை கேட்டும் தாய் ஒரே பதிலை திரும்ப, திரும்ப சொல்ல, அதை நம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை யாழினிக்கு.
அன்று முழுவதும் இளவளவனை பார்க்க வில்லை யாழினி. கடைசி இரண்டு நாட்களும் இப்படியே தான் நடந்திருக்க, உறங்கும் முன்னர் எப்படியும் அவனை பார்த்து விடுவோம், என்ற எண்ணம் அவளுக்கு.
ஆனால் அறைக்கு செல்லும் நேரம் நெருங்க, நெருங்க ஏனோ அவளின் மனம் படபடவென, அடித்து கொள்ள ஆரம்பித்தது.
அன்று போல, அறைக்கு செல்லும் போது வருவனோ???
அல்லது
அன்று போல தன் அறையில் காட்சி தருவானோ ???
என்று யாழினி எதிர்பார்க்க, அந்தோ பரிதாபம் எங்கும் அவன் காண கிடைக்கவேயில்லை.
தனது அறைக்கு வந்து, சாரளத்தின் அருகே நின்ற, யாழினியின் மனம் முழுவதும், இளவளவனை தான் சுற்றி கொண்டிருந்தது.
“எங்க போய் இருக்கும் அந்த இம்சை”
“அம்மா, அப்பா கூட அவனை பத்தி ஒன்னுமே பேசலையே”
என்று யோசித்தவளின் மனம்,
“அவன் எங்க போனா உனக்கு என்ன, அவன் யாரு உனக்கு, நீ ஏன் இப்போ அவனை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்க”
என்று கேள்வி எழுப்ப, அந்த கேள்வியில் சற்றே தடுமாறி போன யாழினி,
“எனக்கு அவன் தான் கண்ணாவா இருப்பானோனு சந்தேகமா இருக்கு”
என்று தான் காலை சந்தேகித்ததை, இப்போது காரணமாக சொன்னவளின் சிந்தையை, அந்த க்கணம் முழுதும் ஆக்கிரமித்தது அவளின் கண்ணா.
யாழினியின் கண் முன் விரிந்தது, தன் பிரிய அத்தையின் மகனான கண்ணாவுடனான தன் சிறு வயது நாட்கள்.
சிதம்பரத்தில் மிகவும் செல்வாக்கான குடும்பத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த ஒற்றை வாரிசு தான் ரவிச்சந்திரன்.
வயதில் முதிர்ந்திருந்த அவரின் பெற்றோர், தங்களின் வயதின் காரணமாக, இருபதின் தொடக்கத்தில் இருந்த ரவிச்சந்திரனுக்கு, லீலாவதியை மனம் முடித்து வைத்தனர்.
தங்களின் கடமை முடிந்த திருப்தியோ என்னவோ, அடுத்த சில ஆண்டுகளிலே ஒருவர் பின்னர் ஒருவராக இறைவனடியும் சேர்ந்து விட்டனர்.
பெற்றோரின் மரணத்தில் இருந்து வெளிவந்து, ரவிச்சந்திரனும் ஓர் அளவுக்கு தங்கள் குடும்ப தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகியும் லீலாவதி கருதரிக்காமல் இருக்க, தம்பதியினர் குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்தனர்.
லீலாவதி கொண்ட உண்மை ஏகத்திற்கான பதிலோ, அல்லது தில்லை கூத்தனின் அருளோ, நீண்ட நாட்களுக்கு பிறகு கருத்தரித்து அழகான பெண் குழந்தையைய் பெற்றெடுத்தார் லீலாவதி.
யாழினி பிறந்த ஒரு வருடத்தில் ஆரம்பித்தது பிரச்சனை. ரவிச்சந்திரனின் ஒன்று விட்ட பங்காளி, சித்தப்பாவின் மகன், சொத்தின் மீது உரிமை கோரி வழக்கு பதிந்தார்.
ரவிச்சந்திரனின் பெற்றோர் காலத்திலே, சொத்துகள் சமமாக பிரிக்கப்பட்டு தான் இருந்தது.
ரவிச்சந்திரனின் சித்தப்பா மிக பெரிய செல்வாளி. அதனால் ரவிச்சந்திரனின் தாத்தா, பரம்பரை சொத்தை எல்லாம் மூத்த மகனுக்கும், அதற்கு சமமான சொத்துக்களை, இளைய மகனுக்கும் கொடுத்தார்.
இளைய மகன் தந்தையின் கணிப்பை பொய்யாக்காமல் தன் பங்கை எல்லாம் கரைக்க, இப்போது அவரின் மகன் பரம்பரை சொத்தில், தனக்கும் பங்கு இருக்கிறது, என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வீடு, கடை முதற்கொண்டு அனைத்து சொத்துக்களும் வழக்கில் இருக்க, அதை எல்லாம் புழங்க முடியாத சூழ்நிலை.
நன்றாக வாழந்த ஊரில், தாழ்ந்து போக பிடிக்காமல், கையில் ஒரு வயது குழந்தையுடன் ரவிச்சந்திரன் தவித்து போனார்.
அந்த சமயத்தில் தான், தன் கல்லூரி நண்பன் ஆவுடையப்பரின் நினைவு வர, மனைவி மகளுடன் புதுவைக்கு கிளம்பினார்.
முன் அறிவிப்பு எதுவும் இன்றி வந்த போதும், மனதுடைந்து போய் வந்த நண்பனை அரவணைத்து கொண்டார் ஆவுடையப்பர்.
தனது வீட்டின் அருகிலே நண்பனுக்கும் வீடு ஏற்பாடு செய்து, அவரின் படிப்புக்கு ஏற்ற வேலையும் ஏற்பாடு செய்து, வழக்கை நடத்த நல்ல வழக்கறிஞரையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
முன்பு இருந்த அவளுக்கு வசதி இல்லை என்பதை விட, அருமையாய் ஏங்கி பெற்ற மகளை இப்படி ஒரு சூழ்நிலையில் வளர்க்க வேண்டியிருக்கு என்பதே ரவிச்சந்திரனுக்கு பெரும் கவலையாய் போயிற்று.
வங்கியில் இருக்கும் பணத்தை வழக்கை நடத்த என்று எடுத்து வைத்திருக்க, அவரின் சம்பளத்தில் ஒரு சாதாரண வாழக்கையையே அவர்களால் நடத்த முடிந்தது.
நண்பனுக்கு பண விஷயத்தில் உதவ ஆவுடையப்பர் தயாராக இருந்த போதும், அதை ஏற்று கொள்ள ரவிச்சந்திரனின் தன்மானம் இடம் தரவில்லை.
அதனால் இளவரசியாய் மகளை வளர்க்க முடியாத போதும், அன்பை கொட்டி, அவளை இளவரசி போலவே உணர வைத்தார் ரவிச்சந்திரன்.
தன் அரவணைப்பில் அமைதியாய் உறங்கும் யாழினியை பார்க்கும் போது எல்லாம், தான் உயிரோடு இருக்கும் வரை, மகளை ஒரு துன்பமும் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என சூளுரைத்து கொள்வார் அவர்.
இயல்பிலே தைரியமான அபிராமிக்கு, வெள்ளந்தியான லீலாவதியின் குணம் வெகுவாக பிடித்து விட, இருவரும் உற்ற தோழிகளாக மாறினார்.
ஒற்றை பிள்ளையான தன்னை அண்ணா, அண்ணா என்று உள்ளார்ந்த அன்புடன் அழைக்கும் லீலாவதியை, சொந்த தங்கையாகவே பாவித்தார் ஆவுடையப்பர்.
மூன்று வயது இளவளவனும், ஒரு வயது யாழினியும் இரண்டு வீட்டிலும், பாசத்திற்கு குறைவில்லாமல் வளர்த்தனர்.
எப்போதும் யாழினி, இளவளவன் பின்னால் தான் வால் பிடித்து கொண்டு சுற்றுவாள்.
இரண்டு வீட்டில் எந்த வீட்டில் இருந்தாலும், இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.
யாழினிக்கு நான்கு வயது இருக்கும் போது, இரண்டு குடும்பங்களும் ஒருமுறை புதுவை வில்லியனூரில் இருக்கும் பழமையான திருகாமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று இருந்தனர்.
அன்று கோவிலில் ஏதோ விசேஷம் போல, கோவில் தெப்ப குளம் அருகே மேடை அமைக்கப்பட்டு, பெண் ஒருவர், கடவுளை நினைத்து உருகி பாடி கொண்டிருந்தார்.
அதை பார்த்த யாழினியும், கோவில் தெப்ப குளத்தில் உள்ள படிக்கட்டில் அவரை போலவே அமர்ந்து, தன் தொடையில் கையால் தட்டியபடி, அவரை போல பாட முயல ஆரம்பித்தாள்.
குழந்தை யாழினியின் செயலில், அதன் அழகில் அவளின் பெற்றோர் மயங்கி நிற்க, இளவளவனின் பெற்றோரோ தங்கள் மருமகளின் செயலில் பெருமையுடன் நின்றிருந்தனர்.
தன் பெரிய கண்ணை உருட்டி உருட்டி யாழினியை பார்த்த இளவளவன், அவனின் மாமனிடம்,
“மாமா, யாழிமாக்கு அவங்க பண்றது பிடிச்சி இருக்கு போல, நாம நம்ப யாழியையும் அவங்க மாதிரியே ஸ்டேஜ்ல பாட வைப்போமா”
என்று ஆர்வமே உருவாக கேட்க, அவனை தூக்கி கொஞ்சிய ரவிச்சந்திரன், அடுத்த இரண்டு நாட்களிலே மகளை பாட்டு வகுப்பிற்கு செல்ல அனைத்து ஏற்பாட்டையும் செய்தார்.
இளவளவன் தற்காப்பு பயிற்சி கற்க தனி வகுப்பிற்கு செல்ல, தானும் செல்வேன் என்று அடம்பிடித்து யாழினியும் அவனுடன் சென்றது எல்லாம் துணை கதையினுள் தனி கதை.
இளவளவனை அவனின் பெற்றோர் தம்பி, தம்பி என்றே அழைக்க, லீலாவதியோ கண்ணா என்று அழைக்க, ரவிச்சந்திரன் எப்போதும் மருமகனே என்று தான் அழைப்பார்.
தன் தாய் இளவளவனை ‘கண்ணா’ என்று அழைப்பதை பார்த்து, சிறிய வயது யாழினியும், அவனை அப்படியே அழைத்து பழகினாள்.
ஓர் அளவுக்கு வளர்ந்த பிறகு, இளவளவன் யாழினியிடம்,
“யாழிமா என்னோட பேரு கண்ணா இல்ல, இளவளவன், இனிமே அப்படியே என்ன கூப்பிடுறியா”
என்று தன் உண்மை பெயரை சொல்லி அழைக்க சொல்லி ஆசையாக கேட்க, குட்டி யாழினியோ,
“அய்யே இது என்ன பேரு, வழ, வழா, கொழ, கொழான்னு இருக்கு, எனக்கு கண்ணா தான் பிடிச்சி இருக்கு, நான் அப்படி தான் கூப்பிடுவேன்”
என்று சொல்லிவிட்டு ஓடிவிட, யாழினியை பொறுத்தவரை, தன் செல்ல அபி அத்தையின் மகன் பெயர், கண்ணா என்றே நிலைத்து விட்டது.
இருவரும் ஆண்கள், பெண்கள் என்று அருகருகில் இருந்த தனி, தனி பள்ளியில் படித்த போதும், யாழினியை பள்ளிக்கு அழைத்து சென்று, திரும்பி கூட்டி வருவது இளவளவன் தான்.
அவளை விட இரண்டு வயது தான் மூத்தவன் என்ற போதும், தன் ஆசை அத்தை மகள் ரத்தினம் யாழினியை பார்த்து கொள்வது தன் பொறுப்பு என்பது இளவளவனின் எண்ணம்.
தன் அம்மா, அப்பா முதல், அவளின் அப்பா, அம்மா வரை யாரும் ஒரு வார்த்தை யாழினியை, அவன் முன்னால் அதட்டவிட கூட முடியாது.
அதே நேரம் யாழினி எதாவது தவறு செய்யும் பட்சத்தில், அதை அவளுக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லவும் தவற மாட்டான் இளவளவன்.
எப்போழுதும் தனக்கு ஆதரவளிக்கும் இளவளவன், தவறு என்று ஒன்றை சொன்னால், யாழினியும் மறுக்காமல் தலையாட்டி கேட்டு கொள்வாள்.
சிறு பிள்ளைகளாக இருந்த போதும், அவர்களிடையே இருந்த புரிதல் என்பது பெரியவர்களே கண்டு அதிசயிக்கும் வகையில் இருந்தது என்பது தான் உண்மை.
சாதாரண வழக்கே இழு, இழு என்று இழுப்படும். இது சொத்து வழக்காயிற்றே. ஜவ்வு மாதிரி வழக்கு ஏழு, எட்டு வருடங்களுக்கு வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது.
வங்கியில் இருக்கும் பணம் பெரும்பாலும் குறைந்த போதும், உண்மை தன் பக்கம் இருக்கும் நம்பிக்கையில், தொடர்ந்து வழக்கை நடத்தி கொண்டிருந்தார் ரவிச்சந்திரன்.
அவர் பட்டபாட்டுக்கும், இரண்டு குடும்பங்கள் இடையேயான பிணைப்பிற்கும், இளா, யாழினி கொண்ட உற்ற பாசத்திற்கும் முடிவு வந்தது ஒரு நாள்.
மோகனம் இசைக்கும்…………………

Advertisement